தமிழகத்தில் நீண்டகாலமாகவே அரசு விடுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 21 ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, எம்.சி. ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதி மாணவர்களும் சென்னையிலுள்ள மற்ற அரசு விடுதி மாணவர்களும் அடிப்படை வசதி கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தச் செய்தியை பிரசுரித்த பல ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகள் மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்களை மட்டுமே பெரியதாக எழுதிவிட்டு விடுதி மாணவர்களின் பிரச்சனைகள் பற்றி சிறிதளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களில் பெரும்பகுதி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களும் அரசு விடுதிகளில் தங்கி கல்வி பயில்கின்றனர். ஆனால் 80 முதல் 90 விழுக்காடு மாணவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது போன்ற அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் அரசு, அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள். ஏற்கனவே கிராமப்புறங்களில் உலகமயமாக்கத்தால் வேலைவாய்ப்பற்ற விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகளாகிய இவர்கள் கல்லூரிப் படிப்பை எட்டுவதே மிகவும் சிரமம். அவ்வாறு கல்வி பயில வாய்ப்பு கிடைத்த ஒரு சிறுபகுதியினர்தான் இவர்கள். அதாவது கோடிக்கணக்காக உள்ள தலித் மக்களில் உயர்கல்வி பெற வாய்ப்பு பெற்றவர்கள் சில ஆயிரக்கணக்கானோரே. சென்னை நகரில் உள்ள அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் தலித் மாணவர்களும் இந்த ஆயிரங்களில் அடங்குவர்.
இவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் உள்ள மோசமான நிலைமைகளை மனதாபிமானம் உள்ள எவரும் பேசாமல் இருக்க முடியாது. அங்கேயே தங்கி பல சிரமங்களுக்கு ஆளாகும் மாணவர்கள் எப்படி வாய்மூடிக் கொண்டிருக்க முடியும். சென்னையில் வெளிவரும் பல ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் தலித் மாணவர்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றி சிறிதளவும் கவலைப்படாமல், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை எழுதுவதற்கு பதிலாக சாலை மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்களைப் பற்றி பெரிய அளவிற்கு எழுதியுள்ளனர். உதாரணமாக டிசம்பர் 22ம் தேதி அன்று வெளியான இந்து நாளிதழ் ஒரு சில மணி நேரம் ஏற்பட்ட போக்கு வரத்து நெரிசலைப் பற்றி பூதாகரமாக எழுதியுள்ளது.
முதலில், அரசு விடுதி மாணவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தை சற்று பரிசீலிப்போம். விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவருக்கு ஒரு நாளைக்கு 15 ரூபாயும், கல்லூரி மாணவருக்கு 18 ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. தினமும் என்ன வகை உணவு வழங்க வேண்டுமென உணவுப்பட்டியலும் உள்ளது. ஆனால், இவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், இன்றைய விலைவாசி உயர்வில் 15 மற்றும் 18 ரூபாயில் மூன்று வேளை உணவு வழங்குவதே மிகவும் சிரமம். அப்படி இருக்கும்போது எவ்வாறு தரமான உணவு வழங்கமுடியும். எனவே தான், வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும், பற்றாக்குறையாகவும், ஆரோக்கியமற்றதாகவும் வழங்கப்படுகிறது. 15அடிக்கு 15அடி அளவுள்ள ஓர் அறையில் கிட்டத்தட்ட 20 லிருந்து 25 மாணவர்கள் தங்கியுள்ளனர். படிப்பதற்கும், உறங்குவதற்கும் இடமில்லாமல் தங்களது கல்லூரி நாட்களை முடித்தாலே போதுமென எண்ணி ஒவ்வொரு நாட்களையும் பல சிரமங்களுக்கிடையே தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு கிராமப்புறங்களிலிருந்து உயர்கல்வி கற்க ஏராளமான மாணவர்கள் நகர்புறத்திற்கு வரவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அப்படி வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்றைக்கு விடுதிகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கப்படவில்லை. எனவேதான் இருக்கின்ற சில விடுதிகளில் மிக அதிக மாணவர்கள் தங்குவதும், உணவு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உதாரணமாக, சென்னை சைதாபேட்டையிலுள்ள எம்.சி.ராஜா விடுதியில் 400 மாணவர்கள்தான் தங்க முடியும். ஆனால் கிட்டத்தட்ட 800 மாணவர்கள் தங்குகின்றனர்.
தமிழக அரசு, உண்மையிலேயே தலித் மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள அரசாக இருக்கும் பட்சத்தில் புதிய விடுதிகள் கட்டுவதற்கும், தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும், போதுமான நிதி ஒதுக்கீட்டினை செய்திருக்க வேண்டும். மாறாக அரசு விடுதிகளின் தரத்தை மேம்படுத்த எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை. அரசு விடுதி மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்க்காத தமிழக அரசின் காதுகளில் மீண்டும், மீண்டும் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு விடுதி மாணவர்களும் ஜனநாயக அமைப்பின் கீழ் அணி திரளவேண்டும். அவ்வாறு அனைத்து அரசு விடுதி மாணவர்களும் ஓரணியில் திரண்டு போராட முன்வந்தால், சைதாப்பேட்டையில் மட்டுமல்ல, தலைமைச் செயலகத்திற்கு எதிரேயும் மறியல் செய்ய சக்தி படைத்தவர்கள் ஆவார்கள். அவ்வாறு போராட முன்வரும் மாணவர்களுக்கு அனைத்து பகுதிமக்களும் உணர்வுபூர்வமான ஆதரவை கொடுக்க முன்வரவேண்டும்.
போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி மாணவர்களுக்கும் -பொதுமக்க ளுக்கும் இடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் முதலாளித்துவப் பத்திரிகைகளின் உள்நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட்டு நடக்கும் போதும், முதலவர், துணை முதல்வர், அமைச்சர்கள், மற்றும் முக்கிய நபர்கள் செல்லும் போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்கிறது. பல நாட்கள் பல்வேறு காரணங்களுக்காக சென்னை நகர மக்கள் போக்கு வரத்து நெரிசலில் பாதிக்கப்படுவது தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் வாயைத் திறக்காதாவர்கள், இப்போதும் வாயை மூடிக்கொண்டு இருக்கட்டும்.
மூலம் :பேராசிரியர் எம்.எஸ் அவர்களின் கட்டுரை
15அடிக்கு 15அடி அளவுள்ள ஓர் அறையில் கிட்டத்தட்ட 20 லிருந்து 25 மாணவர்கள் தங்கியுள்ளனர். படிப்பதற்கும், உறங்குவதற்கும் இடமில்லாமல் தங்களது கல்லூரி நாட்களை முடித்தாலே போதுமென எண்ணி ஒவ்வொரு நாட்களையும் பல சிரமங்களுக்கிடையே தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.//
ReplyDeleteஇந்த வாழ்க்கையை ஒவ்வொரு அமைச்சருக்குமானதாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களின் கோபமும், வலியும் புரியும்.
சரியான சாட்டையடி இந்து ராம்களுக்கு.
ReplyDeleteகூஜா தூக்கும் பத்திரிகைகள். விளம்பர வருமானத்திற்குகாக
தருமம் கொல்லும் தரகர்கள்.
தமிழக அரசின் சார்பில் இலங்கை தமிழர்களுக்காக
நடத்தப் பட்ட மனிதச்சங்கிலி போரட்டம் நடந்த
ஒரு மழை, மாலையில் மக்கள் பட்ட அவஸ்தை
சொல்லில் அடங்காது. பிரதமரின் நிகழ்ச்சியால் ஏற்பட்ட
போக்குவரத்து குழப்பங்களால் இதுவரை மூன்று போர்
பலியாகி இருக்கிறார்கள். கத்திபாரா மேம்பாலத்தில் நடந்த
எந்திரன் படபிடிப்பினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு
யார் காரணம். ராவணன் படப்பிடிப்பினரரின் சுகத்திற்காவும்,
தற்காப்புக்காவும், கேரள காட்டில் டின் டின்னாய்
இரசாயன மருந்துகளை கொட்டி, பல்லாயிரம் நுண்ணுயிர்களையும்,
பிற பூச்சி,விலங்கினங்களை அழித்து ஒழித்தனர். சுயநல......
சார்,
ReplyDeleteகொலை செய்தவன் கூட ஒரு ஞாயமான காரணம்தான் சொல்கிறான். அப்புறம் எதற்கு கோர்ட்டும் வக்கீலும்? மா நகர பேருந்து தொழிலாளர்கள் யாராவது ஏதாவது சொன்னால் உடனே சாலையை மறித்து போக்குவரத்தை தடை செய்யும் போது அது அவர்களுக்கு ஞாயமாக படுகிறது. பிரதமர், பெரிய அரசியல் தலைவர்கள் வரும் போது சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தால் பாதுகாப்பு என்று சொல்லி ஞாயபடுத்துகிறார்கள். எல்லோருக்கும் அவரவர் ஞாயம்தான் பெரிது. மக்களின் கஷ்டம் பற்றி யாரும் கவலை படுவதில்லை. மாணவர்கள் தலித் ஆகட்டும் மற்றவர்கள் ஆகட்டும் ஏன் பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முயற்சிக்க கூடாது? அசிங்கமான முன் ணுதாரணங்களை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே.. எதிர்க்காலம் இவர்கள் கையில் எங்கிறோம் ஆனால் இவர்களும் அந்த அசிங்கமானவர்களை பின் பற்றினால் எப்படி ஞாயபடுத்த முடியும்?
எக்காரணம் கூறினும், சாலை மறியல் மிகத் தவறான ஒன்று!அடாவடித் தனமானது! பொது மக்கள் பயன் படுத்தும் சாலையை யார் மறித்தாலும், அது உரிமைத் தடுப்புக் குற்றம்! சம்பந்தப்பட்ட அதிகாரியையோ/அமைச்சரையோ மறியுங்கள்!
ReplyDeleteகிணற்றுத்தவளை///
ReplyDeleteமக்களின் கஷ்டம் பற்றி யாரும் கவலை படுவதில்லை. //
மக்களில் ஒரு பகுதியினர்தான் அந்த மாணவர்கள். படிக்க வேண்டிய சூழலைக் கூட கொடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோமே. அவர்களை மரியல் செய்யும் நிலையில் வைத்திருக்கிறோமே என்று நாம்தான் வெக்கித் தலைகுனிய வேண்டும். அவரவருக்கென கொஞ்சம் சமூக உணர்வு வேண்டாமா? - மக்கள் பிரச்சனைக்காக நம் சொந்த சுக துக்கங்களை சகித்துக் கொண்டால்தான் என்ன?
பொது மக்கள் பயன் படுத்தும் சாலையை யார் மறித்தாலும், அது உரிமைத் தடுப்புக் குற்றம்! //
கோபப்படாதீர்கள் நண்பா - ஒரு சில நிமிடங்கள் சாலை தடுக்கப்படுவதில் இவ்வளவு கொதிக்கிறீர்கள். காலம் காலமாய் வளர்ச்சி தடுக்கப்பட்டிருக்கும் தலித் மாணவர்களை நினைத்துப் பாருங்கள். அவர்களி கோபமெல்லாம் ஒன்றிணைந்தால் ஒரு பிரளயமே வெடிக்கும். ஆனால், சாலையைத்தான் மறித்திருக்கிறார்கள். அதுவும், உண்மையிலேயே பிரச்சனை ஒரு கட்டத்தை எட்டிய போது. இப்போதும் உங்களுக்கு சாலை மறியல்தான் பெரிதாகப்படுகிறதா?
அன்பார்ந்த தோழர்களே,
ReplyDeleteதோளுக்கு தோளாக பகுதியை ஏன் அகற்றி விட்டீர்கள்? நமது
தோழர்களின் புதிய பதிவுகளை அறிந்து கொள்ள மிகவும் வசதியாக
இருந்தது. நேரமும் மிச்சமானது. தோளுக்கு பின்னால் கத்தி
பாய்ச்சுபவர்கள் யாரேனும் இருந்தால் அந்த வலைப்பக்கத்தை மட்டும் அகற்றி விடலாமே. மீண்டும் அப்பகுதியை இணையுங்கள் என்று
உரிமையோடு கோருகிறேன்.
தோழமையுடன்
எஸ்.ராமன், பொதுச்செயலாளர்,
காப்பிட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்.
தோழர் ராமன்!
ReplyDeleteபுதிய டெம்ப்ளேட் மாற்றும்போது, சேகரித்து வைத்திருந்த விட்ஜெட்டை இழந்துவிட்டோம். விரைவில் சேர்க்கப்பட்டுவிடும்.
//கோபப்படாதீர்கள் நண்பா - ஒரு சில நிமிடங்கள் சாலை தடுக்கப்படுவதில் இவ்வளவு கொதிக்கிறீர்கள். காலம் காலமாய் வளர்ச்சி தடுக்கப்பட்டிருக்கும் தலித் மாணவர்களை நினைத்துப் பாருங்கள்.//
ReplyDeleteமிகச்சரியாகச் சொன்னீர்கள் சிந்தன்!
தனது கஷ்டங்களை மட்டுமே பெரிதாய் நினைக்கிற மனிதர்கள், வாழ்க்கையே துயரமாகிப்போன அடுத்தவர்களின் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்கவும், பேசவும் பிடிக்காதவார்களாகவே இருக்கிறார்கள்.
@கிணற்றுத்தவளை!
//ஏன் பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முயற்சிக்க கூடாது? //
யாருங்க இங்க பொதுமக்கள்? அரசு விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுமக்கள் இல்லையா? நமது முழந்தைகளோ, உரவினர்களோ அப்படியொரு புழுக்கள் போன்ற வாழ்க்கையில் உழன்றால் நம் வேதனை என்னவாக இருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!
@ரம்மி!
கிணற்றுத்தவளை அவர்களுக்குச் சொன்ன விளக்கங்களே உங்களுக்கும். சாலைமறியல் அடாவடித்தனமானது என்றால், அரசு விடுதிகளில் இருக்கும் அந்த மாணவர்களை இக்கதியாக்கியவர்களின் செயலை என்னவென்பது?
உங்களைப் போன்ற பொதுமக்களும் அந்த அரசு விடுதி மாணவர்களின் துயரங்களை உணரத்தலைப்பட்டால், அவர்களோடு சேர்ந்து நிற்க முன்வந்தால் பிரச்சினைகள் சில நிமிடங்களிலேயே தீர்க்கப்பட்டுவிடுமே!
///கொலை செய்தவன் கூட ஒரு ஞாயமான காரணம்தான் சொல்கிறான். அப்புறம் எதற்கு கோர்ட்டும் வக்கீலும்? ///
ReplyDeleteசொல்வது சரிதான், கிணற்றுத் தவளை,
வழக்கறிஞர்கள் சென்ற ஆண்டு உயர்நீதிமன்றத்துக்குள் நடந்து கொண்ட விஷயம் நாடே அறியும். ஒரு நீதிபதியின் மண்டையே பிளந்தது அன்று.
சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதிச் சண்டையை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தார்கள்.
அவ்வளவு ஏன், இரண்டு தமிழக அமைச்சர்கள் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம், மைதீன்கான் ஆகியோர் ஒரு காவல் அதிகாரி வெட்டப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தும், உடனையாக உதவாமல் எட்ட நின்று அவர் சாவதை வேடிக்கை பார்த்தார்கள்.
காலம் காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வாழ்வில் வறுமையைத் தவிர வேறெதையும் காணாத பரம்பரையினர் தமது அன்றாட வாழ்க்கையின் அவலங்களை நீக்கப் போராடுவது மற்ற மக்கள் சௌகரியஙளைப் பார்த்துதான் செய்யவேண்டும் என்றால் அதில் எள்ளளவும் நியாயம் இல்லை.
போக்குவரத்து பாதிக்கப் பட்டது என்கிறவர்கள், வீதி முழுவதும் எத்தனை கார்கள் நிறுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்பதில்லையா? 600 சதுர அடிக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவரெல்லாம் இன்று கார் வைத்துக் கொண்டு அதைத் தமது வளாகத்தில் நிறுத்த இடம் இன்றி தெருவெல்லாம் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து தொல்லைகள் யார் கண்ணுக்கும் படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் மேற்சாதியினர், வசதி வாய்ப்பு உள்ளவர்கள். என்றோ ஒரு நாள் தெருவில் இறங்கிப் போராடுபவன்தான் பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்கிறானென்றால் என்னே நியாயம்?