தமிழகத்தில் பெண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக இனி பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள். ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் தான் இருப்பார்கள் என்று சமீபத்தில் வெளிவந்த அரசாணை தெரிவிக்கிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கூட்டு வன்புணர்ச்சி சம்பவத்திற்கு பிறகு நாடெங்கும் பெண் மீதான வன்முறையை எதிர்த்து போராட்டங்களும் விவாதங்களும் எழுந்தன.அதன் தொடர்ச்சியாக பள்ளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை தவிர்க்க அரசு இந்த முடிவை அறிவித்துள்ளதாக கூறுகிறது.
இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ”என் பொண்ணு இனி பத்திரமா ஸ்கூலுக்கு போய்டு வருவா. பேப்பரிலியும் டிவிலையும் பாக்கும் போது பயமா இருக்கு.ஸ்கூலுக்குள்ள இனி எதுவும் நடக்காதுன்னு திருப்தியா இருக்கு.” என்று சிலர் கூறுகின்றனர்.
”இது எனக்கு 50% ஓகே. 50% நோ. பசங்களுக்கு ஸ்கூல்ல வாத்தியாரால எதுவும் ஆகாதுன்னு உத்தவாதம் இருக்கு. ஆனா அவங்க பள்ளிகூடத்த முடிச்சு வெளிய வரும் போது ஆண்களும் இருக்கிற இந்த சமூகத்த விட்டு ஓடி விட முடியாது” என்று கூறுகிறார், ஷண்முகப்பிரியா, அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட மற்றும் சிலர் கருதுகின்றனர்.
“இது பிற்போக்கான முடிவு. ஆண்-பெண் சமத்துவத்தையும், ஆரோக்கியமான ஆண்-பெண் புரிந்துணர்வையும் தடுத்து விடும்” என்றும் சிலர் கூறுகின்றனர்.
மூன்றுமே சரியான வாதங்கள் போல தான் தோன்றுகின்றன. ஆனால் மூன்றுமே சரியானதாக இருக்க முடியுமா?
ஹரியானவில் சமீபத்தில் கல்வித் துறை நடத்திய கள ஆய்வில் வருடத்திற்கு 1000 மாணவிகள் பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே கூறுகிறது. இது போன்று பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான நேரடியான வாய்ப்புகளை அரசின் இந்த நடவடிக்கைபள்ளிகளில் குறைக்கும். இந்த முடிவினால் பெண்கள் பள்ளிகளில் இப்போதிருப்பதை விட குறைவான ஆண்களை காணலாம்.
ஆனால் இது போதுமா? ஆசிரியர்களாக ஆண்களின் நுழைவை தடுத்தாகி விட்டது. ஆனால் காவலாளியாக, ஆய்வுகூட உதவியாளராக ஆண்கள் இருக்க மாட்டார்களா? ஆண்களின் பங்கே இல்லாமல் ஒரு பள்ளியை முழுமையாக நடத்த முடியுமா? எனவே, இந்த முடிவு உடனடி தீர்வுகள் தந்தாலும் இது நிரந்தர தீர்வாக அமையாது. ”இது பாதுகாப்பை தரும். உண்மை தான். ஆனால் இது உண்மையான பாதுகாப்பாக இருக்காது”என்று கூறுகிறார் இதயகீதன், அரசுப்பள்ளி ஆசிரியர்.
ஏன் உண்மையான பாதுகாப்பை தராது?
நாம் நடக்கும் போது காலில் முள் ஏறிக் கொள்கிறது. அதை பிடுங்கி எறிகிறோம். அன்றைய பிரச்சனை சரியாகிவிடுகிறது. மறுபடியும் அதே பாதையில் நடக்கிறோம். மறுபடியும் முள். அதையும் பிடுங்கிவிட்டுச் சென்று விடுகிறோம். இப்படி ஒவ்வொரு முறையும் முள்ளை பிடுங்கி எறிய மட்டுமே வழி செய்துக் கொண்டிருப்பதை விட, முட்செடிகளை அகற்ற வேண்டாமா? அது தானே பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும்.
அதே போல், பாலியல் குற்றங்களுக்கான அடிப்படை காரணத்தை அறிந்து அதை களைய முயற்சிகள் எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் நம் சமூகத்தில் தொடர்வதற்கான அடிப்படை காரணம் ஆண்-பெண் சமத்துவமின்மை. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் சரியான புரிந்துணர்வு இல்லாதது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு உலகம் என்று சிறுவயதிலிருந்தே பிரித்து வைக்கிறது சமூகம். ஆண்கள் இப்படி தான் இருப்பார்கள், இப்படி தான் இருக்க வேண்டும் என்று முன்தீர்மானம் செய்யப்படுகிறது. இந்த சமூகச் சூழலில் ஆண்களிடமிருந்து விலகி இருப்பது மூலம் பாலியல் பிரச்சனையை தீர்த்து விட முடியும் என்று அரசு நம்புவது சரியில்லை. ஆணும் பெண்ணும் சகஜமாக சமூகத்தின் சம அங்கத்தினராக குழந்தை பருவத்திலிருந்தே பழகினால் தான், ஆரோக்கியமான சமமான சமுதாயத்தை வளர்தெடுக்க முடியும்.
இதற்கு அரசு என்ன செய்ய முடியும்?
· இருபாலர் கல்வி நிலையங்களை அதிகரிப்பது
பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் என்ற ஆணையை விட, இரு பாலர் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்று முடிவு செய்திருந்தால், அது பாராட்டுக்குரியது. அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது என சந்தோஷப்படலாம். இளம் பருவத்தில் கல்வி நிலையத்தில் ஒரு சேர வளரும் போது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆரோக்கியமான நட்பு, புரிதல் வளருவதற்கு இடம் தரும்.ஆனால் அதை விட்டு உடனடி தீர்வையும் பாதுகாப்பு உணர்வையும் தரும் வகையில் செயல்படுவது தேர்தல் அரசியலில் சமூகத்தின் மீது கொண்ட அக்கரையை கை விட்ட கட்சிகளின் செயல்பாடாகவே தோன்றுகிறது.
· பள்ளிகளில் பாலியல் கல்வி
பாலியல் நமது சமூக வெளியில் இயல்பாக எல்லோரும் விவாதிக்கும் ஒரு பொருளாக இல்லை. ”குசு குசு வென” பேசும் பொருளாகத்தான் இருக்கிறது. இதைச் சுற்றி ஒரு ரகசியத்தனம் எப்போதும்நிலவுகிறது. நேர்மையான ஆர்வத்துடன் குழந்தைகள் பாலியல் சம்பந்தமான கேள்விகளை கேட்டாலும் நாம் அவர்களை உதாசினப்படுத்துகிறோம். “அதெல்லாம் பேசக் கூடாது” ”எல்லாம் தெரிய வேண்டிய வயசுல தெரியும்” என்று ஏதாவது பதில் கூறி நாம் அந்த கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறோம். இது சரியான புரிதல் ஏற்படாமல் போக, தவறான வழிகள் மூலம் தவறான புரிதல் ஏற்பட நாமே வழி வகுக்கிறோம். இதை தடுத்து பள்ளிகளிலேயே அறிவியல்பூர்வமாக பாலியல் கல்வியை கற்று தந்தால், பாலியல் தொடர்பான மாயையை உடைத்தெறிய முடியும். இதற்கு ஆசிரியர்களுக்கு முதலில் சரியான பயிற்சி அளிக்க வேண்டும்.
· தண்டனையை அதிகரிப்பது
அரசு வேறு என்ன செய்திருக்க முடியும்? தவறு செய்தால் ஒன்றும் நடக்காது. யாரும் ஏதும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தை காவல்துறையும் நீதித் துறையும் பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கியுள்ளது. வழக்கு பதிவு செய்ய அனைத்து திசைகளிலிருந்தும் எல்லா விதமான தடை கற்களும் வீசப்படுகின்றன. ”பெண்ணின் எதிர்காலம் என்ன ஆவது?” ”பள்ளிக்கும் பெண்ணுக்கும் மானக்கேடு” என்று பள்ளி நிர்வாகிகள், அக்கம் பக்கத்தினர், ஏன் காவல்துறை கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க மறுக்கின்றனர். அப்படியே வழக்கு பதிவு செய்தாலும் அது பல ஆண்டுகள் கழித்து தான் தூசி தட்டப்படும். அதற்குள் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி விடும். சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள். வழக்கு விசாரணைக்கு வந்தாலும் தண்டனை கிடைப்பது நிச்சயமல்ல. இது மாறி தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நிலை உருவானால் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
அதோடு தண்டனையை அதிகரித்தால் இந்த தவறுகள் நிச்சயமாக குறையும் என்றும் கூறுகின்றனர். ”ஏன் சஸ்பெண்ட் மட்டும் செய்ய வேண்டும்? டிஸ்மிஸ் செய்யட்டுமே. குடும்பம் பாதிக்கப்படும் என்ற எண்ணம் தான் தவறு செய்வதற்கு பயத்தை உண்டாக்கும். “ என்று கூறுகிறார் ஷண்முகப்பிரியா, அரசுப் பள்ளி ஆசிரியர்.
எனவே அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு ஒரு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டதாக இல்லை. நுனிப்புல் மேய்வது போல் ஒரு சில கண்கூடான மாற்றங்களை மட்டும் கொண்டு வருவதால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. பெண்ணின் மீதான சமூகப் பார்வை மாற வேண்டும். அதற்கு முதல் படியாக ஆசிரியர்களின் பார்வை சரியானதாக அமைய அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். அவர்களுக்கான கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்த வேண்டும். அரசாணை வெளியிட்டதோடு பிரச்சனை முடிந்து விட்டதாக அரசு நினைத்தால் அது தன்னையே ஏமாற்றிக் கொள்வது போலாகும்.
- சாரா விஜி


