Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, July 3, 2013

புத்தகம் கையில் எடுத்துவிடு !

மனிதன் தெளிந்த புத்தியுடன் தனது சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் நேர்நின்று எதிர் நோக்க வேண்டியதாகிறது. நமது சமூக உறவுகளை புரிந்து கொள்ள நாம் இன்றைய சமூகத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை நாம் கேட்டும் நமக்கு சொல்லித் தரப்பட்ட வரலாறும், ஏன் நமக்கு பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வரலாறும் முழுமையானதல்ல.

உதாரணம்:- நமது புவியியல் பாடப்புத்தகத்தில் கேட்கப்படும் கேள்வி:
இந்தியாவின் மான்செஸ்ட்டர் எது?  
பதில்:- மும்பை (இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் முதலிடம்)

இது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அதன் மறைக்கப்பட்ட வரலாறு ஒன்று உண்டு என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உண்மை என்னவென்றால், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இந்திய விளை நிலங்களில் அவுரியும், இண்டிகோவும், பருத்தியும் அதிகமாக விளைவிக்கப்பட்டதால் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். அந்த நேரத்தில்,  மான்செஸ்ட்டருக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தி 14 லட்சம் பேல்கள் (ஒரு பேல் = 217.72 கிலோ கிராம்) இதனால்தான் மும்பை இந்தியாவின் மான்செஸ்ட்டர் என்று அழைக்கப்படுகிறது. 

நம் மக்களின் மரணத்தின்போது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமை சாதனையா? இல்லையே. இப்படி இன்னும் எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும்.
எனவே, உண்மையான வரலாற்றைப் புரிந்து கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
  1. ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்திலும் இருந்த உற்பத்தி சாதனங்கள் எவை? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும். அதை தெரிந்து கொள்ள வேண்டும்.
  2. உற்பத்தி சாதனங்களைப் பயன்படுத்தி நடைபெற்ற உற்பத்தி முறையில் நிலவி வந்த சமூக உறவுகள் எத்தகையவை?
  3. சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு அரசியல் மோதல்கள், யுத்தங்கள் மற்றும் புரட்சிக்கு இட்டுச் சென்றன?
இவைகளை நாம் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். முழுமையான வரலாற்றை அறிந்து கொள்ள நமக்கு உதவுவது நல்ல புத்தகங்களே.

சகதியும் சேறும் நிறைந்த வாழ்வின் அடிமட்டத்திலிருந்து மேற்கிளம்பி உயர்வடைய புத்தகங்களே எனக்கு உதவின என்று உலக வரலாற்றில் மறக்க முடியாத ரஷ்யப் புரட்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதியவரும் உலகம் போற்றும் கலை இலக்கியவாதியுமாகிய மார்க்சிம் கார்க்கி கூறியுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் நம்பகமான துணைவன் புத்தகங்கள். அதுவே, நம்  அறிவையும் சமூக சிந்தனையையும் விவேகத்தையும் வளர்க்கும்.
- சுதிர்.ரா

Saturday, April 13, 2013

சங்கிலியை அடமானம் வைத்து ‘சாகித்ய அகாதமி’ விருது !

தூப்புக்காரி: விளிம்புநிலை மனுசியின் குரல் 


ஒன்பதாம் வகுப்பு தாண்டாத பள்ளிக் கல்வி. மிக மிக சாதாரண குடும்பப் பின்னணி. எப்படியோ சேமித்து வாங்கியிருந்த ஒரு மெலிய தங்கச் சங்கிலியை அடகு வைத்துப் பெற்ற காசில் தொலைதூரம் போய் தாம் எழுதிய நூலுக்கு வழங்கப்படும் விருது ஒன்றினைப் போய் வாங்கும் நிலைமை. யார் இவர்? அவர் தான், இப்போது பரவலாகப் பேசப்படும் "தூப்புக்காரி" என்ற புதினத்தின் ஆசிரியர் மலர்வதி, குமரி மாவட்டத்துக்காரர். 

நடுநிலைப் பள்ளி ஒன்றில், கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த தமது தாயின் கைப் பிடித்துக் கொண்டு நாற்றம் எது, மணம்  எது என்று அறியாத ஐந்து வயதில் நேரடியாகப் பார்த்த தாயின் வாழ்க்கையின் காயம் எங்கோ மனத்தில் இருந்தது. தொழிற்கூடங்களில் துப்புரவு செய்த ஒரு தொழிலாளியின் கண்ணீர் ததும்பும் கனத்த முகம் இன்னும் கண்ணில் நிற்கிறது... சாக்கடையோரம் மூக்கைப் பொத்தி, குமட்டலில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடத் தெரியும் மனிதர்களுக்கு, அசுத்தத்தை அள்ளுகிறவன் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்கவும் தெரிகிறது என்று தமது முன்னுரையில் சாடும் மலர்வதி, ஈக்களிலும், புழுக்களிலும், நாற்றத்திலும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் மனிதர்களுடன் ஒரு நிமிட நேரமாவது சென்று அமரும் மனித நேய உணர்வு சமூகத்தில் பிறக்கட்டும் என்ற வேகத்தில் தாம் எழுதிய கதை தான் தூப்புக்காரி என்று மனம் விட்டுச் சொல்வதில் எல்லாம் அடங்கிவிடுகிறது.


தூப்புக்காரி என்ற சொல், துப்புரவுப் பணியில் இருப்போரை விளிக்கும் ஒரு வட்டாரச் சொல். அந்த விளியே சமூகம் அவர்களை 'மதிக்கும்' தன்மையை வெளிப்படுத்திவிடுகிறது. ஏய், கக்கூசைக் கழுவிட்டியா, தீட்டுத் துணிகளைக் கழுவிட்டியா, சாக்கடை அள்ளினியா...என்பதைத் தவிர, வேறு பேச்சு மொழியே அற்றுப் போன உலகம் அவர்களது. கண்ணெதிரே அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையில் தெறிக்கும் மலம். கையருகே பருக வேண்டிய தேநீரோ, கடமைக்கு வாரி அடைத்துக் கொள்ள வேண்டிய உணவோ ஏதோ ஒன்று. இந்த முடிவற்ற துயர நடையின் கதை தான் தூப்புக்காரி. 

பூவரசி. மருத்துவமனை தூப்புக்காரி கனகத்தின் மகள். கனகம் தனது மகளுக்குக் கொஞ்சம் போலக் கிடைத்த படிப்பை வைத்து ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற கனவு. அதே தூப்புப் பணியில் இருக்கும் - ஆனால் சாதியில் தாழ்ந்த மாரியை அவளுக்குக் கட்டிக் கொடேன் என்று சொல்லும் வேலப்பன் அல்லது  தனது சக தூப்புக்காரி றோஸ்சிலி சொற்களை  ஏற்கவும் மாட்டாமல் வேறு திசையும் தெரியாமல் தவிக்கும் கனகம். பூவரசிக்கோ தனது தாய்க்கு உணவு கொடுக்கப் போகும் நேரம் தட்டுப்படும் குப்பை கழிவுகளையே சகிக்கப் பொறாத குமட்டல். 

பூவரசியின் நெஞ்சில் மருத்துவமனை வாகன ஓட்டுனர் மனோ மீதான காதல் காற்றில் அலைபாயும் தீபம் போல் ஆடிக் கொண்டிருக்கிறது.  அவனுக்கும் இவள் மீது ஒரு மோகம் இருக்கத் தான் செய்தது. ஆனால் சாதாரண மனிதர்களது வாழ்க்கை ஏற்கெனவே விதிக்கப்பட்ட பாட்டையில் அல்லவா இவர்களை வழி நடத்திச் செல்லும்..

அவமதிப்பும், கடுஞ்சொல்லும் தனது பயணம் நெடுக வாரி இறைக்கப் பட்டிருந்தும், எச்சில் இலை எடுக்கப் போன திருமண விருந்தொன்றில் பசியின் இரக்கமற்ற துரத்தலில் தாங்களே பந்தியில் அமர்ந்துவிடும் போது அங்கிருந்து விரட்டப்படும் கனகம் தலை சுற்றல் கண்டு நோயில் விழும் இடம் கதையில் முக்கியமானது. அது மனோ உறவினர் வீட்டுத் திருமணம். அவனோ கனகத்திற்குப் பரிந்து பேச முன் வருவதில்லை. பிறகு அதே வேலையில் தன காதலி பூவரசி தன கண்ணெதிரே தள்ளப்படும் நிலையிலும் கை கொடுப்பதில்லை. 

தாய் தொடர முடியாத எச்சில் இலைகளை அகற்றும் பணிக்கு, தற்செயலாக அங்கே போன பூவரசி நியமிக்கப்படுகிறாள். நானா....நானா என்று தடுமாறும் அவளை  றோஸ்சிலி ஆற்றுப் படுத்தி பழக்கத் தொடங்குகிறாள். இந்தப் பாதையின் அடுத்த மைல் கல், மருத்துவமனையில் கழிவறைகளை 'தூக்கும்' பணியில் ஊன்றப்படுகிறது. 'தூமத் துணி' அலசவும், மலம் மிதக்கும் சாக்கடைகளைத் 'தூக்கவும்', இரத்த வீச்சம் அடிக்கும் கழிவுப் பொருள்களோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளவுமான அடுத்த தூப்புக்காரியாக உரு மாறுகிறாள் பூவரசி. 

குடலைப் புரட்டும் நெடியில், பார்க்க சகிக்காத கழிவுகளில் உழலும் மனித வாழ்க்கையை மலர்வதி எந்த நளினமும், இடக்கரடக்கல் மொழியும் கைக் கொள்ளாமல் நேரடிப் பார்வைக்கு அப்படியே எடுத்து வைக்கிறார். காசு வாங்கிட்டுத் தானே வேலை செய்யுற, ஓசியிலயா என்று எகத்தாளம் செய்யும் ஒரு பெண்மணியை அதே காசை வாங்கிட்டு நீ வந்து செய்வியா இந்த வேலையை என்று கேட்கிறாள் கனகம். சம்பளம் பத்திப் பேச நீ என்ன அபீசரா என்று கேட்கும் டீக்கடைக்காரரிடம், மாரி வெகுண்டு, 'ஆபிசர் தூறிவிடிய பீயை என்னைப் போல் உள்ளவன் வாராட்டா நாறிக் கெடக்கும்...அழுக்குக்கு மூக்கப் பொத்தறீங்களே வாழ்க்கை பூரா அழுக்குல கெடக்கற எங்களுக்கு சம்பளம் வேண்டாமா ஓய்' என்று கேட்கிறான். 

மனோவிடம் தன்னை இழக்கும் பூவரசி, பிறகு, வேறு மணவாழ்வில் அவன் காலடி எடுத்துவைக்கும் நிலையில் மாரியின் ஆதரவைக் கேட்காமலே கைவரப் பெறுகிறாள். அவள் பிள்ளையுண்டாயிருப்பதை அதிர்ச்சியோடு அறியும்போது மாரி அவளை ஏற்கவும் செய்கிறான். உனது குழந்தைக்கு அப்பனா மாறவும் சம்மதம் என்கிறான். 

பொன்னீலன் தமது செறிவான அணிந்துரையில் சொல்வதுபோல் கதை இங்கே நிறைவடைந்திருக்க வேண்டியது. இருந்தாலும், மலர்வதி, மாரி ஒரு விபத்தில் இறப்பது, தனது குழந்தையை, மகப்பேறு இல்லாத ஒரு வசதிமிக்க தம்பதியினருக்குத் தத்துக் கொடுக்க மருத்துவர் சொல்வதை பூவரசி முதலில் ஏற்றுக் கொண்டு, ஆனாலும் பிறகு குழந்தையோடு தனிச்சி நின்று வாழ்க்கைப போராட்டத்தை தொடர்வது என்று முடிவெடுப்பது, கோழை மனத்தோடு மனோ வந்து பார்த்துவிட்டுக் குற்ற உணர்ச்சியோடு நகர்ந்து விடுவது என்று வேகமாக சில நகர்வுகளைச் செய்து பூவரசியின் உளத் திண்மையில் கொண்டு வந்து கதையை நிறைவு செய்கிறார். 

தகழி சிவசங்கர பிள்ளை அவர்களின் தோட்டியின் மகன் நாவலை, சுந்தர ராமசாமி அவர்களது  அற்புதமான மொழிபெயர்ப்பில் வாசித்தபோது அதன் பாதிப்பிலிருந்து மீள சில நாட்கள் ஆயிற்று. அடுத்தடுத்த தலைமுறையினர் என்ன முயற்சி செய்தாலும் தோட்டியின் மகன் தோட்டியாக ஆவதிலிருந்து விடுதலை பெற இயலாத சோகத்தை உரத்த குரலில் பேசி, மூன்றாம் தலைமுறையில் போராட்ட ஆவேசம் கொண்டு எழுவதில் நிறைவு பெறும்  நாவல் அது. தி தா நாராயணன் அவர்களது சிறுகதையை முன்வைத்து செம்மண் விஜயன் ஆக்கம் செய்த புதிய தடம் குறும்படமும் தந்தையை அடியொற்றி  பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலைக்குச்  செல்ல மறுக்கும் மகனின் பரிதவிப்பைப் பேசியது. 

இருந்தபோதிலும், தான் நேரடியாக சந்தித்த வாழ்க்கையை அதன் நெடியோடு - அதன் அத்தனை வலிகளோடு - தப்பிக்க முடியாதபடி பிணைத்திருக்கும் சங்கிலிகளோடு மலர்வதி எழுதியிருக்கும் தூப்புக்காரி விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த முக்கிய வாசிப்பாகக் கிடைத்திருக்கிறது. ஆங்காங்கு கதையாசிரியர் குரலில் வெளிப்படும் வாழ்வின் விமர்சன வரிகளும், மிகை புனைவாக இணைக்கப்பட்டவையும் தனித்துத் தெரிந்தாலும், வலுவான உரையாடல்கள் சமூக அவலத்துக்கு எதிரான  தெறிப்புகளாக நிலை கொள்கின்றன. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் உற்சாக அணிந்துரை சாதிய, வர்க்க முரண்பாடுகள் பற்றிப் பேசும் மலர்வதி எழுத்தைக் குறித்த அவரது பிரமிப்பைப் பதிவு செய்கிறது. 

குமரி மாவட்ட வட்டார வழக்கு மொழி படிக்கத் தொடங்கியதும் வாசகரைத் தம்முள் இழுத்துக் கொண்டு சகதிக் குழியில் தள்ளப்பட்டிருக்கும் மனிதர்களது பாடுகளை உணர்த்தியபடி செல்கிறது. தமது தாய்க்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற மனிதர்களுக்குமான சிறப்புப் பதிவைச் செய்திருக்கிறார் மலர்வதி. 

கடந்த மாதம் கவுஹாத்தி (அஸ்ஸாம்) சென்று யுவ புரஸ்கார் எனப்படும் சாகித்திய அகாதமி இளம் படைப்பாளி விருதினைப் பெற்றுத் திரும்பியிருக்கும் அவர், அனல் வெளியீடாக வந்திருக்கும் தூப்புக்காரியின் அடுத்த பதிப்பை மாநிலம் முழுக்கக் கிடைக்க முன்முயற்சி எடுப்பார் என்றே நம்புகிறேன். வாசகர்கள் காத்திருக்கின்றனர். 

- எஸ்.வி.வேணுகோபால்

Saturday, February 4, 2012

சினிமா வரலாற்றை அறிய


"எழுத்து, இசை, நாடகம் போன்ற ஊடகங்கள் ஒரு சராசரி இந்தியக் குடிமகன்மீது ஏற்படுத்தும் உடனடித் தாக்கத்தோடு சினிமா என்ற ஊடகம் அவன்மீது ஏற்படுத்தும் தாக் கத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், சினிமாவின் தாக்கம் அசுரத்தன மானது என்பதை உணரலாம். வேறு எந்த மாநிலத்து மக்களையும் விட தமிழக மக்கள்மீது சினிமாவுக்கு இருக்கும் ஆதிக்கம் மிகமிகப் பெரிதாக இருக் கிறது.

நமது இளைஞர்களுக்கு இசை என்றால் அது சினிமாப் பாடல்கள் என்று ஆகி விட்டது. கவிதை என்றால் அது அந்தப் பாடல்களுக்கென எழுதப்படும் வரிகள் என்று ஆகிவிட்டது. நடனம் என்றால் அது சினிமா நாயகனும், நாயகியும் அரை குறை ஆடை அணிந்த 50, 60 பேர்களும் சேர்ந்து போடும் குத்து, கும்மாளம் என்று ஆகிவிட்டது. ஓவியம் என்றால் அது சினிமாவுக்காக வைக்கப்படும் சாலையோர விளம்பர பேனர் கள் என்று ஆகிவிட்டது. உடை என்றால் நட்சத்திரங்கள் திரையில் என்ன உடுத்திக் கொள்கிறார்களோ அதுதான் என்று ஆகிவிட்டது.

சினிமாவில் பிரயோகிக்கப்படும் வார்த்தையாடல்கள் தமிழர்களது அன்றாடப் பேச்சு வழக்கில் சர்வ சாதாரணமாகக் கலந்து போய்விடுகின்றன. இவை போக அறிஞர் அண்ணா முதல் கலைஞர் வரை (இப்போது ஜெயலலிதா) அத்தனை முதல் வர்களும் சினிமாக்காரர்கள்தான்.’’

அஜயன்பாலா சித்தார்த் பிறந்த இடம்: காஞ்சீபுரம் தொடர்புகளுக்கு: முகவரி: அஜயன்பாலா 18/9 தரைத்தளம், நான்காவது தெரு, தசரதபுரம், சென்னை 93. மின்னஞ்சல்: ajayanbala@gmail.com 
மேற்கூறியது அஜயன் பாலாவின் ‘உலக சினிமா வரலாறு’ புத்தகத்துக்கு பாலு மகேந்திரா எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. இதைவிட தமிழ்நாட்டில் சினிமா வுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கிவிட முடியாது. இந்தச் சூழலில் தமிழ் மக்களில் பெரும்பாலோர் அந்த வலுவான ஊடகத்தின் வரலாறு என்னவென்று அறியா மலேதான் உள்ளனர். அதைப்பற்றிய நல்லது கெட்டதையும், தரத்தையும் அறிந்து கொள்ள வும், புரிந்து கொள்ளவும் அந்த ஊடகம் பற்றிய அடிப்படை அறிவு தமிழர்களுக்கு அவ சியமாகிறது. அந்த வகையில் அஜயன் பாலாவின் இந்தப் புத்தகம் முக்கியமான பங்கை வகிக்கிறது. 1894ல் துவங்கி 1929 வரையிலான காலகட்டத்தில் சினிமாவின் வளர்ச்சியை எளிய வார்த்தைகளில் விளக்கிச் செல்கிறது இந்தப் புத்தகம். 

‘மேஜிக் லாண்டர்னில்’ துவங்கி சிறிது சிறிதாக சினிமா புராஜக்டர் வளர்ச்சி யடைந்தது என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு இயந்திரத்தை உருவாக்கு வதில் எடிசன், லுமியர் சகோதரர்கள், டிக்சன் என பலர் பங்கு வகித்துள்ளனர். இதில் எடிசனின் பங்கு ஆச்சரியம் அளிக்கிறது. பிறகு துண்டு துண்டாகக் காட்டப்பட்ட படங்களை இணைத்து கதை சொல்வதில் துவங்கி, பிறகு கதைகளையே எப்படித் திரைப்படமாக எடுத்தனர் என்பதும் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளது.


இந்த விவரங்களைத் தவிர இவை குறித்த ஏராளமான படங்களையும் தேடிப் பிடித்து தொகுத்தளித்திருக்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தின் மூலம் தினத் தந்தியில் அஜயன் பாலா எழுதிய தொடர். அந்தத் தொடரை எழுதியபோது வலைதளங்கள் கிடையாது. அந்த நிலையில் ஆசிரியர் விவரங்களைச் சேகரிக்கவும், புகைப்படங்களைத் தேடித் தொகுக்கவும் மிகவும் சிரமப்பட்டிருப்பார் என்பதை விளக்கத் தேவையில்லை. அதற்கு அவருக்கு ஒரு ‘சபாஷ்’. இது தவிர முத்திரை பதித்த பல படங்கள் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். சாப்ளின் உட்பட பலரின் திரை வாழ்க்கை மீது இது வெளிச்சம் பாய்ச்சுகிறது. 

‘புதிய கோணம்’ என்ற தலைப்பில் சினிமா குறித்த புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பாரதி புத்தகாலயம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பே கூறியது போல சினிமா வரலாறை அறிவதற்கு, எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஒரு பங்கையாற்றும் என்பது நிச்சயம். இதைத் தொடர்ந்து இன்று வரையிலான வளர்ச்சியையும் அஜயன் பதிவு செய்ய வேண்டும். பாரதி புத்தகாலயம் அதை வெளியிட வேண்டும் என்பது அவா. நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

புத்தகம் வேண்டுவோர்.
BHARATHI PUTHAKALAYAM. 
421, Anna Salai, Teynampet,
 Chennai-600 018. Phone: 044-24332424, 24332924, 24339024. 
Email: thamizhbooks@gmail.com

Monday, January 16, 2012

அறிவுக்கென்று ஒரு விழா ...


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு திருவிழா இருக்கும். அந்தத்திருவிழா அந்த ஊருக்கான பெருமையை உலகெங்கும் கொண்டு சேர்க்கும். அத்தகைய திருவிழாக்களின் குறை என்னவென்றால், அவை ஏதாவது ஒரு சாதி அல்லது ஏதாவது ஒரு மதத்தால் முன்னெடுப்பதால் அந்தந்த சாதி அல்லது அந்தந்த மதத்தினரால் மட்டுமே கொண்டாடப்படும், இந்த வகையில் பகுத்தறிவாளர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிற திருவிழா என்று ஒன்று இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால், எல்லா சாதியினராலும், எல்லா மதத்தினராலும், ஏன் பகுத்தறிவாளர்களாலும் முற்போக்கு சிந்தனையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்ல அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிற திருவிழாவாகவே மாறிப்போனதுதான் திருப்பூர் புத்தகக்கண்காட்சி.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி முடிந்ததுமே, அடுத்த புத்தகக் கண்காட்சி எப்போது வருமோ என்கிற ஏக்கத்தையும், ஆண்டு துவங்கும்போதே ஆஹா.. புத்தகக் கண்காட்சி வந்துவிட்டது என்கிற ஆர்வத்தையும் வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் ஏற்படுத்துகிற, வயதில் மூத்தவர்களைக்கூட குழந்தைகள் ஆக்குகிற ஆற்றல் வாய்ந்த திருப்பூர் புத்தகக்கண்காட்சி வந்தே வந்து விட்டது.

பாரதி புத்தகாலயமும், பின்னல் புக் டிரஸ்டும் இணைந்து நடத்துகிற 9வது திருப்பூர் புத்தகக் கண்காட்சி வருகிற 25ம் தேதி தொடங்கி அடுத்த 5ம் தேதி வரை நடக்கவுள்ளது.

வெறுமனே மகிழ்ச்சிக்கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்ல, ஒத்த சிந்தனையாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கப்போகிறோம் என்பது மட்டுமல்ல, கவிஞர் இன்குலாபின் வரிகளில் சொல்வதானால், “இனியும் இச்சமூகம் ஒரு நொடி கூட இப்படியே நீடிக்கக்கூடாது” என்று இச்சமூகம் என்றைக்காவது ஒரு நாள் மாறிவிடாதா என்ற கனவையும் அதற்கான உழைப்பையும் தேக்கி வைத்திருக்கிற சமூக மாற்றத்தை தன்னைக்காட்டிலும் அதிகமாக நேசிக்கிற ஒரு மக்கள் தொகுப்பை ஒரே இடத்தில் சந்தித்து அளவளாவப்போகிறோம் என்கிற எண்ணமே எதிர்பார்ப்புக்கான அடிப்படைக்காரணமாக அமைந்து விடுகிறது.

இன்றைக்கும் பெரும்பாலான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகிறோம். சமூக ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடுகளுக்கு எதிராகப் போராடுகிறோம். உதாரணமாக, சமூக ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடான தீண்டாமை, வன்கொடுமை, வறுமை, வேலையின்மை போன்றவற்றுக்கு எதிராகத்தான் போராடுகிறோம். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படையாக இருக்கிற மக்களின் அறியாமையை அகற்ற நம்மால் முடிவதில்லை. வன்கொடுமை தீண்டாமையின் வெளிப்பாடு என்றால், தீண்டாமை சாதியின் வெளிப்பாடு. சாதி அறியாமையின் வெளிப்பாடு. அறிவு இருக்கும் இடத்தில் கண்டிப்பாக சாதிக்கு இடமில்லை.

வழக்கறிஞர்களை உருவாக்குகிற சட்டக்கல்லூரி இங்குண்டு. மருத்துவர்களை உருவாக்குகிற மருத்துவக்கல்லூரிகள் இங்குண்டு. பொறியாளர்களை உருவாக்குகிற பொறியியல் கல்லூரிகள் இங்குண்டு. ஆனால் மனிதர்களை உருவாக்குகிற கல்லூரி எங்கே என்று தேடினால், தேடாமலே கிடைப்பதுதான் புத்தகக்கண்காட்சி.

 இன்றைக்கு சொல்லணா வேதனையாக, பள்ளிக்கூடங்களில் சாதி சங்கங்கள் உருவாகின்றன. மாணவர்கள் சாதிரீதியாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர். அவ்வாறான மாணவர்களை பிரம்பால் அடிக்கக்கூட ஆசிரியர் பெருமக்கள் தயார் ஆக இருக்கிறார்கள் ஆனால், மாணவர்களின் உள்ளத்தில் சாதி உணர்வு வராமல் இருக்கும் வகையில் சொல்லித்தரலாமே என்கிற கேள்விக்கு எளிதாக வருகிற பதில், “அது எங்க சிலபசில இல்ல சார்” என்பதுதான்.

மாணவர்களின் மனதை உழுது பண்படுத்தி மனிதர்களாக வெளியே அனுப்ப வேண்டிய பள்ளிக்கூடங்கள் அதன் கடமைகளைச் செய்யாத நிலையில், அந்த கடமையைச் செவ்வனே செய்கிற ஒரே பழக்கம் புத்தக வாசிப்புத்தான் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. அத்தகைய புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துகிற உற்சாகப்படுத்துகிற புத்தகக்கண்காட்சியை வெற்றிபெறச்செய்வது சமூக மாற்றத்தை நேசிப்பவர்களின் கடமையாகும்.

- நீலவேந்தன்


 புத்தகங்கள் பூத்த நந்தவனத்தில் உலவி வந்த இணையத் தேனீக்களுக்கு, அன்பான மரியாதை ... வரும் சன.19 ஆம் தேதி, திருப்பூர், கே.ஆர்.சி சிட்டி சென்டரில் ”புத்தகக் கண்காட்சியும் புதிய ஊடகமும்” எனும் தலைப்பில் விவாத அரங்கம் நடக்க உள்ளது. வாய்ப்புள்ள நட்புக்கள் வருக ...!

Wednesday, December 21, 2011

எல்லோருக்கும் உண்டு புனைபெயர்






கடைவாயிலிருந்து
ஒழுகும் எச்சில்
அமிர்தத் தாரையென
படிந்து கிடக்கிறது
முதுகுப் புறத்தில்!

கசங்கிய சேலைக்கு
நறுமணம் தெளிக்கிறது
கதக்கிய பாலின் வாசம்!

பனித்துளிகளை
தொடுகிற பரவசத்துடன்
மென்மையாக
ஒற்றி எடுக்கப்படுகிற மலம்
மஞ்சள் தங்கமென
மின்னுகிறது விரல் நுனிகளில்!

சிதறிய சிறுநீர் திவலைகளை
அபிடேக நீரென
சிலிர்த்து
ஏற்றுக் கொள்கிறது தேகம்!

தத்துப் பிள்ளையிடம்
தன்னை முழுமையாய்
ஒப்படைத்தவளை
காணுந்தோறும்
யார் வீட்டுப் பிள்ளையோயென
கூசியபடி தொடும் நான்
கூனிக் குறுகி
சூன்யமாகிறேன்

- கோவை.மீ.உமா மகேஸ்வரி


நூல் அறிமுகம்:
எல்லோருக்கும் உண்டு புனைபெயர்
கோவை.மீ.உமாமகேஸ்வரி
வெளிச்சம் வெளியீடு
சோயம்புத்தூர்
பக் 64/ ரூ.40/ செல்: 9894777291

Friday, December 9, 2011

பாகிஸ்தான் போகும் ரயில்


பொதுவாகவே நான் ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன் அல்ல. நூற்றுக் கணக்கான மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்துள்ளேன், ஆயினும் என் ஆர்வம் ஏனோ ஆங்கில நாவல்கள் பக்கம் குறிப்பிடத்தக்க விதத்தில் திரும்பியது இல்லை. குஷ்வந்த் சிங் ஜோக்குகளைப் படித்திருக்கிறேன். ரசித்தும் இருக்கிறேன். இருப்பினும் அவர் எழுத்துகளில் மது, மாது சங்கதிகளே தூக்கலாக இருக்கும். என்னுள் படிந்த சித்திரம் இதுவே.

மேலும் அவர் காங்கிரஸ் கட்சி என்கிற எண்ணம் வலுவாக என்னிடம் வினையாற்றியது. அவர் சஞ்சய் காந்தியோடு நெருங்கி இருந்ததும் என் பார்வையில் குறுக்கீடாக இருந்தது. பின்னர் அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம்வரினும், அவரை காங்கிரஸ் சார்பு மாநிலங்களவை உறுப்பினராகவே பார்த்தேன். அவர் இல்லஸ்ட்ரேட் வீக்லி போன்ற ஏடுகளின் ஆசிரியராகச் செயல்பட்டபோது அவற்றை படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாற்றல் மிகச்சிறப்பாக இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நாவல் குறித்து பல நண்பர்கள் கூறியபோது படிக்க எண்ணினும் வாய்ப்பு அமையவில்லை. நானும் அது பற்றி பெரிதாக முயற்சித்ததில்லை. கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக, இப்போது தமிழில் வெளிவந்ததும் படித்தேன். குஷ்வந்த் சிங் என்னுள் விஸ்வரூபமெடுத்தார். அடடா இந்த நாவலை இதுவரை படிக்காமல் இருந்து விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியே ஏற்பட்டது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது இந்நாவல். இன்று படிக்கும் போதும் நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் சம்பவங்களோடு பொருந்திப் போவது தற்செயலானது அல்ல. ஆம், மதவெறி நெருப்பு தானாகப் பற்றுவதல்ல; பற்றவைக்கப்படுவதே என்பதை இந்நாவல் உரக்கப்பேசுவதால் - நெஞ்சில் பதிய வைப்பதால் இன்றும் உயிர்த்துடிப்புடன் இந்த நாவல் மனதைக் கவ்வுகிறது. இந்திய விடுதலையின் போது இந்தியா- பாகிஸ்தான் என இரு கூறாக்கப்பட்ட சூழலில் இந்நாவல் பிறந்துள்ளது. பாகிஸ்தான் எல்லையோர இந்தியக் கிராமமான மானோ மாஜராதான் கதைக்களம். சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமம். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவரும் அருகருகே வாழும் அமைதியான கிராமம். எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகச்சொற்பம்.நாட்டு நடப்புகள் குறித்து அதிகம் தெரிந்திராத மக்கள். உழைப்பையும் அன்பையும் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அந்த கிராமத்து வாழ்க்கையை அச்சு அசலாக குஷ்வந்த் சிங் நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்.

அந்த கிராமத்தில் ராம்லால் சேட் வீட்டைப் பக்கத்து ஊர் சமூகவிரோதிகள் கொள்ளையடிப்பதும்... அந்த சமயம் அரசால் பத்தாம் நம்பர் ரவுடி என புதிய முத்திரை குத்தப்பட்ட ஜக்கா சிங் ஒரு ஏழை நெசவுக்கார முஸ்லிம் பெண் நூரனிடம் காதலால் கட்டுண்டு கிடப்பதுமாய் நாவல் மொட்டவிழ்கிறது. காதல் காட்சிகளை குஷ்வந்த் சிங் அவரது பாணியில் தீட்டியுள்ளார். கொள்ளைக்காரர்களால் ராம்லால் சேட் கொல்லப்பட்டதும் நாவல் சூடுபிடிக்கிறது. அதிகார வர்க்கமும் காவல் துறையும் மிக எளிதாக அந்தப்பழியை ஜக்கா சிங் மீது சுமத்துவது முதலில் அதிகார வர்க்க நடைமுறையைக் கேலிசெய்வதாக அமையினும், போகப்போக அதற்குள் மிகப்பெரிய மதக்கலவர சதி புதைந்திருப்பதை மிக நுட்பமான காட்சி சித்தரிப்புகளூடே குஸ்வந்த் சிங் நூல் நெடுகச் சொல்லிச் செல்கிறார்.அவை ஒவ்வொன்றும் இன்றைய குஜராத்தின் சில பக்கங்களையாவது நினைவூட்டாமலிருக்காது.

கொம்புசீவிவிடப்பட்ட மதவெறியால் பாகிஸ்தானில் கோரமாய்க் கொல்லப்பட்ட சீக்கியப் பிணங்கள் கூட்ஸ்களில் நிரப்பப்பட்டு அந்த ரயில் கிராமத்துக்கு வந்தது. மத வேறுபாடின்றி அக்கிராம மக்கள் பதைத்தார்கள். கண்ணீர் உகுத்தார்கள். ஆயினும் அவர்களுக்குள் அது பகைமை நெருப்பை பற்ற வித்திடவில்லை. அதிகார வர்க்கம் சும்மா இருக்குமா? முன்பு நடந்த கொலைக்காக ஜக்கா சிங்கையும், சம்பந்தமின்றி ஊருக்குப் புதிதாய் வந்த படித்த இளைஞனை (அவன் கம்யூனிஸ்ட் என குஸ்வந்த் சிங் பெயர் சுட்ட மாட்டார் வர்ணனை அப்படி தோற்றமளிக்கச் செய்யும்) கைது செய்கிறது.லாக் அப்பில் பூட்டுகிறது அதிகார வர்க்கம். ஆனால், உண்மையான குற்றவாளியான மல்லியைக் கைது செய்தபின் அவனை விடுதலை செய்து மதவெறிக் கோரநர்த்தனத்துக்கு முன்னிற்கச் செய்கிறது. அதிகார வர்க்கத்தின் மூர்க்கம்,வஞ்சகம்,பேராசை, காமக்களியாட்டம் எல்லாம் நேரடிக்காட்சிபோல் நாவலில் நகர்கிறது.

மீண்டும் பிண ரயில், அகதிகள் வருகை மெல்ல மெல்ல மனோ மஜரா கிராமத்தில் மதவெறி குரோத வைரஸ் செலுத்தப்படுகிறது.ஆயினும் மக்கள் மதமாச்சரியங்களை மீறி வாழவே பிரியப்படுகிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்?விதியின் போக்கைத் தீர்மானிப்பது சூழலும் ஆளும் வர்க்கமுமாய் அல்லவா இருக்கிறது? இன்றும் அதுதானே நிலைமை. அந்த கிராமத்தை விட்டு முஸ்லிம்கள் வெளியேறவேண்டியதாகிறது. நூரன் குடும்பம் உட்பட முஸ்லிம்கள் மிகுந்த மனச்சோர்வோடுதான் வழியனுப்பப்படுகிறார்கள்.ஆனாலும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் வேறாகவே இருக்கிறது. மாஜிஸ்திரேட் ஹூகம் சந்த், சப் இன்ஸ்பெக்டர் இருவரின் நடவடிக்கைகளை விலாவாரியாகப் பதிவு செய்து அதிகார வர்க்கத்தையே தோலுரித்துக் காட்டிவிட்டார்.

குரோத நெருப்பு வலிய மூட்டப்படுகிறது. நெருப்பு சூடேற சூடேற இளைஞர்கள் பலர் மனதில் விஷம் ஏறுகிறது. மனிதம் தொலைய மிருகம் பழிவாங்கப் புறப்படுகிறது. அகதிகளாய் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ள முஸ்லிம்களைப் பிணமாக்கி பிண ரயிலை அனுப்பி பழிவாங்கக் கச்சிதமாய்த் திட்டம் தீட்டப்படுகிறது. இது ஒருபுறம். மறுபுறம், அந்த நேரம் ஹூகம்சந்த் மனதை விலைமாதாய் இன்பம் தர அழைத்துவரப்பட்ட இளம்பெண் ஹஜீனா மீதான மையல் ஆட்டிப்படைக்கிறது. தன் மகள் வயதொத்த அந்த முஸ்லிம் பெண்ணின் மீது பரிவும் பற்றும் அவருக்குள்ளும் கல்லுக்குள் ஈரமாய் தலைநீட்டுகிறது.விழித்துக் கொண்ட மனிதம் அவரை யோசிக்க வைக்கிறது.

இப்போது அவர் மூளையில் உதிப்பது சதியல்ல.. ஒரு புத்திசாலித்தனக் கணக்கு. ஜக்கா சிங்கின் காதலும் வெள்ளந்தியான மனிதநேயமும் முரட்டுவீரமும் உசுப்பிவிடப்பட்டால்-அத்துடன் அந்த படித்த இளைஞனும் சேர்ந்தால்... கதை மாறலாம் அல்லவா? அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.படித்த இளைஞன் ஆத்திரப்படுகிறான். குழம்புகிறான். கையைப்பிசைந்து மதுவில் மூழ்குகிறான். ஆனால் ஜக்கா சிங் ஒற்றை ஆளாய் கடவுளைக் கும்பிட்டுக் கிளம்புகிறான். அவனது நம்பிக்கைக்கு பெரிய தத்துவ அடிப்படை எல்லாம் கிடையாது. அன்பு... மனிதர் மீதான காதல்.நல்லது செய்யும் பெரிய மனது. அவ்வளவுதான்.அவனின் முயற்சி வெற்றிபெறுகிறது.சதிக்கும்பலின் திட்டம் இவனொருவனால் தவிடு பொடியானது.ஆனால் அதற்கு ஜக்கா சிங் தன் உயிரையே விலையாக அல்லவா தந்தான். நமக்கும் நிம்மதிப் பெருமூச்சு...

இந்த நாவல் மத நடைமுறைகளை-தத்துவ ஊனங்களைப் போகிறபோக்கில் நன்றாகப் பகடி செய்கிறது. ஒரு ஆபத்தான கதைக்கரு, கதைக்களம் கிட்டத்தட்ட வாள் முனைமேல் நடப்பது போன்றது.அதில் குஸ்வந்த் சிங் வெற்றி பெற்றது எப்படி? 96 வயதைக் கடந்து எப்படியும் சதம் அடிப்பேன் என வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் தமது கடைசி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதையொட்டி அவர் அளித பேட்டியொன்றில் தான் கடவுள் மத நம்பிக்கையற்று இருப்பதற்காகப் பெருமைப்பட்டார்.இறுதிமூச்சுவரை அப்படியே வாழ்வேன் என்றார்.மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தார். இந்த உறுதிதான் 1956ல் எழுதிய இந்த நாவலை இன்றும் பேசவைக்கிறது.

குஸ்வந்த்சிங் எழுத்து நடை வீரியமிக்கது.காட்சிசித்தரிப்பாயினும், மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாயினும், சமூக விமர்சனமாயினும், ஆசிரியர் குரலாயினும் அதனை இயல்பாகப் பதிவு செய்கிற வல்லமை அவருக்கு கைவரப்பெற்றிருக்கிறது. அந்த வீச்சும் வேகமும் ஆற்றொழுக்கு நடையும் சற்றும் குறையாமல் தமிழில் தந்திருக்கிற ராமன் ராஜா நம் பாராட்டுக்குரியவர். மதவெறி இன்றைக்கும் நம் சமூகத்தில் முக்கிய அஜெண்டாவாக உள்ளது. குஜராத் அதன் சோதனைக் களமாக உள்ளது. இந்நிலையில் மதவெறிக்கு எதிராக உரக்கப்பேச இந்த நாவலும் ஆயுதமாகும்.


-சு.பொ.அகத்தியலிங்கம்

Thursday, December 8, 2011

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்

வரலாற்றுப் போக்கில் பெண் அடிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சமூக நிறுவனங்கள் அவளை மிகத் தந்திரமாகக் கட்டுக்குள் வைத்தே வந்திருக்கின்றன. அவ்வப்போது எழுந்த பெண்களின் குரல்கள், ஆணாதிக்கத்தின் காட்டுக்கூச்சலில் அமிழ்த்திச் சாகடிக்கப்பட்டிருக்கின்றன. அக்கூச்சல் பகடிகளாகவோ அல்லது அதிகார வன்குரலாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றில் பெண் குரல் அடக்கி ஒடுக்கப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. காலவெள்ளத்தில் சில புதைமேடுகள் மட்டுமே சிதைவுற்று வெளித்தெரிகின்றன. அவற்றைக் கொண்டே பெண்ணுரிமைக் குரல்களின் வரலாற்றைத் தொகுக்க வேண்டியதாக உள்ளது.

இந்தியச் சாதி அமைப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய மாமேதை அம்பேத்கரின் நூற்றாண்டு நிகழ்வுக்குப் பிறகு, அதாவது தொன்னூறுகளுக்குப் பிறகு எழுந்த தலித்திய எழுச்சியின் உடனிகழ்ச்சியாகப் பெண்ணிய எழுச்சியும் உருவானது. தொன்னூறுகளில் சிற்சில பெண் கவிஞர்கள் எழுத்துக் களத்துக்கு வர, தொடர்ந்த சில ஆண்டுகளிலேயே ஏராளமான பெண்கள் எழுத்துத் துறைக்கு வந்தனர்.

தமிழின் எழுத்து அசைவியக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பெண்களின் எழுத்துக்களில் கவிதை முதன்மையாக உள்ளது. அக்கவிதைப் போக்கினையும் கவிஞர்களையும் மதிப்பீடு செய்யும் அரும்பணியைச் செய்துள்ளார் ‘பெண்ணெழுத்து’ நூலாசிரியர் ச.விசயலட்சுமி. செம்மலர் இதழில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு செம்மைபடுத்தப்பட்டு நூலுருவாக்கம் பெற்றிருக்கின்றது.

பெண்ணெழுத்துக்களில் கவிதை சிறப்பிடம் பெறுவதையும் மற்ற இலக்கிய வடிவங்களில் ஈடுபடுவதைக் காட்டிலும் கவிதை எப்படிப் பெண்களுக்கு உகந்த வடிவமாக இருக்கிறது என்பதையும் ச.விசயலட்சுமி நூலின் முதல் கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். சமூக அடிப்படையிலும் பாலின அடிப்படையிலும் ‘இரட்டைச் சுமையைச் சுமக்கும் பெண்களுக்கு நகாசு வேலைகள் அதிகம் செய்யத் தேவையற்ற, இயல்பாக ஈர்ப்பை உருவாக்குகிற கவிதை வடிவமே இலகுவாக உள்ளது’ என்கிறார்.

பெண்களின் படைப்புகள் எவ்வாறு இதுவரை எழுதப்படாத பெண்களின் வாழ்க்கையை, நோக்கை, போக்கை முன்வைக்கிறதோ, அவ்வாறே பெண் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் இந்நூலும் புதிய வகையிலான விமர்சனச் செல்நெறியைக் கைக்கொண்டிருக்கிறது. பெண்கவிஞர்கள் குறித்த பெண் நோக்குநிலை விமர்சனம் என்ற அடிப்படையில் இந்நூல் தனித்துவம் மிக்கதாகிறது.

தனித்துவம் மிக்க பதிமூன்று பெண்கவிஞர்களையும் அவர்தம் படைப்பின் தன்மையையும் போக்கினையும் அறிமுகப்படுத்தும் விசயலட்சுமி, இறுதிப் பகுதியில் விடுபட்டுப்போன பிற தமிழின் பெண் கவிஞர்களைத் தொகுத்துச் சொல்லி, நூலினை நிறைவுள்ளதாக்கியுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதை மரபில் பெண்களுக்கான இடம் குறித்துப் பருந்துப் பார்வையில் விமர்சித்துச் செல்லும் விசயலட்சுமி, காத்திரமான தனது அவதானிப்புகளை அழுத்தமாகப் பதிந்து செல்கிறார். பிரதியினைக் குறித்த வாசிப்பு மட்டுமின்றி, பிரதியின் மீள் வாசிப்பும், மீள்வாசிப்பின் மீதான வாசிப்பும் அவசியமாகிறது என்கிறார். புதுக்கவிதையில் ஈடுபடத் தொடங்கிய பெண்கள் தொடக்கத்தில் பொதுத் தன்மையிலேயே எழுதியமையையும் பின்னர் அவற்றின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அடையாளப்படுத்துகிறார். ‘மெல்ல மெல்ல நிலம் கீறி விதை முளைத்து வெளிவருவது போலத் தங்கள் சுயத்தை முன்னிலைப் படுத்தும் கவிதைகளை’ அவர்கள் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.

மாலதி மைத்ரியின் கவிதைகளை மதிப்பிடும் விசயலட்சுமி, அவரது கவிதைகளில் பெண் உடல் எல்லையற்றதாகி மிதப்பதுடன் இயற்கையின் கூறாகவும் விளங்குகிறது என்கிறார். பெண் உடல்மீது சமூகம் கட்டமைத்த நிர்பந்தங்களை உடைத்துப் பார்ப்பது, தாய்மை உணர்வைக் கொண்டாடுவது, உடல் உடைமையாகவும் வணிகமாகவும் முன்வைக்கப்படுவதை எதிர்ப்பது என்ற தளங்களில் மாலதி மைத்ரியின் கவிதைகள் இயங்குவதை அடையாளப்படுத்துகிறார்.

பெண்ணின் மனச்சாட்சியாக வெளிப்படுபவை சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள் என்று மதிப்பிடும் விசயலட்சுமி, அவரது கவிதைகளில் மனப்போராட்டம், அதை வென்றெடுக்கும் முயற்சி, தோல்வி இவைபற்றிய விவரிப்புகள் பரந்து கிடப்பதை எடுத்துக்காட்டிப் பேசுகிறார். பெண் கவிஞர்களின் கவிதைகளில் பெண்ணுக்கான உலகைத் திறந்துகாட்டிய முன்னோடிகளுள் மிக முக்கியமானவராக சுகந்தி சுப்பிரமணியத்தை மதிப்பிடுகிறார். பெண்களின் அடுக்களை சார்ந்த உழைப்பை, குடும்பத்திற்குள் சுருங்கிப் போகிற திணறலை, சுதந்திரத்தின் வெளியை எட்டமுயற்சித்தலை இவரது கவிதைகள் வெளிக்காட்டுவதாகக் குறிப்பிட்டெழுதுகிறார்.

மண் சார்ந்த கவிஞராகக் கவிதைக் களத்திற்குள் வந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன். ‘எஞ்சோட்டுப் பெண்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுதியில் புறவயமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்த தமிழச்சி, பிந்தைய தொகுப்புகளில் புறத்தாக்கங்களை அகமனத்தின் அனுபவங்களாக மாற்றி, உட்கிடையான எண்ணவோட்டத்தினை அதற்கேற்ற வலுவான மொழியோடும் பொருத்தமான உத்தியோடும் பேசுவதாகச் சொல்கிறார் விசயலட்சுமி. வனப்பேச்சி என்னும் பருண்மையான படிமம் தமிழச்சியின் கவிதைகளில் பெறுமிடத்தையும் சிறப்பையும் நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

சாதாரண மனிதர்கள் சந்திக்கும் சவால்களைத் தனது கவிதைக் களமாகக் கொண்ட பாலபாரதி, சமையலறையின் சூக்குமத் தன்மையினை மிக ஆழமாக அடையாளப்படுத்திய கவிஞர் என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். பாலபாரதியின் அரசியற் புரிதலும் செயல்பாடுகளும் கவிதைகளில் ஊடாடி, கவிதையைப் போராடும் கவிதையாக ஆக்கியிருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

அன்பும் அன்பு சார்ந்த தன்மைகளையும் அனைத்து நிலைகளிலும் வற்புறுத்தும் ரத்திகாவின் கவிதைச் செல்நெறியினை விளக்கிச் செல்கிறார் விசயலட்சுமி. மூன்று தொகுப்புகளை வெளியிட்டுள்ள பாரதி கிருஷ்ணனின் காதல் கவிதைகளிலும் அரசியல் துணைக்கு அழைக்கப்பட்டுள்ளமையை அடையாளங்காட்டுகிறார். தாய்மையைக் கொண்டாடுதலையும் குழந்தைகளின் மீதான கவன ஈர்ப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் கலை இலக்கியாவின் கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். மொழியின் மூலம் அழகியலை வயப்படுத்தியிருக்கும் கனிமொழியின் கவிதைகள் மனதின் திமிறல்களைப் பதிவு செய்துள்ளமையை அழகுற விளக்கிச் செல்கிறார்.

வேட்கையின் நிறம் என்ற தொகுப்பின் மூலம் கவனம் பெற்ற உமாசக்தியின் கவிதைகளில் காதல்மீது ஏற்றப்படும் புனித்தத்தின் முகம் கிழிக்கப்படுவதைக் குதூகலத்துடன் விவரித்துச் செல்கிறார். பெண்கள் காலங்காலமாக அனுபவித்து வரும் புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள், தன்னிரக்கம், தாய்மை ஆகிய பொருண்மைகளில் உமாசக்தியின் கவிதைகள் மையங்கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அலைந்துழல்வு காரணமாக ஏதிலியாய் கனடாவுக்கும் தமிழ்நாட்டுக்குமிடையே அல்லாடும் தமிழ்நதியின் மொழி பலத்தைச் சிறப்புற எடுத்துக்காட்டிப் பாராட்டும் விசயலட்சுமி, கவிஞரின் உலகலாவிய ஆதிக்கத்துக்கெதிரான குரலையும் மதிப்பிட்டுப் பாராட்டுகிறார். போர்ச்சூழலில் பாதிக்கப்படும் பெண்களையும் குழந்தைகளையும் அவரது கவிதைகள் பதிவு செய்திருப்பதை எடுத்துக்காட்டி நெகிழ்கிறார். இலங்கையைச் சேர்ந்த ஃபஹீமா ஜஹான் என்ற இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ப் பெண் கவிஞரையும் அவர்தம் கவிதையையும் போர்ச்சூழல் பதிவுகளையும் எடுத்துக்காட்டி விவாதிக்கிறார்.

பதினாறு கவிதைகளைக் கொண்ட சிறு தொகுப்பினை வெளியிட்ட சுபமுகியின் அக்கறைகள் பல்வேறு தளங்களில் இயங்குவதையும் இளைஞர்களின் உலகில் அக்கவிதைகள் கவனம் கொள்ளுவதையும் சிறப்புற எடுத்துக்காட்டுகிறார். குடும்பம் உறவு சார்ந்த விஷயங்களையும் அவை சார்ந்த உளவியல் நெருக்கடிகளையும் பதிவு செய்துள்ள கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதைகளை எடுத்துக்காட்டுகிறார்.

பெண்ணுடலை அரசியலாக்கும் முயற்சியில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சுகிர்தராணியின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு நுட்பமாக ஆராய்ந்து மதிப்பிட்டிருக்கிறார் விசயலட்சுமி. சாதியம், மதம் ஆகியவை பெண்ணின் உடல்மீது செலுத்தும் ஆதிக்கம், வன்முறை ஆகியவற்றை உடலை ஆயுதமாக்கி எதிர்கொள்ளுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

இறுதிக் கட்டுரையில் லீனா மணிமேகலை, தி.பரமேசுவரி, இளம்பிறை, அ.வெண்ணிலா, ஏ.இராஜலட்சுமி, எஸ்.தேன்மொழி, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, கு.உமாதேவி, அரங்க மல்லிகா, புதிய மாதவி என விடுபட்ட கவிஞர்களின் கவிதைகளையும் மதிப்பிட்டுள்ளார்.

பெண் கவிஞர்கள் பெண்ணியச் சிக்கல்கள் மட்டுமின்றி உலகலாவிய பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் தங்களது அக்கறைகளைப் படைப்பாக்கியிருப்பதனையும் விசயலட்சுமி எடுத்துக்காட்டியுள்ளார். பெண்களின் கவிதைகள் சுய இரக்கம் கொள்ளும் நிலையை மிக எளிதாகத் தாண்டி விட்டமையையும் அடையாளப்படுத்துகிறார். பெண்ணியக் கோட்பாடுகளிலும் தங்களுக்கென்றொரு பாதையினைப் பற்றியவர்களாக அவர்களிருப்பதனை வலியுறுத்திக் கூறுகிறார். பெண் கவிஞர்கள் உடல்சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதுவதாகவும் அதனால் பண்பாட்டுச் சூழல் சீர்கெட்டுப் போவதாகவும் சாமியாடும் விமரிசனக் கோமாளிகளுக்குப் பதில் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். உடலரசியல் ஆணாதிக்கத்தை வெட்டிச்சாய்க்கும் ஆயுதம் என்று உரத்துப் பேசுகிறது இந்நூல்.

பெண்ணெழுத்தின் போக்குகள் குறித்த ஆழமான, நுட்பமான பார்வையினைக் கொண்டவராக ச.விசயலட்சுமியினை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. தமிழின் விமரிசன பீடங்கள் கவனம் குவிக்காத பல கவிதைகளை இவர் அடையாளங்கண்டு விவரித்துப் பேசுகிறார். விரிவாக அறிமுகப்படுத்துவதற்கு இவர் தேர்ந்தெடுத்த கவிஞர்களும் தனித்துவமானவர்கள். பிரபலமானவர்கள் என்ற வசதியான தெரிவினை விசயலட்சுமி மேற்கொள்ளவில்லை; மாறாக, ஒரு கவிதை நூல் வெளியிட்டவர்களைக் குறித்தும் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளார். பெண்ணெழுத்தின் பன்முகத் தன்மையை அடையாளப்படுத்த முயற்சி செய்துள்ளார். அம்முயற்சியில் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்க வகையில் வெற்றியும் பெற்றிருக்கிறார் எனல் வேண்டும்.

பெண்ணெழுத்தின் சிறப்புக்களை அதன் விரிந்த தளத்திலிருந்து அறிமுகப்படுத்தும் அதேநேரத்தில், போதாமைகள் குறித்தும் திசை விலகல்கள் குறித்தும் கவனப்படுத்தியுள்ளார். இப்போக்கு இந்நூலைப் பெண்ணெழுத்து குறித்த அறிமுகமாக மட்டுமிற்றிக் காத்திரமான விமரிசன நூலாகவும் ஆக்கியுள்ளது. சுகிர்தராணியின் ‘கைம்மாறு’ கவிதையை எடுத்துக்காட்டும் விசயலட்சுமி, ‘அரசியலைத் தொடும் கவிதை, அதிலிருந்து முற்றாக விலகிவிடுகிறது. உடலரசியலைப் பேசிய கவிதைகள் மீண்டும் துவங்கிய புள்ளியில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். கவிதைகள் உடலரசியலின் முக்கியப் புள்ளிகளைத் தொட்டிருக்கிற நிலையில் உடலரசியலின் பரிமாணங்களைத் தொடர்ந்து பேச வேண்டிய அவசியத்தைக் கொள்ள வேண்டும்’ என்றும் விமரிசித்துள்ளார்.

பெண் கவிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் இந்நூலில் தொகுத்துப் பார்க்கும்போது, இருபதாண்டுத் தமிழ்க்கவிதைப்போக்கில் பெண்ணெழுத்தின் அழுத்தமான தாக்கத்தை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. பெண்ணெழுத்துக்கள் குறித்த விரிந்த புரிதலுக்கான வித்தாக இந்நூல் விளங்குகிறது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய இரண்டாயிரம் ஆண்டுக்காலக் கவிதைப்பரப்பில், தற்காலக் கவிதையில் பெண்களின் இடத்தை, கெஞ்சுதலின்றி தர்க்கப்பூர்வமாக வற்புறுத்திப் பெற்றுத் தந்துள்ளார் ச.விசயலட்சுமி. அதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

-கி.பார்த்திபராஜா

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்
ச. விசயலட்சுமி
பக்:128 | ரூ.70
பாரதி புத்தகாலயம்

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது.
இந்துமடாதிபதிகளும், இந்து சமய அடிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது.

பெட்ரோடாலர் (அரபு நாடுகளின் பணம்) இம்மதமாற்றத்தின் பின்புலமாக இருந்ததாகப் பேசப்பட்டது. மத்திய உள்துறையின் அமைச்சர் ‘மக்வானா’ இக்கிராமத்திற்கு வந்து ஆராய்ந்து இக்கருத்தை மறுத்ததுடன், தமிழகக் காவல்துறையின் அத்துமீறலே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதைக் கண்டறிந்தார்.

பாராளுமன்றத்திலும் தாம் கண்டறிந்த உண்மையை முன்மொழிந்தார். இதன்பின்னர் சாதிய உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டனர், என்றாலும் மதம் மாறியவர்கள் தம் நிலையில் உறுதியாக நின்றனர். இந்நாவலாசிரியரின் கூற்றுப்படி வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாகத் தாடி தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாகக் குல்லா, மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட இனத்து பெண்டிரெல்லாம் தலைமுடி முக்காடிட்டுக் கொண்டார்கள். கருப்பசாமி காதர் பாயானார். கருப்பாயி நூர்ஜகானானாள். (பக்கம் 9)

பணக்கார இஸ்லாமியர்கள் வழங்கிய கொடையால் பெரிய அளவிலான பள்ளிவாசல் இங்கு கட்டப்பட்டது. பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துவந்த பெண்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வழிமுறையாக வீடுகளில் அடிகுழாய் போடப்பட்டது. ‘மார்க்ககல்வி’ பயில இளைஞர்கள் சிலர் வாணியம்பாடிக்கு அனுப்பப்பட்டனர். பேருந்துப் பயணத்தில் தாம் அமர்ந்திருக்கும் இருக்கையை, தம்மைவிட வயதில் சிறியவனாக இருக்கும் ஆதிக்க சாதியினருக்குக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டு பயணம் செய்யும் அவலம் மறைந்தது. மொத்தத்தில் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மதமாற்றம் துணைபுரிந்தது.

பொருளியல் நோக்கில் அல்லாமல், ஓர் எதிர்க்குரலாக அமைந்த இம்மதமாற்றம் குறித்து நாவலில் இடம்பெறும் காதர் மானத்துக்கும், ரோசத்திற்கும் மாறினோம். சோத்துலே உப்புப் போட்டு திங்கிறதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றம் (பக்கம் 20) என்கிறார்.

மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார்.

மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.

நாவலின் கதை

காமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.

தனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

அடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையையும் இந்நாவல் பேசுகிறது.

நாவலின் மையச் செய்தி

மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்க் குரலாக அமைந்தாலும், காலப்போக்கில் சில புதிய பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் இந்நாவலின் மையப்பிரச்சனையாக நவ்முஸ்லிம்களது பெண்பிள்ளைகளின் திருமணம் அமைகின்றது.

தமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.

நவ்முஸ்லிமான ‘முஸ்தபாவாத்தியார்’ எம்.ஏ., பி.எட்., படித்தவர். தம் திருமணப் பத்திரிக்கையில் தம் தந்தையின் பெயருக்கு பின்னும், தன் பெயருக்குப் பின்னும் ‘இராவுத்தர்’ என்று போட்டு அச்சிட்டுவிட்டார். அவர் திருமணம் செய்த பெண், பரம்பரை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணப் பத்திரிக்கையை பார்த்த பெண் வீட்டார் ‘நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.

மீனாட்சிபுரத்து நவ்முஸ்லிமான ‘உசேன்’ என்பவர், வெளியூர் பள்ளிவாசல் ஒன்றில் ‘அசரத்’ ஆகப்பணிபுரிகிறார். இஸ்லாமியராக மதம்மாற விரும்பிய தலித் இளைஞர் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அப்போது அசரத்து, நாம அங்கயெல்லாம் போகக்கூடாது. அந்தப் பையன் எஸ்ஸி யாக்கும். அதனால் அவன் இங்க வரட்டும். நம்ம அங்க போனமுன்னா சரிவராது என்கிறான் பரம்பரை முஸ்லிம் இளைஞன் ஒருவன் (பக்கம் 58). இதற்கு விடையாக அசரத் கூறியதும், அதை அவன் ஏற்க மறுத்துக் கூறிய பதிலும் நாவலில் இவ்வாறு இடம் பெறுகின்றது.

ஏத்தா... இப்படிப் பேசக்கூடாது. இந்த உலகத்தையே அல்லாஹ்தான் படைச்சான்னு சொல்லிகிட்டு அதுலயும் மனுசங்கள்ல நாம எஸ்ஸி, பீஸின்னு பிரிக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லுறான். நீங்க என்ன வேணா சொல்லுங்க அசரத்து, அவங்க அவங்கதான்... நாம நாமதாங்கிறான் (பக்கம் 58).

தான் உரையாடிக் கொண்டிருக்கும் அசரத், மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திலிருந்து வந்த ‘நவ்முஸ்லிம்’ என்பது அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. (பக்கம் 24-25, 43-46, 59-61).

இவையெல்லாம் போகிறபோக்கில் என்பது போன்ற பதிவுகள். நாவலின் மையச் செய்தியாக இடம் பெறுவது, நவ்முஸ்லீம்கள் வீட்டு இளம் பெண்களுக்கு மணமகன் கிடைக்காது திருமணம் தடைப்பட்டு நிற்பதுதான். நாவலின் தொடக்கத்தில் இடம் பெறும் நூர்ஜஹானின் மரணக்கடிதம் இந்த அவலத்தை மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது. நாவலின் வளர்ச்சிப்போக்கில் இச்சிக்கல் பல்வேறு கதைமாந்தர்களின் கூற்றாக எடுத்துரைக்கப்படுகின்றது.

நூர்ஜஹானின் கடிதத்தில் உருக்கமாக இடம்பெறும் இந்த அவலம், மதம் மாறாத அவள் சித்தி பன்னீரின் கூற்றில் கோபமாக கொப்பளிக்கிறது. பள்ளிவாசலில் கூடியிருந்த ஜமாத்தார்களைப் பார்த்து ‘பெத்துவச்ச புள்ளய காலக் காலத்துல கெட்டிக் குடுக்கத் துப்பில்லாம ஒங்களுக்கெல்லாம் தாடி, தொப்பி ஒரு கேடா, வெக்கமாயில்ல’ (பக்கம் 19) என்று பன்னீர், தொடங்கிவைத்ததை, அல்லாபிச்சை மேலும் தொடர்கிறார். அவரது கோபத்தின் இலக்காக ஜமாத்தின் தலைவர் அமைகிறார்.

‘‘யோவ் தலைவரே... உமக்குப் பொட்டப்புள்ள இல்ல. அதான் பொட்டப்புள்ள பெத்த எங்க கவலை ஓமக்கு இல்லாமப் போயிருச்சு. தாடிய நீட்டி விட்டிக்கிட்டு ஊர் ஊராய்ப் போயி பள்ளிக்கு நிதி சேர்க்கிறோமுன்னுட்டு நல்லா வயிறு முட்ட தின்னுட்டு வரத்தெரியுது. சமஞ்சு நிற்கிற பொம்பளபுள்ள விஷயமா எந்த ஜமாத்துலயாவது பேசியிருக்கீராவே.. துப்புந்துவருங் கெட்டு இந்த பதவில நீர் இருக்கிறதுக்கு நாண்டுகிட்டு நின்னு சாவலாம் வே... ஒண்ணா ரெண்டா அம்பது பிள்ளைகளுக்கு மேலே சமஞ்சு உக்காந்து வருசம் இருபது ஆகுதுவே (பக்கம் 19).


நாவல் விடுக்கும் செய்தி

கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வு இடம் பெற்று ஒரு வேறுபாடான இஸ்லாமியர் சமூகம் அறிமுகப்படுத்தப்படுவது போல், இந்நாவலும் வேறுபாடான ஓர் இஸ்லாமிய சமூகத்தை அறிமுகம் செய்கிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் இது ஓர் விவாதத்திற்குரிய நாவல்.

1981-இல் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றத்திற்கான சமூகக் காரணிகளையும், மதமாற்ற நிகழ்வுகளையும் நன்றாக உணர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நாவலாசிரியர். ஆனால் ‘இவையெல்லாம் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகள்’ ஆகிவிட்டன. மதமாறியவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், நிகழ்காலம் சார்ந்தவை. இதையே நாவலின் கருவாக இவர் எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனால் கடந்த கால நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதை அவர் தவிர்த்துள்ளார். தாமும் ஒரு நவ்முஸ்லிம் என்பதன் அடிப்படையில் தன் சமூகத்தின் நிகழ்கால அவலத்தை இந்நாவலில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்.

பொதுவாக, குழும மதமாற்றங்கள் ஒரு கலகச் செயலாக அல்லது எதிர்க்குரலாக நிகழும். அத்துடன் மதம் மாறியவர்களுக்குத் தற்காலிகமாகவேணும் ஒரு பாதுகாப்புவளையமாக அமையும் தன்மையது. மீனாட்சிபுரம் மதம் மாற்றமும் இத்தகையதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தேவை முடிந்துபோய், புதிய சிக்கல்கள் உருவாகின்றன. மீனாட்சிபுரம் தேவேந்திரக்குல வேளாளர்கள் மேற்க்கொண்ட, இஸ்லாமிய மதமாற்றம், சில சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட துணை நின்றுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு கட்டத்தில் தேக்கநிலை அடைந்து இறுதியில் தடைகள் ஆகிவிட்டது என்பதே நாவல் விடுக்கும் செய்தி.

-ஆ.சிவசுப்பிரமணியன்

கருப்பாயி என்கிற நூர்ஜஹான் | அன்வர் பாலசிங்கம் பக்: 102 | ரூ.100 | கலங்கைப் பதிப்பகம். திருநெல்வேலி | 9445801247



Sunday, November 13, 2011

நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல்

mammutty book

மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை என்று ஆக்கி வைத்துவிட்ட அந்தப் பிரதியைப் பற்றி என்ன சொல்ல.... அல்லது சொல்லாது எப்படி இருக்க?


மலையாள நடிகர் மம்முட்டி (பிரபல என்ற வழக்கமான அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதைப் பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி புக்ஸ் வெளியீடு.

மம்முட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் அவரது எழுத்தின் மொழிபெயர்ப்பே இத்தனை கவிதையாய் ஒலிக்குமானால், மலையாளத்தில் அது எப்படி வசீகரிக்கும் என்று அறிந்துகொள்ள நெஞ்சு சிறகடிக்கிறது.


வளர்ந்த பிறகும் ஒரு மனிதர் குழந்தை போன்ற உள்ளத்தோடு விஷயங்களை அணுக இயலுமானால் அது வாழ்க்கை அவருக்குக் காட்டும் கருணை என்றே கொள்ள வேண்டும். தவறுகளுக்கு நாணும் தன்மையும், அவற்றைக் கூச்சமின்றி சபையில் எடுத்து வைத்துத் தலைக் குனிவோடு அதிலிருந்து விடுதலை பெற்று வெளியேறும் துணிவும் வாய்ப்பது இயற்கையின் வரமாகவே இருக்க வேண்டும். அடுத்தவரது அதிகார அத்துமீறலை, போலித்தனத்தை, கூசாது பொய்யுரைப் பதை சலனமற்ற ஓடை ஒன்றின் தெள்ளிய நீரைப் போல் தனது கருத்தை அதில் தோய்த்தெடுக்காது பிரதிபலிக்கிற மம்முட்டியின் பக்குவம் இரந்து கோள் தக்கதுடைத்து. 'தன்னை நேசிப்பவரை நாய் நேசிக்கும், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்ற மகாகவி கலந்து வாழ்கிற பக்கங்கள் இருக்கின்றன இந்தப் புத்தகத்தில்.
தாம் என்னவாக இல்லையோ அதையும் சொல்லி, அப்படி இருக்கலாமே என்று அடுத்தவரோடு சேர்ந்து நின்று உறுதியெடுக்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் மகத்துவம் பெறும் பக்கங்கள்.

கல்லூரி நாட்களில் தமது பெயர் குறித்த அவஸ்தையின் பழைய நினைவு கூரலில் தொடங்கும் அவரது பயணம், விதவிதமான மனிதர்களின் நுழைவையும், அவர்களது வாழ்வில் இவரது நுழைவையும் கலந்து பேசிக்கொண்டு செல்கிறது. நன்றி பாராட்டும் போது மறக்காத பெயர்கள், நன்றி கொன்றவர்களைச் சொல்லும் இடத்து நாகரிகத்தோடு அடையாளமின்றி அடுத்த வரிக்குச் சென்றுவிடுவது கவனத்திற்குரியதாகிறது.


இளம் வக்கீலாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரை, இவரது முக வசீகரத்தைப் பார்த்து இவருக்குள் ஏற்கெனவே இருக்கும் நடிப்பு தாகத்தை மேலும் தீவிரமாக்குவது மாதிரி, “நீங்கள் ஏன் சார் சினிமாவிற்குச் செல்லக் கூடாது” என்று கேட்கிறான் வழக்கு பற்றி கேட்க வந்த இளம் வாலிபன் ஒருவன். பின் இவரது திரைப் பிரவேசம் நடந்து, ஒரு படப்பிடிப்பு நேரத்தில் சூழ்கிற கூட்டத்தைக் காவல்துறை புகுந்து அடித்து விரட்டும் போது அந்தக் கூட்டத்தில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு இவரைப் பார்த்துத் தொலைவிலிருந்து வாழ்த்திவிட்டுப் போகும் அதே வாலிபனைப் பார்த்து மம்முட்டி அதிர்வதும், தனது முதல் ரசிகன் அவனே என்று பதிவு செய்வதும் வித்தியாசமான ஓர் அனுபவம்.

வேறு ஒரு சூழலில், மிகவும் பரிச்சயமானவள் போல வந்து பழகிவிட்டுப் போகும் முதியவளும், அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் உண்மை உருவமான ஆக்ஷன் பாபுவும் (‘யதார்த்த வாழ்வில் வில்லன் யார், ஹீரோ யார்?’) தமக்கு எல்லாமாக இருந்து திரிந்து பிரிந்து பரிதாப மரணத்தை எய்துகிற உயிர் நண்பன் ரதிஷும்.....போலவே, நீதிமன்றத்தின் வெளியே பிரித்து வைக்கப்பட்டிருந்து, பரஸ்பரக் காதல் மனசு - அடைக்கும் தாழ் இன்றிப் புன்கணீர் பூசல் தருவதாய் ஒன்றிணைத்து விட காதல் இருவர் கருத்தொருமித்து வெளியேறும் மூத்த தம்பதியினரும், மம்முட்டியின் வாழ்வில் வந்து போகிற பிறரும் என்றென்றும் வாசிப்போர் அருகிலேயே குடியிருப்பார்கள் என்றே படுகிறது. அத்தனை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் ஆர்ப்பாட்டமற்ற பதிவு வியப்பூட்டுகிறது.
தம்மை இன்னும் அடையாளம் தெரியாத மனிதர்கள் புழங்கும் அதே பூமியில்தான் மிகப் புகழுடன் தான் இருப்பதான உலா வருகிறோம் என்று ஓர் இடத்தில் அவர் சொல்வது, அவரது பிரகடனம் போலவே ஒலித்தாலும், ஒரு ஞானியின் தெறிப்பு அதில் காணப்படுகிறது. சம காலத்தில் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகள், மனிதப் பண்புகள், பரஸ்பரம் மன்னிக்கும் பேராண்மை.... எல்லாவற்றையும் பற்றிப் பேச வாழ்க்கை அவருக்கு சிறப்பான அனுபவத்தையும், அதைவிட அவற்றை
எடுத்துரைக்கும் தேர்ச்சியான மொழியையும் அருளியிருக்கிறது.
“என் காதல் ஒரு கள்ள நாணயம்”, “லஞ்சத்தின் வேர்”, “சொர்க்கவாசல் திறக்கும் இரவு”, “கடவுள் கண் மூடிக் கொள்ளும் தருணம்”, “துயரத்தின் பாடல்”....என இருபத்து மூன்று உட்பகுதிகளின் தலைப்புகளே, பேசுகிற மனிதரது உளவியலின் பக்கங்களை எடுத்து வைக்கின்றன: காதலைப் பற்றி, கடவுளைப் பற்றி, நோன்பைப் பற்றி, கம்ப்யூட்டரைப் பற்றி, ஆபத்துக் காலத்தில் எதிர்பாராது வந்து உதவும் தன்மைகளைப் பற்றி...தமது சொந்த வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளின் பின் புலத்திலிருந்து படரும் சிந்தனைகளை அப்பட்டமாக எடுத்துவைக்கிறார் மம்முட்டி.


ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.

 
மம்முட்டி அருகே உட்கார்ந்தபடி தமது வேட்டியின் நுனி காற்றில் பறக்கத் தமது புருவம் உயர்த்திய பார்வையோடும், நினைவு நதியின் மீது அதைக் கலைத்துவிடாத கவனத்தோடு அன்பின் சிறு கல்லை வீசியபடியும் அப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த சுய சரிதையாகவே ஒலித்தது எனக்குள் இந்த வாசிப்பு.


கே. வி. ஷைலஜாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லலாம்: மம்முட்டி இதைத் தமிழில் தாமே சொல்லிவிட்டுப் பின்னர் தான் தமது சொந்த மொழியில் அவராக எழுதியிருப்பார் என்று கொள்ளலாம் போலிருக்கிறது. மிகச் சில இடங்களில் தமிழுக்கு மாற்ற வேண்டாமே என்று அப்படியே மலையாள (வடமொழியைச் சார்ந்த) சொற்களையே விட்டுவிட்ட இடங்களிலும் கூட (நித்ய யௌவனம்!) வாசிப்பிற்கு இடையூறு செய்யாத, குற்றம் சொல்ல முடியாத மொழி பெயர்ப்பு...


மிகக் குறைவான எழுத்துப் பிழைகளையும் மீறி, பரந்த நட்பு வட்டத்தோடு பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் வாசிப்பு இன்பத்தை வழங்கும் அருமையான நூலாக்கம். நூலின் இலக்கிய, மனிதநேய உள்ளடக்கத்திற்கு வரவேற்பு கூறும் ரசனை மிகுந்த முகப்பு.

-எஸ்.வி.வேணுகோபாலன்

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்
-மம்முட்டி
வம்சி புக்ஸ், 19 டி எம் சாரோன்,
திருவண்ணாமலை | பக்: 128 | ரூ.80

மரத்தை வெட்டியதும் இந்தப் பறவைகளெல்லாம் எங்கே போகும்?

maram book

வீடு என்னும் தேவை, அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பரவிக்கொண்டே போய் நகரமயமாக்கல் என்ற விசுவரூபம் எடுத்து, மனிதர்களைப் பேய்போல கவ்விப் பிடித்து, அவர்கள் புறவாழ்விலும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது என்பதை அழகாக நாவலாக்கி உள்ளார், எஸ்.அர்ஷியா.

அந்நாவலுக்கு ஓர் அழகான தலைப்பும் வைத்துள்ளார் அவர். பொய்கைக்கரைப்பட்டி. பட்டிகள் எல்லாம் தங்கள் தனித்துவத்தை இழந்து பெருநகரங்களின் அங்கங்களாகிப் போய்க் கொண்டிருக்கிற மாற்றத்தைப் பற்றி அத்தலைப்பே சிந்திக்க வைக்கிறது.


பொய்கைக்கரைப்பட்டி, எத்தகைய ஊர்?

“பதினேழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதுரை நகரில் வெயில் வாட்டியெடுக்கும், ஆனால் மலையைச் சுற்றியிருக்கும் இடங்களில், லேசாகவும் கனமாகவும் மழை பொழிந்திருக்கும். தொடர்ச்சியாகப் பொழியும் லேசான மழையில், மண் குளிர்ந்து பயிர்கள் கம்பீரமாக நிற்கும். கனமழையின் போது, சுற்றியுள்ள மலைகளின் மீதிருந்து அடித்து வரப்படும் மணலும் மூலிகையும் அந்தப் பகுதிக்கு உரமாகி வளம் கூடிவிடும். செம்மண்ணும் மணலும் கலந்த செவல் பூமியது. வேறெங்கும் இதுபோன்ற அமைப்பு இல்லை. எதை நட்டாலும் நாலு நாளில் முளைவிடும். வேர் பிடித்துத் தலை தூக்கும். குச்சியால் ஆழக் குத்தினாலே போதும். பூமியில் ஈரம் கசியும். நாலடி தோண்டினால், வாளியில் தண்ணீர் மொள்ளலாம்”.


இந்த நிலமும் இந்த நிலத்தின் மைந்தர்களும் எப்படியெல்லாம் சிதைந்து போகிறார்கள் என்பதே, நாவலின் மைய இழை!


‘மரத்தை வெட்டியதும், இந்தப் பறவைகளெல்லாம் எங்கே போகும்?' என்று கேட்டுக்கொள்ளும் சமுத்திரக் கனியின் தொழிலே, வீட்டுமனைகளாக விவசாய நிலங்களை மாற்றித்தரும் புரோக்கர் என்பதுதான், வாழ்வின் கோரம். புரோக்கர் என்று சொன்னால் சமுத்திரக்கனி பதறிப்போவார். அவர் அழகர் மலையானுக்கே அவித்துக் கொட்டும் பரம்பரையில் உதித்தவராயிற்றே, பதற மாட்டாரா? உழவுத் தொழில் செய்து அப்பன் சேர்த்து வைத்ததில் வாழக் கொடுத்து வைத்து, அவர் கஜேந்திரக்குமாரின் ‘ஞான ஸ்தானத்தில்’ மீடியேட்டர் ஆகிறார். ‘மரத்தை வெட்டியதும் பறவைகள் எங்கே போகும்?’ என்று தன்னையே கேட்டவர், போட்டி மீடியேட்டர்களால் தலைவேறு முண்டம் வேறாக வெட்டிப் போடப்படுகிறார். இந்த முதல் அத்தியாயமே நாவலுக்கு அற்புதமான தொடக்கமாகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே ஊடாடி, இறுதியில் லௌகீகத்தின் பக்கம் சாய்கிற கஜேந்திரக் குமார் ஆட்டைப்போல அலற வேண்டிய சந்தர்ப்பங்கள் அவர் வாழ்விலும் நேர்கின்றன.

இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவந்து ஒண்டக்கூட இடமில்லாமல் இரண்டு இரவுகளைக் கீழ் மதுரை ரயில் நிலைய சிமெண்ட் பெஞ்சில் கழித்த, சாப்பிடக்கூட காசில்லாமல் பசியோடு மதுரைத் தெருக்களில் அலைந்து திரிந்த கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, தூக்கம் வராமல் எழுந்து தனது கனவுத்திட்டமான ‘லெவின்ஸ்கி கார்டனுக்கு’ வந்து, அங்கு காலாற நடந்து சுகம் கண்டு, தனது கண்ணுக்கு எட்டாத தூரம்வரை அவரது எல்லை நீண்டிருப் பதாகப்பட்டு, ‘மனசுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அது நிறைவுதராமல் இன்னும் இன்னும்’ என்று தாகம் கொள்கின்ற கஜேந்திரக் குமார், ஆட்டைப் போல அஞ்சி நடுங்கி அலற நேர்கிறபோது, அந்தச் செவலையம்மாளை நினைத்தாரோ என்னவோ, அர்ஷியா எதுவும் சொல்வதில்லை. கமுக்கமாய்க் கண் சிமிட்டுகிறார்.


யாரோ ஒரு முகம் தெரியாத அண்ணனின் அதிகாரக் கரங்கள், கஜேந்திரக் குமாரின் மௌன அழுகையைப் பொருட்படுத்தாமல் அவரது உடம்பிலிருந்து எவ்வளவு இயலுமோ, அவ்வளவு மாமிசங்களைக் கொத்துக் கொத்தாக அள்ளிக் கொள்கின்றன. தனிமையாய் இருந்து அந்த மௌன சோகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சென்ற இடத்தில் மும்பையைச் சேர்ந்த தாதா கும்பலின் உள்ளூர் அடியாட்கள், துப்பாக்கி முனையில் குத்திக் குடைந்து கஜேந்திரக் குமார் என்கிற ஆட்டிடமிருந்து மாமிசங்களை அறுத்துக் கொண்டு போகின்றனர்.

‘ஆடு அலறுதேன்னு கறி திங்காம இருக்கோமா?’ என்ற நியாயம், கஜேந்திரக் குமாருக்கு மட்டும்தானா? ஆட்சி பீட அண்ணனுக்கும் உண்டல்லவா? திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த துப்பாக்கி முனைக் கொள்ளையர்களுக்கும் உண்டல்லவா?

இந்த நான்கு காட்சிகளையும் இணைத்துப் பார்க்கின்றபோது, மானுட இயல்பு, மானுட வாழ்வின் பொருள் குறித்தெல்லாம், நாவலின் தளத்தில் நின்று பல விசாரணைகள் கிளை வெடிக்கின்றன. அவற்றுள் ஒரு கிளை விசாரணை மட்டும் கஜேந்திரக் குமாரின் நினைவாக, ஒரு சுடுகாட்டில் சிலரிடையே நிகழும் வாதமாக அர்ஷியா படைத்துக்காட்டி உள்ளார். நாவலின் கதைப்போக்குக்கு அது அவசியமற்றதுபோல புறத் தோற்றத்தில் தோன்றினாலும் ஆழ அந்தரத்தில் ஓர் இணைப்பு அல்லது ஓர் அவசியம் இருக்கவே செய்கிறது. இந்நாவலில் பல இடங்களில் இந்தப்போக்கு காணப்படவே செய்கிறது. படிக்கிறபோது ஒரு வேண்டாத துறுத்தலாக இடைஞ் சல் செய்வன எல்லாமே, புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சிந்திக்கின்றபோது, அவசியமான ஒன்றாகவே தோன்றும்படி செய்யும் ரசவாதம், அர்ஷியாவின் கைவண்ணம். அர்ஷியா வெறும் கதை சொல்லி மட்டும்தானா என்ன?
எல்லோரையும் பலிகொண்டு விடுகிற கஜேந்திரக் குமாருக்கும் அவரது மீடியேட்டர்கள் சமுத்திரக் கனி, மலைக்கள்ளன், ஆகியோருக்கும் சவால்விட்டு நிற்பவர் மலைநாட்டான். ‘‘மோசம் செய்துவரும் மழை, வாட்டியெடுக்கும் வெயில், ஏமாற்றிவிடும் விதைகள், விலையேறிப்போன உரம், இடையில் விலை வைக்கும் தரகர்கள் எல்லாமாகச் சேர்ந்தும்’’ கலகலக்க வைக்க முடியாத விவசாயி மலைநாட்டான். ‘சம்சாரின்னா அவர மாதிரி இருக்கணும்' என்று பாராட்டுப் பெற்றவர், அவர். அவர் விவசாயம் பார்க்கும் ஏழு ஏக்கர் மண்ணைச் சேர்த்துவிட்டால், கஜேந்திரக் குமாரின் திட்டம் பூர்த்தியாகிவிடும். அதற்காக அவரை அணுகியவர்களிடம் மலைநாட்டான் சொல்கிற பதிலிலிருந்து தெரிகிறது: நிலம் அவருக்கு வெறும் மண் மட்டுமல்ல; அதற்கும் மேல். அங்கிருப்பவை வெறும் தாவர உயி£¢களல்ல; அவற்றிற்கும் மேல். அது அவர் வாழ்வின் அர்த்தம். அவர் ஏதோ பயிர்களை உண்டாக்கிப் பாதுகாத்து, அறுத்து விற்கும் மனிதனில்லை. அதற்கும் மேல்; ஒரு படைப்பாளி!


அவர் சொல்கிறார் : ‘இது எங்க தாத்தா விட்டதை, எங்கப்பாரு மீட்டு எங்கைல குடுத்துட்டுப் போயிருக்காரு. எங்கப் பாட்டி அங்கம்மாவோட ஆவி, இங்கதான் இருக்குது. எங்கம்மாவையும் இங்கதான் பொதைச்சுருக்கோம். இதோ இது, எம்பொண்டாட்டியோட சமாதி. சொல்லப்போனா இது எங்க குடும்பக் கோவில். யாராச்சும் கோவிலை விப்பாங்களா? அப்படியேன்னாலும் இப்ப இதை விக்கணுங்குற அவசியமில்லையே!'


அப்படியொரு அவசியத்தை உண்டாக்க வல்லவராயிற்றே கஜேந்திரக் குமார். பாதாளம் மட்டும் பாயவல்ல பணம் எதிர்த்திசையில் இமய உச்சிவரை பாயாதா, என்ன? சாட்சாத் ஸ்ரீதேவியின் அருட் கடாட்சத்திற்காக அரசு அலுவலகங்களில், ஆட்சிக் கட்டில்களில் கோப்புகள் மீதேறி தவமியற்றுபவர்கள் கஜேந்திரக்குமாரின் கவலையைத் தங்கள் கவலையாகக் கொள்ள மாட்டார்களா? அவர் கவலையை மாற்றுவதே தங்கள் காரியம் என்று கருதிக் களத்தில் இறங்க மாட்டார்களா?


தண்ணீர் வரும் வழி அடைக்கப்படுகிறது. மலைநாட்டான் தோட்டத்துக்கு வரும்வழி மட்டுமா? அழகர் மலையின் சுந்தர்ராஜப் பெருமாள், ஆண்டுக்கு இரண்டு முறை பக்தர்களுக்கு அருள்பாலித்து உலாப் போகும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர்வரும் வழியும் அடைபட்டுவிட்டது. ‘‘தண்ணீரில்லாத தெப்பக்குளத்தின் கரைகளில், பிறர் சுமக்க, தோள்களில் உலா போவதற்கு அவர் வெட்கப்பட்டுக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை. ஓடையை அடைத்து இடத்தை அபகரித்துக் கொண்டவர்களுடன் அவரும் கூட்டணி வைத்துவிட்டாற்போல. அமைதியாக மலையில் உறங்குகிறார்’’, கடவுளின் கதியே இதுவென்றால்...? மலைநாட்டான், மனிதன்!


நாவல் இப்படி முடிகிறது : ‘‘தண்ணீர் வரும் வழி அடைக்கப்பட்ட பின், மழையும் விழாமல், போரில் தண்ணீரும் வராமல், உயர்ந்துவரும் கட்டிடத்துக்குப் பக்கத்திலிருந்த வாழைத் தோட்டம் கருகிப் போயிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே வந்த மலைநாட்டானிடம் செண்பகம் சொன்னாள்: ‘பேசாம நாமளும் இதை வித்துட்டுப் போயிறலாம்ப்பா. தண்ணியுமில்லாம, மழையுமில்லாம எத்தனை நாளைக்குத்தான் இப்டியே பாத்துக்கிட்டுருக்க முடியும்? கடவுளும் நம்மளக் கை விட்டுட்டாரு. வேற வழியில்லப்பா!’’


காதில் விழுந்ததை அமைதியாகக் கேட்டுக்கொண்ட மலைநாட்டான், மகள் முகத்தை நிதானமாகப் பார்க்கிறார்.

சந்திர காந்தன்

காலம் வெளியீடு, மதுரை- 625 002.
பக்: 152 | ரூ.100

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்

1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாசே துங் தலைமையில் செம்படையினர் அணிவகுத்த நெடும்பயணம் 370 நாட்கள் தொடர்ந்தது. சீன வானில் தோன்றிய சிவப்புக் கீற்று, பெரும் பரிதியாய் ஒளிர்விடத் துவங்கிய மாபெரும் வீர சரித்திரம் அந்தப் பயணம். நெடும்பயணத்தின் 77வது ஆண்டு துவங்கும் இந்தத் தருணத்தில், புரட்சியாளர் மாவோவை, பிரம்மைகளற்று உள்வாங்க வேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கிறது.

மாவோ குறித்து எத்தனை புத்தகங்கள் வாசித்திருந் தாலும், இந்த புத்தகத்தை தவறவிட்டுவிடாதீர்கள். ஏனெனில், ஒரு எளிய மனிதன், மாவோ என்ற ஆளுமையை எந்தக் கண் கொண்டு பார்த்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

சீனப் புரட்சிக் காலத்தில் மாவோவிற்கு ஒரு மெய்க்காப்பாளர் குழுவை கட்சி ஏற்படுத்துகிறது. அந்தக் குழுவிற்கு தளபதியாக இருந்தவர் லீயின் கியாயோ. அவரது தகவல்களைத் தொகுத்து குவான் யான்சி என்ற எழுத்தாளர் எழுதிய “மா சேதுங்: ஒரு மனிதர், கடவுளல்லர்!” என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

லீயின் கியாயோ, மாவோவின் மெய்க்காப்பாளராகத் தேர்வானதே மிக அலாதியான அனுபவம். மெய்க்காப்பாளர் பணியை மறுத்திடும் லீயின், நான் போர் முனைக்குச் செல்லவே விரும்புகிறேன், “வழிபடுவதை விட கிளர்ந்தெழுவது மேலானது” என்கிறார். இதன் பின்னர் மாவோவும் அவரும் ஒரு ஆறு மாதத்திற்கு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.மெய்க்காப்பாளர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் பின்வருமாறு அறியலாம். ஒருமுறை விமானங்கள் குண்டுகள் பொழிய வட்டமிட்டு, பின்னர் சென்றுவிட்டதை வர்ணிக்கும் அந்த மெய்க்காப்பாளர் போகிற போக்கில் இப்படிச் சொல்கிறார், “எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்த மார்க்ஸிடம் நன்றியுணர்வு பொங்க நான் மகிழ்ச்சியில் கிட்டத்தட்டகுதித்திருப்பேன்.” என்கிறார். மார்க்ஸிடம் பிரார்த்தனை மேற்கொண்ட அவரது நடவடிக்கை எத்தனை எளிய மனிதர் என்பதை நமக்கு காட்டுகிறது.அத்தகைய எளியவரின் பதிவுகள், சாதாரண மக்களின் கண்களில் மாவோவின் சித்திரத்தை விவரிக்கிறது. புரட்சியின் உச்சகட்டத்திலும், நவ சீனம் நிறுவப்பட்ட பின்னரும் மாவோவிற்கு உதவியாளராக, அவரின் குடும்பத்தில் ஒருவராக வசித்த அவரின் பதிவுகள் மாவோ குறித்த சித்திரத்தை மிக எளிதாக்குகின்றன.

இப்புத்தகத்தை வாசிக்கும் எவரும் ஒரு நாளிற்கு 24 மணி நேரம்தான் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். முழு நேரப் புரட்சியாளர்களாக, ஒரு கம்யூனிஸ்டாக தன்னை வடித்துக்கொள்ள விரும்பும் எவருக்குமே மாவோ ஒரு நட்சத்திரமாக அமைந்திருக்கிறார். “உங்களுடைய பணி, உங்களிடமிருந்து இன்னும் கூடுதல் தியாகங்களைக் கோருகிறது....” (ஊழல் என்னும்) சர்க்கரை தடவிய தோட்டா உன்னைத் துளைத்துவிடாமல் பார்த்துக்கொள்... எளிமையாக இரு; நீ ஊழலில் ஈடுபடாமலிருந்தாலும், ஏதாவது வீணடித்திருக்கிறாயா?, விரயமும் தீங்கானது; அதுதான் ஊழலை நோக்கிய முதல் அடி; சிக்கனமாக இரு, அதைப் பழக்கமாக ஆக்கிக்கொள்” இதுதான் புரட்சியாளர்களுக்கு அவர் முன் வைக்கும் கோரிக்கை. இந்த அறிவுரையை மாவோவும் பின்பற்றினார். அவர் அணிந்த உடைகள் பெரும்பாலும் ஒட்டுப்போட்டவை என்ற செய்தியை லீயின் கியாயோ பதிவு செய்கையில் நம் புருவங்கள் மேலே உயர்கின்றன. போர்க்களமாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் முன்னணியில் நிற்கும் மாவோ தன் நடவடிக்கைகளில் அச்சத்தை வெளிப்படுத்தவேயில்லை. மாறாக எந்த சவாலையும் முன்னணியில் நின்று எதிர்த்தார்.

அதற்கு காரணமிருந்தது. ஒரு தலைவரின் சொற்கள் அல்ல, நடவடிக்கைகளே மக்களைக் கவ்விப் பிடிக்கின்றன என்ற உண்மையை அவர் உணர்ந்துவிட்டிருந்தார். மாவோவின் மகள் லீ நே தனது பள்ளிப் படிப்பின்போது, எல்லா மாணாக்கரையும் போலவே நடத்தப்பட்டார். அவரது பசிக்கு போதுமான உணவு என்றைக்கும் கிடைத்திட்டதில்லை. எல்லா மக்களுக்கும் என்ன கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். மாவோவின் குழந்தைகள் குறிப்பாக லீ நே குறித்த சில பக்கங்கள் நம்மை நெகிழச் செய்யும். மாவோவின் மகளுக்காக சிலர் கண்ணீர் விடலாம். “வாழ்க்கையின் கடுமையைக் கண்டு அஞ்சுகிறவர்களுக்கானதல்ல இந்த உலகம்.” என்ற வாக்கியத்துடன் அந்தத் தருணத்தைக் கடந்துசெல்கிறார் மாவோ.

அதே நேரத்தில், மாவோ கண்ணீர் விட்டழுத நிமிடங்கள் வேறு. நவ சீனம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்திட மாவோவால் முடியவில்லை. அவர் மீதான மதிப்பே, அவரை மக்களிடம் நெருங்க விடாமல் செய்தது. அந்த நேரத்தில் தனது உதவியாளரை அனுப்பி கிராம மக்களின் அன்றாட உணவைச் சேகரித்த அவர், அந்த காய்ந்த பெரிய தவிட்டு ரொட்டிகளைச் சாப்பிட முடிவு செய்தார். “நம் நாட்டின் விவசாயிகள் இதைத்தான் உண்கிறார்கள்” என்று அவர் சொல்லியபோது சொந்தக் காரணங்களுக்காக சற்றும் கலங்கிடாத அவரது நெஞ்சம், குழுங்கியது, கண்கள் கசிந்தன.

“மாவோ அழுதார், தனது லட்சியங்களுக்கும் கொடூரமான உண்மைக்கும் இடையில் இருந்த இடைவெளியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியிருக்க வேண்டும்.” என்று சொல்கிறார் மெய்க்காப்பாளர்.

ஒரு கடுமையான 15 ஆண்டுகாலப் பதிவுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், மாவோவின் புத்தகக் காதலைப் பற்றி தனி அத்தியாயமே கொண்டிருக்கிறது.

“நாம் கொண்டுசெல்ல முடியாத இந்தப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள். மார்க்சிய லெனினியத்தைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் ஹூவின் துருப்புகளுக்கு நன்மையளிக்கக் கூடும்” தோழர்களுக்கு மட்டுமல்லாது, பகைவர்களுக்கும் மார்க்சிய லெனியத்தின் வழிகாட்டுதல் கிடைக்கச் செய்திட விரும்பியவர் மாவோ.


எல்லா சமயங்களிலும் அவர் புத்தகங்களை இவ்வாறு விட்டுச் சென்றதில்லை. மாறாக அவர், தான் செல்லுமிடத்திற்கெல்லாம், சிறந்த புத்தகங்களோடே பயணத்தை மேற்கொண்டார்.

அதைப்போல, நாமும் கையில் வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம் இது. மிகச் சுவாரசியமான நடையைக் கண்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி. ஒரு தலைவரை மதிப்பீடு செய்வதை யுத்தகாலச் சவால்கள் சுலபமாக்கிவிடுகின்றன என்றார் ரிச்சர்டு நிக்சன். இந்தப் புத்தகம் அத்தகைய சவால்கள் நிறைந்த தருணங்களை நம்மிடம் பதிவு செய்கிறது.

-இரா.சிந்தன்

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி | தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி 
பக்: 288 | ரூ.140 | பாரதி புத்தகாலயம் 


Friday, January 21, 2011

புத்தகத்தைப் பறிக்காதீர்கள்



டி வி " (தொலைக்காட்சி) என்ற இரண்டெழுத்து குழந்தைகளைக் கொண்டாட்டம் கொள்ள வைக்க முடியுமானால், (ஆங்கிலத்தில்) இருபத்தாறு எழுத்துக்களோடு அவர்கள் எத்தனை வேடிக்கை விநோதங்களை அனுபவிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்... உங்கள் குழந்தையின் கற்பனை உலகைத் திறவுங்கள். ஒரு புத்தகத்தைத் திறவுங்கள்...

-- யாரோ

பேச்சு வரத் துவங்கிய புதிதில், எந்தக் குழந்தையும் சொற்களை ஒரு போராட்டத்தோடு உற்சாகமாகப் பேசிப் பழகுகிறது. பெரியவர்கள் போலப் பேச எத்தனிக்கிறது. அதற்கு முந்தைய மாதங்களில் கீழே கிடந்த காகிதத்தை, புத்தகத்தை எடுத்து ஓரங்களை எச்சில் படுத்தியும், கடித்துக் கத்தரிக்கத் துடித்தும் மகிழ்ந்த அதே குழந்தை இப்போது சொகுசாக உட்கார்ந்து கொண்டு, தலைகீழாக ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து "தத்தகா புத்தகா" என்று தலையை எழிலாக இந்தப் புறமும் அந்தப் புறமும் ஆட்டியபடி மிகவும் தெரிந்த தோரணையில் குஷியாகப் படித்துக் கொண்டே போகிறது. கடிக்கப் பழகுகிற குழந்தையிடமிருந்து எப்படி ‘சீ சீ கழுதை...' என்று காகிதத்தைப் பறிக்கிறோமோ அப்படியே, வாசிப்பு மோகத்தில் (அதனால் முடியாது என்றாலும்) மழலை மொழியில் புத்தகத்தை சொந்தம் கொண்டாட ஏங்கும் கைகளில் இருந்தும் புத்தகத்தைப் பாதுகாப்பாகப் (?) பிடுங்கி விடுகிறோம். ஒரு சின்ன மாற்று ஆலோசனையாக, அந்தக் குழந்தையின் ஆர்வத்திற்கு அங்கீகாரம் அளித்து 'அவர்' ஒரு புத்தகத்தையும் என்னவும் செய்யட்டும், எப்படியும் படித்துக் கிழிக்கட்டும் (!) என்று அவருக்கான வண்ணமயமான ஒரு வாசிப்பு உலகை அறிமுகப் படுத்திப் பாருங்கள்....விந்தையான அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்.

குழந்தைகள் இயல்பிலேயே கதைப் பிரியர்கள். குழந்தைகளிடம் சளைக்காமல் கற்பனை சரக்கை அள்ளி விட்டுக் கொண்டே செல்பவர்கள், அவர்களது நேயத்திற்கு உரியவராகின்றனர். கால காலமாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களாக வீட்டின் மூத்த குடிமக்கள் இருந்து வந்தனர். "பாப்பா பாப்பா கதை கேளு, காக்கா நரியின் கதை கேளு" என்ற அந்த நாளைய (எங்க பாப்பா) திரைப்பாடலின் அடுத்த வரியே, "தாத்தா பாட்டி சொன்ன கதை, அம்மா அப்பா கேட்ட கதை" என்றுதான் போகும். காதில் விழுகிற கதையில் வரும் காடுகள் குழந்தைகளின் மனக் கண்கள் முன் விரியும். விலங்குகள் கம்பீர நடை பயிலும். துள்ளித் துள்ளி ஓடும். பறவைகளின் இன்னிசையும், வண்டுகளின் ரீங்கரிப்பும் கதை சொல்பவரின் வருணிப்பின் துளியிலிருந்து வெள்ளமாகப் பெருகி ஓடும். சில நேரங்களில், தெரிந்த கதையைக் கேட்கும் குழந்தைகள் தாமாகவே கற்பனையில் தங்களது சொந்த வேகத்தில் கதையை ஒருபுறம் அவர்களாகவே நகர்த்திக் கொண்டு சும்மா ‘உம் உம்’ கொட்டிக் கொண்டிருப்பதும் நடக்கும்.

குழந்தைக்குச் சோறு ஊட்டும் சுகம் பெற்றவர்க்கு இருந்தாலும், குழந்தையின் வளர்ச்சிப் போக்கிற்கு இடம் கொடுத்து அவர்களாக எடுத்துப் பிசைந்து உருட்டி எடுத்து ரசித்து மென்று அரைத்து விழுங்கப் பழக்குவது போலவே, வாசிப்பின் வாசல் களையும் குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோர் வரம் பெற்றோர்.

திரைப் பாடல்களை மிக இலகுவாகக் குழந்தைகள் அதே லயத்தில், ஏன், சுருதி பிசகாமலும் கூட அப்படியே பாடுவதைக் கேட்கிறோம். பாடல் வரிகளை அவர்கள் மாற்றி இசைக்கவோ, திரும்பத் திரும்ப அதே அடிகளைப் பாடிக் கொண்டோ இருக்கக்கூடும். எத்தனையோ சொற்களை அவர்கள் தவறாக உச்சரிக்கக் கூடும். அவர்களைப் பொறுத்த வரையில் அது ஓர் இசைப் பயணம். தமது உள்ளத்தில் பதிந்த ஓசையை அதே கதியில் மீண்டும் அவர்கள் பிரதி எடுத்து, பெரியவர்கள் முன் வைக்கின்றனர். இசை கெடாமல் தங்களது சொந்த சொல்லகராதியில் இருந்து புதுப் புது சொற்களை அவர்கள் மிக நுட்பமாக எடுத்து நிரப்பி அந்தப் பாடலைப் பாடுகின்றனர்.

அது புரியாமல் நாம் ஏதோ தெய்வக் குத்தம் நேர்ந்தது போன்ற பதட்டத்தோடு குறுக்கீடு செய்து அந்தப் பாடலில் இடம் பெறும் சொற்களை எடுத்துக் கொடுக்கும்போது கவனம் சிதறுகின்றனர் குழந்தைகள். ஓவியக் கனவுகளோடு குழந்தைகள் சுவர்களிலும், தரையிலும், கையில் கிடைக்கும் காகிதங்களிலும் தீட்டும் தீற்றல்களைக் காணும்போதும் சில நேரம் பெரியவர்கள் நடுவராக மாறுவதும், விமர்சகராகி திருத்துவதும் நடக்கிறது. வாசிப்பின் துவக்க நேரங்களிலும் இப்படியான குறுக்கீடு குழந்தைகளது பேரார்வத்திற்கு அணை போடுகிறது. தங்களுக்குப் படிக்கத் தெரியும் என்பது அவர்களது ஆளுமையின் பிரகடனம். ஒரு பெருமித அறிவிப்பு. அதை உச்சி மோந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர்களது பயணம் தொடர ஊக்கப்படுத்த வேண்டியதே பெரியவர்களது கடமை.

இயல்பாகவே வானவில்லின் காதலர்கள் குழந்தைகள், தங்களது குழந்தைமைப் பருவத்தின் தரிசனம் போலவே! அதனாலேயே, வண்ண வண்ணப் படங்கள் நிரம்பிய - அவர்களுக்கு இலகுவாக வாசிக்கத் தட்டுப்படுகின்ற - பெரிய பெரிய எழுத்துக்களாலான - மிக மிகக் குறைவான சொற்களைக் கொண்ட புத்தகங்களையே அவர்கள் கொண்டாடிக் களிப்பர். அதிலும் நேயமிக்க உறவுகளைக் கொண்ட கதைகள் அவர்களது விருப்பத் தேர்வில் முன் நிற்கும். நீதி போதனைகளைவிடவும் இயற்கையை நேசிக்கும் கதைகளும், நட்பைக் கொண்டாடும் கதைகளும் அவர்களைக் கவ்விப் பிடிக்கும். வீர சாகசங்களும், கற்பனைக் கெட்டாத அதிசயங்களும் அவர்களுக்கு ஏதோ பரிச்சயமான மனிதர்களோடு தொடர்புடைய நிகழ்வுகள் போல் மாறிவிடும். பிறகு புத்தகத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த கதாபாத்திரங்கள் வெளியே வந்து மீண்டும் அவர்களுக்காக அந்தக் கதையினை நடத்திக் காட்டிவிட்டு மீண்டும் புத்தகம் மூடும் போது ஓவியக் கோட்டுக்குள்ளும், சொல்லடுக்குகளுக்குள்ளும் போய் உறைந்துவிடுவதுபோல் கூடத் தோன்றும். அதனாலேயே கூட, குழந்தைகள் தமக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்குப் போடுவதை அனுமதிப்பதில்லை.

வெவ்வேறு ரசனைக்குரிய நூல்கள், குழந்தைகளை விவாதங்கள் நடத்தத் தூண்டுகின்றன. கேள்விகளை எழுப்புகின்றன. கேள்விகளும், வாதமும், விவாதமும் குழந்தைப் பருவத்தில் வளர்ச்சிக்கு உகந்த இயற்கை உரம். எல்லாக் கேள்விகளுக்கும் தமக்கு விடைகள் தெரிந்திருக்க வேண்டும் எனத் துடிக்கும் பெற்றோர் தோல்வியின் அச்சத்தில் கடுமையான எதிர்வினைகளைப் புரிகின்றனர். தாங்களும் கற்கிறோம் என்று சுவை உணரும் மனிதர்கள் ஆரோக்கியமான சக பயணிகளாக மாறுகின்றனர்.

கேள்விகளைப் பற்றி கல்வியாளர் அருணா இரத்தினம் ஒரு நேர்காணலின் போது இப்படிச் சொல்லியிருந்தார்: "தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண்மணி சொல்வாராம், கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி அடைத்துவிட வேண்டியதில்லை. சில கேள்விகள் உள்ளே நின்று உறுத்திக் கொண்டே இருக்கட்டும் - சிப்பிக்குள் விழும் துளிகளில் அரித்தெடுத்துக் கொண்டே இருக்கும் துகள் தான் பின்னர் முத்து உருவாகக் காரணமாகிறது. அதைப் போல...." தம்மின் தம் மக்கள் அறிவுடைமை விரும்புவோர் கொண்டாடும் இடம் இது.

தொலைக்காட்சியின் மாய வலைக்குள்ளோ, கணினியின் மந்திர ஈர்ப்புக்குள்ளோ மணிக்கணக்கில் மயங்கி விழுந்திருக்கும் குழந்தைகளை அற்புதமான நூல்கள் மீட்டெடுக்கும் என்கிறார் குழந்தைகளின் பிரச்சனைகளை அணுகும் அனுபவமிக்க மருத்துவர் ஒருவர். குழந்தைகளுக்கு மனத் திண்மை, பண்பாட்டாக்கம், எதிர்ப்புணர்ச்சி, சிந்தனைத் திறன், படைப்பாற்றல், மன ஒருங்கமைவு, கூரிய நோக்கு, தெளிவான பார்வை, பொறுமையோடு அணுகும் தன்மை..... என எத்தனையோ நலன்கள் வாசிப்பின் வழி வந்து சேரும்.

புத்தகம் என்பது சட்டைப்பையில் நந்தவனம் போல என்கிறது சீனப் பழமொழி. பூத்துக் குலுங்கும் வாழ்வுக்கான வழிப்பயணத்தை நூல்கள் அடையாளப் படுத்தும். அதை இளமையிலேயே கண்டறியும் வாய்ப்பைக் குழந்தைகளுக்கு அளிப்பது எவ்வளவு மேன்மையான விஷயம்! நூலகங்கள் ஏற்படுத்தும் பிரமிப்பும், தனக்குகந்த இசைக்கருவியைத் தேர்வு செய்வது போல் தமக்குப் பிடித்த புத்தகத்தைத் தொட்டு எடுத்து வாசிக்கும் பழக்கமும் இளம் வயதில் வாய்க்கப் பெறுவது அவர்களது சொந்த செயல்பாடுகளின் துவக்கப் படியாக மாறும். சுயமதிப்பைக் கூட்டும்.

அறிவியல், வரலாறு, புவியியல், இலக்கியம், கணிதம், மொழி.... என எத்தனையோ விதமான திறவுகோல்களைக் கொண்டுதான் மனிதர்கள் மென்மேலும் புதிய புதிய தேடல்களில் புதையல்களைக் கண்டெடுக்கின்றனர் என்பது வெவ்வேறு சாத்திரங் களையும் விருப்பு வெறுப்பின்றி கற்கும் ஆர்வத்தையும் நூல் நிலையங்கள் ஏற்படுத்தும்.

திரையரங்குகளுக்கும், திருமண வைபவங்களுக்கும் குடும்பத்தோடு செல்லும் மனிதர்கள் பலர், புத்தகச் சந்தைக்கும் ஏன் குழந்தைகளோடு வரக்கூடாது என்று அண்மையில் ஒரு நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற கல்வி அதிகாரி ஒருவர் வினா எழுப்பினார். தின்பண்டங்களுக்கும், உடை அலங்காரப் பொருள் களுக்கும் ஒதுக்கும் தொகையில் ஒரு சிறிய விழுக்காட்டை புத்தகம் வாங்க எடுத்துக் கொடுக்க ஏன் தயங்குகின்றனர் பெற்றோர் என்று கேட்டார் வாசகர் ஒருவர்.

தாம் இன்புறுவது மற்றவர்களும் இன்புறச் செய்யச் சொல்லி மகிழும் களிப்பை வாசிப்பு அனுபவம் குழந்தைகளுக்குள் கிளர்த்தும். இளமையில் பயிலும் படிக்கும் பழக்கம், முதுமையை எட்டும் பருவத்தில் கூட தனிமை தம்மைத் தின்று விடாதபடி உணர்வு ரீதியாகவும் உடன் நின்று கதகதப்பை ஏற்படுத்தித் தற்காத்துக் கொள்ளச் செய்துவிடும்.

'காலக் கடலில் செய்யும் பயணத்திற்குக் கலங்கரை விளக்கம் புத்தகங்களே' என்றார் ஈ.பி.விப்பிள் என்னும் அறிஞர். இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை வாசிப்பைத் தூண்ட?

எஸ்.வி.வேணுகோபாலன்


Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)