Showing posts with label முதலாளித்துவம். Show all posts
Showing posts with label முதலாளித்துவம். Show all posts

Saturday, July 7, 2012

சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம் (Ivory Coast Film)


அழுது கொண்டிருக்கிற குழந்தையின் கையில் ஒரு சாக்லேட்டினைக் கொடுத்தாலே போதும், தன்னுடைய அழுகையினை உடனே நிறுத்திவிட்டு முகமலர்ச்சியோடு சிரிக்கத்துவங்கிவிடும். அந்த அளவிற்கு சாக்லேட் என்பது அனைவருக்கும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிடித்தமான ஒரு உணவுப்பொருளாகிவிட்டது. தெருமுனைப்பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் வரை, சாக்லேட் விற்பனை நடைபெறாத கடைகளே இல்லை எனலாம். ஓராண்டிற்கு உலகம் முழுவதிலும் முப்பது லட்சம் டன் அளவிற்கான சாக்லேட்டுகள் விற்பனையாகிறது. ஐரோப்பாவில் மட்டுமே அதில் பாதியளவிற்கு உண்டு தீர்க்கிறார்கள்.





சாக்லேட்டின் இந்த இமாலய வெற்றிக்குப்பின் பெரும் சோகம் மறைந்திருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளின் குழந்தைகள் தினந்தோறும் விதவிதமான சாக்லேட்டுகளை உண்கிற அதேவேளையில், ஆப்பிரிக்க குழந்தைகளின் நிலையோ வேறுமாதிரி இருக்கிறது. சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான "கோகோ" உற்பத்தி செய்யும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க குழந்தைகள் கடத்தப்பட்டு வேலைக்கு அமர்த்தபடுவதனை ஒட்டுமொத்த சாக்லேட் தொழில்துறையே செய்துவருகிறது என்பது அதிர்ச்சிகரமான உண்மை. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் உழைக்கிறார்கள். நாம் மகிழ்ந்துண்ணும் இனிப்பான சாக்லேட்டுகளின் தயாரிப்பின் பின்னே, கசப்பான ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன...

சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவை உலகிலேயே அதிகளவில் (42 %) உற்பத்தி செய்யும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவின் "ஐவரி கோஸ்ட்" என்கிற நாடுதான். ஆனால் உலகின் மிக மிக ஏழ்மையான நாடுகளில் ஐவரி கோஸ்டும் ஒன்று என்பதுதான் முரண்.

சாக்லேட் நிறுவனங்களின் வருடாந்திர கண்காட்சி:
குழந்தைகள் கடத்தல், கட்டாய குழந்தைத்தொழிலாளர் முறை போன்றவை உண்மையானதுதானா எனக்கண்டறிய டென்மார்க்கைச் சேர்ந்த "மிக்கி மிஸ்திராதி" என்கிற பத்திரிக்கையாளர் முடிவெடுக்கிறார். அதனை ஒரு ஆவணப்படமாகவும் தயாரித்தார். உண்மை எப்போதும் அபாயகரமானது என்பதால், தன்னுடைய அடையாளங்களை மறைத்தும் சட்டைக்குள் ஓட்டை போட்டு கேமராவினை மறைத்தும் அவர் உருவாக்கிய படத்தின் பெயர்தான் "The Dark side of Chocolate".

ஒவ்வொரு ஆண்டும் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஜெர்மனியிலிருக்கும் கொலோன் என்கிற நகரில் சந்தித்துக்கொள்வார்கள். அச்சந்திப்பில், சாக்லேட் தொழிலை வளர்த்தெடுப்பது மற்றும் விற்பனையை பெருக்குவது குறித்து விவாதிப்பார்கள். மிக்கி தன்னுடைய பயணத்தினை இச்சாக்லேட் கண்காட்சியிலிருந்து துவங்குகிறார்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான சுவிசர்லாந்தைச்சேர்ந்த "பேரி கேலபாட்" என்கிற நிறுவனம்தான் பெரும்பாலான மற்ற சாக்லேட் நிறுவனங்களுக்கு கோகோ பௌடரை விற்று விநியோகம் செய்கிறது.

பேரி கேலபாட்டின் துணைத்தலைவர் பேட்ரிக் ஹாட்பென்னேவை கண்காட்சியில் சந்திக்கிறார் மிக்கி.
இயக்குனர் மிக்கி : "ஐவரி கோஸ்டில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?"
பேட்ரிக் ஹாட்பென்னே (பேரி கேலபாட்டின் துணைத்தலைவர்) : "எங்களுடைய நிறுவனத்தில், உலகம் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக 7400 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் தோராயமாக 1000 பேருக்குமேல் ஐவரி கோஸ்டில் மட்டும் பணிபுரிகிறார்கள்."
இயக்குனர் மிக்கி : "குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைத்தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் பணிபுரிவதாக வதந்திகள் இருக்கின்றனவே. அது குறித்து?"
பேட்ரிக் ஹாட்பென்னே : "உண்மையாகவே இது குறித்து எங்களுக்குத் தெரியாது. எங்காவது ஒன்றிரண்டு அபூர்வமாக நடக்கலாம். அப்படியொன்று நடந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்..."

அக்கண்காட்சியில் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் குழந்தைத்தொழிலாளர்களை பயன்படுத்துவது குறித்து வாய்திறக்கவில்லை. 2001 லேயே குழந்தைத்தொழிலாளர்களை சாக்லேட் தயாரிப்புத் தொழிலின் எந்தவொரு வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது என்று சாக்லேட் தொழில்துறை நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றின. இவற்றையெல்லாம் உலகுக்கு அறிவித்தவர்களே, இதனைச் செய்வார்களா? என்ற கேள்வியுடன் இயக்குனர் மிக்கி ஆப்பிரிக்காவிற்கே சென்று ஆய்வினை நடத்த முடிவெடுக்கிறார்.

குழந்தைக்கடத்தலில் உலகின் முதன்மை நாடு - மாலி :
மாலி என்கிற மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஏராளமான குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு கோகோ தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதாக செய்தி நிலவுகிறது. எனவே தன்னுடைய பயணத்தை உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியிலிருந்து துவங்குகிறார் இயக்குனர்.



ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு மேற்கே இருக்கிற நாடுதான் மாலி. மாலி மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் குழந்தைகளை "சிகாசோ" என்கிற பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்குதான் கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து புறப்படுகிற பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு "செகுவா" என்கிற இடம் வரை செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாலி-ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கிடையிலான எல்லையினை குறுக்குப்பாதைகளில் கடந்து குழந்தைகளை ஐவரி கோஸ்டிற்கு கொண்டு சேர்க்கிறார்கள் என்கிற உண்மையினை மாலி நாட்டிலிருக்கும் ஒரு சமூகநல ஊழியர் மூலம் அறிந்துகொள்கிறார் இயக்குனர் மிக்கி.
இட்ரிகாசா கண்டே (சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர்) : "குழந்தைகளைக் கடத்துவதென்பது எப்போதுமே இருந்து வருகிறது. எல்லாப் பேருந்துகளிலும் குழந்தைகள் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஐவரி கோஸ்டிற்கு செல்லும் குழந்தைகளின் வயது பொதுவாக 12 இலிருந்து 14 வரை இருக்கும். இதிலே பெண்குழந்தைகளும் உண்டு."
அவரால் இயன்ற அளவிற்கு, பேருந்து நிலையத்திலிருந்து கடத்தப்படுகிற குழந்தைகளை மீட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் தான் மீட்கிற குழந்தைகளின் பெயர், முகவரி போன்றவற்றை ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதியும் வருகிறார். 2006 இல் மட்டும் அவர் மீட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 132 (35 பெண் குழந்தைகள் உட்பட). 2007 இல் அவ்வெண்ணிக்கை 140 (41 பெண் குழந்தைகள்). புர்க்கினா பாசோ, மாலி, நைஜர் போன்ற நாடுகளைச்சேர்ந்தவர்கள்தான் அக்குழந்தைகள்.
ஒரு பேருந்து முதலாளி : "கிராமப்புறக் குழந்தைகள்தான் அதிகமாக கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்கள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 குழந்தைகளை பேருந்தில் கடத்துவார்கள். பேருந்தில் மாலி நாட்டின் எல்லை வரை குழந்தைகளைக் கொண்டுசெல்வார்கள். பின்னர் அங்கிருந்து குறுக்குப்பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் நாட்டு எல்லையினைக்கடந்து ஐவரி கோஸ்ட் நாட்டிலிருக்கும் கொரோகோ என்கிற இடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கோகோ தோட்ட முதலாளிகளிடம் விற்றுவிடுவார்கள்."

பேருந்து முதலாளியிடம் பேசிவிட்டு வெளியே வருகிறபோது, அருகினில் நிற்கும் பேருந்தொன்றினில் ஒரு சிறுமி அங்குமிங்கும் முழித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். இயக்குனர் அவளருகினில் சென்றதும், அச்சிறுமியைக் கடத்திவந்த கடத்தல்காரப்பெண் தப்பித்து ஓடிவிடுகிறாள். அச்சிறுமியை விசாரித்துப்பார்த்தால், அவள் கொண்டுவரப்பட்டிருக்கிற பேருந்து நிலையத்திலிருந்து 450 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் செகு என்கிற கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது.

அச்சிறுமியிடம், சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளரான இட்ரிகாசா கண்டே,
"உன்னை நான் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறேன். மீண்டும் இதுபோல் வந்துவிடாதே... நீ அங்கே சென்று காசெல்லாம் எதுவும் சம்பாதிக்க முடியாது. அங்கே போனால் வீணாகத்தான் போவாய்"
என அச்சிறுமியை எச்சரித்துவிட்டு அவளது வீட்டிற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார். வாழ்க்கை முழுவதும் இதே போன்ற நிலைமையினை தினந்தோறும் எதிகொள்ள வேண்டியிருக்கிறதே என்று புலம்பிக்கொண்டே அழுகிறார் இட்ரிகாசா கண்டே.



குழந்தைக்கடத்தல் நடைபெறுகிற பாதையில் செகுவாவை நோக்கி இயக்குனர் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். வழியில் ஒரு கிராமத்தில் நின்று, அங்கிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
பக்கரி (கிராமத்தலைவர்) : "500 வீடுகள் இருக்கிற எங்கள் கிராமத்திலிருந்து, இதுவரை 12 -15 வயதுள்ள 130 குழந்தைகள் காணவில்லை. கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுடைய கிராம சந்தைக்கு வருவார்கள். அங்கே அவர்கள் பார்க்கிற குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் (தெரிவிக்காமல்) கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள்."

மேலும் பயணித்து, செகுவாவை வந்தடைந்து அங்கிருக்கும் உணவகமொன்றின் உரிமையாளர் மூலமாக குழந்தைகளைக் கடத்த உதவுகிற ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது.
கடத்தலில் ஈடுபடுபவர் : "குழந்தைகளை எல்லைதாண்டி கடத்தும் வேலையினை ஒருவரே செய்வதில்லை. ஒருவர் மாலி நாட்டின் எல்லைவரை குழந்தையைக் கொண்டு செல்வார். இரண்டாமவர், யாருக்கும் தெரியாமல், நாட்டு எல்லையினைத்தாண்டிக் கொண்டுசெல்வார். மூன்றாமவர் ஐவரி கோஸ்ட் நாட்டினில் குழந்தையினைப் பெற்றுக்கொண்டு கோகோ தோட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பார். ஆக ஒரு கடத்தலை தனிப்பட்ட ஒருவர் மட்டும் செய்வதில்லை. அதே போன்று எல்லையோரம் வாழ்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில் குழந்தைகளின் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதனை யாரேனும் மறுத்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகளை எல்லை தாண்டி கொண்டு விடுவதற்கு, கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுக்கு பணம் தருகிறார்கள். நானே பல பேரை கொண்டு சென்றிருக்கிறேன்."
செகுவாவிலிருந்து ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைய, புறவழியொன்றின் வழியாக குழந்தைகள் கடத்தப்படுவதாக அறிந்துகொண்ட இயக்குனர் மிக்கியும் அதே புறவழி மண்சாலைவழியே சென்று பார்க்கிறார். சிகாசோவிலிருந்து வருகிற பேருந்துகளிலிருந்து குழந்தைகள் இறக்கப்படுவதும், உடனே அங்கே தயார் நிலையில் இருக்கும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறவழிச்சாலை வழியாக நேராக ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைவதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. இயக்குனரும் அதே வழியில் சற்று அதிக இடைவெளிவிட்டு பின்தொடர்கிறார். போகிற வழியில் சாலையோரத்தில் ஒரு பத்து வயதிற்குட்பட்ட சிறுவன் தனியாக அழுதுகொண்டிருக்கிறான். கடத்தல்காரர்கள் யாரையாவது பார்த்து பயந்து, அச்சிறுவனை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். அச்சிறுவன் அவ்விடத்திற்கு எப்படி வந்தான் என்று சொல்லக்கூட முடியாதநிலையிலிருந்தான்.

குழந்தைத்தொழிலாளர்களே இல்லையாம் - முதலாளிகளும் ஆட்சியாளர்களும்
இயக்குனரும் சில ஆப்பிரிக்க சமூக ஆர்வலர்களும் இணைந்து ஐவரி கோஸ்டின் பொருளாதாரத்தலைநகரான "அபிட்ஜானுக்கு" செல்கிறார்கள். நெஸ்லே, கார்கில், ஏ.டி.எம்., பேரி கேலபாட், சாப் கோகோ போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அபிட்ஜானில் இருக்கின்றன. உலகின் 42 % கோகோ, ஐவரி கோஸ்டிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்நிறுவனங்கள்தான் ஐவரி கோஸ்டிலிருந்து ஒட்டுமொத்த கோகோ ஏற்றுமதியையும் செய்கின்றன.

கோகோ ஏற்றுமதி நிறுவனமான சாப் கோகோவின் (SAF Cocoa )
 முதலாளி அலி லகிசை சந்தித்து, குழந்தைகள் கடத்தல் குறித்தும், குழந்தைத்தொழிலாளர் குறித்தும் கேட்கிறார் இயக்குனர் மிக்கி.
அலி லகிஸ் : "நான் ஒரு கோகோ தொழில் குடும்பத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இதுவரையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோகோ தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்ததே இல்லை. கோகோ தோட்டங்களில் குழந்தைத்தொழிலாளர் முறையே இல்லை. ஐவரி கோஸ்டில் ஒரு குழந்தைத்தொழிலாளர்கூட கோகோ தோட்டங்களில் வேலை செய்யவில்லை என்பதனை ஒட்டு மொத்த உலகத்திற்கே சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. பல குழுக்கள் வந்து முறையாக விசாரித்துவிட்டு அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன. எந்தவொரு அறிக்கையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்படவே இல்லை. நாட்டின் எல்லைகளில் கூட இது நடக்கவில்லை."
இயக்குனர் மிக்கி : "மாலியிலிருந்தும் புர்க்கினா பாசோவிலிருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்டின் கோகோ தோட்டங்களில் வேலை செய்யவைக்கப்படவே இல்லை என்கிறீர்களா?"
அலி லகிஸ் : "இல்லை இல்லை இல்லவே இல்லை... எங்களது நிறுவனம்தான் ஐவரி கோஸ்டிலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். சும்மா எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு போகாதீர்கள். ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். குழந்தைத் தொழிலாளர்களே இல்லையென்பதை நீங்களே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்கிறார் உலகின் மிகப்பெரிய கோகோ ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் அலி லகிஸ். அவருடைய நிறுவனம்தான் அதிக அளவில் நெஸ்லே நிறுவனத்திற்கு கோகோ விற்பனை செய்கிறது.
இயக்குனர் மிக்கியின் ஆவணப்பட முயற்சி குறித்து கேள்விப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டின் தொழிலாளர் துறையின் தலைமைச்செயலர்  "டோஹே ஆடம் மாலிக்", மிக்கியை அழைத்து பேச விரும்புகிறார்.
இயக்குனர் மிக்கி : "மாலி நாட்டின் செகுவா என்ற இடத்திலிருந்து குழந்தைகளை கடத்திக்கொண்டு கடத்தல்காரர்கள் புறவழிச்சாலை வழியாக ஐவரி கோஸ்டிற்கு வருகிறார்கள். இதனை நானே பார்த்தேன்"
டோஹே ஆடம் மாலிக் : "வருடா வருடம் கோகோ விளைச்சலானது அக்டோபரில் துவங்கி மார்ச்சில் முடியும். நீங்கள் ஜூலையில் மக்கள் வருகையினைப் பார்த்தீர்களானால், அவர்கள் கோகோவிற்காக வரவில்லை. அந்த நேரத்தில் கோகோ எங்குமே இருக்காது. அதனால் கோகோ தோட்டங்களில் வேலையும் இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்கள் எல்லாம் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். ஒரு பேருந்தில் 20 குழந்தைகள் இருந்தால் உடனே குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஐவரி கோஸ்டின் அழகைக் காண சுற்றுலா வருகிறார்கள்"
இயக்குனர் மிக்கி : "ஆனால் நான் பார்த்தது ஏப்ரல் மாதத்தில்"
டோஹே ஆடம் மாலிக் : "அதற்கு எங்களிடம் சட்டமெல்லாம் இருக்கிறது."
சொல்லிவைத்தாற்போல் முதலாளிகளும் ஆட்சியாளர்களும் ஒரே மாதிரி குழந்தைக்கடத்தலும் குழந்தைத்தொழிலாளர் முறையும் இல்லவே இல்லை என்று அடித்துச்சொல்கின்றனர்.

ஆதாரங்கள்:


ஆதாரம் ஒன்று:
கோகோ ஏற்றுமதி நிறுவன முதலாளி அலி லகிஸ் மற்றும் ஐவரி கோஸ்டின் தொழிலாளர் துறை முதன்மைச்செயலர் ஆகியோர் சொல்வது உண்மைதானா என்பதனை அறிய, ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களின் உதவியினை நாடுகிறார் இயக்குனர். மேற்குலக நாட்டவரை பார்த்தால் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால், ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் மறைமுக கேமராக்களை கொடுத்து கோகோ தோட்டங்களை வீடியோ எடுக்க சொல்கிறார் இயக்குனர். அவர்கள் எடுத்து வந்த வீடியோவில் பதிவாகியிருப்பதைப் பார்த்தால், கோகோ தோட்டங்களில் முழுவதுமாக குழந்தைகள்தான் எல்லா வேலைகளையுமே செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

ஆதாரம் இரண்டு:
வீடியோவை பார்த்ததும், இயக்குனரும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மீண்டுமொருமுறை கோகோ தோட்டங்களுக்கு செல்கிறார். அங்கே கைகளில் கத்தியும் உடலினில் வேர்வையுமாக கோகோ தோட்டங்களில் வேலை செய்கிற அச்சிறுவர்கள் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வந்தவர்களல்ல, தங்கள் மீதமுள்ள வாழ்க்கையையே கோகோ தோட்டங்களில் தொலைக்க வந்தவர்கள்.

ஒரு கோகோ தோட்டத்திலிருப்பவரை சந்தித்து (மறைமுக கேமராவை வைத்துக்கொண்டு), தங்களுடைய தோட்டத்திற்கும் குழந்தைத்தொழிலாளர்கள் வேண்டுமென்றும், எவ்வாறு பெறுவது என்றும், எவ்வளவு செலவாகுமென்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக கேள்வி கேட்கப்படுகிறது.
கோகோ தோட்ட முதலாளி : "எங்க பெரியண்ணன் இருக்கார். அவரிடம் எத்தனை குழந்தைகள் வேண்டுமென்று சொன்னால், ஏற்பாடு செய்வார். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் ஆகும்"
15,000 ரூபாய் கொடுத்தால், ஆயுள் முழுவதும் உழைப்பதற்கு சம்பளமே இல்லாத குழந்தை என்கிற பொருள் கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆதாரம் மூன்று:
கோகோ தோட்டங்களிலிருந்து தப்பிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லையென்றாலும், மிக அபூர்வமாக ஒன்றிரண்டு குழந்தைகள் கோகோ தோட்டங்களிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

அவ்வாறு தப்பித்த இரு சிறுவர்கள்,
யாயா கொனாட்டே : "கடத்தல்காரர்கள் எங்களை எப்படியோ ஏமாற்றித்தான் அழைத்துச்சென்றார்கள். அங்கே நிறைய சிறுவர்-சிறுமிகள் இருந்தனர். நாங்கள் எல்லோரும் தப்பிக்க முயற்சி செய்தோம். தோட்ட முதலாளிகள் எங்களைத் துரத்தினார்கள். இரவெல்லாம் இருளினில் ஒளிந்து மறைந்திருந்தோம். மறுநாள், எங்களை பார்த்த வெளியாள் ஒருவர்தான் உதவி செய்து எங்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்."
சங்கா த்ரோரே : "கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாலோ, கடுமையாக அடிப்பார்கள்."


ஆதாரம் நான்கு:
சர்வதேச காவல்துறையினர், குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்ததாகவும் 50 குழந்தைகளை மீட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகிறது. இயக்குனர் மிக்கி சர்வதேச காவல்துறை உயரதிகாரியை சந்திக்கப்புறப்படுகிறார்.
ஹென்றி ப்ளேமின் (சர்வதேச காவல்துறை தலைமை அதிகாரி) : "சாலைகள், சந்தைகள், கோகோ தோட்டங்கள் போன்ற இடங்களில் இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, அதன்பின் மேற்கொண்ட சோதனையில் 65 குழந்தைகள் வரை எங்களால் மீட்க முடிந்தது. எங்களது நடவடிக்கைகளை சற்று முன்கூடியே அவர்கள் அறிந்தமையால், பல குழந்தைகளை வீடுகளில் ஒளித்துக்கொண்டார்கள். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் அனைவரும், புர்க்கினா பாசோ, மாலி, டோகோ, நைஜர், நைஜீரியா, பெனின் போன்ற வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்."
இயக்குனர் மிக்கி : "கோகோ தோட்டங்களில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டதும் அதிர்ச்சியடையும் அளவிற்கு புதிய செய்தியாக இருந்ததா உங்களுக்கு?"
ஹென்றி ப்ளேமின் : "நிச்சயமாக இல்லை"
குழந்தைகள் கடத்தல், குழந்தைத் தொழிலாளர்முறை போன்றவை மிகச்சாதாரணமாக நடப்பது எல்லா தரப்பு மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் ஏனோ சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரியாமல் (தெரிந்தும் ஒப்புக்கொள்ளாமல்) இருப்பது ஆச்சர்யம்தான்.

முதலாளித்துவத்தின் அடிப்படையே மனிதநேயத்திற்கு எதிரானதுதான்:


எல்லா ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு சாப் கோகோவின் முதலாளி அலி லகிசை சந்திக்கிறார் இயக்குனர் மிக்கி.
இயக்குனர் மிக்கி : "சென்ற முறை உங்களை சந்தித்தபோது, ஐவரி கோஸ்டில் குழந்தைத்தொழிலாளர்களே இல்லை என்றீர்கள். ஆனால் சர்வதேச காவல்துறைகூட பல குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறார்கள்."
அலி லகிஸ் : "ஐவரி கோஸ்டிற்கே இது மிக வருத்தமான செய்திதான். செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் நானும் பார்த்தேன். இதெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிறது. அரசாங்கமும் இதனை எதிர்த்து போராடிவருகிறது."
என்கிற மிகப் பொறுப்பான(?!?) பதிலை உதிர்க்கிறார் அலி லகிஸ்.

ஆதாரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஐ.நா. சபையின் ஒரு அங்கமான "சர்வதேச தொழிலாளர் ஆணையத்திற்கு" செல்கிறார் இயக்குனர் மிக்கி. உலகம் முழுவதிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பினையும் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டியுங்கும் அமைப்பிது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இதே அமைப்புடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு குறித்த ஒப்பந்தமொன்றினை கையெழுத்திட்டது.

சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் பிரான்க் ஹேகமன், மிக்கி காண்பித்த வீடியோ ஆதாரங்களைப் பார்த்தபின்னர்,
பிரான்க் ஹேகமன் : "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காக கடந்த 13 வருடங்களாக உழைத்து வருகிறேன். ஆனால் இது போன்ற வீடியோ காட்சிகளை பார்க்கிறபோதெல்லாம், அதிர்ச்சியாகவே இருக்கிறது. இது போன்ற ஆதாரங்களெல்லாம் நம்முடைய இயலாமையினைத்தான் காட்டுகிறது."
இயக்குனர் மிக்கி : "சாக்லேட் நிறுவனங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது?"
பிரான்க் ஹேகமன் : "பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. சில வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையான மாற்றம் எதுவும் பெரிய அளவில் நிகழவில்லை. ஐவரி கோஸ்டிலும் கானாவிலும் கோகோ தோட்டங்களில் இன்றையநிலவரப்படி எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று கேட்டால், என்னால் சொல்லமுடியாத நிலைதான்"
சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய ஆவணப்படத்தை திரையிட்டுக்காட்டவும், அவர்களின் உண்மையான அக்கறை குறித்து சில கேள்விகளைக் கேட்கவும் அனுமதி கேட்டுப்பார்த்தார் இயக்குனர் மிக்கி. ஆனால் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் அவருடைய படத்தைப் பார்க்கவோ, அவரிடம் பேசவோ மறுத்தவிட்டன. ஆனால் திடீரென ஒரு நாள், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையினை மட்டும் வெளியிட்டன. அதில், 
"பெரும்பாலான கோகோ தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானதல்ல. அதனால் அங்கிருக்கும் எந்தவொரு மோசமான நிலைமைக்கும் நாங்கள் பொறுப்பாகமுடியாது"
என்றொரு வரி எழுதப்பட்டிருந்தது.
ஆதாரங்களை காண்பித்தவுடன், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தட்டிக்கழிக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு அக்குழந்தைகள் மீது அக்கறை இருக்கிறதா என்கிற சந்தேகம்தான் நம் அனைவருக்கும் எழும்.

ஒவ்வொரு சாக்லேட் நிறுவனங்களின் வாசலிலும் பெரிய திரையொன்றினை அமைத்து, தான் தயாரித்த ஆவணப்படத்தை திரையிடத்திட்டமிடுகிறார் இயக்குனர் மிக்கி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐவரி கோஸ்டில் அலுவலகம் அமைத்து சுரண்டலைச் செய்துவரும் நெஸ்லேயின் தலைமையகம் முன்பு திரையமைத்து தன்னுடைய ஆவணப்படத் திரையிடலைத் துவங்கினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து 40 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவிகளை செய்திருக்கின்றன. ஆனால், நெஸ்லே என்கிற ஒரே ஒரு நிறுவனம் கடந்த ஓராண்டில்மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்திருக்கிறது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. அவர்களுடைய மேற்பாவையில்தான் அனைத்து கொத்தடிமைத்தனமும், ஒடுக்குமுறையும், சுரண்டலும் நடைபெறுகின்றன. 
இலாபமொன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர்கள், ஐ.நா.வில் சட்டம் போடுவதும், குழந்தைதொழிலாளர் முறையினை ஒழிக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்று வருடாவருடம் அறிக்கைகள் விடுவதும், உதவித்தொகை என்கிற பெயரில் மிகச்சிறிய தொகையினை வீசியெறிவதும், யாரை ஏமாற்றுவதற்காக?
ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்காதீர்கள், சிரியாவிடம் சிரித்துப் பேசாதீர்கள், க்யூபாவை கண்டுகொள்ளாதீர்கள் என்று உலகிற்கே ஒரே நாளில் உத்தரவு போட்டு நிறைவேற்றுகிற ஐ.நா., அமெரிக்கா மற்றும் இன்ன பிற மேற்குலக நாடுகள் எல்லாம், இத்தனை ஆண்டுகளாக கொடூரமாக சுரண்டப்படும் ஆப்பிரிக்க குழந்தைகளுக்காக குரல் கொடுக்காததற்கான காரணம் என்ன? 
 ஒருபுறம் மனிதநேயத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்கள்போல பேசிக்கொண்டே, மறுபுறம் மக்களைக் கொன்றாவது இலாபம் பார்க்கத்துடிக்கிற அமைப்பின் பெயர்தான் முதலாளித்துவம்.

Sunday, June 10, 2012

தொழிலாளிகள் முதலாளிகளான கதை (The Take - அர்ஜெண்டினா திரைப்படம்)

மன்னராட்சி, நிலப்பிரபுத்துவ ஆட்சி, காலனியாட்சி, இராணுவ ஆட்சி, முதலாளித்துவ ஆட்சி என காலம் காலமாக தங்களின் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். மக்கள் விரோத அரசுகளையும் ஆட்சியாளர்களையும், அவர்கள் விதித்திருக்கிற கேடுகெட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு போராடுவதைவிட, அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி தூக்கியெறிந்துவிட்டு மாற்று வழியினை முன்னெடுப்பதில்தான் உண்மையான வெற்றியே அடங்கியிருக்கிறது.


மக்களின் வரிப்பணத்தை அரசிடமிருந்து தொழிற்சாலை கட்டுவதற்கு இலவசமாக இடமாகவும் இன்னபிற சலுகைகளாகவும் பெற்றுக்கொண்டு, ஊழியர்களை சக்கையாகப் பிழிந்து உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் தராமல், அளவற்ற இலாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள். உழைப்பிற்கேற்ற நியாயமான கூலி உட்பட அடிப்படை உரிமைகளுக்காக போராடுகிற அதே வேளையில், தொழிலாளர்களை ஒரு உயிரற்ற மூலப்பொருளாக மட்டுமே பார்க்கிற முதலாளித்துவ கட்டமைப்பையும் சேர்த்தே எதிர்க்கவேண்டும். சுரண்டலையும் அடிமைத்தனத்தையும் எதிர்க்கிறபோது, அதனை அனுமதிக்கிற அமைப்பையும் சேர்த்தே எதிர்த்தால்தானே அதனை முற்றிலுமாக ஒழிக்கமுடியும்.

முதலாளித்துவ அமைப்பினால் வீழ்ச்சியடைந்து திவாலாகிய நாடொன்றினில், மாற்றுத்திட்டத்தினை அந்நாட்டு மக்களே முன்மொழிந்ததோடுமட்டுமல்லாமல் அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டினார்கள். அந்நாட்டின் பெயர்தான் அர்ஜெண்டினா.

திரைக்கதை:

அர்ஜெண்டினா ஒரு ஏழை நாடல்ல... ஏழை நாடாக்கப்பட்ட பணக்காரநாடு. 90 களில் இந்தியாவைப் போன்றே, அர்ஜெண்டினாவிலும் புதிய தாராளமயக்கொள்கைகளை அந்நாட்டின் அதிபராக இருந்த "கார்லோஸ் மேனம்" அறிமுகப்படுத்தினார். ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கிகளின் ஆணைப்படி, அர்ஜெண்டினாவின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. பெருமுதலாளிகளுக்கு ஏற்றவாறு திட்டங்கள் தீட்டப்பட்டன. கண்ணிமைக்கும் நேரத்தில், அர்ஜெண்டினாவின் பொருளாதாரக் கொள்கைகளே முற்றிலுமாக கார்லோசின் ஆட்சிக் காலத்தில் மாறின. அரசு நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைப்பு, இலாப வெறிகொண்ட முதலாளிகளினால் செய்யப்பட்ட பெருமளவிலான ஆட்குறைப்பு என ஐ.எம்.எப்.இன் ஆணைப்படி எல்லாம் அரங்கேறின அர்ஜெண்டினாவில்.

ஆனால் மிகச்சில ஆண்டுகளிலேயே உண்மையில் நடந்தது என்ன?
  • அர்ஜெண்டீன மக்களிடையே பரவிக்கிடந்த செல்வமெல்லாம் சில பன்னாட்டு முதலாளிகளின் கைகளுக்குச் சென்றடைந்தது
  • வேலையில்லாத்திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தது
  • மக்களின் வாங்கும் சக்தி குறையத்துவங்கியது
  • அர்ஜெண்டினா நானையத்தின் மதிப்பு பன்மடங்கு வீழ்ச்சியடைந்தது
  • எந்த பன்னாட்டு நிறுவனங்களையும், பன்னாட்டு வங்கிகளையும் தாராளமாக உள்ளே வரவைத்து தடையற்ற சுதந்திரத்தினை ஐ.எம்.எப்.இன் உதவியுடன் கார்லோஸ் மேனமின் அரசு வழங்கியதோ, அதே பன்னாட்டு வங்கிகளும் நிறுவனங்களும் ஒரே நாள் இரவில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான பணத்தினை சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டே ஓடிவிட்டன
  • அவர்களைத் தடுக்க எவ்வித சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் இல்லை

மக்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு சென்ற பன்னாட்டு நிறுவனங்களின் போக்கை தடுக்கமுடியாமல், கார்லோஸ் மேனமின் அரசு தன்னுடைய நாட்டு மக்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது. இதுநாள் வரை தங்களது உழைப்பால் சிறுகச்சிறுக சேமித்துவைத்திருந்த வங்கிப்பணம் சொத்துமுதற்கொண்டு அனைத்தையும் அரசே எடுத்துக்கொண்டமையால், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லாத ஏழை மக்களாக வீதிகளுக்கு வந்து போராடத்துவங்கினர். ஒரு புறம் மக்களின் போராட்டத்தையும், மறுபுறம் ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கிகளிடம் வாங்கிய கடனையும் சமாளிக்கமுடியாமல் அர்ஜண்டைனாவில் மூன்றே வாரத்தில் ஐந்து அதிபர்கள் மாறிவிட்டனர். தென்னமெரிக்கா முழுவதிலும் பெருமளவிற்கு வர்த்தகத்தை மேற்கொண்டிருந்த "என்ரான்" நிறுவனமும் அதே வாரத்தில் திவாலாகிவிட்டதாக அறிவித்தது.

நிலைமையினை சமாளிக்கமுடியாமல், உலகவரலாற்றிலேயே முதன்முறையாக அர்ஜெண்டினா என்கிற ஒரு நாடே திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. முதலாளித்துவம் தன்னுடைய இயக்கமுறையின் காரணமாக தானே வீழ்ச்சியடையும் என்கிற மார்க்சின் கூற்றுப்படி அர்ஜெண்டினா வீழ்ச்சியடைந்தது. (இன்றைக்கு திவாலாகிக்கொண்டிருக்கும் அயர்லாந்து, கிரேக்கம், ஸ்பெயின் முதலான நாடுகளின் நிலையோடு ஒப்பிடத்தக்கது)

மக்கள் தெருவீதிகளில் குவிந்து,
"வெளியேறு வெளியேறு... எங்கள் நாட்டைவிட்டே வெளியேறு..."
என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இருப்பினும் சரியான அரசியல் பார்வையோ அல்லது அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்மொழிவதற்கான தொலைநோக்குத்திட்டமோ அவர்களிடம் இல்லை. (இந்நிலையினை, இன்றைய "வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டத்துடன்" ஒப்பிடலாம்.)

மனித இனத்திற்கும் மனிதநேயத்திற்கும் எதிரான முதலாளித்துவம் தனக்குத்தானே சுய அழிவைத்தேடிக்கொண்டாலும், மாற்றமொன்றினை முன்வைத்துப்போராடாதவரை, முதலாளித்துவம் பலவழிகளைக்கண்டறிந்து மீண்டும் மீண்டும் எழவே முயற்சிக்கும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இன்றைக்கு திவாலாகிக்கொண்டிருக்கும் அயர்லாந்து, கிரேக்கம், ஸ்பெயின் முதலான நாடுகள்தான்.

புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்டு திவாலாகி நின்ற அர்ஜெண்டினா நாட்டின் உழைக்கும் மக்கள், ஒரு மாற்று வழியினைக் கண்டறிந்தார்கள்.

ஆக்கிரமிப்போம்... பாதுகாப்போம்... உற்பத்திசெய்வோம்...

ஆண்டாண்டு காலமாக தங்களது உழைப்பைச் சுரண்டி கோடிகோடியாக இலாபம் பார்த்த பன்னாட்டு முதலாளிகள், ஒரே நாளிரவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுவனங்களின் சொத்துக்களை சுருட்டிக்கொண்டு ஓடியதுகண்டு தொழிலாளர்கள் கொந்தளித்தனர். தங்களின் உழைப்பில் பெரிதாக வளர்ச்சியடைந்த தொழிற்சாலைகளில் தங்களுக்கும் பங்குண்டு என்று உணர்ந்துகொண்ட அர்ஜெண்டினா தொழிலாளமக்கள்,
"ஆக்கிரமிப்போம்... பாதுகாப்போம்... உற்பத்திசெய்வோம்"
என்கிற புதிய முழக்கங்களோடு சில தொழிற்சாலைகளின் பூட்டிய வாயிற்கதவுகளை உடைத்துக்கொண்டும், சில தொழிற்சாலைகளில் நீதிமன்றங்களின் அனுமதியோடும் உள்ளே நுழைகின்றனர். அர்ஜெண்டினா முழுவதும் இச்செய்தி பரவி, தொழிலாளர்கள் புதிய உத்வேகத்துடன் தங்களது உரிமைகளை பாதுகாக்கப் புறப்பட்டனர்.

"செனான் செராமிக்ஸ்"

"செனான் செராமிக்ஸ்"  என்கிற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையினை இலாபகரமாக இயக்கமுடியாது என்று முதலாளிகள் இழுத்துமூடிவிட்டனர். கார்லோஸ் மேனமின் அரசு, இத்தொழிற்சாலையின் முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான பணத்திற்கு சலுகைகள் வழங்கியும், அவற்றையெல்லாம் நேரம் பார்த்து சுருட்டிக்கொண்டி ஓடிவிட்டனர் அதன் முதலாளிகள்.

முதலாளிகள் விட்டுச்சென்ற "செனான் செராமிக்ஸ்" தொழிற்சாலையினை, தொழிலாளர்கள் கைப்பற்றினார்கள். தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்நிறுவனத்தை நடத்துவதென்று முடிவெடுக்கிறார்கள்.
  • இனி இத்தொழிற்சாலைக்கு முதலாளி என்று யாரும் இல்லை. தொழிலாளர்களே முதலாளிகள்
  • வேலைபார்க்கும் 300 தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியமும் வழங்கப்படும்.
  • எல்லாமுடிவுகளும் ஜனநாயக முறைப்படி ஓட்டுப்போட்டே எடுக்கிறார்கள். பாகுபாடின்றி முடிவுகளை எடுக்க, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமமாக ஒரு ஓட்டு.
  • உயர்ந்தவர், தாழ்ந்தவர், சுரண்டல் என்று எதுவுமே இல்லாமல், எல்லோரும் சமம்.

தொழிலாளர்களின் கடும் உழைப்பில், அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே தொழிற்சாலை இலாபத்தினை ஈட்டக்கூடிய ஒன்றாக மாறுகிறது. இலாபத்தில் ஒரு பகுதியாக, அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு இலவசமாக டைல்ஸ் வழங்குகிறார்கள்.

இதற்கிடையில், தொழிற்சாலை வெற்றிகரமாக நடத்தப்படுவதை அறிந்த செனான் தொழிற்சாலை முதலாளி "லூயிஸ் செனான்" மீண்டும் ஊடகத்தின் முன் வந்து, "இத்தொழிற்சாலை என்னுடையது. அரசாங்கம் எனக்கு அதனை திரும்பப்பெற்றுத்தந்துவிடும்." என்று அறிவிக்கிறார்.

இச்செய்தி தொழிலாளர்களிடையே கலக்கத்தை உருவாக்குகிறது. தொழிலாளர்கள் அனைவரும் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தொழிற்சாலைக்கு காவல் நிற்கிறார்கள். "பெர்சூட்" என்கிற அர்ஜண்டைனாவின் மிகப்பிரபலமான இசைக்குழு, "செனான் செராமிக்ஸ்" தொழிற்சாலைக்குள்வந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக மிகப்பெரிய இசைநிகழ்ச்சி நடத்துகின்றனர்.  
"இந்நிகழ்ச்சி செனான் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்" 
என்று பகிரங்கமாக அறிவித்தே நிகழ்ச்சியினை துவக்குகிறார்கள்.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது பொதுமக்களின் ஆதரவுதான். அது நாளுக்கு நாள் அதிகரிக்கவும் செய்கிறது.
பொதுமக்கள் : "முதலாளிகளின் தலைமையில் இருந்ததைவிட, இப்போதுதான் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது. டைல்ஸ் விலையும் குறைந்திருக்கிறது. நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவே நினைக்கிறேன். முன்னாள் முதலாளிகள் அரசிடமிருந்து மானியங்களை வாங்கி, அதனை தங்களுடைய வங்கிக்கணக்கிற்கே திருப்பிவிட்டிருந்தார்கள்."
பொதுமக்கள் : "பொதுமக்களாகிய எங்களுடைய ஆதரவு தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் உண்டு. ஏனெனில் அவர்கள் திருடவில்லை, யாரையும் கொலை செய்யவுமில்லை. தங்களுடைய குடும்பத்திற்கு உணவளிப்பதற்காகவே உழைக்கிறார்கள்."
பொதுமக்கள் : "இன்னும் பல நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் போய்சேர வேண்டும். அரசியல் ரீதியாக இது சற்றே கடினமானதுதான்."
"செனான் செராமிக்ஸ் மக்களுடையது" என்கிற பிரச்சாரம் நாடுமுழுக்க பேசப்படுகிறது.

காவல்துறையினர் தொழிற்சாலையை முற்றகையிட நினைக்கிறபோதெல்லாம், தொழிலாளர்களுடன் இணைந்து பொதுமக்களும் தொழிற்சாலையினை பாதுகாக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் தொழிற்சாலையினை சுற்றிவளைத்துக்கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். இரவு நேரங்களில் தொழிற்சாலையினை பாதுகாப்பதற்கு, இசைநிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமென ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது இப்போராட்டம். இதன்மூலம் செனான் செராமிக்ஸ் உண்மையிலேயே மக்களுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு புறம் போராட்டத்தினை பெரியளவில் நடத்திவந்தாலும், மறுபுறம் டைல்ஸ் உற்பத்தியிலும் அதிக கவனம் செலுத்திவந்தார்கள் தொழிலாளர்கள். தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு, ஆறு மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அதனால் நிறுவனத்திற்கு நட்டம் என்கிற பேச்சிற்கே இடமில்லாமற்போகிறது.

"செனான் செராமிக்ஸ் -  தொழிலாளர்களுக்குச் சொந்தமானது" என்கிற வாசகத்துடன் இன்று காட்சியளிக்கும் தொழிற்சாலை அர்ஜென்டினாவில் ஒரு மாற்று இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டியது.

"போர்ஜா சான் மார்டின்"

அர்ஜெண்டினா பொருளாதார வீழ்ச்சியில் அறிவிப்பின்றி மூடப்பட்ட தொழிற்சாலைகளில் "போர்ஜா சான் மார்டின்" என்கிற வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் ஒன்று. அத்தொழிற்சாலையில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த பிரெட்டி மற்றும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவு சங்கமொன்றை அமைத்து, தங்களது தொழிற்சாலையினை அதன் உரிமையாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்கமுயற்சிக்கிறார்கள் என்றும் அதனால் தொழிலாளிகள் அனைவரும் தொழிற்சாலையினை பார்வையிடவேண்டுமென்றும் நீதிமன்றத்திற்கு சென்று கோரிக்கைவைக்கிறார்கள். அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்குகிறது.
"நாங்களும் எங்கள் குடும்பமும் பட்டினி கிடக்க, எங்களின் உழைப்பில் உருவான இவ்வளவு பெரிய தொழிற்சாலை மூடிக்கிடப்பது சரியா?"
என்கிறார் பிரெட்டி.

தொழிற்சாலையினுள்ளே நுழைந்த தொழிலாளிகளுக்கு அதிர்ச்சிதான் காத்துக்கிடந்தது. மூடிக்கிடந்ததாக நினைத்திருந்த தொழிற்சாலைக்குள்ளிருந்த மூலப்பொருட்கள், சில இயந்திரங்கள், கேபிள்கள் என பலவற்றைக் காணவில்லை. அவற்றையெல்லாம் முதலாளிகள் ஒவ்வொன்றாக திரைமறைவில் விற்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

தொழிலாளிகள் எல்லோரும் கூட்டுறவு சங்கமாக இணைந்து அத்தொழிற்சாலையினை நடத்துவதென முடிவெடுக்கிறார்கள்.
பிரெட்டி : "இதில் யாருமே முதலாளி கிடையாது. எல்லாத்தொழிலாளிகளும் நிர்வாகிகள்தான். நான் என்ன செய்கிறேன் என்று அவன் பார்த்துக்கொள்வான். அவன் என்ன செய்கிறான் என்று நான் பார்த்துக்கொள்வேன். இது எங்கள் சொத்து என்கிற எண்ணம் வருமென்பதால், தேவையில்லாமல் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தால் கூட, நிச்சயமாக அணைத்துவிடுவோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஊதியமும்கூட."
முதலாளிகளுக்கு எதிராக தொழிற்சாலையில் சேகரித்த ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
 "போர்ஜா சான் மார்டின் - ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலை" என்று வாயிற்கதவில் எழுதிவைத்துவிட்டு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும்வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத்துவங்குகிறார்கள்.

தொழிலாளிகளால் நடத்தப்படுகிற மற்ற நிறுவனங்களில் உள்ள முக்கியமான நபர்களை அழைத்து ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார்கள் "போர்ஜா சான் மார்டின்" தொழிற்சாலை ஊழியர்கள். அதன்மூலம் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பதுதொடர்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்கிறது அவர்களுக்கு.

தொழிலாளிகளால் நடத்தப்படுகிற நிறுவனங்களுக்குள் மூலப்பொருள் வழங்கவும், உற்பத்தி செய்வதற்கான உதவிகளைச் செய்யவும் ஒருவருக்கொருவர் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த ஒப்புக்கொள்கிறார்கள்.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் ஒருவர், "போர்ஜா சான் மார்டின்" தொழிற்சாலைக்கு வந்து நிலைமையினை ஆய்வு செய்கிறார். நடுநிலையாளராக இருக்கவேண்டியவர், முதலாளிகளுக்கு ஆதரவாகவே அறிக்கை எழுதுகிறார். அதுமட்டுல்லாது, அவரது உதவியுடன்தான் தொழிற்சாலையில் இருந்த மூலப்பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே விற்றுவிட்டனர் முதலாளிகள்.

நீதிமன்ற பொறுப்பாளர் முதலாளிகளுக்கு ஆதரவாக சமர்ப்பித்த அறிக்கையை முன்வைத்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. தொழிலாளிகள் தரப்பிலிருந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் கலந்துகொள்கிறார்கள்.
நீதிபதி : "ஒரு தொழிற்சாலையை நடத்துவதற்கு தேர்வையான அனைத்தையும் தொழிலாளர்களே செய்வதென்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை. ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையுடன் யாரும் வியாபாரம் செய்வார்கள்? நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?"
தொழிலாளர் பிரதிநிதி (பிரெட்டி) : "தொழிலாளிகள் அனைவரும் ஒன்றுகூடி, மூடப்பட்டிருக்கிற தொழிற்சாலையினை காப்பதற்கு அதனை நாங்களே  ஏற்று நடத்த முடிவெடுத்திருக்கிறோம். எங்களால் முடியும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது."
நீதிபதி : "தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படவில்லை. தொழிற்சாலையிலிருந்து ஏதேனும் பொருட்கள் முதலாளிகளால் எடுக்கப்பட்டு விற்கப்பட்டிருந்தால், நீங்கள் அப்படி சொல்லலாம்"
தொழிலாளர் பிரதிநிதி (பிரெட்டி) : "ஆமாம். தொழிற்சாலையிலிருந்து ஏராளமான பொருட்களை முதலாளிகள் எடுத்திருக்கிறார்கள்"
நீதிமன்றம் நியமித்த பொறுப்பாளரிடம் இதுகுறித்து நீதிபதி கேட்கிறார்.
பொறுப்பாளர் : "அப்படியெல்லாம் எதுவும் காணாமற்போகவில்லை. முதலாளிகள் எதையும் எடுக்கவில்லை. எந்தப்பொருளும் காணாமற்போனதாக இதுவரை தொழிலாளிகளும் எனக்கு எந்தவித புகார் அளிக்கவில்லை" 
என்று முதலாளிகளுக்கு ஆதரவாக பொய்யான தகவல்களை நீதிமன்றத்தில் கொடுக்கிறார்.
நீதிபதி : "தொழிலாளர்களே! நான் உங்களுக்கு மீண்டும் உங்களது வேலையினை வாங்கித்தரலாம் என்றுதான் முயற்சிக்கிறேன். ஆனால் நீங்களோ தொழிற்சாலையினை ஆக்கிரமிக்க முயல்கிறீர்கள். உங்கள்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. உடனடியாக தொழிற்சாலையிலிருந்து வெளியேறுங்கள்"
நீதிமன்றமும் கைவிரித்துவிட்ட சூழலில், தொழிலாளர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாராளுமன்றம் நினைத்தால்தான் அவர்களுக்கு தொழிற்சாலையினை மீட்டுத்தரமுடியும் என்கிற நிலை உருவாயிற்று. தொழிற்சாலையினை மீட்கவேண்டி, பாராளுமன்றத்தில் ஓட்டுபோடும் தகுதியுடையோரை சந்தித்து, ஆதரவு திரட்டினர். அச்சட்டமுன்வறைவு பாராளுமன்றத்தில் வந்தபோது, சற்றும் எதிர்பாராமல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தொழிலாளர்களே "போர்ஜா" தொழிற்சாலையினை கூட்டுறவு முறையில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் கண்ணீரால் தங்களது வெற்றியினைக் கொண்டாடினார்கள்.

ப்ருக்மேன் சூட் தொழிற்சாலை:

வளர்ந்து வரும் நாடுகளை இருக்கும் ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பொதுவாகவே மோசமான பணிச்சூழல் இருக்கும். அதனை மாற்றவேண்டி தொழிலாளர்கள் குரல்கொடுத்தால், அக்கோரிக்கைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்கு அர்ஜன்டைனாவில் இருக்கும் ப்ருக்மன் சூட் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. அர்ஜெண்டினா திவாலான நேரத்தில், முதலில் தொழிலாளர்களின் ஊதியத்தை குறித்த ப்ருக்மேன் தொழிற்சாலை முதலாளிகள், திடீரென முன்னறிவிப்பின்றி தொழிற்சாலையினை மூடிவிட்டு ஓடிவிட்டனர். முழுக்க பெண்களே வேலைசெய்துவந்த ப்ருக்மேன் தொழிற்சாலையினை முற்றுகையிட்டு, மீட்டு தொழிலாளர்களே நடத்தத்துவங்கினர். எல்லோருக்கும் ஒரே மாதியான ஊதியம், முதலாளிகள் என்று தனியாக யாருமில்லாமல் தொழிலாளர்களே முதலாளிகள் என்கிற மாற்றத்தினை ஏற்படுத்தினர். அர்ஜெண்டினாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது இச்செயல். மூடிய நிறுவனங்களை மீட்டு தொடர்ச்சியாக தொழிலாளர்களே நடத்தமுடியுமென்பதை நிகழ்த்திக்காட்டினர்.
நன்றாக நடந்துகொண்டிருந்த ப்ருக்மேன் தொழிற்சாலையினை, தொழிலாளர்கள் யாரும் நுழையமுடியாதபடி, முதலாளிகளின் வேண்டுகோளின்படி வேலிபோட்டு அடைத்துவிட்டனர் இராணுவத்தினர். இரும்புக்கதவுகளும் வெல்டிங் செய்யப்பட்டுவிட்டன. தொழிற்சாலையைச் சுற்றி பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதிர்ச்சியடைந்த ப்ருக்மேன் தொழிலாளர்கள் இராணுவ வலையத்தினருகே நின்றுகொண்டு முதலாளிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். ஒன்றிரண்டு நாட்களில், இச்செய்தி நாடுமுழுவதும் பரவி, ப்ருக்மேன் தொழிலாளர்களுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது. மூன்று நாட்களில், தொழிலாளர்களும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொழிற்சாளைமுன்பு திரண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, துப்பாக்கி குண்டுகளையும் தாண்டி இராணுவ வளையத்தினை உடைத்தனர். பலர் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், மீட்புப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் எதிராக, தொழிலாளர்களிடம் இருந்தது கொள்கையும் நம்பிக்கையும்தான். ஆனால் இறுதியில் மக்கள் போராட்டம் வெற்றிபெற்றது. பூட்டப்பட்ட கதவுகள் உடைக்கப்பட்டன. தொழிற்சாலை மீண்டும் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது.

தொழிற்சாலையினை மீட்கும் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஒரு தொழிலாளருக்கு புற்று நோய் வந்தபோது, அவருக்கான மருத்துவ செலவினை தொழிற்சாலையே ஏற்றுக்கொண்டது. முதலாளிகளின் கீழ் அந்நிறுவனம் இருந்திருந்தால், இதுபோன்ற மனிதநேய நடவடிக்கை என்பது அணுவளவும் சாத்தியப்பட்டிருக்காது. 

மீண்டும் அதிபர் தேர்தல்; மீண்டும் முதலாளிகள்...

நிறுவனங்களை மீட்கிற இவ்வியக்கமானது மிகவும் தீவிரமாகி, 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவ்வழியில் பயணிக்கத்துவங்கிவிட்டன. அழகான அனுபவங்களைக்கொண்ட ஒரு பெருமைமிக்க போராட்டத்தில், பெரிய தடைக்கல்லொன்று அவர்கள் முன்னே வந்துநின்றது. அவர்களது வேலையையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பறித்துக்கொண்டு எங்கோ ஓடிப்போன முதலாளிகள், மீண்டும் வந்து எல்லாவற்றையும் பறிக்க முயற்சிசெய்தார்கள். இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது அவர்களுக்கு.

இதோடுமட்டுமின்றி, நாட்டையே பன்னாட்டு முதலாளிகளிடம் அடகுவைத்துவிட்டு ஓடியொளிந்துகொண்ட முன்னாள் அதிபர் "கார்லோஸ் மேனம்", மீண்டும் மக்கள்முன்பு வந்து நிற்கிறார். தன்னுடைய தவறுகளையெல்லாம் உணர்ந்து திருந்திவிட்டதாகவும், இனி மக்களுக்காக உழைக்கத்தயாராக இருப்பதாகவும் ஊடகங்கள் வழியாக உற்சாகமாகப் பேட்டியளிக்கிறார்.

மேனம் வெற்றிபெற்று மீண்டும் அதிபராகிவிட்டால், தொழிலாளிகளிடமிருந்து தொழிற்சாலைகள் அனைத்தும் மீண்டும் பறிக்கப்பட்டு முதலாளிகளிடமே ஒப்படைக்கப்பட்டுவிடும். ஏனெனில் முதலாளிகள்தான் மேனம், மேனம்தான் முதலாளிகள் என்பது நாடறிந்த உண்மை.

முதலாளிகள் எல்லோரும் மேனமை சந்தித்து தங்களது முழு ஆதரவைத்தெரிவித்தும், தொழிற்சாலைகளை மீட்டுத்தருமாறு கோரிக்கையும் விடுத்தனர்.
"எங்கள் கனவுகள் உங்களது ஒட்டுப்பெட்டிகளுக்குள் அடங்காது."
என்கிற வாசகங்களுடன் தொழிலாளர்கள் தேர்தலைப் புறக்கணித்தும் மேனமை எதிர்த்தும் சுவர்களில் எழுதி பிரச்சாரம் செய்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலைப்போன்றே, மேனம் உள்பட அதிபர் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், நிறைய இடைத்தரகர்கள் மூலம் ஏராளமான வேலையில்லாத இளைஞர்களை பணிக்கமர்த்தி, பணத்தை தண்ணியாக செலவுசெய்து பிரச்சாரம் மேற்கொண்டனர். நடைபெறப்போகிற தேர்தல் தங்களது வாழ்க்கையினை ஒரே நாளில் மாற்றிவிடாதா என்றும், புதிதாக வரப்போகிற அரசாங்கம் எதையாவது செய்து நம்மைக் காப்பாற்றிவிடாதா என்றும் ஒருவித ஏக்கம், அர்ஜெண்டினா மக்களிடம் காணப்பட்டது. அதுவே மேனமிற்கான ஆதரவாக மக்களிடையே மாறியது.

மேனமிற்கு ஆதரவு பெருகுவது கண்டு, அதனை மேற்குலக கொள்ளையர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள, ஐ.எம்.எப். இயக்குனர் அனூப் சிங் (முன்னொருகாலத்தில் தற்போதைய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சிறப்பு ஆலோசகராக இருந்தவர்) அர்ஜென்டைனா தலைநகருக்கு வந்துசேர்ந்தார். அர்ஜென்டினா நாட்டின் கடனிற்கான வட்டியினை திருப்பி செலுத்துவதற்காக மேலும் ஒரு கடனை தரத்தயாராக இருப்பதாகவும் அறிவிக்கிறார். அதற்கு ஐ.எம்.எப். விதிக்கிற விலை மிக அதிகமாக இருந்தது. 'அரசுடைமையாக இருக்கிற துறைகளை எல்லாம் தனியார்மயமாக்க வேண்டும்', 'தண்ணீர், மின்சாரம் போன்றவற்றின் விலையினை மிக அதிகமாக உயர்த்திக்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' போன்றவற்றை கட்டளையாக முன்வைத்தது ஐ.எம்.எப். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியே சந்தித்து, இக்கோரிக்கைகளை வைத்தது அனூப் சிங் தலைமையிலான ஐ.எம்.எப். குழு.
(இதே போன்ற கட்டளையிகளை ஐ.எம்.எப். மற்றும் அதன் கூட்டாளிகள் எல்லோரும் சேர்ந்து, தற்போது திவாலாகிக்கொண்டிருக்கிற அயர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற  நாடுகளில் விதிப்பதை நாம் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் நுழைந்து அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைத்து, இயன்ற அளவிற்கு சுரண்டிக்கொண்டு போவதும், சில காலம் கழித்து மீண்டும் அதே நாட்டிற்கு "கடன்" என்கிற பெயரில் உள்ளே நுழைந்து சுரண்டலைத்தொடர்வதும் தொடர்கதையாகவே இருக்கிறது.)

அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலிருந்து இரண்டாவது சுற்றுக்கு இரண்டு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒரு கார்லோஸ் மேனம், மற்றொருவர் நெஸ்டர் கிர்ஸ்னர். இரண்டாவது சுற்று தேர்தல் நெருங்கும் நேரத்தில், நாட்டு மக்களிடையே மேனமிற்கு கடும் எதிர்ப்புகள் வரத்துவங்கின. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் மேனம் தோற்றுவிடுவார் என்று கணித்தன. நாடெங்கிலும் மேனம் என்கிற பெயரையே மக்கள் வெறுத்தனர். தனது வாழ்நாளில் எந்தத்தேர்தலில் தோற்றிருக்காத மேனம், இத்தேர்தலில் தோற்றுவிடுவோமே பயம்காரணமாக தேர்தலிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். மக்கள் விரோத மேனம், தேர்தலுக்கு முன்பாகவே தோற்கடிக்கப்பட்டுவிட்டார். இதன்மூலம், நெஸ்டர் கிர்ஸ்னர் அர்ஜண்டைனாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட தொழிற்சாலைகள் - இன்றைய நிலை:

அர்ஜன்டைனாவில் தொழிலாளிகளால் மீட்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 300 யும் தாண்டிவிட்டது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் அத்தொழிற்சாலைகளில் முதலாளிகளாக இருக்கிறார்கள். ஒவ்வொரு தொழிற்சாலையாக சட்டப்பூர்வமாக தொழிலாளர்களுக்கு சொந்தமாகிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினாவின் தற்போதைய அதிபர் கிறிஸ்டினா கிர்ஸ்னர் புதியதாக "ஆலை மூடல்" சட்டமொன்றை நிறைவேற்றினார். 'அர்ஜெண்டினாவில் ஒரு தொழிற்சாலையினை அதன் முதலாளியினால் நடத்தமுடியாமற்போனால், அத்தொழிற்சாலையின் தொழிலாளர்களே ஏற்று நடத்தலாம்' என்பதுதான் அச்சட்டத்தின் முக்கிய அம்சம். இதன்மூலம் ஏற்கனவே தொழிலாளர்களால் மீட்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் தொழிற்சாலைகள் அனைத்தும் சட்டப்படி தொழிலாளர்களின் சொத்தாக மாறிவிடும்.
தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு நடத்தப்படுகிற நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்காக உயர்கிறது. தனியார் முதலாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டு தொழிலாளர்களின்வசம் நிறுவனங்கள் கைமாறுவது புதிதல்ல என்றாலும், ஒரு சோசலிச அரசு அதனைச்செய்வதற்கு பதிலாக முதன்முறையாக கீழிருந்து மேலாக உருவாகிய மாற்றமிது. ஒவ்வொரு கடைகளிலும், நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்களே முன்னின்று ஏற்படுத்திய மாற்றம்.

இன்று பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிற அயர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் இன்ன பிற நாடுகளிலெல்லாம் ஒருபுறம் மக்கள் தெருவுக்கு வந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், ஐ.எம்.எப்., யூரோப்பியன் யூனியன் மற்றும் அதன் சகாக்கள் மேலும் கடன் வழங்குவது குறித்தும், அந்நாடுகளில் தீவிர 'சிக்கன நடவடிக்கைகள்' எடுப்பது குறித்தும் பேசிக்கொண்டிருக்கின்றன. அந்நாடுகளில் மக்கள் அனைவரும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்பும் வங்கிகளின் முன்பும் நின்றுகொண்டு போராடுவதைவிடுத்து, அக்கட்டிடங்களுக்குள்ளே சென்று அனைத்தையும் ஆக்கிரமித்து/மீட்டெடுத்து மக்களுக்கானதாக மாற்றி போராடவேண்டும்... நெருக்கடியில்லாத பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது எப்படி என்பதனை ஐ.எம்.எப். மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பாடம் கற்பிக்கவேண்டும்....


Monday, April 16, 2012

கொலைகார கோக் (The Coca Cola Case - Film)

கோக் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய இலாபத்தினை அதிகரிப்பதற்காக "எதனைச் செய்வதற்கும்" தயாராக இருக்கின்றன. அதற்காக அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வெவ்வேறு விதமான உத்திகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவின் தேசியபானம் என்று முழங்கியபடியே அமெரிக்க போர்வீரர்களுக்கு ஒருபுறம் விற்றுக்கொண்டே, மறுபுறம் இட்லருக்கு நெருக்கமானவர்களை நிறுவனத்தின் உயர்பொறுப்புகளில் நியமித்து , நாஜிப்படைக்கும் தங்களது பானத்தை விற்றார்கள்.


இஸ்ரேலில் கோக் பானத்தை விற்றால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கும் மக்கள், 'கோக்'கை புறக்கணித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில், இஸ்ரேலில் 'கோக்'கை பல ஆண்டுகளாக விற்காமலே இருந்தார்கள். இப்படியாக அவர்களின் 'வியாபார தந்திரங்களை' சொல்லிக்கொண்டே போகலாம்.


வியாபார தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தி எவ்வளவு அதிகமாக இலாபம் சம்பாதித்தாலும், தொழிலாளர்களை வெறும் அடிமைகளாக நடத்துவதென்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறது கோக் நிறுவனம். கோக் நிறுவனத்தின் இலாபம் பல்லாயிரக்கணக்கான கோடிகளில்  இருந்தாலும், அதற்குக் காரணமான (கேள்வி கேட்க ஆளில்லாத ஏழை நாடுகளின்) ஊழியர்களோ மிக மோசமான பணிச்சூழலில், மிகமிகக்குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு வேலைசெய்கிற நிலைதான் இன்றளவும்.

'கோக் கேஸ்' என்கிற திரைப்படத்தின் இயக்குனர்கள் கொலம்பிய நாட்டிலிருக்கும் கோக் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞர்களை தனியாக சந்தித்து சில கேள்விகள் கேட்கிறார்கள்.
ஆவணப்பட இயக்குனர் : "கோக் நிறுவனத்தில் வேலை செய்ய என்ன வேண்டும்?"
கோக் நிறுவன ஊழியர்கள் : "முதலில் யாரேனும் ஒருவர் நமக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும். பிறகு, கோக் பாட்டில்களை டிரக்கில் எடுத்துக்கொண்டு செல்லும் பாதையில், என்ன நடந்தாலும் நாங்கள்தான் பொறுப்பு. வழியில் நம்மை யாராவது தாக்கினாலோ, கோக் பாட்டில்கலையோ அல்லது நம்முடைய பணத்தையோ யாரேனும் கொள்ளையடித்தாலோ, அதற்கும் நாங்களே பொறுப்பு. எங்களுடைய சொந்தப் பணத்தைதான் இழக்கவேண்டும். எங்களோடைய காப்பீட்டிற்கு, சீருடைக்கு எல்லாம் நாங்களே பணம் செலுத்த வேண்டும். இன்னும் சொல்லப்போனால், கோக் நிறுவனத்தில் ஊழியர்களாக இருந்தாலும், கோக் பாட்டில்கள் கொண்டு செல்லும் டிரக்கிற்கு நாங்கள் தினமும் வாடகையும் செலுத்தவேண்டும்."
ஆவணப்பட இயக்குனர் : "கோக் நிறுவனம் என்னதான் உங்களுக்குத் தருகிறது?
கோக் நிறுவன ஊழியர்கள் : (நீண்ட நேரம் யோசித்தபிறகு) "எதுவுமே இல்லை... எல்லாவற்றிற்கும் நாங்களே பொறுப்பு...கோக் நிறுவனம் எதுவுமே வழங்குவதில்லை."
ஆவணப்பட இயக்குனர் : "நீங்கள் சங்கம் அமைத்திருக்கிறீர்களா?
கோக் நிறுவன ஊழியர்கள் : "சங்கத்தில் எல்லாம் சேரவே முடியாது. சேர்ந்தால், வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள். நிர்வாகத்தைப் பொறுத்தவரை, சங்கம் இருக்கவே கூடாது."

தொழிற்சங்கம் அமைத்தால் "ஆயுதம் ஏந்திய அடியாட்களை" வைத்து ஊழியர்களைக் "கொல்வது", தொழிற்சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினரை கடத்திவைத்து மிரட்டுவது/கொல்வது என மனிதவுரிமை மீறல்களின் எல்லைக்கே செல்கிற இலாபவெறி பிடித்தவர்கள்தான் இவர்கள்....

கொலம்பியாவில் மட்டும், பன்னாட்டு நிறுவன முதலாளிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை அழிக்கும்நோக்கில் 'ஆயுதம் ஏந்திய அடியாட்கள்' மூலமாக 470 தொழிற்சங்கவாதிகளை கொன்றிருக்கிறார்கள். சராசரியாக வாரத்திற்கு ஒரு தொழிற்சங்கவாதி என்கிற அளவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சங்கவாதிகளின் கொலைகளின் எண்ணிக்கைப்படி உலகிலேயே முதன்மை நாடாகத் திகழ்கிறது கொலம்பியா. கொலம்பியாவிலிருக்கும் கோக் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்போரையும் அவர்களது குடும்பத்தினரையும் கொன்றுகுவிப்பது, கடத்துவது, கடத்தி சித்திரவதைக்குள்ளாக்கிக் கொல்வது போன்றவை தொடர்கதையாகவே இருந்துவருகிறது

குவாட்டமாலா என்கிற நாட்டிலுள்ள கோக் நிறுவன தொழிற்சாலையில், தொழிற்சங்கத்தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார். அதன்பிறகு அவருக்கு பதிலாக வேறொருவரை தொழிற்சங்கத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள். அவரும் கொல்லப்பட்டார். இப்படியாக அத்தொழிற்சாலையில் தொடர்ச்சியாக 8 தொழிற்சங்கத் தலைவர்களைக் கொன்றிருக்கிறார்கள். அக்கொலைகளுக்கும் தங்களுக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்று இன்றளவும் சொல்லிவருகிறார்கள் கோக் நிறுவனத்தினர்.

திரைக்கதை:

தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட கோக் நிறுவனத்தில், அவற்றை மீட்டெடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இசிட்ரோ என்கிற தொழிற்சங்கத் தலைவரை "ஆயுதமேந்திய அடியாட்கள்" மூலமாக கொன்றது கோக் நிறுவனம்.

தொழிற்சங்கம் அமைத்த குற்றத்திற்காக இசிட்ரோவையும் சேர்த்து இதுவரை ஏராளமானோரை ஆயுதமேந்திய அடியாட்களை வைத்து கொலை செய்திருக்கிறார்கள்.

இசிட்ரோவின் சகோதரர் : "நானும் என்னுடைய சகோதரர் இசிட்ரோவும் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளுக்காக சினல்டிரைனல் தொழிற்சங்கம் சார்பாக கோலா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிற குழுவில் இடம்பெற்றிருந்தோம். ஒரு நாள் தொழிற்சாலையின் வாயிலில் நின்றுகொண்டிருந்தவர்களிடம், 'இங்கே இசிட்ரோ யார்?' என்று சில அடியாட்கள் கேட்டிருக்கிறார்கள். அந்நேரம் கோக் பானங்களை ஒரு ட்ரக்கில் ஏற்றிவிட்டு தொழிற்சாலையின் கதவினைத் திறந்திருக்கிறார் எனது சகோதரர். அவ்வேளையில் உள்ளே நுழைந்து எனது சகோதரை ஒன்பது முறை சுட்டார்கள். சுட்டுவிட்டு இசிட்ரோவை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்."
இசிட்ரோவின் சகோதரர் : "தொழிற்சங்கம் துவங்கியதிலிருந்தே எங்களுக்கு எல்லாப் பிரச்சனைகளும் வரத்துவங்கிவிட்டன. தொழிற்சங்கத்தை ஒழிப்பது ஒன்றுதான் நிர்வாகத்தின் குறிக்கோள். நவம்பர் 30 ஆம் தேதி நாங்கள் கொடுத்த கோரிக்கையினை பரிசீலிக்க டிசம்பர் 5 ஆம் தேதி வரை அவர்களுக்குக் கெடு இருந்தது. எங்களுடைய கோரிக்கைக்கு பதிலடியாக, கோரிக்கை வைத்தவர்களில் ஒருவரையே கொன்றிருக்கிறார்கள். அவர்களின் அடுத்த குறி நானாகத்தான் இருந்தேன். என்னுடைய சகோதரரை கொன்று துவங்கிய அவர்களின் மனித வேட்டை, அடுத்து மற்றொரு தொழிலாளியான அடோல்போ கார்டோனாவையும் தாக்கினார்கள். ஆனால் அவர் தப்பித்துவிட்டார்."

நீண்ட நெடுங்காலமாக நடக்கிற இது போன்ற எண்ணற்ற மனிதவிரோதச் செயல்களை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது கொலம்பியாவில் இருக்கும் 'சினல்டிரைனல் தொழிற்சங்கம்'. அதனால் கோக் நிறுவனத்தினர் சினல்டிரைனல் தொழிற்சங்கத்தின் தலைவர் 'ஜவீர் கொரியாவை' இரண்டு முறை கொல்ல முயற்சித்திருக்கிறார்கள், அவரது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் கடத்த முயன்றிருக்கிறார்கள், பல பொய்வழக்குகளை போட்டு பத்து முறைக்கும் மேலாக அவரை நீதிமன்றத்திற்கு வரவைத்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் நிலையினை கொலம்பிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்விதப்பலனும் இல்லை. 

இச்சூழலில்தான், அமெரிக்க நிறுவனமொன்று வேறொரு நாட்டில் தவறிழைத்தால் அதனை அமெரிக்க நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பளிக்கிற "ஏலியன் டோர்ட் க்ளைம்ஸ் ஆக்ட்" (ATCA ) என்கிற சட்டம்குறித்து கேள்விப்படுகிறது சினல்டிரைனல் தொழிற்சங்கம். அதற்காக மூவரின் உதவியை நாடுகிறார் சினல்டிரைனல் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜவீர் கொரியா.

'டேனியல் கொவலிக்' - வழக்கறிஞர், யூனைடட் ஸ்டீல் வொர்க்கர்ஸ் ஆப் அமெரிக்கா, 
'டெர்ரி கொலிங்க்ஸ்வொர்த்' - வழக்கறிஞர், சர்வதேச தொழிலாளர் நல நிதியம்,
'ரே ரோஜர்ஸ்' - தொழிலாளர் நல ஆர்வலர்  

ஆகிய மூவரும் களமிறங்குகிறார்கள். 

முதல் இருவரும் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிப்பதும், மூன்றாமவர் கோக் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத மனிதவுரிமை மீறல்களை மக்களிடையே "கொலைகார கோக்" என்கிற பிரச்சாரம் மூலமாக கொண்டுசெல்வதென்றும் முடிவெடுக்கிறார்கள்.

தொழிற்சங்கத்தில் சேர்ந்தாலே கொல்வது, அடியாட்களை வைத்து மிரட்டி வேலையைவிட்டு அனுப்பியது, அடித்து சித்திரவதைப்படுத்துவது, குடும்ப உறுப்பினர்களைக் கடத்துவது போன்ற குற்றங்களை முன்வைத்து கோக் நிறுவனத்தின்மீது நான்கு பிரிவுகளில் அமெரிக்காவில் வழக்கு தொடுத்தனர்.

டேனியலும் டெர்ரியும் கோக்கிற்கு எதிராக வழக்கை நடத்துவதில் மும்முரமாக இருக்க, கோக்கினை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்யத்துவங்கினார் ரே ரோஜர்ஸ். அமெரிக்காவில் அட்லாண்டா, வில்மிங்டன் போன்ற மாகாணங்களில் தெருவில் இறங்கி போராடத்துவங்கினர். கோக் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு முழங்குவதும் அதில் ஒரு பகுதி. மக்களின் மனதைத்தொடுகிற விளம்பரங்களைத் தயாரித்து, கோக் நிறுவனம் எவ்வாறு மக்களின் மனங்களில் இடம்பெறுகிறதோ, அதே போன்று கோக் நிறுவனத்தின் வண்டவாளங்களை மக்களின் முன் தண்டவாளத்தில் ஏற்றவேண்டுமென நினைக்கிறார் ரே. கோக் நிறுவனத்தின் மனிதவிரோத செயல்களை எடுத்துரைக்க, "கொலைகார கோக்" என்கிற இணையதளத்தை உருவாக்குகிறார்கள். 

வில்மிண்டன் நகரிலுள்ள டூபுன்டூ என்கிற ஓட்டலில் கோக் நிறுவன பங்குதாரர் கூட்டம் நடந்தது. அவ்வோட்டலின் முன்பும் பெரும்திரளாக 
மக்கள் திரண்டு "கொலைகார கோக்" பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
பங்குதாரரின் கூட்டத்தில் கோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நெவிலே இஸ்டேல் பேசுகையில், "கொலம்பியாவில் தொழிற்சங்க உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கோக் நிறுவனம்தான் காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள். நான் திறந்த மனதுடன் அது குறித்து விசாரணை நடத்தினேன். கொலம்பியாவின் நீதிமன்றமும் காவல்துறையும் சொல்வதைப்போல அக்கொலைகளுக்கும் கோக் நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்புமுமில்லை என்கிற முடிவுக்கும் வந்திருக்கிறேன்" என்று தங்கள் நிறுவனத்தின் குற்றச்செயல்களை ஒப்புக்கொள்ளக் கூட மறுக்கிறார்.

கொலம்பியாவில் கோக் நிறுவனத்திற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் என்ரிக் டோரசை சந்திக்கிறார் டேனியல்.
வழக்கறிஞர் என்ரிக் டோரஸ் : "சில நேரங்களில் கோக் பானங்களை ஏற்றிச்செல்லும் ட்ரக்கில்கூட தொழிற்சங்க உறுப்பினர்கள் கொள்ளப்பட்டு கிடப்பார்கள். சில நேரம் கோக் நிறுவனத்தின் உள்ளேயே சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தாங்கள் பொறுப்பில்லை என்றுமட்டும் எப்போதும் சொல்லிவருகிறார்கள். இவ்வாறு இறந்த எந்தத்தொழிலாளியின் குடும்பத்திற்கும் எவ்வித பொருளாதார உதவியும் செய்ததில்லை கோக் நிறுவனம். இதையெல்லாம் அமெரிக்காவில் நீங்கள் வாதாடப்போகும் வழக்கில் சேர்த்து அம்மக்களுக்கு நட்டஈடு வாங்கிக்கொடுங்கள்."

"கொலைகார கோக்" என்கிற பிரச்சாரம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது கண்டு, கோக் நிறுவனம் சற்றே பயம்கொள்ளத்துவங்கியது. கோக் நிறுவனம் தொழிலாளர் விரோதச் செயல்களை செய்கிறதா இல்லையா என்பதனை ஐ.நா. சபையின் ஒரு அங்கமான "சர்வதேச தொழிலாளர் அமைப்பு" விசாரணை செய்யும் என்று கோக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவிக்கிறார். (ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அமெரிக்காவிற்கான பிரதிநிதி "எட் போட்டர்" என்பவர் கோக் நிறுவனத்தின் சர்வதேச தொடர்பு இயக்குனராக இருக்கிறார்). பல மாதங்கள் கழித்து ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பில் விசாரித்துப்பார்த்தால், கோக் நிறுவனம் மீது விசாரணை நடத்தக்கோரி எவ்வித கோரிக்கையும் தங்களுக்கு  வரவேயில்லை என்கிறார்கள். ஆக இதுவும் கோக் நிறுவனத்தின் விளம்பர யுக்திதான் என்பதனை ரே ரோஜர்ஸ் புரிந்துகொள்கிறார்.

கோக் நிறுவனத்தின் மீதான இவ்வழக்கு குறித்து எந்த ஊடகமும் வாய்திறக்காத சூழலில், கொலம்பியாவில் மிக அதிகமான மக்களால் வாசிக்கப்படும் "எல் டியம்போ" என்கிற பத்திரிகை ஒரு கவர் ஸ்டோரி எழுத முன்வருகிறது. இரண்டு தொழிற்சங்கத் தலைவர்களைக் கொள்வதற்காக "ஆயுதம் ஏந்திய அடியாட்களுக்கு" பணம் கொடுத்ததை கண்ணால் பார்த்த சாட்சியும் டேனியலுக்கு கிடைக்கிறது. வழக்கிற்கு பயன்படுமென்பதால் அவரையும் அழைத்துக்கொண்டு அமெரிக்க செல்கிறார் டேனியல்.

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்குகிறது....
தலைமை நீதிபதி : "அமெரிக்க நிறுவனங்கள் கொலம்பியாவில் சட்டவிரோதமாக ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு பணம் கொடுத்து தொழிற்சங்க உறுப்பினர்களை கொன்றிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகளை இப்போது விசாரிக்கப்போகிறது இந்நீதிமன்றம். கொலம்பிய வழக்கறிஞரை முதலில் பேச அழைக்கிறேன்."
கொலம்பிய வழக்கறிஞர் : "நான் கொலம்பியாவில் கடந்த 16 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறேன். இப்பதினாறு ஆண்டுகளில் என்னுடன் வேலை பார்த்த பத்து சக தொழிற்சங்கவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் யாவும் தங்களுடைய இலாபத்தினை அதிகரிக்க, தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை கொல்வதை வழக்கமாகவே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் எட்டு தொழிற்சங்கவாதிகளைக் கொன்றிருக்கிறார்கள் கோக் நிறுவனத்தினர்"
தலைமை நீதிபதி : "அடுத்தபடியாக கொலம்பியாவின் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாகவும் கோக் நிறுவனத்திற்கு எதிராகவும் வாதாட வந்திருக்கும் 'யூனைடட் ஸ்டீல் வொர்க்கர்ஸ் ஆப் அமெரிக்காவைச்' சேர்ந்த டேனியலை பேச அழைக்கிறேன்."
டேனியல் : "2001 மார்ச் 12 இல் கொலம்பியாவில் பல்வேறு சுரங்கத்தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு சென்ற நிறுவனத்தின் பேருந்தை "ஆயுதம் தாங்கிய அடியாட்கள்" நிறுத்தி பேருந்தினுள்ளே நுழைந்தார்கள். தொழிற்சங்கத்தலைவர் (வால்மோர் லோகார்னோ) மற்றும் தொழிற்சங்கத் துணைத்தலைவர் (விக்டர் ஆர்காசிடஸ்) ஆகியோரின் பெயரைச் சொல்லி பேருந்திலிருந்து வெளியே வரச்செய்தார்கள். வால்மோர் லோகார்னோ அதே இடத்தில் சுட்டுக்கொன்றார்கள். விக்டர் ஆர்காசிடசிடம் நிர்வாகம் பேச விரும்புகிறது என்று சொல்லி அழைத்துச்சென்றார்கள். ஆனால் ஒரு 20 மைல் தொலைவில் ஆர்காசை சித்திரவதை செய்து கொன்றுபோட்டிருக்கிறார்கள்."

டேனியல் பேசிக்கொண்டிருக்கும்போதே நீதிபதி இடைமறித்தார்....
நீதிபதி : "நீங்கள் மேலும் தொடர்வதற்கு முன், ஒன்று சொல்ல விருப்பபடுகிறேன். உங்கள் அலுவலக சுவற்றில் பெரிய அளவிலான 'சே குவேரா' வின் புகைப்படம் ஒட்டியிருக்கிறீர்கள். சே குவேரா மாதியான ஆட்களையெல்லாம் நீங்கள் மதிக்கிறீர்களா?....."
டேனியல் : "ஆமாம்"
நீதிபதி : "டேனியல்! சே குவேராவை பின்பற்றுவதால், இன்று நீங்கள் உங்களுடைய நம்பகத்தன்மையினை இழந்துவிட்டீர்கள்"

வழக்கை திட்டமிட்டு திசைதிருப்பி அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி அவமானப்படுத்தமுயன்றதை டேனியலால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்து டேனியல் பேசுகிறார்...
டேனியல் : "சே குவேராவின் போஸ்டருக்கு முன்னாள் நான் இருப்பதைப் போன்ற புகைப்படத்தைக்காட்டி கேள்வி கேட்டனர்.... அக்கேள்விக்கு பதில் சொல்லமுடியாதென மறுத்திருக்கமுடியும். ஆனால் நான் ஒப்புக்கொண்டேன். எல்லாவற்றிலும் இல்லையென்றாலும்கூட, "சமூக நீதிக்காக" சே குவேரா கண்ட கனவுகளை நான் மதிக்கிறேன். பலவற்றில் அவரின் கருத்துகளை ஆமோதிக்கிறேன். அதற்காக இவ்வழக்கில் என்னுடைய நம்பகத்தன்மையின் மீது கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்? நான் இப்போது வீட்டிற்கு போகணும். என்னுடைய குழந்தைகளோட விளையாடனும்.. இப்போதைக்கு வேறெதையும் யோசிக்கமுடியவில்லை.."
என்று சொல்லியபடியே கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை ஒளித்துவைத்துக்கொண்டே நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறுகிறார் டேனியல்.

எல்லோரும் எதிர்பார்த்தபடியே, கோக் நிறுவனத்திற்கும் கொலம்பியாவில் கோக் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளிகளின் கொலைகளுக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்றே வழக்கில் தீர்ப்பு வழங்கினர் நீதிபதிகள். 

நீதிமன்ற தீர்ப்பினாலெல்லாம் சோர்ந்து விடாமல், "கொலைகார கோக்" பிரச்சாரத்தை தொடர்ச்சியாக உலக மக்களிடையே கொண்டு செல்கின்றனர். "கொலைகார கோக்" பிரச்சாரத்தை பெரும் தலைவலியாக நினைக்கத்துவங்கியது கோக் நிறுவனம். அதனால் கொலம்பியாவில் தொழிற்சங்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சினல்டிரைனல் தொழிற்சங்கம், டேனியல், டெர்ரி மற்றும் ரே அடங்கிய குழுவினை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கோக் நிறுவனம் அழைக்கிறது.

பேச்சுவார்த்தையின்போது, "கொல்லப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் என்றால் இழப்பீடு நிறைய கொடுக்கலாம். ஆனால் அவர்கள் கொலம்பியர்கள்தானே. அதனால் மிகச்சிறிய அளவில்தான் இழப்பீடு கொடுக்கமுடியும்" என்று சொல்லி இதுவரை கொலம்பியாவில் கொல்லப்பட்ட அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களின் குடும்பத்திற்கும் சேர்த்து மிகச்சிறிய தொகையொன்றைத்தருவதாக கோக் நிர்வாகம் தெரிவிக்கிறது.

டேனியல் உள்பட அனைவரும் இதனை வன்மையாகக்கண்டித்து பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுகிறார்கள். "கொலைகார கோக்" பிரச்சாரத்தை உலகளாவிய பிரச்சாரமாக மாற்றி, இனிமேல் கோக் நிறுவனம் உலகில் எங்கு குற்றமிழைத்தாலும் உடனே வழக்கு தொடுப்பது என்றும் முடிவெடுக்கிறார்கள். 

துருக்கி, குவாட்டிமாலா, இந்தியா என எங்கெல்லாம் அவர்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களோ அவையனைத்தையும் வழக்காக மாற்றத் திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் தொழிலாளர்களின் பிரச்சனையின் வீரியத்தை உலகறியச்செய்வதுதான் நோக்கம். (கோக்கின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக துருக்கி நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் தொடுத்த வழக்கில், துருக்கி அரசும் நீதிமன்றமும் தொழிலாளர் விரோத போக்கினால், கோக் நிறுவனம் கேள்விகேட்பாரின்றி தொடர்கிறது தன்பணியினை.) துருக்கியில் தொழிலாளர்களின் பிரச்சனையையும் அமெரிக்க நீதிமன்றத்தில் கொண்டுவர முடிவெடுக்கிறார்கள் டேனியல் மற்றும் குழுவினர். இப்படியாக பல வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது கோக் நிறுவனம். 

மிகப்பிரபலமான வழக்கறிஞர்கள் பலரை வைத்துக்கொண்டு வாதாடும் கோக் நிறுவனத்திற்கு வழக்கு செலவு பல மில்லியன் டாலர்களாக உயர்ந்து கொண்டிருந்தது. ஒரு புறம் "கொலைகார கோக்" பிரச்சாரமும் மறுபுறம் பல்வேறு வழக்குகளால் உயரும் செலவுகளும், கோக் நிறுவனத்திற்கு தலைவலியாகவே மாறுகிறது.

கோக் நிறுவனத்திற்கு எதிராக இன்றைய தலைமுறை மாணவர்களை கிளர்ந்தெழச் செய்யவேண்டுமென்பதற்காக ரே ரோஜர்ஸ் ஒவ்வொரு பல்கலைக்கழகமாக, ஒவ்வொரு கல்லூரியாகச் சென்று "கொலைகார கோக்" பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவர் உரையாற்றுகிற நிகழ்வில் பங்கெடுக்கிற மாணவர்களுக்கு கோக் நிறுவனம் இலவசமாக கோக் பானங்களை வழங்கியும், மாணவர்களின் படிப்பிற்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தந்திரமாக அறிவித்தும், தன்னுடைய கொலைகார பிம்பத்தை மாற்ற முயற்சிக்கிறது. 

கோக் நிறுவனம் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. இம்முறை கொலம்பியாவில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நியாயமான இழப்பீடு தர முன்வருகிறது கோக் நிறுவனம். ஆனால் அதற்காக கோக் நிறுவனத்திற்கு தொழிற்சங்கங்கள் செய்யவேண்டியது,
"கோக் நிறுவனத்தில் இருக்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் கலைக்கப்பட வேண்டும்."
"கோக் நிறுவனத்தில் வேலைசெய்யும் தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக வேலையை விட்டு விலக வேண்டும்."
"கோக் நிறுவனம் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று பிரச்சாரம் செய்யவே கூடாது"
"குறிப்பாக 'கொலைகார கோக்' பிரச்சாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்"
"நெஸ்லே, பிபி, ஒக்சிடேண்டல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்தும் குரலெழுப்பக் கூடாது"

கோக் நிறுவனம் முன்வைத்த இவ்வுடன்பாட்டினை அறிந்த சினல்டிரைனல் தொழிற்சங்கத்தினர் அதிர்ந்து போகின்றனர். இந்த ஒட்டுமொத்த போராட்டமே, தொழிலாளிகளின் நியாயமான அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத்தான். ஆனால் கோக் நிறுவனமோ, பணத்தைக் கொடுத்து அனைத்தையும் வெட்டியெறிய முயற்சிக்கிறது. 

சினல்டிரைனல் தொழிற்சங்கம் சார்பாக பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட எட்கர் பேஸ் கடும் கோபத்துடனேயே அமெரிக்க வழக்கறிஞர்களிடம் தன் கருத்தை முன்வைக்கிறார்....
எட்கர் பேஸ் : "தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடிய தொழிலாளிகளின் பிணத்தின் மீது பணம் பார்க்கிற எண்ணமில்லை எங்களுக்கு. கடந்த காலத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு கோக் நிறுவனம் இழப்பீடு கொடுக்கிற அதேவேளையில், இக்குற்றங்களையெல்லாம் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்ளவும் வேண்டும். தொழிற்சங்க உறுப்பினர்களை கொன்றதன்மூலம் எவ்வாறு அவர்கள் பயனடைந்தனர் என்பதையும் வெளிப்படையாக சொல்லவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், அவர்கள் கொடுக்கிற எந்தப்பணமும் எங்களுக்குத் தேவையில்லை."
எட்கர் பேஸ் : "நிரந்தமில்லா வேலை, உழைப்பிற்கு சம்பந்தமில்லாத குறைவான ஊதியம், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுப்பு போன்றவற்றை பரவலாக்கும் புதிய தாராளமயக்கொள்கைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில் நாம் வெற்றி பெறுவது மிக முக்கியமானதாகும். இப்பேச்சுவார்த்தைகள் எல்லாமே வெறும் பொருளாதாரப் போராட்டம் குறித்ததல்ல; அரசியல் போராட்டம்"
எட்கர் பேஸ் : "உலகளவில் கோக் நிறுவனம் மீது போடப்பட்டிருக்கிற அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டு 'கோக் ஒரு நல்ல மதிக்கத்தக்க நிறுவனம்' என்று ஊடகத்தின் முன்வந்து சான்றிதழ் வழங்க வேண்டுமாம். வெறும் பணம்தான் பிரச்சனை என்றால், காலி பெட்டியை கொண்டு வந்து அவர்கள் கொடுக்கிற பணத்தை அள்ளிப் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பியிருப்போம்"
எட்கர் பேஸ் : "கோக் நிறுவனத்தோடு நடந்த இப்பேச்சுவார்த்தையின் போதே, எங்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருந்தது. எங்களில் பல தொழிலாளிகளை வேலையை விட்டு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். பல தொழிலாளிகளின் குடும்பங்களை வீட்டிற்கே வந்து மிரட்டியிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளை கடத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நாங்கள் எதற்காக அவர்களுடன் உடன்பாட்டுக்கு வரவேண்டும். உலகளவில் கோக் நிறுவனத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிற வேளையிலேயே இவ்வளவு மோசமான நிலைதான் எங்களுக்கு. நாங்கள் மட்டும் அவர்கள் முன்மொழிகிற உடன்பாட்டினை ஒப்புக்கொண்டுவிட்டால், அன்றே நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிடுவோம்"

இவையெல்லாம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் கோக் நிறுவனம் தன்னுடைய தொழிலாளர் விரோத போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் சிலநூறு தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், சித்திரவதைக்குப்பின் கொல்லப்படுவதும் தொடர்கிறது. 

"கொலைகார கோக்" பிரச்சாரத்தின் பலனாக, மிச்சிகன் பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம் உள்பட உலகெங்கிலுமுள்ள நூற்றுக்கணக்கான கல்விநிலையங்களில் கோக் பானங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனாலும் முன்னெப்போதையும்விட அதிக கவனத்துடனும் மிகுந்து உத்வேகத்துடனும் போராட வேண்டிய காலகட்டமிது என்பதை சினல்டிரைனல் தொழிற்சங்கத்தின் தலைவர் நமக்கு மிகச்சரியாக நினைவூட்டுகிறார்...
"இப்போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவது அவசியம். நாம் தோற்றுப்போவோமேயானால், முதலில் இழக்கப்போவது நமது தொழிற்சங்கங்களை; அடுத்தது நாம் இழக்கப்போவது நமது வேலையினை; அதற்கடுத்தது நாமெல்லாம் இழக்கப்போவது நமது வாழ்க்கையை, உயிரை.... எனவே இப்போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவது அவசியம்."





கோக் ஒரு கொலைகார பானம் என்பது அதன் தரத்தில் மட்டுமல்ல; தயாரிக்கிற விதத்திலும்தான்...

தொழிலாளர் விரோத, மனிதவிரோத கோக் பானத்தை புறக்கணித்து, நம்முடைய உழைப்பாளர் சகோதரர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம்...


- இ.பா.சிந்தன் 

Sunday, March 4, 2012

நமது செல்போன்களில் படிந்திருக்கும் காங்கோ மக்களின் இரத்தம் (Blood in Mobile - Film)


காங்கோவின் வரலாறு 
1885 ஆம் ஆண்டில் பெல்ஜியம் மன்னர் இரண்டாம் லியோபோல்ட், காங்கோ நாட்டினை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக ஆளத்துவங்கினார். அப்போது காங்கோ நாட்டிலிருந்து அம்மக்களை வைத்தே ரப்பரை எடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று காசு பார்த்தார் அந்த மன்னர். அதன்மூலம் உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்ந்தார். தொழிற்புரட்சியின் ஆரம்ப காலமது. கார் தயாரிப்புகளும் அதிவேக வளர்ச்சியை அடையத்துவங்கிய நாட்களும் அதுவே. அதனால் ரப்பரின் தேவை அதிகமாக இருந்தது. காங்கோவின் ரப்பரை நம்பியே ஒட்டுமொத்த கார் தயாரிப்பு தொழிலும் இருந்தது என்றுகூட சொல்லலாம். அந்த அளவிற்கு காங்கோவின் ரப்பர் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. 

ஒவ்வொரு காங்கோ குடிமகனுக்கும் குறிப்பிட்ட அளவு ரப்பரை எடுக்கவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட அளவு ரப்பரை எடுத்து கொடுக்காவிட்டால், அவர்களை கொல்ல வேண்டும் என்பது லியோபோல்டின் உத்தரவு. ஒரு கட்டத்தில் ஏராளமான மக்களை கொன்று குவிக்கத்துவங்கியது லியோபோல்டின் இராணுவம். அந்த அளவிற்கு துப்பாக்கி குண்டுகள்கூட இல்லாத நிலையில், எப்படி வேண்டுமானாலும் அம்மக்களை கொள்ளலாம். ஆனால் கொன்றவர்களின் வலது கையினை ஆதாரமாக எடுத்துவர வேண்டுமென்கிறான் மன்னன். காங்கோவிலிருந்து ரப்பரை எடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பதற்கென்றே அபிர் என்கிற நிறுவனமும் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளுக்கு காங்கோ ரப்பரை ஏற்றுமதி செய்தது.  


காங்கோ மக்களை கொன்றும், பஞ்சத்தை உருவாக்கியும் சுமார் 20 ஆண்டுகளில் மட்டும், காங்கோவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி முதல் 3 கோடி வரை இருக்கலாம் என்று ஆடம் ஹோக்ஸ்கில்ட், இசிடோரே, பிரெட்ரிக் வர்தம் ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

25 ஆண்டுகள் வரை நடந்த லியோபோல்ட் ஆட்சியினை, உலகின் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பினை சமாளிக்கமுடியாமல் தன்னுடைய சொந்த கட்டுப்பாட்டில் இருந்த காங்கோவை பெல்ஜியம் அரசின் கீழ் கொண்டுவந்தார். ஆட்சிதான் மாறியதே தவிர அவலங்கள் மாறவில்லை. மேலுமொரு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெல்ஜியம் அரசாங்கத்தின் காலனி நாடாகவே இருந்து வந்தது காங்கோ. 

1960 இல் பெல்ஜியத்திடமிருந்து காங்கோ விடுதலை பெற்றது. அன்று முதல் இன்று வரை, இருபெரும் உள்நாட்டு போர்களை சந்தித்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காங்கோவில் இன்று வாழும் ஒட்டுமொத்த பெண்கள் எண்ணிக்கையில், 30 சதவீதப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள் (வெளியே சொல்லாதவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இச்சதவீதம் மிகப்பெரியதாக இருக்கும்). செல்வங்களின் மதிப்பை கணக்கிட்டால், உலகின் பணக்கார நாடாக இருந்திருக்க வேண்டிய காங்கோ, இன்று உலகின் மிகப்பெரிய ஏழை நாடாக இருக்கிறது... காரணம் என்ன? காரணமானவர்கள் யார்?
திரைக்கதை
"காங்கோ நாட்டிலிருந்து எடுக்கப்படும் கனிமங்கள் செல்போன்களில் பயன்படுத்தப்படுகின்றன."
"கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காங்கோவின் உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்"
"இந்த இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது என்று ஐ.நா சபையும் ஒப்புக்கொண்டிருக்கிறது"
என்கிற வரிகளுடன் இத்திரைப்படம் துவங்குகிறது.

டென்மார்க்கைச்சேர்ந்த பிராங்க் என்கிற திரைப்பட இயக்குனர், இது குறித்து ஆய்வு செய்ய முடிவெடுக்கிறார். காங்கோ நாட்டில் நடக்கும் போருக்கு நிதியுதவிசெய்வதே செல்போன்களில் பயன்படுத்தப்படுகிற கனிமங்கள்தானோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில், நோக்கியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்போரிடம் பேட்டியெடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவரது தொடர்முயற்சிகள் வீணாகிறது.

ஸ்பெயின் நாட்டில் நடக்கிற உலக செல்போன் நிறுவனங்களின் மாநாட்டிற்கு சென்று அங்கிருக்கும் பிரதிநிதிகளிடம், "காங்கோ நாட்டில் உள்நாட்டு போருக்கு நிதியளித்து, அதற்கு பதிலாக அங்கிருந்து கனிமங்கள் எடுக்கப்பட்டு அவைதான் செல்போன்களில் பயன்படுத்தப்படுகின்றனவா?" என்று கேட்கிறார். அவரது கேள்விக்கு யாருமே பதிலளிக்க விரும்பவில்லை என்கிறார்கள்.

'உண்மையிலேயே நமது செல்போன்களில், காங்கோவில் நடக்கும் போருக்கு நிதிதிரட்டிக்கொடுக்கிற கனிமங்கள் இருக்கின்றனவா? இந்த உண்மை பலருக்கு தெரிந்திருந்தால், ஏன் யாரும் எதுவுமே செய்யவில்லை? காங்கோ எங்கோதானே இருக்கிறது என்கிற அலட்சியமா? எங்கோ நடக்கிற போருக்கு நான் வைத்திருக்கும் என்னுடைய செல்போன்தான் காரணம் என்கிற உண்மையை என்னால் சகித்துக்கொள்ளமுடியவில்லை! ஒரு வேளை, காங்கோவில் பல உயிர்களை கொன்றுகுவித்து அவர்களின் இரத்தக்கறை என்னுடைய செல்போனிலும் படிந்திருந்தால், இனியும் எனது மனைவிக்கு அன்புகலந்த குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டும், எனது மகள்களுடன் பேசிக்கொண்டும் என்னால் இருக்கமுடியாது.'
என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே, தன்னுடைய ஐயத்தினை தீர்த்துவைக்க அம்மாநாட்டில் வேறு யாரேனும் கிடைப்பார்களா என தேடிப்பார்க்கிறார்.
அவருடைய கேள்விக்கு பதிலளிப்பதற்கு அம்மாநாட்டில் யாருமில்லை என்கிறார்கள். மிகுந்த வருத்தத்துடன் மாநாட்டிலிருந்து வெளியேறுகிறார்.

நோக்கியாவின் மக்கள் தொடர்பு எண்கள் அனைத்திற்கும் பல மாதங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டே இருக்கிறார். யாரும் அவருக்கு எவ்வித தகவலும் தரமுன்வரவில்லை. இது குறித்து, யாரைத்தொடர்பு கொள்ளவேண்டுமென்றே தங்களுக்குத் தெரியாது என்று ஒட்டுமொத்தமாக கைவிரிக்கிறார்கள்.

'யாருமே ஏன் எனக்கு பலளிக்கமுன்வரவில்லை? ஒரு வேளை, காங்கோவில் நடக்கும் போருக்கும் என்னுடைய கையில் இருக்கும் செல்போனின் தயாரிப்பிற்கும் உண்மையிலேயே தொடர்பு இருக்குமோ? அவ்வுண்மை தெரிந்தும் இவர்கள் மறைக்கிறார்களா? இந்நிறுவனங்களுக்கெல்லாம் உண்மையிலேயே சமூகப் பொறுப்பு இல்லையா?' என நிறைய கேள்விகளை தனக்குள்ளே எழுப்பிக்கொண்டே போகிறார் பிராங்க். அக்கேள்விகள் அனைத்தும் காங்கோவில் என்னதான் நடக்கிறது, செல்போன் நிறுவனங்களுக்கு எங்கிருந்து எவ்வாறு கனிமவளங்கள் கிடைக்கிறது? என்பதனை நேரில் சென்று பார்க்கிற ஆவலைத்தூண்டுகிறது பிராங்கிற்கு. 
காங்கோவில் நடப்பது என்ன?
விமானம் மூலமாக காங்கோ நாட்டிற்கு சென்றடைகிறார் பிராங்க். காங்கோவிலிருந்து கனிமவளங்கள் எவ்வாறு மேற்குலக நாடுகளில் இருக்கும் செல்போன் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்கிற உண்மையினை கண்டுபிடிக்கிற செயல் சற்று மலைப்பாகத் தோன்றியது பிராங்கிற்கு.

காங்கோ நாட்டு சுரங்கத் தொழிலமைச்சகத்தின் உயர் அதிகாரியான 'காம்பேகாம்பே' என்பவருடன் ஒரு சந்திப்பிற்கு அனுமதி கிடைக்கிறது பிராங்கிற்கு. அவர் தனக்கு சரியான பாதையைக்காட்டுவார் என்று நம்பி அவரை சந்திக்கச்செல்கிறார்.
கிவு என்கிற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 'கசிடரைட்' (http://en.wikipedia.org/wiki/Cassiterite ) மற்றும் 'கோல்டன்' (http://en.wikipedia.org/wiki/Coltan ) ஆகிய கனிமங்களின் மாதிரியை பிராங்கிற்கு காண்பிக்கிறார் காம்பேகாம்பே. அவையிரண்டும் செல்போன்கள் தயாரிக்கப்பயன்படுகின்றன என்கிற தகவலையும்  சொல்கிறார்.
காம்பேகாம்பே சுரங்கத்தொழிலமைச்சகத்தின் உயரதிகாரியாகவும் இருந்துகொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சுரங்க உரிமங்கள் பெற்றுத்தரும் தனியார் நிறுவனமொன்றினையும் நடத்திவருவதை அறிகிறார் பிராங்க்.
"என்னுடைய சொந்த நிறுவனத்தின் அனுபவத்தை அரசாங்கத்திலும், அரசு வேலையில் கிடைக்கும் அனுபவத்தினை என்னுடைய சொந்த நிறுவனத்திலும் பயன்படுத்திக்கொள்கிறேன்." என்கிறார் காம்பேகாம்பே.
காம்பேகாம்பேவைச் சந்தித்தபின், அரசாங்கத்தின் உதவியை நாடுவது தனக்கு பலனளிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துகொள்கிறார் பிராங்க். காங்கோவிலிருக்கும் ஐ.நா. வின் உதவியை நாடி, அதன்மூலம் வடக்கு கிவு பகுதியிலிருக்கும் 'கோமா'விற்கு செல்ல தயாராகிறார். 'கிவு' பகுதியிலிருந்துதான் கனிமங்கள் எடுக்கப்படுகின்றனவா என்பது உறுதியாகத் தெரியவில்லையெனிலும், காம்பேகாம்பே மூலம் அவர் அறிந்துகொண்டே ஒரே பகுதி 'கிவு'தான்.

வடக்கு கிவுவில் இருக்கும் 'கோமா'வில் நுழைந்து பார்க்கிறபோது, உலகின் வேறந்த பகுதிகளையும் விட மிக அதிகமான அளவிற்கு ஐ.நா.வின் அமைதி காக்கும் படையினர் சாலையெங்கும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆயுதக் குழுக்களிடமிருந்து பொதுமக்களை காப்பதே அவர்களது நோக்கமென்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் நகரின் மையப்பகுதியைத்தாண்டி வேறெங்கும் நகர்வதாகத்தெரியவில்லை.

இங்கிருக்கும் கனிமவளங்களை வைத்து இலாபம் சம்பாதிப்பது யாராக இருக்குமென்ற தகவல் ஐ.நா.விற்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். எனவே வாளிகாளி பகுதியின் ஐ.நா. பொறுப்பாளரான மேஜர் ரகுமானை சந்திக்கிறார் பிராங்க்.
மேஜர் ரகுமான்: "இதுதான் வாளிகாளி பிராந்தியத்தின் வரைபடம். இயற்கை வளங்கள் மற்றும் சுரங்கங்கள் நிறைந்த மிக முக்கியமான பகுதி இது. இங்கே பிசீ மற்றும் கிளம்போ ஆகிய இரண்டு முக்கியமான இடங்கள் உள்ளன. கசிடரைட் மற்றும் பாக்சைட் ஆகிய கனிமங்கள் அங்கிருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன. பிசீ பகுதியில் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்கள்வரை கனிமங்களை தோண்டி எடுத்துச்செல்கிற பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கிருந்து ஜிங்களா, ஒசகாரி மற்றும் முபி ஆகிய இடங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அவ்விடங்களுக்கு கனிமங்களை எடுத்துச்செல்வதற்கு இரண்டு நாட்களாவது ஆகும்."
பிராங்க்: "ஆயுதக்குழுக்கள் இருக்கும் பகுதி?"
மேஜர் ரகுமான்: "அது பற்றியெல்லாம் நான் பேசமுடியாது"
தொடர்ந்து பிராங்க் கேட்கிற எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மழுப்பிவிடுகிறார் ஐ.நா. வின் மேஜர் ரகுமான். ஐ.நா. அதிகாரிகளும் தன்னுடைய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுப்பதற்கு காரணமென்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அங்கிருந்து வெளியேறுகிறார்.
மிகப்பெரிய கனிம சுரங்கங்கள் இருப்பதாக சொல்லப்படும் பிசீ பகுதிக்கு செல்வதற்கு ஐ.நா. செய்தி தொடர்பு அதிகாரிகளிடம் அனுமதி கேட்கிறார். பிராங்கிற்கு எவ்வித தகவலும் தருவதற்கு ஐ.நா. மறுத்தாலும், பிசீ செல்வதற்கு அவருக்கு தடையேதும் விதிக்கவில்லை. அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்க, இரண்டு நாட்கள் ஆகும் என்கிறார்கள் ஐ.நா. அதிகாரிகள்.

அன்று கோமா நகரிலேயே தங்கிவிடுகிறார் பிராங்க். அன்றைய இரவு, அருகிலிருக்கும் ஐரோப்பியர்கள் வந்துபோகும் மதுவருந்தகத்திற்கு சென்று ஏதாவது தகவல் கிடைக்குமா என்று பார்க்கிறார். அங்கே எம்.பி.சி. (Mining Processing Company) நிறுவனத்தில் வேலை செய்வோருடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதன்மூலம் அவர்களிடமிருந்து சில தகவல்களைப் பெறுகிறார் பிராங்க். (பிசீயில் இருக்கும் சுரங்கமொன்றிலிருந்து கனிமவளங்களை எடுக்க உரிமம் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது)
எம்.பி.சி.யின் ஊழியர் : "இந்த வரைபடத்தில் நாம் இருக்கிற கோமா என்கிற ஊர் இதோ இருக்கிறது. கோமாவிற்கும் கனிமவளங்கள் எடுக்கப்படும் பிசீ என்கிற ஊரிற்கும் இடையிலான தூரம் 170 கிலோமீட்டர். நடுவில், 130 கிலோமீட்டர் தொலைவில் வாளிகாளி இருக்கிறது. பிசீயிலிருந்து கனிமவளங்கள் கொண்டு வருவதற்கு, ஆங்காங்கே ஏராளமான ஆயுதக்குழுக்களுக்கு வரி செலுத்த வேண்டும். சிம்பா, இன்டராம்வே (10 லட்சம் மக்களின் உயிரைக்குடித்த ருவாண்டா இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள்) போன்ற ஏராளமான ஆயுதக்குழுக்கள் இடையில் ஆதிக்கம் செலுத்துகின்றன."
எல்லா இனக்குழுக்களையும் சரிகட்டி, பிசீ பகுதிக்கு செல்வதற்கு இரண்டாண்டுகள் ஆயிற்றாம் எம்.பி.சி. நிறுவனத்திற்கு. காங்கோ அரசின் இராணுவமும் (FRDC) மற்றுமொரு ஆயுதக்குழு போல்தான் செயல்படுகிறது என்கிறார்கள் எம்.பி.சி ஊழியர்கள்.

ஐ.நா.வில் வேலை செய்யும் காங்கோ நாட்டைச்சேர்ந்த பெர்னார்ட் என்பவர், தன்னுடைய வீட்டிற்கு வந்தால் பிராங்கிற்கு சில தகவல்கள் சொல்வதாக உறுதியளிக்கிறார். அதன்படி அவரது வீட்டிற்கும் செல்கிறார். செல்லும் வழியில் ஊரெங்கும் ஒரே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
பெர்னார்ட் : "இன்றைக்கு ஏதோ ஒரு 'மாயி மாயி' குழுவினர் 40 கிலோமீட்டர் தொலைவிலிருந்து இங்குவந்து சுரங்கத்தொழிலாளிகளிடம் திருடிவிட்டுச்செல்லவந்திருக்கிறார்கள். (மாயி-மாயி என்பது பெயரிடப்படாத ஆயுதக்குழுக்களை பொதுவாக குறிக்கும் பெயர். அவர்கள் ஒரு ஊரின் குழுவாகவோ கூட இருக்கலாம்). இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. 'மாயி மாயி'யோ அல்லது FDLR ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு ஏதோ ஒரு ஆயுதக்குழுவோ பிசீ என்கிற ஊருக்கு சென்று 'கோல்டன்' மற்றும் 'காசிரைட்'  போன்ற கனிமங்களை எடுத்து, காங்கோ வியாபாரிகளின்மூலம் கோமா என்கிற ஊருக்கு கொண்டு சென்று, பின்னர் உகாண்டவிற்கோ அல்லது ருவாண்டாவிற்கோ கொண்டு சென்று, இறுதியில் ஐரோப்பாவிற்கு கொண்டு சேர்க்கிறார்கள். எதற்காக? கணிப்பொறி செய்வதற்கும் செல்போன்கள் செய்வதற்கும்தான். அதில் கிடைக்கும் காசில், இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? துப்பாக்கி வாங்குகிறார்கள். மீண்டும் போரினைத் தொடர்ந்து நடத்தவே தொடர்ந்து துப்பாக்கி வாங்குகிறார்கள். இதே மக்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட கனிமங்களை ஐரோப்பாவில் விற்று, அதில் வரும் காசினை வைத்து துப்பாக்கி வாங்கி, மீண்டும் அதே மக்களை கொல்கிறார்கள், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குகிறார்கள்...."
பெர்னார்ட் : "இன்றைக்கு மசிகா என்கிற பெண்ணை சந்தித்தேன். அவளை இதுவரை மூன்று முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். முதன்முறை, அவள்கண் முன்னாலேயே அவளது கணவனைக்கொன்று, துண்டுதுண்டாக வெட்டி, அத்துண்டுகளின் மீது அவளைப் படுக்கவைத்து, அவளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். உங்களால் நினைத்துப் பார்க்கமுடிகிறதா?"
பெர்னார்ட் : "நீங்கள் வாளிகாளி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லவேண்டும். ஏனெனில் அங்கே என்னவேண்டுமானாலும் நடக்கலாம். FRDC (காங்கோ நாட்டு இராணுவம்) ஏதேனும் தவறு செய்வதாக நீங்கள் கண்டுபிடித்துவிட்டால்,  நீங்கள் பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள். FDLR (ஆயுதக்குழு) தவறு செய்வதாக கண்டுபிடித்துவிட்டால், அப்போதும் நீங்கள் பிரச்சனைக்குள்ளாவீர்கள். மாயி-மாயி ஆயுதக்குழுக்கள் தவறு செய்வதாக நீங்கள் கண்டறிந்துவிட்டால், நீங்கள் உயிரோடு இருக்கவே முடியாது. அதனால் நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது. மிகுந்த கவனமாக இருங்கள்"
இரண்டு நாட்கள் முடிந்திருந்தமையால், ஐ.நா. அலுவலகம் சென்று வாளிகாளி மற்றும் பிசீ செல்ல அதிகாரப்பூர்வ அனுமதி வாங்கச்செல்கிறார். ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து மிகக்கொடூரமாக தாக்கிவருவதாகவும், அதனால் ஐ.நா. வைச் சேர்ந்தவர்கள் யாரும் பிராங்கிற்கு வழிகாட்ட உடன்வரமுடியாது என்றும் தெரிவித்துவிடுகிறார்கள்.

ஐ.நா. கைவிட்டபிறகு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமால் போனாலும், தன்னுடைய முயற்சியனை அப்படியே விட்டுவிட்டு நாடுதிரும்பவும் மனமில்லை பிராங்கிற்கு. அனுமதியின்றி இனி ஓரடியும் நகரமுடியாதென்பதை உணர்ந்த பிராங்க், FRDC (காங்கோ நாட்டு இராணுவம்) யின் உயர் இராணுவ அதிகாரியொருவரைச் சந்திக்கிறார். அவரிடம் அன்பாகப்பேசி, அவர் அள்ளிவீசும் சுயபெருமைகளை எல்லாம் இரசித்துக் கேட்பதைப்போல் நடித்து, அவரிடம் கையெழுத்து வாங்கிவிடுகிறார். வாளிகாளியிலிருந்து கனிமங்கள் கொண்டுவருவதற்காக கோமாவிலிருந்து செல்லும் ஒரு சிறிய சரக்கு விமானத்தில் ஏறிக்கொள்கிறார் பிராங்க். அவ்விமானம் நடுக்காட்டில் மிகச்சிறிய சாலையில் தரையிறங்கியது. விமானம் நின்றது, பல மூட்டைகளை கொண்டுவந்து விமானத்திற்குள் ஏற்றுகிறார்கள். இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது என்று விமானியிடம் கேட்டுப்பார்க்கிறார். எதிர்பார்த்ததைப்போலவே 'தெரியாது' என்கிற ஒற்றை பதில்தான் கிடைக்கிறது பிராங்கிற்கு.

இப்போது பிராங்க் வந்து சேர்ந்திருக்கும் பகுதிதான் வாளிகாளி. அவ்வூரில் சான்ஸ் என்கிற 16 வயது சிறுவனைப்பற்றி கேள்விப்படுகிறார். அவன் மூன்று ஆண்டுகளாக பிசீ பகுதியில் இருக்கும் சுரங்கமொன்றில் வேலைபார்த்திருக்கிறான். ஒரு வாரத்திற்கு முன் நடந்த கலவரத்தினால், அங்கிருந்து தப்பித்து வாளிகாளிக்கே ஓடி மீண்டுவந்திருக்கிறான்.

சிறுவன் சான்ஸ் : "சுரங்கமொன்றில் வேலைசெய்தால், அதில் வரும் வருமானத்தை வைத்து சொந்தமாக ஒரு வீடு கட்டலாம் என்று நினைத்தேன். அதனால் பிசீ சென்று வேலைக்கு சேர்ந்தேன். முதல்முறை மிகச்சிறிய வழியினைக்கொண்ட அக்குழிக்குள் இறங்கினேன். நீண்ட நேரம் என்னால் இருக்கவே முடியவில்லை. அந்த சூடு எனக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. அதனால் இரண்டே மணிநேரத்தில் வெளியே வந்துவிட்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் உள்ளே போகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால், உள்ளே சென்று நிறைய உழைக்கவேண்டியிருந்தது. அவ்வளவு அதிகமான சூட்டினை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னால் என்னுடைய கனவு வீட்டினையும் கட்டமுடியவில்லை. நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். இப்போது இங்கிருக்கும் பள்ளியில் என்னுடைய படிப்பினை தொடர்கிறேன்."

அச்சிறுவனுக்கு கனிமவளங்களை எடுக்கிற சுரங்கங்கள் இருக்கிற இடம் தெரியுமென்பதால், அதற்கு வழிகாட்டவேண்டி அச்சிறுவனிடமும் அவனது பெற்றோரிடமும் அனுமதி வாங்கிக்கொண்டு அவனை அழைத்துசெல்கிறார் பிராங்க். வழிநெடுக ஏராளமான மக்கள் மூட்டையும் கையுமாக வந்துகொண்டே இருந்தனர். நிச்சயமாக அது ஒரு மிகப்பெரிய சுரங்கமாக இருக்குமென்று கற்பனை செய்துபார்க்கத்துவங்கிவிட்டார் பிராங்க். ஒவ்வொருவரும் சுமார் 50 கிலோ எடையுள்ள கனிமங்களை எடுத்துக்கொண்டு பிசீயிலிருந்து 90 கிலோமீட்டர்கள் நடந்து வருகிறார்கள். அதற்கு இரண்டு நாட்கள் ஆகுமென்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 30 டன் கனிமங்களை 600 பேர் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு எடுத்துவருகின்றனர். சுரங்கங்களை நோக்கிச்செல்கிற மக்களோடு மக்களாக அபாயங்கள் நிறைந்திருக்கும் இருள்போர்த்திய அடர்ந்த நடுக்காட்டினில் நடந்து செல்கிறார்கள் பிராங்கும் சிறுவனும்.

பிசீயை வந்தடைகிறபோது, அங்கே மிகப்பெரிய மரக்கட்டைகளாலான நுழைவாயிலும் ஊருக்குள் நுழைகிறவர்களிடமும் ஊருக்குள்ளிருந்து வெளியே செல்கிறவர்களிடமும் ஒரு ஆயுதக்குழு வரிவசூலித்துக்கொண்டிருந்தது. பிசீயில் இருக்கும் மக்களிடம் மிகக்கடினமாக வேலைவாங்குகிறார்கள் பல்வேறு ஆயுதக்குழுவினர். மிகச்சிறிய ஊதியம் கொடுத்துவிட்டு, அதனை மீண்டும் மிகக்கடுமையான வரிபோட்டு வாங்கிக்கொள்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் பல ஊர்களிலிருந்தும் காசு சம்பாதிக்கும் நோக்கில் வரும் மக்கள், இவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். சம்பாதிப்பதைவிட அதிகமாக வரிசெலுத்தவேண்டிவருகிறது அவர்களுக்கு. 

சிறுவன் வேலைசெய்தபோது தங்கியிருந்த வீட்டிற்கு  பிராங்கை அழைத்துச்செல்கிறான். சுரங்கத்தின் அருகே கடும் வெயிலில் நாற்புறமும் கோணிப்பைகளை கட்டிவைத்து அதற்குள்ளே நூற்றுக்கணக்கானோர் தங்கியிருக்கிறார்கள். அதுதான் வீடு என்கிறார்கள். எங்கு நோக்கினும் சிறுவர்கள் சுத்தியலுடனும் சுரங்க வேலைக்கு தேவைப்படும் ஆயுதத்துடனும் காணப்பட்டார்கள். அச்சிறுவர்கள் ஒவ்வொருவரிடமும் எண்ணற்ற கண்ணீர்க்கதைகள் இருக்கிறது.

"எப்போது குண்டு வருமென்றே தெரியாது. இங்கு ஒரு மருந்தகம் இருந்தது. அதில் இருந்த மருந்துகடைக்காரரை இப்போதுதான் சுட்டார்கள்" என்று அவ்விடத்திலிருந்து சற்று தோண்டி சில குண்டுகளை எடுத்துக்காட்டினான் ஒரு சிறுவன்.
சிறுவன்: "நான் வேலை பார்க்கிற சுரங்கக்குழி 330 அடி ஆழம் இருக்கும். அதில் இறங்கி ஏறுவது மிகக்கடினமாக இருக்கும். அதிகமான நேரமும் ஆகும். சில நேரம் ஒரு வாரம் வரை கூட சுரங்கக்குழிக்குள்ளேயே தங்கி இருக்கிறேன். ஏதாவது ஒரு குழி திடீரென மூடிக்கொள்ளும். அதனால் ஏராளமானோர் இந்த குழிக்குள்ளேயே இறந்திருக்கின்றனர்"
சிறுவனுடன் சேர்ந்து பிராங்கும் குழுக்குள் இறங்குகிறார். ஒரு ஆள் நுழைகிற அளவே வழியிருக்கிற அக்குழியினுள் நுழைந்ததும், அதிர்ச்சியடைகிறார். உலகின் மிக மோசமான ஓரிடத்தில் நூற்றுக்கணக்கானோர் கனிமங்களை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வேலைசெய்வதை நோட்டமிடவே வந்திருப்பதாக பிராங்கைக்கண்டு அஞ்சுகின்றனர். சிறுவன் கசிடரைட் கனிமத்தை தன்னுடைய சுத்தியொன்றினால் வெட்டியெடுத்து பிராங்கிடம் காட்டுகிறான். அதற்குமேல் அக்குழிக்குள் இருக்கமுடியாமல் கண்ணீரோடு காங்கோவைவிட்டே வெளியேறுகிறார் பிராங்க்.

செல்போன் நிறுவனத்தின் பொறுப்புணர்வு(?!?) 
காங்கோவில் தனக்குக் கிடைத்த ஆதாரங்களையெல்லாம் வைத்துக்கொண்டு நோக்கியாவின் தலைமை அலுவலகத்திற்குச்செல்கிறார் பிராங்க். ஆனால் மீண்டும் அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க யாருமே தயாராகயில்லை.
"எங்களுக்குதெரியாது...."
"மக்கள் தொடர்பு அதிகாரியுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறோம். ஆனால் நீ படம்பிடிக்கக் கூடாது.."
இப்படியான பதில்கள்தான் அவருக்குக் கிடைக்கிறது.
பிராங்க் : "நான் ஓராண்டாக நோக்கியா அலுவலகத்திற்கு வந்து போகிறேன். நீங்கள் யாருமே பதிலளிக்க மறுப்பதேன்? நான் நோக்கியா போன்தான் பயன்படுத்துகிறேன். எனக்கு நீங்கள் பதிலளித்தே ஆக வேண்டும். நான் இந்த உலகத்தின் குடிமகன். அதனால் இதுகுறித்து நான் அதிகம் கவலைகொள்கிறேன். என்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலோ, அல்லது சந்திப்பிற்கான தேதி கிடைக்காமலோ இவ்விடத்தைவிட்டு நான் போகப்போவதில்லை" என்று கோபமாகவே பேசிவிடுகிறார்.

பிராங்கின் மன உறுதியைக் கண்டு, வேறு வழியின்றி ஒரு இடைநிலை அதிகாரியுடனான சந்திப்பிற்கு அனுமதி அளிக்கிறார்கள் நோக்கியா நிறுவனத்தினர்.
நோக்கியா அதிகாரி : "2001 இலேயே காங்கோவிலிருந்துதான் எங்களுடைய நோக்கியா செல்போன்கள் தயாரிக்கப்பயன்படும் கனிமங்கள் கிடைக்கிறது என்று எங்களுக்குத் தெரியவருகிறது. ஆனால், யார் அக்கனிமங்களை எடுக்கிறார்கள், எப்படி எடுக்கிறார்கள், எந்தெந்த சுரங்கத்திலிருந்து எடுக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை..."
10 ஆண்டுகளுக்கே முன்பே உண்மை தெரிந்திருந்தும், உலகிற்கும் சொல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்படி இருக்கிறார்களே என்று பிராங்க் அதிர்ச்சியடைகிறார். ஜெர்மனியில் இருக்கும் 'இயற்கை வளங்கள் மற்றும் புவியியல் அறிவியல் மைய நிறுவனத்திற்கு' சென்று விசாரிக்கிறார். அங்கிருக்கும் விஞ்ஞானிகள், "இது மிக எளிதான ஒன்று. கனிமத்தின் மாதிரியை வைத்துக்கொண்டு, அது உலகின் எந்தப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதனை எளிதில் கண்டுபிடிக்கலாம். காங்கோவில் எந்தச் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது வரை கண்டுபிடிக்கலாம்" என்று சொல்கிறார்கள். இதனைக்கண்டுபிடிக்க மிகப்பெரிய விஞ்ஞானிகள்கூட தேவைப்படாது என்பதை அறிந்துகொள்கிறார் பிராங்க்.

 மீண்டும் நோக்கியா தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். இம்முறை அவருக்கு ஒரு உயர் அதிகாரியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
நோக்கியா உயர் அதிகாரி : "எங்களால் இதற்கு சரியான தீர்வை கொண்டு வர முடியவில்லை. ஒட்டு மொத்த தொழிற்துறையும் இதற்கு ஒத்துழைப்பு அளித்தால்தான் நாங்களும் இப்பிரச்சனைக்கு ஏதாவது செய்யமுடியும்."
பிராங்க் : "மற்ற நிறுவங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் தான் உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிக்கும் நிறுவனம். உலகில் தயாராகும் ஒவ்வொரு நான்காவது செல்போனும் நோக்கியாவுடையதுதான். நீங்கள் யாரிடமிருந்தெல்லாம் கனிமங்கள் வாங்குகிறீர்கள், உங்களுக்கு கனிமங்கள் விற்பவர்கள் எங்கிருந்து எடுக்கிறார்கள் என்பதனையும் நீங்கள் வெளிப்படையாக அறிவிக்கலாமே. "
நோக்கியா உயர் அதிகாரி : "தொழிலில் போட்டி, இலாபம் ஆகியவை காரணமாக அதையெல்லாம் நாங்கள் சொல்லமுடியாது."
பிராங்க் : "ஒரு புறம் போட்டி, இலாபம் என்று பேசுகிறீர்கள், மறுபுறம் லட்சக்கணக்கான மக்கள் (குழந்தைகள் உள்பட) இறப்பதும் எண்ணிலடங்காதப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்காளாவதும் நடக்கிறது." என்று வருத்தம் கலந்த கோபத்தோடு பேசுகிறார் பிராங்க்.
நோக்கியா உயர் அதிகாரி : ".........................................."

காங்கோவில் சுரங்கத்தினுள் இறங்கும் சிறுவர்கள் பிராங்கின் கண்களுக்குள் வந்து கண்ணீரை வரவழைத்துவிட்டு போயினர்... தன்னுடைய கையினில் இருக்கும் செல்போனை தூக்கியெறிய வேண்டும்போல இருந்தது பிராங்கிற்கு.

'இன்று உலக மக்கள் தொகையில் பாதியளவிற்கு செல்போன்கள் விற்கப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் காங்கோவில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் மோசமாக்குகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நான் செல்போன் பயன்படுத்தி வருகிறேன். நானும் இந்த போருக்கு மறைமுகமாக நிதியளித்திருக்கிறேன். இந்த 15 ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. நோக்கியாவின் சி.இ.ஓ.வைச் சந்தித்து நேருக்கு நேர் கேள்விகேட்க வேண்டும்போல் இருக்கிறது' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே மீண்டும் நோக்கியாவின் தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் பிராங்க்.

அவருக்கு நோக்கியாவின் சி.இ.ஓ.வைச் சந்திப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்கு பதிலாக நோக்கியாவின் சமூகப் பொறுப்புணர்வுக்கான துறையின் இயக்குனர் பெக்காவைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது.
பிராங்க் : "காங்கோவில் இருக்கும் குழந்தைகள் இந்த மோசமான நிலைமையினை ஏற்றுக்கொண்டு மகிழ்கிற மோசமான மனிதர்கள் நோக்கியாவில் இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஆனால் இந்த பிரச்சனை உங்களுக்குத் தெரிந்து 10 ஆண்டுகள் ஆயிற்று. இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்."
நோக்கியா உயரதிகாரி பெக்கா : "என்ன செய்யலாம் என்று செல்போன் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களோடு பேசி வருகிறோம். சில என்.ஜி.ஓ.க்களுடனும் பேசி வருகிறோம். எங்களுக்கு கனிமங்கள் வழங்குவோரிடமும் பேசி வருகிறோம். இதன்மூலம் பிரச்சனை என்னவென்று கண்டுபிடிப்பதுதான் எங்களது முதல்படி"
பிராங்க் : "நீங்கள் இங்கே உட்கார்ந்துகொண்டு முதல்படி குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். 10 ஆண்டுகள் ஆகிவிட்டதை உணர்ந்திருக்கிறீர்களா?
நோக்கியா உயரதிகாரி பெக்கா : "எங்களால பெரியதாக ஒன்றும் செய்யமுடியாது"
பிராங்க்: "வாளிகாலியில் நான் பார்த்த சிறுவர்களிடம் அவர்களை வைத்து இலாபம் சம்பாதிக்கும் நோக்கியாவிடம் சென்று அச்சிறுவர்களின் துயரம் குறித்துப் பேசுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல?
நோக்கியா உயரதிகாரி பெக்கா : "அவர்களை நம்பிக்கையோடு இருக்க சொல்லுங்கள். சமுதாயம் அவ்வளவு எளிதில் மாறப்போவதில்லை. அவர்களுக்குத் தீர்வு வருகிறதோ இல்லையோ, ஆனால் அவர்களின் நிலை குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம் என்று சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு தனக்கு நேரமாகிறது என அங்கிருந்து கிளம்பிவிடுகிறார் பெக்கா
இதனைக்கேட்கிறபோது மனிதநேயமற்ற கார்ப்பரேட்டு நிறுவனங்களின்மீது கோபத்தின் உச்சத்திற்கே போகிறார் பிராங்க். வேறு வழியின்றி பெக்காவின் அறையிலிருந்து வெளியே வருகிறார். 

நோக்கியா அலுவலத்திலிருந்து வெளியேறுமுன், பெக்காவை சந்திக்க ஏற்பாடு செய்த சாரா என்கிற இடைநிலை அதிகாரியிடம் கேட்கிறார், "பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் இதனை மாற்றிக்கொள்ளவோ எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவோ யாருமே தயாராகயில்லை. எதையும் செய்யவில்லையின்றாலும், குறைந்தபட்சம் தங்களுடைய தவறினை ஒப்புக்கொள்ளக்கூட மறுக்கிறீர்களே?"
சாரா : "நாங்கள் செய்வது தவறு என்று எங்களுக்கே தோன்றாமல், நாங்கள் ஏன் தவறு என்று ஒப்புக்கொள்ளவேண்டும்?"
சாரா சொல்லிவிட்டார், ஆனால் பிராங்க் சந்தித்த மற்ற உயரதிகாரிகள் யாரும் சொல்லவில்லை என்பதைத்தவிர வேறு எந்த வேறுபாடுமில்லை.

பெல்ஜியம் மன்னரின் கட்டுப்பாட்டில் அடிமை நாடாக நடத்தப்பட்ட காங்கோவிற்கும் இன்றைய காங்கோவிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?நூற்றுக்கணக்கான சுரங்கங்களும் அதில் இலட்சக்கணக்கான மக்களும் கிழக்கு காங்கோவில் சுரண்டப்படுகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு நோக்கியா நிறுவனம் ரப்பர் காலணிகள் செய்யும் நிறுவனமாக இருந்தது. அப்போது காங்கோவை அடிமை நாடாக வைத்திருந்த பெல்ஜியம் மன்னர் லியோபோல்ட் மூலமாக, காங்கோவிலிருந்து ரப்பரை எடுத்துக்கொண்டிருந்தது நோக்கியா நிறுவனம். அதே நோக்கியா நிறுவனம் இன்று ஒரு மிகப்பெரிய செல்போன் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. உலகில் தயாரிக்கப்படும் நான்கில் ஒரு செல்போனை நோக்கியாதான் தயாரிக்கிறது. இன்று காங்கோ மக்களின் இரத்தம் குடிக்கும் உள்நாட்டுப் போருக்கு நிதியளித்து, தனது செல்போன் உற்பத்தித்தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறது. நோக்கியா போன்ற மிகப்பெரிய நிறுவனமே இதனைச்செய்தால், சந்தையில் இருக்கும் மற்ற நிறுவனங்களும் அதையேதான் பின்பற்றும் என்பதில் ஐயமேதும் நமக்கு வேண்டாம். 
-இ.பா.சிந்தன்

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)