Showing posts with label இமு டிச11. Show all posts
Showing posts with label இமு டிச11. Show all posts

Wednesday, December 14, 2011

கடன் அன்பை முறிக்கும்


எல்லா சான்றிதழ்களும் இருக்கின்றனவா என்பதை பத்தாவது முறையாக சரிபார்த்துக் கொண்டான் மாரிமுத்து. சான்றிதழ்கள் அடங்கிய மஞ்சள் பையை பத்திரமாய் மடியில் வைத்துக்கொண்டான். கீழே நழுவிப்போய் விடுமோ என்று தேவையில்லாமல் பயந்தான். ஏன் இப்படி ஆனோம் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். வங்கியில் இன்று கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. மாலையில் வந்தால் இவ்வளவு கூட்டம் இருக்காது. போன தடவை அப்படி நினைத்துத்தான் மாலையில் வந்தான்.

"எப்பவும் பேங்க் மூடற நேரத்துக்கு வந்தா எப்படி? காலைல வாங்க." அந்த அதிகாரி கடிந்து கொண்டதால், இப்போது காலையில் பேங்க் திறப்பதற்கு முன்னாலேயே வந்து விடுகிறான். ஐந்தாறு முறை அலைந்தாயிற்று. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்று தவறி விடுகிறது. முதல் முறை வந்த போது அவன் மட்டும் வந்தான்.

"படிக்கப் போறது நீங்களா இல்லை உங்க பொண்ணா? அவளக் கூட்டியாற வேணாமா?" எரிச்சல் பட்டார் மேனேஜர்.

வாஸ்தவம்தான். நமக்குக் கொஞ்சம்கூட கூறே இல்லை. அவ்வளவு கூறுபாடு இருந்தால் நாம எதுக்கு பிரஸ்ல வேலை பார்க்கணும் என்று நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு முறையும் பிரிண்டிங் பிரஸ் முதலாளி கிட்டே ஒரு மணி நேரத்துல வந்துருவேன் என்று சொல்லிவிட்டு வந்தால், ரெண்டு மூணு மணி நேரம் வரை கூட ஆகி விடுகிறது என்ன செய்ய?

ரெண்டாவது முறை வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்களைக் கொண்டு வராமல், ஜெராக்ஸ் நகல்களை மட்டும் காண்பித்தபோது, ஒரிஜினல் இல்லாம எப்படி நம்பறது? மொதல்ல அதை எடுத்துட்டு வாங்கன்னு திருப்பி அனுப்பி விட்டார் அந்தக் கல்விக்கடன் வழங்கும் அதிகாரி.

"ஒரிஜினல் எங்கேயாச்சம் தொலச்சிடப்போறீங்க... கேக்கறப்ப கொண்டு போனாப்போதாதா?" என்கிறாள் ஆதிலட்சுமி.

யார் சொல்வதைக் கேட்பது என்று ஒரு கணம் தடுமாற்றம்தான் அவனுக்கு. எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறானதாகவே ஆகி, பின்னரே சரி செய்யப்படுவது போலத் தோன்றுகிறது. எப்படியோ.. கடன் கிடைத்தால் சரிதான் என்று மனசுக்குள் தன்னையே தேற்றிக்கொண்டான்.

ஆதிலட்சுமி ப்ளஸ் டூவில் ஆயிரத்து இருபத்தைந்து மார்க் எடுத்தபோது அவனும் சங்கரியும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். மகள் நினைத்தபடியே கோவில்பட்டியில் உள்ள எஞ்ஜினீயரிங் காலேஜில் அட்மிஷன் கிடைத்தபோது, மகளைத் தலையில் வைத்து கொண்டாடினார்கள். மனம் என்னென்னவோ கனவுகளை விரித்தபடி சென்றது. முதலாளிகள் பெண்ணைப் போலத் தனது பெண்ணும் எஞ்ஜினீயர்தான் என்பதில் மனம் குதூகலித்தது. படிப்பதற்கு வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என்ற போது வங்கிக்கடன் வாங்கியாவது படிக்க வச்சிரணும் என்று மனம் வைராக்கியம் பூண்டது. கடன் கிடைக்காவிட்டால் என்னாவது என்ற தயக்கமும் கூடவேதான் வருகிறது. கல்விக்கடன் பற்றி உள்ளூர் அமைச்சரின் பேச்சு தினமும் பேப்பரில் வந்து கொண்டிருக்கிறது. எல்லா வங்கிகளும் கல்விக்கடன் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வருட வருமானத்திற்கு கீழே இருந்தால் வட்டியும் கிடையாது என்றெல்லாம் சொல்கிறார்கள். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கடைக்கண் பார்வை விழ வேண்டுமே.

தான் வந்திருப்பதை அவருக்குத்தெரிவிக்கும் பொருட்டு, காலையில் அந்த அதிகாரி உள்ளே நுழையும் போதே குட்மார்னிங் சார் என்று பெரிய சல்யூட் அடித்து வைத்தான். அவரும் பதிலுக்குத் தலையாட்டி புன்னகைத்தவாறே சென்றது மனசுக்குள் கொஞ்சம் நம்பிக்கையை ஊட்டியது. மனுஷன் நல்ல மூடில்தான் வந்திருக்கார் என்று நினைத்துக்கொண்டான். வேலை அவசரத்தில் நம்மை மறந்து விடக்கூடாதே என்பதால் அவர் கண் பார்வை படும் இடமாக பார்த்து உட்கார்ந்தான். சமயத்தில் சீட்டை விட்டு தற்செயலாக எழுவது போல எழுந்து உட்கார்ந்தான். அவரது கவனத்தில் தான் இருப்பது போலத்தான் பட்டது.

கூட்டம் இப்போது இன்னும் அதிகரித்திருந்தது. டோக்கன் எண் சொல்லி அழைப்பதால், எல்லோரும் இருக்கைகளிலேயே அமர்ந்திருந்தனர். இன்னும் பலர் இடமின்றி நின்று கொண்டிருந்தனர். எல்லோரும் கட்டுக்கட்டாய் பணத்தைப் போடத்தான் வந்திருக்கிறார்களோ? இல்லை தன்னை மாதிரி கடன் வாங்க வந்திருக்கிறார்களோ?

அப்படியெல்லாம் இருக்காது. யாரும் நம்மை மாதிரி பராக்கு பார்க்கிற மாதிரி தெரியல. கையில் பாஸ்புக், செக்புக் என்று என்னென்னவோ வைத்திருக்கிறார்கள். தன்னை மாதிரி பரிதாபமான வேற மூஞ்சிகள் எதுவும் தென்படுகிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

தனக்கு ஓரளவிற்குப் பரிச்சயமான கண்ணாடி அணிந்த சார் இருக்கிறாரா என்று அவரது இருக்கையைப் பார்த்தான். அவரும் ரொம்ப பிஸியாகத்தான் இருக்கிறார். கம்ப்யூட்டரை மட்டுமே எல்லோரும் பார்த்துப் பேசுவார்களோ மாட்டார்களோ? யாரைக்குறை சொல்ல? அவரும் ரொம்ப பரிச்சயமானவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு முறை இவனது பிரஸ்ஸுக்கு அவரது மகள் கல்யாணப் பத்திரிகை அடிக்க வந்திருந்த போது ஏற்பட்ட பழக்கம்தான்.

“பொண்ணை நல்லாப்படிக்கச் சொல்லுங்க... மார்க் வேணும். பி.சி.யா? இல்லே வேற எதுவுமா?.....” என்று கேட்டார். இவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை.

“நீங்க என்ன ஜாதின்னு கேட்டேன். ரிசர்வேசன் உண்டா இல்லையான்னு தெரிஞ்சுக்கத்தான்.” அவர் தெளிவாய்க் கேட்டபின்தான் இவனுக்கு மண்டையில் உறைத்தது.

“அதுவா சார்? நாங்க எம்.பி.சி... சர்டிபிகேட் எல்லாம் கூட மகளுக்கு வாங்கியிருக்கேன்.... நேரடியாக தனது ஜாதியைச் சொல்ல வாயெடுத்தவன் இப்போது திருத்திக் கொண்டான். எல்லாம் ஆதிலட்சுமி சொல்லிக்கொடுத்தது.

“சும்மா எல்லார்ட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.” என்பாள்.

தனது கறுத்த நிறத்தைப்பார்த்து முடிவு செய்திருப்பாரோ என்னவோ? திருச்செந்தூர் கோவில் பட்டர்கள் பாதிப்பேர் கறுப்பாகத்தான் இருக்கிறார்கள். பிரஸ்ஸுக்கு அடுத்த புத்தகக் கடை வைத்திருக்கும் சிவசூரியன் அண்ணாச்சி தனது கறுத்த மேனியை விபூதிப்பட்டையிட்டு மறைத்திருக்கிறார். திருநெல்வேலி டவுண்தான் பூர்வீகம். கோபத்தில் மனுஷன் பேசும் ஏச்சுக்களை வெளியில் சொல்ல முடியாது. காதுகளைப் பொத்திக் கொள்ள வேண்டும்.

இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்? மனுசன் யதார்த்தமாகக் கேட்பதுதான். மணி பன்னிரெண்டு அடித்தது. சரி இன்னைக்கும் லீவு சொல்லிற வேண்டியதுதான். அவர் கூப்பிட்டு, உட்கார வைத்து, சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து (புதுசாய் வேறு எதுவும் கேட்கிறார்களோ என்னவோ?) பேசி அனுப்ப குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். மதியத்துக்கு மேல் போனால் முதலாளி ரொம்ப எரிச்சல்படுவார். கல்யாண சீசன்ல இப்படி அடிக்கடி லீவு போட்டா வேலையெல்லாம் யார்தான் பாக்கறது என்பார். சரி எதுன்னாலும் கேட்டுக்க வேண்டியதுதான். லோன் வாங்கியாகணுமே?

“காலேஜுல சேர்றதுக்கு முன்னாலே புதுசா நாலு சுடிதார் வாங்கணும்ப்பா. ஹாஸ்டல்ல தங்கணும். புது சூட்கேஸ் வாங்கணும். சோப்பு டப்பா, பவுடர், கண் மை, கண்ணாடி, என பெரிய ஒரு லிஸ்ட்டே வச்சிருக்கேம்ப்பா.” ஆதிலட்சுமி அடுத்த கட்ட கடன் தொகைக்கு  அப்பாவிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள் காலையிலேயே.

காலேஜ் படிப்பென்றால் சும்மாமா? கடனோட கடனாய் எல்லாத்தையும் வாங்கியாகணும். ஸ்கூலுக்குப்போற மாதிரியெல்லாம் ஒப்பேத்தி விட முடியாது. நாலுபேர் பாக்கற மாதிரி நல்ல டிரெஸ்ஸா வாங்கிக்கொடுக்கணும். சின்னப்பிள்ளைக ஆசைப்படறது ஒண்ணும் தப்பில்லை.

“சார் கொஞ்சம் பேனா கொடுக்கீங்களா?” ஆதிலட்சுமி வயதுடைய சுடிதார் அணிந்த இளம்பெண் இவனிடம் கேட்டாள்.

மாரிமுத்து சட்டப்பையில் சொருகி இருந்த பேனாவை எடுத்து அவளிடம் நீட்டினான். படித்த பெண்ணுக கூட பேனா வச்சுக்கிறதில்ல போல என்று நினைத்துக் கொண்டான்.

அந்தப்பெண் அவசர அவசரமாய் வாங்கி ஏதோ ஒரு செல்லானை பூர்த்தி செய்யத் தொடங்கினாள். கடன் வாங்க வந்த பெண்ணாக இருப்பாளோ? கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பெண்ணாகக் கூட இருக்கலாம். ஆதிலட்சுமிக்கும் இதே போல லைம் கலர் சுடிதார்கள் வாங்கணும். மென்மையான சாம்பல் நிற ஆடைகள்தான் கறுத்த பெண்களுக்கு மேட்ச்சாக இருக்கும். இவள் கொஞ்சம் அவளை விட சற்று நிறம் கூடுதல்தான். பாலீஸாக இருக்கிறாள்.

சிகரெட் பற்றவைத்துக்கொள்ளணும் போல இருந்தது. சிகரெட் வத்திப்பெட்டி எல்லாம் சட்டைப்பையில் இருக்கிறது. நாம் புகை இழுத்துக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து அவர் கூப்பிட்டு விட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்திலேயே இவ்வளவு நேரமும் அமர்ந்து கொண்டிருந்தான். அதுக்குள்ளேயா கூப்பிட்டு விடப்போகிறார் என்ற தைரியத்தில் கதவைத் திறந்து வெளியே வந்தான். வெயிலின் வெக்கையை இப்போது உணரமுடிந்தது. ஏஸி ரூமிலேயே இருந்து விட்டு வந்தால் இப்படித்தான். சட்டைப்பையினுள் இருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டான். இரண்டு இழப்பு இழுத்ததும் இருமல் வந்தது. நெஞ்சு முழுவதும் சளி. இந்தச் சனியனை விட்டுத் தொலைக்கணும்னு நெனைச்சாலும் விட முடியல. பன்னிரெண்டு வயதில் அச்சுக்கூடத்தில் பீடிதான். வாயெல்லாம் கசக்கும்.  இப்ப கொஞ்ச நாளாகத்தான் இந்த பில்டர் சிகரெட் டெல்லாம். இதுவும் ஒரு நாளைக்கு ஒன்றரை பாக்கெட் ஆகி விடுகிறது. நைட் டூட்டி பார்த்தால் ரெண்டு தாண்டி விடும். வயசு அம்பத்தைஞ்சை தாண்டியாச்சு. என்னத்த கண்டோம்? முக்கால்வாசி வாழ்க்கை வாழ்ந்து முடிந்தது போன்ற ஒரு எண்ணம் அவனைத் தொற்றிக் கொண்டது.

“அப்பா நான் வேலைக்குப் போனதும் நீ பிரஸ்ஸுக்கெல்லாம் போக வேண்டாம்ப்பா.”

ஆதிலெட்சுமி ஒருமுறை சொன்னபோது இவனுக்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டியது. இந்த பீடி, சிகரெட்டையெல்லாம் விட்டுத் தொலைக்கக்கூடாதா என்பது போல பார்ப்பாள். ஒன்றும் சொல்வதில்லை.

யாரோ தன்னைக் கூப்பிடுவதாக நினைத்து, அவசர அவசரமாய் உள்ளே வந்தான். அந்த அதிகாரி அதே பாவனையில்தான் உட்கார்ந்திருந்தார். தன்னைக் கூப்பிட்டது மாதிரித் தெரியவில்லை.

- நாறும்பூநாதன்

Sunday, December 11, 2011

தமிழகத்தில் தலித்களின் நிலை


நமது கடவுள் சாதியை காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம், நமது அரசாங்கம் சாதியை காப்பாற்றும் அரசாங்கம் என தந்தை பெரியார் கூறுவார். அப்படிப்பட்ட சாதியை காப்பாற்றும் நடவடிக்கையை காலம் காலமாக ஆளும் வர்க்கங்கள் பல வடிவங்களில் செய்து வருகின்றன. குறிப் பாக நில உறவுகளை அதிகம் கொண்ட இந்தியாவில் ஆளும் வர்க்கமாக திகழ்ந்த நிலப்பிரபுக்கள், ராஜாக்கள், மன்னர்கள் சாதிய பாகுபாட்டை உறுதிப் படுத்தி கட்டிக் காத்தனர். நில உடைமை சமூக அமைப்பிலிருந்து நவீன கருவிகளின் மூலம் சமூக உற்பத்தியை நோக்கி மாற்றங்கள் உருவாகி வரக்கூடிய காலத்திலும் தமிழகத்தில் சாதிய படிநிலைகளை பாதுகாக்கும் ஏற்பாடுகள் தொடர் கின்றன, இன்றும் கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், திருமணமண்டபங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஊர்கள், சாலைகளின் பெயராலும், அக மண முறைகளின் உள்ளார்ந்த விசயங்களாலும் கட்டமைக்கப்படு கின்றன. தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக் களுக்காக குரல் கொடுத்த தந்தை பெரியார் பலகட்ட போராட்டங்களை நடத்தினார், சுயமரியாதை இயக்கமும் இதில் முன்னின்றது.

இதன் பின் தோன்றிய திராவிடர் கழகம் இதை உரக்க பேசியது. ஆனால் அதிலிருந்து உருவான திமுக, அதிமுக, மதிமுக போன்ற அமைப்புகள் எல்லாம் இது குறித்து எந்த சிந் தனையையும் செலுத்தியதாக தெரியவில்லை. 1967ல் ஆட் சிக்கு வந்த திமுகவும் அதன்பின் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. பிராமணியத் திற்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்கள் இதர சாதியினருக்குள் இருந்த உள் முரண்பாடுகளையும், பகை மைகளையும் களைய எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து அதை தங்களுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடு பட்டனர்.

இன்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 129 அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் ஒருவர் கூட பயிலவில்லை. மேலும் 30 பள்ளிகளில் 5 சத தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். இதர பள்ளிகளில் 20 சதத்திற்கும் குறைவான தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். பள்ளிகளில் இன்றும் பல இடங்களில் தலித் மாணவர்களை கடைசி இருக்கையில் உட்கார வைப்பது. பாகுபாடு கடைபிடிப்பது போன்ற தீண்டாமையின் வடிவங்களும் இருந்து கொண்டுதான் வருகின்றன. தலித் பகுதி மக்கள் மிக மோசமாக சந்திதித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று கல்வி நிலையங்களில் படிப்பை பாதியில் நிறுத்துவது ஆகும்.

 அருந்ததியர் சமூகத்தில் இந்த எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என அன்னை தெரசா கிராமப்புற வளர்ச்சிக்கட் டளையின் ஆய்வு கூறுகிறது, 5 ம் வகுப்பில் 60 சதவீதமும், 8ம் வகுப்பில் 45 சதவீதமும், 10ம் வகுப்பில் 20 சதம் என்ற அடிப்படையிலே செல்கின்றனர் என்ற வேதனையான விபரம் மனித மனங்களை உறைய வைக்கிறது, ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் மாண வர் விடுதிகளின் நிலைமையோ இன்னும் கொடுமை யாக உள்ளது, 1565 விடுதிகள் சேரிகளைப் போலவே காட்சியளிக்கிறது, தமிழக அரசு சிறைகைதிகளுக்கு கூட ஒரு நாள் உணவிற்கு ரூ 25 முதல் 30ம்., போலீஸ் நாய்க்கு 65 ரூபாயும் ஒதுக்குகிறது, ஆனால் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவனுக்கு 18 ரூபாய் ஒதுக்குகிறது, இது உழைக்கும் மக்களாகிய தலித் மக்கள் குறித்த ஆட்சியாளர்களின் அக்கறை புரிய வைக்கிறது.

தமிழகத்தின் மக்கள் தொகையில் 19 சதம் தலித் மக்கள் உள்ளனர். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒவ் வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் தலித் மக் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, நகர மேம்பாடு என்ற பெயரால் தலித் மக்கள் சேரிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்., அடையாறு போன்றவற்றின் கரைகளில் பெரும் பகுதி தலித் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக் கென்று குடிநீர், சாக்கடை, கழிப்பறை, சுகாதார வளாகங் கள் போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது.

தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டித் தரப்பட்டுள்ளது, குடிசையில்லா நகரம் என அறிவித்து அங்கிருந்த தலித் மக்களையெல்லாம் நகரை விட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையையே அரசு செய்தது, பாதுகாப்பின்மை காரணமாக தலித்துகள் தங்கள் சொந்த சமூக மக்களின் அருகாமையிலேயே வசிக்க விரும்புகின்றனர். இந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியான ரூ 3821 கோடியை கடந்த திமுக அரசு வேறுபணிகளுக்கு திருப்பி விட்டது,

இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோதே பட்டியல் சாதி யினரின் நலனை பாதுகாக்க பல பிரிவுகள் உருவாக் கப்பட்டன, அதன்படி 1979ல் சிறப்பு உட்கூறுதிட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு பின்னர் 11 வது ஐந் தாண்டு திட்டத்தில் சப் பிளான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இதன்படி ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமை சார்ந்த மற்றும் உரிமையை பெறுவதற்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது, தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் (1995.-2010) 14298 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என ஒரு புள்ளிவிபரங்கள் தெரி விக்கிறது. இந்த நிதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தலித் மக்களுக்காக நில விநியோகத்திற்கு பயன்படுத்தி யிருந்தால் ஓர் ஆண்டிற்குள் அனைவருக்கும் நிலத்தை வழங்கியிருக்க முடியும்.

தமிழகத்தில் மொத்த நில உடைமையாளர்கள் 78,98,932 பேர், இதில் 9,03,548 பேரிடம். அதாவது 11 சதமான தலித்களிடம் மட்டுமே நிலம் உள்ளது, ஆனால் உண்மையில் 4 லட்சம் பேரிடம் வெறும் 2 ஏக்கர் நிலம் அளவு மட்டுமே உள்ளது, இது மொத்தநிலப்பரப்பில் 7 சதம் மட்டுமே ஆகும், குறிப்பாக மேற்கு மண்டலத்தில் மிகக்குறைவான அளவே தலித்துகளிடம் நிலம் உள்ளது, ஈரோட்டில் 17 சதம் தலித் மக்கள் தொகைக்கு 2 சதம் நிலமும், கோவையில் 16 சதம் தலித் மக்கள் தொகைக்கு 1.38 சதமும், நீலகிரியில் 30 சதத்திற்கு 0.90 சதம் நிலமும் உள்ளன. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் 4 இலட்சம் ஏக்கர் உயர் சாதி யினரிடமும், மீதி 1 லட்சம் ஏக்கர் நிலமே இதர சாதியினருக்கு ஏலம் விடப்படுகிறது.

ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் சாதிய ஒடுக்கு முறையும், வன்முறைகளும் ஏராளமாக நிகழ்ந்த வண் ணம் இருந்தது. ஆனால் மேற்கு வங்க நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தின் இடது சாரி அரசாங்கம் காரணமாகும். ஏனென்றால் 13 லட்சம் ஏக்கர் நிலத்தில் 7 லட்சம் ஏக்கர் நிலம் (54சதம்) தலித் மக் களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ள அவர்கள் கௌரவத்துடனும், மரி யாதையுடனும் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. என்பதை கவனிக்க வேண்டியுள்ளது, இது அந்த மாநிலத்தில் சமூக ஒடுக்குமுறை என்பதற்கு பதில் சமூக ஒற்றுமையை பேணி காத்தது. இதனால் தான் அங்கே தலித் பஞ்சாய்த்து தலை வர் மீதான வன்முறைகளோ, படுகொலைகளோ நடை பெறவில்லை.

பாரதியும், பாவேந்தனும், வள்ளலாரும், பெரியாரும் பிறந்த தமிழக கிராமங்களில் 100க்கும் மேற் பட்ட வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் இன் றளவிலும் நீடித்து வருகின்றன. எவிடன்ஸ் அமைப்பு 12 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி விபரங்களை வெளி யிட்டு உள்ளது, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவ கங்கை, தஞ்சை, நாகை, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 213 கிராமங்களில் அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 70கிராமங்களில் ரேசன் கடைகளில் சாதிய பாகுபாடு உள்ளது. 23 கடைகளில் தலித்துகள் பிறருடன் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 2 சத கடைகளே தலித் மக்களின் வசிப்பிடங்களில் உள்ளது. 2009ம் ஆண்டு கள்ளக்குறிச்சி அருகில் தச்சூரில் காசியம்மாள் என்ற தலித் பெண்ணின் கை வரிசையில் நின்ற ஆதிக்க சாதி பெண் மீது பட்டுவிட்டது என கூறி பொது இடத்தில் அவர் மானபங்கப்படுத்தப்பட்டார். 67 சத கிராமங்களில் சலூன் கடைகளில் முடிவெட்ட முடியாது. 68 சத கிரா மங்களில் பொது குழாயில் நீர் எடுக்க தடையும் , 131 கிரா மங்களில் தனித்தனி நீர் நிலைகளும் உள்ளது. ஆரம்ப சுகா தார நிலையங்களில் தலித் பெண்களுக்கு பிரசவத்தின் போது மருத்துவர்கள் தொட்டு பார்ப்பதில்லை.

மதுரை கீரிப்பட்டியில் வசந்தாமாளிகை ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தலித் பெண் சேர்க்கப்பட்ட போது அங்கிருந்த ஊழியர் கொண்டை ஊசியால் பெண்ணின் பனிக் குடத்தை குத்தி சேதப்படுத்தியுள்ளார், தீண்டாமை ஒரு பாவச் செயல் என பாடப்புத்தகங்களில் அச்சடித்து கொடுத்து விட்டு 29 கிராமங்களில் பள்ளிகளில் பாகு பாடும் காட்டப்படுகிறது. தலித் மாணவர்கள் மட்டும் துப்புறவு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதே போல் பேருந்துநிறுத்தங்களில் அமருவதில், டீக்கடைகள், ஓட்டல்களில் தனி பெஞ்ச், டம்ளர்கள் எனவும் பாகுபாடு காட்டப்படுகிறது. தபால்நிலையங் களில் தலித்துகள் நுழையக்கூடாது என்பதும், ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்களை இருக்கைகளில் அமர விடாமல் தடுப்பதும் தொடர் கதையாக உள்ளது. மலம் அள்ளும் தொழிலில் இன்றும் தமிழகத்தில் 50000க்கும் மேற்பட்ட தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதாக விபரங்கள் கூறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒடைப்பட்டியில் கலையரங்கத்தில் தலித்துகள் நுழைய தடையுள்ளது. பொது சுடுகாடுகளில் புதைக்க அனுமதிக்காத நிலையும் உள்ளது, பெரும் பகுதி தலித் மக்களுக்கான சுடுகாடுகள் ஓடைகளில் உள்ளன, மழைக்காலங்களில் அவைகளை பயன்படுத்த முடியாத நிலையில் எந்த வழியும் இல்லாது சாலை ஒரங்களில் புதைக்கும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது, அதே போல் தலித் மக்களின் பிணங்களை ஆதிக்க சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக கொண்டு செல்ல முடியாத சூழலும் உள்ளது, தேனி மாவட்டம் கூழையனூரில் எதிர்த்து கேட்ட சின்னாயி என்ற தலித் மூதாட்டி மீது இந்தாண்டு ஜனவரி மாதம் பெட்ரோல் குண்டு வீசி அவர் கொல்லப்பட்டார்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தலித் மக்கள் பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என் கிற கட்டுப்பாட்டோடு பொது இடத்தில் செல்போன் பேசக்கூடாது, பைக் ஒட்டக் கூடாது என நவீன வடிவ தீண்டாமைகளும் நிகழ்ந்து வருகிறது. நவீன காலத்தின் அறிவியல் வளர்ச்சிப் போக்கில் தீண்டாமை மாறும், மறைந்து போகும் என கருதப்பட்டு வந்தாலும், உண்மை யில் தீண்டாமையும், சாதிய படிநிலைகளும் நவீன வளர்ச்சிக்கேற்ப தங்களது வடிவங்களை மாற்றிக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. முதலாளித்துவம் தன்னுடைய நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள அடையாளங்களின் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சி செய்கிறது, அதன் பகுதியாக இனம், மொழி, சாதி, மதம் போன்றவற்றை தேவையான அளவு ஊதி பெருக்கி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.

தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தலித் கட்சிகள் எல்லாம் இன்று தேர்தல் அரசியல், தமிழ் தேசியம், இன உணர்வு என பிரச்சனை களை திசைத்திருப்புகின்றன. ஒரு பகுதி அரசியல் கட்சிகள் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை நம்பி தலித்துகளை கைவிடும் போக் கையே மேற்கொள்கின்றன. நாம் தற்போதைய நிகழ்வுகளை பார்த்தோமானால் தெளிவாக தெரியும், நாலு மூலைகிணறு, கொடியங்குளம், வாச்சாத்தி, கோட்டைப் பட்டி, தாமிரபரணி, பரமக்குடி துப்பாக்கி சூடுகளும், காவல்துறை தாக்குதல்களும், திண்ணியம், காங்கேய னுர், மேலவளவு, உத்தபுரம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சினேந்தல், சிதம்பரம் நடராஜர் கோவில் என நூற்றுக்கணக்கான இடங்களின் பெயரை சொல்ல முடியும், தலித்துகளுக்கு எதி ரான நடவடிக்கைகள் என்று.... ஆரோக்கியமின்மை, தரமற்ற வாழ்க்கை, குடிநீர் பற்றாக்குறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள் கட்டமைப்பு வசதியின்மை போன்றவையும் தலித் மக்களுக்கு மிகுந்த நெருக்கடிக்களை கொடுத்து வருகின் றன.

இந்த நிலையில் தான் சமத்துவபுரங்களை உருவாக்கு கிறோம் என கடந்த திமுக அரசு பம்மாத்து செய்தது. ஊருக்கு வெளியே கட்டப்படும் சமத்துவபுரங்களால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது.. ஒவ்வொரு கிராமத் திலும் சமத்துவபுரங்கள் மலர வேண்டும், அதற்கு இன் றைய உத்தபுரம் எப்படிஉத்தமபுரமாக மாறும் என அதி கார வர்க்கத்தின் ஒரு சிறுபகுதி மேற்கொண்ட முயற்சியால் சமூக ஒருமைப்பாட்டை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் உருவாக்கினார்களோ.. அதே போல் தமிழக ஆட்சியார்களும், காவல்துறையும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலித் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் யாவும் சலுகைகளோ, இலவசங்ளோ அல்ல மாறாக அவை அவர்களின் உரிமை என்கிற கோணத்திலிருந்து ஆதிக்க சாதியினரும் பார்க்க வேண்டிய அணுகுமுறை தேவைப்படுகிறது, அதை நோக்கிய போராட்டத்தை தொடர்ந்து தமிழக மண்ணில் நடத்த வேண்டியுள்ளது.

கால சக்கரத்தை முன்னோக்கி நகர்த்த தடையாக இருக்கும் தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறைகளை முற்றாக ஒழித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.. ஆனால் கல்விநிலையம் முதல் அரசு அலுவலகங்கள் வரை இன்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆண்டுக்காண்டு நடைபெற்றாலும், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றது என பாடப்புத்தகங்களில் அச்சடித்து விநியோ கம் செய்தாலும், ஆளும் வர்க்கத்தின் உறுதியான நடவடிக்கையிலேயே தீண்டாமை ஒழிப்பை சாத்தியப்படுத்த முடியும்.

தலித் மக்களின் மேம்பாடு என்பது ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களின் மேம்பாட்டோடு இணைந்தது என்கிற அடிப்படையில் சாதிய பாகுபாடுகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளையும் வேகப்படுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதே போல் இளைய தலைமுறையும் அகமண முறையில் இருந்து புறமண முறைக்கு மாற முயற்சி செய்ய வேண்டும். அது தான் சாதிய கட்டமைப்பை ஒரு பகுதி உடைத்தெறிய பயன்படும்சமூகத்தின் பொதுபுத்தியிலும் மாற்றம் வரவேண்டும்.

- முத்துக்கண்ணன்

Friday, December 9, 2011

வெள்ளை பலூன் : உலக சினிமா


கொண்டாட்டங்களை விரும்பாத மனித மனம் இருக்க முடியுமா? பண்டிகைகளையும், திருவிழாக்களையும் நாளும் கிழமைகளையும் கொண்டாடிப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது. வேட்டை நாயாய் விரட்டிக் கொண்டேயிருக்கும் வறுமையையும், வாழ்க்கையையும் அன்றைக்கு ஒரு பொழுதாவது வென்று பார்த்துவிடும் முயற்சியின் வெளிப்பாடுதானே இந்தக் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும்.

மற்ற எல்லாக் காலங்களைக் காட்டிலும், கொண்டாட்டக் காலங்களில் மனிதர்களின் அன்பு அபரிமிதமாய் ஊற்றெடுத்து பூரிக்கிறது. தனக்கென்று மட்டும் வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் எதையாவது வாரி வழங்குகிறது, வாழ்த்துக்களாலும் பரிசுகளாலும் சகமனிதனை திணறடித்து விடுவது இது போன்ற கொண்டாட்டத் தருணங்களில்தானே அதிகமாய் சாத்தியப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பெரியவர்களை காட்டிலும், குழந்தைகளுக்குத்தான் விழாக்காலங்களில் புதுசா றெக்கை முளைத்து விடுகிறது. பள்ளிக்குப் போக வேண்டிய தொல்லை இல்லை என்கிற உற்சாகத்தில் பட்டாம்பூச்சிகளாகி சிறகு விரித்து பறக்கிறார்கள் குழந்தைகள். சின்னச்சின்ன பரிசுகளைக் கொடுத்து சக குழந்தைகளை சிலிர்க்க வைத்துவிடுகிறார்கள். காக்கா கடி கடித்து பலகாரங்களை பரிமாறிக் கொள்கின்றார்கள். இந்த சந்தோசத்தை அடைய பெற்றோர்களை படாத பாடுபடுத்தியும் விடுவார்கள் சமயத்தில் தாங்கள் விரும்பியதை அடைவதற்காக அழுது அடம் பிடித்து கையில் கிடைப்பதை போட்டு உடைத்து.. வீட்டையே ரணகளமாக்கி விடுகிற குழந்தைகளும் உண்டு. இதெல்லாமுமே தாங்கள் விரும்பியதை அடைவதற்காகத்தான்.

அப்படி ஒரு சிறுமிதான் ரஸியா. தான் விரும்பிய தங்க மீனை வாங்குவதற்காக அவள்படும் பாடுகளும், அதனூடே கடந்து செல்லும் துன்பமிக்க மனிதர்களும் நிறைந்த படம்தான்  தி ஒயிட் பலூன் (The White Baloon).

புத்தாண்டை வரவேற்க நகரமே உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம்தான் புத்தாண்டு பிறக்கப்போகிறது. அதற்கான அறிவிப்பும் வானொலிப் பெட்டியில் வந்து கொண்டேயிருக்கிறது. புத்தாண்டை சந்திக்கவும் கொண்டாடவும் கேக்குகளையும் விதவிதமான இனிப்புகளையும் வாங்கிக் கொண்டு எல்லோரும் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது கதாநாயகியான ரஸியா, கையில் ஒரு பலூனை வைத்துக்கொண்டு இனிப்புகளும் மீன்களும் விற்கும் கடை ஒன்றின் முன்பு நின்று கொண்டிருக்கிறாள். அவளைத் தேடிக்கொண்டு வரும் தனது தாயிடம் அந்தக் கடையில் இருக்கும் தங்க மீனை வாங்கித்தருமாறு கேட்கிறாள் பேசாமல் வா என்று அதட்டி விட்டு செல்லும் தாயையே ஏக்கத்துடன் பின் தொடர்கிறாள். நம்ம வீட்டுலேயே நிறைய தங்க மீன் இருக்கே என்று தட்டிக்கழிக்கும் தாயிடம் போம்மா அதெல்லாம் ஒல்லிக் குச்சியாட்டம் இருக்கு... கடையில இருக்கும் மீன் குண்டா அழகாயிருக்கு அது நீந்தும் போது டான்ஸ் ஆடுற மாதிரியே இருக்கு என்று சிணுங்குகிறாள்.

கண்ணைக் கசக்கிக்கொண்டே அழும் தங்கைக்காக அவளது அண்ணன் தாயிடம் பரிந்து பேசுகிறான். நச்சரிப்பு தாங்காத தாயும் தன்னிடமிருக்கும் கடைசியான ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மகனிடம் கொடுக்க, அதை அவன் தனது தங்கையிடம் தருகிறான் அதை ஒரு கண்ணாடி குடுவைக்குள் போட்டுக் கொண்டு மீன்கடைக்கு ஓடுகிறாள் ரஸியா. வழியில் பாம்பாட்டி வித்தையை வேடிக்கை பார்க்கும் போது அவளது பணம் பாம்பாட்டியிடம் போய் விடுகிறது, அதை அழுது அடம் பிடித்து திரும்பப் பெற்றுக் கொண்டு மீன் கடைக்கு வருகிறாள்.

அவளின் வருகைக்காக காத்திருப்பதைப் போலவே நீந்திக் கொண்டிருக்கும் தங்க மீனைப் பார்த்து புன்னகைத்து விட்டு கடைபெரியவரிடம் பேரம் பேசிமுடிக்கும் போது குடுவையைப் பார்க்கும் ரஸியா அதில் இருந்த பணத்தை காணாமல் அய்யோ... இதுலதானே வச்சிருந்தேன்.... இப்போ காணோமே பணத்தை தொலைச்சிட்டேன் என அழத்துவங்குகிறாள். வந்த வழியே சென்று தேடுமாறு பெரியவர் வழிகாட்டுகிறார். அப்போது அங்கே வரும் ஒரு கிழவியின் உதவியுடன் பணத்தைத் தேடத்துவங்குகிறாள்.

அப்போது சற்று தொலைவில் தான் தவறவிட்ட பணத்தைக் காணும் ரஸியா அதை எடுக்கச் செல்லும் போது அந்தவழியே ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக செல்கிறது. அதன் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் அந்த 500 ரூபாய் நோட்டு அருகிலுள்ள கடையின் முன்புறம் கம்பியால் மூடப்பட்டிருக்கும் குழிக்குள் விழுந்து விடுகிறது. கண்ணுக்கு எட்டிய பணம் கைக்கு எட்டாததால் ஏமாற்றமடையும் ரஸியா எப்படி பணத்தை எடுப்பது என யோசிக்கிறாள்.

அருகில் இருக்கும் தையல் கடைக்காரரிடம் பணம் விழுந்த விஷயத்தை சொல்லி உதவுமாறு கூறிவிட்டு கிழவி போய்விடுகிறாள். புது வருடப் பிறப்புக்காக துணி தைக்கக் கொடுத்தவர்களுக்கும் தையல் கடைக்காரருக்குமிடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு விடுவதால் சோர்வடையும் ரஸியா இடையே மீன் விற்கும் கடைக்கு சென்று என்பணம் கிடைத்துவிட்டது, அதை எடுத்து வருகிறேன் என் மீனை யாருக்கும் விற்று விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் பணம் கிடக்கும் கடைக்கு வருகிறாள்.

தங்க மீன் வாங்கப் போன தங்கையைத் தேடிவரும் அவளது அண்ணன் பணம் தொலைந்த விஷயத்தை அறிந்து தையல்கடைக்காரரின் உதவியை கேட்கிறான். அவரோ, பக்கத்துக் கடை முதலாளி புது வருடப் பிறப்புக்கு சொந்த ஊருக்கு போய்விட்டார் ஒருவாரம் கழித்துத்தான் வருவார் பணம் பத்திரமாகத்தான் இருக்கும் அடுத்த வாரம் வந்த எடுத்துக்கலாமே என்கிறார். புத்தாண்டு பிறப்பு நெருங்கிவரும் அறிவிப்பு வந்து கொண்டேயிருக்கிறது. அவர்களின் தேடலும் தொடர்கிறது. பணத்தை குழிக்குள் இருந்து எடுக்க அண்ணனும் தங்கையும் பல முயற்சிகளை எடுக்கிறார்கள். எதுவும் பலனளிக்க வில்லை. பணம் விழுந்து கிடக்கும் கடைக்காரரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வருகிறான் அண்ணன்.

அப்போது அந்த வழியே பலூன் விற்கும் சிறுவன் ஒருவன் வருகிறான் அவனிடமிருந்து பலூன் கட்டப்பட்ட குச்சியை பறித்து வருகிறான் அண்ணன். திருடன்.. திருடன்.. என கத்திக்கொண்டு துரத்திவரும் சிறுவனும் ரஸியாவின் அண்ணனும் கட்டிப்புரண்டு சண்டையிட்டு, பிறகு விஷயமறிந்து பலூன் சிறுவன் சமாதானமாகி அவர்களுடன் சேர்ந்து பணத்தை எடுத்துவிட மூவரும் முயற்சிக்கிறார்கள். சூயிங்கம் வாங்கி வந்து குச்சியில் ஒட்டி எடுக்கலாமே என திட்டமிட்டு சூயிங்கமுக்கு அலைகிறார்கள். அதுவும் கிடைக்கவில்லை பலூன்களை விற்கணும் லேட்டாகுது எனச் சொல்லிவிட்டு பலூன் சிறுவன் சென்றுவிடுகிறான்.

மழை வருகிற சூழல் இடி இடிக்கிறது தூறலும் ஆரம்பமாகிறது. அதிக மழை பெய்து வெள்ளம் வந்துவிட்டால் பணத்தை எடுக்க முடியாது. ஒன்றும் புரியாமல் கடை வாசலில் அமர்ந்தபடி அண்ணனும் தங்கையும் விழிக்க புது வருடம் பிறக்க இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கிறது. அதற்குள் பணம் கிடைக்காதா.. தங்க மீன் வாங்கி விட மாட்டார்களா என பார்வையாளர்களும் யோசிக்க சூயிங்கமுடன் மீண்டும் வருகிறான் பலூன் சிறுவன் அங்கே கவிதையாய் அரங்கேறுகிறது ஒரு விளையாட்டு. மூன்று பேரும் புன்னகையோடு சூயிங்கம்மை போட்டி போட்டுக்கொண்டு மென்று எடுத்து பலூன் குச்சியின் அடிப்பாகத்தில் ஒட்டி பணம் கிடக்கும் குழிக்குள் இறக்குகிறார்கள்.

சில நிமிட முயற்சிக்குப்பின் குச்சியில் ஒட்டியபடி பணம் மேலே வருகிறது. பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி தங்க மீனோடு வருகிறார்கள். புத்தாண்டு பிறப்பதற்கு அடையாளமாக வெடிச்சத்தம் கேட்கிறது. புத்தாண்டு பிறந்து விட்ட அறிவிப்பும் வருகிறது. கொண்டாட்ட இசையுடன் படம் நிறைவடைகிறது.

புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரெஸ்தெமியின் நேர்த்தியான திரைக்கதையை படமாக்கிய இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு இதுதான் முதல் படம். மனிதாபிமானம் வழியும் சம்பவங்களை கவிதையாகச் சொல்வதே தனது பாணி என அறிவித்து படம் எடுத்திருக்கும் இவரது படங்களில் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை.

1995 இல் வெளியான இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றது. உலக சினிமா வரிசையில் வைத்து கொண்டாடப்படுகிற இப்படத்தின் இயக்குநர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். படம் நெடுக வரும் பாம்பாட்டி, கிழவி, தையல் கடைக்காரர், பலூன் விற்கும் சிறுவன் பணம் விழுந்து கிடக்கும் கடைக்காரர், ரஸியாவின் அண்ணன் என எல்லோருமே அன்பொழுகும் மனிதர்களாகவே உலா வருகின்றனர்.

நிமிடத்திற்கொரு சதி செய்யும் வில்லன்களையும், வன்மம் மிகுந்த மனிதர்களையும் வீச்சரிவாளோடு திரியும் வீர சாகச நாயகர்களையும் பார்த்துப் பழகிய நமக்கு இப்படத்தின் பாத்திரங்கள் வித்தியாசமாகவே தெரிகிறார்கள். இவர்களெல்லாம் சேர்ந்து ரஸியாவின் புத்தாண்டை கொண்டாட்ட நாளாக்கி விடுகிறார்கள். படத்தை பார்த்தால் நீங்களும் கொண்டாடுவீர்கள் ரஸியாவை.

- எஸ்.கருணா

படுகொலைகளுக்கு பழி தீர்க்கும் மனித இனம்!


வெள்ளை மாளிகையின் பாதாளச் சாக்கடையில் பதுங்கி, ஒளிந்து கொண்டிருந்த பராக் ஒபாமாவை நேட்டோ படைகள் வெளியே தரதரவென இழுத்து சுட்டுக்கொன்றன. அமெரிக்காவில் அரசு அமைக்கும் அதிகாரத்தை வால்ஸ் டிரிட்டை கைப்பற்றுவோம் குழுவின் கையில் ஒப்படைத்தன நேட்டோ படைகள். பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னராக நடந்துமுடிந்து மக்கள் மறந்துபோயிருக்க வேண்டிய செய்தியிது. ஆயினும், நடக்கப்போவதில்லை.

வேலை கொடு, உணவு கொடு, ஆட்சியை விட்டு வெளியேறு என குரல் எழுப்பும் பெருந்திரள் போராட்டங்கள் ஒடுக்கப்படும் முயற்சியில்  போராட்டக்காரர்கள் கைவிலங்கிட்டு இழுத்து செல்லப்படுவது அமெரிக்காவாக இல்லாமல் ஆசியா அல்லது அரபுநாடாக இருந்திருந்தால் இந்நேரம் அந்நாட்டின் அதிபர் நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டு அவரின் பிணம் சாக்கடையில் வீசப்பட்டிருக்கும். அந்த நாட்டு மக்களின் போராட்டத்தை, ஜனநாயக உரிமைகளை அமெரிக்கா மதிக்கிறதென கிலாரி கிளிண்டன் புதிய அதிபரின் பக்கத்தில் அமர்ந்து பேட்டியளித்திருப்பார்.

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடாக இருந்தாலும் கூட அமெரிக்கா இப்படி செய்யத் தயங்காது. ஏனெனில், நேட்டோவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே அமெரிக்காவின் நோக்கமாக இருக்குமெயொழிய அதன் அதிபர்களை அல்ல. நேட்டோ, உலகை தன் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்க வேண்டும், அமெரிக்கா நேட்டோவை தன் சட்டைப்பையில் வைத்திருக்க வேண்டும். இது தான் அமெரிக்காவின் பொருளாதாரக்கொள்கை, அயல்நாட்டுக்கொள்கை, உள்நாட்டுக்கொள்கை, இராணுவக் கொள்கை என அனைத்தும் ஆகும்.

வால்ஸ் டிரீட்டை கைப்பற்றுவோம் எனும் இலட்சிய அறிவிப்புடன் 100 பேர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை முதலில் அத்தனை முக்கியமானதாக அதிபரும் கண்டு கொள்ளவில்லை, ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. எங்கிருந்து தீப்பொறியாய் வெளிச்சம் கிளம்புமென எதிர்பார்த்திருந்த அமெரிக்கத் தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் எண்ணங்களுக்குள் பற்றவைத்துக்கொண்ட அந்த தீ இன்று உலகின் வீதியெங்கும் பரவத்துவங்கிய பின்னர், அடக்குவது அவ்வளவு சுலபமாக இல்லை அமெரிக்க அரசுக்கு. தன்னெழுச்சியாக செப்.17 அன்று துவக்கிய போராட்டத்தை முதலில் கிள்ளியெறிந்து விடலாம் என்று நினைத்தவர்கள், இன்று போராட்டக்காரர்களை விலங்கிட்டு அள்ளிவீசிட எடுக்கும் அராஜக முயற்சிகளும் அவ்வளவாக பலனிக்கவில்லை. நாங்கள் 99 என்ற முழக்கத்துடன் துவங்கிய எழுச்சி இன்று ஒராயிரம் கோஷங்களை உலகெங்கும் எழுப்பியுள்ளது.

அரபு எழுச்சியின் தொடர்ச்சியாய், அதன் அனுபவங்களைக் கொண்டு போராடும் எங்களுக்கு வால்ஸ்டிரீட் தேவையில்லை. அரசியல்வாதிகளும் தேவையில்லை. போராட்டம் மூலம் எங்களின் இறுதி இலட்சியத்தை அடைந்தே தீர்வோம். ஒரே தீர்வு புரட்சி மட்டுமே என்ற அறைகூவலுடன் துவங்கியுள்ள போராட்டம் ஒரு நாளில் திடீரென உதயமானதல்ல. 2011, ஆகஸ்டு 2 முதல் பலவித பிரச்சாரங்கள், கூட்டங்கள், பல குழுக்களை இணைத்த விவாதங்கள், தொடர் போராட்டங்கள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போராட்டமாகும். ஆர்ப்பாட்டங்கள் சம்பிரதாயமானதென நினைத்து அவமரியாதையாய் பிரச்சாரம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு வரலாறு கற்றுக்கொடுத்த பாடம் மட்டுமல்ல, எச்சரிக்கையாகவும் எதிரொலிக்கும் இப்போராட்டம் முதலில் 100 பேருடன் துவங்கிய ஆர்ப்பாட்டம் தான் எனினும், அதன் அதிர்வுகள் உலகில் நாளை நடக்கப்போகும் அசாதாரண நிகழ்வுகளுக்கான முன்னறிவிப்பைத் தான் எடுத்துரைக்கின்றன.

வரலாற்றின் படிப்பினைகளை உள்வாங்கிக்கொண்டு, ஆழமான மாற்று அரசியல் உணர்வுடன் துவங்கியுள்ள இப்போராட்டத்தில் சோசலிஸம் என்பது தீர்வாக முன்வைக்கப்படவில்லையெனினும், புரட்சி எனும் தீர்வு சோசலிஸமே எதிர்காலம் என கட்டாயம் கற்றுக்கொடுக்கும். இளைஞர்களும், மாணவர்களும், தொழிலாளர்களும் இணைந்த கூட்டணியாக போராட்டம் உருவாகியுள்ளதால் மட்டுமல்ல, உலகெங்கும் போராட்டத்தை விதைத்து, தலைமையேற்கும் இக்கூட்டணியின் பெரும்பாலோர் ஏற்கனவே சோசலிஸத்துக்காக போராடுபவர்கள் தான். உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற கோஷமே புதிய கவிதையாய் நாங்கள் 99 என்று மாறி ஒலிக்கிறது. உலகப்புரட்சி (அமெரிக்கா புரட்சியை அப்படித்தான் கூறவேண்டும்) அறிவிக்கப்படும் தினத்தில் பெரும் கோஷமாய் ஒலிக்க வேண்டிய வார்த்தையான அமெரிக்காவின் வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்ற வார்த்தைதான் இன்று ஒலிக்கப்பட்டிருக்கிறது.

உலக நிதி மூலதனத்தின் தலைமையகத்தை கைப்பற்றுவதன் மூலம் உலகில் நிதி மூலதனமே இல்லாத சூழலை உருவாக்கவேண்டும், உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் எனும் கோஷத்தின் இறுதி இலட்சியம் அதுவே. சோவியத் ஒன்றியத்தை திட்டமிட்டு வீழ்த்தி, அதைத் தொடர்ந்து கம்யூனிச நாடுகளையெல்லாம் பிரித்தாண்ட உலக  முதலாளித்துவத்தின் ஆயுதம் உலக நிதிமூலதனம் எனில், அது வீற்றிருக்கும் கருவறை தான் வால்ஸ்டிரீட். இன்று அங்கே ஒலிக்கும் இந்தக்குரல்கள் காலத்தின் குரல்களாய் பெரும் சத்தமாய் ஒலிப்பதை உலகம் உற்றுக்கேட்கிறது. வால்ஸ்டிரீட் இருக்கும்வரை உலகில் ஜனநாயக நாடு, சுதந்திரநாடு என சுயமரியாதையோடு எத்தேசமும் இருக்க முடியாது என்ற வரலாற்றின் பாடத்தை கற்றுக்கொண்ட உலகத்தொழிலாளர் வர்க்கம் வால்ஸ்டிரீட்டுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் புதிய சரித்திரத்தை படைக்கத் துவங்கியுள்ளனர். இது மிகப்புதியது மட்டுமல்ல, வரலாற்றின் மகத்தான பங்களிப்புமாகும். உலகின் முகத்தை மாற்றப்போகும் போராட்டங்களுக்கான துவக்கமென இதை நாம் வரவேற்கலாம்.

உலக நிதி மூலதனத்தை ஒழிப்பதன் மூலம் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான பொருளாதாரக் கூட்டமைப்பு மட்டுமல்ல, இராணுவக் கூட்டமைப்பின் அவசியமும் அப்போதுதான் அழியும். நாடுகளின் மீது படையெடுத்து ராஜ்ஜியம் அமைத்து ஆண்ட காலனியாதிக்க ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னர், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட முதலாளித்துவம் ஜனநாயகம் என்ற வார்த்தையைத் தான் முதலும், பெரியதுமான மூலதனமாக இன்று வரை கருதுகிறார்கள். பிரிட்டிஷ் போல் ஏதேனும் ஒற்றை நாடு உலகை ஆள்வது என்பதும் ஒரு ஆபத்தென உணர்கிற முதலாளித்துவம், ஆளநினைப்பவர்களைக் கொண்ட ஒரு கூட்டணியை உருவாக்கி அதை ஜனநாயக நாடுகளின் கூட்டணி என நாகரிகமாய் பரப்புவதற்காக திட்டமிடுகிறது. உலக முதலாளித்துவத்தின் தலைமையாக மாறத்துவங்கும் அமெரிக்கா தானே, அக்கூட்டணியை உருவாக்க நினைக்கிறது. 1949ல் வட அமெரிக்கா-, ஐரோப்பியாவின், 12 நாடுகளை இணைத்து வட அட்லாண்டிக் நாடுகளின் கூட்டமைப்பாக, பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் உருவாகையில், அது ஒரு இராணுவக்கூட்டமைப்பாக தன்னை அறிவித்துக்கொண்ட போது, அதன் மறைமுக அடிப்படை நோக்கம் உலகை மீண்டும் நவீன காலனியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதுதான். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் இவ்வமைப்பு உருவாகியிருந்தாலும், அதன் பின்னணி இதில் எள்ளளவும் இல்லை. ஆனால், உலகில் மிக வலுவான நாடாக மட்டுமல்ல, உலக நாடுகள் பலவுடன் நேச சக்தியாகவும் விளங்கிய ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நோக்கம் நேட்டோவில் உண்டு. அதனால் தான், நேட்டோ உருவாகையில், அதன் நோக்கத்தை பின்வருமாறு விளக்கினர்.

அமெரிக்காவை உள்ளேயும், ரஷ்யாவை வெளியேயும், ஜெர்மானியர்களை கீழேயும் வைத்துக்கொள்வதற்காக துவங்கும் அமைப்பே நேட்டோ. அதாவது, அமெரிக்காவின் மறைமுக ஆட்சியின் கீழ் உலகை கொண்டுவரவேண்டும். பொதுவுடைமை நாடான ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இங்கு வெளிப்படையாகவே கூறப்படுகிறது. ஆகையால் தான் இது அரசியல் கூட்டமைப்பாகவும் விளங்கியது. இதனால் அன்று சோவியத் ரஷ்யா, 8 கம்யூனிச நாடுகளை இணைத்து 1955ல் வார்சா உடன்படிக்கை என்ற அமைப்பை உருவாக்கியது. 1991ல் சோவியத் ரஷ்யா திட்டமிட்டு உடைக்கப்பட்ட பின்னர், இதிலிருந்த நாடுகளையும் நேட்டோ தன்னுடன் இணைத்துக்கொண்டு, உலகின் ஒரே இராணுவக் கூட்டமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது.

1949--1991 வரை நோட்டோ சோவியத் ரஷ்யாவை மிகத் தீவிரமாக எதிர்த்தது. சோவியத் ரஷ்யாவும் நேட்டோவின் போர் நடவடிக்கைகளை எதிர்த்தே வந்ததால், எந்த நாட்டையும் அன்று நேட்டோவால் அடிமைப்படுத்த இயலவில்லை. அதனால்தான், இன்று சோவியத் ரஷ்யா இல்லாத சூழலில், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, என நேட்டோ போர் ஆக்கிரமிப்பு செய்கின்றன. ஜனநாயகம் என்ற வார்த்தைதான் இன்று நேட்டோ கூட்டமைப்பின் கடவு வார்த்தை. முதலில், நேட்டோ செல்லும், அதன் பின்னாடியே வால்ஸ்டிரீட் மூலதனமும் செல்லும். இன்று அந்த நிதிமூலதனத்தை எதிர்த்தே போராட்டம் என்பது இராணுவக் கூட்டமைப்பின் மூலம் கட்டியமைக்கப்பட்ட முதலாளித்துவ கூட்டமைப்புக்கு எதிரான போராட்டமாகும். வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்ற இப்போராட்டத்தின் பன்முகங்களில் இன்னும் பல உள்ளன. ஆக, இதுவரையான உலக வரலாற்றை மாற்றிஎழுதப்போகும் போராட்டமென நாம் இதை வர்ணிப்பதில் அர்த்தங்கள் ஆயிரமுண்டு.

உலக வங்கியும், சர்வதேச நிதி ஆணையமும் அடுத்த சில ஆண்டுகளில் இருக்குமா என்பதும் இப்போராட்டத்தின் திசைவழிகளில் எழும் கேள்விகளில் சிலவாகும். ஆம், இவை மட்டுமல்ல, ஜி7, ஜி20-\22 ஆகிய அனைத்து அமைப்புகளும் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகள் மீதான பொருளாதார ஆக்கிரமிப்புகளுக்கு வழியேற்படுத்திக் கொடுத்த அமைப்புகள் தான். நேட்டோ ஒரு இராணுவக் கூட்டமைப்பு என்பது போல், இவை பொருளாதாரக் கூட்டமைப்புகள், அவ்வளவுதான். ஆனால், நோக்கம் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் வளர்ச்சிதான். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் நடந்த போர் அனைத்தின் மூலமாகவும் தன்னை வளர்த்துக்கொண்ட உலக நிதிமூலதனம், உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டும் முதல் எதிரி அல்ல, உலக சமாதானத்திற்கும் தான்.

லிபியாவில் மக்கள் போராடியபோது, அங்கே யாரும் அழைக்காமல் சென்று,ஆயுதக் கலவரம் செய்து, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி போராடியவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்ற பெயரில் அறிவித்த, நேட்டோ இப்போது அமெரிக்கா என தனது அடுத்த இலக்கை அறிவித்திருக்கவேண்டும். ஆனால், சிரியா என அறிவிக்கப்பட்டுள்ளது, அறிவித்திருப்பதும் நேட்டோ அல்ல, எப்போதும் அறிவிப்பது அமெரிக்கா தான். ஈரான், வடகொரியா, கியூபா என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் புதிய நாடாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளதில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவும், சீனாவும் ஆசிய நாடுகளில் பெரிய நாடுகளாக வளர்ந்தால் அமெரிக்காவுக்கு ஆபத்தாம். அதனால். இங்குள்ள கடற்பகுதிகளில் நேட்டோவின் கப்பற்படைகள் எப்போதும் நிற்குமாம். இந்தியா, சீனாவுடன் பொருளாதார உடன்பாடுகள் மேற்கொண்டவுடன், அமெரிக்கா புதிய மிரட்டல்களை இந்தியாவுக்கே விடுகிறது. ஆசிய நாடுகள் ஆசியாவில் நட்பாக இருந்தால், வளர்ந்தால் அமெரிக்காவுக்கு என்ன ஆபத்து? கியூபாவில் உள்ள ஏராளமான குழுக்களை திரட்டிவருகிறோம், விரைவில் அங்கு ஜனநாயகத்தை மலரச் செய்வோம் என கிலாரி அறிவித்துள்ளார். காரணம், லத்தீன் அமெரிக்கா நாடுகள் கியூபாவின் பின்னால் சேர்ந்து ஒரணியாக திரள்வதால், தன்னுடைய ஜனநாயகம் என்ற கடவுச்சொல்லை பயன்படுத்தி அங்கு நுழைய முயல்கிறது அமெரிக்கா. அமெரிக்கா எனில் அமெரிக்க மக்கள் அல்ல, அமெரிக்க வால்ஸ்டிரீட் என்பதால்தான், நாங்கள் 99 - ஒரு சதத்துக்காக அமெரிக்காவா அல்லது எங்களுக்காகவா என கேள்வியெழுப்பி நடக்கும் போராட்டம் முக்கியமானதாக மாறியுள்ளது. உலக நாடுகளின் ஆதரவு பெருக இப்படியொரு உலக அரசியல் தேவை அதிகம் உள்ளதால் பெருகி வளர்கிறது ஆதரவுப் போராட்டங்கள்.

ஆக, வால்ஸ்டிரீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது தற்செயலான ஒன்றல்ல. இதுவரையான உலக வரலாற்றை மாற்றுவதற்கான மகத்தான போராட்டம். மாற்றம் என்ற வார்த்தையைத் தவிர உலகில் அனைத்தும் மாறும் என்ற மார்க்ஸின் வரிகளை வழிமொழிந்து உரக்கப்பேசும் போராட்டம். முதலாளித்துவத்தின் இறுதி சாசனம் விரைவில் எழுதப்படும் என நம்பிக்கை விதைக்கும் போராட்டம். உலகில் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த போர் மரணங்கள், பட்டினிச் சாவுகள், வேலையிழப்புவிவசாயம் -கடன் தொல்லையால் நடந்த தற்கொலைகள், மருத்துவ வசதி இல்லாமல் நடந்த மரணங்கள் என அனைத்தும் உலக நிதி மூலதனத்தினால் நடந்தவைதான், என்பதால் வால்ஸ்டிரீட்டை ஓய்க்காமல் மனிதஇனம் தன் மீதான படுகொலைகளுக்கு பழி தீர்த்துக்கொள்ள இயலாது.

உடனடியாக இவை அனைத்தும் நடந்துவிடும் என நாம் கூறவில்லை. ஆனால், இவையெல்லாம் நடக்கப்போகின்றன, அதற்கான காலம் துவங்கி விட்டது என்பதை உலகம் உணரத்துவங்கிவிட்டது. வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் போராட்டக்காரர்கள் துவக்கிவைத்திருக்கிறார்கள். ஆம், துவக்கி மட்டுமே வைத்திருக்கிறார்கள். உலகத்தொழிலாளர் வர்க்கம் அதை முன்னெடுத்து செல்லும்.

- இல.சண்முகசுந்தரம்

Thursday, December 8, 2011

குடிகாரச் சந்தையும் கிங்பிஷர் கோமானும்!

சாராய வியாபாரி விஜய் மல்லையாவின் சாம்ராஜ்யம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அதை காப்பாற்றுவதற்கு இந்திய நாட்டின் அரசாங்கமே முன்முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் கோடானகோடி இந்திய மக்கள் வரலாறு காணாத வாழ்வியல் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை காப்பாற்றுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதே அரசாங்கம், அவர்களை அனைத்துவிதத்திலும் அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறது. கோடிகளில் புரளும் பெரும் பணக்கார சீமான்களை வாழ வைப்பதற்காக ஏழை, எளிய மக்களை தெருக்கோடிகளுக்கு விரட்டுகிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

விஜய் மல்லையாவின் கதை சமீப நாட்களாக ஊடகங்களில் உலவிக் கொண்டிருக்கிறது. அவரது கிங் பிஷர் விமான நிறுவனம் மிகப் பெரும் கடன் வலையில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தில் பணியாற்றிய விமானிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய சம்பளம் கூட கொடுக்காததால் அவர்கள் வேலையைவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால் விமானங்களை இயக்க முடியாமல் கிங் பிஷர் நிறுவனம் திணறிக் கொண்டிருக்கிறது. நிறுவனத்தை காப்பாற்ற அரசாங்கம் உதவ வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் மல்லையா.

பிற போட்டி நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்ததாலும், ஒரு ஊதாரி செலவாளியான மல்லையாவுக்கு உதவவேண்டுமா என பொதுவாக கருத்து பரவியதாலும் சுதாரித்துக் கொண்ட மத்திய அரசு, மல்லையாவின் நிறுவனத்தை காப்பாற்ற அரசாங்கம் உதவாது என்று கைவிரித்துவிட்டது. மீசையில் மண் ஒட்டாத குறையாக, அரசாங்கம் உதவவேண்டியதில்லை, நாங்களே சமாளித்துக் கொள்வோம் என்று வீராப்பாக பேட்டியும் கொடுத்துவிட்டார் விஜய் மல்லையா. கிங் பிஷர் விமான நிறுவனம் நெருக்கடியில் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியானாலும், உண்மையில் அதன் உரிமையாளரான விஜய் மல்லையா தனிப்பட்ட முறையில் நெருக்கடியில் சிக்கவில்லை. அது எப்படி?

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மல்லையா தனது தந்தைக்கு பிறகு 20 வது வயதிலேயே குடும்பத்தொழிலான சாராய வியாபார கம்பெனிக்கு பொறுப்பேற்றார். அப்போது இவர் வசம் ஒரேயொரு பிராந்தி உற்பத்திக் கம்பெனி, ஒரு மருந்துக் கம்பெனி மற்றும் ஒரு பேட்டரி உற்பத்தி நிறுவனம் ஆகியவையே இருந்தன. அப்போது கிடைத்த வருவாய் வெறும் 100 மில்லியன் டாலர் மட்டுமே. இன்றைக்கு இந்திய குடிகாரச் சந்தையில் 50 சதவீதத்தை கையில் வைத்திருக்கிறார் விஜய் மல்லையா. 2011ம் ஆண்டு கணக்குப்படி இவருடைய சொத்து மதிப்பு 22ஆயிரத்து 850 கோடி ரூபாய். யுபி ஹோல்டிங் லிமிடெட் எனப்படும் யுனைடெட் பிரேவரிஸ் நிறுவனம் என்பதை தலைமை நிறுவனமாக கொண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ், மங்களூர் கெமிக்கல்ஸ், யுபி இன்ஜினியரீங், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்பட ஏராளமான நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.

தமிழ்நாட்டில் ஒளிப்பரப்பாகும் விஜய் டி.வி.யும் முன்பு இவர் வசம் இருந்தது. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமல்ல, உலகின் பலபகுதிகளிலும் மிகமிக ஆடம்பரமான அரண்மனை போன்ற வீடுகள், ஹோட்டல்கள் என ஏராளமான சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் செயின்ட் மார்க்கரட்டே எனும் ஒரு தீவையே விலைக்கு வாங்கி அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பெங்களூரில் சுமார் 100 கோடி டாலர் செலவில், மும்பையில் முகேஷ் அம்பானி கட்டியிருப்பதுபோல, வானுயர்ந்த வீட்டை கட்டி முடித்திருக்கிறார் மல்லையா. 37 தளங்கள் கொண்ட இந்த அரண்மனையில் பல மா மன்னர்களின் அரண்மனைகளுக்கு இணையான வசதிகள், நவீன வடிவத்தோடு இடம் பெற்றிருக்கின்றன. மல்லையாவின் சொத்துக்களை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவை ஒருபுறம் இருக்க, இந்தியாவின் நம்பர் ஒன் சாராய வியாபாரியாக இருக்கும் இவர், உலகின் நம்பர் ஒன் சாராய வியாபாரியாக மாறுவதை இலக்காக கொண்டு படுவேகமாக போய்க் கொண்டிருக்கிறார். கடந்த 2005ம் ஆண்டு தனது தொழிலில் எதிரியாகயிருந்த ஷா வாலஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். உலகளவில் விஸ்கி குடிகாரர்களை தனது கையில் வைத்திருக்கும் ஒயிட் அன்டு மேக்கி நிறுவனத்தை 2007ம் ஆண்டில் வாங்கினார். இந்நிறுவனத்தின் மூலம், பிரான்ஸில் மதுபானத் துறையில் பெரும் நிறுவனங்களாக விளங்கும் கிலன் மோரே டிஸ்டிலரி மற்றும் மோயேட் ஹென்னிசி லூயிஸ் உயிட்டன் போன்ற பல நிறுவனங்களை விலைக்கு வாங்குவதற்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார். ஸ்காட்லாந்து நாட்டின் மிகப் பெரும் ஸ்காட்ச் விஸ்கி தயாரிப்பு நிறுவனமான ஜேபிபி கம்பெனியை வாங்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அனைத்திற்கும் மேலாக இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் சாராய நிறுவனமாக இருக்கும் டியாகோ நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக  பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதற்கு இடையே 2005ம் ஆண்டில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை துவக்கினார். உள்நாட்டில் விமான போக்குவரத்தைநடத்திக் கொண்டிருந்த இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் முதல் உலக நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தை துவக்கியது.  இந்நிறுவனம் மட்டுமின்றி, சூதாட்டம் நிறைந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியினை விலைக்கு வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடுத்தினார். மிக சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் மிகப் பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்ட பார்முலா 1 கார் பந்தயத்தை நடத்தியவரும் மல்லையாவே. இப்போட்டியை நடத்திய போர்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை 90 மில்லியன் யூரோ டாலர் கொடுத்து டச்சு நிறுவனமான ஸ்பைக்கர் டீமிடம் இருந்து வாங்கினார் மல்லையா.

"சாராயத்திற்கு உலகிலேயே மிகச் சிறந்த சந்தை இந்தியா தான் என்பது எனது அழுத்தமான நம்பிக்கை. எங்களது வழக்கமான தயாரிப்பான விஸ்கி மற்றும் பிராந்தியோடு வெளிநாட்டு மதுவகைகளான ஒயிட் ஸ்பிரிட் உள்ளிட்ட பல்வேறு பீர் வகைகளுக்கு இந்தியாவில் எப்போதும் உறுதியான சந்தை இருக்கும். சாராயத்தோடு பொழுதுபோக்கையும் இணைத்துக்கொண்டால் அது ஒரு அற்புதமான வாழ்க்கை. இந்த பொழுதுபோக்கு தொழிலை நான் மேலும் மேலும் விரிவுபடுத்துவேன். உலகம் முழுவதிலும் இந்தத் தொழிலை கொண்டு சென்றாலும், இந்தியாவே எனது பொழுதுபோக்கு தொழிலின் மையம் " என்று பகிரங்கமாக, எவ்வித கூச்சநாச்சமுமின்றி கூறுகிறார் மல்லையா.

நாட்டு மக்கள் குருவியாய் சேர்த்து வைத்திருக்கும் சேமிப்பு பணத்திலிருந்து இவரது தொழிலை மேம்படுத்துவதற்காக பாரத ஸ்டேட் வங்கி கொடுத்த 1410 கோடி ரூபாய், ஐடிபிஐ வங்கி வழங்கிய 719 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய 702 கோடி ரூபாய்... இன்னும் பேங்க் ஆப் பரோடா, யுனைடெட் வங்கி, சென்டரல்பேங்க் இந்தியா, கார்ப்பரேசன் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என பொதுத்துறை வங்கிகள் கோடிகோடியாக கடன் என்ற பெயரில் கொட்டிக்  கொடுத்தப்பணம். மொத்தத்தில் அவர் ரூ.14 ஆயிரம் கோடியை சுருட்டியிருக்கிறார்.

அனைத்தையும் சுருட்டி வெளிநாடுகளில் பெரும் சாராயக் கம்பெனிகளை வாங்கி குவித்துவிட்ட மல்லையா, கிங் பிஷர் நிறுவனத்தின் நட்டக் கணக்கை காட்டி வங்கிகளுக்கு நாமம் போடப் பார்க்கிறார். அவருக்கு எப்படியேனும் உதவிசெய்யும் விதமாக, வெளிநாட்டு மதுக்கம்பெனிகளுக்கு தாராள அனுமதி, வெளிநாட்டு மதுவகைகளுக்கு வரி ரத்து, அந்நிய விமான நிறுவனங்களுக்கு தாராள அனுமதி என அடுத்தடுத்து அதிரடி முடிவுகளை எடுத்து நாட்டுக்கே நாமம் போடப் பார்க்கிறார் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்.

-எஸ்.பி.ராஜேந்திரன்

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)