எல்லா சான்றிதழ்களும் இருக்கின்றனவா என்பதை பத்தாவது முறையாக சரிபார்த்துக் கொண்டான் மாரிமுத்து. சான்றிதழ்கள் அடங்கிய மஞ்சள் பையை பத்திரமாய் மடியில் வைத்துக்கொண்டான். கீழே நழுவிப்போய் விடுமோ என்று தேவையில்லாமல் பயந்தான். ஏன் இப்படி ஆனோம் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். வங்கியில் இன்று கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. மாலையில் வந்தால் இவ்வளவு கூட்டம் இருக்காது. போன தடவை அப்படி நினைத்துத்தான் மாலையில் வந்தான்.
"எப்பவும் பேங்க் மூடற நேரத்துக்கு வந்தா எப்படி? காலைல வாங்க." அந்த அதிகாரி கடிந்து கொண்டதால், இப்போது காலையில் பேங்க் திறப்பதற்கு முன்னாலேயே வந்து விடுகிறான். ஐந்தாறு முறை அலைந்தாயிற்று. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்று தவறி விடுகிறது. முதல் முறை வந்த போது அவன் மட்டும் வந்தான்.
"படிக்கப் போறது நீங்களா இல்லை உங்க பொண்ணா? அவளக் கூட்டியாற வேணாமா?" எரிச்சல் பட்டார் மேனேஜர்.
வாஸ்தவம்தான். நமக்குக் கொஞ்சம்கூட கூறே இல்லை. அவ்வளவு கூறுபாடு இருந்தால் நாம எதுக்கு பிரஸ்ல வேலை பார்க்கணும் என்று நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு முறையும் பிரிண்டிங் பிரஸ் முதலாளி கிட்டே ஒரு மணி நேரத்துல வந்துருவேன் என்று சொல்லிவிட்டு வந்தால், ரெண்டு மூணு மணி நேரம் வரை கூட ஆகி விடுகிறது என்ன செய்ய?
ரெண்டாவது முறை வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்களைக் கொண்டு வராமல், ஜெராக்ஸ் நகல்களை மட்டும் காண்பித்தபோது, ஒரிஜினல் இல்லாம எப்படி நம்பறது? மொதல்ல அதை எடுத்துட்டு வாங்கன்னு திருப்பி அனுப்பி விட்டார் அந்தக் கல்விக்கடன் வழங்கும் அதிகாரி.
"ஒரிஜினல் எங்கேயாச்சம் தொலச்சிடப்போறீங்க... கேக்கறப்ப கொண்டு போனாப்போதாதா?" என்கிறாள் ஆதிலட்சுமி.
யார் சொல்வதைக் கேட்பது என்று ஒரு கணம் தடுமாற்றம்தான் அவனுக்கு. எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறானதாகவே ஆகி, பின்னரே சரி செய்யப்படுவது போலத் தோன்றுகிறது. எப்படியோ.. கடன் கிடைத்தால் சரிதான் என்று மனசுக்குள் தன்னையே தேற்றிக்கொண்டான்.
ஆதிலட்சுமி ப்ளஸ் டூவில் ஆயிரத்து இருபத்தைந்து மார்க் எடுத்தபோது அவனும் சங்கரியும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். மகள் நினைத்தபடியே கோவில்பட்டியில் உள்ள எஞ்ஜினீயரிங் காலேஜில் அட்மிஷன் கிடைத்தபோது, மகளைத் தலையில் வைத்து கொண்டாடினார்கள். மனம் என்னென்னவோ கனவுகளை விரித்தபடி சென்றது. முதலாளிகள் பெண்ணைப் போலத் தனது பெண்ணும் எஞ்ஜினீயர்தான் என்பதில் மனம் குதூகலித்தது. படிப்பதற்கு வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என்ற போது வங்கிக்கடன் வாங்கியாவது படிக்க வச்சிரணும் என்று மனம் வைராக்கியம் பூண்டது. கடன் கிடைக்காவிட்டால் என்னாவது என்ற தயக்கமும் கூடவேதான் வருகிறது. கல்விக்கடன் பற்றி உள்ளூர் அமைச்சரின் பேச்சு தினமும் பேப்பரில் வந்து கொண்டிருக்கிறது. எல்லா வங்கிகளும் கல்விக்கடன் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வருட வருமானத்திற்கு கீழே இருந்தால் வட்டியும் கிடையாது என்றெல்லாம் சொல்கிறார்கள். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கடைக்கண் பார்வை விழ வேண்டுமே.
தான் வந்திருப்பதை அவருக்குத்தெரிவிக்கும் பொருட்டு, காலையில் அந்த அதிகாரி உள்ளே நுழையும் போதே குட்மார்னிங் சார் என்று பெரிய சல்யூட் அடித்து வைத்தான். அவரும் பதிலுக்குத் தலையாட்டி புன்னகைத்தவாறே சென்றது மனசுக்குள் கொஞ்சம் நம்பிக்கையை ஊட்டியது. மனுஷன் நல்ல மூடில்தான் வந்திருக்கார் என்று நினைத்துக்கொண்டான். வேலை அவசரத்தில் நம்மை மறந்து விடக்கூடாதே என்பதால் அவர் கண் பார்வை படும் இடமாக பார்த்து உட்கார்ந்தான். சமயத்தில் சீட்டை விட்டு தற்செயலாக எழுவது போல எழுந்து உட்கார்ந்தான். அவரது கவனத்தில் தான் இருப்பது போலத்தான் பட்டது.
கூட்டம் இப்போது இன்னும் அதிகரித்திருந்தது. டோக்கன் எண் சொல்லி அழைப்பதால், எல்லோரும் இருக்கைகளிலேயே அமர்ந்திருந்தனர். இன்னும் பலர் இடமின்றி நின்று கொண்டிருந்தனர். எல்லோரும் கட்டுக்கட்டாய் பணத்தைப் போடத்தான் வந்திருக்கிறார்களோ? இல்லை தன்னை மாதிரி கடன் வாங்க வந்திருக்கிறார்களோ?
அப்படியெல்லாம் இருக்காது. யாரும் நம்மை மாதிரி பராக்கு பார்க்கிற மாதிரி தெரியல. கையில் பாஸ்புக், செக்புக் என்று என்னென்னவோ வைத்திருக்கிறார்கள். தன்னை மாதிரி பரிதாபமான வேற மூஞ்சிகள் எதுவும் தென்படுகிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.
தனக்கு ஓரளவிற்குப் பரிச்சயமான கண்ணாடி அணிந்த சார் இருக்கிறாரா என்று அவரது இருக்கையைப் பார்த்தான். அவரும் ரொம்ப பிஸியாகத்தான் இருக்கிறார். கம்ப்யூட்டரை மட்டுமே எல்லோரும் பார்த்துப் பேசுவார்களோ மாட்டார்களோ? யாரைக்குறை சொல்ல? அவரும் ரொம்ப பரிச்சயமானவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு முறை இவனது பிரஸ்ஸுக்கு அவரது மகள் கல்யாணப் பத்திரிகை அடிக்க வந்திருந்த போது ஏற்பட்ட பழக்கம்தான்.
“பொண்ணை நல்லாப்படிக்கச் சொல்லுங்க... மார்க் வேணும். பி.சி.யா? இல்லே வேற எதுவுமா?.....” என்று கேட்டார். இவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை.
“நீங்க என்ன ஜாதின்னு கேட்டேன். ரிசர்வேசன் உண்டா இல்லையான்னு தெரிஞ்சுக்கத்தான்.” அவர் தெளிவாய்க் கேட்டபின்தான் இவனுக்கு மண்டையில் உறைத்தது.
“அதுவா சார்? நாங்க எம்.பி.சி... சர்டிபிகேட் எல்லாம் கூட மகளுக்கு வாங்கியிருக்கேன்.... நேரடியாக தனது ஜாதியைச் சொல்ல வாயெடுத்தவன் இப்போது திருத்திக் கொண்டான். எல்லாம் ஆதிலட்சுமி சொல்லிக்கொடுத்தது.
“சும்மா எல்லார்ட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.” என்பாள்.
தனது கறுத்த நிறத்தைப்பார்த்து முடிவு செய்திருப்பாரோ என்னவோ? திருச்செந்தூர் கோவில் பட்டர்கள் பாதிப்பேர் கறுப்பாகத்தான் இருக்கிறார்கள். பிரஸ்ஸுக்கு அடுத்த புத்தகக் கடை வைத்திருக்கும் சிவசூரியன் அண்ணாச்சி தனது கறுத்த மேனியை விபூதிப்பட்டையிட்டு மறைத்திருக்கிறார். திருநெல்வேலி டவுண்தான் பூர்வீகம். கோபத்தில் மனுஷன் பேசும் ஏச்சுக்களை வெளியில் சொல்ல முடியாது. காதுகளைப் பொத்திக் கொள்ள வேண்டும்.
இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்? மனுசன் யதார்த்தமாகக் கேட்பதுதான். மணி பன்னிரெண்டு அடித்தது. சரி இன்னைக்கும் லீவு சொல்லிற வேண்டியதுதான். அவர் கூப்பிட்டு, உட்கார வைத்து, சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து (புதுசாய் வேறு எதுவும் கேட்கிறார்களோ என்னவோ?) பேசி அனுப்ப குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். மதியத்துக்கு மேல் போனால் முதலாளி ரொம்ப எரிச்சல்படுவார். கல்யாண சீசன்ல இப்படி அடிக்கடி லீவு போட்டா வேலையெல்லாம் யார்தான் பாக்கறது என்பார். சரி எதுன்னாலும் கேட்டுக்க வேண்டியதுதான். லோன் வாங்கியாகணுமே?
“காலேஜுல சேர்றதுக்கு முன்னாலே புதுசா நாலு சுடிதார் வாங்கணும்ப்பா. ஹாஸ்டல்ல தங்கணும். புது சூட்கேஸ் வாங்கணும். சோப்பு டப்பா, பவுடர், கண் மை, கண்ணாடி, என பெரிய ஒரு லிஸ்ட்டே வச்சிருக்கேம்ப்பா.” ஆதிலட்சுமி அடுத்த கட்ட கடன் தொகைக்கு அப்பாவிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள் காலையிலேயே.
காலேஜ் படிப்பென்றால் சும்மாமா? கடனோட கடனாய் எல்லாத்தையும் வாங்கியாகணும். ஸ்கூலுக்குப்போற மாதிரியெல்லாம் ஒப்பேத்தி விட முடியாது. நாலுபேர் பாக்கற மாதிரி நல்ல டிரெஸ்ஸா வாங்கிக்கொடுக்கணும். சின்னப்பிள்ளைக ஆசைப்படறது ஒண்ணும் தப்பில்லை.
“சார் கொஞ்சம் பேனா கொடுக்கீங்களா?” ஆதிலட்சுமி வயதுடைய சுடிதார் அணிந்த இளம்பெண் இவனிடம் கேட்டாள்.
மாரிமுத்து சட்டப்பையில் சொருகி இருந்த பேனாவை எடுத்து அவளிடம் நீட்டினான். படித்த பெண்ணுக கூட பேனா வச்சுக்கிறதில்ல போல என்று நினைத்துக் கொண்டான்.
அந்தப்பெண் அவசர அவசரமாய் வாங்கி ஏதோ ஒரு செல்லானை பூர்த்தி செய்யத் தொடங்கினாள். கடன் வாங்க வந்த பெண்ணாக இருப்பாளோ? கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பெண்ணாகக் கூட இருக்கலாம். ஆதிலட்சுமிக்கும் இதே போல லைம் கலர் சுடிதார்கள் வாங்கணும். மென்மையான சாம்பல் நிற ஆடைகள்தான் கறுத்த பெண்களுக்கு மேட்ச்சாக இருக்கும். இவள் கொஞ்சம் அவளை விட சற்று நிறம் கூடுதல்தான். பாலீஸாக இருக்கிறாள்.
சிகரெட் பற்றவைத்துக்கொள்ளணும் போல இருந்தது. சிகரெட் வத்திப்பெட்டி எல்லாம் சட்டைப்பையில் இருக்கிறது. நாம் புகை இழுத்துக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து அவர் கூப்பிட்டு விட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்திலேயே இவ்வளவு நேரமும் அமர்ந்து கொண்டிருந்தான். அதுக்குள்ளேயா கூப்பிட்டு விடப்போகிறார் என்ற தைரியத்தில் கதவைத் திறந்து வெளியே வந்தான். வெயிலின் வெக்கையை இப்போது உணரமுடிந்தது. ஏஸி ரூமிலேயே இருந்து விட்டு வந்தால் இப்படித்தான். சட்டைப்பையினுள் இருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டான். இரண்டு இழப்பு இழுத்ததும் இருமல் வந்தது. நெஞ்சு முழுவதும் சளி. இந்தச் சனியனை விட்டுத் தொலைக்கணும்னு நெனைச்சாலும் விட முடியல. பன்னிரெண்டு வயதில் அச்சுக்கூடத்தில் பீடிதான். வாயெல்லாம் கசக்கும். இப்ப கொஞ்ச நாளாகத்தான் இந்த பில்டர் சிகரெட் டெல்லாம். இதுவும் ஒரு நாளைக்கு ஒன்றரை பாக்கெட் ஆகி விடுகிறது. நைட் டூட்டி பார்த்தால் ரெண்டு தாண்டி விடும். வயசு அம்பத்தைஞ்சை தாண்டியாச்சு. என்னத்த கண்டோம்? முக்கால்வாசி வாழ்க்கை வாழ்ந்து முடிந்தது போன்ற ஒரு எண்ணம் அவனைத் தொற்றிக் கொண்டது.
“அப்பா நான் வேலைக்குப் போனதும் நீ பிரஸ்ஸுக்கெல்லாம் போக வேண்டாம்ப்பா.”
ஆதிலெட்சுமி ஒருமுறை சொன்னபோது இவனுக்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டியது. இந்த பீடி, சிகரெட்டையெல்லாம் விட்டுத் தொலைக்கக்கூடாதா என்பது போல பார்ப்பாள். ஒன்றும் சொல்வதில்லை.
யாரோ தன்னைக் கூப்பிடுவதாக நினைத்து, அவசர அவசரமாய் உள்ளே வந்தான். அந்த அதிகாரி அதே பாவனையில்தான் உட்கார்ந்திருந்தார். தன்னைக் கூப்பிட்டது மாதிரித் தெரியவில்லை.
- நாறும்பூநாதன்
கல்விக்கடனுக்கே இப்படி இழுத்தடிக்கராங்களே.
ReplyDelete