Showing posts with label பாலியல் வன்முறை. Show all posts
Showing posts with label பாலியல் வன்முறை. Show all posts

Tuesday, June 11, 2013

ஆண் ஆசிரியர்கள் இல்லாத பெண்கள் பள்ளிகள் - விவாதம் ...

 தமிழகத்தில் பெண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக இனி பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள். ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் தான் இருப்பார்கள் என்று சமீபத்தில் வெளிவந்த அரசாணை தெரிவிக்கிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கூட்டு வன்புணர்ச்சி சம்பவத்திற்கு பிறகு நாடெங்கும் பெண் மீதான வன்முறையை எதிர்த்து போராட்டங்களும் விவாதங்களும் எழுந்தன.அதன் தொடர்ச்சியாக பள்ளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை தவிர்க்க அரசு இந்த முடிவை அறிவித்துள்ளதாக கூறுகிறது.

இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ”என் பொண்ணு இனி பத்திரமா ஸ்கூலுக்கு போய்டு வருவா. பேப்பரிலியும் டிவிலையும் பாக்கும் போது பயமா இருக்கு.ஸ்கூலுக்குள்ள இனி எதுவும் நடக்காதுன்னு திருப்தியா இருக்கு.” என்று சிலர் கூறுகின்றனர்.

”இது எனக்கு 50% ஓகே. 50% நோ. பசங்களுக்கு ஸ்கூல்ல வாத்தியாரால எதுவும் ஆகாதுன்னு உத்தவாதம் இருக்கு. ஆனா அவங்க பள்ளிகூடத்த முடிச்சு வெளிய வரும் போது ஆண்களும் இருக்கிற இந்த சமூகத்த விட்டு ஓடி விட முடியாது” என்று கூறுகிறார், ஷண்முகப்பிரியா, அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட மற்றும் சிலர் கருதுகின்றனர்.
“இது பிற்போக்கான முடிவு. ஆண்-பெண் சமத்துவத்தையும், ஆரோக்கியமான ஆண்-பெண் புரிந்துணர்வையும் தடுத்து விடும்” என்றும் சிலர் கூறுகின்றனர்.

மூன்றுமே சரியான வாதங்கள் போல தான் தோன்றுகின்றன. ஆனால் மூன்றுமே சரியானதாக இருக்க முடியுமா?

ஹரியானவில் சமீபத்தில் கல்வித் துறை நடத்திய கள ஆய்வில் வருடத்திற்கு 1000 மாணவிகள் பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே கூறுகிறது. இது போன்று பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான நேரடியான வாய்ப்புகளை அரசின் இந்த நடவடிக்கைபள்ளிகளில் குறைக்கும். இந்த முடிவினால் பெண்கள் பள்ளிகளில் இப்போதிருப்பதை விட குறைவான ஆண்களை காணலாம்.

ஆனால் இது போதுமா? ஆசிரியர்களாக ஆண்களின் நுழைவை தடுத்தாகி விட்டது. ஆனால் காவலாளியாக, ஆய்வுகூட உதவியாளராக ஆண்கள் இருக்க மாட்டார்களா? ஆண்களின் பங்கே இல்லாமல் ஒரு பள்ளியை முழுமையாக நடத்த முடியுமா? எனவே, இந்த முடிவு உடனடி தீர்வுகள் தந்தாலும் இது நிரந்தர தீர்வாக அமையாது. ”இது பாதுகாப்பை தரும். உண்மை தான். ஆனால் இது உண்மையான பாதுகாப்பாக இருக்காது”என்று கூறுகிறார் இதயகீதன், அரசுப்பள்ளி ஆசிரியர்.

ஏன் உண்மையான பாதுகாப்பை தராது?
நாம் நடக்கும் போது காலில் முள் ஏறிக் கொள்கிறது. அதை பிடுங்கி எறிகிறோம். அன்றைய பிரச்சனை சரியாகிவிடுகிறது. மறுபடியும் அதே பாதையில் நடக்கிறோம். மறுபடியும் முள். அதையும் பிடுங்கிவிட்டுச் சென்று விடுகிறோம். இப்படி ஒவ்வொரு முறையும் முள்ளை பிடுங்கி எறிய மட்டுமே வழி செய்துக் கொண்டிருப்பதை விட, முட்செடிகளை அகற்ற வேண்டாமா? அது தானே பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும்.

அதே போல், பாலியல் குற்றங்களுக்கான அடிப்படை காரணத்தை அறிந்து அதை களைய முயற்சிகள் எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் நம் சமூகத்தில் தொடர்வதற்கான அடிப்படை காரணம் ஆண்-பெண் சமத்துவமின்மை. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் சரியான புரிந்துணர்வு இல்லாதது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு உலகம் என்று சிறுவயதிலிருந்தே பிரித்து வைக்கிறது சமூகம். ஆண்கள் இப்படி தான் இருப்பார்கள், இப்படி தான் இருக்க வேண்டும் என்று முன்தீர்மானம் செய்யப்படுகிறது. இந்த சமூகச் சூழலில் ஆண்களிடமிருந்து விலகி இருப்பது மூலம் பாலியல் பிரச்சனையை தீர்த்து விட முடியும் என்று அரசு நம்புவது சரியில்லை. ஆணும் பெண்ணும் சகஜமாக சமூகத்தின் சம அங்கத்தினராக குழந்தை பருவத்திலிருந்தே பழகினால் தான், ஆரோக்கியமான சமமான சமுதாயத்தை வளர்தெடுக்க முடியும்.

இதற்கு அரசு என்ன செய்ய முடியும்?
·         இருபாலர் கல்வி நிலையங்களை அதிகரிப்பது

பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் என்ற ஆணையை விட, இரு பாலர் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்று முடிவு செய்திருந்தால், அது பாராட்டுக்குரியது. அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது என சந்தோஷப்படலாம். இளம் பருவத்தில் கல்வி நிலையத்தில் ஒரு சேர வளரும் போது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆரோக்கியமான நட்பு, புரிதல் வளருவதற்கு இடம் தரும்.ஆனால் அதை விட்டு உடனடி தீர்வையும் பாதுகாப்பு உணர்வையும் தரும் வகையில் செயல்படுவது தேர்தல் அரசியலில் சமூகத்தின் மீது கொண்ட அக்கரையை கை விட்ட கட்சிகளின் செயல்பாடாகவே தோன்றுகிறது.

·         பள்ளிகளில் பாலியல் கல்வி
பாலியல் நமது சமூக வெளியில் இயல்பாக எல்லோரும் விவாதிக்கும் ஒரு பொருளாக இல்லை. ”குசு குசு வென” பேசும் பொருளாகத்தான் இருக்கிறது. இதைச் சுற்றி ஒரு ரகசியத்தனம் எப்போதும்நிலவுகிறது. நேர்மையான ஆர்வத்துடன் குழந்தைகள் பாலியல் சம்பந்தமான கேள்விகளை கேட்டாலும் நாம் அவர்களை உதாசினப்படுத்துகிறோம். “அதெல்லாம் பேசக் கூடாது” ”எல்லாம் தெரிய வேண்டிய வயசுல தெரியும்” என்று ஏதாவது பதில் கூறி நாம் அந்த கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறோம். இது சரியான புரிதல் ஏற்படாமல் போக, தவறான வழிகள் மூலம் தவறான புரிதல் ஏற்பட நாமே வழி வகுக்கிறோம். இதை தடுத்து பள்ளிகளிலேயே அறிவியல்பூர்வமாக பாலியல் கல்வியை கற்று தந்தால், பாலியல் தொடர்பான மாயையை உடைத்தெறிய முடியும். இதற்கு ஆசிரியர்களுக்கு முதலில் சரியான பயிற்சி அளிக்க வேண்டும்.

·         தண்டனையை அதிகரிப்பது
அரசு வேறு என்ன செய்திருக்க முடியும்? தவறு செய்தால் ஒன்றும் நடக்காது. யாரும் ஏதும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தை  காவல்துறையும் நீதித் துறையும் பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கியுள்ளது. வழக்கு பதிவு செய்ய அனைத்து திசைகளிலிருந்தும் எல்லா விதமான தடை கற்களும் வீசப்படுகின்றன. ”பெண்ணின் எதிர்காலம் என்ன ஆவது?” ”பள்ளிக்கும் பெண்ணுக்கும் மானக்கேடு” என்று பள்ளி நிர்வாகிகள், அக்கம் பக்கத்தினர், ஏன் காவல்துறை கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க மறுக்கின்றனர். அப்படியே வழக்கு பதிவு செய்தாலும் அது பல ஆண்டுகள் கழித்து தான் தூசி தட்டப்படும். அதற்குள் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி விடும். சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள்.  வழக்கு விசாரணைக்கு வந்தாலும் தண்டனை கிடைப்பது நிச்சயமல்ல. இது மாறி தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நிலை உருவானால் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

அதோடு தண்டனையை அதிகரித்தால் இந்த தவறுகள் நிச்சயமாக குறையும் என்றும் கூறுகின்றனர். ”ஏன் சஸ்பெண்ட் மட்டும் செய்ய வேண்டும்? டிஸ்மிஸ் செய்யட்டுமே. குடும்பம் பாதிக்கப்படும் என்ற எண்ணம் தான் தவறு செய்வதற்கு பயத்தை உண்டாக்கும். “ என்று கூறுகிறார் ஷண்முகப்பிரியா, அரசுப் பள்ளி ஆசிரியர்.

எனவே அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு ஒரு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டதாக இல்லை. நுனிப்புல் மேய்வது போல் ஒரு சில கண்கூடான மாற்றங்களை மட்டும் கொண்டு வருவதால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. பெண்ணின் மீதான சமூகப் பார்வை மாற வேண்டும். அதற்கு முதல் படியாக ஆசிரியர்களின் பார்வை சரியானதாக அமைய அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். அவர்களுக்கான கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்த வேண்டும். அரசாணை வெளியிட்டதோடு பிரச்சனை முடிந்து விட்டதாக அரசு நினைத்தால் அது தன்னையே ஏமாற்றிக் கொள்வது போலாகும்.

- சாரா விஜி

Thursday, April 5, 2012

அமெரிக்க நெருக்கடியின் மற்றொரு கோரமுகம்..



நெருக்கடியால் பாலியல் தொழிலில் அமெரிக்க மாணவிகள்!   



 பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து மாணவிகள் அண்மையில் அமெரிக்கக் காவல்துறையிடம் சிக்கினார்கள். அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருவதாகவும், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு இந்தத் தொழிலில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். காவல்துறை மேலும் விசாரித்தபோது, இத்தகைய தொழில்களில் பெண்களை ஈடுபடுத்துவதில் ஏராளமான குழுக்கள் இயங்கி வருகின்றன. 

அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏற்கெனவே செய்து வந்த செலவைச் செய்ய முடியாத நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இந்தக் கும்பல்கள் இறங்கியிருக்கின்றன. அதில் சிக்கியவர்கள்தான் தற்போது காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஒரு பகுதியான ஃபேர்பாக்சில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்தக் கும்பல்கள் பள்ளிக்கூட வளாகங்கள், சமூக ஊடகக்குழுக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்றவற்றில் 16, 17 மற்றும் 18 வயது மாணவிகளைக் குறிவைத்து இயங்குகின்றன என்று காவல்துறை விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. 

ரவுடிகளின் துணையோடு தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பாலியல் தொழிலில் இந்த மாணவிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருமுறை ஒப்புக்கொண்டபிறகு, அதில் ஈடுபட மறுத்தவர்கள் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு இதில் ஈடுபட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியான தேவைகளுக்காகவே சம்மதித்திருக்கிறார்கள் என்று காவல்துறை கூறுகிறது.   அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.இந்த பாலியல் மோசடிக் கும்பலின் தலைவர் என்று கருதப்படும் ஜஸ்டின் ஸ்ட்ரோம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாணவிகளில் ஒருவர் சம்மதித்தபிறகு, தன்னை விட்டுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். 

கத்தி முனையில் இந்த ஜஸ்டின் ஸ்ட்ரோம் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து தனது மோசடித் தொழிலைச் செய்து வந்த ஜஸ்டின் ஸ்ட்ரோமுக்கு பொருளாதார நெருக்கடி உதவியிருக்கிறது. காவல்துறை வசம் சிக்கியுள்ள ஸ்ட்ரோமுக்கு ஆயுள் தண்டனைதான் என்றாலும் இன்னும் பல ஸ்ட்ரோம்கள் அமெரிக்காவில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், நெருக்கடி முற்றி வருவதால் இதுபோன்ற அவலங்கள் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றேர்களில் சிலர். அரசின் கல்விக்கட்டணக் கொள்கை உள்ளிட்டவை மாறாமல் நிலைமையில் மாற்றம் ஏற்படாது என்கிறார்கள் அவர்கள்.அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன.

 வர்ஜீனியா மாகாணத்தின் அரசு வழக்கறிஞரான நீல் மக்பிரைடு கூறுகையில், தொடர்ந்து பல வாரங்கள் இந்த மாணவிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து மாணவிகளாவர். இவர்கள் அனைவரும் 16 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு போதை மருந்து தரப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அப்படியும் ஒத்துழைக்காத மாணவிகள் அடித்து, துன்புறுத்தப்பட்டனர்.   மாணவிகளின் பெறறேர்களுக்கு ஒவ்வெரு இரவும் நிம்மதியில்லாமல் கழிகின்றன. எப்போது வேண்டுமானாலும் தங்கள் மகள் காணாமல் போய்விடலாம் என்று அச்சப்படுகிறார்கள். 

ரவுடிகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதை ஒவ்வெரு நாளும் அவர்களால் பார்க்க முடிகிறது. நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது என்று குறிப்பிடுகிறார். 28 லட்சம் பேர் நடுத்தெருவில்...வீட்டை விட்டு ஓடிவந்த மற்றும் குடியிருக்க வீடில்லாத இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்கள் 28 லட்சம் பேர் அமெரிக்கத் தெருக்களில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் அனைவரும் சுரண்டலுக்கு உட்படும் ஆபத்தில் உள்ளனர். அமெரிக்காவின் தேசிய பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல் ஆய்வு வலைத்தளம் தரும் விபரங்களின்படி, 2007 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 300 பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான புள்ளிவிபரம்தான் கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் கடத்தப்படுபவர்களில் 80 சதவிகிதம் பெண்களாகவும், சிறுமிகளாகவும் இருக்கிறார்கள். அதிலும் பாதிக்கு மேற்பட்டவர்கள் 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 1, 2012

உண்மைக்கு புறம்பான ஆளுநர் உரை



தமிழகச் சட்டமன்ற கூட்டம் 30.01.2012 ல் நடைபெற்று, ஆளுநர் உரை ஆளுநரால் வாசிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை என்று அழைக்கப்பட்டாலும், ஆளுநரால் வாசிக்கப் பட்டாலும் ஆளுநர் உரை ஆளும் அரசின் உரை தான். அதில் பல்வேறு அறிவிப்புகள், சாதனைப் பட்டியல், கொள்கை அறிவிப்புகள் என பல உள்ளன. அதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கருத்துக்களை அறிக்கை வாயிலாகவும், சட்டமன்ற உறுப்பி னர்களின் உரைகள் வாயிலாகவும் பதிவு செய்யும்.

ஆனால் ஆளுநர் உரையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்பது தான் நகைப்பிற்கு உரிய ஒன்றாக உள் ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர் கள் பொறுப்பேற்ற உடனேயே வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இருந்த கொள் ளையர்களும், கொலைகாரர்களும், ரவுடி களும் வண்டி ஏறி ஆந்திராவிற்குச் சென்று விட்டார்கள் என்று பெருமையுடன் குறிப் பிட்டிருந்தார். ஆனால் கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அவரது கூற்றை மறுதலிக்கன்றன. கடந்த 6 மாதங்கள் நடை பெற்ற சம்பவங்களையெல்லாம் பட்டிய லிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக கடந்த ஒரு மாதத்தில், அதாவது ஆளுநர் உரை தயாரிப்பு காலமான 2012 ஜன வரி மாதத்தில் நடைபெற்றுள்ள சம்பவங் களே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எவ் வளவு சீர்கெட்டுள்ளது என்பதை வெளிப் படுத்தும்.

ஆளுநர் உரை நாளன்றே

ஆளுநர் உரை நிகழ்ந்த 30.01.2012 தமி ழகம் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் சம் பவங்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.30.01.2012 ல் சென்னை அருகே மதுரவாயல் அருகில் வேனில் பணத் துடன் சென்றுகொண்டிருந்த தனியார் நிறு வன வேனை வழிமறித்து, ஊழியர்களை அடைத்துப் போட்டு, அதிலிருந்த ரூ.22 லட்சம் பணத்தைக் கொள்ளையர்கள் அள் ளிச் சென்ற செய்தி பத்திரிகைகளில் வந்துள் ளது.அதே நாளில் வேலூர் அருகே ஆம் பூரில் சத்தியமூர்த்தி என்பவரின் எஸ்.ஆர். நகை அடகுக் கடையின் புறச்சுவரில் துளை போட்டு, ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர்.அதே 30 ம் தேதியில் ஒசூரில் வீட் டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை நாகரத்தினத்தின் வீட்டில் நுழைந்து, அவரை மிரட்டி 40 சவரன் நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஆளுநர் உரையில் சட்டம்-ஒழுங்கு குறித்து பெருமையடித்த நாளிலேயே அதற்குச் சவால் விடும் வகை யில் இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பதற வைக்கும் கொலைச்சம்பவங்கள்

2012 ஜனவரி மாதத்தில் மட்டும் நடை பெற்ற படுகொலை சம்பவங்களைப் பார்க்க லாம். ஜனவரி 2ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் சீதாலட்சுமி எனும் வங்கி அதிகாரிபடு கொலை செய்யப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஜனவரி 3ல் துடிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பட்டப்பகலில் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டார். இவர் அ.இ.அ.தி. மு.க. பிரமுகராக இருந்து கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 6 ல் பாளையங்கோட்டையில் அரசு பொறியியல் கல்லூரி அலுவலர் மணிராஜ், அவரது மனைவி பார்வதி ஆகியோர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கொள் ளையடிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 8ல் சென்னை மைலாப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் அரிகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஜனவரி 9ல் சென்னை அம்பத்தூரில் ஆந்திராவைச் சார்ந்த பெண்மணி புவனாரெட்டி படுகொலை. ஜனவரி 10ல் சென்னை கொளத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனேஸ்வர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அதே நாளில் கூடலூர் அருகே மணலி கிராமத்தில் கூலித் தொழிலாளி பாலசந்திரனின் 37 வயது மனைவி ராதாமணி, 15 வயது மகள் சம்யா, 12 வயது மகன் விஷ்ணு ஆகியோர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட் டுள்னர்.

ஜனவரி 10ல் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனம்பட்டி கிராமத்தில் அவர் வீட்டருகே வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். ஜனவரி 12ல் சென்னை முகப்பேர் அருகே ஒரு வாலிபர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 16 ல் கோபி செட்டிபாளையத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை படுகொலை செய் யப்பட்டு, உடல் கிடைத்தது. ஜனவரி 17ல் செங்கல்பட்டில் தே.மு.தி.க. கவுன்சிலர் சுரேஷ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 18ல் திருச்சி உப்பிலியபுரம் அருகே கோஷ்டி மோதலில் சிக்கிய ஆசிரியர் கும ரேசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 19ல் சைதாப்பேட்டையில் ராஜ சேகர் எனும் ஆட்டோ ஓட்டுநர் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட் டுள்ளார்.

ஜனவரி 21ல் சென்னை தீவுத்திடல் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மரத் தில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதே நாளில் விருத்தாசலத்தில் 10 சவரன் நகைக்காக தமிழ்ச்செல்வி எனும் பெண் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப் பட்டுள்ளார்.ஜனவரி 23 ல் புதுக்கோட்டை விராலிமலை அருகே அய்யப்பன், ரமேஷ் என்பவர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். ஜனவரி 23 ல் கோட்டூர்புரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஜனவரி 24ல் சென்னை போரூரை அடுத்த மாங்காட்டில் மகளிர் சுய உதவிக்குழு தலைவி அம்பிகா கழுத்தறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்.ஜனவரி 26 ல் வண் டலூர் தவுஷிக் நிஷா எனும் பெண் அவரது வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார். ஜனவரி 27ல் ஆலந்தூர் ஜல்ல டியன் பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் வெட் டுக் காயங்களுடன் ஒரு ஆண்பிணம் கண்டு பிடிக்கப்பட்டது.

கொள்ளைச் சம்பவங்கள்

ஜனவரி புத்தாண்டில் வழிபாட்டுக்காக சென்ற மேரி வினோமிகா எனும் பெண்ணை வழி மறித்து 12 சவரன் நகை பறித்துச் செல் லப்பட்டது. ஜனவரி 3ல் சென்னை அசோக் நகரில் தனியாக இருந்த அனுராதா அகர்வால் எனும் பெண்ணிடம் ரூ.2 லட்சமும், நகை களும் கொள்ளையடிக்கப்பட்டது. ஜனவரி 7ல் வில்லி வாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து டேவிட் என்பவரின் வீட்டில் 21 சவரன் நகையும், ரூ.6000 மும் கொள்ளை அடிக்கப்பட்டது. வேளச்சேரியில் ஜெய லட்சுமி எனும் பெண்ணிடம் வழிமறித்து, 10 சவரன் நகை பறிக்கப்பட்டது. ஜனவரி 8ல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் ரூ.2.5 லட்சம் பணமும், 3 கிலோ வெள்ளியும் கொள்ளை அடிக்கப்பட்டது.

ஜனவரி 12 ல் ஆலந்தூர் ஆலம்பாக்கத் தில் தனியாக இருந்த புஷ்பா எனும் பெண் ணைக் கட்டிப் போட்டு, அவரது கழுத்தில் கிடந்த 11 சவரன் நகையை திருடர்கள் தட்டிச் சென்றனர். ஜனவரி 18ல் சென்னை கொடுங் கையூரில் லாரி அதிபர் ராஜ்குமார் வீட்டில் பூட்டை உடைத்து, 27 சவரன் நகை, ரூ.10000 தொகையும் கொள்ளை அடிக்கப்பட்டது.அதே நாளில் சென்னை வளசரவாக்கத்தில் வெங் கடேச பெருமாள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

அன்றைய தினம் குமரி மாவட்டம் திட்டு விளையில் மெயின் ரோட்டில் உள்ள தோ வாளை கூட்டுறவு வீட்டுவசதி சங்க வங் கியில் 2 கேஸ் சிலிண்டருடன் வந்த கொள் ளையர்கள் லாக்கரை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.

ஜனவரி 23 ல் ஆலந்தூர் பெருங்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் பட்டப் பகலில் துப்பாக்கியால் மிரட்டி ரூ.24 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஜனவரி 25-ல் சிவகங்கையில் அடகுக்கடையில் கள்ளச் சாவி போட்டு திறந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இவ்வாறு இந்த ஒரு மாதத் தில் மட்டும் நடைபெற்ற சம்பவங் களில் ஒரு சில மட்டும் தரப்பட்டுள்ளது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் கடந்த 6 மாத ஆட்சியின் லட் சணத்தை இந்த ஒரு மாத நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

காவல்துறையினரின் நிலை

இத்தகைய படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் சிலவற்றில் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டாலும் பல வழக்குகளில் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, கைது செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட் டச் செயலாளர் தோழர் கனகராஜ், செல்வம் எனும் நபரின் நில மோசடிக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதற்காக அவரது வீட்டில் 2012 ஜனவரி 6 ல் நள்ளிரவு நேரத்தில் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் குற்றவாளி யார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தும் காவல்துறை இதுவரை குற்றவாளிகள் எவ ரையும் கைது செய்யவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் 29 ல் விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் 4 இருளர் இன இளம் பெண்கள் காவல்துறையைச் சார்ந்த 8 காவலர்களால் கொடூரமான முறையில் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் கூட குற்றவாளி களான காவலர்கள் இதுவரை கைது செய்யப் படாதது வெட்கக்கேடானது. ஒரு பெண் முத லமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இத் தகைய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அதிரடி இடம் மாற்றங்களையும், அரசியல் தொடர்புடையவர்கள் கைது நிகழ்வுகளையும் சந்திக்கும் தமிழகத்தில் ( நில மோசடி, கட்டப் பஞ்சாயத்து, அராஜகச் செயல்களில் ஈடு படும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை) இத்தகைய சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அத்தகைய குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் நடவ டிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, வீண் தம் பட்டம் அடிப்பதில் பலனில்லை.
எஸ்.நூர்முகம்மது

Tuesday, December 20, 2011

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்


பெண்ணுரிமையும் மனித உரிமையே என்ற புரிதலை ஏற்படுத்த நீண்ட காலம் ஆனது. அதே போல், சில விதமான வன்முறையை, வன்முறை என்று புரிய வைக்கவும் பல காலம் தேவைப்படுகிறது. உதாரணமாக, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது லேசான விஷயமாக, டேக் இட் ஈஸி பாலிசியாகப் பார்க்கப்பட்டது. காவல்துறை தலைவர் கேபிஎஸ்.கில், ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரியை, ஒரு விருந்தில் பின்பக்கம் தட்டினார்; சற்று ஆபாசமாகவும் பேசினார். ரூபன் தியோல் புகார் செய்தார், வழக்காக்கினார். 8 வருடம் சட்டப் போராட்டத்தை நடத்திய பிறகே, நீதிமன்றம் அவர் செய்தது குற்றம் என்று சிறு தண்டனை கொடுத்தது. அதற்கே, பத்திரிகைகள் ரத்தக் கண்ணீர் வடித்து, தீவிரவாதிகளை அடக்கியவர், மிகப் பெரிய தேசபக்தர், அவருக்கா இந்த நிலை, இந்தச் சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிது பண்ண வேண்டும் என்று எழுதித் தீர்த்தன. கில்லுக்கு இது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால், ரூபன் அப்படிப் பார்க்கவில்லை என்பதுதான் முக்கியம். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில்,  "பெரிசா என்ன பண்ணிட்டாரு, எஸ் எம் எஸ் குடுத்தாரு, அவ்வளவு தானே. வர்றி யான்னு கேட்டாரு, அவ்வளவு தானே” என்கிற போகிற போக்கில் வசனங்கள் உதிர்க்கப்படுவதைக் கேட்டிருக்கிறோம். அனுபவிப்பவர்களுக்கு, அது ஒரு இம்சை, மன உளைச்சலை ஏற்படுத்தும் தொல்லை. வெளியே சொல்ல முடியாமல், மனதுக்குள் வைத்து குமுறுகிற 24 X 7 பிரச்சனை.

குழந்தை திருமணத்தைத் தடுக்க ராஜஸ்தான் அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான பன்வாரி தேவி பலாத்காரம் செய்யப்பட்ட போது, அது தொடர்பான விஷாகா வழக்கில், 1997ல் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல், சமூகத்தின் கன்னத்தில் பளீரென்று அறைந்து, பாலியல் துன்புறுத் தல்/சீண்டல் குற்றம் என்று உணர்த்தியது. செய்பவர் என்ன நினைக்கிறார் என்பதை விட, பாதிக்கப்படுபவர் அதை எப்படி உணர்கிறார் என்று பார்க்க வேண்டும் என்றது. இந்த வழிகாட்டுதலை, சட்டமாக்க வேண்டும் என்று மாதர் அமைப்புகள் அப்போதிருந்தே கோரி வந்தாலும், தேசிய மகளிர் ஆணையம், மாதர் மற்றும் தன்னார்வ இயக்கங்களுடன் கலந்தாலோசித்து, 2007ல் ஒரு மசோ தாவை உருவாக்கி, பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்திடம் அளிக்க, அது 2010ல் இறுதி செய்யப்பட்ட மசோதாவை அரசிடம் அளித்தது. இம்மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. சில தினங்களுக்கு முன், நிலைக்குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. மசோதாவின் சில முக்கிய அம்சங்களை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்போதுதான், அதன் அமலாக்கத்தில் பங்களிப்பு செய்ய முடியும்.

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது நல்ல அம்சம். வரவேற்கத்தகாத பாலியல் அடிப்படையிலான நடவடிக்கைகள் அனைத்தும், தொடுவது, வார்த்தைகள், சைகை, ஆபாசப் படங்களைக் காட்டுவது, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திப் பாலியல் செய்திகளை அனுப்புவது உட்பட, பாலியல் துன்புறுத்தல். நான் சொன்னபடி கேட்டால், வேலையில் உன்னை முன்னேற்றுகிறேன் என்று சொல்வது, கேட்காவிட்டால் வேலையிலிருந்து உன்னைத் தூக்கி விடுவேன் என்பது, வேலைச் சூழலை அச்சுறுத்தும் விதத்தில் மாற்றுவது போன்ற பல விஷ யங்களைப் பேசுவதும், செய்வதும் குற்றம்.

எது பணியிடம்?

அரசுத் துறை, தனியார் துறை, கல்வி நிலையங்கள் என்று எல்லாமே வேலையிடமாகக் கருதப்படுகிறது. பெண் ஊழியர், வேலையின் நிமித்தம் பயணம் செய்தால், ரயில்/பஸ்/விமானம்/கப்பல் போன்ற வாகனங்களும் பணியிடமாகக் கருதப்பட்டு, அங்கு அந்த ஊழியருக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலையும் நிறுவனம் கணக்கில் எடுக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது. நீ பஸ்ஸில் போகும் போது தானே நடந்தது? ஆபிசில் இல்லையே? நாங்கள் ஏன் அதற்கு மெனக்கெட வேண்டும் என்று யாரும் கேட்க முடியாது. கூடுதலாக, நிலைக்குழு தனது பரிந்துரையில், அலுவலகம் போக, வர நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கும் வாகனம் கூட, பணியிடமாகக் கருதப்பட்டு, ஊழியரின் பாதுகாப்புக்கு நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இத்தகைய வாகனங்களில் குற்றம் நடந்தது என்பது நமக்கு நினைவிலிருக்கும்.

யாருக்கெல்லாம் இம்மசோதா பயன்படும்?

அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், அப்ரெண்டிஸ், மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், நோயாளிகள் ஆகியோர் இதைப் பயன்படுத்தலாம். முதலாளி முதல் சக ஊழியர் வரை மட்டுமல்ல, வேலை தொடர்பாக பணியிடத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள், மாணவிகள் என் றால் ஆசிரியர், ஆராய்ச்சி கைடு, நோயாளிகள் என்றால் மருத்துவர், மருத்துவ மனை சிப்பந்திகள் போன்றவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தால், புகார் கொடுக்கலாம். மாணவிகளுக்கு சக மாணவர்கள் மூலம் கூட, பாலியல் துன்புறுத்தல் நடக்கலாம். எனவே, சக மாணவர்களையும் இதில் இணைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

மசோதா, தேசிய மகளிர் ஆணைய பரிந்துரையை மீறி, வீட்டுப் பணியாளர்களை சட்டத்தின் வரம்புக்குள்ளிருந்து அகற்றிவிட்டது. வீட்டுப் பணியாளர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று மசோதாவில் தனியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. தனிப்பட்ட வீட்டுக்குள் நடக்கும் அத்துமீறல்களை நிரூபிப்பது கஷ்டம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. நான்கு சுவருக்குள் அத்துமீறல் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் என்ற அடிப்படை யில், வீட்டுப் பணியாளர் அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்பின. தற்போது, நிலைக்குழு, அவர்களையும் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது. வீட்டுக்குள் நடக்கும் வன்முறையை தண்டிக்க, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமே வந்து விட்ட பிறகு, நான்கு சுவருக்குள் நடக்கிறது என்ற காரணம் கூறி, சட்டத்திலிருந்து வீட்டுப் பணியாளர்களைத் தள்ளி வைப்பது, எடுபடாது என்பது உண்மைதானே?

புகார் கமிட்டிகள்:

நிறுவனங்கள் என் றால், உள் நிறுவன புகார் குழு (internal complaints committee) அமைக்கப்பட வேண்டும். அது தவிர, ஸ்தல அளவில், உள்ளூர் புகார் குழு (Local complaints committee) அமைக்கப்பட வேண்டும். புகார் கமிட்டியின் தலைவராக சீனியர் பெண்மணி நியமிக்கப் பட வேண்டும். உள் நிறுவன புகார் குழுவில் தலைவராகப் போட, அந்த நிறுவனத்தில் சீனியர் பெண்மணி இல்லை என்றால், சகோதர நிறுவனங்களிலிருந்தோ, தன்னார்வ அமைப்பிலிருந்தோ போட வேண்டும். பெண்கள் பிரச்சனைகளில் அக்கறையும், அனுபவமும் உள்ள தன்னார்வ அமைப்பு பிரதிநிதியும் இடம் பெற வேண்டும். உள்ளூர் புகார் குழுவில், கூடுதலாக, தொழிற்சங்கப் பிரதிநிதியும் போடப்பட வேண்டும். உள் நிறுவன புகார் குழு இல்லையென்றாலோ, தவறு செய்தவர் முதலாளி என்றாலோ, உள்ளூர் புகார் குழு, புகாரைப் பெறலாம் என்று மசோதா கூறுகிறது. பெறலாம் என்பதை, பெற வேண்டும் என்று மாற்ற வேண்டும்.

விசாரணை முறை

எழுத்து மூலமாகப் புகார் பெற்ற உடன், கமிட்டி, முதலில் சமரசப் பேச்சு வார்த்தை(conciliation) நடத்த வேண்டும் என்று மசோதா கூறுகிறது. சமரசம் ஏற்பட்டால், விசாரணை நடத்த வேண்டியதில்லையாம். இது சரியல்ல, சமரசத்துக்கு வரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் புகார் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும். எப்படியுமே, தண்டனை பரிந்துரைக்கும் போது, பணி விதிகளில் கூறியுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் – மன்னிப்பு கேட்பது முதல் வேலை நீக்கம் வரை- குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒன்றைப் பரிந்துரைக்கலாம். குற்றத்தின் தன்மை குறைவு என்றால், குறைவான நடவடிக்கை எடுக்கலாம். அப்படியிருக்கும் போது முதல் கட்ட நடவடிக்கையாக சமரசம் என்பது தேவையில்லை என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

விசாரணை, துறை விதிகளில் உள்ள படி நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தனியான விசாரணை முறை எதுவும் சட்டத்தில் இடம் பெறவில்லை. ஒரு வேளை, விதிகளை உருவாக்கும் போது, குறிப்பிடப்படலாம். ஆனால், சட்டத்திலேயே இருப்பது தான் உதவியாக இருக்கும். தவறான நடத்தை(misconduct) என் றால், துறையே விசாரிக்க முடியும் என்கிற நிலைமை ஏற்கனவே உண்டு. ஆனாலும், உச்சநீதிமன்றம், தனியான புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? புகார் கமிட்டி என்பது விசேஷமாக அமைக்கப்பட வேண்டும் என்றால், அது நடத்தும் விசாரணையும் சற்று மாற்றமாக இருக்க வேண்டும் தானே? பாலியல் பிரச்சனை களில் புகார் கொடுத்தவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் ஒன்றாக வைத்து விசாரிப்பதில் சங்கடங்கள் உண்டு. ஒருவரை ஒருவர், குறுக்கு விசாரணை, நேருக்கு நேராக செய்வதும் பிரச்சனைகளை உண்டாக்கும். தனித்தனியாக விசாரிப்பதும், ஒருவர் கேட்க விரும்பும் கேள்விகளை எழுதி வாங்கி, கமிட்டியே மற்றவரிடம் கேட்பதும் போன்ற சில வேறுபட்ட முறையை, விசாரணையின் போது கடைப்பிடிக்க வேண்டும். அந்தந்த புகார் கமிட்டியின் புரிதலுக்கும், முடிவுக்கும் இதை விடாமல், சட்டத்திலேயே விசாரணை முறை இடம் பெறுவது தெளிவை உண்டாக்கும்.

புகார் நிலுவையில் இருக்கும் போது, புகார்தாரர் கோரினால், அவரையோ, குற்றம் சாட்டப்பட்டவரையோ இடமாற் றம் செய்யலாம். புகார்தாரருக்கு விடுப்பு கொடுக்கலாம். இது, ஏற்கனவே அவருக்கு உரிமையுள்ள விடுப்புக்குக் கூடுதலானதாக இருக்க வேண்டும். இக்காலத்தில், புகார் கொடுத்தவரை இடைநீக்கம் செய்வதோ, அவர் விருப்பத்துக்கு மாறாக இடமாற்றம் செய்வதோ கூடாது என்று மசோதா முன்மொழிவது சரியானதே.

90 நாட்களுக்குள் விசாரணை முடிய வேண்டும்; கமிட்டி கொடுக்கும் பரிந் துரையை 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம்/முதலாளி நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றவில்லை என் றால் சிறை தண்டனை/அபராதம் உண்டு என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட புகார் பொய்யென் றால், புகார் கொடுத்தவர் மீதும், தவறாக சாட்சி சொன்னால், சாட்சி சொன்னவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது. இது, புகார் கொடுக்க முன்வருபவர்களைத் தயங்கச் செய்யும் என்றும், நிரூ பிக்கவில்லை என்றாலே புகார் பொய்யானதாகி விடுமா என்றும் பெண்கள் அமைப்புகளால் வலுவாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இது, விஷாகா தீர்ப்பின் சாராம்சத்துக்கு முற்றிலும் முரணானது. ஏற்கனவே, தமிழக அரசின் ஆணையில் இந்த அம்சம் இடம் பெற்ற போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, பின்னர், மகளிர் ஆணையமும் ஆட்சேபணை தெரிவித்து, இந்த ஷரத்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது, தற்போது மசோதாவில் இடம் பெற்றிருப்பது ஆபத்தானது. மற்ற சட்டங்களில் இத்தகைய பிரிவு இல்லை. குற்றம் உண்மையா, பொய்யா என்றுதான் பார்க்கப்படும். நிரூபிக்கப்பட்டால் தண்டனை, நிரூபிக்கப்படவில்லை என்றால், வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அவ்வளவு தான். குற்றம் சாட்டப்பட்டு, பின் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டவர், அடுத்து மானநஷ்ட வழக்கு வேண்டுமானால் தொடுக்கலாம். நிலைமை இப்படியிருக்க, இந்த சட்டத்தில் மட்டும், ஏன் புகார் கொடுப்பவருக்கு இந்த மிரட்டல்? நிலைக்குழு, இந்தப் பிரிவை முற்றாக நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

முதலாளி / நிறுவனத்தின் கடமை


வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில், புகார் கமிட்டி மற்றும் தொடர்புள்ள விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துவது, இக்குற்றம் நடக்காமல் இருக்க பயிற்சிகள்/கூட்டங்கள் நடத்துவது, பாதுகாப்பான வேலைச் சூழலை உருவாக்குவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட பெண் கிரிமினல் புகாரை காவல்துறையிடம் கொடுக்க விரும்பினால், அதற்கு உதவுவது போன்றவற்றையும் செய்ய வேண்டும்.

தேசிய/மாநில மகளிர் ஆணையங்கள், இச்சட்ட அமலாக்கத்தைக் கண்காணித்து, பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதையும் ஆராய வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இச்சட்டம், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம். பல்லாண்டுகளாகப் பெண்கள் அனுபவித்து வந்த, சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத இந்தக் கொடுமையை அங்கீகரித்து, பல கட்டப் போராட்டங்கள் நடத்தியபின் வந்து கொண்டிருக்கிற சட்டம். இதில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் மனுவுக்கு மேல் மனு கொடுக்கிறது என்பதற்காக இதை இணைத்தால், போட்டி புகார்கள் கொடுக்கப்படும். பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்கொள்வதன் மீதான அழுத்தம் குறையும். எனவே, இந் தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

தேவைப்படுகிற திருத்தங்களுடன் இச்சட்டத்தை நிறைவேற்றி, விதிமுறைகளை உடனடியாக உருவாக்கி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று, அமலாக்கத்தைத் துவக்க வேண்டும். சட்டம் முறையாக வந்தாலும், அதை அமல்படுத்துவதற்கான போராட்டம் காத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். இருப்பினும் வருகிற சட்டம் சிறந்த ஆயுதமாக இருப்பது, போராட்டத்தை வலுப்படுத்தும்.


- உ.வாசுகி

Saturday, November 26, 2011

பழங்குடிப் பெண்கள் மீது காவல்துறையினரின் பாலியல் வன்முறை


தமிழகக் காவல்துறையின்  இன்னொரு கொடூரமான நடவடிக்கை  குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாதம் நவம்பர் 22ம் தேதி, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் போலீஸாரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர். வாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நீதி கிடைத்திருக்கிறது. அந்த செய்தி தந்த நம்பிக்கைகளை உடைத்துப் போடுவது போல, காவல்துறையின்  செயல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் காவல்துறையைத்தான்  நவீனப்படுத்த தமிழக முதல்வர்  ஜெயலலிதா 47 கோடி வழங்குகிறாராம். இதுதான் இவரது ஆட்சியின் லட்சணம்!

வாச்சாத்தி மக்களுக்காக போராடிய, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அவர்கள் இன்று (26.11.2011) பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை இது:




விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் சரகத்திற்குட்பட்ட டி. மண்டபம் கிராமம், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த காசி என்பவரை திருட்டுக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு திருக்கோவிலூர் காவல்நிலையத்தைச் சார்ந்தவர்கள் கடந்த நவம்பர் 22ந் தேதி பிடித்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காசியை விடுவிக்குமாறு அவருடைய தாயார் வள்ளி காவல் நிலையம் சென்று கெஞ்சியுள்ளார். அவரிடம், உங்களுடைய நெருங்கிய உறவினர்களை அழைத்து வந்தால் விசாரணை செய்து விட்டு அவரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு வள்ளி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் போலீஸ் வேனை நிறுத்தி வள்ளியை வண்டியில் ஏற்றியுள்ளனர். போலீஸ் வேனில் காசியின் மனைவி லட்சுமி (20 வயது), காசியின் தம்பி மனைவி கார்த்திகா (வயது 18), காசியின் தங்கை ராதிகா (17 வயது) மற்றொரு உறவுப் பெண் மாதேஸ்வரி (20 வயது) ஆகியோர் வண்டியினுள் இருந்துள்ளனர். 22-ந் தேதி இரவு முழுவதும் தைலமரக்காட்டில் வைத்து வள்ளியின் கண்முன்னாலே அவருடைய மகள், மருமகள்களை 4 காவலர்கள் வண்புணர்ச்சிக்குள்ளாக்கி கொடுமை செய்துள்ளனர்.

விடியற்காலையில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி விரட்டியுள்ளனர். மீண்டும் 23ந் தேதி போலீஸ் வேன் தெருவுக்குள் வருவதைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஓடியுள்ளனர். இதைத் தொடர்ந்து மற்றவர்களின் உதவியுடன் இன்று (26.11.2011) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் செய்துள்ளனர்.

காவல்துறையினரின் கொடூரமான இச்செயலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த வண்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவதோடு, இவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; காசி உட்பட காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதுடன், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தி கோருகிறோம்.

காவல்துறையினரின் இந்த அராஜகத்திற்கு எதிராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் வலுவான கண்டன போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

/ஒப்பம்
(பெ. சண்முகம்)
மாநிலத் தலைவர்

காவல்துறையினரின்  இந்த கொடூர செயலைக் கண்டித்தும், நீதி கிடைத்திட ஆதரவு அளித்தும்  குரல் எழுப்புமாறு மனித உரிமை ஆர்வலர்களையும் முற்போக்கு இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, November 25, 2011

பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்!

மங்கையராய் பிறப்பதோ பாவம் என்று நினைக்கும் அளவிற்கு பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் முன்பெல்லாம் குழந்தை திருமணம், பெண்கல்வி மறுப்பு, தேவதாசி முறை, சதி, விதவை மணம் மறுப்பு, இப்படி இருந்த நிலை மாறி இன்று உள்ள நுகர்வுக் கலாச்சாரத்தில் வன்முறை வடிவங்கள் மாறிக்கொண்டே வருகிறது. மாற்றம் என்பதே விதியானதால் வன்முறையின் வடிவங்களும் மாறிவருகின்றன. காதலிக்க மறுக்கும் பெண்ணின் முகஅழகை சிதைக்க முகத்தில் அமிலம் வீசுவது, சாதி-மதம் மாறி காதலித்தால் குடும்ப கவுரவமே போய்விட்டதாக செய்யும் கவுரவக் கொலைகள், பள்ளிகளில் ஆசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள், குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், இப்படி வன்முறையின் வடிவங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. தமிழகத்திலுள்ள 40சதவீத பெண்கள் ஏதாவது ஒரு வகையில் தினம் தினம் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.

பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க வாய்ப்பே இல்லாத நிலைமாறி அனைத்துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். பெண்கள் படிக்க வறுமை தவிர வேறு தடை இல்லை. நம் வீட்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதே டாக்டராக, என்ஜீனியராக, ஐ.ஏ.எஸ் அதி காரியாக வரவேண்டும் என்ற ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு அனுப்புகின்றோம். சில பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி காவலர்கள், டியூசன் ஆசிரியர்கள், இப்படி பலரது வக்கிரபுத்திகளுக்கு ஆளாகும் குழந்தைகளின் நிலைமைகள் பல வெளிவந்து கொண்டுள்ளன. மாதா, பிதாவுக்கு அடுத்து குருவை மரியாதைக்குரிய இடத்தில் நாம் வைத்துள்ளோம். ஆனால் குழந்தைகளை கொண்டாட வேண்டிய குருவே இப்படி செய்தால்?

கடந்த ஆகஸ்டு 15ல் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி விட்டு இனிப்பு வழங்கிக்கொண்டிருந்த பள்ளி தலைமைஆசிரியரை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர். இது விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊராட்சி ஓன் றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சம்பவம். 12,13 வயது சிறுமிகளை வார்த்தைகள் கூட எழுத கூசும் அளவிற்கு அந்த தலைமைஆசிரியரின் நடவடிக்கைகள் அமைந்தன. குழந்தைகளின் பெற்றோர் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது “வழக்கு நடந்து தீர்ப்பு வர 10 ஆண்டுகள் ஆகும். அப்போது உன் குழந்தைக்கு திருமண வயது வந்து விடும். எனவே கொடுப்பதை வாங்கிக் கொண்டு வழக்கை வாபஸ் வாங்கு” என்று காவல் துறையால் அந்த பெற்றோர்கள் மிரட்டப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தலித் குழந்தைகள். ஒரு குழந்தையின் பெற்றோர்க்கு ரூ.15 ஆயிரம் வாங்கிக் கொடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. காவல்துறையின் இச்செயல் குற்றம் செய்த ஆசிரியர் செய்த செயலைவிட இழிவான செயல் அல்லவா. மாதர் சங்க போராட்டத்திற்குப்பின் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஆரோக்கியசாமியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் பிரச்சனைகளை பள்ளி ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, குற்றம் செய்பவர் தலைமை ஆசிரியராக இருப்பதால் சகஆசிரியர்கள், பிரச் சனையில் தலையிடவில்லை. பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளிடம் மாதர் சங்கம் நடத்திய விசாரணை அனைவரது உள்ளங்களையும் குமுறச்செய்தது. நடந்ததை வெளியில் சொன்னால் பெற்றோர் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம். வீட்டில் சொன்னால் பெயில் ஆக்கிவிடுவதாக ஆசிரியர் மிரட்டியது, இன்று தலைமை ஆசிரியர் என்ன செய்ய சொல்வாரோ என்ற பயத்துடனும் ஒவ்வொரு நாளும் பொழுதை தள்ளிய மாணவிகள் பலர். மார்பகங்கள் கசக்கப்பட்டு வேதனை தாங்காமல் பல நாள் தூக்கத்தை இழந்த மாணவிகள் பலர். இதையெல்லாம் கேட்ட போது நெஞ்சம் பொறுக்க வில்லை, இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கும் போது, மாதர் சங்கத்தின் 2மாத போராட்டத்தால் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூர் மாவட்டம் சோலிங்கம் பகுதியில் அரசு பள்ளியில் 13வயது சிறுமி தினமும் வகுப்பின் வருகைப்பதிவேடும், தேர்வு நோட்டுகளையும் ஆசிரியர் அறைக்கு கொண்டு சென்ற போது வகுப்பு ஆசிரியரால் பாலியல் சீண் டலுக்கு உட்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு விடுதி மாணவி அந்த பள்ளியில் முதல்வரால் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக்குச் செல்ல மறுத்த 10வயது சிறுமியை விசாரித்த போது, அவள் சொன்ன தகவல் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் பள்ளி இடை வேளை நேரத்தில் தலைமைஆசிரியர் ராமசாமி அக்குழந்தையை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். வெளியில் சொல்ல பயந்து பலநாட்கள் வேதனைகளை தாங்கியிருந்தாள். தகவல் தெரிந்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளிக் கதவுகளை இழுத்து மூடியது. பின்னர் தலைமை ஆசிரியர் ராமசாமி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரியில் உண்டுஉறைவிடப் பள்ளியில் பள்ளித் தாளாளரால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தை ஒன்று தன்னை பாதுகாக்கக் கோரி மாதர் சங்கத்திடம் மனு கொடுத் துள்ளது. இப்படி அடுக்கடுக்காக வந்து கொண்டுள்ள இச்செயல்களை தடுக்க வேண்டியது நம் கடமை அல்லவா? அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழகம் முழுவதும் 100 பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை நடத்தியுள்ளது.

கிராமப்புறப்பள்ளிகள் பலவற்றில் பள்ளிக்கு அருகில் உள்ள முட்புதர்களே, கழிப்பறை தடுப்புச் சுவர்களாக நிற்கின் றன. கழிப்பறைகள் இருக்கும் பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லை. பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் கொடுக்கும் தமிழக அரசு, தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன் வருமா? பள்ளிகளுக்கு ஆய்விற்கு சென்ற பலர் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட வில்லை. பெரும்பாலும் மாணவிகளை குடியிருக்கும் பகுதிகளிலேயே சந்திக்க முடிந்தது. பல பிரச்சனைகளை சொன்ன மாணவிகளும் பெற்றோர்களும் தங்கள் பெயரைச் சென்னால் தாங்கள் பள்ளி நிர்வாகத்தால் பழிவாங்கப்படும் பயத்தையும் வெளிப்படுத்தினர்.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் யாருடைய செல்லக் குழந்தைகளுக்கும் வந்துவிடக் கூடாது என்று ஜனநாயக மாதர் சங்கம் சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தன்று (நவம்பர் 25) “பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்” என்று முழக்கமிடுகிறது. கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. பணியிடங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்க புகார் கமிட்டி இருப்பது போல கல்வி நிலையங்களிலும் புகார் கமிட்டியை அமைத்திட வேண்டும்.
2. வளர்இளம் பெண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு கல்வியை கல்வித்துறை வழங்க வேண்டும்.
3. எந்த பிரச்சனைகளையும் எழுத்துப் பூர்வமாக புகார்கள் எழுதி போட கல்வி நிலையங்கள் தோறும் புகார் பொட்டிகள் வைக்க வேண்டும்.
4.  அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிட தகுதியான கவுன்சிலர்களை நியமனம் செய்திட வேண்டும்.
5. அப்படி இல்லை என்றால் அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
6. அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தண்ணீர் வசதியுடன் தனிக்கழிப்பறைகளும் சுற்றுச்சுவர் பாதுகாப்பு வசதியும் வேண்டும்.
7. தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் போல சட்ட அந்தஸ்து பெற்ற மாநில குழந்தைகள் ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
8. அரசு பேருந்துகளில் பள்ளிக்கு செல்லும் போது பாலியல் சீண்டல் நடந்தால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
9. பாதிப்புக்குள்ளான குழந்தைகளை வீடியோ கான்பிரன்சிங்கில் விசாரிக்கவும், விசாரணையின் போது குழந்தைகள் மனநல மருத்துவரை உடன் வைத்து விசாரிக்கவும், ஆசிரியர்களுக்கும் வளர் இளம் பெண்களின் மனநிலை பற்றிய சரியான புரிதலுக்கான பயிற்சி கொடுக்கவும் வேண்டும்.

தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் மாதர்களும் மாணவிகளும் போராட்டக் களம் காண்கிறார்கள். ‘பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என பாப்பாவை தைரியப்படுத்தி பாதகச்செயலை எதிர்த்து பள்ளி மாணவிகளை பாதுகாப்போம்! வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்!!


- பி.சுகந்தி

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)