Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Tuesday, April 3, 2012

ஊழலில் திளைக்கிறது தனியார் துறை:ஆய்வறிக்கையில் அம்பலம்


ஊழல் பற்றிய விவாதங்கள் அனைத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் மோசடிகளைப் பற்றி மட்டுமே நடக்கின்றன. சமூக ஆர்வலர்கள் குழு என்ற பெயரில் அண்மைக்காலமாக ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் என்று நடத்திக் கொண்டிருக்கும் அன்னா ஹசாரே குழுவினரும் இந்த இரண்டு பிரிவினரைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். தனியார் பெரு நிறுவனங்களின் பெருஊழல்கள் மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கு வருவதை இவர்கள் விரும்புவதில்லை.

இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே விதிவிலக்காக கோதாவரி படுகை எரிவாயு மற்றும் 2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட விவகாரங்களில் தனியார் நிறுவனங்களின் பாத்திரங்களை அம்பலப்படுத்தி வருகின்றன. ஊடகங்களும் தனியார் நிறுவனங்களின் பெரு ஊழல்களைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் முதன்முறையாக டிரான்ஸ்பரசி இன்டர்நேஷனல் இந்தியா என்கிற அமைப்பு தனியார் துறையின் மோசடிகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு விபரங்கள் மத்திய ஊழல்தடுப்பு ஆணையத்தின் செய்திக்கடிதத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் நிறுவங்களுக்கு இடையிலுள்ள கொள்ளைக்கூட்டை இந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதில் அமைச்சராக இருந்த ஆ.ராசாவுடன் இவர்கள் எப்படி கூட்டுச் சேர்ந்தனர் என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்* ஊழலால் இந்தியத் தனியார் துறை பாதிக்கப்படுகிறது என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால், அரசில் உள்ளவர்களோடு கூட்டுக்களவாணிகளாக இருந்து ஊழலை செய்பவர்களாக மாறிவிட்டனர். இந்த ஊழலில் பொதுத்துறையில் உள்ள அதிகாரிகளும், தனியார் துறையில் உள்ளவர்களும் கைகோர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, மின்னுற்பத்தி, கனிம வளம் மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளில் இத்தகைய மோசடிகள் பெருமளவில் நடைபெறுகின்றன.* தனியார் துறையில் நிகழும் ஊழல்களைத் தடுப்பதற்காக ஒரு வலுவான தடுப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். லஞ்சம் கொடுப்பதில் நாட்டின் தொழிலதிபர்கள் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.* தனியார் துறை நிர்வாகிகள், பொதுத்துறையில் உள்ள தங்களின் சகாக்களுக்கு லஞ்சம் தருகிறார்கள். மற்ற தனியார் நிறுவனங்களிலிருந்து தங்களது வேலையைச் செய்து தரவும் இத்தகைய லஞ்சம் வழங்கப்படுகிறது.டிரான்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஊழலுக்கு எதிராக சர்வதேச அளவில் இயங்கி வருகிறது. ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து இந்த அமைப்பினர் இயங்குகிறார்கள்.இவர்களுக்கு இந்தியாவிலும் கிளை உள்ளது.

 அந்தக் கிளைதான் தனியார் துறையின் ஊழல் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. சரக்குகளை வாங்குவதில் எப்படி அரசுத்துறைக்கு சில கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளனவோ, அதேபோல் தனியார் துறைக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். இதில் நேர்மையான அணுகுமுறை என்பது ஒரு திட்டமாகும். 1990களில் இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றால் ஊழல் தடுப்புக்காக இது கொண்டு வரப்பட்டது. இத்தகைய அணுகுமுறை தனியார் நிறுவனங்களுக்கும் விரிவடைய வேண்டும். குறிப்பாக, ஒப்பந்தப்புள்ளி கோருதலில் தீவிரமான கண்காணிப்பு தேவைப்படுகிறது.ஆலோசனைகள் கேட்கிறோம் என்ற பெயரில் அரசு பல்வேறு பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இடதுசாரிக்கட்சிகள் தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் ஊழல் மோசடிகளை விசாரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. மத்திய அரசோ, மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம் என்று கூறுகிறது.இத்தனைக்கும் 22 மாநிலங்கள் பதில்கூட அனுப்பிவிட்டன. இதில் கொடுமை என்னவென்றால், தனியார் துறையில் லஞ்சம் கொடுப்பதை குற்றம் என்று இந்தியக் குற்றவியல் சட்டம் சொல்லவில்லை. அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால்தான் அதைக் குற்றம் என்றும், பின்னர் அந்தக் குற்றங்களை விசாரித்து தண்டனை தருவது என்றும் நடவடிக்கைகள் எடுக்க முடியும். இதைச் செய்ய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

மக்கள், இடது சாரிகள் நிர்ப்பந்தம்

இடதுசாரிகள் நிர்ப்பந்தம் கொடுத்து வருவது ஒருபுறம். இந்தப் பிரச்சனையைக் கைகழுவிவிடாமல் இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்ததற்கு மற்றொரு காரணமும் உருவாகியுள்ளது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தனியார் துறை ஊழலை குற்றவியல் சட்டத்தில் குற்றமாகக் கருத வேண்டும்.

இந்த நிர்ப்பந்தம் எழுந்ததால்தான் நடவடிக்கை எடுப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த நாசகர அணுசக்தி ஒப்பந்தத்திற்கே பொதுக்கருத்து என்று பேசாத மத்திய அரசு, ஒரு மாநிலம் பதில் அனுப்பாமல் இருந்தால்கூட இது பற்றிப் பேசாமல் இருந்து விடுவது என்றிருக்கிறது. ஆனால் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. நீண்ட நாட்களுக்கு இப்படிக் காலம் கடத்திவிட முடியாது என்பதைத்தான் மக்களின் கருத்துகள் காட்டுகின்றன. அந்தக் கருத்தையே டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் ஆய்வு பற்றிய அறிக்கை பிரதிபலிக்கிறது.

-------------------------------------------------------------------------------
2ஜி ஸ்பெக்ட்ரம்

மத்திய அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்களுக்கு அவர் சாதகமாக இருந்திருக்கிறார் என்பது நீதிமன்றத்தின் முன்னால் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். மத்தியப் புலனாய்வுக்குழு தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில் ரிலையன்ஸ் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ்(தமிழ்நாடு) மற்றும் ஸ்வான் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். பின்னர், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கைதானார். அதைத்தொடர்ந்து குசேகான் நிறுவனத்தின் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத் தின் இயக்குநர் கரீம் மொரானி ஆகியோர் கைது செய்யப்பட் டார்கள்.

டிசம்பர் மாதத்தில் எஸ்ஸார் நிறுவனத்தின் ரவி ருயா மற்றும் அன்சுமன் ருயா, லூப் டெலிகாம் நிறுவனத்தின் ஐ.பி.கய்தான் மற்றும் கிரண் கய்தான் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன.
----------------------------------------------------------------------------------

Friday, March 23, 2012

லோக்பால் வருமா? வராதா?இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்


லோக்பால் மசோதா பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வெள்ளிக்கிழமை கூட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடர், உகாதி பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்தில் ராஜ்யசபா கட்சி தலைவர்கள் பங்கு பெறும் அனைத்துக் கட்சிக்கூட்டம் பிற்பகல் நடைபெறும் எனத் தெரிகிறது.
அன்னா ஹசாரே போராட்டம்: வலுவான லோக்பால் சட்டத்தை நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என அன்னா ஹசாரே வலியுறுத்துள்ளார். மசோதா நிறைவேற்றத் தவறினால் வரும் திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அரைக்கிணறு தாண்டிய லோக்பால் மசோதா:

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் சட்ட மசோதா லோக்சபாவில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் மசோதா நிறைவேறவில்லை.

எப்படியும் இந்தக் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றிட

வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு இருப்பதாகவும், அதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday, March 18, 2012

இந்திய வாக்களர்கள் புத்திசாலிகள்: சல்மான் ருஷ்டி

வாக்களார்கள் அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள் என்பதை அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நிருபித்தவிட்டனர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்ட் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சனிக்கிழமை தில்லி வந்த அவர் விடுதலைக்கு எதிரான என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:

சில அரசியல், தேர்தல் காரணங்களுக்கு எனக்கு ஜெய்ப்பூரி இலக்கிய விழாவில்பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது பயனற்ற ஒன்று. இதனால் தேர்தலில் தோல்விஅடைந்த்து காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவுக்கு தற்போது இருக்கும் தலைமையைவிட சிறந்த தலைமை அவசியமாகிறது. 95 சதவீதமான இஸ்லாமியர்கள் வன்முறையைவிரும்புவதில்லை. இது இந்துகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் கருத்துசுதந்திரம் நாளுக்குநாள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

 ஒவ்வொருநாளும், இந்து, இஸ்லாமிய ஆகிய மதங்களின் குழுக்கள் புது புது
அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துகின்றனர். கருத்து சுதந்திரத்துக்கு எதிராக
நிகழ்த்தப்படும் அச்சுறுதல்களைக்கு எதிர்வினைக்கு பதிலாக பலத்த மௌனமேமிஞ்சுகிறது. இவ்வாறு உறங்கிக் கொண்டிருக்கும் மக்களை விழிப்புக் கொள்ளச்செய்ய வேண்டும். சுதந்திரம் என்பது தேநீர் விருந்தல்ல. அது போருக்குநிகரானது. சுதந்திரம் என்பது முழுமை பெறாத ஒன்று என்பதால் யார் வேண்டுமானலும் தவறாக பயன்படுத்த இயலும். நாம் பெற்ற சுதந்திரத்தை காக்கத்தவறினால், அதை இழந்தவிடுவோம் என் மீது தாக்குதல் நடத்தும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

சுதந்திரமான கருத்துகளுக்கு இந்தியா பாரம்பரியமாக இடம் அளித்து வந்துள்ளது.  ஆனால் தற்போது அது போன்ற கருத்துகளுக்கு இடமளிக்கும் போக்கு குறைந்து வரைகிறது. வாக்கு வங்கி அரசியல் வெட்கி தலைகுனிகிற அளவுக்கு வளர்ந்துள்ளது.  

இணையதள யுகத்தில் என்னுடைய புத்தகங்களுக்கு தடை விதிப்பதால் எந்தப்
பயனும் இல்லை என்றார். 

Thursday, March 1, 2012

துருப்பிடித்த முதலாளி மனங்களைதோற்கடித்த தொழிலாளர்கள்


   தில்லி அருகில் வாசிர்பூர் என்ற ஒரு பகுதி. இரும்புப் பாளங்களை எஃகு இரும்பாக மாற்றுகிற தொழிற்சாலைகள் இங்கே உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளாக இவற்றின் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, பொது விடுமுறை எதுவுமே கிடையாது. அதற்கு முன் வரையில் விடு முறை அளிக்கப்பட்டு வந்தது. புதிய தொழிற் சாலைகள் வந்ததைத் தொடர்ந்து, பிழைப்புக்காக நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து எவ்வளவு கொடுமையையும் தாங்கிக்கொள்ளத் தயாராக ஏழைத் தொழிலாளர்கள் தலைநகருக்கு இடம்பெயர்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு விடுமுறையை ஒழித்துக்கட்டினார்கள் முதலாளிகள். 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்கினார்கள். மருத்துவ உதவியோ, பாதுகாப்புக் கவசமோ எதுவுமே இல்லை.

  ஆகவே கடுமையான உடல்நலச் சீர்கேடு, தொடர்ந்து உழைக்க முடியாவிட் டால் கட்டாய வெளியேற்றம் என கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வேதனையை மறக்க அவர்களில் பலருக்குக் கிடைத்த ஒரே வழி மதுக்கடைகள்தான். பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான், பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான் என்பதால் தொழிற்சங்கப் பதாகையின் கீழ் இவர்கள் திரள்வதை முத லாளிகள் எளிதாகத் தடுத்து வந்திருக்கிறார் கள்.பொறுத்தது போதும் என, கடந்த ஆண்டு பிப்ரவரியில் கோரிக்கைகளை முன்வைத்தார்கள் தொழிலாளர்கள். முதலாளிகள் அசைந்து கொடுக்கவில்லை. அரசாங்கம் இவர்கள் பிரச்சனையில் தலையிட முன்வரவில்லை. கோரிக்கைகளை எழுப்புவதில் முன்நின்ற தொழிலாளர் தலைவர்கள் பழிவாங்கப்பட்டார் கள்.ஆயினும், இந்த ஆண்டு பிப்ரவரியில் தொழிலாளர்கள் துணிந்தார்கள். 15ம் தேதி தொழிலாளர்கள் சுமார் 1,100 பேர் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தார்கள். மறுநாள் வேலைக்குச் சென்றபோது அவர்களை உள்ளே வரக்கூடாது என்று தடுத்தார்கள் முத லாளிகளின் அடியாட்கள். இதைவிடவும் மோசமான நிலையில் வேலை செய்ய புதிய அப்பாவிகள் கிடைப்பார்கள் என்ற தைரியம் முதலாளிகளுக்கு.ஆனால், தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் களம் இறங்கினார்கள். மதம், இனம், சாதி, மொழி, கட்சி வேறுபாடுகள் கடந்து ஒன்றுபட்டவர்களாகத் தோள் சேர்ந்து நின்றார்கள்.24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருந்த எந்திரங்களின் பற்சக்கரங்கள் சுழல்வது நின்றுபோனது. இந்தத் தொழிற்சாலைகளி லிருந்து வருகிற எஃகு இரும்பை வைத்துத்தான் மற்ற தொழிற்சாலைகளில் பாத்திரங்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தயாராக வேண்டும். அந்த நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது உற்பத்தியும் முடங்கிய தைப் பார்த்து, இரும்புத் தொழிற்சாலைகளின் முதலாளிகளை நிர்ப்பந்திக்கத் தொடங்கினார் கள்.துருப்பிடித்த இரும்பு மனத்தோடு இருந்த இரும்புத் தொழிற்சாலை முதலாளிகள் பிப்ர வரி 24 அன்று இறங்கிவந்தார்கள். தொழி லாளர்களின் வார விடுமுறை கோரிக்கை ஏற்கப்பட்டது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவ சேவைக்கான அடை யாள அட்டைகள் வழங்கவும் ஒப்புக்கொள்ளப் பட்டது.

   இதன்மூலம் தொழிலாளர்கள் முறைப்படி பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவானது. பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் குறித்து தங் களது சங்கத்தின் தேர்தல் முடிந்தபிறகு பேசி முடிவு செய்யவும் முதலாளிகள் முன்வந்தனர். வெற்றிப் பெருமிதத்துடன் பணிக்குச் செல்லத் தொடங்கிய தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்தார்கள்... பிப்ரவரி 28 அன்று. ஆம், தங்களுடைய வெற்றியோடு ஒதுங்கிவிடாமல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல், இந்தியத் தொழிலாளர் சட்டங்களை அந்நிய நிறுவனங்களுக்குத் தோதாக வளைப்பதைக் கைவிடுதல் போன்ற மக்கள் நலனுக்கான கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் இவர்களும் பங்கேற்றார்கள் கம்பீரமாக.பிரித்துவைக்கும் வரப்புகளைத் தாண்டி உழைக்கும் வர்க்கமாக ஒன்று பட்டுப் போராடிய வெற்றிக்கதை இது. இந்தத் தொழிலாளர்களுக்கும், நம்பிக்கை யற்றிருந்தவர்கள் போராட்ட உணர்வு மிக்கவர்களாக அணி திரளக் காரணமானவர்களுக்கும் ஒரு செவ் வணக்கம்.
அ. குமரேசன்
(தகவல் ஆதாரம்: தி ஹிண்டு, 29.2.2012)

Tuesday, February 21, 2012

விளம்பரம்-செய்தி-கேள்விகள்



சில நாட்களுக்கு முன்பு ஏடுகளில் வருமானவரித் துறையின் விளம்பரம் ஒன்று வெளி வந்தது. அதில் 22,52,06,926 தகவல்கள் தங் களுக்கு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் 

1. வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்குமேல் செலுத்தியவர்கள் 2.27,50,545 

2.ரூபாய் முப்பது லட்சத் திற்குமேல் மதிப்புள்ள வீடு வாங்கியவர்கள் 6,23,384.

3. கிரெடிட் கார்டில் 2 லட்சத்திற்கு மேல் கையாண்டவர்கள் 15,23,728

4.  கடன்பத்திரங்களில் ரூ.2 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்தவர்கள் 33,21,695.

  இப்படி விவ ரங்கள் தரப்பட்டுள்ளன. அதாவது மறைக்காமல் வங்கிக் கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்தவர்கள் இவர்கள். ஆனால் இதற்குரிய வரியைக் கட்டவில்லை. வருமான வரித்துறை அதற்கான வரியை வசூலிக்க களத்தில் இறங்கியுள்ளது. 

இந்தக் கணக்கை பார்க்கும்போது இந்தியாவில் மேல்தட்டில் இருக்கிற சுமார் 20 விழுக் காட்டினர் மத்தியில் அதிகாரபூர்வமாகவே பெருமளவு பணம் புழங்குகிறது. இவை அனைத் தும் சட்டபூர்வமாக - நியாயமாக சம்பாதித்தது தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரத் தில் கணக்கில் உள்ளவைதான் இவை. மறு புறம் பெருமளவு சட்டவிரோதமாகவே பணப் புழக்கம் நடக்கிறது என்பதை அரசே அறியும். 

மத்திய புலனாய்வு கழகத்தின் இயக்குநர் ஏ.பி. சிங் கருப்பு பணம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு தகவல் அறிக்கையில், சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் உள்ள வங்கி களில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உலவும் இந்தக் கருப்புப் பணத் தில் 40 விழுக்காடு இந்தியர்களுடையது என்று அவர் கூறுகிறார். மேலும் உயரதிகாரிகளுக்கும் ஆளும் அரசியல் வாதிகளுக்கும் லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட பணம் பெருமளவு கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். 

இந்திய வங்கிகளில், இங்குள்ள நிதி நிறு வனங்களில் முதலீடாகவோ வேறுவகையிலோ பற்றுவரவு வைத்திருக்கிறவர்களை விரட்டிப் பிடிக்க முடிகிற அரசு எந்திரத்தால், கடல் கடந்து போனவர்கள் விவரத்தைக்கூட இன்னும் சேகரிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. 

ஆளுங்கட்சிக்கும் அதிகார வர்க்கத்திற்கும் சாதாரண ஏழை, எளிய மக்கள் கோடிக்கணக் கான ரூபாய் லஞ்சம் கொடுத்திருக்கவே முடி யாது. பன்னாட்டு நிறுவனங்களும் பகாசுர நிறு வனங்களும் வரம்புமீறி இந்திய மக்களை சுரண்ட -இந்திய வளங்களை கொள்ளை யடிக்க அள்ளிக் கொட்டப்பட்டதுதான் இந்த லஞ்சப் பணம் என்பது வெளிப்படையாகத் தெரியும் உண்மை. ஆக லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, கள்ளப்பணம், கருப்புப் பணம் இவற் றின் ஊற்றுமையமாக இருப்பது எது? 

மாறி மாறி மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ்- பாஜக அரசுகள் கடைப்பிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகள்; குறிப் பாக உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என் கிற சீரழிந்த பாதை. ஒரு சிறு பகுதி இந்தியர் களை பெரும் கோடீஸ்வரர்களாகவும், கருப்புப் பண முதலைகளாகவும் மாற்றியிருக்கிறது என்பதும் பெரும்பகுதி மக்களை ஓட்டாண்டி ஆக்கி யிருக்கிறது என்பதும்தான் கடந்த 20 ஆண்டு காலத்தில் கசப்பான அனுபவம். ஆகவே இந்தக் கொள்கையை எதிர்க்காதவரை - மாற்றப் போராடாதவரை, லஞ்சத்தைப் பற்றியும் கருப்புப் பணத்தைப் பற்றியும் மேலோட்டமாகப் பேசு வதும் குரல் கொடுப்பதும் என்ன பயனைத் தந்து விடப் போகிறது? அன்னா ஹசாரேக்கள் கேள்வி கேட் காமல் தோற்ற இடமும் விட்ட இடமும் இதுதானே!

Monday, February 13, 2012

காதலை காப்பாற்ற வேண்டும் கலாச்சாரக் ரவுடிகளிடமிருந்து

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் நெருங்குகிறபோதெல்லாம் இந்துத்துவா கூடாரம் கூச்சல் எழுப்புவதும், அடாவடி நடவடிக்கைகளில் இறங்குவதும், வன்முறைத் தாக்குதல்கள் தொடுப்பதும் வழக்கம்தான். ஆர்எஸ்எஸ், பாஜக தலைமைகள் “அந்நியக் கலாச்சார ஊடுருவல்” என்று கருத்துப் பிரச்சாரமாகச் செய்வார்கள், பஜ்ரங்தள், ராம் சேனா, இந்து முன்னணி போன்ற உதிரி அமைப்புகள் களக்கலவரங்களில் ஈடு படுவார்கள்.

காதலர் தினத்தன்று “வரம்பு மீறினால்” அதை அனுமதிக்கப் போவதில்லை என்று மத்தியப் பிரதேச மாநில பஜ்ரங்தள் அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே தொனியில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களும் அறிவித்திருக்கிறார்கள். சிலர் சொல்லாமல் செய்வதே பெருமை என்ற நினைப்பில் இப் படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடாமலே ஆயுதங்களைத் தயார் செய்துகொண்டிருக் கிறார்கள். 

உருட்டுக்கட்டைகளும் ஈட்டிகளும் வாள்களும் மட்டுமல்ல இந்த சுயநியமன கலாச்சாரக் காவல்காரர்களுடைய ஆயுதங்கள் - தாலி, ரக்சா பந்தன் போன்றவையும்தான். காதலர் தினம் கொண்டாடப்படும் உணவகங்கள், வாழ்த்துப் பொருள் விற்கிற கடைகள் ஆகியவற்றின் மீது முதல் வகை ஆயுதங்களால் தாக்குதல் தொடுக் கப்படும். சாலையில், தெருவோரத்தில், பூங்காவில், கடற்கரையில் என எந்தப் பொது இடத்திலும் ஆணும் பெண்ணுமாய் இருவர் நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தால் அங்கே இரண்டாவது வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். 

காதல் என்பது அந்நியக் கலாச்சாரமா? மனத் தளவில் ஈர்க்கப்பட்ட இருவர் காதல் வயப்படு வதும் ஒருவருக்காக இன்னொருவர் என கரம் கோர்ப்பதும் உலகில் எந்தவொரு நாகரிகமும் தனது பண்பாடல்ல என்று கூற முடியாது. ஆனால் இவர்கள் எதற்காக இதை எதிர்க்க வேண்டும்? அந்நிய நிறுவனத்தின் கைப்பேசி யில் சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த அமைச்சர்களையே வைத்திருந்தவர்கள்.

 இயற்கையான காதல் உறவுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்?

 ஒரே காரணம்தான். இந்துத்துவம் என்பது எதன் மீது கட்டப்பட்டிருக்கிறதோ அந்த சாதிப் பாகுபாட்டுச் சமூக அமைப்பின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதலாகவே காதலைக் காண்கிறார்கள். இந்தியாவின் பல சமூகங்கள் நவீன வளர்ச்சிகளோடு சம்பந்தமில்லாதவர்களாகப் பின்தங்கியிருப்பதற்குக் காரணம், குடும்ப உறவுகளுக்கு உள்ளேயே திருமணம் என்ற சாதி வரப்புகள்தான் என்று சமூக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் மாற்றம் ஏற்படு வதை இந்துத்துவ சூலாயுதங்களால் ஏற்க முடியவில்லை என்பதுதான் பிரச்சனையே.

இந்துத்துவத்தின் இன்னொரு அடித்தள மாகிய பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாத்தல், சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்த மக்களோடு கலப்பு ஏற்படுவதைத் தடுத்தல் என்ற வக்கிரம் மிகுந்த நோக்கங்களும் இவர்களது மிரட்டலின் சாராம்சங்களாக இருக்கின்றன. யாரும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க இயலாது என்று காவல்துறையினர் பொத்தாம் பொதுவாக எச்சரித்திருப்பதைக் கண்டு, மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள கும்பல்கள் பின்வாங்கிவிடாது. சமூக மாற்றத்திற்கு ஒரு வகையில் பங்களிக்கிற இளம் காதலர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் அளிக்கிற கடமை மாநில அரசுகளுக்கு இருக் கிறது. முற்போக்கு சக்திகளிடமிருந்தும் காதலர்களுக்கு அந்த நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைத்திட வேண்டும்.

Saturday, February 4, 2012

சினிமா வரலாற்றை அறிய


"எழுத்து, இசை, நாடகம் போன்ற ஊடகங்கள் ஒரு சராசரி இந்தியக் குடிமகன்மீது ஏற்படுத்தும் உடனடித் தாக்கத்தோடு சினிமா என்ற ஊடகம் அவன்மீது ஏற்படுத்தும் தாக் கத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், சினிமாவின் தாக்கம் அசுரத்தன மானது என்பதை உணரலாம். வேறு எந்த மாநிலத்து மக்களையும் விட தமிழக மக்கள்மீது சினிமாவுக்கு இருக்கும் ஆதிக்கம் மிகமிகப் பெரிதாக இருக் கிறது.

நமது இளைஞர்களுக்கு இசை என்றால் அது சினிமாப் பாடல்கள் என்று ஆகி விட்டது. கவிதை என்றால் அது அந்தப் பாடல்களுக்கென எழுதப்படும் வரிகள் என்று ஆகிவிட்டது. நடனம் என்றால் அது சினிமா நாயகனும், நாயகியும் அரை குறை ஆடை அணிந்த 50, 60 பேர்களும் சேர்ந்து போடும் குத்து, கும்மாளம் என்று ஆகிவிட்டது. ஓவியம் என்றால் அது சினிமாவுக்காக வைக்கப்படும் சாலையோர விளம்பர பேனர் கள் என்று ஆகிவிட்டது. உடை என்றால் நட்சத்திரங்கள் திரையில் என்ன உடுத்திக் கொள்கிறார்களோ அதுதான் என்று ஆகிவிட்டது.

சினிமாவில் பிரயோகிக்கப்படும் வார்த்தையாடல்கள் தமிழர்களது அன்றாடப் பேச்சு வழக்கில் சர்வ சாதாரணமாகக் கலந்து போய்விடுகின்றன. இவை போக அறிஞர் அண்ணா முதல் கலைஞர் வரை (இப்போது ஜெயலலிதா) அத்தனை முதல் வர்களும் சினிமாக்காரர்கள்தான்.’’

அஜயன்பாலா சித்தார்த் பிறந்த இடம்: காஞ்சீபுரம் தொடர்புகளுக்கு: முகவரி: அஜயன்பாலா 18/9 தரைத்தளம், நான்காவது தெரு, தசரதபுரம், சென்னை 93. மின்னஞ்சல்: ajayanbala@gmail.com 
மேற்கூறியது அஜயன் பாலாவின் ‘உலக சினிமா வரலாறு’ புத்தகத்துக்கு பாலு மகேந்திரா எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. இதைவிட தமிழ்நாட்டில் சினிமா வுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கிவிட முடியாது. இந்தச் சூழலில் தமிழ் மக்களில் பெரும்பாலோர் அந்த வலுவான ஊடகத்தின் வரலாறு என்னவென்று அறியா மலேதான் உள்ளனர். அதைப்பற்றிய நல்லது கெட்டதையும், தரத்தையும் அறிந்து கொள்ள வும், புரிந்து கொள்ளவும் அந்த ஊடகம் பற்றிய அடிப்படை அறிவு தமிழர்களுக்கு அவ சியமாகிறது. அந்த வகையில் அஜயன் பாலாவின் இந்தப் புத்தகம் முக்கியமான பங்கை வகிக்கிறது. 1894ல் துவங்கி 1929 வரையிலான காலகட்டத்தில் சினிமாவின் வளர்ச்சியை எளிய வார்த்தைகளில் விளக்கிச் செல்கிறது இந்தப் புத்தகம். 

‘மேஜிக் லாண்டர்னில்’ துவங்கி சிறிது சிறிதாக சினிமா புராஜக்டர் வளர்ச்சி யடைந்தது என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு இயந்திரத்தை உருவாக்கு வதில் எடிசன், லுமியர் சகோதரர்கள், டிக்சன் என பலர் பங்கு வகித்துள்ளனர். இதில் எடிசனின் பங்கு ஆச்சரியம் அளிக்கிறது. பிறகு துண்டு துண்டாகக் காட்டப்பட்ட படங்களை இணைத்து கதை சொல்வதில் துவங்கி, பிறகு கதைகளையே எப்படித் திரைப்படமாக எடுத்தனர் என்பதும் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளது.


இந்த விவரங்களைத் தவிர இவை குறித்த ஏராளமான படங்களையும் தேடிப் பிடித்து தொகுத்தளித்திருக்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தின் மூலம் தினத் தந்தியில் அஜயன் பாலா எழுதிய தொடர். அந்தத் தொடரை எழுதியபோது வலைதளங்கள் கிடையாது. அந்த நிலையில் ஆசிரியர் விவரங்களைச் சேகரிக்கவும், புகைப்படங்களைத் தேடித் தொகுக்கவும் மிகவும் சிரமப்பட்டிருப்பார் என்பதை விளக்கத் தேவையில்லை. அதற்கு அவருக்கு ஒரு ‘சபாஷ்’. இது தவிர முத்திரை பதித்த பல படங்கள் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். சாப்ளின் உட்பட பலரின் திரை வாழ்க்கை மீது இது வெளிச்சம் பாய்ச்சுகிறது. 

‘புதிய கோணம்’ என்ற தலைப்பில் சினிமா குறித்த புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பாரதி புத்தகாலயம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பே கூறியது போல சினிமா வரலாறை அறிவதற்கு, எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஒரு பங்கையாற்றும் என்பது நிச்சயம். இதைத் தொடர்ந்து இன்று வரையிலான வளர்ச்சியையும் அஜயன் பதிவு செய்ய வேண்டும். பாரதி புத்தகாலயம் அதை வெளியிட வேண்டும் என்பது அவா. நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

புத்தகம் வேண்டுவோர்.
BHARATHI PUTHAKALAYAM. 
421, Anna Salai, Teynampet,
 Chennai-600 018. Phone: 044-24332424, 24332924, 24339024. 
Email: thamizhbooks@gmail.com

Wednesday, February 1, 2012

உண்மைக்கு புறம்பான ஆளுநர் உரை



தமிழகச் சட்டமன்ற கூட்டம் 30.01.2012 ல் நடைபெற்று, ஆளுநர் உரை ஆளுநரால் வாசிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை என்று அழைக்கப்பட்டாலும், ஆளுநரால் வாசிக்கப் பட்டாலும் ஆளுநர் உரை ஆளும் அரசின் உரை தான். அதில் பல்வேறு அறிவிப்புகள், சாதனைப் பட்டியல், கொள்கை அறிவிப்புகள் என பல உள்ளன. அதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கருத்துக்களை அறிக்கை வாயிலாகவும், சட்டமன்ற உறுப்பி னர்களின் உரைகள் வாயிலாகவும் பதிவு செய்யும்.

ஆனால் ஆளுநர் உரையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்பது தான் நகைப்பிற்கு உரிய ஒன்றாக உள் ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர் கள் பொறுப்பேற்ற உடனேயே வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இருந்த கொள் ளையர்களும், கொலைகாரர்களும், ரவுடி களும் வண்டி ஏறி ஆந்திராவிற்குச் சென்று விட்டார்கள் என்று பெருமையுடன் குறிப் பிட்டிருந்தார். ஆனால் கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அவரது கூற்றை மறுதலிக்கன்றன. கடந்த 6 மாதங்கள் நடை பெற்ற சம்பவங்களையெல்லாம் பட்டிய லிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக கடந்த ஒரு மாதத்தில், அதாவது ஆளுநர் உரை தயாரிப்பு காலமான 2012 ஜன வரி மாதத்தில் நடைபெற்றுள்ள சம்பவங் களே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எவ் வளவு சீர்கெட்டுள்ளது என்பதை வெளிப் படுத்தும்.

ஆளுநர் உரை நாளன்றே

ஆளுநர் உரை நிகழ்ந்த 30.01.2012 தமி ழகம் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் சம் பவங்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.30.01.2012 ல் சென்னை அருகே மதுரவாயல் அருகில் வேனில் பணத் துடன் சென்றுகொண்டிருந்த தனியார் நிறு வன வேனை வழிமறித்து, ஊழியர்களை அடைத்துப் போட்டு, அதிலிருந்த ரூ.22 லட்சம் பணத்தைக் கொள்ளையர்கள் அள் ளிச் சென்ற செய்தி பத்திரிகைகளில் வந்துள் ளது.அதே நாளில் வேலூர் அருகே ஆம் பூரில் சத்தியமூர்த்தி என்பவரின் எஸ்.ஆர். நகை அடகுக் கடையின் புறச்சுவரில் துளை போட்டு, ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர்.அதே 30 ம் தேதியில் ஒசூரில் வீட் டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை நாகரத்தினத்தின் வீட்டில் நுழைந்து, அவரை மிரட்டி 40 சவரன் நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஆளுநர் உரையில் சட்டம்-ஒழுங்கு குறித்து பெருமையடித்த நாளிலேயே அதற்குச் சவால் விடும் வகை யில் இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பதற வைக்கும் கொலைச்சம்பவங்கள்

2012 ஜனவரி மாதத்தில் மட்டும் நடை பெற்ற படுகொலை சம்பவங்களைப் பார்க்க லாம். ஜனவரி 2ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் சீதாலட்சுமி எனும் வங்கி அதிகாரிபடு கொலை செய்யப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஜனவரி 3ல் துடிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பட்டப்பகலில் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டார். இவர் அ.இ.அ.தி. மு.க. பிரமுகராக இருந்து கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 6 ல் பாளையங்கோட்டையில் அரசு பொறியியல் கல்லூரி அலுவலர் மணிராஜ், அவரது மனைவி பார்வதி ஆகியோர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கொள் ளையடிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 8ல் சென்னை மைலாப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் அரிகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஜனவரி 9ல் சென்னை அம்பத்தூரில் ஆந்திராவைச் சார்ந்த பெண்மணி புவனாரெட்டி படுகொலை. ஜனவரி 10ல் சென்னை கொளத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனேஸ்வர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அதே நாளில் கூடலூர் அருகே மணலி கிராமத்தில் கூலித் தொழிலாளி பாலசந்திரனின் 37 வயது மனைவி ராதாமணி, 15 வயது மகள் சம்யா, 12 வயது மகன் விஷ்ணு ஆகியோர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட் டுள்னர்.

ஜனவரி 10ல் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனம்பட்டி கிராமத்தில் அவர் வீட்டருகே வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். ஜனவரி 12ல் சென்னை முகப்பேர் அருகே ஒரு வாலிபர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 16 ல் கோபி செட்டிபாளையத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை படுகொலை செய் யப்பட்டு, உடல் கிடைத்தது. ஜனவரி 17ல் செங்கல்பட்டில் தே.மு.தி.க. கவுன்சிலர் சுரேஷ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 18ல் திருச்சி உப்பிலியபுரம் அருகே கோஷ்டி மோதலில் சிக்கிய ஆசிரியர் கும ரேசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 19ல் சைதாப்பேட்டையில் ராஜ சேகர் எனும் ஆட்டோ ஓட்டுநர் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட் டுள்ளார்.

ஜனவரி 21ல் சென்னை தீவுத்திடல் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மரத் தில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதே நாளில் விருத்தாசலத்தில் 10 சவரன் நகைக்காக தமிழ்ச்செல்வி எனும் பெண் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப் பட்டுள்ளார்.ஜனவரி 23 ல் புதுக்கோட்டை விராலிமலை அருகே அய்யப்பன், ரமேஷ் என்பவர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். ஜனவரி 23 ல் கோட்டூர்புரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஜனவரி 24ல் சென்னை போரூரை அடுத்த மாங்காட்டில் மகளிர் சுய உதவிக்குழு தலைவி அம்பிகா கழுத்தறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்.ஜனவரி 26 ல் வண் டலூர் தவுஷிக் நிஷா எனும் பெண் அவரது வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார். ஜனவரி 27ல் ஆலந்தூர் ஜல்ல டியன் பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் வெட் டுக் காயங்களுடன் ஒரு ஆண்பிணம் கண்டு பிடிக்கப்பட்டது.

கொள்ளைச் சம்பவங்கள்

ஜனவரி புத்தாண்டில் வழிபாட்டுக்காக சென்ற மேரி வினோமிகா எனும் பெண்ணை வழி மறித்து 12 சவரன் நகை பறித்துச் செல் லப்பட்டது. ஜனவரி 3ல் சென்னை அசோக் நகரில் தனியாக இருந்த அனுராதா அகர்வால் எனும் பெண்ணிடம் ரூ.2 லட்சமும், நகை களும் கொள்ளையடிக்கப்பட்டது. ஜனவரி 7ல் வில்லி வாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து டேவிட் என்பவரின் வீட்டில் 21 சவரன் நகையும், ரூ.6000 மும் கொள்ளை அடிக்கப்பட்டது. வேளச்சேரியில் ஜெய லட்சுமி எனும் பெண்ணிடம் வழிமறித்து, 10 சவரன் நகை பறிக்கப்பட்டது. ஜனவரி 8ல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் ரூ.2.5 லட்சம் பணமும், 3 கிலோ வெள்ளியும் கொள்ளை அடிக்கப்பட்டது.

ஜனவரி 12 ல் ஆலந்தூர் ஆலம்பாக்கத் தில் தனியாக இருந்த புஷ்பா எனும் பெண் ணைக் கட்டிப் போட்டு, அவரது கழுத்தில் கிடந்த 11 சவரன் நகையை திருடர்கள் தட்டிச் சென்றனர். ஜனவரி 18ல் சென்னை கொடுங் கையூரில் லாரி அதிபர் ராஜ்குமார் வீட்டில் பூட்டை உடைத்து, 27 சவரன் நகை, ரூ.10000 தொகையும் கொள்ளை அடிக்கப்பட்டது.அதே நாளில் சென்னை வளசரவாக்கத்தில் வெங் கடேச பெருமாள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

அன்றைய தினம் குமரி மாவட்டம் திட்டு விளையில் மெயின் ரோட்டில் உள்ள தோ வாளை கூட்டுறவு வீட்டுவசதி சங்க வங் கியில் 2 கேஸ் சிலிண்டருடன் வந்த கொள் ளையர்கள் லாக்கரை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.

ஜனவரி 23 ல் ஆலந்தூர் பெருங்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் பட்டப் பகலில் துப்பாக்கியால் மிரட்டி ரூ.24 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஜனவரி 25-ல் சிவகங்கையில் அடகுக்கடையில் கள்ளச் சாவி போட்டு திறந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இவ்வாறு இந்த ஒரு மாதத் தில் மட்டும் நடைபெற்ற சம்பவங் களில் ஒரு சில மட்டும் தரப்பட்டுள்ளது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் கடந்த 6 மாத ஆட்சியின் லட் சணத்தை இந்த ஒரு மாத நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

காவல்துறையினரின் நிலை

இத்தகைய படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் சிலவற்றில் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டாலும் பல வழக்குகளில் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, கைது செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட் டச் செயலாளர் தோழர் கனகராஜ், செல்வம் எனும் நபரின் நில மோசடிக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதற்காக அவரது வீட்டில் 2012 ஜனவரி 6 ல் நள்ளிரவு நேரத்தில் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் குற்றவாளி யார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தும் காவல்துறை இதுவரை குற்றவாளிகள் எவ ரையும் கைது செய்யவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் 29 ல் விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் 4 இருளர் இன இளம் பெண்கள் காவல்துறையைச் சார்ந்த 8 காவலர்களால் கொடூரமான முறையில் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் கூட குற்றவாளி களான காவலர்கள் இதுவரை கைது செய்யப் படாதது வெட்கக்கேடானது. ஒரு பெண் முத லமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இத் தகைய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அதிரடி இடம் மாற்றங்களையும், அரசியல் தொடர்புடையவர்கள் கைது நிகழ்வுகளையும் சந்திக்கும் தமிழகத்தில் ( நில மோசடி, கட்டப் பஞ்சாயத்து, அராஜகச் செயல்களில் ஈடு படும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை) இத்தகைய சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அத்தகைய குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் நடவ டிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, வீண் தம் பட்டம் அடிப்பதில் பலனில்லை.
எஸ்.நூர்முகம்மது

Monday, January 30, 2012

பிரதமரே, குறுக்கு வழிகளால் பயனில்லை!



பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்கள் 2012-ம் ஆண்டை குறிப்பிடும்படி யான இரு உரைகளோடு தொடங்கியுள் ளார். ஜனவரி மாதம் 3ம் தேதி இந்திய அறிவியல் காங்கிரசில் உரை நிகழ்த் தினார். மீண்டும் 10-ம் தேதி, இந்நாட்டின் வறுமை மற்றும் சத்துணவுக்குறைபாடு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள அறிக்கைகளை அவர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். இரு உரைகளும் வெவ்வேறு பிரச்சனை களைக் குறிக்கின்ற போதிலும், இணைத்துப் பார்க்கையில், இந்தியாவின் தகுதிகளைச் செயல்வடிப்பதில் கவலைய ளிக்கும் அணுகுமுறையையே உணர்த்துகிறது. 

சீனா முந்தி விட்டதாம்!

கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125-வது பிறந்த தின உரையிலும், பிரபஞ்சத்தின் நுண்ணணுப்பொருட்கள் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ் (போசோன் என்று இவரது பெயரிலேயே ஒரு நுண்ணணுப்பொருள் அழைக்கப் படுகிறது) அவர்களைப் பாராட்டி உரை நிகழ்த்தும் போதும், அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவினம் மிகக் குறைவாகவும் தேக்கமடைந்த நிலையில் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தற்போது, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதத்திற்கும் குறைவாகவே செல விடப்படுகிறது. இவ்விஷயத்தில் சீனா நம்மை முந்திவிட்டதாக வருந்திய பிரதமர், 12-வது திட்டக் காலம் முடிவு றுவதற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் குறைந்தபட்சம் 2 சதவீதமாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடவேண்டுமென்று வற்புறுத்தி யுள்ளார்.

பிரதமரின் பாராட்டத்தக்க நோக்கங்களை மறுக்க இயலாது. இத்தகைய செலவினங்களை அதிகரிக்க, அவர்கள் வலியுறுத்தும் வழிமுறைகளில்தான் பிரச்சனை இருக்கிறது. “மொத்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவினத்தில் மூன்றல் ஒரு பங்கினை மட்டுமே அளிக்கும் தொழிற்சாலைகள் தங்களது பங்களிப்பைக் குறிப்பிடும்படியாக உயர்த் தினால் மட்டுமே அதை எட்டிட இயலும்; மேலும் அரசின் பிரபலமான தாரக மந்திரமான, பொதுத்துறை-தனியார்துறை பங்கிணைப்பின் மூலமே இந்நோக்கங்களை அடைய இயலும்” என்று பிரதமர் கூறுகிறார். ஆய்வு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தனியார்கள் காட்டும் ஆர்வத்தின் பின்புலம் லாப நோக்கங்களை அதிகரிப்பதே என்பது உலகெங்கும் அங்கீ கரிக்கப்பட்ட விஷயமாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் அறிவியலின் பங்கு என்று பிரதமர் கூறியிருப்பது முரண்பட்டதாக இருக்கிறது. செயல்முறைசார் அறிவியல் ஆய்விற்கு நிதியைத்திரட்டுவது சுலபமாக இருப்பதால், அரசு, தனியார் நிதியைப் பெறுவதற்கான கொள்கைகளை வடிவமைக்கும் என்று கூறியுள்ளார். இத் தகைய எண்ணப்போக்கைப் பலப்படுத்த, “தற்போது, ஆய்வு மற்றும் வளர்ச் சிக்காக அரசு அளிக்கும் நிதி, செயல் முறை சார் அறிவியல் ஆய்வினைக்காட் டிலும் அடிப்படை ஆய்விற்கே பயன் படுகிறது என்று பிரதமர் வருத்தம் தெரி வித்தார். அப்படியெனில், அடிப்படை ஆய்வினைப் பலப்படுத்துவதற்கு பதி லாக தனியார்களின் லாபங்களை ஊக்குவிக்கும் தனியார்-பொதுத்துறை இணைப்பை பிரதமர் வலியுறுத்துகிறார் என்பதே இதன் பொருள். இப்போக்கிலே சிந்தித்தால், இராமானுஜன் மற்றும் போஸ் போன்ற விஞ்ஞானிகள் இந்தியா வில் உருவாவது சாத்தியமல்ல. 

மெலிந்துவரும் தேசம்! 

பிரதமர், அவரது இரண்டாவது உரை யில், ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச் சனை நாட்டின் அவமானமாகும் என வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுள் 42 சதவீதம் எடை குறைவாகவும் 59 சதவீதம் வளர்ச்சி குறைவாகவும் காணப்படுகிறது. இருப்பினும், இத்தகைய கண்டு பிடிப்புகள் ஒன்றும் புதிதல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிதி மந்திரியான மன்மோகன்சிங் அவர்க ளால் கொண்டுவரப்பட்ட பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள், பொருளாதார வேறு பாட்டின் அடிப்படையில் இரு வேறு இந்தியாவை உருவாக்குவதிலேயே வெற்றி கண்டுள்ளன என்ற உண்மை யினை பரந்த ஆய்வைக்கொண்ட அறிக் கைகள் சில ஏற்கனவே உறுதிப்படுத் தியுள்ளன. 

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுள் 50 சதவீதத்தினர் சத்துக்குறை வுடன் காணப்படுவது மிகவும் பின்தங்கி யுள்ள ஆப்பிரிக்காவின் தென்சஹாரா பகுதியைவிட மோசமானதாக இருக் கிறது. குழந்தைகளுள் பாதிப் பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுவதில்லை. எனவே, தடுக்கக்கூடிய நோயினால் இறக்கின்றனர். மருத்துவத்துறையில், அரசு மற்றும் தனியாரின் மொத்த செல வினத்தை எடுத்துக் கொண்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அந்த சதவீதம் ஆப்பிரிக்கா முழுவதையும் விட குறைவாக உள்ளது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளான பிறகும் கூட 50 சதவீத இந்தியர்கள் கழிப்பறை வசதியில்லாத பரிதாப நிலையில் இருக்கின்றனர். 

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் செய்யப்பட்ட தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் மூன்றாம் பதிப்பில் வெளிவந்த நிலைமைகள், அதன் இரண்டாம் பதிப்பில் வெளிவந்ததை விட மோச மாகியிருப்பது கவலையளிப்பதாக உள் ளது. 6- லிருந்து 35 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகள் இரத்தசோகை யினால் பாதிக்கப்படும் சதவீதம் 74.2 லிருந்து 79.2 ஆக உயர்ந்திருக்கிறது. இவ் விகிதம், 15-49 வரை வயதுடைய திரு மணமான பெண்களை எடுத்துக் கொண் டால் 51.8 சதவீதத்திலிருந்து 56.2சதவீத மாக அதிகரித்திருக்கிறது. இரத்த சோகையினால் பாதிக்கப்படும் இதே வயதையுடைய கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம் 49.7 லிருந்து 57.9 ஆக உயர்ந் துள்ளது. நமது தாய்மார்கள் மற்றும் குழந் தைகளின் நிலை இதுதான். 

அரசின் வறட்சியான திட்டம்

இந்தியாவின் ஊட்டச்சத்துக்கான தேசியக்குழுவின் தலைவராக பிரதமர் இருப்பது இதில் வேடிக்கையான விஷயம். இத்தகைய கடுமையான நிலையை சீர்செய்ய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவையை இந்தியா முழுமைக்கும் அமலாக்குவது என அரசு அறி வித்துள்ளது. ஆனால் இத்தகைய அறிவிப்பும் உச்ச நீதிமன்றத்தின் உத்தர வின் பேரிலேயே நடைபெற்றது. இருப்பினும், நம் நாட்டில் ஐசிடிஎஸ் கண்காணிப் பாளர்களின் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு காலியாகவே இருக்கிறது. மதிப்பிடப்பட்டுள்ள 14 லட்சம் மையங்களுள் 1 லட்சத்து 10 ஆயிரம் அங்கன் வாடிமையங்கள் செயல்படுவதேயில்லை. பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் பரிதாபமான நிலையில் உள் ளன. பலருக்கு, அதிலும் குறிப்பாக பீகா ரின் 90சதவீத மையங்களுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. பாதிக்கும் மேலான வற்றிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி யில்லை.

நாடாளுமன்றத்தில் கட்டாயமாக கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், அங்கன்வாடிகளை ஆரம்பப்பள்ளிகளுடன் இணைப்பதற்கான கோரிக்கை இயக்கங்கள் தொடரும் நிலையிலும் அங்கன் வாடிப்பணியாளர்களின் நிலை மிக மோசமாகவே இருக்கிறது.

ஐசிடிஎஸ் திட்டத்தை பலப்படுத்து வதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆனால் மதிய உணவுத் திட்டத்தை பொதுத் துறை - தனியார் கூட்டு பங்கேற்பு (பிபிபி -ஞஞஞ) மூலம் தனி யாருக்கு தாரை வார்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 1 சதவீதம் மட்டுமே பொது சுகாதாரத் திற்காக செலவிடுகிறது. உடல்நல பட் ஜெட்டிற்கான தொகை ரூ. 22,300 கோடி மட்டுமே. இதை விட 8 மடங்கு அதிக மாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் அரசு இழந்திருக்கிறது. 

படிப்பினை

பிபிபி மூலம் குறைபாடுகளை களைய எடுக்கும் முயற்சிகளும், அதற்காக அரசு, தனியாரைச் சார்ந்திருப்பதும் கவலை யளிக்கும் அம்சமாகும். நான் ஒரு விஷ யத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறேன். மீண்டும் வலியுறுத் துவதும் அதுதான். செல்வந்தர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்ட சலுகைகளை விலக்கி, உரிய வரிகளை கறாராக வசூலிக்க வேண்டும்; அதன் மூலம், நமது பொருளாதார சமூகக் கட்டமைப்பிற்காக அரசு பயன்படுத்து மானால், பெருமளவில் வேலைவாய்ப்பு பெருகும். அதைஅவ் வகையில் பெருக்கி னாலொழிய, இந்தியாவின் உள்ளார்ந்த சக்தியினை செய லாக்கிட முடியாது.

சீத்தாராம் யெச்சூரி எம்.பி.
தமிழில் : ஜெ. விஜயா 

நன்றி:‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ (16.1.2012)

Saturday, January 28, 2012

கோவில் சொத்துக்கணக்கு - உலகின் மிகப்பெரிய மோசடியா?



விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் ஏராளமான அளவில் நன்கொடைகளை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு அளித்துள்ளார் என்று பல செய்திகள் கூறுகின்றன. தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நன்கொடைகள் பற்றிய விபரங்களைத் திரட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். நன்கொடை வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியல் எதுவும் கோவில்களில் இல்லை. இது இல்லாத நிலையில், எவ்வளவு தங்க ஆபரணங்கள் இந்தக் கோவில்களுக்கு கிருஷ்ணதேவராயரால் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது மட்டுமல்ல, வேறு பல மன்னர்களால் தரப்பட்ட நன்கொடைகளுக்கும் இதுதான் நிலையாக இருக்கிறது.

இது போதாதென்று ஆந்திர மாநில தொல்பொருள்துறை புதிதாக ஒரு குற்றச்சாட்டுடன் வந்திருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதி தேவஸ்தானத்தின் வசம் இருப்பதாகச் சொல்லப்படும் மதிப்புமிக்க பொருட்களின் அளவுக்கும், கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று ஆதாரங்களில் சொல்லப்பட்டவற்றின் மதிப்புக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது என்பதுதான் அது. முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் கோவில் சொத்துக்களான தங்கம் மற்றும் ஆபரணங்களின் கதி பற்றி கோவில் சொத்துப் பாதுகாப்புக்குழுவினர் அபாயம் குறித்து எச்சரிக்கிறார்கள். கோவில்களின் சொத்துக்கள் காணாமல் போய்விடுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் ஒரு உயர்மட்டக்குழுவை நியமித்து அதன் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்தாகும். 

500 ஆண்டுகளுக்கு முன்பான பல கல்வெட்டுகளை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்தக் கல்வெட்டுகளில் தெலுங்கிலும், தமிழிலும் ஏராளமான விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் அஹோபிலத்தில் உள்ள நரசிம்மர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா கோவில், தரணிக்கோட்டையில் உள்ள அமரேஸ்வரர் கோவில் மற்றும் சிம் ஹாசலத்தில் உள்ள லட்சுமிவராஹநரசிம்மசுவாமி கோவில் ஆகியவற்றோடு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் கிருஷ்ணதேவராயர் நன்கொடையைப் பெற்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இது பற்றிக் கருத்து தெரிவிக்கும் அறநிலையத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர், நன்கொடைகள் பற்றிய விபரங்களை முழுமையாகத்தொகுக்காமல் அரசு அதிகாரிகள் விட்டுவிட்டது உண்மைதான். கோவில்களில் உள்ள ஆபரணச்சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா, இல்லையா என்பது பதில் கிடைக்காத கேள்விதான் என்கிறார்.

1970 ஆம் ஆண்டிலிருந்துதான் சொத்துக்கள் அடங்கிய பட்டியலை மாநில அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. நிச்சயமாக கிருஷ்ணதேவராயர் வழங்கிய நன்கொடைகள் அந்தப் பட்டியலில் இருக்கப்போவதில்லை. இத்தனைக்கும் ஆபரணங்களைச் சோதிக்கும் பிரிவு ஒன்று தனியாக அறநிலையத்துறையில் இயங்கி வருகிறது. மன்னர் காலக் கல்வெட்டுகள், பல்வேறு நன்கொடைகள் பற்றிக் குறிப்பிட்டாலும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் வந்த நன்கொடை பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் அறநிலையத்துறையினர். தனது தாயார் நாகாளம்பாவின் பெயரில் நிலங்களையும், ஆபரணங்களையும் கிருஷ்ணதேவராயர் அளித்துள்ளார். 91 முத்துக்கள் அடங்கிய நெக்லஸ் ஒன்றும் அவரால் வழங்கப்பட்டிருக்கிறது. 

ஆபரணங்கள் இருப்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டாலும் முறையான சரிபார்க்கும் பணி எதுவும் இதுவரை நடக்கவில்லை. முறையான சொத்துப்பட்டியல் தயாரிக்காதவரை, மன்னரால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆபரணங்களைஉறுதிப்படுத்த முடியாது என்கிறார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரான கிரண் கிராந்த். அவர் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் வல்லுநர்கள், விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் ஆயிரம் தங்கக்காசுகள், ஒரு முத்து நெக்லஸ், மரகதம் பதிக்கப்பட்ட வைரப் பதக்கம், அஹோபிலக் கோவிலுக்கு தங்கத்தட்டு என்று நீண்ட நன்கொடைப்பட்டியலை வாசிக்கிறார்கள். 

ஒருவேளை நன்கொடைகளின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடித்து, மாயமானதோடு ஒப்பிட்டால் உலகிலேயே பெரும் மோசடி வெளிப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் தொல்பொருள் வல்லுநர்களில் சிலர்.ஆண்டுக்கு ரூ.650 கோடி வருமானம்திருப்பதி வெங்கடாசலபதி கோவில்தான் உலகிலேயே பணக்காரக் கோவில் என்று கருதப்பட்டது. திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவிலின் சொத்துக்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கும்வரை இந்த அந்தஸ்து தொடர்ந்தது. தற்போது இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தக் கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் 650 கோடி ரூபாயாகும். நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தின் அளவு 3 ஆயிரம் கிலோ என்று கூறப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகையாகவும் வங்கிகளில் இந்த கோவிலுக்குச் சொந்தமான பணம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி ரூபாய், 350 கிலோ தங்கம் மற்றும் 500 கிலோ வெள்ளியை நன்கொடையாக இந்தக் கோவில் பெறுகிறது. இந்தக் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில்தான் மன்னர் காலத்தில் தரப்பட்ட நன்கொடைகள் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.

Wednesday, January 25, 2012

தலித் சிறுவன் பனியன் அணிந்ததால் 50 வீடுகள் எரிப்பு!


 நம் நாடு ஜனநாயகக் குடியரசு ஆனதன் 62வது ஆண்டு விழாவை நாளை (ஜன.26) கொண்டாடப் போகிறோம். ஆனால் இன்றும் தலித்துக்களைப் பார்த்து ரத்தம் சொட்டும் கோரப் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறது உயர்சாதி ஆதிக்கவெறி! தீண்டாமை கொடுமையும், சாதிய ஒடுக்குமுறையும் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் வெளிப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு கோரமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இப்போது சாதிவெறி தன் கோர முகத்தை காட்டியிருக்கும் மாநிலம் ஒடிசா. ஆதிக்க சக்திகளின் மனதுக்குள் உறைந்திருக்கும் சாதி வெறி தற்செயலான ஒரு சம்பவத்தை தலித்துகளுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பெரும் வன்முறையாக அரங்கேற்றிக் காட்டியிருக்கிறது அங்கே! 

போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த லாத்தூர் என்ற ஊரில் 22ம் தேதி பகல் 3 மணியளவில் இந்த வன்முறை கோரத் தாண்டவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. 9ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கணேஷ் சுனா. சம்பவத்தன்று புது சட்டை வாங்குவதற்காக உள்ளூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றிருக்கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந்திருப்பதை உயர்சாதியைச் சேர்ந்த அந்தக் கடைக்காரர் பாரத் மெஹர் கவனித்திருக்கிறார். தலித் மாணவன் பனியன் அணிந்திருப்பதா என்று சாதிவெறுப்பின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார். அதை நேரடியாகச் சொன்னால் தன் உண்மை முகம் வெளிப்பட்டு விடும் என்பதால், அந்த மாணவர் கடையில் திருட முயன்றார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவரது சகோதரர் தயா மெஹர் என்பவரும் சேர்ந்து கொண்டு கணேஷ் சுனா திருடன்தான் என்று சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளனர். கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.

கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மனஉளைச்சலுடன் வீட்டுக்குச் சென்ற சுனா, அங்கிருந்த தாத்தா கௌரங்க சுனாவிடம் தனக்கு ஏற்பட்ட கதியைக் கூறி அழுதிருக்கிறார். இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் கௌரங்க சுனா அந்த கடைக்குச் சென்று விசாரித்திருக்கிறார்.அவர் வந்து விசாரித்ததைக் கூட ஏற்க முடியாமல் உச்சக்கட்ட கோபத்துக்குச் சென்ற மெஹர் சகோதரர்கள் அவரையும் சாதியைச் சொல்லி திட்டியதுடன், செருப்பால் அடித்து உதைத்தனர். 

அவமானம் தாங்காத முதியவர் கூனிக்குறுகி வலியும் பொறுக்க முடியாமல் ஒருவாறு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார். சிறுவனுக்கு நேர்ந்த கதியைக் கேட்கப் போய் தனக்கு நேர்ந்த நிலையையும் அவர் விளக்கியவுடன், அங்கிருந்த இளைஞர்கள் 10 பேர் அந்த கடைக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர்.ஆனால் அவர்களிடம் பேசத் தயாராக இல்லாத உயர்சாதி ஆதிக்கவெறியர்கள், சுற்று வட்டாரத்தில் இருந்த உயர்சாதியினரை கூட்டம் சேர்த்துக் கொண்டு அந்த இளைஞர்களைத் தாக்கத் தொடங்கினர். நூறு பேருக்கு மேல் சேர்ந்து கொண்டு கத்தி, கம்பு உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கியதும், உயிர் தப்பினால் போதும் என அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர்.

தலித்துக்கள் நியாயம் கேட்பதா என்று வெறிபிடித்தவர்களாக சாதி ஆதிக்க சக்திகள் பெரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு தலித் மக்கள் குடியிருப்பை நோக்கிச் சென்றனர். எதிர்வரும் விபரீதத்தைப் புரிந்து கொண்ட தலித் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடினர். அங்கே வந்த சாதி வெறியர்கள் தலித் மக்கள் யாருமே இல்லாததைப் பார்த்து மிளகாய் தின்ற குரங்காக மாறி அந்த குடியிருப்பில் இருந்த பொருட்களைச் சூறையாடினர். அங்கிருந்தபொருட்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறை வெறியாட்டம் ஆடிய குண்டர்கள் கைகளில் ஏற்கனவே தயார்நிலையில் பெட்ரோல் கேன்களையும் கொண்டு சென்றனர்.
இதில் தலித் மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பொருட்கள் முழுமையாக நாசமாகின. ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. இனி மறுபடியும் புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நிலைக்கு அந்த தலித் மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். தலித் ஆண்கள் எல்லோரும் கண் காணாத இடத்துக்குச் சென்று தலைமறைவாகிவிட்டனர். பெண்களோ தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்காக அருகாமை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட முகாமில் சிலர் தங்கியுள்ளனர். 

இதற்கிடையே லாத்தூரை நோக்கி வரும் அனைத்துச் சாலைகளையும் முற்றுகையிட்டு உயர்சாதி வெறியர்கள் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டனர். எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடும்.ஆனால் இவ்வளவு நடந்தும் ஒடிசா மாநில அரசோ, காவல் துறை நிர்வாகமோ குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் ஒடிசா மட்டுமல்லாது பிற பகுதிகளில் இருக்கும் தலித் மக்களிடமும் காட்டுத்தீ போல் வேகமாகப் பரவி வருகிறது. இது போராட்டப் பெரு நெருப்பாக மாறி ஆதிக்க சக்திகளின் சாதி வெறியைப் பொசுக்கிச் சாம்பலாக்கப் போவது நிச்சயம்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட குறிப்பிட்ட உயர்சாதியினர் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் பெரும்பாலோர் இந்து மதத்தில் இருந்து அண்மையில் புத்த மதத்துக்கு மதம் மாறியவர்கள் ஆவர். உயர்சாதியினர் மதவெறி பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களாகவும், தலித் மக்கள் புத்த மதத்திற்கு மாறியதற்கும், தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கும் வன்முறை வெறியாட்டத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது என்று இச்சம்பவத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூரில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் உயர்சாதிக்காரர்தான். அவரது பெட்ரோல் பங்க்கில் இந்த குண்டர்களுக்கு வீடுகளை எரிப்பதற்குத் தேவையான பெட்ரோல் இலவசமாக, தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு வந்து வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீவைத்து எரித்துள்ளனர் வெறியர்கள்.

Tuesday, January 24, 2012

பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்? தொழிலாளர்களின் பார்வையில்



தொடர்ந்து மிகக் கடுமையான அளவிலேயே நீடித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதத்திலும், தீவிரமடைந்து வரும் வேலையின்மை பிரச்சனை மற்றும் பெருமளவில் நிகழ்ந்துவரும் வேலைப்பறிப்பை தடுத்துநிறுத்தும் விதத்திலும், உழைக்கும் மக்களுக்கான சமூகப்பாதுகாப் புக் கட்டமைப்பை உருவாக்கும் விதத்திலும், கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென அனைத்து மத்திய தொழிற்சங்கங் களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வலியுறுத்தி யுள்ளன. 

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் அடங்கிய மனு ஒன்றை சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயு டியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எல்பிஎப் மற்றும் சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங் கள் அளித்துள்ளன. 

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

இன்றைக்கு நிலவும் உலகப் பொருளாதாரச் சூழலில் நமது நாட்டின் பொருளாதார நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. நிதி அமைச்சகம் எங்களுக்கு அனுப்பிய இந்திய பொருளாதாரத்தின் நிலைமை குறித்த குறிப்பில் அது பிரதிபலிக்கவில்லை என்றே கருதுகிறோம். மிகக் கடுமையாக நீடித்துவரும் விவசாய நெருக்கடியால் அதிகரித்துள்ள துயரத்திற்கு இடையே, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயரும் அளவிற்கு நிலைமையை மோசமாக் கியுள்ள பணவீக்கத்தின் விகிதம் ஏற்றுக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது; மிகப்பெரும் அளவிற்கு வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன; வேலையின்மைக் கொடுமை நாளுக்குநாள் தீவிரமடைந்து வரு கிறது. இந்த அடிப்படையான பிரச்சனைகள் குறித்து நிதியமைச்சகத்தின் அறிக்கையில் மீண்டும் முழுமையான கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம்.

எதிர்வரும் பட்ஜெட்டானது வறுமை, வேலையின்மை, சமூகக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் மக்கள் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சில குறிப்பிட்ட ஆலோசனை களை முன்வைக்கிறோம். 

* மேலும் மேலும் தொடர் விளைவாக அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை தடுத்துநிறுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான முன்பேர ஊக வணிகத்தை தடைசெய்ய வேண்டும்; அனைவருக்கும் பொது விநியோக முறையை அமலாக்கி, அதை வலுப்படுத்த வேண்டும்; பணவீக்கத்தை தடுக்கும் நடவடிக்கை களில் ஒன்றாக பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள், தீர்வைகள் போன்றவற்றை முறைப்படுத்த வேண்டும். 

* வேலையின்மை பிரச்சனை மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், பெரு மளவில் வேலைகள் பறிக்கப்பட்டுவரும் நிலையில், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 43 வது அமர்வு பரிந்துரைத்ததின் படி வேலைக்கு ஆள் எடுப்பதற்கான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வழங்கப்படும் அனைத்துவிதமான ஊக்க நிதிகளும், அந்நிறுவனங்கள் தொழிலா ளர்களை வேலைப்பறித்து வீட்டிற்கு அனுப்பு வது, விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாய ஓய்வு கொடுப்பது, வேலைகளையே முடக்கி வைப்பது, கதவடைப்பு செய்வது, கூலியை சரமாரியாக வெட்டுவது போன்ற நடவடிக்கை களில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக ளுடனேயே அளிக்கப்பட வேண்டும்; மேலும் இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்க வேண்டும்.

* சத்துணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், கல்வி தொண்டர்கள், கவுரவ ஆசிரி யர்கள், கல்விப்பணியாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் ஈடு பட்டு வருகிற துறைகள் ஒழுங்குப்படுத்தப் பட வேண்டும்; சமூக சுகாதார நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் உட்பட அனைவரும் குறைந்தபட்சக் கூலி மற்றும் சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின் படி ஐசிடிஎஸ் திட் டத்தை அனைத்துக் குழந்தைகளுக்குமான தாக விரிவுபடுத்திட வேண்டும்.

* மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்தின் வாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் 43 வது அமர்வு ஏகமனதாக பரிந்துரைத்ததின் படி உத்தர வாதமான சட்டப் பூர்வமான கூலியுடன் கூடிய வேலை குறைந்த பட்சம் ஆண்டு ஒன் றுக்கு 200 நாட்கள் வழங் கப்படவேண்டும். 

* வறுமைக்கோடு என்பதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் குறிப்பாக முறைசாராத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் - 2008ன் கீழ் அமையப்பட்டுள்ள திட்டங்களில் பலனடைவதற்கான தகுதி யைப் பொறுத்தவரை, வறுமைக்கோடு என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும்; மேலும், இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் 43 வது அமர்வு மற்றும் தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை அளித்த பரிந்துரை யின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள காண்ட்ராக்ட் / தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 43.5 கோடி முறைசாராத் தொழி லாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங் கிட, தேசிய முறைசாராத் தொழிலா ளர் நிதி யத்திற்கு போதிய நிதியினை இந்தப் பட் ஜெட்டில் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

*பொதுச் சொத்துக்களை உருவாக்கிடவும், கவுரவமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், அரசின் முதலீடு அவசியம் அதி கரிக்கப்பட வேண்டும். இதற்காக பொதுத் துறை நிறுவனங்கள் அவசியம் வலுப்படுத்தப் பட வேண்டும்; விரிவுபடுத்தப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது உடனடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும்; இந்த நிறுவனங்களின் மிகப்பெரும் இருப்புத் தொகையும் உபரியுமாக சேர்த்து ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது; இந்தத் தொகை பலவீனமான மத்திய பொதுத் துறை நிறுவனங்களை மறுசீரமைக்கவும், இதர மத்திய பொதுத் துறை நிறுவனங்களை நவீன மயமாக்கவும், விரிவுபடுத்தப்பட வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங் கள் சராசரி யாக 0.75:1 என்ற அளவிலேயே பங்குக்கடன் கள் வைத்திருக்கின்றன; ஆனால் தனியார் நிறுவனங்கள் 2.3:1 என்ற அளவில் பொதுத் துறை நிறுவனங்களை விட மிகக் அதிகமான அளவிற்கு கடன் வைத் திருக்கின்றன. எனவே பொதுத்துறை நிறுவனங்கள் வங்கி களிடமிருந்து மேலும் கூடுதலாக கடன் பெறுவதற்கும், பங்குகளை விற்பதன் மூலம் நிதியாதாரத்திற்கு திரட்டு வதற்கு பதிலாக வங்கிக் கடன்கள் மூலமாக நிதியாதாரத்தை திரட்டுவதற்கு அனுமதிக்கப் பட வேண்டும். 

*சமீபத்திய உலகப் பொருளாதார நெருக் கடி காலத்திலும்கூட சோதனைகளை எதிர் கொண்டு உறுதியுடன் நின்ற வங்கிகள் மற் றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளடங்கிய நிதித்துறை மேலும் ஊக்கத்துடன் செய லாற்ற அனுமதிக்கப்பட வேண்டும், விரிவாக் கப்படவேண்டும், அவற்றின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அவற்றின் பொதுத்துறை குணாம் சத்தை பல வீனப்படுத்தும் விதத்திலும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்குலைவு நடவடிக்கை களை திணிப்பதற்குப் பதிலாக அவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் சீர்திருத்தத்திற்கான முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் வங்கிகளைத் துவக்க அனு மதிக்கப்படக்கூடாது. 

* பாரம்பரியத் தொழில்துறைகளான சணல், ஜவுளி, தோட்டக்கலை, கைத்தறி மற் றும் கயிறு போன்றவை எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சமாளித்து முன்னேற பட் ஜெட்டில் நிதி ஆதாரம் ஒதுக்கப்பட வேண்டும். 

* ஆரம்பக்கல்விக்கு பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும்; குறிப்பாக, குழந் தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதமாக வந்துள்ள கல்வி உரிமைச்சட்டத்தை முழுமையாக அமல் படுத்தவேண்டியதன் பின்னணியில் இந்த ஒதுக்கீடு அவசியம்.

* மூலப்பொருட்கள் மற்றும் தாதுவளங் களின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட வேண் டும்; இந்தத் துறைகளில் உள்நாட்டில் வேலைவாய்ப்பை தொடர்ச்சியாக உருவாக் கும் விதத்திலும், இப்பொருட்களின் மதிப் பினை மேம்படுத்தும் விதத்திலும் அரசு நேரடியாகவோ, அல்லது பொருத்தமான நிதி நிர்வாக முறையின் அடிப்படையிலோ ஏற்று மதியை கறாரான முறையில் கண்காணிக்க வேண்டும். இன்னும் குறிப்பாக, இரும்புத்தாது ஏற்றுமதி உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும். உள்நாட்டில் உள்ள இரும்பு எஃகு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இரும்புத்தாது ஒதுக்கீடு செய் யப்படவேண்டும்.

* இன்றைய நிலையில் நடைமுறையில் உள்ள நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கிடும் முறையானது தொழிலாளர் களுக்கு மிகப்பெருமளவில் நிதி இழப்பை ஏற் படுத்தும் விதத்திலேயே உள்ளது. இந்த நடை முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அகவிலைப்படி திருத்தம் செய்வது தற்போது 6 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதை 3 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும். 

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக் கும்போது, அது சமூகப் பாதுகாப்பின் ஒரு பகுதி என்ற முறையிலும், கடுமையான பணவீக்கம் நிலவிக்கொண்டிருக்கிறது என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கப்பட வேண்டும். 20 ஊழியர்கள் இருந்தால் வருங்கால வைப்புநிதித் திட்டத்திற்குள் (இபிஎப்) சம்பந்தப்பட்ட நிறுவனம் கொண்டுவரப்படும் என்ற வரம்பு, இபிஎப் டிரஸ்டிகளின் மத்திய வாரியம் பரிந்துரைத் ததின்படி 10 ஊழியர்கள் என்ற அளவில் நிர்ணயிக்கப்படவேண்டும். தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின்கீழ் கிடைக்கும் ஓய்வூதிய பலன்களை அரசாங்கம் தன் னிச்சையாக வெட்டிச்சுருக்கியது. இது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரப்படவேண்டும். தொழிலாளர் பென் ஷன் திட்டம் தொடர்ந்து நீடிக்க அரசு மற் றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்; தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததின்படி ஒவ்வொரு தொழிலா ளருக்கும் குறைந்தபட்ச நியாயமான ஓய் வூதியம் கிடைக்க வழிசெய்திட வேண்டும். மேலும், சிறப்பு டெபாசிட் திட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் சேமித்துள்ள தொகைக்கு 9.5 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதம் உயர்த்தித்தரப்படவேண்டும்.

* அனைவருக்கும் உத்தரவாதமான ஓய் வூதியம் கிடைக்கவேண்டும்.

* அனைத்து வேலைகளும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின்கீழ் அவசியம் கொண்டுவரப்படவேண்டும்; மாதம் ஒன் றுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.10 ஆயி ரத்திற்கு குறையாமல் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 

*ஊதியம் மற்றும் போனஸ், வருங்கால வைப்புநிதி ஆகியவற்றை பெறுவதற்கான அனைத்து உச்சவரம்புகளும் நீக்கப்பட வேண்டும்; பணிக்கொடையின் அளவு அதி கரிக்கப்படவேண்டும். 

* நிரந்தரத் தன்மைகொண்ட வேலை களை காண்ட்ராக்ட்மயமாக்கக்கூடாது; அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளியில் கொடுத்து வாங்குவதும் கூடாது. காண்ட் ராக்ட் எனும் நடைமுறை ஒழிக்கப்படும் வரை, அந்த முறையில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கான கூலியும் இதர பலன்களும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறு வனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு எந்த முறையில் வழங்கப்படுகிறதோ அதே முறையில், அதே விகிதத்தில் வழங்கப் படவேண்டும்.

* வருமானவரி விலக்கிற்கான உச்ச வரம்பு, ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தப் படவேண்டும்; மேலும், வீட்டு வசதி, மருத் துவ வசதி மற்றும் கல்வி வசதிகள் போன் றவை வருமானவரி வரம்பிலிருந்து விலக்கப் படவேண்டும். 

*சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் நுழைவதை தடைசெய்யவேண் டும். (ஐஎன்என்)

நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுவது?

* இறக்குமதி செய்யப்படும் மின் உற்பத்தி சாதனங்கள் மீதான தீர்வை அதிகரிக்க வேண்டும்.

* உள்நாட்டில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலிப் பொருட் களை ஏற்றுமதி செய்யும்போது அவற்றின்மீது இரட்டைவரி விதிக்கப்படவேண்டும். 

* அதிக அளவில் வரி செலுத்துவதற்கு திறன்படைத்த பெரும் பணக்காரப் பிரிவினர் மற்றும் பணக் காரர்கள் மீது வரிவிதிப்பை உறுதிசெய்யும் விதத்திலான ஒரு முற்போக்கான வரி விதிப்புமுறை கொண்டு வரப்படவேண்டும். பெரும் நிறுவன சேவைத் துறைகள், பெரும் வணிகர்கள், மொத்த வியாபாரங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்றவை பரந்துவிரிந்த மற்றும் கூடுத லான வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படவேண்டும். ஆடம்பரப் பொருட்கள் மீது வரியை அதிகரிக்க வேண்டும். இதற்கு மாறாக, அத்தியாவசியப் பொருட்கள் மீதான மறைமுக வரிகளை பெரு மளவிற்கு குறைக்கவேண்டும். இந்த நிலையில், வரி வருவாயில் 86 சதவீதத்தைப் பூர்த்திசெய்கிற மறைமுக வரிவிதிப்பின்கீழ் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

* தற்போது நடந்துகொண்டிருக்கும் இரும்புத்தாது ஏற்றுமதி மீது ஏற்றுமதித் தீர்வையை அதி கரிக்கவேண்டும்.

* பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரையில் செலுத்தியிருக்கவேண்டிய வரி ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு பாக்கி இருக்கிறது. இந்த வரிப்பாக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, மேலும்மேலும் குவிந்துகொண்டிருக்கும் வரிப்பாக்கியை வசூ லிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இப்படி மிகப்பெரிய அளவிற்கு நடந்துள்ள வரி ஏய்ப்பு மற்றும் பெரும் நிறுவனங்கள் வரி செலுத்துவதில் காட்டப்பட்ட தாராளத்தின் விளைவாக 2009 - 2010ம் நிதியாண்டில் மற்றும் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர அனுமதிக்கக்கூடாது. 

*இந்திய பொருளாதாரத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, வரி விதிக்கப்படாத சொர்க்கங்களாகத் திகழும் சில மேலை நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கணக்கில் வராத மிகப்பெருமளவிலான பணம் மீட்கப் படவேண்டும். இந்தப் பணம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப் படவேண்டும்.

* வங்கிகளில் பெருமளவில் கடன் வாங்கிவிட்டு, திட்டமிட்டே தாங்கள் திவாலாகிவிட்டதாக பொய்க் கணக்குக் காட்டும் பெரும் கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்க வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் புதிதாக கடன் பெற அனுமதிக்கப்படக்கூடாது.

* நீண்டகால அடிப்படையில் பெறப்படும் மூலதன லாபங்கள் மீதான வரி அறிமுகம் செய்யப்பட வேண்டும்; பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் மீது அதிகபட்ச வரி விதிக்கப்படவேண்டும்.

* தகவல் தொழில்நுட்பத்துறை, அவுட்சோர்சிங் துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் போன்றவை வியாபார நோக்கத்தில் இயங்கும் பட்சத்தில் அவை சேவை வரி வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

Monday, January 23, 2012

நம் மக்களுக்கான கோட்பாடுகள்:நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

அறிவியல் எதற்காக என்ற கேள்வியுடன் ஆரம்பிக்க விரும்புகின்றேன். என்னைப் பொறுத்த வரையில் அறிவியல், மக்கள் மகிழ்ச்சியுடனும், வளங்களுடனும் வாழ்ந்திடுவதற்காக பயன்பட வேண்டும். அறிவியல், இயற்கையைப் புரிந்து கொள்ளவும், அதன் பலன்களைப் பெற்று பயனடையவும் உதவுகிறது.

அறிவியல் ஆபத்தானது, அணு குண்டையும் மற்ற அழிவுக் கருவிகளையும் தயாரிக்க வல்லது என்று சொல்லி சிலர் இதனை மறுத்திடலாம். அறிவியல் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக அதன் பயன்பாட்டை நிராகரிக்க முடியாது. அறிவியல் இல்லாவிடில் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகவும், கடினமானதாகவும் இருந்திடும். அறிவியல் தொழில் நுட்பம் மக்களுக்கு உதவிடுவதுபோல் அடிப்படை அறிவியல் உதவிடுவது இல்லை என்று சிலர் கருதலாம். அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்களின் ஆராய்ச்சியின் பயன் மக்களைச் சென்றடையுமா என்று எண்ணிப் பார்ப்பதில்லை. நியூட்டனும், ஐன்ஸ்டீனும் தங்களின் ஆராய்ச்சி மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படப்போகிறது என்பது பற்றி சிந்திக்கவேயில்லை. இருப்பினும் அவர்களின் ஆராய்ச்சி இன்று மக்க ளுக்கு பெரிதும் பயன்படுகின்றன.

இன்று நம் நாடு சந்திக்கும் பிரச்சனை களை அறிவியல் மூலமே தீர்க்க முடியும். இந்தியாவின் 80 சதவீத மக்கள் வறுமையில் உழலுகிறார்கள். வேலையின்மை, விலைவாசி ஏற்றம், போதிய சுகாதார, மருத்துவம், கல்வி மற்றும் வீடு வசதி யின்மை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 48 விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கிறார்கள். 47 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லா மல் அவதிப்படுகிறார்கள். இக்குறை களையெல்லாம் நீக்கி, நாட்டில் அனை வரையும் வளமுடன் வாழவைப்பதே நம் நாட்டின் லட்சியமாக இருக்க வேண்டும். 

சன் யாட் சன் என்ற சீனா நாட்டுத் தலைவர், சீனாவின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மூன்று மக்கள் கோட்பாடுகளை முன்வைத்ததுபோல், நான் நம்நாட் டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண நான்கு மக்கள் கோட்பாடு களை முன் வைக்க விரும்புகிறேன். அறிவியல், ஜனநாயகம், வாழ்வாதாரம், மக்கள் ஒற்றுமை ஆகிய இந்த நான்கு கோட்பாடுகளே நமது வழிகாட்டும் நெறி முறைகளாக இருக்க வேண்டும்.

அறிவியல்

பண்டைக் காலத்தில் இந்தியா அறிவியல் பாதையில் பயணித்து வளர்ச்சி பெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கமும், ரோமானியமும் தவிர பிற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் அநாக ரிகமாக இருந்தபோது, தன்னுடைய அறி வியல் ஞானத்தின் உதவியுடன் இந்தியா நாகரிக வளர்ச்சி பெற்ற நாடாகத் திகழ்ந் தது. மிகப் பெரிய அறிவியல் கண்டு பிடிப்புகள் இங்கு தோன்றின. ஆனால், சிறிது காலத்திற்குப் பின்னால், அறிவி யல் பாதையைக் கைவிட்டு, மூட நம்பிக் கைகளுக்கும், சடங்குகளுக்கும் இட மளித்தோம். ஆரியபட்டா, பிரம்மகுப்தா, சுசுருதா, சாரக்கா போன்ற நம் மூதாதையர் தேர்ந்தெடுத்த அறிவியல் பாதையில் மீண்டும் நாம் பயணிக்க வேண்டும். பண்டைக் கால இந்தியாவின் அரிய சாதனைகளாக மூன்று முக்கிய அறிவியல் கண்டு பிடிப்புகளைச் சுட்டிக் காட்டலாம்.

1. தசாம்ச முறையைக் கண்டுபிடித்தது இந்தியாவின் மிகப்பெரிய சாதனை யாகும். ஐரோப்பியர்கள், தசாம்ச முறையிலான எண்களை அரேபிய எண்கள் என்று தவறாக அழைத்தனர். ஆனால், அரேபியர்கள் இதை இந்தியர்களிட மிருந்து பெற்றதால், இந்திய எண்கள் என்று அழைத்தனர். இதுவே தசாம்சமுறை இந்தியர்களின் கண்டுபிடிப்பு என் பதற்கான சான்றாகும். தசாம்ச முறையின் மூலமே ஒரு எண்ணுக்குப் பின் னால் பூஜ்யங்களைச் சேர்த்து மிகப் பெரிய எண்களையும் குறிப்பிடமுடியும். எடுத்துக்காட்டாக ஒரு கோடி என்ப தனை 1க்கு பின்னால் 7 பூஜ்யங்களைச் சேர்த்துக் குறிப்பிடலாம். (10,000000). அதே போல் பத்து கோடியைக் குறிப்பிட 1க்குப் பின்னால் 8 பூஜ்யங்களைச் சேர்த் துக் குறிப்பிடலாம். ரோமானியர்கள் பூஜ் யத்தைக் கண்டுபிடிக்காததால் பெரிய எண்களைக் குறிப்பிட மிகவும் சிரமப் பட்டார்கள். பூஜ்யம் இந்தியா, உலகிற்கு அளித்த பரிசாகும்.

2. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்து வெளி நாகரிகத்தில் மிக உன் னதமான முறையில் நகரங்களை இந்தி யர்கள் அமைத்திருந்தார்கள்.

3. ஐரோப்பியர்கள் இரு நூறு ஆண்டு களுக்கு முன்னால் கண்டுபிடித்த சீர மைப்பு அறுவைச் சிகிச்சையை இந்தியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித் திருந்தனர். 

பண்டைக் கால இந்திய விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் பற்றி  வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இன்றைய இந்தியா அறிவியல் வளர்ச்சியில் மிகவும் குன்றியுள்ளது. நம் நாட்டில் உள்ள சமூகக் கொடுமைகளுக்கும், கொடிய வறுமைக்கும் இதுவே காரணம். இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களைக் கற்பித்தால் மட்டும் போதாது. மக்களிடையே அறிவியல் பார்வையை உண்டாக்கிட வேண்டும். பொது மக்களிடையே நிலவும் பிற்போக்குத்தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் அகற்றிட பகுத்தறிவுப் பார்வையை வளர்த்திட வேண்டும். மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள சாதிய, வகுப்புவாத சிந்தனைகள் மாறிட வேண்டும். அறிவியல் வளர்ச்சி என்றால் வெறும் இயற் கை அறிவியல் மட்டுமல்லாது, சமூக அறிவியலும் சேர்ந்ததே. உலகெங்கிலும் இன்று ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியி லிருந்து மீளுவதற்கு பொருளாதாரக் கோட்பாடுகளையே நாம் தெரிந்திருக்க வேண்டும். இயற்கை அறிவியலோ, பொறியியலோ இந்நெருக்கடியிலிருந்து மீண்டுவரக் கைகொடுக்காது.

ஜனநாயகம்

இன்றைக்குத் தேவையான இரண்டாவது கோட்பாடு ஜனநாயகம் ஆகும். பண்டைக் காலத்தில் இந்தியாவில் ஜனநாயகம் எந்த அளவிற்கு வளர்ந்திருந்தது என்பதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் மகதநாட்டு அரசனாக இருந்த அஜட்டாசத்ரு, அருகாமையிலிருந்த வஜ்ஜி யின் குடியரசு மீது படை எடுக்க எண்ணினான். போரைத் தொடங்குவதற்கு முன் புத்தரிடம் ஆலோசனை பெற தன்னுடைய தூதுவனை அனுப்பினான். தூதுவனிடம் நேரடியாக பதில் அளிக்காமல், புத்தர் தன்னுடைய சீடன் ஆனந்தனிடம் வஜ்ஜியின் நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு தழைத்து வருகிறது என்பது பற்றி பேசினார். “உனக்கு தெரியுமா ஆனந்த், வஜ்ஜியின் நாட்டு மன்னன் அடிக்கடி மக்கள் சபையைக் கூட்டி பிரச்சனைகள் குறித்து குடி மக்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறான். இத்தகு ஜனநாயகம் நீடித்து இருக்கும் வரையில் வஜ்ஜியின் நாட்டை யாரும் வென்றிட முடியாது” என்று புத்தர் தன் சீடரிடம் கூறியுள்ளார். 

இதே போன்று வரலாற்றில் இன் னொரு சான்றும் உள்ளது, கி,பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “அவதன் சடக்” என்ற சமஸ்கிருத நூலில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து வரும் வணிகர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மன்னனைச் சந்திக்கிறார்கள். வட இந்தியாவில் எத்தகு அரசாட்சி நடைபெறுகிறது என்று கேட்கும் மன்னனிடம் “ஒரு சில பகுதிகளில் மன்னராட்சியும் ஒரு சில பகுதிகளில் மக்களாட்சியும் நடக்கிறது”, என்று பதிலளிக்கிறார்கள் வணிகர்கள். இவ்வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து இந்தியாவிற்கு ஜனநாயகம் புதியதல்ல என்பதை அறியலாம். பண்டைக்கால இந்தியாவில் மன்னர்கள் மக்களிடையே மனம் திறந்த விவாதங்களை நடத்தியுள்ளனர். இதனால்தான் அன்றைய இந்தியாவில் மருத்துவமும், கணிதமும், வானவியலும், தத்துவமும் வளர்ச்சி பெற்றன. 

இன்றைய இந்தியாவிற்கு ஜனநாயகம் உகந்ததல்ல என்று சிலர் சொல்லுகிறார் கள். இது ஏற்றுக் கொள்ள முடியாத வாத மாகும். இந்தியாவில் போதிய அளவு ஜன நாயகம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். அறியாமையிலிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் கல்வி மற்றும் கலாச் சாரத்தை உயர்த்திட வேண்டும். நாட்டின் மறுகட்டமைப்பு பணியில் அவர்களை ஈடுபடுத்திட வேண்டும். அறிவியலும், ஜனநாயகமும் ஒன்றோடொன்று இணைந்து செல்வன. அறிவியல் வளர்ச்சி ஏற்படு வதற்கு ஏதுவான சூழலை நாம் உரு வாக்கிட வேண்டும். சுயமாக சிந்திக்க வும், வாதிடவும் பழகிட வேண்டும். சகிப் புத்தன்மையும், பிறருடைய வாதத்தை ஏற்கவும், மறுக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயகத் திற்கு இவைகள் எல்லாம் தவிர்க்க முடியாத தேவைகள்.

வாழ்வாதாரங்கள்

மக்களுக்கான வாழ்வாதாரங்கள் மூன்றாவது முக்கிய கோட்பாடாகும். 80 சதவீத இந்தியர்கள் வறுமையில் வாடு கின்றனர். வேலையின்மை, போதிய கல்வி, மருத்துவ மற்றும் வீடு வசதி யின்மை போன்ற பிரச்சனைகளை மக் கள் அன்றாடம் சந்திக்கிறார்கள். சமீப காலமாக பணக்காரர்களுக்கும், ஏழை களுக்குமான இடைவெளி அதிகரித்துள் ளது. ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி யும் மிகச் சிலரையே சென்றடைந்துள்ளது. 

பிரான்சு நாட்டு சிந்தனையாளர் ரூசோ, “சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடும்போது ஒரு சிறு பகுதியினர் அனைத்து வசதிகளையும் பறித்துக்கொள்வதென்பது இயற்கை நியதிக்கு புறம்பானதாகும்” என்று கூறியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். நாம் வாழ்கின்ற சமுதாயம் முதலாளித்துவ சமுதாயமா, சோசலிச சமுதாயமா என்பதல்ல பிர்ச்சனை. மக்களின் வாழ்க்கைத் தரம் உயருகிறதா, இல்லையா என்பதே முக்கியம். கடந்த பதி னைந்தாண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என்பதும், நாட்டின் பெரும் பகுதி மக்கள் கொடிய வறுமையில் உழல்கிறார்கள் என்பதும் சகிக்க முடியாத கசப்பான உண்மைகளாகும். 

பதினெட்டாம் நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பாவில் தொழிற்புரட்சி தோன்று வதற்கு முன்னர் நிலப்பிரபுத்துவம் வியாபித்திருந்தது. நிலப்பிரபுத்துவ காலத்தில் உற்பத்தி முறை மிகவும் பின்தங்கியிருந்த தால், செல்வமும்,வசதியும் பெரும் பகுதி மக்களுக்குக் கிடைக்காமல், மிகச் சிலர் கைகளிலேயே செல்வம் குவிந்திருந்தது. ஆனால், நவீன தொழிற்சாலைகள் சக்தி வாய்ந்ததாகவும், அசுர வேகத்தில் பொருட் களைத் தயாரிக்கும் திறன் கொண்டவை களாகவும் இருப்பதால், அனைத்து மக்க ளுக்கும் தேவையான செல்வத்தையும், வசதிகளையும் உருவாக்கலாம். எல்லா நாட்டு அரசுகளும் இதனை உறுதிப் படுத்திட வேண்டும்.

மக்கள் ஒற்றுமை

இந்தியாவில் பல்வேறு இன மக்கள், பல்வேறு மொழிகள் பேசி, பல வகையான மதங்களைப் பின்பற்றி பன்முகக் கலாச்சாரத்துடன் வாழ்கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவிற்குள் குடிபெயர்ந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன் மை குறித்து அறிந்திட, காளிதாஸ் காலீப் எழுதியுள்ள “பரஸ்பர புரிதலுக்கான கல்வி நிலையம்” என்ற கட்டுரையும், வலை தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் “எது இந்தியா” என்ற காட்சிப் படமும் உதவிடும். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திட அனைத்துச் சமூக மக்களையும் நேசமுடன் ஏற்றுக் கொள்ளும் மதச்சார்பின்மையே சிறந்த வழியாகும். நவீன இந்தியாவை உருவாக்கிய பேரரசர் அக்பர் கடைப்பிடித்த கொள்கையாகும் இது. இக்கொள்கையினையே நேருவும் அவருடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் தொடர்ந்து பின்பற்றினர். 

1947ல் நாடெங்கிலும் மதவெறி கொளுந்துவிட்டு எறிந்தது. பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தியது. நேருவுக்கும், அவருடன் இருந்து பணியாற்றியவர்களுக்கும் இந்தியாவை ஒரு இந்து தேசமாக அறிவிக்கும்படி நெருக்கடி இருந்திருக்கும். ஆனால், மதவெறி தலை விரித்தாடிய இத்தருணத்தில் நமது தலைவர்கள் நிதானத்துடன் செயல்பட்டு, இந்தியாவை இந்து தேசம் என்று அறிவிக்காமல், மதச் சார்பற்ற நாடு என்றே பிரகடனப்படுத்தினார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்தியா, பாகிஸ்தானைவிட வலுவான நாடாக இன்றும் திகழ்கிறது.

இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து, நாட்டு மக்களிடையே இன, மத, மொழி, சாதிய மோதல்களை உருவாக்கிட முயலுகின்றன சில தீயசக்திகள். நாட்டுப்பற்றுள்ள அனைவரும் இப்பிரிவினைச் சக்திகளின் சுய ரூபத்தினை தோலுரித்திக் காட்டி, நாட்டின் ஒற்றுமையைக் காத்திட வேண்டும். இல்லையேல் நாம் வளர்ச்சி பெற முடியாது.


தில்லியில் சிஎஸ்ஐஆர் ஏற்பாடு செய்திருந்த  ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் ஆற்றிய உரை
‘இந்து’ கட்டுரை (11-1-2012)
தமிழில் : பேரா.பெ.விஜயகுமார்

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)