Showing posts with label புத்தகம் பேசுது நவம்பர் 2011. Show all posts
Showing posts with label புத்தகம் பேசுது நவம்பர் 2011. Show all posts

Saturday, November 19, 2011

அதற்காக வருத்தமில்லை திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்!


அன்பார்ந்த திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்...

கடந்த மாதம் உங்கள் ஆப்பிள் நிறுவனத் தலைமை பதவியை நீங்கள் ராஜினாமா செய்தபோதே உங்களை குறித்த - ஜெப்ரியஸ் மற்றும் வில்லியம் சைமன் இணைந்து எழுதிய ஐ.கான் - ஸ்டீவ் ஜாப்ஸ் நூலை வாசித்திருந்தேன். மன்னியுங்கள் திரு ஸ்டீவ்ஜாப்ஸ்! அது உங்கள் அனுமதி பெறாத வாழ்க்கைச் சரிதை என்பது தெரியும். அதை வெளியிட்டதற்காக ஜான் வில்லி அண்ட்சன்ஸ் புத்தகப் பதிப்பாளர்களின் ஏனைய நூல்களையும் உலகெங்கும் உங்கள் ஆப்பிள் வர்த்தகக் கடைகளிலிருந்து எடுத்து ‘விற்பனைத் தடை’ விதித்து நீங்கள் ஆத்திரத்தோடு வீசி எறிந்தீர்கள்... கிட்டத்தட்ட அந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த நூலை நான் வாசித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் உங்கள் முழு ஆசீர்வாதத்தோடு டைம்ஸ் இதழ் பிரதிநிதி சி.என்.என்.. மூத்த பத்திரிகையாளர் வால்டர் ஐசக்சன் (water isaacson) எழுதி நீங்கள் இறந்தபின் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த ஸ்டீவ்ஜாப்ஸ் தி எக்ஸ்குளூசிவ் பயோக்கிரஃபி நூலைவிட ஐ.கான் புத்தகம் உங்களை குறித்து பல நேர்மையான சிறப்புச் செய்திகளை கொண்டுள்ளது என்பதை (காலதாமதமாக வேணும்) உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். குறிப்பாக பிராஸ்கரட் சர்வதேச புத்தக கண்காட்சியில் ஐ-கான் புத்தகம், எக்ஸ்குளூசிவ் பயோகிரஃபியை விட கூடுதல் கவனம்பெற்று உலக அளவில் அதிக வாசகர்களால் விரும்பப்படும் நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மரணத்திற்கு பிறகு என்பதால் உங்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம்.

உங்களையும் உங்களது கணினி வர்த்தக உலகையும் புரிந்துகொள்ள யாராவது விரும்பினால் அவர்களுக்கு (உங்களால் அங்கீகரிக்கப்படாத) தாமஸ் எல்.பைர்ட் மானின் தி வேல்டு இஸ் பிளாட் (the world is flat), லியாண்டர் கானே எழுதிய இன்சைட் ஸ்டீவ்ஸ் பிரெயின் (Inside steves Brain), கார்மி காலோ எழுதிய தி பிரசன்டேஷன் சீக்ரட்ஸ் ஆஃப் ஸ்டீவ் ஜாப்ஸ் The presentation Secrets of Steve Jobs) என சில புத்தகங்களை முன்மொழியும் அளவிற்கு வாசித்து வைத்திருந்தேன்.

குறிப்பாக தி வேல்டு இஸ் ஃபிளாட் புத்தகம்! உங்களோடு சேர்ந்து ஸ்டீவ் வாஸ்னெக், மைக் மார்க்குலா ஆகியோர் கணினியை வர்த்தகப் பொருளாக்கி எப்படியெல்லாம் உலகம் ஒரு கிராமமாக (குளோபல் வில்லேஜ்) சுருங்கிட புதியபுதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வந்தார்கள் என்பதை விவரிக்கிறது. உங்களைப் போலவே, கணினி உலகின் நூலாசிரியர்களும் நம்புவது ‘மார்க்சியம் காலாவதியாகி விட்டது’ அதே வித செய்திகள் இந்த புத்தகத்திலும் இட்டுக்கட்டப் பட்டிருப்பினும், உங்களது பங்களிப்பு குறித்த நேர்மையான பதிவு இதில் உள்ளது. நேனோ தொழில் நுட்பம் சார்ந்து ரிச்சர்ட் ஃபைன்மெனும் சர்க்யூட் போர்டு சார்ந்து சோடியும் நிகழ்த்திய முக்கிய திருப்புமுனைகள் சார்ந்ததே உங்களது வர்த்தகம் என்பதை நிறுவியுள்ளது. எனவே இந்த புத்தகம் உங்களுக்குப் பிடிக்காலும் போகலாம். குறிப்பாக உலகெங்கும் ஆப்டிகல் ஃபைபர் மின் இழைகளின் தொடர்பு கடல்கடந்தும் நாடுகளை வளைத்திருக்காவிட்டால்... ஆப்பிளும்... கூகுலும்... மைக்ரோ சாஃப்டும் உங்கள் சன்னல்களைத் திறந்திருக்க முடியாது என்பதைப் பதிவதோடு வால்-மார்ட் வணிகத்திற்கான ஆப்பிளின் பிரத்யேகப் பங்களிப்பையும் தனி அத்தியாயமாய் இந்த நூல் விவரிப்பதை தங்கள் கவனத்திற்கு (உங்களுக்கு நேரமிருந்திருக்காது) கொண்டுவர விரும்புகிறேன்.

ஐ-கான் நூலில், ஜெராக்ஸ் (நகல்) மிஷினை உங்கள் மவுஸ் மற்றும் அச்சீட்டோடு (பிரிண்டர்) இணைத்து நீங்கள் ஆப்பிள் லிஸாவையும், ஒராண்டிற்கு பிறகு மாசின்டோஷ் (உலகின் முதல் ஸ்கானர்) இயந்திரத்தையும் அடைந்ததைப் பதிவு செய்துள்ள நூலாசிரியர்கள். உங்களை இருபதாம் நூற்றாண்டு எடிசனாகவும், 21ம் நூற்றாண்டு ஃபோர்டாகவும் வர்ணிக்கிறார்கள். நீங்கள் கண்டடைந்த அதே ஆப்பிள் நிறுவனத்திலிருந்து நீங்களே 1985ல் ஜான் ஸ்கூலி (உங்களால் நியமிக்கப்பட்ட அதிகாரி) யால் வெளியேற்றப்பட்டதையும் அதே ஆண்டில் Next நிறுவனத்தை ஏற்படுத்தி முதன்முதலில் அவுட் சோர்சிங் (அயல் வேலைவாய்ப்பு) என்பதை உலகில் ஏற்படுத்தியதையும் கூட உங்கள் ஆதரவுப் பார்வை யாலேயே பதிவு செய்கிறார்கள்.

சிரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த அப்துல்ஃபாட்டா ஜான்டாலி தனது கல்லூரியில் காதல் கொண்ட ஜோன் ஷீபில் கெட்ட கனவாக உங்களை (திருமணத்திற்கு முன்) பெற்றெடுக்க.. உலகக் குழந்தை மார்க்கெட்டில் பால் ஜாப்ஸிற்கு (தத்தாக) விற்கப்பட்டதால் உங்கள் பிறப்பே ஒரு வர்த்தகமாய் ஆனதை ஐ-கான் பதிவு செய்ததால் அந்த புத்தகம் உங்களுக்குப் பிடிக்க வில்லையா... ஆனால் உங்கள் வாழ்வின் வெற்றித்தருணங்களை ஐ-கான் புத்தகம் பதிவு செய்யத் தவறவில்லையே திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்... குறிப்பாக அந்த 1970களின் வலிமிகுந்த உங்கள் வாழ்க்கை.. கல்லூரியில் முதலாண்டு படித்ததுமே வறுமை, வெறுமை உங்களை விரட்டி கல்லூரியில் முதலாண்டு ‘டிராப்-அவுட்’ ஆக்கியதிலிருந்து நண்பர் வாஸ்னிக்கோடு பலவகையான வேலைகள் செய்து, நண்பர்கள் அறைகளின் கட்டாந் தரையில் படுத்துறங்கிய நாட்களை.. அப்புறம் இந்தியாவிற்கு போதி மரத்தடியைத் தேடிவந்து மொட்டைபோட்டு புத்த மதத்தைத் தழுவியது. ஏன் பல மைல்கள் நடந்தே போர்ட்லாந்து ஹரே கிருஷ்ணா கோவிலுக்குச் சென்று வாரம் ஒரு முறை முழு அன்னதான சாப்பாடு சாப்பிட்டு வந்த - கடினமான மதிய ஞாயிறுகள்... ஆனால் வளர்ப்புத் தந்தை பால் ஜாப்ஸ் குறித்தும், உங்களது நாலாம் வகுப்பின் (வீட்டுப்பாடம் முடித்து வந்தால் காசு முதற்கொண்டு தந்த) ஒரே நல்ல ஆசிரியை குறித்தும் கூட ஜெப்ரி-யங்கும் வில்லியம் சைமனும் தங்களது ஐ-கான் புத்தகத்தில் விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

திரு. ஸ்டீவ் ஜாப்ஸ், ஐ-பாட், ஐ-பேட் (I-Pad) மற்றும் ஐஃபோன் இவற்றை ஆப்பிளுக்கு 1997ல் திரும்பிய பிறகு நீங்கள் அறிமுகம் செய்ததை அழகாகவும் மிகவும் சுவையாகவும் எடுத்துரைத்தாலும் ‘தி வேர்ல்டு இஸ் பிளாட்’ புத்தகத்தை நீங்கள் நிராகரிப்பதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. அது உங்களது Next நிறுவனத்தின் தோல்வியையும், மைக்ரோ சாஃப்ட் போலவே நீங்களும் குட்டிக்குட்டி முதலீட்டாளர் பங்குகளை (வால்ட் டிஸ்னி உட்பட) எப்படி விலை கொடுத்து மொத்தமாக வாங்கி முதுகில் குத்தினீர்கள் என்பதையும் சேர்த்தே அந்தப் புத்தகம் உலகிற்கு வெளிச்சம் போட்டு விடுகிறது.

அவுட் சோர்ஸிங் என்று பெயரிட்டு அமெரிக்காவிற்கு வெளியே மூன்றாம் உலக நாடுகளின் மத்தியதர வரக்கத்து இல்லத்தரசிகள் (?) வரை உழைப்பை சுரண்டும் உங்கள் கணினி உலகின் உன்னத திட்டம்தான் கார்ல்மார்க்ஸ் பற்றி உங்களைத் திருவாய்மலரச் செய்திருக்க வேண்டும் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ். நீங்கள் மட்டுமல்ல தி வேர்ல்டு இஸ் ஃபிளாட் (the world is flat) நூலாசிரியர் தாமஸ் எல். பிரைட்மான் உட்பட ஏன் எல்லாரும் சொல்லி வைத்தாற்போல மார்க்ஸியத்தை காழ்ப்புணர்சியோடு கண்டிப்பதை உங்கள் (ஜீன்ஸ், கருப்பு (காலர் இல்லாத) முழுக்கை-டி-சர்ட் போலவே) பேஷன் ஆக்குகிறீர்கள்?

• மார்க்ஸியம் - நாட்டில் எல்லாரையும் சமஅளவு ஏழைகளாக்கும் தத்துவம்
• கார்ல் மார்க்ஸை விட சமூகத்திற்கு எடிசன் அதிக பங்களிப்பு நிகழ்த்தி இருக்கிறார் (எனவே நான் எடிசன் ஆகவே விரும்பினேன்)

உங்களுடைய ஐ-பாட், ஐ-ஃபோன் போல மேற் கண்ட வாசகங்களும் உங்கள் அரிய கண்டுபிடிப்பு திரு.ஸ்டீவ் ஜாப்ஸ். திவேர்டு இஸ் ஃபிளாட் நூலில் அவுட் சோர்ஸ் குறித்தும், இந்தியாவைத் தவிர்த்து சீனாவில் ‘ஆப்பிள்’ நிறுவன உதிரியாகத் தொழில் கேந்திரங்கள் அமைத்தது குறித்துமான உங்கள் கருத்துக்கள் இரண்டு பதிவாகி உள்ளன. மார்க்ஸியத்தைப் பற்றி விவரிக்கவும் வாதிடவும் இது தருணமல்ல என்றாலும், அந்த இரண்டு கருத்துக்களின் பின்னணி போதும், உங்கள் ‘மார்க்ஸிய’ கிலிக்கான காரணத்தை அறிய...

• அவுட்சோர்ஸிங் பற்றி 1994 ஆப்பிள் நிறுவன பங்குதாரர் கூட்டத்தில் கூறுகிறீர்கள் :

“நாம் அச்சப்படத் தேவையில்லை. அவுட்சோர்ஸிங் மூலம் பல நாடுகளில் பகலும் இரவும் நமது வேலை நடக்கிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் அறிவது கூட இல்லை... நமக்கு தொழிற்சங்க பிரச்சனையே கிடையாது.”

• சீனத்தில் (இந்தியாவிலன்றி) ஏன் தொழிற்கேந்திரம் அமைத்துள்ளோம் என்பதற்கு டைம்ஸ் இதழுக்கு ‘ஐ-டியூன்ஸ்’ அறிமுகம் செய்து 2005ல் பேட்டியளிக்கிறீர்கள்.

“தொழிற்சங்க அரசாங்கமே (The Govt of trade Union) சீனாவில் இருப்பதால் அது எங்களுக்குத் தொழிலாளர் ஊதிய-வேலை நேரப் பிரச்சனை வராமல் தடுத்துவிடும்...”

‘ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டும் பூதம்’ உங்களையும் விட்டு வைக்கவில்லை அல்லவா! உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்கள் தினமும் வேலைக்குள் நுழைய அவர்களது இ-மெயில் திறந்து ‘அந்த’ பிங்க் நிற வேலை கல்தா தபால் இருக்கிறதா இல்லையா என பார்த்த பிறகே வேலையைத் தொடர முடியும் என்பது இன்றைக்கும் உண்மை தானே. அதனையும் சேர்த்தே ஐ-கான் புத்தகம் வெளிச்சமிட்டதால் அதன் மீது ஆத்திரம் கொண்டீர்களா திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்?

ஆனால் உங்கள் மரணம் மிகவும் துரதிர்ஷ்டமானது. உலகின் மூன்றாவது செல்வந்தராக உயர்ந்த நீங்கள் கூட கணையப் புற்றுநோய் கடுமையாய்த் தாக்கிய ஆண்டுகளில் உங்களோடு இருக்க, அதே பெற்றோர்க்கு பிறந்த பின்நாட்களில் நீங்கள் கண்டுபிடித்த உங்கள் சகோதரி மோன சிம்ப்சன் அனுமதிக்கப்பட்டதே பெரிய அதிசயம் என்கிறார்கள். பிரபல நாவலாசிரியையான அவர் உங்களை வைத்து ‘எ ரெகுலர் கை’ (A regular guy) நாவல் எழுதினாரே... அதையும் அங்கீகரிக்க ஏன் தவறினீர்கள் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்...

அந்த நாவலின் கதாநாயகன் (உங்களைப் போலவே இருக்கும் டாம் ஓவன்ஸ்).. தன் இரண்டு பெண் தோழியர்களை நண்பனிடம் காட்டி (உங்களைப் போலவே) யார் அழகு என கேட்டறிந்து ஒருத்தியை மணப்பதாலா.. அல்லது, (உங்களைப் போல) தனது முதல் மகளை ஈவு இரக்கமின்றி (தன்னைப்போல வளரட்டும் என்று) அனாதை விடுதிக்குத் துரத்துவானே அதனாலா. கோடி கோடியாய் குவித்ததை - எய்ட்ஸ் போன்ற நோய்தடுப்பிற்கு பில்கேட்ஸ் செலவு செய்வதைக் கண்டு (உங்களைப் போலவே) பைத்தியக்காரன் எனப் பரிகசித்து... ஒரு டாலர்கூட தரமுடியாது என முறைப்பானே... அதனாலா..!

என்றாலும் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ், உலகில் இன்று கணினி முதல் ஐ-ஃபோன் வரை யாவையும் வர வழிகாட்டியுள்ள உங்களால் உலகம் (வேற்றுமைஇன்றி) மேடுபள்ளமின்றி ஃபிளாட் (Flat) ஆகிவிட்டதாக தாமஸ் எல்.பிரைட்மான் தனது வேர்ல்டு இஸ் பிளாட் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். உலக மூலதனத்தை தன்னகப்படுத்தி ஒரே அச்சில் வார்த்து முதலாளியம் வர்க்கங்களுக்கு இடையில் ஏழை - செல்வந்தர் வேற்றுமையை அதீதமாய் பெருக்கி ஊழித்தாண்டவம் ஆடும் இன்றைய சூழலில் உங்கள் இணையதள ஏ.சி. மூலைகளை விட்டு வெளியே வந்து பார்த்திருந்தால் உலகம் - தட்டையான சீரான - ஒன்றல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

உங்கள் வருகைக்காக கட்டப்பட்ட ஆறுசாலை மேம்பாலங்களுக்கும் ஐ.டி. காரிடார் சாலை மேடுகளுக்கும் அடியில் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அழித்தொழிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளும் வயிறு உப்பியபடியே குழந்தைகள் கழியும் எங்கள் வறுமையும்...

ஆனாலும் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ் எங்களிடமும் ஐ.பாடும், ஐ.போனும் உண்டு. எதுவுமே நிஜமல்ல (அதைவிட நன்றாக வேலை செய்யும்) நகல்கள்...!

சாலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் மலிவான எங்கள் வாழ்க்கை உங்களைப் பற்றிய மேற்கண்ட புத்தகங்களைக்கூட சாலை பிளாட்பாரத்தில் மலிவு விலை - பழைய புத்தக சந்தையில் தான் வாங்கி என்போன்றவர்களால் வாசிக்க முடிகிறது...! உங்கள் வார்த்தையிலேயே சொல்வதானால்  India is a country of Pyracy!! அதற்காக வருத்தமில்லை திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்.

-இரா.நடராஜன்

Friday, November 18, 2011

வாசிப்புத் திறனை மேம்படுத்த எழுத்தாளர்கள் மற்றும் ஃபேஸ்புக் உரையாடல்கள்!


காட்சி ஊடகங்களின் பெரும் ஆதிக்கத்தில் வாசிப்பு என்பது வாசத்துக்கு கூட இல்லாமற் போய்விட்டது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. ஆனால் நம் காலத்தின் புத்தகப் பொற்காலம் இதுதான். வகை வகையாகத் தொகை தொகையாக நூல்கள் வந்து குவிந்த வண்ணமுள்ளன. பதிப்பகங்கள் பெருகியுள்ளன. ஏராளமானோர் எழுத வந்திருக்கின்றனர். பதிவு பெறாத உலகங்கள் நம் பார்வைக்காக வந்து நிற்கின்றன. நாம் என்ன செய்யப்போகிறோம்?

இப்படியான சூழலில் வாசிப்பை மேம்படுத்த ஆசிரியர், பெற்றோர், அரசாங்கம், பதிப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஊடகங்கள் என்ன செய்யவேண்டும்? என்னும் ஒரு கருத்துக்கணிப்பை புத்தகம் பேசுது இதழ் சார்பாக மேற்கொண்டோம். ஒவ்வொரு தரப்பிலிருந்தும் வந்த கருத்துக்களை வாசகர்களின் பார்வைக்காகத் தந்துள்ளோம். மேலும் புத்தகம் பேசுது ஃபேஸ்புக்கிலும் விவாதங்களை உருவாக்கினோம். அங்கிருந்து திரட்டிய தகவல்களையும் இணைத்துள்ளோம்.

இது தனிநபர் சார்ந்த பணியில்லை; ஒட்டுமொத்த சமுதாயத்தின் பணி!

- புத்தகம் பேசுது


எஸ். ராமகிருஷ்ணன்

முதலில் பெற்றோர் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். பெற்றோர் பாடம் எடுப்பது போல் புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். வரலாறு, அறிவியல்... என அனைத்து நூல்கள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

ஐஸ் கிரீம் கடை, ஷாப்பிங்மால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதுபோல, குழந்தைகளை புத்தகக் கடைக்கு, நூலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

உலகம் முழுவதும் பெட் டைம் ஸ்டோரி (Bed + Story) மிகவும் நேசிக்கப்படுகிறது. இந்த கதைகளை பெற்றோர் வாசித்துக் காட்ட வேண்டும்.

ஆசிரியர்கள் இதன் தொடர்ச்சியாக பாடப் புத்தகங்களுக்கு வெளியில் புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நூல் அறிமுகம் செய்ய வேண்டும். இசை, விளையாட்டு, கம்ப்யூட்டர் போன்றவற்றிற்கு தனி நேரம் ஒதுக்குவது போல் புத்தக வாசிப்பு, அறிமுகத்திற்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும்.

மேலும், ஆர்வமுள்ள மாணவர் திறளை மேம்படுத்த அவர்களுக்குத் தீனி போடும் விதத்தில் பள்ளி நூலகம் இயங்க வேண்டும். அரசாங்கம் மாவட்டம் தோறும் குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் அமைக்க வேண்டும்.

அனைத்து பூங்காக்களிலும் சிறுநூலகம் அமைக்க வேண்டும். மேலும் ‘புக்பார்க்’ தனியாகவும் அமைக்க வேண்டும். அரசாங்கம் சுற்றுலா பொருட்காட்சிபோல் குழந்தைகள் புத்தகத் திருவிழாக்களை நடத்த வேண்டும். இதில் அனைத்துப் பள்ளிகளையும் பங்கேற்க செய்ய வேண்டும்.
ஊடகங்கள் குழந்தைகள் படிக்க தனிப் பகுதியை உருவாக்க வேண்டும். இப்போது வெளிவரும் சிறுவர் வார இதழ்கள் மொழிநடையிலும், தரத்திலும் திருப்தியாக இல்லை. பெரியவர்களுக்குத் தருவதுபோல் எல்லா விவரங்களும் அடங்கிய குழந்தைகளில் மொழியிலும் அதற்கேற்ற வடிவமைப்பிலும் 4 பக்கங்களேனும் தனியாக தினமும் இணைப்பாக வெளியிடலாம். அமெரிக்காவில் வெளியிடுவது போல் பிரபலங்களின் குரலில் ஆடியோ புக் வெளியிட வேண்டும்.

வினாய் ஒப்ரா-நிகழ்ச்சி போல் தொலைக்காட்சிகளில் புத்தக அறிமுகத்திற்கும் நிகழ்ச்சிகள் உருவாக்க வேண்டும். மேலும் நீயா நானா? நிகழ்ச்சிபோல் புத்தகங்களுக்காக பிரத்யேகக் கலந்துரையாடல் நிகழ்ச்சி இருக்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்காகத் தமிழில் நாளிதழ், வாரஇதழ்கள் வெளிவரவேண்டும்.

ஒவ்வொரு எழுத்தாளரும் குழந்தைகளுக்காக தனியான நடையில், எளிமையான எழுத்துக்களை உருவாக்க வேண்டும். அ, ஆ, இ, ஈ.... என எழுத்து அறிமுகம் செய்வதற்காகவும், ஆரம்ப வாசிப்புக்கான சிறுவர் பாடல்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

ஹாரிபாட்டர் நூல் உலகின் விற்பனை வரிசையில் நெம்பர் ஒன் ஆக உள்ளது. இது போன்ற விஷயத்தை சவாலாக எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கான Fictions உருவாக்க வேண்டும்.

எனது ‘ஏழுதலை நகரம்’ இது போன்ற ஒரு முயற்சிதான். மேலும் உலகின் புகழ் பெற்ற குழந்தை நூல்கள் தமிழில் தாராளமாக மொழிபெயர்க்க வேண்டும்.

பதிப்பாளர்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டு தமிழில் நமது கலாச்சாரத்தில் காமிக்ஸ் புத்தகங்கள் தயாரிக்க வேண்டும். பள்ளிகளுடன் இணைந்து மாணவர்கள் எழுதும் புத்தகங்களை வெளியிட வேண்டும். சோவியத் யூனியன் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ‘வானவில்’ புத்தகத்தைப் பிரித்தால் ஏழு வண்ணம் தெரியும் அது போல் வெளியிட வேண்டும். இன்று அச்சுத்துறையில் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். எனவே ஆப்பிள் பற்றி புத்தகம் போட்டால் ஆப்பிள் வடிவில் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக இச்சமூகம் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட பணத்திற்கு உள்ள மரியாதையை புத்தகத்திற்கும் தரவேண்டும். புத்தக வாசிப்பை மேம்படுத்துவதை இச் சமுதாயத்தின் முக்கிய கடமையாக உரைவேண்டும் இது சில தனிநபர்களின் வேலையில்லை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பணியாக இது இருக்க வேண்டும்.

பல துணிக்கடைகளில் ‘பைகள்’ ‘செடி’ என இலவசம் தருவது போல் புத்தகங்களையும் தரலாம். திருமணங்களில், பிறந்தநாள் விழாக்களில் எங்கெல்லாம் அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ அங்கெல்லாம் புத்தகம் தர முன்வரலாம்.

இந்தத் தேர்வு கலாச்சாரம் உடைக்கப்பட வேண்டும்.

ஈரோடு தமிழன்பன்

குழந்தைகளை உளவியல் திறனுடன் அணுகி அவர்களது மொழித்திறனை உள்வாங்கி ஆசிரியர்கள் அவர்களுடன் உரையாடலை நடத்த வேண்டும். முதலில் புத்தகமே இல்லாமல் உரையாடல், கதை சொல்லல், ஓவியம் எனத் தொடங்க வேண்டும். மெல்ல மெல்ல புத்தகவாசிப்பைத் துவங்கி பின்னர் ஆசிரியர் எழுத்தின் மூலம் உரையாட வேண்டும். அமெரிக்காவில் குழந்தைகளின் பெற்றோர்  'என் குழந்தை 50 புத்தகம் படித்துள்ளது' என சான்றிதழ் அளித்தால் அதை அங்கீகரித்து பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவிக்கிறது. மேலும் குழந்தைகள் படித்த நூல்களைப் பற்றி பள்ளியில் பத்து நிமிடம் உரையாட அழைக்கப்படுகிறார்கள்.

இதுபோல் ஒவ்வொரு கட்டமாக உயர்த்தி, அதிகமாக வாசிப்பவர்களுக்கு ஆளுநர், அமெரிக்க ஜனாதிபதிவரை குழந்தைகளைப் பாராட்டி பரிசளிக்கின்றனர்.

‘அமெரிக்கா ரீட்ஸ்’ என்ற இயக்கத்தை கிளிண்டன் அதிபராக இருந்தபோது நடத்தினார்கள். இதில் அதிகமாக வாசிப்பவர்களைப் பாராட்டி பரிசு மழை பொழிந்தனர்.

இதுபோல் நாமும் நமது நாட்டில் வாசிப்போரை மாவட்ட ஆட்சியர் தொடங்கி மாநில முதல்வர் வரை அழைத்துப் பாராட்டி பரிசளிக்க வேண்டும்.

ஆசிரியர்களும் மாணவர்களும் புத்தகங்களை வாசித்து அது குறித்து வகுப்பறையில் விவாதிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதற்காக ‘Book Fund’ உருவாக்கி அந்த நிதியில் மாணவர்களுக்கு புத்தகம் பரிசாக அளிக்க வேண்டும். தலைசிறந்த மாணவர்களுக்கு ‘Good Conduct’ வழங்குவது போல் புத்தக வாசிப்பைப் பாராட்டி ‘புத்தகப் பிரியன்’ என்று விருது வழங்கப் பரிசீலிக்கலாம்.

நமது கல்வித்திட்டம் மதிப்பெண்களையே நோக்கி இருப்பதால் நமது குழந்தைகளின் பொதுவான புத்தக வாசிப்பு தியாகம் செய்யப்படுகிறது. இந்தத் தேர்வு கலாச்சாரம் உடைக்கப்பட வேண்டும். வெளி வாசிப்பை ஆசிரியர்கள் தருவதில்லை. எங்கள் காலத்தில் பாடம் குறித்த பல்வேறு புத்தகங்களை ஆசிரியர் முதல் நாளே படித்து வருவார். மாணவர்களையும் நாளை இந்தப் பாடம் எடுக்கப் போகிறேன் நீங்களும் படித்து வாருங்கள் என்பார் வகுப்பறையில் ஒரு திறந்த விவாதம் நடைபெறும். இப்போதைய நடைமுறையில் இது இல்லை.

வெளிப்படிப்பு பாடநூல் படிப்பை வளப்படுத்தும். பெற்றோர் இதனை வளர்க்க வேண்டும். பதிப்பாளர்கள் அதிகமாக வாசிப்பவர்களை புத்தகக் கண்காட்சி மேடைகளில் அழைத்து பாராட்டி பரிசளித்துப் பேச வைக்க வேண்டும்.
பாடத்திட்டத்துடன் சுய வாசிப்பிற்கான நூல்களை இணைக்க வேண்டும்.

மனுஷ்ய புத்திரன்

பெற்றோர்:  பாடப் புத்தகங்களுக்கு வெளியே அவர்களின் உண்மையான கல்வி தொடங்குகிறது என்பதை நம்புங்கள். பாடப் புத்தகத்தை ஆழமாக வாசித்தறியவும் சுயமான படிப்புப் பழக்கம் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். என் தந்தை எனக்கு பால்யத்தில் வாங்கிக் கொடுத்த புத்தகங்கள்தான் என் மொழித் திறனை உருவாக்கியது. அறிவைத் திணிப்பதற்கு முன்பு அவர்களது கனவுகளையும் கற்பனைகளையும் அனுமதியுங்கள். பொம்மைகள், புத்தாடைகள், உணவுப் பொருள்களைப் போல கற்பனை வளத்தைத் தூண்டும் புத்தகங்கள் அவர்களுக்கு அத்யாவசியத் தேவை. உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அடங்கிய ஒரு குட்டி நூலகத்தை உருவாக்குங்கள். மற்றதெல்லாம் செலவு, இது அவர்கள் எதிர்காலத்தின் மூலதனம்.

ஆசிரியர்:  கதை சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரைக் குழந்தைகள் நேசிக்கிறார்கள். தங்களுடைய தோழனாகக் கருதுகிறார்கள். உங்கள் பாடத்திட்டத்தில் உள்ள கதைகளைத் தாண்டி அவர்களுக்கு கதைகளைக் கூறுங்கள். அந்தக் கதைகள் அடங்கிய புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்கள் பள்ளி நூலகத்தை (அப்படி ஒன்று இருந்தால்) பயன்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். அவர்கள் சுயமாக வாசித்துவரும் புத்தகங்கள் பற்றி வகுப்பறைகளில் பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்குங்கள். சுயமாக வாசிக்கும் மாணவர்களைச் சிறந்த மாணவர்கள் என்று அடையாளப்படுத்துங்கள்.

எழுத்தாளர்: குழந்தைகளைப் பற்றிய கதைகளை எழுதுவதும் குழந்தைகளுக்கு எழுதுவதும் வேறு வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளின் மன அமைப்பும் மொழி அமைப்பும் வளர்ந்தவர் களுடையதைவிட மாறுபட்டது. அதைப் பின்தொடர முயற்சி செய்யுங்கள். உங்களுடைய தர்க்கத்தை அவர்கள்மேல் திணிப்பதற்கு பதில் குழந்தைகளின் தர்க்க மனதைக் கண்டடைய முயற்சி செய்யுங்கள். அது கற்பனைகளும் மிகை புனைவுகளும் நிரம்பிய தர்க்க உலகம். நீதிக் கதைகளுக்குப் பதில் நீதியுணர்ச்சியைத் தூண்டும் புதிய கதைகளை எழுதுங்கள். எழுத்தாளர்களும் ஓவியர்களும் இணைந்து புதிய படக் கதைகளை உருவாக்குங்கள்.

பதிப்பாளர்: குழந்தைகளுக்கான புத்தகங்களை பதிப்பிப்பது ஒரு கனவை உருவாக்குவது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதன் வண்ணங்கள், வடிவமைப்பு, நூலின் அளவு, மொழி எல்லாமே குழந்தைகளின் இதயத்தை தொடக்கூடிய ஒன்று. தமிழில் குழந்தைகளுக்கு அழகியல் உணர்ச்சியுள்ள நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. குழந்தைகளுக்கான புத்தகங்களை ஒரு கலைப் பொருளை உருவாக்குவது போல உருவாக்குங்கள்.

அரசாங்கம்: பாடத்திட்டத்தோடு குழந்தைகளின் சுய வாசிப்பிற்கான நூல்களை இணையுங்கள். பள்ளி நூலகங்களை செம்மைப்படுத்துங்கள். சிறந்த குழந்தைகள் நூலைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களுக்கு மானிய விலையில் காகிதம் வழங்கலாம். மேலும் பொது நூலகங்களுக்கு அதிக அளவில் குழந்தைகள் நூல்களை வாங்கலாம். ஒவ்வொரு பொது நூலகத்திலும் குழந்தைகள் பிரிவை சிறப்பாக அமைக்கலாம்.

ஊடகங்கள்: குழந்தைகளுக்கான இணைப்பிதழை வெளியிடும் பத்திரிகைகள் அவற்றை இன்னும் கற்பனை வளத்துடனும் அழகியலோடும் வடிவமைக்கலாம். பெரிய நிறுனவங்கள் சிறந்த குழந்தைகள் இதழைக் கொண்டு வரலாம். தமிழில் காமிக்ஸ்கள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. அதை வளர்த்தெடுப்பதற்கு ஊடக நிறுவனங்கள் முன்வரவேண்டும். பத்திரிகைகள் சிறந்த குழந்தைகள் புத்தகங்களை அறிமுகப்படுத்தி விரிவாக எழுத வேண்டும். தொலைக் காட்சிகள் குழந்தைகளை டான்ஸ் ஆடி, பாடவிட்டு ரசிப்பதில் ஒதுக்கும் நேரத்தில் சிறிதளவை புத்தக வாசிப்பு தொடர்பான போட்டி நிகழ்ச்சிகள், கதை சொல்லல் போன்றவற்றிற்கு ஒதுக்க வேண்டும்.
மாணவர்கள் பாடப் புத்தகங்களைக் கடந்து வர வேண்டும்.

ரவிக்குமார்

அயல்நாடுகளில் ஏப்ரல் 23 சர்வதேச புத்தகதினமன்று குழந்தைகள் ஒரு பெரிய புத்தகச் சந்தையை ஏற்படுத்தி எந்தப் புத்தகத்தை வேண்டு மானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்னும் நிலை உள்ளது. அதற்கான தொகையை ஆண்டின் முற்பகுதியில் கல்விக்கட்டணத்துடன் பெற்றுக்கொள்கின்றனர். நமது நாட்டிலும் நூலகக்கட்டணம் என்று தனியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் பள்ளி நூலகங்கள் திறம்பட செயல்படுவதில்லை. அதற்குரிய அமைப்பு கல்விக்குள் இல்லை. காரணம் நம்முடைய பாடப்பொருள் முழுவதுமே பாடப்புத்தகங்களில் எழுதி விடுகிறார்கள்.

சிதம்பரத்திற்கு அருகே ராமகிருஷ்ணா என்னும் சிறிய பள்ளிக்கூடத்தில் நான் படித்தபொழுது பாடப்பொருள் தலைப்புகள் பாடப்புத்தகத்தில் இல்லாததற்காகவே நாங்கள் நூலகங்களுக்குச் சென்றோம். அங்குதான் மாப்பசானிலிருந்து பல்வேறு தரமான அயல்மொழி இலக்கியங்களை நான் வாசித்தேன். இன்னொரு விசயம் என்னுடைய ஆசிரியர்கள் வாரம் ஒருமுறையேனும் ஏதேனும் ஒரு பொதுத் தலைப்பைக் கொடுத்து நாங்கள் வகுப்பிலோ, கூட்டத்திலோ பேசவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். வீட்டில் அப்போதெல்லாம் பேச்சைத் தயாரித்துக் கொடுக்கமாட்டார்கள். நாங்களாகத்தான் நூலகம் சென்று புத்தகம் வாசித்து பேச்சைத் தயாரித்துக் கொள்வோம்.

எனக்கு சிதம்பரத்தில் புவியியல் ஆசிரியர் ஒருவர் இருந்தார். சடகோபன் என்று பெயர். வக்கீலுக்குப் படித்தவர். அவருடைய குரல் கிரீச் என்று இருக்குமென்பதால் வழக்குமன்றத்துக்கு வாதாடச் செல்லாமல் ஆசிரியர் தொழிலுக்கு வந்துவிட்டார். அவர் வகுப்புக்கு வரும்போதே “பாடப்புத்தகத்தை எடுத்து வராதே, பொதுவாக படித்துப் பழகு, பாடப்புத்தகத்தில் நிறையத் தவறு இருக்கும்” என்று பலபுத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக் கிறார். எங்கள் பெற்றோர்களும் இதைப் படிக்க வேண்டும், அதைப் படிக்கக்கூடாது என்று எங்கள் வாசிப்பில் தலையிட்டதில்லை. எங்களைச் சுதந்திரமாக வாசிக்க அனுமதித்தார்கள்.

முதலில் நம்முடைய பாடப்பொருள் (Syllabus) வெளிப்புத்தகங்களையும் வாசிக்கின்ற ஸ்பேசுடன் (Space) இருக்க வேண்டும். இரண்டாவது பொதுப்புத்தகங்களை வாசிக்கும் வழக்கத்தையும் ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். இந்த இரண்டிலுமே இங்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பொறுப்பு நம் அனைவருடையதும் ஆகும்.
மாணவர்கள் விரும்பும் விடயங்களை இணைத்தல் வேண்டும்.

ஜி. குமரேசன், விருபா.காம்

Kinder Joy போன்ற சிறார்களுக்கான மிட்டாய்களும், Bournvita, Horlicks போன்ற ஊட்டச்சத்துணவுகளும் எவ்வாறு சிறார்களைக் கவரும்வண்ணம் தங்கள் விளம்பரங்களை உருவாக்கித் தங்கள் பொருட்களை விற்பனை செய்கின்றன என்பதை இங்கு பொருத்திப் பார்த்தல் வேண்டும். ஒன்று வாங்கினால் இன்னொன்று கட்டாயமாக கிடைக்குமென்றால் அப்பொருளின் விற்பனை எகிறும், மக்களைச் சென்றடையும். தமிழில் பெயர்வைத்தால் மட்டுமே திரைப்படங்களுக்கு வரிச்சலுகை என்ற அறிவிப்பும் இத்தகையதே. உடனடிப் பலன் என்பது கூடவே இருந்தால் அதிக நன்மை கிடைக்கும்.

இந்தவகையில் வாசிப்புத் திறனைக் கூட்டுவதற்கு கூடவே சலுகையாக மாணவர்கள் விரும்பும் விடயங்களை இணைத்தல் வேண்டும். பாடத்திட்டப் புள்ளிகளுடன் வாசித்தலுக்கும் தனியாகப் புள்ளிகள் கிடைக்குமென்றால், அந்த வாசிப்பின் மூலம் ஒரு போட்டியில் கலந்துகொண்டு மாணவர்களைக் கவரும் பரிசுகளைப் பெறமுடியுமென்றால் மாணவர்கள் வாசிப்புத்திறனை தாங்களாகவே உயர்த்துவார்கள். ஆண்டுதோறும் மாவட்டரீதியில் சிறந்த வாசிப்புத்திறனைக் கொண்டிருக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அயல்நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றால் நிச்சயமாக மாணவர்கள் விருப்புடன் வாசித்தலில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் பண்டிகைக்கால விடுமுறையில் மாணவர்களுக்கு பரிசுகள் (தீபாவளி என்றால் வெடி) கிடைக்கும் என்றால்கூட அதனை மாணவர்கள் விரும்புவார்கள்.

மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்கள் நிலையில், அவர்கள் விரும்புக்கூடிய விடயங்கள் சலுகையாகத் தரப்படல் வேண்டும். ஆசிரியர்களுக்கு அவர்கள் ஊதியத்தில் ஒரு சிறு உயர்வும், பெற்றோர்களுக்கு மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் சிறு சலுகையும் தரலாம். மேலே கூறிய அயல்நாட்டுக் கல்விச் சுற்றுலாவிற்கு தலைமைதாங்க ஆசிரியர்கள் அனுப்பப்படுவார்கள் என்றால் அதனை அடையப் பல ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் வாசிப்புத்திறனில் அக்கறை காட்டுவார்கள்.

அடுத்து எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனைக் கூட்டும் புத்தகங்களை வெளியிடவும், பதிப்பகங்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் வாசிப்பு முகாம்களை ஆசிரியர்கள் நடத்தும்போது உதவுதல் அவசியமானதாக்கலாம். அவ்வாறு கலந்துகொள்ளும் பதிப்பகங்களின் புத்தகங்கள் உடனடியாக நூலகங்களுக்கு கொள்வன செய்யப்படும் என்றும் அறிவிக்கலாம்.

திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு முன்னதாக செய்திச் சுருள் திரையிடப்படும் முறை போல், தொலைக்காட்சி ஊடகங்களில் மாணவர்களின் வாசிப்புத் திறன் தொடர்பில் தினமும் ஒரு மணிநேரமாவது நிகழ்ச்சிகள் இருப்பதற்கு அரசு கட்டாயப்படுத்தலாம், அவ்வாறே அச்சு ஊடகங்களில் மாணவர்களின் வாசிப்புத்திறன் தொடர்பிலான பதிவுகளை, ஆக்கங்களைக் கட்டாயப்படுத்தலாம். சிகரெட், மதுபான விளம்பரங்களுக்கு மேலதிகமாக அரசு வரி விதிப்பதன் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறன் தொடர்பிலான நிகழ்வுகள், பரிசுகளுக்கான செலவினங்களைச் செய்யலாம். அத்துடன் வாசிப்புத்திறன் தொடர்பிலான அத்தனை நிகழ்வுகள், பரிசுகள், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களையும், படங்களையும் இணையம் வழி வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் நிலையில் வெளியிடவேண்டும்.

குழந்தை இலக்கியம் என்று பெயர் சூட்டினால் மட்டும் குழந்தை இலக்கியம் ஆகிவிடாது.

என். மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

ஆசிரியர்களுக்கு வாசிப்புப் பழக்கம் மேம்பட்டிருந்தால் அன்றி குழந்தைகளை வாசிக்கத் தூண்ட முடியாது. பள்ளி முதல் பல்லைக் கழகம் வரை பாடநூல்களுக்கு அப்பால் ஒரு வாசகப் பரப்பு உள்ளது என்பதை பாடத்திட்டத்தின் ஊடாகத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. வாசிப்பு பழக்கமுள்ள ஆசிரியர்கள் 10 விழுக்காடு கூட இருக்க மாட்டார்கள். எனவே குழந்தைகளின் வாசிப்பு மேம்பட வேண்டுமெனில் ஆசிரியர்கள் வாசிப்பு மேம்பட வேண்டும்.

ஊடகங்களின் காட்சி விவரணங்கள் குழந்தைகள் மனதில் கேள்வியை உருவாக்குவதாக இல்லை. ஏற்கனவே குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த விடைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இதனால் தனது எண்ணம் சரிதான் என்ற முடிவுக்கு வரச்செய்கிறது. ஒரு தேடலை, கேள்வியை குழந்தைகளின் மனதில் உருவாக்கத் தவறி இருக்கிறது. குழந்தையின் உணர்வுக்கும் காட்சி படிமத்திற்கும் நிரம்ப இடைவெளி இருக்கிறது. அதிகமாக சிரிக்கும் குழந்தையே அதிகமாக சிந்திக்கும் என்கிறார்கள். நமது ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வுகளால் சிரிப்புக்குப் பின் சிந்தனை இடம் இருக்கிறதா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. வாசிப்பை ஒட்டியே கூட காட்சி ஊடகங்கள் நிரம்ப நிகழ்ச்சிகளைத் தயார் செய்யலாம்.

குழந்தைகள் விரும்பிப் படிக்கும் கடித இலக்கியங்கள், பயண இலக்கியம் போன்றவை கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வளர்ந்து உள்ள அளவுக்குக் கூட தமிழகத்தில் வளர்ச்சி அடையவில்லை. குழந்தை இலக்கியம் என்று பெயர் சூட்டினால் மட்டுமே அது குழந்தை இலக்கியம் ஆகிவிடாது. பல படைப்புகள் அப்படித்தான் குழந்தை இலக்கியமாக படைக்கப்படாமலே குழந்தை இலக்கியம் என திணிக்கப்படுகிறது. பதிப்பகங்களுக்குத் தொழில் முறை நோக்கம் மாற வேண்டும். அது ஒரு சேவை, தொண்டு என்ற மனநிலை பதிப்பாளர்களுக்கு ஏற்பட வேண்டும். பதிப்பகங்கள் குழந்தை இலக்கியத்தை எடுத்துச் செல்ல அச்சு ஊடகங்கள் பெரும் பங்கு ஆற்ற வேண்டும். வாரம் ஒரு முறை நூல் மதிப்புரை நூல் அறிமுகம் என்பது மாற்றப்பட்டு தினமும் புத்தகங்ள் வாசிப்பு பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும்.

அரசியல் பார்வை, கல்விக் கொள்கை பாடத்திட்டம், கலைத் திட்டம் எல்லாவற்றிலும் வாசிப்பு மேம்பட ஒரு மீள் பார்வை தேவைப்படுகிறது. கல்விக் கொள்கை என்று இருப்பது போல் நூலகக் கொள்கை, வாசிப்பு மேம்பாட்டுக் கொள்கை என்று ஒன்றைக் கூட அரசு அறிமுகம் செய்யலாம்.

புத்தகம் பேசுது ஃபேஸ்புக் விவாதங்கள்

மகேந்திரன் மகா

பள்ளிப் பருவத்திலேயே படிப்படியாக அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் அவர்களாகவே தேடி வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஜி.ஜி. ராஜன் பாலச்சந்திரன்

வீடுதோறும் குழந்தைகளுக்கான நூலகம் உருவாக்கிட அனைவருமே தத்தம் பங்குக்கு உதவ முடியுமே!

நசுரூதின் சிகாப்தின்

முதலில் குழந்தைகளுக்கான புத்தகம் என்பதை வைரயறை செய்பவர்கள் அந்தத்துறையில் முழு ஆத்ம ஈடுபாடுடையவர்களாயிருக்க வேண்டும். ஏனைய (இலக்கிய) புத்தகங்ளைப் போலல்லாது வளர்ந்தவர்கள் குழந்தைகளாக மாறி நின்று வாசிக்கும் போதுதான் இது சரியான நிலையில் வளர்த்தெடுக்கும் என்பதைக் தொகுத்துணரக் கூடியதாயிருக்கும். அல்லாதவிடத்து, ‘நானும் புள்ளயளுகளுக்கு புத்தகம் எழுதியிருக்கம்பா’ எனும் நிலையில் வெறும் ஆத்திசூடி, நீதி உபதேசக் கதைகளை வாங்கிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

பாப்பா இனியன்

பெற்றோர் முதலில் புத்தகம் வாசிப்பவராக இருப்பது அவசியம்.

கே. ஆனந்த் ஆனந்த்

நமது அப்துல்கலாம் அய்யா சொன்னதுபோல் நமது வீட்டில் ஒரு சிறிய நூலகம் வைத்து தினசரி குழந்தைகளுடன் சிறிது நேரமாவது புத்தகம் வாசிக்க நேரம் செலவிட வேண்டும்.

திலிப் சில்வர் புல்லட்


குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வாசிக்கும் பழக்கத்தை பெற்றோர் உண்டாக்க வேண்டும். ஊடகங்களும் பதிப்பகங்களும் குழந்தைகளுக்கு பயனுள்ளதைப் பற்றிய செய்திகளை வெளியிடும் பொருட்டு அமைந்தால் வாசிப்புத்திறனோடு வாசிக்கும் ஆர்வமும் செம்மைபடும். எழுத்தாளர்கள் குழந்தைகளைத் தனது எழுத்துக்களோடு இணைந்திருக்க முயலும்போது பண்பட்ட முறைகளில் படிப்புத்திறன் வளரும்.

ஜானகிராம் - மதுரை

முதலில் அவர்களை தமிழ்ச் சிறுகதைகளை வாசிக்கச் செய்து அதன் சுவையை அறியச் செய்யவேண்டும். பிறகு அவர்கள் தாங்களாகவே வாசிக்கத் தொடங்கி விடுவார்கள்.

மேரி மகேந்திரன்

பிள்ளைகளுக்கு மாங்கனியைப் போல் வாசிப்பு விருப்பமாக ஆக்கப்பட வேண்டும். வாசிப்பை விளையாட்டாகச் செய்ய வேண்டும். அதுதான் பிள்ளைகளுக்கும் அவர்களின் ஆளுமைக்கும் பயனுள்ளதாக அமையும்.

தமிழ்நாடன்

பள்ளிகளில் புத்தகம் படிக்கவென நேரமும் நாளும் ஒதுக்கப்பட வேண்டும். அந்நாளில் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, அவர்கள் படிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். ஊர்தோறும் படிக்கும் இயக்கங்கள் தொடங்கப்பெறல்வேண்டும். குழந்தைகளுக்கான படைப்புகள் அதிக அளவில் வெளிவரவேண்டும்.

சுகுமார் ராமதாஸ்

அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாய நூலகப் பயன்பாடு வேண்டும். ஆசிரியர்கள் நல்ல தரமான புத்தகங்களைப் படித்து அதை மாணவர்களுக்குச் சொல்லலாம். புத்தகங்களைப் படிப்பதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஷீலா சாமுண்டீஸ்வரி

ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் ஒரு நூலகம் இருத்தல் அவசியம். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பொம்மையுடன் ஒரு காமிக் புத்தகம் பரிசாக வழங்கலாம். குழந்தைமையுடன் நாம் அவர்களிடம் பழகி அவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தலாம்.

திலகவதி நாகராஜன்

குழந்தைகளுக்கு நல்ல அழகிய படங்கள் உள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். வளர வளர அவர்களின் வயதுக்கேற்ப சித்திரக்கதைகள் மற்றும் சிந்தனைக் கதைகளை அறிமுகப்படுத்தலாம். பிறந்தநாள் பரிசாகப் புத்தகங்களைக் கொடுக்கலாம். பாராட்டும் சமயங்களிலும் நல்ல புத்தகங்களைக் கொடுத்துப் பாராட்டலாம்.

கந்தநாதன் சண்முகம்

நூலகம் சென்று படிப்பதற்கென நேரம் ஒதுக்கி நீங்கள் அக்கறை எடுத்தால் மாணவமணி கனியாகும்! அரசாங்கமே! பள்ளிகளில் நல்ல நூலகங்களைத் திறந்து நூலகக் கல்வியைக் கொஞ்சம் கட்டாயப் பாடமாக்குங்கள்! போட்டிகளை அறிமுகப் படுத்தி பொது அறிவை வளர்க்க தீட்டிடுவீர் பல திட்டம்!

Thursday, November 17, 2011

ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்




- அஜயன் பாலா

இயக்குனர்களின் பிதாமகனாக பலராலும் கருதப்படும் ஆல்பிரட் ஹிட்சாக் தனது கடைசிப்படமான பேமலி ப்ளாட் படப்பிடிப்பில் இருந்தசமயம் ஒரு இளைஞன் அவரைப் பார்க்க செட்டில் வந்து நின்ற போது யார் அவன்? முதலில் அவனை விரட்டுங்கள் என சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த இடத்தில் இருந்த நடிகர் ப்ரூஸ் டெர்ன் ஹிட்சாக்கின் காதில் சென்று ரகசியமாக ஏதோ சொல்ல ஹிட்சாக் புருவம் உயர்ந்தது.

அப்படியா அந்த மீனை வச்சி படம் எடுத்தானே அவனா என ஹிட்சாக் கேட்க, ப்ரூஸ்டெர்ன் ஆமாம் பெயர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என பெருமிதத்துடன் கூறி தலையசைத்தார். அடுத்த நொடி மேலும் கோபம் கொப்பளிக்க “முதல்ல அந்த வேசிமகனை வெளியே அனுப்பு” எனக்கூற ப்ரூஸ் அதிர்ந்தார். அவர் உங்களுடைய தீவிர ரசிகர் உங்கள் காலடியில் ஒரே ஒரு நிமிடம் உட்கார்ந்துவிட்டு எழுந்திருக்க ஆசைப்படுகிறார் என மீண்டும் வலியுறுத்த அப்போதும் ஹிட்சாக் பிடிவாதமாக மறுத்து விட்டார்.

சில நாட்கள் கழிந்தபின் ஹிட்சாக்கிடம் ப்ரூஸ்டெர்ன் ஏன் உங்களுக்கு அந்த இளம் இயக்குனர் மேல் அத்தனை கோபம் என கேட்க, அதற்கு “யூனிவர்சல் ஸ்டூடியோ ஜாஸ் என்ற பெயரில் சுறா மீனை வைத்து ஒரு தீம் பார்க் செய்தபோது நான்தான் குரல் கொடுத்தேன். அதற்காக மில்லியன் டாலர் பணம் வாங்கியிருக்கிறேன். நானும் பணத்துக்காக வேசை தொழில் செய்பவன்தான். ஆனாலும் அவர்களுக்கு நான் விசுவாசமாக இருக்கவிரும்புகிறேன். இவன் அதைத்தான் மூலமாக வைத்து ஒரு கதை பண்ணி சம்பாதிக்கிறான். இதை நான் ஏற்க முடியாது” எனக் கூறினார்.

ஸ்பீல் பெர்க் எனும் மகத்தான இயக்குனர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதற்கு மூல காரணம் அவர் அடைந்த பிரம்மாண்ட வெற்றி. உலக சினிமா வரலாற்றில் நட்சத்திர அந்தஸ்துள்ளவர்களின் படங்களுக்குத்தான் பிரம்மாண்ட வெற்றிகள் கிடைக்கும் சூழலில் அதையும் கடந்து ஒரு இயக்குனருக்கு அப்பெயரை வாங்கித்தந்த பெருமையும் மக்களுக்கு சினிமா எனும் தொழில் நுட்பத்தின் மீது மரியாதையையும் உண்டாக்கித்தந்தவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.

யூத மத சடங்குகளைத் தீவிரமாகக் கடைபிடிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்பீல்பெர்க் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் 1946ல் பிறந்தவர். அவரது அம்மா லேத் ஆல்டர், ஒரு பியானோ இசைக் கலைஞர். அப்பா அமோல்ட் ஸ்பீல்பெர்க் ஒரு எலக்ட்ரிகல் இஞ்சினியர். சிறுவயதில் அரிசோனாவின் ஸ்காட்ச்டேலில் அவரது அம்மா அப்பாவுடன் முதல் சினிமாவைப் பார்த்ததிலிருந்தே ஸ்பீல்பெர்குக்கு சினிமா மேல் அப்படி ஒரு ஈர்ப்பு. அப்பாவிடம் சினிமாவைப் பற்றி துருவித்துருவிக் கேட்டறிந்து, பிறகு தானும் அது போல படம் எடுக்க விரும்பினார். அந்த ஆசைக்கு வடிகாலாக அவரது அப்பாவும் ஒரு 8எம்.எம். கேமரா ஒன்றை வாங்கிப் பரிசளிக்க, வாங்கிய காமராவின் மூலம் தானே ஒரு கதை எழுதிப் படம்பிடித்து அக்கம்பக்கம் சிறுவர்களுக்குத் தனியாக ஷோ ஒன்றும் போட்டுக் காண்பித்துள்ளார். வியாபாரியான ஸ்பீல்பெர்க் அந்த ஷோவுக்கு தன் நண்பர்களிடம் தலைக்கு 25 செண்ட் காசு வசூலித்த பின்பே அனுமதியளித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் வந்திருந்த நண்பர்களிடம் அவரது தங்கை பாப்கார்ன் விற்று அதிலும் லாபம் சம்பாதித்துள்ளார் என்பது விசேஷ சேதி. இயல்பாக யூதர்களுக்கிருக்கும் இந்த அடிப்படை வியாபார குணம்தான் பிற்காலத்தில் அவரது படங்களின் பெயர்களையும் லோகோக்களையும் பிராண்ட் நேமாக விற்றுப் பன்மடங்கு வருமானத்தை உயர்த்தும் உத்திகளைக் கற்றுத் தந்துள்ளது.

ஒருகட்டத்தில் பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிய நேர்ந்தபோது அம்மாவும் மூன்று சகோதரிகளும் அரிசோனாவிலேயே தங்கி விட தன் தந்தையுடன் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தார்.
பிறப்பால் யூதனாக இருந்ததால் நண்பர்களின் மத்தியில் ஒரு தனிமையும் அன்னியத்தன்மையையும் அதிகமாக உணர்ந்தார் ஸ்பீல்பெர்க். இதனாலோ என்னவோ ஸ்பீல்பெர்குக்கு சினிமாவின் மேல் அளவுக்கதிகமான காதல் உருவாகியிருக்கவேண்டும்.

13 வயதில் ஸ்பீல் பெர்க் எடுத்த ஆப்ரிக்க போர் பின்னணிகொண்ட 40 நிமிடப் படம் பலரது பாராட்டைப் பெற, அது கொடுத்த உற்சாகத்தில் firelight எனும் முதல் முழுநீளப்படத்தை  US$ 500, செலவில் எடுத்து அதை லோக்கல் தியேட்டரில் வெளியிட்டு லாபம் சம்பாதித்தார்.

யூனிவர்சிட்டி ஆப் சதர்ன் கலிபோர்னியாவில் திரைப்படக்கல்வி பயின்ற ஸ்பீல்பெர்க் படிப்பின் முடிவில் amblin' (1968), எனும் 28 நிமிட குறும்படம் ஒன்றை எடுத்தார். பிற்காலத்தில் சொந்தமாக படக்கம்பெனி ஒன்றைத் துவக்கியபோது அதே amblin’ பெயரையே சூட்டினார். இப்படத்தைப் பார்த்த யூனிவர்சல் ஸ்டூடியோவின் முக்கியஸ்தர்கள் உடனடியாக ஸ்பீல்பெர்க்குடன் ஒரு நீண்ட நாள் காண்ட்ராக்டை போட்டுக்கொண்டனர். அப்போது அவருக்கு வயது வெறும் 16 தான். அத்தனை சிறியவயதில், மிகப்பெரிய ஸ்டூடியோவில் வேறு எந்த இயக்குனரும் அப்படி ஒரு உறுதியான ஒப்பந்தம் இட்டதில்லை. உண்மையில் ஸ்பீல்பெர்க்கின் அந்த 16 வயது சாதனை, இயக்குனர்களின் வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரை. யூனிவர்சலில் அவர் எடுக்க ஒப்பந்தம் ஆன முதல்படம் Malcolm winkler. ஆனால் அந்தப் படத்துக்கு சரியான நடிகர்கள் கிடைக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட அடுத்து “L.A. 2017”. எனும் அறிவியல் புனைகதையின் சில எபிசோட்களை யூனிவர்சலின் தொலைக்காட்சிப் பிரிவுக்காக எடுத்தார். அதில் மகிழ்ச்சியுற்ற ஸ்டூடியோ அதிபர்கள் தொடர்ந்து நான்கு தொலைக்காட்சிப் படங்களை எடுக்க ஒப்பந்தம் செய்தனர். அதில் முதல் படம் டுயல். நெடுஞ்சாலை ஒன்றில் ஒரு ட்ரக்கர் டேங்கர் லாரியை ஓட்டும் மனநோயாளி ட்ரைவருக்கும், ப்ளைமவுத் கார் ஓட்டும் நாயகனுக்கும் இடையில் நடக்கும் சக்கரங்களின் போர்தான் இப்படத்தின் மையப் பொருள். முழுவதும் சினிமா மொழியை மட்டுமே தாங்கி வசனங்கள் குறைவாகக் கையாளப்பட்ட இப்படத்தில், அந்த சிறிய வயதிலேயே அவருக்கிருந்த மொழி ஆளுமையை உலகறியச்செய்தது. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் அத்தனை கச்சிதம். அவரது எல்லாப் படங்களையும் போல ஒரே கதைப்பொருள்தான் இதிலும். நன்மைக்கும் தீமைக்குமான போர். இறுதியில் நன்மை வெற்றிபெறுவது தெரிந்த கதைதான் என்றாலும் நம்மைக் கடைசிவரை சீட்டின் நுனியில் அமரவைப்பதுதான் அவரது அசகாய உத்தி.

இதற்காக அவர் தீமையை இட்டுக்கட்டி பெரிதாக்கி காண்பிப்பது கொஞ்சம் அதிகம். ஆனால் அந்த அதிகம்தான் அவர் உலகப்புகழ் பெறவும் காரணமாக உதவியது. அவர் வணிக ரீதியாக புகழ உச்சிக்கு செல்லக் காரணமாக இருந்த ஜாஸ், ஜூராசிக் பார்க் எனும் இரண்டு படங்களுமே இந்த இட்டுக்கட்டப்பட்ட தீமைகள்தான்.

டூயலின் வெற்றி அவரை அடுத்த கட்டங்களுக்குத் தூக்கிச் சென்றது. முதல் முழு நீளப் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பையும் அது பெற்றுத் தந்தது. இம்முறையும் அதே சேஸிங் டைப் படம் தான். சொல்லப்போனால் அவரது பெருவெற்றிப் படங்கள் எல்லாமே ஒரு வகையில் சேஸிங் படங்களாகத்தான் இருக்கின்றன.

Sugarland express(1974) எனும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படை யாகக்கொண்ட இப்படத்தில், தம்பதியருக்கும் போலீசாருக்கும் நடைபெறும் துரத்தல்தான் கதை. இப்படத்தைத் தொடர்ந்து யூனிவர்சல் ஸ்டூடியோ அவருக்கு ஒரு நாவலைக் கொடுத்து படிக்கச்சொல்லி அதைப் படமாக்க அழைத்தது. அந்தப் படம் ஜாஸ். ஜாஸ் அவருக்கு உருவாக்கித் தந்த வெற்றி அதற்குமுன் ஹாலிவுட்டில் எவருக்குமே கிடைக்காதது. புதுமையான தொழில்நுட்பத்திலும், பார்வையாளர்களிடத்தில் அது உருவாக்கிய தாக்கத்திலும் உலக அளவில் அதுவரை வெளியான அனைத்துப் படங்களையும் அது பின்னுக்குத் தள்ளியது.

அக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் அதற்கு உண்டான பரபரப்பைப் பார்த்து ஜாஸ் மேனியா என பத்திரிகைகள் எழுதின. உண்மையில் படத்துக்கான திட்டமிட்ட மதிப்பீட்டிலிருந்து செலவு தாறுமாறாக எகிற, ஒருகட்டத்தில் யூனிவர்சல் ஸ்டூடியோவின் முதலாளிகள் படத்தை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டனர். பிறகு ஸ்பீல்பெர்க் தன் முயற்சியால் முழுப் படத்தையும் எடுத்து முடித்து வெளியிட, அது பிரம்மாண்ட வெற்றியை உருவாக்கித் தந்து முதலாளிகளை வாயடைக்க வைத்தது.

படத்தின் வெற்றி ஸ்பீல்பெர்க்கை அமெரிக்காவின் இளம் மில்லியனராக மாற்றியது. படத்தொகுப்பு, பின்னணி இசை மற்றும் சத்த ஒருங்கிணைப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் பரிசையும் வென்றது. தொடர்ந்து ஜாஸ் 2ம் பாகம் இயக்க அழைப்பு வந்தபோது அதை மறுத்து அவர் இன்னொரு படத்தில் களமிறங்கினார். அது Close Encounters of Third kind (1977).

இப்படத்தின் கதை யாருடையது என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உண்மையில் இக்கதை இந்திய இயக்குனர் சத்யஜித்ரே அவர்களால் உருவாக்கப்பட்ட ஏலியன் எனும் வரைகலைச் சித்திரம். குழந்தைகளுக்காக அவர் நடத்தி வந்த ஒரு பத்திரிகையில் படக்கதையாக வெளியான இக்கதையை அறிந்த ஹாலிவுட்டின் கொலம்பியா பிக்சர்ஸ் இதனைப் படமாக எடுக்க விரும்பி 1969ல் பிராண்டோவையும் அதில் நடிகராக நடிக்கச் சொல்லி அழைப்பு விட்டிருந்தது. ஆனால் ரேவுக்கு அவர்கள் பேசிய சம்பளத்தில் உடன் பாடில்லாத காரணத்தால் அப்படம் கைவிடப்பட்டது. ஆனால் அப்போது ரேவுக்கு ஏஜெண்டாக இருந்தவர், பிற்பாடு ஸ்பீல்பெர்க்குக்கும் ஏஜெண்டாகப் பணிபுரியப் போக; அவர்தந்த ஆலோசனையில் இக்கதையை ஸ்பீல்பெர்க் தனக்கேற்றாற்போல மாற்றிக்கொண்டு படத்தை உருவாக்கிவிட்டார் என ரே அவர்களே தனது வாழ்க்கைக் குறிப்பில் இதனைப் பதிவுசெய்துள்ளார்.

ரே போன்ற மேதைகள் இப்படியான விஷயத்தைச் சொல்லும்போது அதன் நம்பகத்தன்மை நம்மை ஸ்பீல்பெர்க்மேல் நிச்சயம் சந்தேகப்படவே வைக்கிறது.

மேலும் அதற்கு முன் வரை எந்தக் கதையும் சொந்தமாக எழுதியிராத ஸ்பீல்பெர்க் இதற்கு மட்டும் கதை எனத் தன் பெயரைப் போட்டுக்கொண்டது ரே உருவாக்கிய அதே உருவச்சித்திரம் ஏலியனாக ஸ்பீல்பெர்க் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதும் ரேவின் கூற்றை நம்ப வைக்கின்றன.
மேலும் ஸ்பீல்பெர்க்கின் படங்கள் பொதுவாக மனிதர்களுக்கான வில்லன்களை மட்டுமே தேடுபவை.. அவரது படங்களில் மனிதன் தேடிய ஒரே நண்பன் இந்தப் படம் ஒன்றுதான். இந்த சிந்தனை நிச்சயம் ஒரு இந்திய மரபு வழி சார்ந்த சிந்தனையாக மட்டுமே இருக்க வாய்ப்பிருப்பதால் இப்படத்தின் கதைக்கு ரேவின் ஏலியன் தான் மூல வித்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க இப்படம் அவருக்கு உருவாக்கிய தொடர் வெற்றி அவரை சிம்மாசனத்தில் அமரவைத்தது. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும் படத்தின் ஒளிப்பதிவாளரான Vilmos Zsigmond அவர்களுக்கும் ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கும் விருது கிடைத்தது.
அடுத்து அவரது நெருங்கிய நண்பரும் அமெரிக்காவின் புதிய அலை இயக்குனர்களில் ஒருவருமான ஜார்ஜ் லூகாசுடன் இணைந்து ஆக் ஷன் அட்வென்ச்சர் படம் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். லூகாசின் முந்தைய வெற்றிப் படத்தில் அறிமுகமான ஹாரிசன் போர்ட் தான் நாயகன். Raiders of last arc எனும் அந்தப்படம் வெளியான போது அதுவும் வசூலில் பெரும் சாதனை செய்தது. ஆக் ஷன் படங்களின் அகராதியாக இன்றும் கருதப்படும் அளவுக்கு ஸ்பீல்பெர்க் தன் தொழில் நுட்பத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து E.T, the extra-terrestrial, indiana jones and the temple of doom, அறிவியல், ஆக்ஷன் என இரண்டுவிதமான படங்களை இயக்கிவந்தாலும் அவரை உலகம் ஒரு கமர்ஷியல் இயக்குனராகத்தான் பார்த்து வந்தது. சிறந்த இயக்குனருக்கான விருதுக்குப் பலமுறை அவர் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டாலும் விருது மட்டும் கிடைக்கவில்லை. தானும் ஒரு சிறந்த இயக்குனராக அறியப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வாழ்வைச் சொல்லும் நாவல் ஒன்றைப் படமாக்க விழைந்தார். அப்படம் the color purple  1985.

அலைஸ் வாக்கர் எழுதி புலிட்சர் பரிசு பெற்ற இந்நாவலைக் கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில், ஓப்ரா வின்ப்ரே மற்றும் ஊப்பி கொல்ட்பெர்க் ஆகிய கறுப்பினத்தின் உலக நட்சத்திரப் பெண்கள் நடித்திருந்தனர். கறுப்பின மக்களது வாழ்வைச் சொன்ன இப்படம் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்தது ஆனால் இதிலும் இயக்குனர் விருது மட்டும் அவருக்கு கிடைக்கவில்லை.

ஸ்பீல்பெர்குக்கே சிறந்த இயக்குனர் விருது கிடைக்கவில்லை என்பது எல்லோர் மத்தியிலும் ஒரு பேச்சாக இருந்தது. இதன் பொருட்டு அவர் முன் இது ஒரு சவாலாகவே மாறியது, அதற்காக அவர் தன்னை தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில்தான் மைக்கேல் க்ரிக்டன் எழுதிய ஜுராசிக் பார்க் எனும் நாவல் அவர் கைக்கு கிடைத்தது. 1993ல் ஜுராசிக் பார்க் படமாக வெளியான போது உலகமே அவரை தலை நிமிர்ந்து பார்த்தது.

திரைப்பட வரலாற்றில் இதுவரை வேறெந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பையும் வெற்றியையும் அப்படம் பெற்றது. உலகின் கடைக்கோடி மனிதன் கூட அப்படத்தைப் பற்றி அறியும் அளவுக்கு திரைப்பட உலகின் மகத்தான சாதனையாக அப்படம் மாறியது. இன்று வரையிலும் டைட்டானிக் படம்தான் அந்த சாதனையை சமன் செய்திருக்கிறது. வசூல் தொகை மொத்தம் 914 மில்லியன் டாலர்கள் என்றால் இந்தியாவில் எவ்வளவு என நீங்களே விரலை நீட்டி கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதற்கு மேல் ஒருவன் பணம் சம்பாதிக்க முடியாது என்ற நிலைக்குப்பின் இம்முறை அவர் முன் ஒரே ஒரு சவால் மட்டும் காத்திருந்தது. அந்த சவாலை அவரது அடுத்த படம் நிறைவேற்றித் தந்தது., ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்.
இரண்டாம் உலகப்போரில் 1100 யூதர்களின் உயிரை ஒரு ஜெர்மானிய வியாபாரி காப்பாற்றிய கதைதான் இப்படம். அவரது கனவாக இருந்த சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், கமர்ஷியலாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்று உலகசினிமா சந்தையில் கலைப்படங்களுக்கும் ஒரு கதவைத் திறந்து விட்டது.

அதன்பிறகு தெ மாஸ்க் ஆப் ஜோரோ, தி மென் இன் ப்ளாக் போன்ற படங்களைத் தயாரித்தவர் சேவிங் ப்ரைவேட் ரயான் எனும் அற்புதமான படத்தையும் இயக்கியிருந்தார்.

அடுத்து இம்மாதம் வெளிவரவிருக்கும் அவரது டின் டின் அனிமேஷன் படம் உலக ரசிகர்கள் அனைவரையும் விழிகள் விரித்துக் காத்திருக்க வைத்துள்ளது.

Sunday, November 13, 2011

யாரும் மொழியால் சிந்திப்பது இல்லை - சா. கந்தசாமி

sa ka pakkangal

1983-ஆம் ஆண்டு மே மாதம். மைசூரில் பேராசிரியர் சி.டி. நரசிம்மையா தொன்யாலோகாவில் தங்கி இருந்து ‘சூரியவம்சம்’ நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். தொன்யாலோகா ஒர் இலக்கிய அமைப்பு. உலகம் முழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் எழுதுவதற்கு வசதி செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. இயற்கையான சூழல். மரம் செடி கொடிகளுக்கிடையில் குடில்கள். ஆர்.கே. நாராயணன் யோசனையின்படி அமைக்கப்பட்டது. படிக்க மிகவும் சிறந்த நூலகம். ஆங்கில நூல்கள்தான். பேராசிரியர் சி.டி. நரசிம்மையா மைசூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இருந்தார். அவருடைய இரண்டு மகன்களும் மருமகள்களும் ஆங்கில ஆசிரியர்கள்.

எனக்கு அடுத்த அறையில் ஆங்கிலமொழியில் கவிதை, கட்டுரைகள் எழுதும் இசையிம் நசிக்கீள் தங்கி இருந்தார். அவர் மும்பை பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர். சிறிது காலம் இம்பிரண்ட் என்ற இலக்கிய இதழை நடத்தினார். நாடறிந்த தீவிரமான இலக்கியவாதி; ஆனால் பார்க்கும் போதும், நடக்கும்போதும் பரமசாதுவாக இருந்தார்.

காலைப்பொழுதில் மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் சி.டி. நரசிம்மையாவோடு இலக்கியம் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றோம். ஒரு நாள் இந்திய மொழிகள் பற்றிபேச்சு வந்தது.

மராட்டியமொழியில் நவீன இலக்கியம் எப்படி இருக்கிறது? என்று கேட்டேன். “மும்பையில் செல்வம் கொழிக்கிறது என்கிறார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால் மராத்திமொழியில் அசலான இலக்கியம் எழுதப்படுவது இல்லை. இலக்கியம் எழுத ஆட்கள் முன்வருவது இல்லை. படிக்கவும் ஆட்கள் கிடையாது. இலக்கியம் மட்டுமல்ல, மராத்தியில் சினிமாகூட கிடையாது. இந்தி சினிமா இருக்கிறது. எனவே மராத்தியில் நாடகம் போடுகிறார்கள். எனவே சிலர் மராத்தியில் நாடகம் எழுதுகிறார்கள். ஆனால் கவிதை, சிறுகதை, நாவல் எழுத ஆட்கள் இல்லை”.

“மும்பைக்கு வெளியில் மராத்தி மொழி பேசப்படு கிறது. அவர்களுக்காகச் சிறுகதைகள், நாவல்கள் எழுதப்படுவது இல்லையா?”

“சிலர் எழுதுகிறார்கள். அவர்களுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களுக்கு புராணம், இதிகாசம் கொஞ்சம் தெரியும். அதை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள். இந்திய மொழிகளில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, மராத்தியில் எழுதப்படுவதும் தெரியாது. அவர்களிடம் விமர்சனம் கிடையாது. ஒரு மராத்தி எழுத்தாளர் வீட்டிற்குச் சென்றால் தன் ஐந்தாறு புத்தகங்களை அடுக்கி வைத்து இருப்பார்; சிநேகித எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த சில புத்தகங்கள் இருக்கும். அப்புறம் ஆங்கில, பிரெஞ்சு, அமெரிக்கப் புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலானவை படிக்கப்பட்டு இருக்காது’’

“நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்களே அதனை யார் படிக்கிறார்கள்?”

“எழுதிய நான் படிக்கிறேன். வெளியிடும் உதவி ஆசிரியர் படிக்கிறார்; அவ்வளவுதான். மின்சார ரயிலில் என்னோடு பல்கலைக் கழகத்திற்கு வரும் பேராசிரியர்கள், பத்திரிகையில் என்கவிதையைப் பார்த்ததாகச் சொல்பவர்கள் படித்ததாகச் சொன்னது இல்லை.”

“பேராசிரியர்கள் தானே. இலக்கியம் கற்றுக்கொடுக்கும் பேராசிரியர்கள் ஏன் ஒரு புதிய படைப்புப் பற்றி விமர்சிக்க மறுக்கிறார்கள்?”

“முதல் காரணம், கவிதை ஒரு பத்திரிகையில் வெளிவந்தாலும் அது பத்திரிகையின் குணநலன்களோடு இணைந்து போவது இல்லை. அதன் மொழி தனியாக  இருக்கிறது. எனவே அக்கறை எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும். இரண்டாவது அம்சம் கவிதை சொல்லும் கருத்தை, வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு சொந்தமாகச் சொல்ல வேண்டும். அது பெரிய வேலை. அதோடு புதிய படைப்பைத் தான் சரியாகப் படித்து இருக்கிறோமா? புரிந்து கொண்டிருக்கிறோமா? என்ற பயம் வந்துவிடுகிறது. அதன் காரணமாகப் படித்திருந்தாலும் பலர் அது பற்றிப் பேசுவதில்லை அதிலும் கல்வி போதிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள் இலக்கியம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இல்லை”

“ஆங்கிலத்தில் எழுதுவதால் அதிகமான மக்கள் படிக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா?”

“வாய்ப்பு இருக்கலாம். ஆனால் மக்கள் படிப்பது இல்லை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் தான் எழுதி வருகிறேன். அது எனக்குத் தாய்மொழி இல்லை. நான் யூதன். ஆனால் ஹீப்ரூமொழியில் எழுத முடியாது. நான் மராத்தி மாநிலத்தில் வாழ்கிறேன். அதனால் மராத்தி என் தாய்மொழி. இருந்தாலும் நான் மராத்தியில் எழுத முடியாது. என் படிப்பு ஆங்கிலமொழி வழியிலானது. ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்று கிறேன். எனவே ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டியிருக்கிறது. அதுதான் என் பிரச்சினை” என்றார்.

எழுதக் கூடியவர்களுக்கு எல்லாம் மொழிதான் பிரச்சினை. மனிதர்கள் புலம் பெயர்கிறார்கள். தாய்நாடு; தாய்மொழி இல்லாமல் போகிறது. புதிய நாட்டில், புதிய மொழியில் பேசவும் எழுதவும் நேர்கிறது.

1999-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற, ஸ்ரீலங்கா-இந்தியா கருத்தரங்கத்திற்கு, இந்தியாவின் சார்பில் சென்று இருந்தேன். என்னோடு அசோகமித்திரன், லீலா பையா நாயர் என்ற வங்காளப் பெண்கவிஞரும் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி, சிவகுருநாதன் மற்றும் சிங்கள எழுத்தாளர்கள் சிலரும் கலந்து கொண்டார்கள். அவர்களில் ஒருவர் திருமதி ஜீன் அரச நாயகம். அவர் இலங்கையில் நன்கு அறியப்பட்ட கவிஞர். ஆங்கிலத்தில் கவிதையோடு பயணக் கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதுகிறார்.

“நீங்கள் ஆங்கிலத்தில் எழுதக் காரணம் என்ன?” என்று கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பார்க்கும்போது கேட்டேன்.

“ஆங்கிலம் எனக்குத் தாய்மொழி போல. என் தந்தை டச்சுக்காரர். தாய் சிங்களம். எங்களை பர்க்கீஸ் என்பார்கள். வீட்டில் ஆங்கிலம் பேசுவோம். படித்ததும் ஆங்கிலம். எனவே எழுதுவதும் ஆங்கிலந்தான்” என்றார்.

திருமதி ஜீனோடு கண்டி சென்றோம். பழைய காலத்து வீடு. நிறைய புத்தகங்கள். நாய், பூனைகளோடு அவர் கணவர் எங்களை வரவேற்று தேனீர் தயாரித்து வழங்கினார். அரச நாயகம் ஆங்கிலத்தில் சிறுகதைகள், நாவல் எழுதுகிறார்.

எழுதுவதற்கு இதுதான் சரியான மொழி என்பது கிடையாது. யாரும் மொழியால் சிந்திப்பது இல்லை. கதையைக் கட்டமைப்பதும் கிடையாது. தங்கள் கருத்தை, கதையை ஒன்றுக்கு மேற்பட்ட மொழி தெரிந்தவர்கள் எதில் சரியாகச் சொல்ல முடியும் என்று கருதுகிறார்களோ அதில் எழுதுகிறார்கள்.

கன்னட மொழியில் நவீன இலக்கியத்தை ஸ்தாபித்துக் கொடுத்தவர் என்று சொல்லப் படும் மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், வீட்டில் தமிழ் பேசிக் கொண்டிருந்தார். மலையாள மொழியின் மகாகவி என்று போற்றப்படும் உள்ளூர் பரமேஸ்வர ஐயரின் தாய்மொழி தமிழ். தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் கு.ப.ராஜகோபாலன் தாய் மொழி தெலுங்கு. ஆனால் அவர் முழுக்க முழுக்கத் தமிழில்தான் எழுதினார்.

ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயணசாமி என்ற ஆர்.கே. நாராயணனின் தாய்மொழி தமிழ். சென்னை புரசைவாக்கத்தில் பிறந்தார். ஆங்கிலத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதினார். நோபல் பரிசுக்கு அவர் பெயர் பலமுறை இந்தியா சார்பாகப் பரிந்துரைக்கப் பட்டது.

1986-ஆம் ஆண்டில் மைசூரில் அவரை சந்தித்தேன். இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

“உங்கள் நாவல்கள் தமிழ்க் கதைகள் போலவே இருக்கிறதே” என்றேன்.

“ஆமாம். அது அப்படித்தான் இருக்கும்” என்றார்.

ஆங்கிலத்தில் எழுத முதல் காரணம், அவர்கள் தாய்மொழியைவிட ஆங்கிலமொழியில் அதிகமான புலமை பெற்று இருந்தார்கள். எனவே தங்கள் கருத்துகளை, கதைகளை அதில் எழுதுவது சரியாக இருக்குமென  நம்பி எழுத ஆரம்பித்தார்கள். அதில் முதல் ஆங்கிலமொழி எழுத்தாளர்கள் ஆர்.கே. நாராயணன் ‘மால்குடி’ என்ற கற்பனையான ஒரு தமிழ்-கர்னாடகா கிராமத்தை உருவாக்கிக் கொண்டு தமிழ்க் கதைகள் எழுதினார்.

முல்க்ராஜ் ஆனந்த் தில்லி பகுதிகளில் வாழும் ஏழை எளிய தீண்டப்படாதவர்களின் கடினமான வாழ்க்கையைப் பற்றி எழுதினார்.

ராஜாராவ் நாட்டில் ஏற்பட்ட சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதினார். கர்னாடகாதான் கதையின் களம்.

மொழிதான் ஆங்கிலமாக இருந்தது. ஆனால் வாழ்க்கை அவர்கள் பிறந்து, வளர்ந்த இடம் சார்ந்து இருந்தது. படைப்பிற்கு இயல்பான அர்த்தம் கிடைக்கவில்லை. கல்லூரிகளில் ஆங்கிலம் போதித்து வந்த ஆசிரியர்களுக்கு - இந்திய படைப்புக்களை ஆங்கிலோ - இந்திய படைப்பு என அழைத்தார்கள் அது நிறைவாகப் படவில்லை.

சிங்கப்பூர் தேசிய பல்க¬லைக்கழகத்தில் பேராசிரியர் எட்வீன்தம்புவை சந்தித்தேன். அவர் தமிழரான நடேசனின் மகன். தாயார் சீனமாது. அவர்க்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலமொழியில் கவிதைகள் எழுதி வந்தார்.

இந்தியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா நாடுகளில் ஆங்கில மொழி படிப்பு - அதுவும் இலக்கியம் படிப்பது கூடிய போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்க காமன்வெல்த் இலக்கியம் என்று பெயரிட்டு, கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்த்துக் கொண்டார்கள்.

மைசூர் தொன்யாலோகா சி.டிநரசிம்மையா காமன்வெல்த் இயக்கியம் - என்று ஒன்றை ஸ்தாபிக்க முன் முயற்சி எடுத்தார். “அது ஒரளவு வெற்றி பெற்று விட்டது. பரந்த அளவில் களம் கிடைத்து இருக்கிறது. ஆனால் படைப்புக்கள் உருவாக இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்”  என்றார்.

மனிதர்களின் கண்டு பிடிப்புக்களிலேயே உச்சமென்றால் அது மொழியும், அதை எழுதும் எழுத்தும்தான். மொழியின் மூலமாகத்தான் அறிந்ததையும் அறியாததையும் அப்படியே எழுதி வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதக் கூட்டத்திற்கும் தனித்தனியாக மொழி, எழுத்து இருக்கிறது என்று பல நூற்றாண்டுகளாக நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் எல்லா மொழிகளும், எல்லா எழுத்து முறைகளும் ஒரே மொழியில் இருந்தும், ஒரே எழுத்தில் இருந்தும் பிரிந்ததுதான் என்று புலம் பெயர்ந்த சரித்திரத்தின் வழியாகச் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். அதுவே மனிதன் பற்றி மட்டுமல்ல; பிரபஞ்சத்தைப்பற்றி எந்த மொழியில் எழுதினாலும், அது தெரிந்த மொழியில், கேட்ட மொழியில், பேசியமொழியில் எழுதப்பட்டது போல இருக்கிறது.

இந்த புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகின்றன? : குட்டி ரேவதி

kutty revathy

புத்தகங்கள் நம்முடன் வாழ்வது என்று முடிவெடுத்து விட்டால், அவை நம் இளம்பருவத்திலேயே நம்மைத் தொற்றிக் கொள்கின்றன என்றுதான் நினைக்கிறேன். சாருண்ணிகளைப் போல நம்முடனேயே வாழ்வதில் அவை கொள்ளும் அதே களிப்பைத் தான் நானும் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். புத்தகங்கள், அறிவுஜீவித்தனம் மிக்க உயிரிகள். இன்னும் சொல்லப்போனால், மனித அறிவுஜீவிகளைப்போல் அல்லாமல் தான் எத்தகையதொரு வாக்குமூலங்களை சொல்கின்றனவோ அதிலிருந்து நழுவாமல், சமரசம் கொள்ளாமல் எப்பொழுதும் தம் நிலைப்பாட்டில் ஒற்றைக் காலில் நிற்கக்கூடியன.

என்னுடைய வாழ்க்கையிலும், எல்லோருக்கும் போலவே, அழுக்கடைந்த தெருநாய்க் குட்டிகளைப் போலவோ, அல்லது எவரோ நழுவவிட்ட காதல் கடிதத்தைப் போலவோ என்னை வந்து சேர்ந்திருக்கின்றன சில புத்தகங்கள். ஆனால், அவை வந்து சேரும்போதே ஓர் உறவின் அடித்தளத்தை என்னுள் அமைக்கும் அத்தனை ஏற்பாடுகளுடனும் தான் வந்து சேர்ந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர் உங்களிடம் ஒரு புத்தகத்தைப் பற்றி விசாரிக்கலாம்! நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் உங்களுக்கு ஒரு நூலைப் பரிசளிக்கலாம்! அல்லது, நீங்கள் நீண்ட நாளாகப் படிக்க விரும்பி, வாங்கும் வழியின்றி தவித்த நூல் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க நீங்கள் திருடியெடுத்து, உங்கள் பைக்குள் திணிக்க, அந்தக் குட்டிநாய் கத்தி குரல் காட்டிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் அள்ளிவரலாம்! முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படித்த பின்னும், அதை உங்கள் கைப்பையிலிருந்து இறக்கமுடியாமல், பிரிய முடியாமல் ஒரு காமத்தை உங்கள் சுவாசத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கலாம்! எந்த ஒரு நூலுமே வாழ்க்கைக்குள் நுழையும்போது, ஓர் உறவின் சீரிய தொடக்கத்தை நிகழ்த்தவே வருகின்றன என்பதை உணர, இன்றைய என் வயதொத்த ஆயுள் பிடித்திருக்கிறது!

நட்பில் பெருத்த நம்பிக்கை இன்றுவரை ஏற்படவில்லை. காரணம், எதனுடனான தன் ஒப்பந்தத்தையும் எளிய சமரசங்களால் நண்பர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடிக் கலைத்துவிடுவது தான்! தன் சமரசமின்மையால், நம் நெஞ்சுக்குள், தம் உறவின் வழியாக நெருப்பில் தகிக்கும் ஓர் இரும்புக்கம்பியை, ஆழமாகப் பாய்ச்சும் தகுதி உள்ளவர்கள் தாம் நண்பர்கள் என்பது என் இலக்கணம்! ஆனால், புத்தகங்கள் கூட்டி வரும் மனிதர்கள், நம் மன இடுக்குகளில் ஓர் ஆலமரத்தின் விதையை எச்சமாய் இட்டுச்செல்கிறார்கள். பின் நீங்கள், அவர்கள் கொண்டு வந்த சாபமூறிய அந்தப் புத்தகங்கள் விரும்பிய ஆலமரத்தை உங்களுக்குள் சுமந்தபடி வளர்ப்பதற்குத் தயாராகிவிடுகிறீர்கள்!

நானும் என் நண்பரும், சென்னை வந்து இதுவரை பத்து வீடுகளுக்கு மேல் எங்கள் புத்தகங்களைச் சுமந்து இடம் மாறியிருக்கிறோம்! ஒவ்வொரு முறை, வீடு மாறும்போதும் அந்தப் புத்தகங்கள் மலைப்பையும் திகைப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன! எங்களின் ‘எட்டுத் திக்கிலும் மதர்த்து எழுந்து நின்று’ (தேவதேவனின் வரி) அவை அமானுஷ்யமாய் எழுந்து நிற்கும் அந்தத் தருணங்களில், வீடுமுழுக்க அவை இறைந்து கிடக்கையில் மனம் கொள்ளும் பேதலிப்பு எந்த இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை!

என் நண்பருக்கு, ஓர் அசாதாராணத் திறன் இருக்கிறது. எல்லா நூல்களையும் வகைப்படுத்தி அடுக்கி வைப்பதுடன், அவர் வெளியூர் சென்றிருக்கும் நாட்களிலோ அல்லது, வீட்டிற்கு வெளியே இருக்கும்போதோ ஒரு நூல் அவசரமாகத் தேவைப்பட்டால், எந்த அடுக்கில், எந்த வரிசையில் எந்த நிற அட்டையுடன், என்ன தன்மையான அட்டையுடன் அது இருக்கிறது என்பதுவரை அவரால் சொல்லிவிடமுடியும்! நாங்கள் விரும்பிப் படித்த நூல்கள் மட்டுமே எங்கள் அறைகளில் நிறைந்திருக்கும்! அல்லாத நூல்களை, உடனே குப்பைத் தொட்டிகளில் போட அவரோ நானோ தயங்கியதே இல்லை! இதுகூட, அவரின் நினைவுத்திறனுக்கு ஒரு காரணம்! அம்மாதிரியாக அடுக்கப்பட்ட நூல்களில், நீங்கள் தேடும் நூலை விரும்பும்போது உருவி எடுத்துப் படித்து, மகிழும் சுகம் போல் வேறேதும் இல்லை! இல்லையென்றால், இந்த சென்னை வாழ்க்கையில் என்னால் நிச்சயமாக இவ்வளவு கூட எழுதியிருக்க முடியாது என்பதே என் அபிப்ராயம்.

நல்ல புத்தகங்கள் என் வாழ்க்கையில் காதலைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. புதிய உறவுக் கண்ணிகளை ஏற்படுத்துவதில் மூர்க்கமாய் பிடிவாதமாய் இருந்திருக்கின்றன. நூல்கள் பற்றிய கவிதைகள் என் தொகுப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயும் இருக்கின்றன! அவை, மழை நாள்களில் என் நூல்கள் கொள்ளும் குளிரையும் விறைப்பையும் குறித்த கவலையாகவே பெரும்பாலும் இருக்கும்! சென்னை போன்றதொரு நகரத்தில், நூலைப் பாதுகாக்கும் கவலை நம் எல்லாவிதமான இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. புத்தகங்களின் மீதான கையாட்சியை, உடைமை அதிகாரத்தைப் பேணுவதே ஒரு மனநோய் தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!

ஒவ்வொரு நூலும் அடர்த்தியான சிந்தனையின் எழுச்சியை மூச்சாய்க் கொண்டு அவ்விடம் உறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நூலும், அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது இயக்கம் சார்ந்த சிந்தனைகளில் தீவிரமாய் உழலும்போது, அந்தக் குறிப்பிட்ட சிந்தனையை வலுவூட்டி மேற்கொண்டு நான் கயிறு பிடித்து ஏறும்படியான துணிவைத் தந்த நூல்கள் ஏராளம். இன்றும் அவற்றை, என் காதலனை நேசிப்பது போலவே நேசிக்கிறேன். இன்று தனிமனிதராய்க் கடந்து வந்த தூரத்தையும், ஏறிவந்த துயரமான மலைகளையும் திரும்பிப் பார்க்கையில் புத்தகங்கள் தாம் அவற்றைக் கடக்கக் கைப்பிடித்துக் கூட்டி வந்திருக்கின்றன என்பதை இப்போது உணரமுடிகிறது. இந்தப் புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகின்றன என்ற ஆவலுடனும் புதிர்த்தன்மை நிறைந்த எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன். வேறு எந்தத் திசையில் சென்றிருந்தாலும், நான் விரும்பாத என்னை அது உருவாக்கியிருக்கலாம்! அப்படி நூல்களிலிருந்து விலகிச் சென்றோர் அடைந்த திசைகள் அவர்களைக் கொடுமையான தனிமைக்கும், வாழ்க்கையின் சிறைக்கும் பழிவாங்கலின் வன்மத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தேவையானதொரு நூல் கிடைத்திருப்பின் அவர்கள் இந்தக் கொடுஞ்சிறைகளிலிருந்தெல்லாம் வெளியே வந்திருக்கமுடியும் இல்லையா? ஒரு நண்பனை விட, உற்ற உறவாய் நூல்கள் ஆற்றவேண்டிய துணையை வேறெதும் செய்ய இயலாது.

நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல்

mammutty book

மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை என்று ஆக்கி வைத்துவிட்ட அந்தப் பிரதியைப் பற்றி என்ன சொல்ல.... அல்லது சொல்லாது எப்படி இருக்க?


மலையாள நடிகர் மம்முட்டி (பிரபல என்ற வழக்கமான அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதைப் பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி புக்ஸ் வெளியீடு.

மம்முட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் அவரது எழுத்தின் மொழிபெயர்ப்பே இத்தனை கவிதையாய் ஒலிக்குமானால், மலையாளத்தில் அது எப்படி வசீகரிக்கும் என்று அறிந்துகொள்ள நெஞ்சு சிறகடிக்கிறது.


வளர்ந்த பிறகும் ஒரு மனிதர் குழந்தை போன்ற உள்ளத்தோடு விஷயங்களை அணுக இயலுமானால் அது வாழ்க்கை அவருக்குக் காட்டும் கருணை என்றே கொள்ள வேண்டும். தவறுகளுக்கு நாணும் தன்மையும், அவற்றைக் கூச்சமின்றி சபையில் எடுத்து வைத்துத் தலைக் குனிவோடு அதிலிருந்து விடுதலை பெற்று வெளியேறும் துணிவும் வாய்ப்பது இயற்கையின் வரமாகவே இருக்க வேண்டும். அடுத்தவரது அதிகார அத்துமீறலை, போலித்தனத்தை, கூசாது பொய்யுரைப் பதை சலனமற்ற ஓடை ஒன்றின் தெள்ளிய நீரைப் போல் தனது கருத்தை அதில் தோய்த்தெடுக்காது பிரதிபலிக்கிற மம்முட்டியின் பக்குவம் இரந்து கோள் தக்கதுடைத்து. 'தன்னை நேசிப்பவரை நாய் நேசிக்கும், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்ற மகாகவி கலந்து வாழ்கிற பக்கங்கள் இருக்கின்றன இந்தப் புத்தகத்தில்.
தாம் என்னவாக இல்லையோ அதையும் சொல்லி, அப்படி இருக்கலாமே என்று அடுத்தவரோடு சேர்ந்து நின்று உறுதியெடுக்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் மகத்துவம் பெறும் பக்கங்கள்.

கல்லூரி நாட்களில் தமது பெயர் குறித்த அவஸ்தையின் பழைய நினைவு கூரலில் தொடங்கும் அவரது பயணம், விதவிதமான மனிதர்களின் நுழைவையும், அவர்களது வாழ்வில் இவரது நுழைவையும் கலந்து பேசிக்கொண்டு செல்கிறது. நன்றி பாராட்டும் போது மறக்காத பெயர்கள், நன்றி கொன்றவர்களைச் சொல்லும் இடத்து நாகரிகத்தோடு அடையாளமின்றி அடுத்த வரிக்குச் சென்றுவிடுவது கவனத்திற்குரியதாகிறது.


இளம் வக்கீலாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரை, இவரது முக வசீகரத்தைப் பார்த்து இவருக்குள் ஏற்கெனவே இருக்கும் நடிப்பு தாகத்தை மேலும் தீவிரமாக்குவது மாதிரி, “நீங்கள் ஏன் சார் சினிமாவிற்குச் செல்லக் கூடாது” என்று கேட்கிறான் வழக்கு பற்றி கேட்க வந்த இளம் வாலிபன் ஒருவன். பின் இவரது திரைப் பிரவேசம் நடந்து, ஒரு படப்பிடிப்பு நேரத்தில் சூழ்கிற கூட்டத்தைக் காவல்துறை புகுந்து அடித்து விரட்டும் போது அந்தக் கூட்டத்தில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு இவரைப் பார்த்துத் தொலைவிலிருந்து வாழ்த்திவிட்டுப் போகும் அதே வாலிபனைப் பார்த்து மம்முட்டி அதிர்வதும், தனது முதல் ரசிகன் அவனே என்று பதிவு செய்வதும் வித்தியாசமான ஓர் அனுபவம்.

வேறு ஒரு சூழலில், மிகவும் பரிச்சயமானவள் போல வந்து பழகிவிட்டுப் போகும் முதியவளும், அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் உண்மை உருவமான ஆக்ஷன் பாபுவும் (‘யதார்த்த வாழ்வில் வில்லன் யார், ஹீரோ யார்?’) தமக்கு எல்லாமாக இருந்து திரிந்து பிரிந்து பரிதாப மரணத்தை எய்துகிற உயிர் நண்பன் ரதிஷும்.....போலவே, நீதிமன்றத்தின் வெளியே பிரித்து வைக்கப்பட்டிருந்து, பரஸ்பரக் காதல் மனசு - அடைக்கும் தாழ் இன்றிப் புன்கணீர் பூசல் தருவதாய் ஒன்றிணைத்து விட காதல் இருவர் கருத்தொருமித்து வெளியேறும் மூத்த தம்பதியினரும், மம்முட்டியின் வாழ்வில் வந்து போகிற பிறரும் என்றென்றும் வாசிப்போர் அருகிலேயே குடியிருப்பார்கள் என்றே படுகிறது. அத்தனை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் ஆர்ப்பாட்டமற்ற பதிவு வியப்பூட்டுகிறது.
தம்மை இன்னும் அடையாளம் தெரியாத மனிதர்கள் புழங்கும் அதே பூமியில்தான் மிகப் புகழுடன் தான் இருப்பதான உலா வருகிறோம் என்று ஓர் இடத்தில் அவர் சொல்வது, அவரது பிரகடனம் போலவே ஒலித்தாலும், ஒரு ஞானியின் தெறிப்பு அதில் காணப்படுகிறது. சம காலத்தில் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகள், மனிதப் பண்புகள், பரஸ்பரம் மன்னிக்கும் பேராண்மை.... எல்லாவற்றையும் பற்றிப் பேச வாழ்க்கை அவருக்கு சிறப்பான அனுபவத்தையும், அதைவிட அவற்றை
எடுத்துரைக்கும் தேர்ச்சியான மொழியையும் அருளியிருக்கிறது.
“என் காதல் ஒரு கள்ள நாணயம்”, “லஞ்சத்தின் வேர்”, “சொர்க்கவாசல் திறக்கும் இரவு”, “கடவுள் கண் மூடிக் கொள்ளும் தருணம்”, “துயரத்தின் பாடல்”....என இருபத்து மூன்று உட்பகுதிகளின் தலைப்புகளே, பேசுகிற மனிதரது உளவியலின் பக்கங்களை எடுத்து வைக்கின்றன: காதலைப் பற்றி, கடவுளைப் பற்றி, நோன்பைப் பற்றி, கம்ப்யூட்டரைப் பற்றி, ஆபத்துக் காலத்தில் எதிர்பாராது வந்து உதவும் தன்மைகளைப் பற்றி...தமது சொந்த வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளின் பின் புலத்திலிருந்து படரும் சிந்தனைகளை அப்பட்டமாக எடுத்துவைக்கிறார் மம்முட்டி.


ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.

 
மம்முட்டி அருகே உட்கார்ந்தபடி தமது வேட்டியின் நுனி காற்றில் பறக்கத் தமது புருவம் உயர்த்திய பார்வையோடும், நினைவு நதியின் மீது அதைக் கலைத்துவிடாத கவனத்தோடு அன்பின் சிறு கல்லை வீசியபடியும் அப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த சுய சரிதையாகவே ஒலித்தது எனக்குள் இந்த வாசிப்பு.


கே. வி. ஷைலஜாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லலாம்: மம்முட்டி இதைத் தமிழில் தாமே சொல்லிவிட்டுப் பின்னர் தான் தமது சொந்த மொழியில் அவராக எழுதியிருப்பார் என்று கொள்ளலாம் போலிருக்கிறது. மிகச் சில இடங்களில் தமிழுக்கு மாற்ற வேண்டாமே என்று அப்படியே மலையாள (வடமொழியைச் சார்ந்த) சொற்களையே விட்டுவிட்ட இடங்களிலும் கூட (நித்ய யௌவனம்!) வாசிப்பிற்கு இடையூறு செய்யாத, குற்றம் சொல்ல முடியாத மொழி பெயர்ப்பு...


மிகக் குறைவான எழுத்துப் பிழைகளையும் மீறி, பரந்த நட்பு வட்டத்தோடு பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் வாசிப்பு இன்பத்தை வழங்கும் அருமையான நூலாக்கம். நூலின் இலக்கிய, மனிதநேய உள்ளடக்கத்திற்கு வரவேற்பு கூறும் ரசனை மிகுந்த முகப்பு.

-எஸ்.வி.வேணுகோபாலன்

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்
-மம்முட்டி
வம்சி புக்ஸ், 19 டி எம் சாரோன்,
திருவண்ணாமலை | பக்: 128 | ரூ.80

மரத்தை வெட்டியதும் இந்தப் பறவைகளெல்லாம் எங்கே போகும்?

maram book

வீடு என்னும் தேவை, அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பரவிக்கொண்டே போய் நகரமயமாக்கல் என்ற விசுவரூபம் எடுத்து, மனிதர்களைப் பேய்போல கவ்விப் பிடித்து, அவர்கள் புறவாழ்விலும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது என்பதை அழகாக நாவலாக்கி உள்ளார், எஸ்.அர்ஷியா.

அந்நாவலுக்கு ஓர் அழகான தலைப்பும் வைத்துள்ளார் அவர். பொய்கைக்கரைப்பட்டி. பட்டிகள் எல்லாம் தங்கள் தனித்துவத்தை இழந்து பெருநகரங்களின் அங்கங்களாகிப் போய்க் கொண்டிருக்கிற மாற்றத்தைப் பற்றி அத்தலைப்பே சிந்திக்க வைக்கிறது.


பொய்கைக்கரைப்பட்டி, எத்தகைய ஊர்?

“பதினேழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதுரை நகரில் வெயில் வாட்டியெடுக்கும், ஆனால் மலையைச் சுற்றியிருக்கும் இடங்களில், லேசாகவும் கனமாகவும் மழை பொழிந்திருக்கும். தொடர்ச்சியாகப் பொழியும் லேசான மழையில், மண் குளிர்ந்து பயிர்கள் கம்பீரமாக நிற்கும். கனமழையின் போது, சுற்றியுள்ள மலைகளின் மீதிருந்து அடித்து வரப்படும் மணலும் மூலிகையும் அந்தப் பகுதிக்கு உரமாகி வளம் கூடிவிடும். செம்மண்ணும் மணலும் கலந்த செவல் பூமியது. வேறெங்கும் இதுபோன்ற அமைப்பு இல்லை. எதை நட்டாலும் நாலு நாளில் முளைவிடும். வேர் பிடித்துத் தலை தூக்கும். குச்சியால் ஆழக் குத்தினாலே போதும். பூமியில் ஈரம் கசியும். நாலடி தோண்டினால், வாளியில் தண்ணீர் மொள்ளலாம்”.


இந்த நிலமும் இந்த நிலத்தின் மைந்தர்களும் எப்படியெல்லாம் சிதைந்து போகிறார்கள் என்பதே, நாவலின் மைய இழை!


‘மரத்தை வெட்டியதும், இந்தப் பறவைகளெல்லாம் எங்கே போகும்?' என்று கேட்டுக்கொள்ளும் சமுத்திரக் கனியின் தொழிலே, வீட்டுமனைகளாக விவசாய நிலங்களை மாற்றித்தரும் புரோக்கர் என்பதுதான், வாழ்வின் கோரம். புரோக்கர் என்று சொன்னால் சமுத்திரக்கனி பதறிப்போவார். அவர் அழகர் மலையானுக்கே அவித்துக் கொட்டும் பரம்பரையில் உதித்தவராயிற்றே, பதற மாட்டாரா? உழவுத் தொழில் செய்து அப்பன் சேர்த்து வைத்ததில் வாழக் கொடுத்து வைத்து, அவர் கஜேந்திரக்குமாரின் ‘ஞான ஸ்தானத்தில்’ மீடியேட்டர் ஆகிறார். ‘மரத்தை வெட்டியதும் பறவைகள் எங்கே போகும்?’ என்று தன்னையே கேட்டவர், போட்டி மீடியேட்டர்களால் தலைவேறு முண்டம் வேறாக வெட்டிப் போடப்படுகிறார். இந்த முதல் அத்தியாயமே நாவலுக்கு அற்புதமான தொடக்கமாகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே ஊடாடி, இறுதியில் லௌகீகத்தின் பக்கம் சாய்கிற கஜேந்திரக் குமார் ஆட்டைப்போல அலற வேண்டிய சந்தர்ப்பங்கள் அவர் வாழ்விலும் நேர்கின்றன.

இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவந்து ஒண்டக்கூட இடமில்லாமல் இரண்டு இரவுகளைக் கீழ் மதுரை ரயில் நிலைய சிமெண்ட் பெஞ்சில் கழித்த, சாப்பிடக்கூட காசில்லாமல் பசியோடு மதுரைத் தெருக்களில் அலைந்து திரிந்த கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, தூக்கம் வராமல் எழுந்து தனது கனவுத்திட்டமான ‘லெவின்ஸ்கி கார்டனுக்கு’ வந்து, அங்கு காலாற நடந்து சுகம் கண்டு, தனது கண்ணுக்கு எட்டாத தூரம்வரை அவரது எல்லை நீண்டிருப் பதாகப்பட்டு, ‘மனசுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அது நிறைவுதராமல் இன்னும் இன்னும்’ என்று தாகம் கொள்கின்ற கஜேந்திரக் குமார், ஆட்டைப் போல அஞ்சி நடுங்கி அலற நேர்கிறபோது, அந்தச் செவலையம்மாளை நினைத்தாரோ என்னவோ, அர்ஷியா எதுவும் சொல்வதில்லை. கமுக்கமாய்க் கண் சிமிட்டுகிறார்.


யாரோ ஒரு முகம் தெரியாத அண்ணனின் அதிகாரக் கரங்கள், கஜேந்திரக் குமாரின் மௌன அழுகையைப் பொருட்படுத்தாமல் அவரது உடம்பிலிருந்து எவ்வளவு இயலுமோ, அவ்வளவு மாமிசங்களைக் கொத்துக் கொத்தாக அள்ளிக் கொள்கின்றன. தனிமையாய் இருந்து அந்த மௌன சோகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சென்ற இடத்தில் மும்பையைச் சேர்ந்த தாதா கும்பலின் உள்ளூர் அடியாட்கள், துப்பாக்கி முனையில் குத்திக் குடைந்து கஜேந்திரக் குமார் என்கிற ஆட்டிடமிருந்து மாமிசங்களை அறுத்துக் கொண்டு போகின்றனர்.

‘ஆடு அலறுதேன்னு கறி திங்காம இருக்கோமா?’ என்ற நியாயம், கஜேந்திரக் குமாருக்கு மட்டும்தானா? ஆட்சி பீட அண்ணனுக்கும் உண்டல்லவா? திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த துப்பாக்கி முனைக் கொள்ளையர்களுக்கும் உண்டல்லவா?

இந்த நான்கு காட்சிகளையும் இணைத்துப் பார்க்கின்றபோது, மானுட இயல்பு, மானுட வாழ்வின் பொருள் குறித்தெல்லாம், நாவலின் தளத்தில் நின்று பல விசாரணைகள் கிளை வெடிக்கின்றன. அவற்றுள் ஒரு கிளை விசாரணை மட்டும் கஜேந்திரக் குமாரின் நினைவாக, ஒரு சுடுகாட்டில் சிலரிடையே நிகழும் வாதமாக அர்ஷியா படைத்துக்காட்டி உள்ளார். நாவலின் கதைப்போக்குக்கு அது அவசியமற்றதுபோல புறத் தோற்றத்தில் தோன்றினாலும் ஆழ அந்தரத்தில் ஓர் இணைப்பு அல்லது ஓர் அவசியம் இருக்கவே செய்கிறது. இந்நாவலில் பல இடங்களில் இந்தப்போக்கு காணப்படவே செய்கிறது. படிக்கிறபோது ஒரு வேண்டாத துறுத்தலாக இடைஞ் சல் செய்வன எல்லாமே, புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சிந்திக்கின்றபோது, அவசியமான ஒன்றாகவே தோன்றும்படி செய்யும் ரசவாதம், அர்ஷியாவின் கைவண்ணம். அர்ஷியா வெறும் கதை சொல்லி மட்டும்தானா என்ன?
எல்லோரையும் பலிகொண்டு விடுகிற கஜேந்திரக் குமாருக்கும் அவரது மீடியேட்டர்கள் சமுத்திரக் கனி, மலைக்கள்ளன், ஆகியோருக்கும் சவால்விட்டு நிற்பவர் மலைநாட்டான். ‘‘மோசம் செய்துவரும் மழை, வாட்டியெடுக்கும் வெயில், ஏமாற்றிவிடும் விதைகள், விலையேறிப்போன உரம், இடையில் விலை வைக்கும் தரகர்கள் எல்லாமாகச் சேர்ந்தும்’’ கலகலக்க வைக்க முடியாத விவசாயி மலைநாட்டான். ‘சம்சாரின்னா அவர மாதிரி இருக்கணும்' என்று பாராட்டுப் பெற்றவர், அவர். அவர் விவசாயம் பார்க்கும் ஏழு ஏக்கர் மண்ணைச் சேர்த்துவிட்டால், கஜேந்திரக் குமாரின் திட்டம் பூர்த்தியாகிவிடும். அதற்காக அவரை அணுகியவர்களிடம் மலைநாட்டான் சொல்கிற பதிலிலிருந்து தெரிகிறது: நிலம் அவருக்கு வெறும் மண் மட்டுமல்ல; அதற்கும் மேல். அங்கிருப்பவை வெறும் தாவர உயி£¢களல்ல; அவற்றிற்கும் மேல். அது அவர் வாழ்வின் அர்த்தம். அவர் ஏதோ பயிர்களை உண்டாக்கிப் பாதுகாத்து, அறுத்து விற்கும் மனிதனில்லை. அதற்கும் மேல்; ஒரு படைப்பாளி!


அவர் சொல்கிறார் : ‘இது எங்க தாத்தா விட்டதை, எங்கப்பாரு மீட்டு எங்கைல குடுத்துட்டுப் போயிருக்காரு. எங்கப் பாட்டி அங்கம்மாவோட ஆவி, இங்கதான் இருக்குது. எங்கம்மாவையும் இங்கதான் பொதைச்சுருக்கோம். இதோ இது, எம்பொண்டாட்டியோட சமாதி. சொல்லப்போனா இது எங்க குடும்பக் கோவில். யாராச்சும் கோவிலை விப்பாங்களா? அப்படியேன்னாலும் இப்ப இதை விக்கணுங்குற அவசியமில்லையே!'


அப்படியொரு அவசியத்தை உண்டாக்க வல்லவராயிற்றே கஜேந்திரக் குமார். பாதாளம் மட்டும் பாயவல்ல பணம் எதிர்த்திசையில் இமய உச்சிவரை பாயாதா, என்ன? சாட்சாத் ஸ்ரீதேவியின் அருட் கடாட்சத்திற்காக அரசு அலுவலகங்களில், ஆட்சிக் கட்டில்களில் கோப்புகள் மீதேறி தவமியற்றுபவர்கள் கஜேந்திரக்குமாரின் கவலையைத் தங்கள் கவலையாகக் கொள்ள மாட்டார்களா? அவர் கவலையை மாற்றுவதே தங்கள் காரியம் என்று கருதிக் களத்தில் இறங்க மாட்டார்களா?


தண்ணீர் வரும் வழி அடைக்கப்படுகிறது. மலைநாட்டான் தோட்டத்துக்கு வரும்வழி மட்டுமா? அழகர் மலையின் சுந்தர்ராஜப் பெருமாள், ஆண்டுக்கு இரண்டு முறை பக்தர்களுக்கு அருள்பாலித்து உலாப் போகும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர்வரும் வழியும் அடைபட்டுவிட்டது. ‘‘தண்ணீரில்லாத தெப்பக்குளத்தின் கரைகளில், பிறர் சுமக்க, தோள்களில் உலா போவதற்கு அவர் வெட்கப்பட்டுக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை. ஓடையை அடைத்து இடத்தை அபகரித்துக் கொண்டவர்களுடன் அவரும் கூட்டணி வைத்துவிட்டாற்போல. அமைதியாக மலையில் உறங்குகிறார்’’, கடவுளின் கதியே இதுவென்றால்...? மலைநாட்டான், மனிதன்!


நாவல் இப்படி முடிகிறது : ‘‘தண்ணீர் வரும் வழி அடைக்கப்பட்ட பின், மழையும் விழாமல், போரில் தண்ணீரும் வராமல், உயர்ந்துவரும் கட்டிடத்துக்குப் பக்கத்திலிருந்த வாழைத் தோட்டம் கருகிப் போயிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே வந்த மலைநாட்டானிடம் செண்பகம் சொன்னாள்: ‘பேசாம நாமளும் இதை வித்துட்டுப் போயிறலாம்ப்பா. தண்ணியுமில்லாம, மழையுமில்லாம எத்தனை நாளைக்குத்தான் இப்டியே பாத்துக்கிட்டுருக்க முடியும்? கடவுளும் நம்மளக் கை விட்டுட்டாரு. வேற வழியில்லப்பா!’’


காதில் விழுந்ததை அமைதியாகக் கேட்டுக்கொண்ட மலைநாட்டான், மகள் முகத்தை நிதானமாகப் பார்க்கிறார்.

சந்திர காந்தன்

காலம் வெளியீடு, மதுரை- 625 002.
பக்: 152 | ரூ.100

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்

1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாசே துங் தலைமையில் செம்படையினர் அணிவகுத்த நெடும்பயணம் 370 நாட்கள் தொடர்ந்தது. சீன வானில் தோன்றிய சிவப்புக் கீற்று, பெரும் பரிதியாய் ஒளிர்விடத் துவங்கிய மாபெரும் வீர சரித்திரம் அந்தப் பயணம். நெடும்பயணத்தின் 77வது ஆண்டு துவங்கும் இந்தத் தருணத்தில், புரட்சியாளர் மாவோவை, பிரம்மைகளற்று உள்வாங்க வேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கிறது.

மாவோ குறித்து எத்தனை புத்தகங்கள் வாசித்திருந் தாலும், இந்த புத்தகத்தை தவறவிட்டுவிடாதீர்கள். ஏனெனில், ஒரு எளிய மனிதன், மாவோ என்ற ஆளுமையை எந்தக் கண் கொண்டு பார்த்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

சீனப் புரட்சிக் காலத்தில் மாவோவிற்கு ஒரு மெய்க்காப்பாளர் குழுவை கட்சி ஏற்படுத்துகிறது. அந்தக் குழுவிற்கு தளபதியாக இருந்தவர் லீயின் கியாயோ. அவரது தகவல்களைத் தொகுத்து குவான் யான்சி என்ற எழுத்தாளர் எழுதிய “மா சேதுங்: ஒரு மனிதர், கடவுளல்லர்!” என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

லீயின் கியாயோ, மாவோவின் மெய்க்காப்பாளராகத் தேர்வானதே மிக அலாதியான அனுபவம். மெய்க்காப்பாளர் பணியை மறுத்திடும் லீயின், நான் போர் முனைக்குச் செல்லவே விரும்புகிறேன், “வழிபடுவதை விட கிளர்ந்தெழுவது மேலானது” என்கிறார். இதன் பின்னர் மாவோவும் அவரும் ஒரு ஆறு மாதத்திற்கு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.மெய்க்காப்பாளர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் பின்வருமாறு அறியலாம். ஒருமுறை விமானங்கள் குண்டுகள் பொழிய வட்டமிட்டு, பின்னர் சென்றுவிட்டதை வர்ணிக்கும் அந்த மெய்க்காப்பாளர் போகிற போக்கில் இப்படிச் சொல்கிறார், “எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்த மார்க்ஸிடம் நன்றியுணர்வு பொங்க நான் மகிழ்ச்சியில் கிட்டத்தட்டகுதித்திருப்பேன்.” என்கிறார். மார்க்ஸிடம் பிரார்த்தனை மேற்கொண்ட அவரது நடவடிக்கை எத்தனை எளிய மனிதர் என்பதை நமக்கு காட்டுகிறது.அத்தகைய எளியவரின் பதிவுகள், சாதாரண மக்களின் கண்களில் மாவோவின் சித்திரத்தை விவரிக்கிறது. புரட்சியின் உச்சகட்டத்திலும், நவ சீனம் நிறுவப்பட்ட பின்னரும் மாவோவிற்கு உதவியாளராக, அவரின் குடும்பத்தில் ஒருவராக வசித்த அவரின் பதிவுகள் மாவோ குறித்த சித்திரத்தை மிக எளிதாக்குகின்றன.

இப்புத்தகத்தை வாசிக்கும் எவரும் ஒரு நாளிற்கு 24 மணி நேரம்தான் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். முழு நேரப் புரட்சியாளர்களாக, ஒரு கம்யூனிஸ்டாக தன்னை வடித்துக்கொள்ள விரும்பும் எவருக்குமே மாவோ ஒரு நட்சத்திரமாக அமைந்திருக்கிறார். “உங்களுடைய பணி, உங்களிடமிருந்து இன்னும் கூடுதல் தியாகங்களைக் கோருகிறது....” (ஊழல் என்னும்) சர்க்கரை தடவிய தோட்டா உன்னைத் துளைத்துவிடாமல் பார்த்துக்கொள்... எளிமையாக இரு; நீ ஊழலில் ஈடுபடாமலிருந்தாலும், ஏதாவது வீணடித்திருக்கிறாயா?, விரயமும் தீங்கானது; அதுதான் ஊழலை நோக்கிய முதல் அடி; சிக்கனமாக இரு, அதைப் பழக்கமாக ஆக்கிக்கொள்” இதுதான் புரட்சியாளர்களுக்கு அவர் முன் வைக்கும் கோரிக்கை. இந்த அறிவுரையை மாவோவும் பின்பற்றினார். அவர் அணிந்த உடைகள் பெரும்பாலும் ஒட்டுப்போட்டவை என்ற செய்தியை லீயின் கியாயோ பதிவு செய்கையில் நம் புருவங்கள் மேலே உயர்கின்றன. போர்க்களமாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் முன்னணியில் நிற்கும் மாவோ தன் நடவடிக்கைகளில் அச்சத்தை வெளிப்படுத்தவேயில்லை. மாறாக எந்த சவாலையும் முன்னணியில் நின்று எதிர்த்தார்.

அதற்கு காரணமிருந்தது. ஒரு தலைவரின் சொற்கள் அல்ல, நடவடிக்கைகளே மக்களைக் கவ்விப் பிடிக்கின்றன என்ற உண்மையை அவர் உணர்ந்துவிட்டிருந்தார். மாவோவின் மகள் லீ நே தனது பள்ளிப் படிப்பின்போது, எல்லா மாணாக்கரையும் போலவே நடத்தப்பட்டார். அவரது பசிக்கு போதுமான உணவு என்றைக்கும் கிடைத்திட்டதில்லை. எல்லா மக்களுக்கும் என்ன கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். மாவோவின் குழந்தைகள் குறிப்பாக லீ நே குறித்த சில பக்கங்கள் நம்மை நெகிழச் செய்யும். மாவோவின் மகளுக்காக சிலர் கண்ணீர் விடலாம். “வாழ்க்கையின் கடுமையைக் கண்டு அஞ்சுகிறவர்களுக்கானதல்ல இந்த உலகம்.” என்ற வாக்கியத்துடன் அந்தத் தருணத்தைக் கடந்துசெல்கிறார் மாவோ.

அதே நேரத்தில், மாவோ கண்ணீர் விட்டழுத நிமிடங்கள் வேறு. நவ சீனம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்திட மாவோவால் முடியவில்லை. அவர் மீதான மதிப்பே, அவரை மக்களிடம் நெருங்க விடாமல் செய்தது. அந்த நேரத்தில் தனது உதவியாளரை அனுப்பி கிராம மக்களின் அன்றாட உணவைச் சேகரித்த அவர், அந்த காய்ந்த பெரிய தவிட்டு ரொட்டிகளைச் சாப்பிட முடிவு செய்தார். “நம் நாட்டின் விவசாயிகள் இதைத்தான் உண்கிறார்கள்” என்று அவர் சொல்லியபோது சொந்தக் காரணங்களுக்காக சற்றும் கலங்கிடாத அவரது நெஞ்சம், குழுங்கியது, கண்கள் கசிந்தன.

“மாவோ அழுதார், தனது லட்சியங்களுக்கும் கொடூரமான உண்மைக்கும் இடையில் இருந்த இடைவெளியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியிருக்க வேண்டும்.” என்று சொல்கிறார் மெய்க்காப்பாளர்.

ஒரு கடுமையான 15 ஆண்டுகாலப் பதிவுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், மாவோவின் புத்தகக் காதலைப் பற்றி தனி அத்தியாயமே கொண்டிருக்கிறது.

“நாம் கொண்டுசெல்ல முடியாத இந்தப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள். மார்க்சிய லெனினியத்தைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் ஹூவின் துருப்புகளுக்கு நன்மையளிக்கக் கூடும்” தோழர்களுக்கு மட்டுமல்லாது, பகைவர்களுக்கும் மார்க்சிய லெனியத்தின் வழிகாட்டுதல் கிடைக்கச் செய்திட விரும்பியவர் மாவோ.


எல்லா சமயங்களிலும் அவர் புத்தகங்களை இவ்வாறு விட்டுச் சென்றதில்லை. மாறாக அவர், தான் செல்லுமிடத்திற்கெல்லாம், சிறந்த புத்தகங்களோடே பயணத்தை மேற்கொண்டார்.

அதைப்போல, நாமும் கையில் வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம் இது. மிகச் சுவாரசியமான நடையைக் கண்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி. ஒரு தலைவரை மதிப்பீடு செய்வதை யுத்தகாலச் சவால்கள் சுலபமாக்கிவிடுகின்றன என்றார் ரிச்சர்டு நிக்சன். இந்தப் புத்தகம் அத்தகைய சவால்கள் நிறைந்த தருணங்களை நம்மிடம் பதிவு செய்கிறது.

-இரா.சிந்தன்

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி | தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி 
பக்: 288 | ரூ.140 | பாரதி புத்தகாலயம் 


Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)