பெண்ணுரிமையும் மனித உரிமையே என்ற புரிதலை ஏற்படுத்த நீண்ட காலம் ஆனது. அதே போல், சில விதமான வன்முறையை, வன்முறை என்று புரிய வைக்கவும் பல காலம் தேவைப்படுகிறது. உதாரணமாக, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது லேசான விஷயமாக, டேக் இட் ஈஸி பாலிசியாகப் பார்க்கப்பட்டது. காவல்துறை தலைவர் கேபிஎஸ்.கில், ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரியை, ஒரு விருந்தில் பின்பக்கம் தட்டினார்; சற்று ஆபாசமாகவும் பேசினார். ரூபன் தியோல் புகார் செய்தார், வழக்காக்கினார். 8 வருடம் சட்டப் போராட்டத்தை நடத்திய பிறகே, நீதிமன்றம் அவர் செய்தது குற்றம் என்று சிறு தண்டனை கொடுத்தது. அதற்கே, பத்திரிகைகள் ரத்தக் கண்ணீர் வடித்து, தீவிரவாதிகளை அடக்கியவர், மிகப் பெரிய தேசபக்தர், அவருக்கா இந்த நிலை, இந்தச் சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிது பண்ண வேண்டும் என்று எழுதித் தீர்த்தன. கில்லுக்கு இது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால், ரூபன் அப்படிப் பார்க்கவில்லை என்பதுதான் முக்கியம். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில், "பெரிசா என்ன பண்ணிட்டாரு, எஸ் எம் எஸ் குடுத்தாரு, அவ்வளவு தானே. வர்றி யான்னு கேட்டாரு, அவ்வளவு தானே” என்கிற போகிற போக்கில் வசனங்கள் உதிர்க்கப்படுவதைக் கேட்டிருக்கிறோம். அனுபவிப்பவர்களுக்கு, அது ஒரு இம்சை, மன உளைச்சலை ஏற்படுத்தும் தொல்லை. வெளியே சொல்ல முடியாமல், மனதுக்குள் வைத்து குமுறுகிற 24 X 7 பிரச்சனை.
குழந்தை திருமணத்தைத் தடுக்க ராஜஸ்தான் அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான பன்வாரி தேவி பலாத்காரம் செய்யப்பட்ட போது, அது தொடர்பான விஷாகா வழக்கில், 1997ல் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல், சமூகத்தின் கன்னத்தில் பளீரென்று அறைந்து, பாலியல் துன்புறுத் தல்/சீண்டல் குற்றம் என்று உணர்த்தியது. செய்பவர் என்ன நினைக்கிறார் என்பதை விட, பாதிக்கப்படுபவர் அதை எப்படி உணர்கிறார் என்று பார்க்க வேண்டும் என்றது. இந்த வழிகாட்டுதலை, சட்டமாக்க வேண்டும் என்று மாதர் அமைப்புகள் அப்போதிருந்தே கோரி வந்தாலும், தேசிய மகளிர் ஆணையம், மாதர் மற்றும் தன்னார்வ இயக்கங்களுடன் கலந்தாலோசித்து, 2007ல் ஒரு மசோ தாவை உருவாக்கி, பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்திடம் அளிக்க, அது 2010ல் இறுதி செய்யப்பட்ட மசோதாவை அரசிடம் அளித்தது. இம்மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. சில தினங்களுக்கு முன், நிலைக்குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. மசோதாவின் சில முக்கிய அம்சங்களை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்போதுதான், அதன் அமலாக்கத்தில் பங்களிப்பு செய்ய முடியும்.
பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது நல்ல அம்சம். வரவேற்கத்தகாத பாலியல் அடிப்படையிலான நடவடிக்கைகள் அனைத்தும், தொடுவது, வார்த்தைகள், சைகை, ஆபாசப் படங்களைக் காட்டுவது, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திப் பாலியல் செய்திகளை அனுப்புவது உட்பட, பாலியல் துன்புறுத்தல். நான் சொன்னபடி கேட்டால், வேலையில் உன்னை முன்னேற்றுகிறேன் என்று சொல்வது, கேட்காவிட்டால் வேலையிலிருந்து உன்னைத் தூக்கி விடுவேன் என்பது, வேலைச் சூழலை அச்சுறுத்தும் விதத்தில் மாற்றுவது போன்ற பல விஷ யங்களைப் பேசுவதும், செய்வதும் குற்றம்.
எது பணியிடம்?
அரசுத் துறை, தனியார் துறை, கல்வி நிலையங்கள் என்று எல்லாமே வேலையிடமாகக் கருதப்படுகிறது. பெண் ஊழியர், வேலையின் நிமித்தம் பயணம் செய்தால், ரயில்/பஸ்/விமானம்/கப்பல் போன்ற வாகனங்களும் பணியிடமாகக் கருதப்பட்டு, அங்கு அந்த ஊழியருக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலையும் நிறுவனம் கணக்கில் எடுக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது. நீ பஸ்ஸில் போகும் போது தானே நடந்தது? ஆபிசில் இல்லையே? நாங்கள் ஏன் அதற்கு மெனக்கெட வேண்டும் என்று யாரும் கேட்க முடியாது. கூடுதலாக, நிலைக்குழு தனது பரிந்துரையில், அலுவலகம் போக, வர நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கும் வாகனம் கூட, பணியிடமாகக் கருதப்பட்டு, ஊழியரின் பாதுகாப்புக்கு நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இத்தகைய வாகனங்களில் குற்றம் நடந்தது என்பது நமக்கு நினைவிலிருக்கும்.
யாருக்கெல்லாம் இம்மசோதா பயன்படும்?
அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், அப்ரெண்டிஸ், மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், நோயாளிகள் ஆகியோர் இதைப் பயன்படுத்தலாம். முதலாளி முதல் சக ஊழியர் வரை மட்டுமல்ல, வேலை தொடர்பாக பணியிடத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள், மாணவிகள் என் றால் ஆசிரியர், ஆராய்ச்சி கைடு, நோயாளிகள் என்றால் மருத்துவர், மருத்துவ மனை சிப்பந்திகள் போன்றவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தால், புகார் கொடுக்கலாம். மாணவிகளுக்கு சக மாணவர்கள் மூலம் கூட, பாலியல் துன்புறுத்தல் நடக்கலாம். எனவே, சக மாணவர்களையும் இதில் இணைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.
மசோதா, தேசிய மகளிர் ஆணைய பரிந்துரையை மீறி, வீட்டுப் பணியாளர்களை சட்டத்தின் வரம்புக்குள்ளிருந்து அகற்றிவிட்டது. வீட்டுப் பணியாளர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று மசோதாவில் தனியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. தனிப்பட்ட வீட்டுக்குள் நடக்கும் அத்துமீறல்களை நிரூபிப்பது கஷ்டம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. நான்கு சுவருக்குள் அத்துமீறல் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் என்ற அடிப்படை யில், வீட்டுப் பணியாளர் அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்பின. தற்போது, நிலைக்குழு, அவர்களையும் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது. வீட்டுக்குள் நடக்கும் வன்முறையை தண்டிக்க, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமே வந்து விட்ட பிறகு, நான்கு சுவருக்குள் நடக்கிறது என்ற காரணம் கூறி, சட்டத்திலிருந்து வீட்டுப் பணியாளர்களைத் தள்ளி வைப்பது, எடுபடாது என்பது உண்மைதானே?
புகார் கமிட்டிகள்:
நிறுவனங்கள் என் றால், உள் நிறுவன புகார் குழு (internal complaints committee) அமைக்கப்பட வேண்டும். அது தவிர, ஸ்தல அளவில், உள்ளூர் புகார் குழு (Local complaints committee) அமைக்கப்பட வேண்டும். புகார் கமிட்டியின் தலைவராக சீனியர் பெண்மணி நியமிக்கப் பட வேண்டும். உள் நிறுவன புகார் குழுவில் தலைவராகப் போட, அந்த நிறுவனத்தில் சீனியர் பெண்மணி இல்லை என்றால், சகோதர நிறுவனங்களிலிருந்தோ, தன்னார்வ அமைப்பிலிருந்தோ போட வேண்டும். பெண்கள் பிரச்சனைகளில் அக்கறையும், அனுபவமும் உள்ள தன்னார்வ அமைப்பு பிரதிநிதியும் இடம் பெற வேண்டும். உள்ளூர் புகார் குழுவில், கூடுதலாக, தொழிற்சங்கப் பிரதிநிதியும் போடப்பட வேண்டும். உள் நிறுவன புகார் குழு இல்லையென்றாலோ, தவறு செய்தவர் முதலாளி என்றாலோ, உள்ளூர் புகார் குழு, புகாரைப் பெறலாம் என்று மசோதா கூறுகிறது. பெறலாம் என்பதை, பெற வேண்டும் என்று மாற்ற வேண்டும்.
விசாரணை முறை
எழுத்து மூலமாகப் புகார் பெற்ற உடன், கமிட்டி, முதலில் சமரசப் பேச்சு வார்த்தை(conciliation) நடத்த வேண்டும் என்று மசோதா கூறுகிறது. சமரசம் ஏற்பட்டால், விசாரணை நடத்த வேண்டியதில்லையாம். இது சரியல்ல, சமரசத்துக்கு வரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் புகார் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும். எப்படியுமே, தண்டனை பரிந்துரைக்கும் போது, பணி விதிகளில் கூறியுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் – மன்னிப்பு கேட்பது முதல் வேலை நீக்கம் வரை- குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒன்றைப் பரிந்துரைக்கலாம். குற்றத்தின் தன்மை குறைவு என்றால், குறைவான நடவடிக்கை எடுக்கலாம். அப்படியிருக்கும் போது முதல் கட்ட நடவடிக்கையாக சமரசம் என்பது தேவையில்லை என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது.
விசாரணை, துறை விதிகளில் உள்ள படி நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தனியான விசாரணை முறை எதுவும் சட்டத்தில் இடம் பெறவில்லை. ஒரு வேளை, விதிகளை உருவாக்கும் போது, குறிப்பிடப்படலாம். ஆனால், சட்டத்திலேயே இருப்பது தான் உதவியாக இருக்கும். தவறான நடத்தை(misconduct) என் றால், துறையே விசாரிக்க முடியும் என்கிற நிலைமை ஏற்கனவே உண்டு. ஆனாலும், உச்சநீதிமன்றம், தனியான புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? புகார் கமிட்டி என்பது விசேஷமாக அமைக்கப்பட வேண்டும் என்றால், அது நடத்தும் விசாரணையும் சற்று மாற்றமாக இருக்க வேண்டும் தானே? பாலியல் பிரச்சனை களில் புகார் கொடுத்தவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் ஒன்றாக வைத்து விசாரிப்பதில் சங்கடங்கள் உண்டு. ஒருவரை ஒருவர், குறுக்கு விசாரணை, நேருக்கு நேராக செய்வதும் பிரச்சனைகளை உண்டாக்கும். தனித்தனியாக விசாரிப்பதும், ஒருவர் கேட்க விரும்பும் கேள்விகளை எழுதி வாங்கி, கமிட்டியே மற்றவரிடம் கேட்பதும் போன்ற சில வேறுபட்ட முறையை, விசாரணையின் போது கடைப்பிடிக்க வேண்டும். அந்தந்த புகார் கமிட்டியின் புரிதலுக்கும், முடிவுக்கும் இதை விடாமல், சட்டத்திலேயே விசாரணை முறை இடம் பெறுவது தெளிவை உண்டாக்கும்.
புகார் நிலுவையில் இருக்கும் போது, புகார்தாரர் கோரினால், அவரையோ, குற்றம் சாட்டப்பட்டவரையோ இடமாற் றம் செய்யலாம். புகார்தாரருக்கு விடுப்பு கொடுக்கலாம். இது, ஏற்கனவே அவருக்கு உரிமையுள்ள விடுப்புக்குக் கூடுதலானதாக இருக்க வேண்டும். இக்காலத்தில், புகார் கொடுத்தவரை இடைநீக்கம் செய்வதோ, அவர் விருப்பத்துக்கு மாறாக இடமாற்றம் செய்வதோ கூடாது என்று மசோதா முன்மொழிவது சரியானதே.
90 நாட்களுக்குள் விசாரணை முடிய வேண்டும்; கமிட்டி கொடுக்கும் பரிந் துரையை 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம்/முதலாளி நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றவில்லை என் றால் சிறை தண்டனை/அபராதம் உண்டு என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட புகார் பொய்யென் றால், புகார் கொடுத்தவர் மீதும், தவறாக சாட்சி சொன்னால், சாட்சி சொன்னவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது. இது, புகார் கொடுக்க முன்வருபவர்களைத் தயங்கச் செய்யும் என்றும், நிரூ பிக்கவில்லை என்றாலே புகார் பொய்யானதாகி விடுமா என்றும் பெண்கள் அமைப்புகளால் வலுவாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இது, விஷாகா தீர்ப்பின் சாராம்சத்துக்கு முற்றிலும் முரணானது. ஏற்கனவே, தமிழக அரசின் ஆணையில் இந்த அம்சம் இடம் பெற்ற போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, பின்னர், மகளிர் ஆணையமும் ஆட்சேபணை தெரிவித்து, இந்த ஷரத்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது, தற்போது மசோதாவில் இடம் பெற்றிருப்பது ஆபத்தானது. மற்ற சட்டங்களில் இத்தகைய பிரிவு இல்லை. குற்றம் உண்மையா, பொய்யா என்றுதான் பார்க்கப்படும். நிரூபிக்கப்பட்டால் தண்டனை, நிரூபிக்கப்படவில்லை என்றால், வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அவ்வளவு தான். குற்றம் சாட்டப்பட்டு, பின் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டவர், அடுத்து மானநஷ்ட வழக்கு வேண்டுமானால் தொடுக்கலாம். நிலைமை இப்படியிருக்க, இந்த சட்டத்தில் மட்டும், ஏன் புகார் கொடுப்பவருக்கு இந்த மிரட்டல்? நிலைக்குழு, இந்தப் பிரிவை முற்றாக நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
முதலாளி / நிறுவனத்தின் கடமை
வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில், புகார் கமிட்டி மற்றும் தொடர்புள்ள விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துவது, இக்குற்றம் நடக்காமல் இருக்க பயிற்சிகள்/கூட்டங்கள் நடத்துவது, பாதுகாப்பான வேலைச் சூழலை உருவாக்குவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட பெண் கிரிமினல் புகாரை காவல்துறையிடம் கொடுக்க விரும்பினால், அதற்கு உதவுவது போன்றவற்றையும் செய்ய வேண்டும்.
தேசிய/மாநில மகளிர் ஆணையங்கள், இச்சட்ட அமலாக்கத்தைக் கண்காணித்து, பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதையும் ஆராய வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இச்சட்டம், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம். பல்லாண்டுகளாகப் பெண்கள் அனுபவித்து வந்த, சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத இந்தக் கொடுமையை அங்கீகரித்து, பல கட்டப் போராட்டங்கள் நடத்தியபின் வந்து கொண்டிருக்கிற சட்டம். இதில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் மனுவுக்கு மேல் மனு கொடுக்கிறது என்பதற்காக இதை இணைத்தால், போட்டி புகார்கள் கொடுக்கப்படும். பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்கொள்வதன் மீதான அழுத்தம் குறையும். எனவே, இந் தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
தேவைப்படுகிற திருத்தங்களுடன் இச்சட்டத்தை நிறைவேற்றி, விதிமுறைகளை உடனடியாக உருவாக்கி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று, அமலாக்கத்தைத் துவக்க வேண்டும். சட்டம் முறையாக வந்தாலும், அதை அமல்படுத்துவதற்கான போராட்டம் காத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். இருப்பினும் வருகிற சட்டம் சிறந்த ஆயுதமாக இருப்பது, போராட்டத்தை வலுப்படுத்தும்.
- உ.வாசுகி
0 comments:
Post a Comment