முன்னுரையாக ஒரு ராஜா கதை. 2 ஜி புகழ் ராசா மீது என்ன வழக்கு? இரண்டாம் தலைமுறை அலைகற்றைகளை முறையாக ஏலம் விட்டிருந்தால் இந்திய நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய 1,76,000 கோடி ரூபாய் நட்டத்தை தவிர்த்திருக்கலாம். இதை முறையாக செய்யாமல் நாட்டிற்கு நட்டம் ஏற்படுத்தினார் என்பதுதான் குற்றச்சாட்டு. இதில் உள்ளே கொள்ளையடித்து பணத்தை சேமித்த அம்பானி வகையறாக்கள் வெளியே கும்மியடிக்க, கொள்ளைப் பங்காளி ராசா மட்டும் கம்பி எண்ணுகிறார். இதுவொன்றும் நமது நாட்டிற்கு புதிதல்ல என்று ஒரு தகவல் புதிதாக வெளிவந்துள்ளது.
இனி கதைக்கு வருவோம். நீதிமன்றத்தில் ஒருவன் கடுமையான குற்றம் செய்தவன் என வாதப்பிரதிவாத ஆதாரங்களுடன் நீதிபதி அறிவிக்கிறார். அந்த குற்றத்துக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம். ஆனால், சகல டுபாக்கூர் வேலைகளையும் தெரிந்த அந்த குற்றவாளி “மன்னிப்பு” கோரு கிறான். அவனது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு நீதிபதி அவனுக்கு வெறும் 20 நாள் தண்டனை மட்டுமே என அறிவிக்கிறார். இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என நீங்கள் நினைத்தால், கேலிப்புன்னகையோடு இந்திய அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளாத கூமுட்டை என அறிவிக்கப்படுவீர்கள். (சார்.. போங்க.. சார் துட்டு வாங்கிட்டு அப்துல் கலாமுக்கே கைது வாரண்ட் கொடுத்த நீதிமான்களை எங்களுக்கு தெரியும் என நீங்கள் புலம்புவது காதில் விழுகிறது.)
இந்த குறைந்தபட்ச தண்டனையைக்கூட எதிர்த்து அந்த குற்றவாளியால் மேல்முறையீட்டிற்குச் செல்ல முடியும் என்பதுதான் நமது நீதித்துறையின் பெருந்தன்மை. இரண்டு தனிநபர்களின் சார்ந்த தாவாக்களில் இப்படியான நியதிகளுக்குச் சில நியாயங்கள் இருக்கலாம். ஆனால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களை இப்படி மன்னிக்கலாமா என்பதுதான் கேள்வி.
அந்த கார்ப்ரேட் கம்பெனி யோக்கியவான்கள் வேறுயாருமல்ல. உழைப்பால் உயர்ந்த உத்தமர்களான அம்பானி குழுமத்தினர்கள்தான். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே. ஹரிநாராயணன் தலைவராக இருந்த காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் 2008ல் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி குறித்து வெளியிட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எந்த ஒரு புதிய திட்டங்களைத் துவக்கினாலும் இந்த ஆணையத்திடம் பைல் அண்டு யூஸ் கைடுலைன்ஸ் படி (இன்சூரன்ஸ் சட்டம் 1938 பிரிவு 102/டி படி) முறையாக அறிவிக்க வேண்டும். அப்படித் தவறினால் அது சட்ட மீறலாகும். இந்த சட்ட மீறல்களுக்கு தண்டணையாக ஒவ்வொரு பாலிஸிக்கும் 5 லட்சம் அபராதம் விதிக்கலாம்..
இத்தகைய பின்னணியில்தான் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆணையத்தின் அனுமதி இல்லாமல் ரிலையன்ஸ் ஹெல்த் வைஸ் பிளான் என்ற பாலிசி திட்டத்தை அறிமுகம் செய்கின்றனர். இதன் மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலிஸியை சேர்த்துள்ளனர். இந்த கடுமையான சட்ட மீறல்களை எந்த தைரியத்தில் அம்பானி குழுமம் செய்தது என தெரியவில்லை. இதன் மூலம் 17 ஆயிரத்து 500 கோடியை ரிலையன்ஸ் குழுமத்தின் மீது அபராதம் விதித்திருக்க முடியும். இதையறிந்த ஆணையம் 2009 ஏப்ரல் 13 ஆம் தேதி ஒரு விதிமீறல் விளக்க நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதற்கு ரிலையன்ஸ் குழுமம் கொடுத்த விளக்கம் சரியல்ல, ஆதாரப்பூர்வமானது அல்ல என ஆணையம் நிராகரித்தது. அப்படி நிராகரித்த ஆனையம் 17 ஆயிரத்து 500 கோடி அபராதம் விதிக்க வேண்டிய அம்பானி குழுமத்திற்கு விதித்த அபராதம் வெறும் 20 லட்சம் மட்டுமே.
அதாவது ஒரு பாலிஸிக்கு 5 லட்சம் அபராதம் விதிப்பதற்குப் பதிலாக போனால் போகட்டுமென்று நேர்மையுடன் ஆணையம் விதித்த அபராதம் 5 ரூபாய் 70 காசு மட்டுமே. இதைவிடக் கொடுமை என்னவெனில் 2009 – 2010 ஆண்டில் மட்டும் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட இணையயதள தகவலில் புகார்கள் அதிகம் வந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் முதலிடம் பிடித்திருந்தது. மொத்தம் பெறப்பட்ட 1,86,615 புகார்களில் 65,160 புகார்கள் ரிலையன்ஸ் நிறுவனம் குறித்ததாகும்.
ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது இத்துனை புகார்களை தெரிந்து வைத்திருந்த ஆணையம் எப்படி இவ்வளவு குறைந்த அபராதத்தை விதித்தது என தெரியவில்லை. இடையில் நடந்தது என்ன? தலையிட்டது யார்? அல்லது யார் யார்? இந்த கொடூரக் கொள்ளை ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? இது அரசு கஜானாவுக்கு வரவேண்டிய பணம்தானே? இது அரசுக்கு நட்டம் இல்லையா? இந்த நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு திகார் சிறை பயணம் இல்லையா? இந்த பாலிஸிக்கு உண்டான நலச் சலுகைகள் என்னானது? அரசுக்கு கொடுக்க வேண்டிய டிவிடண்ட் என்னானது? அதுவும் சேர்த்து கொள்ளையடிக்கப்பட்டதா? பாலிஸிதாரர்களுக்கு அவர்களுடைய பணம் சென்றடைந்ததா? அவர்களுக்கும் அரசுக்கு போட்ட அதே பட்டை நாமம்தானா? மக்கள் கட்டிய பணத்திற்கான வட்டித்தொகை என்னானது? இந்த கேள்விகளுக்கு இதுவரை யாருக்கும் பதில் தெரியாது.
தங்கள் பணத்தை மிகுந்த நம்பிக்கையுடன் கட்டிய அப்பாவிகளின் கண்ணீர், அவர்களது புலம்பல்கள் காற்றோடு கரையுமோ? கொள்ளையடிப்பவர்கள் நாட்டின் உதாரண புருடர்களாய் மாறூவதும், அவர்களை நமது ஊடகங்கள் கொண்டாடுவதும் இன்னும் எத்தனை நாளைக்கு?
- ரமேஷ் பாபு
ஆதாரம் : டெக்கான் கிரானிக்கல்
அம்பானியின் கள்ளக்கூட்டுக் கொள்ளை, இந்திராவின் "ரேயான் இறக்குமதி" பாலிசியில் தொடங்கி, ஆங்கில நாவல் "ஆயில்" கதையில் வருவது போல தன் சொந்தக் கம்பனியின் ஷேர் மதிப்பைத் தானே குறைத்து, தான் பங்கை அதிகமாக்கிய பின்பு மதிப்பை "கூட்டி"க் கொ(ட்)டுகிற நியாயமில்லா தொழிலால் வளர்ந்தது. வளர்ப்பு அப்படி, தேளிடமிருந்து, தேனா கிடைக்கும்?
ReplyDelete