முதலாளித்துவத்தின் தோல்வி, பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர்களின் சர்வாதிகாரம் போன்ற அம்சங்களால் மார்க்சின் மூலதனம் நூலை வாங்கிப் படிக்க முற்பட்டதோடு, அமைப்பு ரீதியாகக் கம்யூனிசத்தை நோக்கி சர்வதேச அளவில் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற உலக ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் மாநாட்டில் இதன் தாக்கம் இருந்தது. சோசலிசமே வருங்காலம் என்ற முழக்கத்தை உச்சரிக்கும் உதடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். ஏகாதிபத்திய வடிவத்தை எடுத்துள்ள முதலாளித்துவ அமைப்புதான் ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள் மற்றும் உலகில் நடக்கும் போர்கள் போன்றவற்றிற்குக் காரணமாக அமைந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது அமைப்பை மோசமாக நிர்வாகம் செய்ததால் ஏற்படவில்லை. அமைப்பே நெருக்கடி என்பதுதான் தற்போதுள்ள பிரச்சனை. மனிதகுலத்தின் தேவைகளை நிறைவேற்ற ஒருபோதும் முதலாளித்துவத்தால் முடியாது என்று மாநாட்டு நிறைவாக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்க இளைஞர்களின் மனநிலையை அந்நாட்டின் இளம் கம்யூனிஸ்ட் லீக்கின் தலைவரான லிசா பெர்க்மென், அமெரிக்க முதலாளித்துவ அமைப்பு தங்களைத் தோல்வியுறச் செய்துவிட்டது என்று எங்கள் நாட்டு இளைஞர்கள் தொண்டை கிழிய முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தை இருளடையச் செய்து விட்டது முதலாளித்துவம். கல்விக்கான வாய்ப்புகள் இல்லை. பொருளாதாரம் நிலையாக இல்லை. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களை வன்முறைக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும்போது எக்கச்சக்கமான கடன்களைச் சுமந்து கொண்டே மாணவர்கள் வெளியேறுகிறார்கள். இதனால்தான் மேம்பட்ட உலகம் வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.
அமெரிக்காவின் கைப்பற்றுவோம் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று வருகிறார்கள். அவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் இளம் கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினர்களோடு கைகோர்த்து போராட்டக்களத்தில் உள்ளனர். சிகாகோவைக் கைப்பற்றுவோம் போராட்டத்தில் ஏராளமான இளம் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இளம் கம்யூனிஸ்ட் பள்ளிகள் ஐந்து இடங்களில் துவக்கப்பட்டுள்ளன. மார்க்ஸ் மற்றும் லெனின் கோட்பாடுகள், தொழிலாளர் இயக்கம், இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி இளம் கம்யூனிஸ்டுகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. உறுப்பினராவதற்கு ஆன்லைன் பதிவு செய்யலாம் என்ற லீக்கின் அறிவிப்பு நூற்றுக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாக்கியுள்ளது.
ரஷ்யா
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மோசடித் தேர்தலுக்கு எதிராகக் கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு ஆகியவை ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏராளமான இளைஞர்கள் புதிதாக இணைந்துள்ளனர் என்பதைக் காட்டியது. தேர்தல் பிரச்சாரங்களிலும், தற்போது மோசடிக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களிலும் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ஏராளமான வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியே ஆளுங்கட்சி வெற்றி பெற்றது என்று பல தரப்பினரும் கூறிவருகிறார்கள். அதை மீறி கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுமார் 20 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் பெற்ற 12 விழுக்காடுகள், தற்போது அதிகரித்ததற்கு ஏராளமான இளைஞர்கள் ஆதரவாக வாக்களித்தது முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது.
ஜப்பான்
இரண்டு பெரிய கட்சிகளுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் தோல்வியுற்றுள்ளன என்ற கருத்து ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் உருவாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் கணிசமான முன்னேற்றத்தை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அடைந்துள்ளது. சில புதிய நகரங்களில் கட்சியின் வேட்பாளர்கள் மேயர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாணங்களில் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டிருந்தன. ஃபுகுசிமா போன்ற மாகாணங்களில் முன்பை விட அதிகமான அளவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்வாகியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல்களிலும் சரி, மாகாணங்களுக்கான தேர்தல்களிலும் சரி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் இளைஞர்களின் பங்கேற்பு அதிகமாக இருந்தது.
ஐரோப்பா
ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுமே நெருக்கடியில் சிக்கியுள்ளன அல்லது நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. இதில் ஜெர்மனி மற்றும் பிரான்சும் கூட தப்பவில்லை. இந்த நாடுகளில் அரசுகளின் பொறுப்பற்ற கொள்கைகளை எதிர்த்த போராட்டத்தில் லட்சக்கணக்கான ளைஞர்கள் பங்கேற்று வருகிறார்கள். இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் முழக்கமாக உள்ளது. வருங்காலம் சோசலிசத்திற்கே என்ற முழக்கம் ஐரோப்பிய யூனியனில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் உரக்க ஒலிக்கிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களோடு இணைத்துப் பார்த்தால் இளைஞர்களின் எண்ணங்களுக்கு வடிவம் கிடைக்கையில் முதலாளித்துவ சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கப்படும் என்று அமெரிக்க இளம் கம்யூனிஸ்ட் லீக்கினர் தெரிவிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment