கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பொறுப்பு வகித்த ப.சிதம்பரம், தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் வாயைத் திறந்தாலே 9 சதவீத வளர்ச்சி, 10 சதவீத வளர்ச்சி என்று கதைத்து வந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் எல்லோருமே கையைப் பிசைந்துகொண்டு இருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல்செய்த இடைக்கால பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையும், அதைத்தொடர்ந்து தொழில்துறையில் பெருமளவிற்கு மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்ற தகவல்களும் நாட்டின் பொருளாதார நிலை குறித்த அபாயச்சங்கை ஊதிக்கொண்டு இருந்தன. இப்போது “உலக அளவில் பொரு ளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் சூழலில், இந்தியப் பொருளாதாரமும் கடுமையான மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதைத்தடுத்து நிறுத்தும் வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது” என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கைவிரித்துள்ளார். ‘நிலைமை மோசமடைவதை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை’ என்று அவர் பகிரங்கமாகக் கூறினார்.
தில்லி பொருளாதார சிறப்புக்கருத்தரங்கு புதன் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வை துவக்கிவைத்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உலகம் முழுவதிலுமுள்ள மிகப்பெரும் வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களைக் கொண்டிருக்கும் நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் 2008ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு எழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன என ஒப்புக்கொண்டார். கடுமையான முறையில் நிதி மற்றும் பணக்கொள்கைகளை அமல்படுத்தியபோதிலும், இந்த நாடுகளில் பொருளாதார மீட்சி இன்னும் ஏற்படவில்லை எனக்குறிப்பிட்ட அவர், உலக அளவில் நிலவும் இத்தகைய கடுமையான நெருக்கடி, இந்தியாவிலும் கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கு கடும் பிரச்சனையாக மாறியிருக்கிறது என்றார். நிலைமைகள் இதே விதத்தில் செல்லுமானால், அடுத்து வரும் காலகட்டத்தில் எழுகிற நெருக்கடியை எதிர் கொள்ளும் வாய்ப்புகள் நம்மிடம் மிகக்குறைவாகவே உள்ளன என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2011-12ம் நிதியாண் டின் இரண்டாவது காலாண்டில் 6.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 8.4 சதவீத மாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார நெருக்கடியின் பிடியில் இந்தியாவும் சிக்கியுள்ளது என்பதையும் உணர்த்துகின்றன. இந்த நிலையில் ஏற்கெனவே 9 சதவீதம் அளவிற்கு இவர்களால் சொல்லப் பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதம், தற்போதைய நிதியாண்டில் 7.5 சத வீதம் அளவிற்கே இருக்கும் என்று வெகுவாகக் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி தாக்கிய போது, இதர நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த மீட்பு நிதி என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுத்ததைப் போலவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் ரூ.1.86 லட்சம் கோடி அளவிற்கு மீட்பு நிதியை அள்ளிக்கொடுத்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத் தியில் 3 சதவீதம் ஆகும். இந்த நிதியின் மூலம் கடந்த மூன்றாண்டு காலமாக உள் நாட்டு தொழில்துறை ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது.
மேலும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “ யூரோ நாணய மண்டலத்தில் ஏற்பட்டுள்ள, தீர்வு எதுவும் கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருக்கிற நெருக்கடியின் விளைவாக, இந்தியாவிற்குள் அந்நிய முதலீடு வருவது குறைந்துள்ளது என்றும், இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது” என்றும் கூறினார். அமெரிக்க டாலர் ஒன்றுக்கு ரூ.53.75 என்ற அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு மிகக்கடுமையாக சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் குறித்து குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, இந்தபிரச்சனை கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருக்கிறது என்று கூறினார்.
ஆபத்து தெரிகிறது. வருமுன்னர் தற்காத்திருக்க வேண்டும். சரி, வந்தபிறகாவது எதிர்கொள்ள கொள்ள யோசனைகள் வேண்டாமா? அதை விடுத்து, இப்படி இயலாமைகளைச் சொல்வதும், புலம்புவதும்தான் இந்த நாட்டின் நிதியமைச்சரால் இப்போது முடியும் போலிருக்கிறது. மேலும் ருபாயின் மதிப்பு வீழ்வதையும், விலைவாசி தாறுமாறாய் உயர்வதையும் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றால் எதற்கு அவருக்கு நிதியமைச்சர் என்கிற பொறுப்பு?
நிலைமையை எதிர்கொள்ள, உள்நாட்டில் மிகப்பெருவாரியான எண்ணிக்கையில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் தெரிவித்த ஆலோசனைகளை புறந்தள்ளிய மன்மோகன்சிங் அரசு, இதற்கு மாறாக, பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் விதத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளை இன்னும் தீவிரமாக அமல்படுத்தியது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையான மந்த நிலையை நோக்கி கொண்டு சென்றுள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சீரழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கிறது.
0 comments:
Post a Comment