‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண்டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’
_____________________
இந்திய விடுதலைப்போராட்ட பேரியக்கத்தின் போது காங்கிரஸ் கட்சி, தவணை முறையில் சலுகை கேட்டு மனு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ‘பூரண விடுதலை’ என்ற முழக்கத்தை முதன் முதலாக முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
நாடு விடுதலை பெற்ற பிறகு மாநிலங்களின் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்த போது, தட்சிணபிரதேசம் போன்ற காரிய சாத்தியமற்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் மொழி வழி மாநிலங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகள்தான்.
இந்திய ஒன்றியத்தில் தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, தனித்துவம் பாதுகாக்கப்பட மொழி வழி மாநிலங்களே சிறந்த தீர்வாக அமைய முடியும் என்பது பொதுவுடைமை இயக்கத்தின் தொலை நோக்குப் பார்வை.
1952ம் ஆண்டு தேசத்தின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் ஒரு பகுதி, ஆந்திராவின் பெரும் பகுதி, கர்நாடகத்தின் ஒரு பகுதியைக் கொண் டதாக சென்னை ராஜதானி இருந்தது. அந்தத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தோழர் பி.ராமமூர்த்தி சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் ஏற்பட்டிருந்த உடன்பாட்டின் அடிப்படையில் தந்தை பெரியார், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. நியாயமாக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்த ராஜாஜி கட்சி தாவிகளின் உதவியோடு காங். ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.
சென்னை ராஜதானி சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தோழர் பி.ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென்று பி.ராமமூர்த்தி தலைமையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல்கொடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தமிழிலும், கேரளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மலையாளத்திலும், ஆந்திரத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தெலுங்கிலும் இந்த கோரிக்கைக்காக குரல் கொடுத்தனர். இந்த தொடர் போராட்டத்தின் காரணமாகவே ஆந்திர, கேரள மாநிலங்கள் உருவாகின.
அதன்பின்னரும் கூட சென்னை ராஜதானி என்றேஅழைக்கப்பட்டு வந்தது. தமிழ் நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக் கோரி காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசு இதற்கு உடன்பட மறுத்தது. சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப்பந்தலுக்கு நேரடியாக வந்து பி.ராமமூர்த்தி உண்ணா விரதத்தை கைவிடுமாறும், அனைவரும் சேர்ந்து தொடர்ந்து போராடலாம் என்றும் கூறினார்.
‘இன்றைய ஆட்சியில் வாழ்வதை விட நான் சாவதே மேல்’ என்று கூறிவிட்டார் சங்கரலிங்கனார். 77 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அவரது மரண சாசனத்தின்படி அவரது உடல் கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மதுரை தத்தனேரி மயானத்தில் கம்யூனிஸ்ட்டுகளால் இறுதி நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
சென்னை தமிழகத்தோடு தக்கவைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது அவரது வரலாற்றாசிரியர் என்.ராமகிருஷ்ணன் கூறும் தகவல்.
1953ம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது தோழர் பி.ராமமூர்த்தி ஒரு மணி நேரம் தமிழிலேயே நுட்பமான பொருளாதார விஷயங்களை எடுத்துரைத்தார். விவாதத்திற்கு பதிலளித்த சி.சுப்பிரமணியம், தமிழில் பொருளாதார பிரச்சனைகளை விளக்கமுடியும் என்பதை ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என்று கூறித்தான் தமது பதிலுரையை துவக்கினார்.
1956ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழி என்று பிரகடனப்படுத்தும் சட்டமுன் வடிவை நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த பி.ராமமூர்த்தி எழுந்து, இந்நாள் தமிழ் நாட்டின் திருநாள் என்று நெஞ்சம் நெகிழ வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் ஆட்சிமொழி ஆனால் மட்டும் போதாது. பயிற்று மொழி ஆகவும் வேண்டும் என்றார். ஆனால் இன்றுவரை அது முழுமையாக நிறைவேறவில்லை என்பது நெஞ்சில் முள்ளாய் உறுத்தும் நிஜம்.
நெய்வேலியில் அனல் மின்நிலையம் அமைந்ததிலும், திருச்சியில் ‘பெல்’ நிறுவனம் அமைந்ததிலும், சேலத்தில் உருக்காலை அமைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை தமிழக தொழில் வளர்ச்சியின் வரலாறு அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர்.
மதவெறி சக்திகளால் இன்று முடக்கப் பட்டுள்ள சேதுக்கால்வாய் திட்டம் குறித்து 1967ம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மகத்தான தலைவர் பி.ராமமூர்த்தி.
1952ம் ஆண்டு பெரியாறு அணையிலிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீரில் இருந்து மின் உற்பத்தி செய்யும் புனல்மின் திட்டம் உருவாக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த ராஜாஜி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ராமமூர்த்தியை அழைத்து இது குறித்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதல்வராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையிடம் பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 2பைசா தருவதென்று பேசி, அதற்கு பட்டம் தாணுப் பிள்ளையை சம்மதிக்கச் செய்தார் பி.ராமமூர்த்தி.
இது குறித்து பி.ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இன்றும் அனைவரும் மனதில் நிறுத்தவேண்டிய ஒன்றாகும்.
‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண் டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’
1957ம் ஆண்டு தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை கேரளத்தில் அமைந்தது. கேரளத்திலிருந்து அரபிக்கடல் நோக்கிப் பாய்ந்த பரம்பிக்குளம், ஆழியாறு நதிகளை தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடவேண்டும் என்பது நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும். இது குறித்து முதல்வராக இருந்த இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்களிடம் பி.ராமமூர்த்தி பேசினார். இரு பெரும் தலைவர்களின் முயற்சியால் உருவானதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம். ஆழியாறு பரம்பிக்குளம் நதிகளில் அணை கட்டி நீரை தேக்கி வைத்து, உபரி நீரை தமிழகத்திற்குத் தருவது என்றும் அதற்காகும் செலவுகளை இரு மாநில அரசுகளும் சமமாக ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இரு அரசுகளும் செலவினை ஏற்று அணை கட்டப்பட்டது. இதன் மூலம் கோவை, ஈரோடு மாவட் டங்களுக்கு பாசனவசதி கிடைத்தது.
ஒன்றாக இருந்த பஞ்சாப் மாநிலம், பஞ்சாப், ஹரியானா என்று பிரிக்கப்பட்ட, பிறகு சண்டிகர் நகர் யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. இருதரப்பிலும் கொந்தளிப்பான சூழ்நிலை. அப்போது அப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் துடன் பெரும் பங்காற்றியவர் தோழர் பி.ராம மூர்த்தி.
அசாமில் பிரிவினை கோஷம் எழுந்த போதும் தோழர் பி.ராமமூர்த்தி மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க கட்சியின் சார்பில் முன்னின்றார். அவரது சக தோழரும் போராளியுமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித்து வரைந்துள்ள சொற்சித்திரம் இது: ‘நாட்டை எதிர் நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளை குறிப்பாக தேசிய பிரச்சனைகளை பி.ஆர். வெகுவிரைவில் புரிந்துகொள்வார். பஞ்சாப் மாநில சீரமைப்பிலும், அதிலிருந்து தோன்றிய பிரச்சனைகளிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அசாம் குறித்து அவர் எழுதிய பிரசுரமானது அச்சமயத்தில் கட்சியின் கண்ணோட்டத்தை விளக்கியது.’
1978ம் ஆண்டு சீமென்ஸ் என்ற ஜெர்மானிய நிறுவனம் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தை விழுங்க முயற்சி செய்தபோது அதை எதிர்த்து சத்திய ஆவேசத்துடன் போராடியவர் பி.ஆர். அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தனியொரு நூலாகவே வெளிவந்தது. இன்றைக்கு சில்லரை வர்த்தகத்தையும் கூட விழுங்க வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வாய்பிளந்து வருகின்றன. நடை பாவாடை விரித்து நலுங்கு பாடுகிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.
தோழர் பி.ராமமூர்த்தி உயர்த்திப்பிடித்த தேசபக்த, வர்க்க ஒற்றுமை பதாகையை ஏந்தி தேசத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க போராடுவதே அவருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.
- மதுக்கூர் ராமலிங்கம்
(இன்று தோழர்.பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவுநாள்)
நல்லிணக்கத்திற்கான நல்ல மனிதரை அதுவும் தமிழகத்தை சார்ந்த ஒரு மாமேதையை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி. அதுவும் இன்றைய சூழலில் நினைவு கூறுவது பொருந்தத்தக்கது.கம்யூனிஸ்ட்டுகளின் ஒவ்வொருவரின் வாழ்விலும் மகத்தான சாதனைகள், வாழ்க்கைக்குத்தேவையான பல அனுபவங்களும் புதைந்து கிடக்கிறது. கண்டிப்பாக கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறுகளை படிப்போம் நான் யார் என படிப்போம் உலகத்தெளிவு பெறுவோம்.
ReplyDeleteகாலத்திற்குத்தேவையான தலைவர்களின் வரலாறு.
ReplyDelete