“கால்பந்து மைதானங்கள் கொலைக்களங்களாகவே இருந்தன. கல்லெறிந்தும், தூக்கில் போட்டும் கொலைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். இவற்றையெல்லாம் நான் நேரடியாகப் பார்த்தேன்” என்கிறார் ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹமீதுல்லா யூசுப் சாரி. கடந்த வாரத்தில் புதுதில்லியில் உள்ள நேரு மைதானத்தில் தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில் இறுதியாட்டம் வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பிம்பத்தை வைத்திருந்த புதுதில்லிவாழ் மக்களுக்கு அந்த அணி மட்டுமல்ல, போட்டியைப் பார்த்து ரசிக்க ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருந்த கால்பந்து ரசிகர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். போரால் சீர்குலைந்து கிடக்கும் அந்த நாட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் ரசிகர்கள் புதுதில்லிக்கு வந்திருந்தனர்.
இறுதியாட்டத்தில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் விளையாடியது. இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இருந்தாலும், எந்தவித ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கும் நாட்டிலிருந்து வந்திருந்த அணியின் போராட்ட குணம் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டது. அந்த அணி இறுதியாட்டம் வரை முன்னேறியதற்கு கோல் கீப்பர் ஹமீதுல்லா யூசுப்சாரியின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
தாலிபான் ஆட்சிக்காலத்தைக் கண்டவர் யூசுப்சாரி. பெரும் வன்முறையைக் கண்டு அவரது குடும்பத்தில் பெரும்பான்மையானவர்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு இடம் பெயர்ந்தனர். ஆனால் கம்பளிகளைத் தயாரிக்கும் தொழிலைச் செய்து கொண்டே ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தொடர்ந்து வசிப்பது என்ற முடிவை ஹமீதுல்லா எடுத்ததற்கு கால்பந்து ஆட்டம் மீது அவருக்கு இருந்த காதலே காரணமாகும். ஒருமுறை அவரது இருப்பிடம் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அவரது குடும்பத்தினர் சிலர் அதில் கொல்லப்பட்டனர். ஹமீதுல்லா உயிர் பிழைத்தார்.
ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் அணிக்கே இத்தகைய வாழ்க்கை அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஹமீதுல்லாவைப் போலவே, அணியில் உள்ள ஒவ்வொரு ஆட்டக்காரரும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதினர். அதில் பலரும் தனித்து விடப்பட்டவர்கள் போலப் பல காலம் இருந்தனர். ஏராளமான இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சுதந்திரமாக இயங்குவதே கால்பந்து விளையாடுவதுதான் என்றிருந்தது. இதனால்தான் கால்பந்து அணியின் ஒவ்வொரு வெற்றியும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு தோல்வியும் கற்றுக் கொள்வதன் அங்கமாகப் பார்க்கப்பட்டது.
ஆட்டக்காரர்களுக்கு உத்வேகம் அளிக்க புதிய உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் புதிதாக கேப்டன் நியமிக்கப்படுகிறார். இது குறித்துக் கருத்து தெரிவிக்கும் அணியின் பயிற்சியாளர் முகம்மது யூசுப் கர்கார், இது ஆட்டக்காரர்களுக்கு பெரும் அளவில் உத்வேகம் அளிக்கிறது. 90 நிமிடங்களுக்கு அவர் தலைமைப் பொறுப்பேற்று விளையாட முடியும். பொறுப்பானவராக அவர் மாற முடிகிறது. சக ஆட்டக்காரர்களுக்கு மரியாதை கொடுக்கவும், அன்புடன் அணுகவும், புரிந்து கொள்ளவும் இது உதவுகிறது என்கிறார்.
கடந்த தலைமுறை ஆப்கானிஸ்தான் கால்பந்து ஆட்டக்காரர்கள் இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். 1980களில் பல மாணவர்கள் இந்திய கால்பந்து கிளப்புகளில் இடம் பிடித்து விளையாடினர். அப்துல் ஜாகிர் என்ற ஆட்டக்காரர் தில்லி கால்பந்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவராவார். அவரால் வேறு எந்த கால்பந்து கிளப்பிலும் இடம் பெற்றிருக்க முடியும். மைதானத்தில் அவரது வேகத்தைப் பார்த்து அசந்து போனவர்கள் உண்டு. ஆனால் அவர் தில்லியைச் சேர்ந்த மூன்லைட் கால்பந்து கிளப்பில் தொடர்ந்து விளையாடி வந்தார். தற்போது அணியில் இடம் பெற்றுள்ள பலர் ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடுகிறார்கள். ஷாரிட்யார் என்ற ஆட்டக்காரர் ஜெர்மனியின் லீக்கில் விளையாடுகிறார். தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் அவரது திறமை ரசிகர்களின் கவனத்துக்கு உள்ளாகியது.
தில்லியில் நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணியை உற்சாகப்படுத்த வந்திருந்த ரசிகர்களில் ஜாஹ்ரா மஹ்மூதியும் ஒருவராவார். அவர்தான் ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்து அணியின் கேப்டன். தாலிபான்களின் ஆட்சி முடிவுற்றபிறகு சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற முதல் தலைமுறைப் பெண்களில் இவரும் ஒருவர். எங்கள் நாட்டில் பெண்கள் கால்பந்து விளையாடுவது என்பது புதிய அம்சமாகும் என்கிறார் அவர். தங்கள் பெற்றோர்கள் சம்மதிக்காவிட்டாலும், அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகக் கால்பந்து விளையாடுபவர்களும் உண்டு.
பெண்களின் பங்கேற்பை வெறும் விளையாட்டாகப் பார்க்காமல் சமூக ரீதியான மாற்றங்களாகவே பலரும் பார்க்கிறார்கள். தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியை தொலைக்காட்சிக்காக வர்ணனை செய்ய வந்திருந்த சமீர் பயாத், யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். எங்கள் நாட்டு மக்கள் கொண்டாடுவது நிச்சயம் என்று இறுதியாட்டத்திற்குப் பிறகு குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தான் நட்சத்திர ஆட்டக்காரர் பலால் அரிசோ நார்வேயில் குடியேறியிருக்கிறார். ஆனால் தனது தேசிய அணிக்காக விளையாடிக் கொண்டிருப்பவர். 22 வயதாகும் இவர் நார்வேயில் உள்ள அஸ்கெர் கால்பந்து கிளப்பில் இடம் பெற்றிருக்கிறார். நார்வே கிளப்பில் விளையாடுவது பணத்திற்காகவா என்ற கேள்வியை சிலர் அவரிடம் எழுப்பியபோது, பணம் இரண்டாம் பட்சம்தான். எங்கள் நாட்டு மக்களின் முகங்களில் புன்னகையைத் தவழச் செய்வதற்காகவே நாங்கள் விளையாடுகிறோம். காயங்களை விளையாட்டால் குணப்படுத்த முடியும் என்பதுதான் எங்களுக்கு உத்வேகம் அளிக்கும் அம்சமாக இருக்கிறது. எங்கள் நாட்டை மீண்டும் கட்டியமைக்க கால்பந்து மூலம் எங்களால் முடிந்த ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோம் என்று பதிலளித்தார்.
0 comments:
Post a Comment