கொண்டாட்டங்களை விரும்பாத மனித மனம் இருக்க முடியுமா? பண்டிகைகளையும், திருவிழாக்களையும் நாளும் கிழமைகளையும் கொண்டாடிப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது. வேட்டை நாயாய் விரட்டிக் கொண்டேயிருக்கும் வறுமையையும், வாழ்க்கையையும் அன்றைக்கு ஒரு பொழுதாவது வென்று பார்த்துவிடும் முயற்சியின் வெளிப்பாடுதானே இந்தக் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும்.
மற்ற எல்லாக் காலங்களைக் காட்டிலும், கொண்டாட்டக் காலங்களில் மனிதர்களின் அன்பு அபரிமிதமாய் ஊற்றெடுத்து பூரிக்கிறது. தனக்கென்று மட்டும் வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் எதையாவது வாரி வழங்குகிறது, வாழ்த்துக்களாலும் பரிசுகளாலும் சகமனிதனை திணறடித்து விடுவது இது போன்ற கொண்டாட்டத் தருணங்களில்தானே அதிகமாய் சாத்தியப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பெரியவர்களை காட்டிலும், குழந்தைகளுக்குத்தான் விழாக்காலங்களில் புதுசா றெக்கை முளைத்து விடுகிறது. பள்ளிக்குப் போக வேண்டிய தொல்லை இல்லை என்கிற உற்சாகத்தில் பட்டாம்பூச்சிகளாகி சிறகு விரித்து பறக்கிறார்கள் குழந்தைகள். சின்னச்சின்ன பரிசுகளைக் கொடுத்து சக குழந்தைகளை சிலிர்க்க வைத்துவிடுகிறார்கள். காக்கா கடி கடித்து பலகாரங்களை பரிமாறிக் கொள்கின்றார்கள். இந்த சந்தோசத்தை அடைய பெற்றோர்களை படாத பாடுபடுத்தியும் விடுவார்கள் சமயத்தில் தாங்கள் விரும்பியதை அடைவதற்காக அழுது அடம் பிடித்து கையில் கிடைப்பதை போட்டு உடைத்து.. வீட்டையே ரணகளமாக்கி விடுகிற குழந்தைகளும் உண்டு. இதெல்லாமுமே தாங்கள் விரும்பியதை அடைவதற்காகத்தான்.
அப்படி ஒரு சிறுமிதான் ரஸியா. தான் விரும்பிய தங்க மீனை வாங்குவதற்காக அவள்படும் பாடுகளும், அதனூடே கடந்து செல்லும் துன்பமிக்க மனிதர்களும் நிறைந்த படம்தான் தி ஒயிட் பலூன் (The White Baloon).
புத்தாண்டை வரவேற்க நகரமே உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம்தான் புத்தாண்டு பிறக்கப்போகிறது. அதற்கான அறிவிப்பும் வானொலிப் பெட்டியில் வந்து கொண்டேயிருக்கிறது. புத்தாண்டை சந்திக்கவும் கொண்டாடவும் கேக்குகளையும் விதவிதமான இனிப்புகளையும் வாங்கிக் கொண்டு எல்லோரும் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நமது கதாநாயகியான ரஸியா, கையில் ஒரு பலூனை வைத்துக்கொண்டு இனிப்புகளும் மீன்களும் விற்கும் கடை ஒன்றின் முன்பு நின்று கொண்டிருக்கிறாள். அவளைத் தேடிக்கொண்டு வரும் தனது தாயிடம் அந்தக் கடையில் இருக்கும் தங்க மீனை வாங்கித்தருமாறு கேட்கிறாள் பேசாமல் வா என்று அதட்டி விட்டு செல்லும் தாயையே ஏக்கத்துடன் பின் தொடர்கிறாள். நம்ம வீட்டுலேயே நிறைய தங்க மீன் இருக்கே என்று தட்டிக்கழிக்கும் தாயிடம் போம்மா அதெல்லாம் ஒல்லிக் குச்சியாட்டம் இருக்கு... கடையில இருக்கும் மீன் குண்டா அழகாயிருக்கு அது நீந்தும் போது டான்ஸ் ஆடுற மாதிரியே இருக்கு என்று சிணுங்குகிறாள்.
கண்ணைக் கசக்கிக்கொண்டே அழும் தங்கைக்காக அவளது அண்ணன் தாயிடம் பரிந்து பேசுகிறான். நச்சரிப்பு தாங்காத தாயும் தன்னிடமிருக்கும் கடைசியான ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மகனிடம் கொடுக்க, அதை அவன் தனது தங்கையிடம் தருகிறான் அதை ஒரு கண்ணாடி குடுவைக்குள் போட்டுக் கொண்டு மீன்கடைக்கு ஓடுகிறாள் ரஸியா. வழியில் பாம்பாட்டி வித்தையை வேடிக்கை பார்க்கும் போது அவளது பணம் பாம்பாட்டியிடம் போய் விடுகிறது, அதை அழுது அடம் பிடித்து திரும்பப் பெற்றுக் கொண்டு மீன் கடைக்கு வருகிறாள்.
அவளின் வருகைக்காக காத்திருப்பதைப் போலவே நீந்திக் கொண்டிருக்கும் தங்க மீனைப் பார்த்து புன்னகைத்து விட்டு கடைபெரியவரிடம் பேரம் பேசிமுடிக்கும் போது குடுவையைப் பார்க்கும் ரஸியா அதில் இருந்த பணத்தை காணாமல் அய்யோ... இதுலதானே வச்சிருந்தேன்.... இப்போ காணோமே பணத்தை தொலைச்சிட்டேன் என அழத்துவங்குகிறாள். வந்த வழியே சென்று தேடுமாறு பெரியவர் வழிகாட்டுகிறார். அப்போது அங்கே வரும் ஒரு கிழவியின் உதவியுடன் பணத்தைத் தேடத்துவங்குகிறாள்.
அப்போது சற்று தொலைவில் தான் தவறவிட்ட பணத்தைக் காணும் ரஸியா அதை எடுக்கச் செல்லும் போது அந்தவழியே ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக செல்கிறது. அதன் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் அந்த 500 ரூபாய் நோட்டு அருகிலுள்ள கடையின் முன்புறம் கம்பியால் மூடப்பட்டிருக்கும் குழிக்குள் விழுந்து விடுகிறது. கண்ணுக்கு எட்டிய பணம் கைக்கு எட்டாததால் ஏமாற்றமடையும் ரஸியா எப்படி பணத்தை எடுப்பது என யோசிக்கிறாள்.
அருகில் இருக்கும் தையல் கடைக்காரரிடம் பணம் விழுந்த விஷயத்தை சொல்லி உதவுமாறு கூறிவிட்டு கிழவி போய்விடுகிறாள். புது வருடப் பிறப்புக்காக துணி தைக்கக் கொடுத்தவர்களுக்கும் தையல் கடைக்காரருக்குமிடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு விடுவதால் சோர்வடையும் ரஸியா இடையே மீன் விற்கும் கடைக்கு சென்று என்பணம் கிடைத்துவிட்டது, அதை எடுத்து வருகிறேன் என் மீனை யாருக்கும் விற்று விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் பணம் கிடக்கும் கடைக்கு வருகிறாள்.
தங்க மீன் வாங்கப் போன தங்கையைத் தேடிவரும் அவளது அண்ணன் பணம் தொலைந்த விஷயத்தை அறிந்து தையல்கடைக்காரரின் உதவியை கேட்கிறான். அவரோ, பக்கத்துக் கடை முதலாளி புது வருடப் பிறப்புக்கு சொந்த ஊருக்கு போய்விட்டார் ஒருவாரம் கழித்துத்தான் வருவார் பணம் பத்திரமாகத்தான் இருக்கும் அடுத்த வாரம் வந்த எடுத்துக்கலாமே என்கிறார். புத்தாண்டு பிறப்பு நெருங்கிவரும் அறிவிப்பு வந்து கொண்டேயிருக்கிறது. அவர்களின் தேடலும் தொடர்கிறது. பணத்தை குழிக்குள் இருந்து எடுக்க அண்ணனும் தங்கையும் பல முயற்சிகளை எடுக்கிறார்கள். எதுவும் பலனளிக்க வில்லை. பணம் விழுந்து கிடக்கும் கடைக்காரரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வருகிறான் அண்ணன்.
அப்போது அந்த வழியே பலூன் விற்கும் சிறுவன் ஒருவன் வருகிறான் அவனிடமிருந்து பலூன் கட்டப்பட்ட குச்சியை பறித்து வருகிறான் அண்ணன். திருடன்.. திருடன்.. என கத்திக்கொண்டு துரத்திவரும் சிறுவனும் ரஸியாவின் அண்ணனும் கட்டிப்புரண்டு சண்டையிட்டு, பிறகு விஷயமறிந்து பலூன் சிறுவன் சமாதானமாகி அவர்களுடன் சேர்ந்து பணத்தை எடுத்துவிட மூவரும் முயற்சிக்கிறார்கள். சூயிங்கம் வாங்கி வந்து குச்சியில் ஒட்டி எடுக்கலாமே என திட்டமிட்டு சூயிங்கமுக்கு அலைகிறார்கள். அதுவும் கிடைக்கவில்லை பலூன்களை விற்கணும் லேட்டாகுது எனச் சொல்லிவிட்டு பலூன் சிறுவன் சென்றுவிடுகிறான்.
மழை வருகிற சூழல் இடி இடிக்கிறது தூறலும் ஆரம்பமாகிறது. அதிக மழை பெய்து வெள்ளம் வந்துவிட்டால் பணத்தை எடுக்க முடியாது. ஒன்றும் புரியாமல் கடை வாசலில் அமர்ந்தபடி அண்ணனும் தங்கையும் விழிக்க புது வருடம் பிறக்க இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கிறது. அதற்குள் பணம் கிடைக்காதா.. தங்க மீன் வாங்கி விட மாட்டார்களா என பார்வையாளர்களும் யோசிக்க சூயிங்கமுடன் மீண்டும் வருகிறான் பலூன் சிறுவன் அங்கே கவிதையாய் அரங்கேறுகிறது ஒரு விளையாட்டு. மூன்று பேரும் புன்னகையோடு சூயிங்கம்மை போட்டி போட்டுக்கொண்டு மென்று எடுத்து பலூன் குச்சியின் அடிப்பாகத்தில் ஒட்டி பணம் கிடக்கும் குழிக்குள் இறக்குகிறார்கள்.
சில நிமிட முயற்சிக்குப்பின் குச்சியில் ஒட்டியபடி பணம் மேலே வருகிறது. பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி தங்க மீனோடு வருகிறார்கள். புத்தாண்டு பிறப்பதற்கு அடையாளமாக வெடிச்சத்தம் கேட்கிறது. புத்தாண்டு பிறந்து விட்ட அறிவிப்பும் வருகிறது. கொண்டாட்ட இசையுடன் படம் நிறைவடைகிறது.
புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரெஸ்தெமியின் நேர்த்தியான திரைக்கதையை படமாக்கிய இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு இதுதான் முதல் படம். மனிதாபிமானம் வழியும் சம்பவங்களை கவிதையாகச் சொல்வதே தனது பாணி என அறிவித்து படம் எடுத்திருக்கும் இவரது படங்களில் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை.
1995 இல் வெளியான இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றது. உலக சினிமா வரிசையில் வைத்து கொண்டாடப்படுகிற இப்படத்தின் இயக்குநர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். படம் நெடுக வரும் பாம்பாட்டி, கிழவி, தையல் கடைக்காரர், பலூன் விற்கும் சிறுவன் பணம் விழுந்து கிடக்கும் கடைக்காரர், ரஸியாவின் அண்ணன் என எல்லோருமே அன்பொழுகும் மனிதர்களாகவே உலா வருகின்றனர்.
நிமிடத்திற்கொரு சதி செய்யும் வில்லன்களையும், வன்மம் மிகுந்த மனிதர்களையும் வீச்சரிவாளோடு திரியும் வீர சாகச நாயகர்களையும் பார்த்துப் பழகிய நமக்கு இப்படத்தின் பாத்திரங்கள் வித்தியாசமாகவே தெரிகிறார்கள். இவர்களெல்லாம் சேர்ந்து ரஸியாவின் புத்தாண்டை கொண்டாட்ட நாளாக்கி விடுகிறார்கள். படத்தை பார்த்தால் நீங்களும் கொண்டாடுவீர்கள் ரஸியாவை.
- எஸ்.கருணா
வெள்ளை பலூன் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். மிக அற்புதமான படம். அந்த சிறுமியின் நடிப்பு அருமையாக இருக்கும். கடைசியாக வரும் பலூன்காரனும் அருமையாக நடித்திருப்பார். நல்ல படம். சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன், வெள்ளை பலூன் இரண்டும் அற்புதமான படங்கள். பகிர்விற்கு நன்றி.
ReplyDelete-சித்திரவீதிக்காரன்.