1913-ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார். அவர்தான் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். அவர் வங்காளம் ஆங்கிலம் ஆகிய இரண்டுமொழிகளிலும் எழுதி வந்தார். நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்பு அவரே ஆங்கிலத்தில் எழுதியது. வங்க மொழியில் அவர் எழுதிய கவிதைகள் கீதாஞ்சலியில் ஆங்கிலத்தில் இருக்கிறது. எனவே வங்கமொழி மொழிபெயர்ப்பு என்று சொன்னார்கள். கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்றதும், தமிழர்களுக்குப் பெறாமை பிடித்துக் கொண்டு விட்டது. தாகூரைவிட பாரதியார் பெரிய கவிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். ஆனால் ஆள் பிடிக்கத் தெரியாதவர்; அவசியம் இல்லாதவர். ஆனால் தாகூர் பெரிய பணக்காரர். ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர்.
ஆங்கிலேயர்களோடு நல்லுறவு கொண்டிருந்தார். பல ஆங்கில எழுத்தாளர்களின் அறிமுகம் இருந்தது. அதனால் ஆள் பிடித்து பரிசு வாங்கிவிட்டார். அவர் கவிதைகள் அப்படியொன்றும் உயர்வானவை இல்லை என்று தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களுக்கு ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள் சிறந்த, அசலான கவிதைகளாகப் படாதது ஆச்சரியமே இல்லை. ஏனெனில் அவர் கவிதைகளை விட மேலான தரமான உயர்வான கவிதைகள் தமிழில் உள்ளன. ஆனால் நோபல் பரிசுக் குழுவினர் தமிழ்க் கவிதைகளை பாரதியார் எழுதிய கவிதைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து தாகூர் கவிதைகள்தான் சிறந்தவை என்று பரிசு கொடுக்கவில்லை. தங்கள் பார்வைக்கு வந்த கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பைப் படித்தார்கள். அவரின் வேறு இலக்கியப் பங்களிப்பையும் பார்த்தார்கள். ஆள், இலக்கிய ஆசாமி என்று தோன்றியது. நோபல் பரிசு கொடுத்து விட்டார்கள்.
ஒரு நூற்றாண்டிற்கு மேலாக ஸ்வீடன் நாட்டில் நோபல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது அந்த நாட்டின் பரிசு இல்லை. ஆல்பர்ட் நோபல் என்ற வெடிமருந்து தயாரித்து விற்றுப் பெரும் பணம் ஈட்டியவரின் அறக்கட்டளை கொடுக்கும் பரிசு. பல்வேறு துறையினர்க்கும் தொடர்ந்து நோபல் பரிசு வழங்கி வருகிறார்கள். தரம் கவனிக்கப்படுவதால் பரிசு மதிப்படைகிறது. ஒவ்வொருவரும் அதனை அடைய விரும்புகிறார்கள். ரசாயன பூச்சிக் கொல்லி மருந்து கண்டு பிடித்த ஹெர்மன் பால் முல்லர் என்ற கெமிஸ்ட்டுக்கு, மருத்துவத்திற்கான துறையில் நோபல் பரிசு கொடுத்தார்கள். ஆனால் அவர் மருத்துவம் பார்க்காதவர். அறிவியல், மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு கொடுக்கப்படும் போது எழுதப்படும் விமர்சனங்கள் துறை சார்ந்து நின்று விடுகின்றன. அவை பொது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. சமாதானத்திற்கு கொடுக்கப்படும் நோபல்பரிசு பற்றி அதிகம் விமர்சமனிக்கப்படுகிறது. ஆனால் இலக்கியத்திற்குக் கொடுக்கப்படும் நோபல் பரிசு எப்பொழுதும் பெரும் விமர்சனத்திற்குக் காலம் காலமாக ஆளாகி வருகிறது. ஏனெனில் அது மொழி சார்ந்தது. பலரும் படிக்கிறார்கள். படித்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
சோவியத் ரஷ்யாவில் மகோன்னதமான எழுத்தாளரான டால்ஸ்டாய், மக்கள் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி இருந்தபோது ஐவான்புனின் என்ற எழுத்தாளர்க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். ரஷ்யர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இலக்கிய அபிமானிகள் நோபல் பரிசுக் கமிட்டியை விமர்சித்துக் கொண்டே வருகிறார்கள். அந்தக் கண்டனத்தில் இருந்து நோபல் பரிசுக் குழுவினர் தப்பிக்கவே முடியாது.
இலக்கியப் படைப்பிற்கும் பரிசுக்கும் சம்பந்தம் கிடையாது. பரிசு பெறுவதால் ஒரு படைப்பு பிரபல்யம் அடைவதில்லை; பரிசுபெறாமல் போவதால் ஒரு படைப்பு அதற்கான மதிப்பைப் பெறாமல் போவதில்லை. அது சரித்திரமாக இருந்து வருகிறது.
ரவீந்திர நாத் தாகூரும், சுப்பிரமணிய பாரதியாரும் ஒரே காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை இல்லை. தாகூர் ஜமீன்தார் ஒருவரின் பதினான்காவது மகன். அவரது பெரியண்ணன் இந்தியாவின் முதல் ஐ.சி.எஸ். அதிகாரி. இன்னொரு அண்ணன் பத்திரிகை ஆசிரியர். ககனேந்திர நாத் தாகூர், அபினேந்திர நாத் தாகூர் என்ற இரண்டு சித்தப்பாக்களும் ஓவியர்கள். கல்கத்தா ஓவிய சிற்பக் கல்லூரி ஆசிரியரான இ.பி. ஹேவல், கலை விமர்சகரான ஆனந்த குமாரசாமியுடனெல்லாம் பால்ய காலத்திலேயே பழக சந்தர்ப்பம் இருந்தது. அவற்றால் ஒரு கலைஞராகத் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள முடிந்தது. நோபல் பரிசு பெற இவையெல்லாம் உதவியது என்று சொல்வது, நிந்தனை செய்வது தான்.
ரவீந்திரநாத் தாகூர் இளம் பருவத்தில் இருந்தே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை நாடகம், இசைப்பாடல்கள், ஓவியம் என பலதுறைகளிலும் தன் அக்கறையைச் செலுத்தி எழுதினார். அவர்தான் தன் காலத்தில் நிறைய எழுதிய எழுத்தாளர். நான் தாய்மொழியான வங்காள மொழியிலோ ஆங்கில மொழியிலோ புலவர் இல்லை என்று சொல்லிக் கொண்டார். மொழிப் புலமைக்கும் இலக்கியப் படைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் அது. கலை மொழிவழியாகச் சொல்லப்படுகிறது; சாகித்தியம் சங்கீதத்தில் சேர்க்கப்படுகிறது. காட்சிகள் வண்ணத்தில் தீட்டப்படுகின்றன. எல்லாம் கலைஞன் என்னும் படைப்பாளியின் ஆளுமை பங்களிப்புதான்.
அரசியலில் தாகூர் நேரடியாக ஈடுபட்டுக் காரியங்கள் செய்யாவிட்டாலும், தேச விடுதலையின் பற்றாளராகவே இருந்தார். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரிடம் மதிப்புக் கொண்டார். தான் ஒரு படைப்பு எழுத்தாளராக இருந்தாலும் மற்ற எழுத்தாளர்கள் படைப்புக்களையும் படித்து வந்தார். ஜவகர்லால் நேருவின் சுயசரித்திரம் லண்டனில் வெளியிடப்பட்டதும் அதனைப் படித்துவிட்டு சிந்தனா பூர்வமாக கவர்ச்சிகரமான நடையில் எழுதப்பட்டு இருக்கிறது என்று எழுதினார். நாட்டு நிகழ்வுகளில் கவனமும் அக்கறையும் கொண்டு இருந்தார். ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலையை வெகுவாகக் கண்டித்தார். தன் எதிர்ப்பைக் காட்டும் விதமாக அரசாங்கம் கொடுத்திருந்த பட்டத்தைத் திருப்பி அனுப்பி விட்டார். இவையெல்லாம் இலக்கியம் - படைப்பு சம்பந்தப்பட்டவை இல்லை, என்பதுதான் சரி. ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் படைப்பு எழுத்தாளர். அற்புதமான சிறுகதைகள் எழுதி இருக்கிறார். அதன் வழியாக இந்திய மரபை நிலைநாட்டியிருக்கிறார்.
ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதியார்க்கு கிடைக்க வேண்டிய நோபல் பரிசைத் தட்டிக் கொண்டு போனவர் இல்லை. இருவரும் தனித்தனியான ஆள்கள். அசல் இலக்கியவாதிகள். ஒரே காலத்தில் என்ன நடக்குமோ அதே நடந்து இருக்கிறது. நோபல் பரிசுபெற்றதால்தான் ஒருவர் புகழ் அடைகிறார் என்பது இல்லை. பரிசுபெறாமல் சிறப்படைய முடியும் என்பதற்குச் சாட்சியாக பாரதியார் இருக்கிறார். கவிஞரான பாரதியார், தாகூர் சிறுகதைகளை மொழி பெயர்த்து இருக்கிறார்; கவிதைகளை மொழி பெயர்க்க வில்லை.
இந்தியாவில் பெரிய இலக்கியப் பரிசு ஞான பீடம். அது தனியார் அறக்கட்டளை கொடுப்பது. ஓரளவு இலக்கியத்தரமாகவும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வருகிறது என்பதாலும் அதைப் பெற போட்டி இருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு மேலாக ஞானபீடம் தொடர்ந்து பரிசளித்து வருகிறது. இந்தி, மராத்தி, வங்காளி, கன்னடம், மலையாள மொழி எழுத்தாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் பரிசு பெற்று விடுவது கண்டு, தமிழ் எழுத்தாளர், தமிழ் இலக்கிய அனுதாபிகள், விமர்சனர்கள் புலம்புகிறார்கள். எத்தனை முறைகள் அவர்களின் மொழிக்கே பரிசு கொடுப்பது. தமிழ் எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புக்கள் கண்களில் படவில்லையா என்று கேட்கிறார்கள்.
இந்திய அரசின் இலக்கியப் பரிசான சாகித்ய அகாதெமி விருது தரமானவர்களுக்குப் போவதில்லை. தரமற்ற ஆசாமிகள் அகாதெமியை ஆக்கிரமித்துக் கொண்டு தங்களைப் போன்ற தகுதியற்ற ஆள்களுக்கே பரிசு கொடுத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு புலம்பல் தொடக்கத்தில் இருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் சாகித்ய அகாதெமியின் முதல் பரிசு பெற்ற ரா.பி.சேதுபிள்ளையின் தமிழின்பத்தை எடுத்து முன்னே வைக்கிறார்கள். முதல் கோணல் தொடர்கிறது என்பது வாதம்.

சாகித்ய கர்த்தாக்கள், அசல் எழுத்தாளர்கள் பெற வேண்டிய சாகித்ய அகாதெமி விருதை சம்பந்தம் இல்லாதவர்கள் அடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள் என்று தொ.மு.சி.ரகுநாதன் குரல் இரண்டு தலை முறைக்குப் பிறகும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நோபல் பரிசு, ஞானபீடம், சாகித்ய அகாதெமி - இலக்கியப் பரிசு கொடுக்கும் நிறுவனங்கள் எல்லாம் தொலைவில் இருக்கின்றன. அவற்றில் யார் யாரோ பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து, ஆவேசமாகப் பேசவும், எழுதவும் புலம்பவும் முடிகிறது.
அது நல்லதுதான். அழுதால்தான் பால் கிடைக்கும்.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க. என்று பல பெரியவர்கள் பெயரில் சமூக சேவைக்கும், இலக்கியப் பங்களிப்பிற்கும் பரிசு கொடுக்கிறதே அவையெல்லாம் தகுதி, தரம் கொண்டதா? அவர்களை ஞானபீடம், நோபல் பரிசு பெற முன்னே நிறுத்த முடியுமா?
அவ்வளவு ஏன்? தமிழ்ச் செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம் செம்மொழி பரிசு கொடுத்து இருக்கிறதே அதற்கு என்ன சொல்வது? எங்கே போய்ப் புலம்புவது?
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயிரோடு இருக்கும் படைப்பு எழுத்தாளர்க்கு மாமன்னன் ராஜராஜன் விருது என்று ஒன்றைத் தொடங்கியதே, அது என்ன ஆயிற்று? ஏன் அது முடங்கிப் போனது?
ஓர் எழுத்து எவ்வாறு சமூக அங்கீகாரம் பெறுகிறது? அது சமூகத்தின் சகல பரிமாணத்தோடும் இணைந்து பொதுத்தன்மை பெற்று இருக்கும் போது என்று சொல்லிவிடலாம். ஆனால் அது ஒற்றை இழை இல்லை. ஒன்றுக்குள் ஒன்றாக பல்வேறு இழைகள் தெரிந்தும் தெரியாமலும் இருப்பதுதான்.
மாநில அரசு, பல்கலைக் கழகங்கள், அறக்கட்டளைப் பரிசுகள், விருதுகள் பற்றி புலம்ப முடியாதவர்கள் சர்வதேச, இந்தியப் பரிசு நிறுவனங்கள் பற்றி புலம்புகிறார்கள்.
புலம்பியது போதும். உங்கள் படைப்புக்களை அறிந்து பாராட்டவும், பரிசளிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
அசலான, தரமான எழுத்துக்கள் பத்திரிகையின் விற்பனைக்கு உதவாது என்று ஒதுக்கி விட்டார்கள்.
தொலைக்காட்சி தொடர்கள் வந்ததும், தொடர் கதை படிக்க ஆளில்லை என்று தள்ளி விட்டார்கள். ஆனால் அசல் எழுத்தாளர்கள் எழுதியபடியே இருக்கிறார்கள்.
ஐநூறு ஆண்டுகள் சரித்திரம் கொண்ட மலையாள மொழி எழுத்தாளரான கே. சச்சிதானந்தன் கவிதைகள் நோபல் பரிசு இறுதிப் பட்டியலுக்குப் போகிறது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான தமிழ்மொழி எழுத்து தமிழ் நாட்டிற்குள்ளேயே அங்கீகாரம் பெற முடியவில்லை என்பது எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்டது இல்லை. தமிழ்ச் சமூகம் சார்ந்தது.
தமிழின் நெடிய மரபின் தொடர்ச்சியாக எல்லாக் காலம் போல இக்காலத்திலும் எழுதி வருகிறார்கள். உரைநடையில் புதுமைப்பித்தன், கு.ப. ராஜ கோபாலன், மௌனி, க.நா. சுப்ரமண்யம், கு.அழகிரி சாமி. தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி என்றால், ஜீவிதமாக உள்ளவர்களில் ஜெயகாந்தன், அசோகமித்ரன் நீலபத்மநாபன், ஆ. மாதவன், பிரபஞ்சன், வாஸந்தி, மா.அரங்கநாதன், தோப்பில் மீரான், சோ. தர்மன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், அம்பை, ஜோ.டி.குருஸ் என்று ஒரு பட்டியல் கொடுக்கலாம்.
எழுதுவதுதான் கலைஞர்களான எழுத்தாளர்களின் பணி. அதனை அவர்கள் பூரணமாகச் செய்து வருகிறார்கள். அவர்களின் படைப்புகளின் ஆழத்தையும், பரப்பையும் அறிந்து கொள்வதும், அறிந்து கொண்டதை அறிந்து கொண்ட விதமாகச் சொல்லி நிலைநாட்டுவதும் சமூகத்தின் வேலை. அதனை பலநாடுகளிலும் அரசும், பல்கலைக் கழகங்களும், அறக்கட்டளைகளும் திறமையுடன் செய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசும், அதன் அபிலாசைகளும் சார்ந்து இருக்கிறது.
பொது அமைப்புகளில் இடம் பெறும் ஆள்கள் தன் சகபேராசிரியர்களுக்கும், தன்னிடம் படித்த மாணவ மாணவிகளுக்கும் விருது வழங்கிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் என்றும், வேறுசிலர் தன் சிநேகிதிகளுக்கும் நண்பர்களுக்கும் பரிசு கொடுத்துப் பரவசம் அடைகிறார்கள் என்றும், மற்றும் சிலர் தன் சாதி, சமயம் சார்ந்தவர்களாகக் கண்டு பிடித்து விருது கொடுத்து குதூகலிக்கிறார்கள் என்றும் புலம்புகிறார்கள். அதற்காக ஆதாரங்களையும் எடுத்துக்காட்டுகிறார்கள். இது இருபத்தொறாவது நூற்றாண்டு சமூக அவலம்.
புலம்பித் தீர்க்க முடியாது.
- சா.கந்தசாமி

0 comments:
Post a Comment