Sunday, June 10, 2012

தொழிலாளிகள் முதலாளிகளான கதை (The Take - அர்ஜெண்டினா திரைப்படம்)

மன்னராட்சி, நிலப்பிரபுத்துவ ஆட்சி, காலனியாட்சி, இராணுவ ஆட்சி, முதலாளித்துவ ஆட்சி என காலம் காலமாக தங்களின் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். மக்கள் விரோத அரசுகளையும் ஆட்சியாளர்களையும், அவர்கள் விதித்திருக்கிற கேடுகெட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு போராடுவதைவிட, அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி தூக்கியெறிந்துவிட்டு மாற்று வழியினை முன்னெடுப்பதில்தான் உண்மையான வெற்றியே அடங்கியிருக்கிறது.


மக்களின் வரிப்பணத்தை அரசிடமிருந்து தொழிற்சாலை கட்டுவதற்கு இலவசமாக இடமாகவும் இன்னபிற சலுகைகளாகவும் பெற்றுக்கொண்டு, ஊழியர்களை சக்கையாகப் பிழிந்து உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் தராமல், அளவற்ற இலாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள். உழைப்பிற்கேற்ற நியாயமான கூலி உட்பட அடிப்படை உரிமைகளுக்காக போராடுகிற அதே வேளையில், தொழிலாளர்களை ஒரு உயிரற்ற மூலப்பொருளாக மட்டுமே பார்க்கிற முதலாளித்துவ கட்டமைப்பையும் சேர்த்தே எதிர்க்கவேண்டும். சுரண்டலையும் அடிமைத்தனத்தையும் எதிர்க்கிறபோது, அதனை அனுமதிக்கிற அமைப்பையும் சேர்த்தே எதிர்த்தால்தானே அதனை முற்றிலுமாக ஒழிக்கமுடியும்.

முதலாளித்துவ அமைப்பினால் வீழ்ச்சியடைந்து திவாலாகிய நாடொன்றினில், மாற்றுத்திட்டத்தினை அந்நாட்டு மக்களே முன்மொழிந்ததோடுமட்டுமல்லாமல் அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டினார்கள். அந்நாட்டின் பெயர்தான் அர்ஜெண்டினா.

திரைக்கதை:

அர்ஜெண்டினா ஒரு ஏழை நாடல்ல... ஏழை நாடாக்கப்பட்ட பணக்காரநாடு. 90 களில் இந்தியாவைப் போன்றே, அர்ஜெண்டினாவிலும் புதிய தாராளமயக்கொள்கைகளை அந்நாட்டின் அதிபராக இருந்த "கார்லோஸ் மேனம்" அறிமுகப்படுத்தினார். ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கிகளின் ஆணைப்படி, அர்ஜெண்டினாவின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. பெருமுதலாளிகளுக்கு ஏற்றவாறு திட்டங்கள் தீட்டப்பட்டன. கண்ணிமைக்கும் நேரத்தில், அர்ஜெண்டினாவின் பொருளாதாரக் கொள்கைகளே முற்றிலுமாக கார்லோசின் ஆட்சிக் காலத்தில் மாறின. அரசு நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைப்பு, இலாப வெறிகொண்ட முதலாளிகளினால் செய்யப்பட்ட பெருமளவிலான ஆட்குறைப்பு என ஐ.எம்.எப்.இன் ஆணைப்படி எல்லாம் அரங்கேறின அர்ஜெண்டினாவில்.

ஆனால் மிகச்சில ஆண்டுகளிலேயே உண்மையில் நடந்தது என்ன?
  • அர்ஜெண்டீன மக்களிடையே பரவிக்கிடந்த செல்வமெல்லாம் சில பன்னாட்டு முதலாளிகளின் கைகளுக்குச் சென்றடைந்தது
  • வேலையில்லாத்திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தது
  • மக்களின் வாங்கும் சக்தி குறையத்துவங்கியது
  • அர்ஜெண்டினா நானையத்தின் மதிப்பு பன்மடங்கு வீழ்ச்சியடைந்தது
  • எந்த பன்னாட்டு நிறுவனங்களையும், பன்னாட்டு வங்கிகளையும் தாராளமாக உள்ளே வரவைத்து தடையற்ற சுதந்திரத்தினை ஐ.எம்.எப்.இன் உதவியுடன் கார்லோஸ் மேனமின் அரசு வழங்கியதோ, அதே பன்னாட்டு வங்கிகளும் நிறுவனங்களும் ஒரே நாள் இரவில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான பணத்தினை சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டே ஓடிவிட்டன
  • அவர்களைத் தடுக்க எவ்வித சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் இல்லை

மக்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு சென்ற பன்னாட்டு நிறுவனங்களின் போக்கை தடுக்கமுடியாமல், கார்லோஸ் மேனமின் அரசு தன்னுடைய நாட்டு மக்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது. இதுநாள் வரை தங்களது உழைப்பால் சிறுகச்சிறுக சேமித்துவைத்திருந்த வங்கிப்பணம் சொத்துமுதற்கொண்டு அனைத்தையும் அரசே எடுத்துக்கொண்டமையால், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லாத ஏழை மக்களாக வீதிகளுக்கு வந்து போராடத்துவங்கினர். ஒரு புறம் மக்களின் போராட்டத்தையும், மறுபுறம் ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கிகளிடம் வாங்கிய கடனையும் சமாளிக்கமுடியாமல் அர்ஜண்டைனாவில் மூன்றே வாரத்தில் ஐந்து அதிபர்கள் மாறிவிட்டனர். தென்னமெரிக்கா முழுவதிலும் பெருமளவிற்கு வர்த்தகத்தை மேற்கொண்டிருந்த "என்ரான்" நிறுவனமும் அதே வாரத்தில் திவாலாகிவிட்டதாக அறிவித்தது.

நிலைமையினை சமாளிக்கமுடியாமல், உலகவரலாற்றிலேயே முதன்முறையாக அர்ஜெண்டினா என்கிற ஒரு நாடே திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. முதலாளித்துவம் தன்னுடைய இயக்கமுறையின் காரணமாக தானே வீழ்ச்சியடையும் என்கிற மார்க்சின் கூற்றுப்படி அர்ஜெண்டினா வீழ்ச்சியடைந்தது. (இன்றைக்கு திவாலாகிக்கொண்டிருக்கும் அயர்லாந்து, கிரேக்கம், ஸ்பெயின் முதலான நாடுகளின் நிலையோடு ஒப்பிடத்தக்கது)

மக்கள் தெருவீதிகளில் குவிந்து,
"வெளியேறு வெளியேறு... எங்கள் நாட்டைவிட்டே வெளியேறு..."
என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இருப்பினும் சரியான அரசியல் பார்வையோ அல்லது அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்மொழிவதற்கான தொலைநோக்குத்திட்டமோ அவர்களிடம் இல்லை. (இந்நிலையினை, இன்றைய "வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டத்துடன்" ஒப்பிடலாம்.)

மனித இனத்திற்கும் மனிதநேயத்திற்கும் எதிரான முதலாளித்துவம் தனக்குத்தானே சுய அழிவைத்தேடிக்கொண்டாலும், மாற்றமொன்றினை முன்வைத்துப்போராடாதவரை, முதலாளித்துவம் பலவழிகளைக்கண்டறிந்து மீண்டும் மீண்டும் எழவே முயற்சிக்கும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இன்றைக்கு திவாலாகிக்கொண்டிருக்கும் அயர்லாந்து, கிரேக்கம், ஸ்பெயின் முதலான நாடுகள்தான்.

புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்டு திவாலாகி நின்ற அர்ஜெண்டினா நாட்டின் உழைக்கும் மக்கள், ஒரு மாற்று வழியினைக் கண்டறிந்தார்கள்.

ஆக்கிரமிப்போம்... பாதுகாப்போம்... உற்பத்திசெய்வோம்...

ஆண்டாண்டு காலமாக தங்களது உழைப்பைச் சுரண்டி கோடிகோடியாக இலாபம் பார்த்த பன்னாட்டு முதலாளிகள், ஒரே நாளிரவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுவனங்களின் சொத்துக்களை சுருட்டிக்கொண்டு ஓடியதுகண்டு தொழிலாளர்கள் கொந்தளித்தனர். தங்களின் உழைப்பில் பெரிதாக வளர்ச்சியடைந்த தொழிற்சாலைகளில் தங்களுக்கும் பங்குண்டு என்று உணர்ந்துகொண்ட அர்ஜெண்டினா தொழிலாளமக்கள்,
"ஆக்கிரமிப்போம்... பாதுகாப்போம்... உற்பத்திசெய்வோம்"
என்கிற புதிய முழக்கங்களோடு சில தொழிற்சாலைகளின் பூட்டிய வாயிற்கதவுகளை உடைத்துக்கொண்டும், சில தொழிற்சாலைகளில் நீதிமன்றங்களின் அனுமதியோடும் உள்ளே நுழைகின்றனர். அர்ஜெண்டினா முழுவதும் இச்செய்தி பரவி, தொழிலாளர்கள் புதிய உத்வேகத்துடன் தங்களது உரிமைகளை பாதுகாக்கப் புறப்பட்டனர்.

"செனான் செராமிக்ஸ்"

"செனான் செராமிக்ஸ்"  என்கிற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையினை இலாபகரமாக இயக்கமுடியாது என்று முதலாளிகள் இழுத்துமூடிவிட்டனர். கார்லோஸ் மேனமின் அரசு, இத்தொழிற்சாலையின் முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான பணத்திற்கு சலுகைகள் வழங்கியும், அவற்றையெல்லாம் நேரம் பார்த்து சுருட்டிக்கொண்டி ஓடிவிட்டனர் அதன் முதலாளிகள்.

முதலாளிகள் விட்டுச்சென்ற "செனான் செராமிக்ஸ்" தொழிற்சாலையினை, தொழிலாளர்கள் கைப்பற்றினார்கள். தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்நிறுவனத்தை நடத்துவதென்று முடிவெடுக்கிறார்கள்.
  • இனி இத்தொழிற்சாலைக்கு முதலாளி என்று யாரும் இல்லை. தொழிலாளர்களே முதலாளிகள்
  • வேலைபார்க்கும் 300 தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியமும் வழங்கப்படும்.
  • எல்லாமுடிவுகளும் ஜனநாயக முறைப்படி ஓட்டுப்போட்டே எடுக்கிறார்கள். பாகுபாடின்றி முடிவுகளை எடுக்க, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமமாக ஒரு ஓட்டு.
  • உயர்ந்தவர், தாழ்ந்தவர், சுரண்டல் என்று எதுவுமே இல்லாமல், எல்லோரும் சமம்.

தொழிலாளர்களின் கடும் உழைப்பில், அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே தொழிற்சாலை இலாபத்தினை ஈட்டக்கூடிய ஒன்றாக மாறுகிறது. இலாபத்தில் ஒரு பகுதியாக, அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு இலவசமாக டைல்ஸ் வழங்குகிறார்கள்.

இதற்கிடையில், தொழிற்சாலை வெற்றிகரமாக நடத்தப்படுவதை அறிந்த செனான் தொழிற்சாலை முதலாளி "லூயிஸ் செனான்" மீண்டும் ஊடகத்தின் முன் வந்து, "இத்தொழிற்சாலை என்னுடையது. அரசாங்கம் எனக்கு அதனை திரும்பப்பெற்றுத்தந்துவிடும்." என்று அறிவிக்கிறார்.

இச்செய்தி தொழிலாளர்களிடையே கலக்கத்தை உருவாக்குகிறது. தொழிலாளர்கள் அனைவரும் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தொழிற்சாலைக்கு காவல் நிற்கிறார்கள். "பெர்சூட்" என்கிற அர்ஜண்டைனாவின் மிகப்பிரபலமான இசைக்குழு, "செனான் செராமிக்ஸ்" தொழிற்சாலைக்குள்வந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக மிகப்பெரிய இசைநிகழ்ச்சி நடத்துகின்றனர்.  
"இந்நிகழ்ச்சி செனான் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்" 
என்று பகிரங்கமாக அறிவித்தே நிகழ்ச்சியினை துவக்குகிறார்கள்.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது பொதுமக்களின் ஆதரவுதான். அது நாளுக்கு நாள் அதிகரிக்கவும் செய்கிறது.
பொதுமக்கள் : "முதலாளிகளின் தலைமையில் இருந்ததைவிட, இப்போதுதான் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது. டைல்ஸ் விலையும் குறைந்திருக்கிறது. நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவே நினைக்கிறேன். முன்னாள் முதலாளிகள் அரசிடமிருந்து மானியங்களை வாங்கி, அதனை தங்களுடைய வங்கிக்கணக்கிற்கே திருப்பிவிட்டிருந்தார்கள்."
பொதுமக்கள் : "பொதுமக்களாகிய எங்களுடைய ஆதரவு தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் உண்டு. ஏனெனில் அவர்கள் திருடவில்லை, யாரையும் கொலை செய்யவுமில்லை. தங்களுடைய குடும்பத்திற்கு உணவளிப்பதற்காகவே உழைக்கிறார்கள்."
பொதுமக்கள் : "இன்னும் பல நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் போய்சேர வேண்டும். அரசியல் ரீதியாக இது சற்றே கடினமானதுதான்."
"செனான் செராமிக்ஸ் மக்களுடையது" என்கிற பிரச்சாரம் நாடுமுழுக்க பேசப்படுகிறது.

காவல்துறையினர் தொழிற்சாலையை முற்றகையிட நினைக்கிறபோதெல்லாம், தொழிலாளர்களுடன் இணைந்து பொதுமக்களும் தொழிற்சாலையினை பாதுகாக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் தொழிற்சாலையினை சுற்றிவளைத்துக்கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். இரவு நேரங்களில் தொழிற்சாலையினை பாதுகாப்பதற்கு, இசைநிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமென ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது இப்போராட்டம். இதன்மூலம் செனான் செராமிக்ஸ் உண்மையிலேயே மக்களுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு புறம் போராட்டத்தினை பெரியளவில் நடத்திவந்தாலும், மறுபுறம் டைல்ஸ் உற்பத்தியிலும் அதிக கவனம் செலுத்திவந்தார்கள் தொழிலாளர்கள். தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு, ஆறு மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அதனால் நிறுவனத்திற்கு நட்டம் என்கிற பேச்சிற்கே இடமில்லாமற்போகிறது.

"செனான் செராமிக்ஸ் -  தொழிலாளர்களுக்குச் சொந்தமானது" என்கிற வாசகத்துடன் இன்று காட்சியளிக்கும் தொழிற்சாலை அர்ஜென்டினாவில் ஒரு மாற்று இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டியது.

"போர்ஜா சான் மார்டின்"

அர்ஜெண்டினா பொருளாதார வீழ்ச்சியில் அறிவிப்பின்றி மூடப்பட்ட தொழிற்சாலைகளில் "போர்ஜா சான் மார்டின்" என்கிற வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் ஒன்று. அத்தொழிற்சாலையில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த பிரெட்டி மற்றும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவு சங்கமொன்றை அமைத்து, தங்களது தொழிற்சாலையினை அதன் உரிமையாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்கமுயற்சிக்கிறார்கள் என்றும் அதனால் தொழிலாளிகள் அனைவரும் தொழிற்சாலையினை பார்வையிடவேண்டுமென்றும் நீதிமன்றத்திற்கு சென்று கோரிக்கைவைக்கிறார்கள். அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்குகிறது.
"நாங்களும் எங்கள் குடும்பமும் பட்டினி கிடக்க, எங்களின் உழைப்பில் உருவான இவ்வளவு பெரிய தொழிற்சாலை மூடிக்கிடப்பது சரியா?"
என்கிறார் பிரெட்டி.

தொழிற்சாலையினுள்ளே நுழைந்த தொழிலாளிகளுக்கு அதிர்ச்சிதான் காத்துக்கிடந்தது. மூடிக்கிடந்ததாக நினைத்திருந்த தொழிற்சாலைக்குள்ளிருந்த மூலப்பொருட்கள், சில இயந்திரங்கள், கேபிள்கள் என பலவற்றைக் காணவில்லை. அவற்றையெல்லாம் முதலாளிகள் ஒவ்வொன்றாக திரைமறைவில் விற்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

தொழிலாளிகள் எல்லோரும் கூட்டுறவு சங்கமாக இணைந்து அத்தொழிற்சாலையினை நடத்துவதென முடிவெடுக்கிறார்கள்.
பிரெட்டி : "இதில் யாருமே முதலாளி கிடையாது. எல்லாத்தொழிலாளிகளும் நிர்வாகிகள்தான். நான் என்ன செய்கிறேன் என்று அவன் பார்த்துக்கொள்வான். அவன் என்ன செய்கிறான் என்று நான் பார்த்துக்கொள்வேன். இது எங்கள் சொத்து என்கிற எண்ணம் வருமென்பதால், தேவையில்லாமல் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தால் கூட, நிச்சயமாக அணைத்துவிடுவோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஊதியமும்கூட."
முதலாளிகளுக்கு எதிராக தொழிற்சாலையில் சேகரித்த ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
 "போர்ஜா சான் மார்டின் - ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலை" என்று வாயிற்கதவில் எழுதிவைத்துவிட்டு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும்வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத்துவங்குகிறார்கள்.

தொழிலாளிகளால் நடத்தப்படுகிற மற்ற நிறுவனங்களில் உள்ள முக்கியமான நபர்களை அழைத்து ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார்கள் "போர்ஜா சான் மார்டின்" தொழிற்சாலை ஊழியர்கள். அதன்மூலம் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பதுதொடர்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்கிறது அவர்களுக்கு.

தொழிலாளிகளால் நடத்தப்படுகிற நிறுவனங்களுக்குள் மூலப்பொருள் வழங்கவும், உற்பத்தி செய்வதற்கான உதவிகளைச் செய்யவும் ஒருவருக்கொருவர் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த ஒப்புக்கொள்கிறார்கள்.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் ஒருவர், "போர்ஜா சான் மார்டின்" தொழிற்சாலைக்கு வந்து நிலைமையினை ஆய்வு செய்கிறார். நடுநிலையாளராக இருக்கவேண்டியவர், முதலாளிகளுக்கு ஆதரவாகவே அறிக்கை எழுதுகிறார். அதுமட்டுல்லாது, அவரது உதவியுடன்தான் தொழிற்சாலையில் இருந்த மூலப்பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே விற்றுவிட்டனர் முதலாளிகள்.

நீதிமன்ற பொறுப்பாளர் முதலாளிகளுக்கு ஆதரவாக சமர்ப்பித்த அறிக்கையை முன்வைத்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. தொழிலாளிகள் தரப்பிலிருந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் கலந்துகொள்கிறார்கள்.
நீதிபதி : "ஒரு தொழிற்சாலையை நடத்துவதற்கு தேர்வையான அனைத்தையும் தொழிலாளர்களே செய்வதென்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை. ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையுடன் யாரும் வியாபாரம் செய்வார்கள்? நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?"
தொழிலாளர் பிரதிநிதி (பிரெட்டி) : "தொழிலாளிகள் அனைவரும் ஒன்றுகூடி, மூடப்பட்டிருக்கிற தொழிற்சாலையினை காப்பதற்கு அதனை நாங்களே  ஏற்று நடத்த முடிவெடுத்திருக்கிறோம். எங்களால் முடியும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது."
நீதிபதி : "தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படவில்லை. தொழிற்சாலையிலிருந்து ஏதேனும் பொருட்கள் முதலாளிகளால் எடுக்கப்பட்டு விற்கப்பட்டிருந்தால், நீங்கள் அப்படி சொல்லலாம்"
தொழிலாளர் பிரதிநிதி (பிரெட்டி) : "ஆமாம். தொழிற்சாலையிலிருந்து ஏராளமான பொருட்களை முதலாளிகள் எடுத்திருக்கிறார்கள்"
நீதிமன்றம் நியமித்த பொறுப்பாளரிடம் இதுகுறித்து நீதிபதி கேட்கிறார்.
பொறுப்பாளர் : "அப்படியெல்லாம் எதுவும் காணாமற்போகவில்லை. முதலாளிகள் எதையும் எடுக்கவில்லை. எந்தப்பொருளும் காணாமற்போனதாக இதுவரை தொழிலாளிகளும் எனக்கு எந்தவித புகார் அளிக்கவில்லை" 
என்று முதலாளிகளுக்கு ஆதரவாக பொய்யான தகவல்களை நீதிமன்றத்தில் கொடுக்கிறார்.
நீதிபதி : "தொழிலாளர்களே! நான் உங்களுக்கு மீண்டும் உங்களது வேலையினை வாங்கித்தரலாம் என்றுதான் முயற்சிக்கிறேன். ஆனால் நீங்களோ தொழிற்சாலையினை ஆக்கிரமிக்க முயல்கிறீர்கள். உங்கள்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. உடனடியாக தொழிற்சாலையிலிருந்து வெளியேறுங்கள்"
நீதிமன்றமும் கைவிரித்துவிட்ட சூழலில், தொழிலாளர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாராளுமன்றம் நினைத்தால்தான் அவர்களுக்கு தொழிற்சாலையினை மீட்டுத்தரமுடியும் என்கிற நிலை உருவாயிற்று. தொழிற்சாலையினை மீட்கவேண்டி, பாராளுமன்றத்தில் ஓட்டுபோடும் தகுதியுடையோரை சந்தித்து, ஆதரவு திரட்டினர். அச்சட்டமுன்வறைவு பாராளுமன்றத்தில் வந்தபோது, சற்றும் எதிர்பாராமல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தொழிலாளர்களே "போர்ஜா" தொழிற்சாலையினை கூட்டுறவு முறையில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் கண்ணீரால் தங்களது வெற்றியினைக் கொண்டாடினார்கள்.

ப்ருக்மேன் சூட் தொழிற்சாலை:

வளர்ந்து வரும் நாடுகளை இருக்கும் ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பொதுவாகவே மோசமான பணிச்சூழல் இருக்கும். அதனை மாற்றவேண்டி தொழிலாளர்கள் குரல்கொடுத்தால், அக்கோரிக்கைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்கு அர்ஜன்டைனாவில் இருக்கும் ப்ருக்மன் சூட் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. அர்ஜெண்டினா திவாலான நேரத்தில், முதலில் தொழிலாளர்களின் ஊதியத்தை குறித்த ப்ருக்மேன் தொழிற்சாலை முதலாளிகள், திடீரென முன்னறிவிப்பின்றி தொழிற்சாலையினை மூடிவிட்டு ஓடிவிட்டனர். முழுக்க பெண்களே வேலைசெய்துவந்த ப்ருக்மேன் தொழிற்சாலையினை முற்றுகையிட்டு, மீட்டு தொழிலாளர்களே நடத்தத்துவங்கினர். எல்லோருக்கும் ஒரே மாதியான ஊதியம், முதலாளிகள் என்று தனியாக யாருமில்லாமல் தொழிலாளர்களே முதலாளிகள் என்கிற மாற்றத்தினை ஏற்படுத்தினர். அர்ஜெண்டினாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது இச்செயல். மூடிய நிறுவனங்களை மீட்டு தொடர்ச்சியாக தொழிலாளர்களே நடத்தமுடியுமென்பதை நிகழ்த்திக்காட்டினர்.
நன்றாக நடந்துகொண்டிருந்த ப்ருக்மேன் தொழிற்சாலையினை, தொழிலாளர்கள் யாரும் நுழையமுடியாதபடி, முதலாளிகளின் வேண்டுகோளின்படி வேலிபோட்டு அடைத்துவிட்டனர் இராணுவத்தினர். இரும்புக்கதவுகளும் வெல்டிங் செய்யப்பட்டுவிட்டன. தொழிற்சாலையைச் சுற்றி பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதிர்ச்சியடைந்த ப்ருக்மேன் தொழிலாளர்கள் இராணுவ வலையத்தினருகே நின்றுகொண்டு முதலாளிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். ஒன்றிரண்டு நாட்களில், இச்செய்தி நாடுமுழுவதும் பரவி, ப்ருக்மேன் தொழிலாளர்களுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது. மூன்று நாட்களில், தொழிலாளர்களும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொழிற்சாளைமுன்பு திரண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, துப்பாக்கி குண்டுகளையும் தாண்டி இராணுவ வளையத்தினை உடைத்தனர். பலர் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், மீட்புப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் எதிராக, தொழிலாளர்களிடம் இருந்தது கொள்கையும் நம்பிக்கையும்தான். ஆனால் இறுதியில் மக்கள் போராட்டம் வெற்றிபெற்றது. பூட்டப்பட்ட கதவுகள் உடைக்கப்பட்டன. தொழிற்சாலை மீண்டும் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது.

தொழிற்சாலையினை மீட்கும் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஒரு தொழிலாளருக்கு புற்று நோய் வந்தபோது, அவருக்கான மருத்துவ செலவினை தொழிற்சாலையே ஏற்றுக்கொண்டது. முதலாளிகளின் கீழ் அந்நிறுவனம் இருந்திருந்தால், இதுபோன்ற மனிதநேய நடவடிக்கை என்பது அணுவளவும் சாத்தியப்பட்டிருக்காது. 

மீண்டும் அதிபர் தேர்தல்; மீண்டும் முதலாளிகள்...

நிறுவனங்களை மீட்கிற இவ்வியக்கமானது மிகவும் தீவிரமாகி, 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவ்வழியில் பயணிக்கத்துவங்கிவிட்டன. அழகான அனுபவங்களைக்கொண்ட ஒரு பெருமைமிக்க போராட்டத்தில், பெரிய தடைக்கல்லொன்று அவர்கள் முன்னே வந்துநின்றது. அவர்களது வேலையையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பறித்துக்கொண்டு எங்கோ ஓடிப்போன முதலாளிகள், மீண்டும் வந்து எல்லாவற்றையும் பறிக்க முயற்சிசெய்தார்கள். இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது அவர்களுக்கு.

இதோடுமட்டுமின்றி, நாட்டையே பன்னாட்டு முதலாளிகளிடம் அடகுவைத்துவிட்டு ஓடியொளிந்துகொண்ட முன்னாள் அதிபர் "கார்லோஸ் மேனம்", மீண்டும் மக்கள்முன்பு வந்து நிற்கிறார். தன்னுடைய தவறுகளையெல்லாம் உணர்ந்து திருந்திவிட்டதாகவும், இனி மக்களுக்காக உழைக்கத்தயாராக இருப்பதாகவும் ஊடகங்கள் வழியாக உற்சாகமாகப் பேட்டியளிக்கிறார்.

மேனம் வெற்றிபெற்று மீண்டும் அதிபராகிவிட்டால், தொழிலாளிகளிடமிருந்து தொழிற்சாலைகள் அனைத்தும் மீண்டும் பறிக்கப்பட்டு முதலாளிகளிடமே ஒப்படைக்கப்பட்டுவிடும். ஏனெனில் முதலாளிகள்தான் மேனம், மேனம்தான் முதலாளிகள் என்பது நாடறிந்த உண்மை.

முதலாளிகள் எல்லோரும் மேனமை சந்தித்து தங்களது முழு ஆதரவைத்தெரிவித்தும், தொழிற்சாலைகளை மீட்டுத்தருமாறு கோரிக்கையும் விடுத்தனர்.
"எங்கள் கனவுகள் உங்களது ஒட்டுப்பெட்டிகளுக்குள் அடங்காது."
என்கிற வாசகங்களுடன் தொழிலாளர்கள் தேர்தலைப் புறக்கணித்தும் மேனமை எதிர்த்தும் சுவர்களில் எழுதி பிரச்சாரம் செய்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலைப்போன்றே, மேனம் உள்பட அதிபர் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், நிறைய இடைத்தரகர்கள் மூலம் ஏராளமான வேலையில்லாத இளைஞர்களை பணிக்கமர்த்தி, பணத்தை தண்ணியாக செலவுசெய்து பிரச்சாரம் மேற்கொண்டனர். நடைபெறப்போகிற தேர்தல் தங்களது வாழ்க்கையினை ஒரே நாளில் மாற்றிவிடாதா என்றும், புதிதாக வரப்போகிற அரசாங்கம் எதையாவது செய்து நம்மைக் காப்பாற்றிவிடாதா என்றும் ஒருவித ஏக்கம், அர்ஜெண்டினா மக்களிடம் காணப்பட்டது. அதுவே மேனமிற்கான ஆதரவாக மக்களிடையே மாறியது.

மேனமிற்கு ஆதரவு பெருகுவது கண்டு, அதனை மேற்குலக கொள்ளையர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள, ஐ.எம்.எப். இயக்குனர் அனூப் சிங் (முன்னொருகாலத்தில் தற்போதைய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சிறப்பு ஆலோசகராக இருந்தவர்) அர்ஜென்டைனா தலைநகருக்கு வந்துசேர்ந்தார். அர்ஜென்டினா நாட்டின் கடனிற்கான வட்டியினை திருப்பி செலுத்துவதற்காக மேலும் ஒரு கடனை தரத்தயாராக இருப்பதாகவும் அறிவிக்கிறார். அதற்கு ஐ.எம்.எப். விதிக்கிற விலை மிக அதிகமாக இருந்தது. 'அரசுடைமையாக இருக்கிற துறைகளை எல்லாம் தனியார்மயமாக்க வேண்டும்', 'தண்ணீர், மின்சாரம் போன்றவற்றின் விலையினை மிக அதிகமாக உயர்த்திக்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' போன்றவற்றை கட்டளையாக முன்வைத்தது ஐ.எம்.எப். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியே சந்தித்து, இக்கோரிக்கைகளை வைத்தது அனூப் சிங் தலைமையிலான ஐ.எம்.எப். குழு.
(இதே போன்ற கட்டளையிகளை ஐ.எம்.எப். மற்றும் அதன் கூட்டாளிகள் எல்லோரும் சேர்ந்து, தற்போது திவாலாகிக்கொண்டிருக்கிற அயர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற  நாடுகளில் விதிப்பதை நாம் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் நுழைந்து அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைத்து, இயன்ற அளவிற்கு சுரண்டிக்கொண்டு போவதும், சில காலம் கழித்து மீண்டும் அதே நாட்டிற்கு "கடன்" என்கிற பெயரில் உள்ளே நுழைந்து சுரண்டலைத்தொடர்வதும் தொடர்கதையாகவே இருக்கிறது.)

அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலிருந்து இரண்டாவது சுற்றுக்கு இரண்டு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒரு கார்லோஸ் மேனம், மற்றொருவர் நெஸ்டர் கிர்ஸ்னர். இரண்டாவது சுற்று தேர்தல் நெருங்கும் நேரத்தில், நாட்டு மக்களிடையே மேனமிற்கு கடும் எதிர்ப்புகள் வரத்துவங்கின. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் மேனம் தோற்றுவிடுவார் என்று கணித்தன. நாடெங்கிலும் மேனம் என்கிற பெயரையே மக்கள் வெறுத்தனர். தனது வாழ்நாளில் எந்தத்தேர்தலில் தோற்றிருக்காத மேனம், இத்தேர்தலில் தோற்றுவிடுவோமே பயம்காரணமாக தேர்தலிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். மக்கள் விரோத மேனம், தேர்தலுக்கு முன்பாகவே தோற்கடிக்கப்பட்டுவிட்டார். இதன்மூலம், நெஸ்டர் கிர்ஸ்னர் அர்ஜண்டைனாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட தொழிற்சாலைகள் - இன்றைய நிலை:

அர்ஜன்டைனாவில் தொழிலாளிகளால் மீட்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 300 யும் தாண்டிவிட்டது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் அத்தொழிற்சாலைகளில் முதலாளிகளாக இருக்கிறார்கள். ஒவ்வொரு தொழிற்சாலையாக சட்டப்பூர்வமாக தொழிலாளர்களுக்கு சொந்தமாகிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினாவின் தற்போதைய அதிபர் கிறிஸ்டினா கிர்ஸ்னர் புதியதாக "ஆலை மூடல்" சட்டமொன்றை நிறைவேற்றினார். 'அர்ஜெண்டினாவில் ஒரு தொழிற்சாலையினை அதன் முதலாளியினால் நடத்தமுடியாமற்போனால், அத்தொழிற்சாலையின் தொழிலாளர்களே ஏற்று நடத்தலாம்' என்பதுதான் அச்சட்டத்தின் முக்கிய அம்சம். இதன்மூலம் ஏற்கனவே தொழிலாளர்களால் மீட்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் தொழிற்சாலைகள் அனைத்தும் சட்டப்படி தொழிலாளர்களின் சொத்தாக மாறிவிடும்.
தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு நடத்தப்படுகிற நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்காக உயர்கிறது. தனியார் முதலாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டு தொழிலாளர்களின்வசம் நிறுவனங்கள் கைமாறுவது புதிதல்ல என்றாலும், ஒரு சோசலிச அரசு அதனைச்செய்வதற்கு பதிலாக முதன்முறையாக கீழிருந்து மேலாக உருவாகிய மாற்றமிது. ஒவ்வொரு கடைகளிலும், நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்களே முன்னின்று ஏற்படுத்திய மாற்றம்.

இன்று பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிற அயர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் இன்ன பிற நாடுகளிலெல்லாம் ஒருபுறம் மக்கள் தெருவுக்கு வந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், ஐ.எம்.எப்., யூரோப்பியன் யூனியன் மற்றும் அதன் சகாக்கள் மேலும் கடன் வழங்குவது குறித்தும், அந்நாடுகளில் தீவிர 'சிக்கன நடவடிக்கைகள்' எடுப்பது குறித்தும் பேசிக்கொண்டிருக்கின்றன. அந்நாடுகளில் மக்கள் அனைவரும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்பும் வங்கிகளின் முன்பும் நின்றுகொண்டு போராடுவதைவிடுத்து, அக்கட்டிடங்களுக்குள்ளே சென்று அனைத்தையும் ஆக்கிரமித்து/மீட்டெடுத்து மக்களுக்கானதாக மாற்றி போராடவேண்டும்... நெருக்கடியில்லாத பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது எப்படி என்பதனை ஐ.எம்.எப். மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பாடம் கற்பிக்கவேண்டும்....


0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)