சென்னையில் நல்ல வேலையில் இருப்பவர் ஜெயன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பல திருமணப்பதிவு மையங்களிலும் பதிவு செய்து இருந்தார்.
அவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது. மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது. எவ்வளவு நாசூக்கு!
மதம் மாறியும் இந்தச் சாதிப் பீடை ஒழிய மாட்டேன்கிறதே என்று கோபமடைந்த ஜெயன், அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை டயல் செய்து ஆத்திரத்துடன் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். “இந்த சாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். இந்த சாதியில் வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்ற அவரது குமுறல் மிக நியாயமானது. ஆனால் மறுமுனையில் அந்தப் பெண்மணியோ எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். எல்லா ஜாதிகளையும் ஒப்புக்கொள்ள முடிகிற ஒருவர், எஸ்.சி/எஸ்.டி ஜாதியை மட்டும் விலக்கி வைப்பது பெரும் அவமானமாக இருக்கிறது.
சாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன். உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.
பத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் சிலவற்றிலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர்.
மன்னியுங்கள் என்கிற பதத்தில் ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்பதை நாகரீக வார்த்தையாக நம்மில் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இறுக்கமும், ஏற்றுக்கொள்ளவே முடியாத மூர்க்கத்தனமான பிடிவாதமும் கூட அந்த வார்த்தைக்கான அர்த்தமாக இருக்கிறது. ஆம், எல்லாவகை கற்பிதங்களும் சமூகத்திடமிருந்தும், இம்மனிதர்களிடமிருந்தும் தானே பிறக்கிறது? அந்த சாப்ட்வேர் என்ன, தானாகவா முளைத்திருக்கும்? எவ்வளவு அழுக்குகள்தான் இந்த சமூகத்தின் மூளைக்குள் அடைந்து கிடைக்கின்றன!
நன்றி: தீக்கதிர்
இந்தியா ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடு என்பார்கள். அது எப்படி சரியாகப் பொருந்துகிறது பாருங்கள்.
ReplyDeleteமுதலாளித்துவ யுகத்தின் முன்னேற்றமான இணையத்தில் கூட சாதி பிடித்து ஆட்டுகிறது. திருமணங்களில் கலப்பை ஏற்படுத்தினால்தான் சாதி ஒழியும். சாதிக்கலப்பை ஏற்றுக் கொள்பவர்கள் கூட, வருணக் கலப்பை ஏற்பதில்லை. மதமே மாறினாலும், வருணம் நிலைப்பதை என்னவென்று சொல்ல?
இந்த நிலை மாற ... நம் எல்லோரிலும் மாற்றம் தேவை. ஒவ்வொருவரிலும் இருந்து தொடங்குவோம். ஒட்டுமொத்தமாகவும் போராடுவோம்.
இந்த பதிவை எங்கள் வலைப்பூவிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரவேண்டும்.
ReplyDeleteஒரு முறை நான் பார்த்த ப்ரோபைல் ஒன்றில் இருந்த வாக்கியம் "caste no bar for IAS, IPS or grade a officers". இது எப்படி ?
ReplyDeleteஜாதி மதம் தடை இல்லைன்னு சொல்லுறவன் வாழ்க்கைய உணர்ந்து சொல்லவில்லை.
யூதர்கள் கலீலே என்ற பகுதியில் சுமெரியர்களை வைத்திருந்தார்கள்.சுமெரியர்கள் தீண்டத்தகாதவர்கள். அவர்கள் கையால் தண்ணிர் கூட குடிக்கமாட்டார்கள்.ஏசு மீதுள்ளகுற்றச்சாட்டில் ஒன்று தீண்டாமையை எதிர்த்தது.தன் சீடர்களொடு கலீலே சென்றுசுமெரியப்பெண்ணிடம் தண்ணீர் கெட்டு அருந்தினார் அவள் வீட்டிலேயே தங்கினார்.. .கிறுத்துவம் இந்திய வடிவம் கொள்ளும் போது சிதைகிறது.மதகுருமார்கள் அவர்கள் செய்யும் பாவங்களை மறைக்கவே முடியாமல் திணருகிறார்கள்.என்ன செய்ய? காஸ்யபன்.
ReplyDeleteஇந்துக்கள் என்னதான் மதம் மாறினாலும் தனது ஜாதியை விட்டு தர மனது தயங்குகிறது. ஏனென்றால் அது அவர்களது இரத்தத்தில் ஊறியது. மேலும், யாரும் இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாறினாலும், தனது இந்து அடையாளத்தை அழிக்க இயலாது. நாடார் என்பதோ, முதலியார் என்பதோ இந்து மதத்தில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு உட்பிரிவு என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நாடார் என்றாலும், இந்து என்றாலும் ஒன்றே. அதன் படி, ஒருவர் நாடார் கிறிஸ்டியன் என்று எழுதுவது இந்து கிறிஸ்டியன் என்று எழுதுவதற்கு சமம். அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜ் புஷ், என்ன நாடாரா இல்லை முதலியாரா? கிறிஸ்துவ மதத்தில் நாடார், முதலியார் போன்ற பிரிவுகள் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும், இந்து மதத்தின் அடிப்படையில் தான் அமைந்து உள்ளது. இதற்க்கு, கிறிஸ்தவ, முஸ்லிம் மதமோ விதிவிலக்கு இல்லை.
ReplyDelete