அந்த ஜனங்களை தொட்டால் தீட்டு... பார்த்தால் பாவம்... ஆண்டைகளின் தெருக்களில் தோளில் துண்டணியக்கூடாது... காலில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது. இதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. இதை... இந்த மனு(அ)தர்மத்தை மீறினால்... சவுக்கடியும்
சாணிப்பாலும்தான் பரிசாகக் கிடைக்கும்.
இந்த கொடுமைகளெல்லாம் வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபோதுதானே என்றெண்ணி விடாதீர்கள்... ”சுதந்திர இந்தியாவிலும் இதுதான் நிலைமை... (இன்னும்கூட அப்படியான கிராமங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன...) இந்த சமூகப்புறக்கணிப்போடுதான் வயிற்றுப்பாட்டுக்கும் அந்த கூலிகள் பெரும் பாடுபடவேண்டியிருந்தது. (வெண்மனி குறித்து அறிய இங்கே சொடுக்கவும்)
அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் இதே நிலைதான். பண்ணையார்களின்... மிராசுதாரர்களின் வயல்களில்... உழவு மாடுகளைக்காட்டிலும் கூடுதலாக உழைத்தனர் இந்த ஜனங்கள்.. பெண்?.. பிள்ளைகளோடு குடும்பமே வயல்காட்டில் விழுந்து கிடந்தால்தான் கால் வயிறு கஞ்சியாவது உத்தரவாதமாகும்.
இப்படி வெங்கொடுமை சாக்காட்டில் வீழ்ந்து கிடந்த ஜனங்களை ஒன்று திரட்டியது செங்கொடி இயக்கம். வீடு... வாசல்... மனைவி... மக்களை மறந்து கம்யூனிஸ இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்கள் தஞ்சை மாவட்டத்தின் வரப்புகளெங்கும் நடந்து நடந்து... மக்களைத் திரட்டினார்கள். சாதிய அவமானங்களுக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்பியதோடு... கூலி பிரச்னையையும் செங்கொடி இயக்கம் கையில் எடுத்தது.
அதுவரை பெற்றுவந்த கூலியை உயர்த்தி ஒரு படி நெல் கூடுதலாக கேட்டார்கள் விவசாயக் கூலிகளான தாழ்த்தப்பட்ட... ஒடுக்கப்பட்ட... மக்கள். அதற்காக கூட்டம் போட்டார்கள்.... விவாதித்தார்கள்.. வயல்களில் இருந்து தெருவுக்கு வந்து போராடினார்கள்.. தங்கள் போராட்டத்தின் அடையாளமாகத்தான் செங்கொடிகளை வயல்களில் நட்டு பறக்கவிட்டனர்.
நாற்று நட்ட வளைகரங்கள் செங்கொடிகளை நட்டன... ஏரோட்டிக் கருத்தவர்கள்... போராட்டத்தில் சிவந்தனர்.... விவசாய கூலித்தொழிலாளர்கள் சங்கம் ஊருக்கு ஊர்... சேரிக்குச் சேரி.. முளைத்தது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளமுடியாத மிராசுதாரர்கள்... கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’ தொடங்கினர். செங்கொடிகளை இறக்கிவிட்டு... கூலித்தொழிலாளர் சங்கத்தை கலைத்துவிட்டு, தங்கள் சங்கத்தில் சேரவேண்டுமென நிர்பந்தித்தனர். விவசாயக்கூலிகள் மறுத்தபோது மோதல் எழுந்தது.
அடிமேல் அடிவாங்கிக்கொண்டிருந்தவர்கள், செங்கொடி தந்த தைரியத்தில் திருப்பியடிக்கத்தொடங்கினர்.. எங்கும் கலவரம்... எங்கும் அடிதடி... குடிசைகளுக்கு தீவைப்பு... எங்கும் அழுகுரல்... இதன் உச்சகட்ட கொடுமை அரங்கேறிய இடம்தான் ‘கீழ்வெண்மணி’ கிராமம்.
1968ம் ஆண்டு டிசம்பர் மாதம்... 25ம் தேதி... உலகமே கிறிஸ்துவின் வருகைக்காக தவம் கிடந்த நாளில்தான் அந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டது. அன்று காலையில் முத்துச்சாமி, கணபதி என்ற இரு கூலித்தொழிளிகளை சவரிராஜ் நாயுடு என்ற மிராசுதாரர் கட்டிவைத்து அடித்தான்... இந்த தகவல் பரவியது காட்டுத் தீ போல... நியாயம் கேட்டு செங்கொடிகளுடன் புறப்பட்டனர் கீழ்வெண்மணி மக்கள். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ‘பக்கிரிசாமி’ என்ற அடியாள் இறந்துபோனான்... அதற்காகவே காத்திருந்ததுபோல அடியாள் சேனையுடன்... துப்பாக்கி சகிதம் புறப்பட்டான் கோபாலகிருஷ்ண நாயுடு.
அன்று இரவு... கீழ்வெண்மணியை சுற்றி வளைத்து தாக்கினார்கள்... எங்கும் மரண ஓலத்துடன் நெல்லிக்காய்போல சிதறியோடியது மக்கள் கூட்டம். பாதுகாப்புக்காக பெண்களும், முதியவர்களும், சிறுவர்களுமாக 44 பேர் அங்கிருந்த ராமையாவின் குடிசைக்குள் தஞ்சமடைந்தனர். குடிசையை வெளிப்பக்கம் இழுத்துப்பூட்டி குடிசைக்கு தீவைத்தது... கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாள் கும்பல்...
இயேசு அவதரித்ததாக நம்பப்படும் அந்த இரவில் குடிசைக்குள் இருந்த 44 பேரும் தீயில் கருகி மரித்துப் போனார்கள். தப்பிக்க வழியின்றி கதறியபடியே... ஒருவரையொருவர் கட்டியணைத்தபடியே.. மரண பீதியோடிருந்த 44 உயிர்களையும் தின்றுதீர்த்தன தீயின் நாக்குகள்.
இரவு 8 மணிக்கு புகார் கொடுத்து... தகவல் சொல்லியும்... சாவகாசமாக...மறுநாள் காலையில் வந்த கீவளூர் போலீசார்.... கரிக்கட்டைகளாய் கிடந்த மனிதர்களை எண்ணிப்பார்த்து 44 என கணக்கு சொல்லிவிட்டுப்போனது... உலக வரலாற்றில் நடந்த எந்த கொடூரங்களையும்விட இது கொடுமையானது...
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது... கோபால கிருஷ்ண நாயுடு போன்ற பெரிய மனிதர்கள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுவார்கள் என இந்த கோர்ட் நம்பவில்லை’ எனக்கூறி நாயுடு விடுதலை செய்யப்பட்டான்... (பின்னாளில் சில கோபக்கார இளைஞர்கள்... வெண்மணி நெருப்பை நெஞ்சில் ஏந்தி காத்திருந்து... அவர் கணக்கை நேர் செய்தார்கள்) 1968ல் நடந்தது இந்த கொடூரம்... 42 ஆண்டுகள் கழித்து இப்போது ‘நெல்லு’ என்ற பெயரில் திரைப்படமாக வந்திருக்கிறது...
ஆனால் மேலே சொன்ன எந்த விபரங்களும் அந்தப்படத்தில் இருக்காது... 44 பேரை குடிசையில் எரித்த காட்சியைத்தவிர. இந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியது செங்கொடி சங்கம்தான்.. ஆனால் இந்த வார்த்தையே அந்த படத்தில் இல்லை... அதைவிட கொடுமை என்னவென்றால்... எந்த ஒரு காட்சியிலும்கூட செங்கொடியை கண்ணில் தென்படவில்லை. எல்லா போராட்டக்காட்சிகளிலும் கம்பும், அரிவாளும்தான் இருக்கிறதே தவிர... ஒருத்தர்கூட செங்கொடி பிடித்தபடி போராடவில்லை. ஒரு காட்சியில் 2 குண்டு குண்டானவர்களுடன் சிவப்பு துண்டு போட்டுக்கொண்டு வருவதைத்தவிர... உயிரைக்கொடுத்து இயக்கத்தை நடத்திய ஒருத்தரும் படத்தில் இல்லை.
படத்தில்... கதை நடக்கிற ஊருக்கு பெயரே கிடையாது... அந்த ஊர்க்காரங்க... இந்த ஊர்க்காரங்க... என்று சொல்லியே படத்தை முடித்துவிட்டார்கள்... படத்தில் கோபாலகிருஷ்ண நாயுடு போன்று சித்தரிக்கப்பட்டுள்ள ‘பெரியதம்பி’ எந்த ஊருக்கு மிராசுதாரர் என்றெந்த தகவலும் கிடையாது... படத்தில் ஒரே ஆறுதல் கதாநாயகியாக நடித்திருக்கிற நடிகைதான்... அவர் மட்டும் கொஞ்சம் நடிக்கலாமேம என முயற்சி எடுத்திருக்கிறார். மற்றவர்களெல்லாம் கேமிராவுக்கு நேராக கையை நீட்டி பண்யையாருக்கு எதிராக வசனம் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.
60களில் நடக்கிற கதைக்கு... 2010 ஸ்டைலில் மெட்டுக்கள்... ஆட்டங்கள்... ஆங்கிலம் கலந்த பாட்டுக்கள.... இசை எஸ்.எஸ்.குமரன்... ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரியில்லை. (அதற்கான வாய்ப்பைத்தான் இயக்குநர் தரவேயில்லையே... அவர் என்ன பண்ணுவார்....).
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் எம்.சிவசங்கர் என்பவர் (என்ன சொல்வது... ஒன்றும் சொல்வதற்கில்லை... ஆனால்... கேட்பதற்கு நிறைய இருக்கிறது... ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கறீங்க ஸார்...).
வரலாற்றையோ... வரலாற்று நிகழ்வுகளையோ படமாக்குவது கத்திமேல் நடக்கிற வேலை. கொஞ்சம் பிசகினாலும் வரலாற்றுப்பிழை நேர்ந்துவிடும். படத்தின் இயக்குநரும் ‘கீழ்வெண்மணி’ தியாக வரலாற்றை கொஞ்சம் நுணுக்கமாக படித்திருக்க வேண்டும்... அல்லது அதுபற்றிய ஆவணப்படங்களையாவது... (பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ‘ராமையாவின் குடிசை) பார்த்து விவரங்களை சேகரித்துக்கொண்டு கேமிராவை தூக்கியிருக்க வேண்டும்.
அப்பிடி மெனக்கெட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் ‘நெல்லு’ படத்தில் இல்லை. (இப்படியெல்லாம் தவறுதலாக எடுப்பதைவிட... எடுக்காமல் இருப்பதே மேல்...). பெரும் பணத்தையும்... பலரின் தூக்கங்களை பறிகொடுத்த இரவுகளையும்... உழைப்பையும் கொட்டி.. எடுக்கிற சினிமாவில்... மற்றவற்றிற்கு காட்டும் அக்கறையை கதைக்கும் கொஞ்சம் காட்டினால்தான் அது... பேர் சொல்லும் படமாக இருக்கும்... அதுவும் இதுபோன்ற வரலாற்று சம்பவங்களை படமாக்குகிறபோது... இன்னும் கூடுதலான அக்கறையும் உழைப்பும்... எதையும் மறைக்கக்கூடாது என்ற நேர்மையும் இயக்குநருக்கு மிகவும் அவசியம்... வேறென்ன சொல்லமுடியும்.
இது ‘நெல்லு’... இல்லீங்க.... ‘பதர்’...
எஸ்.கருணா
( நன்றி: நம்தினமதி நாளிதழ் )
செங்கொடியின் தியாக வரலாற்றை மறைத்திட எந்தக் கொம்பனாலும் முடியாது.
ReplyDelete