Sunday, October 14, 2012

கியூபா- நெருக்கடிகள் கடந்த மக்கள் தேசம் (பகுதி-2)

[இக்கட்டுரைத்தொடரின் முதல் பகுதி -  கியூபா - நெருக்கடிகள் கடந்த மக்கள் தேசம் (பகுதி - 1)]

80களில் சோவியத் யூனியனின் உதவியுடன், 1.4 கோடி டன் அளவிற்கு எண்ணை இறக்குமதி செய்துவந்தது கியூபா. சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 90,000 டிராக்டர்கள் கியூபாவில் பயன்பாட்டில் இருந்தன. ஏராளமான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் இராசாயன உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இயங்கிவந்தன. 1990இல் எல்லாம் தலைகீழாக மாறியது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, கியூபாவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியினை உண்டாக்கியது. எண்ணை இறக்குமதி 80 சதவீதத்திற்கும் மேலாக குறைந்தது. தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் அமைதியாகின. உணவுத்தட்டுப்பாடு உருவானது. உணவுப்பற்றாக்குறையின் பாதிப்பு மிகமோசமாக இருந்தது. கர்பிணிப் பெண்கள் இரத்தசோகையால் அவதிப்படுவதும், 5 வயதுக்கும் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவால் அவதிப்படுவதும், எடைகுறைவான குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்தது. அடுத்த இரண்டாண்டிற்குள் கியூப மக்களின் சராசரி எடை 10 கிலோ அளவிற்கு குறைந்தது. வசதியான வாழ்க்கை குறித்த எண்ணமெல்லாம் மறைந்து, உண்ண உணவு கிடைத்தாலே போதும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டனர். 

எண்ணை இறக்குமதி இல்லாமல் போனதால், மின்சார உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. நாளொன்றிற்கு 14 முதல் 16 மணிநேரம் வரை மின்சாரம் இல்லாமல், கியூபாவே இருளில் மூழ்கியது. பெரும்பாலும் அடுக்குமாடிக்கட்டிடங்களில் வாழ்கிற கியூப மக்களுக்கு, மின்சாரம் இல்லாமல் வாழ்வது சமைப்பது மிகக் கடினமாக இருந்தது. தண்ணீர் எடுப்பதற்குக்கூட சிரமப்பட வேண்டியிருந்தது. பெட்ரோல் தட்டுப்பாட்டால், கார்கள் ஓடாமல் நின்றன. பேருந்துகளுக்கும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக வேலையிடத்தை சென்றடைந்தாலும், அங்கே மின்சாரம் இல்லாமல் வேலை தடைபடும் சூழலிருந்தது. சிலநேரம் மின்சாரம் இருந்தாலும், உற்பத்திக்குத் தேவையான உதிரிபாகங்களோ மூலப்பொருட்களோ கிடைக்காத நிலைதான். அதனால் பெரும்பாலும் உற்பத்தி செய்யமுடியாத நிலையில்தான் தொழிற்சாலைகள் இருந்தன. வேலை முடித்து(!) வீடு திரும்புகிறபோது, மீண்டும் மூன்று-நான்கு மணிநேரம் பேருந்திற்காக காத்திருக்கவேண்டியதாகிவிடும். போக்குவரத்து பிரச்சனைகளை களைய, சீனாவிலிருந்து 12 லட்சம் சைக்கிள்களை இறக்குமதி செய்தும், மேலும் 5 லட்சம் சைக்கிள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தும், மக்களுக்கு விநியோகித்தது கியூப அரசு. எங்கும் எல்லோரும் சைக்கிள்களில் மக்கள் வளம் வருவதை பார்க்க முடிந்தது. மருத்துவர்களும் சைக்கிள்களில் மருத்துவமனைக்கு செல்லத்துவங்கினர்.

இச்சூழலை பயன்படுத்திக்கொண்டு, 1992இல் கியூபாவின் மீதான தடையினை மேலும் இறுக்கியது அமெரிக்க அரசு. கியூபாவில் நின்றுவிட்டு வருகிற எந்தக்கப்பலும் அடுத்த 6 மாதத்திற்கு அமெரிக்காவில் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இத்தடையின்மூலமாக கியூபாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து வந்துகொண்டிருந்த 4000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் மருத்துவ பொருட்களை கிடைக்கவிடாமல் செய்துவிட்டது அமெரிக்க அரசு. ஆண்டுகள் போகப்போக, கியூபா மீதான தடைகளை பல வடிவங்களில் அதிகரித்தது அமெரிக்க அரசு. குறிப்பாக கியூபாவில் முதலீடு செய்கிற எந்த நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் இடமில்லை என்று அறிவிக்கப்பட்டது. இவையெல்லாம் சேர்ந்து, வேறு நாடுகளிலிருந்து கியூபாவிற்கு வரும் எல்லாவித முதலீடுகளையும் உதவிகளையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தவைத்தது அமெரிக்க அரசு.

பீக் ஆயில் நெருக்கடி ஒரு புறம், செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளாதாரத் தடை ஒரு புறம் என்று இருபெரும் பிரச்சனைகளை ஒருசேர சமாளிக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது கியூபா.
 
கியூபாவின் எல்லைக்கு வெளியிலிருந்து எவ்வித உதவியும் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தாலும் அது உள்ளிருந்துதான் ஏற்படமுடியும் என்றாகிவிட்டது.
குறைந்தபட்ச அளவிலான உணவிற்கு உத்திரவாதம் கொடுத்தது கியூப அரசு. நாட்டு மக்களுக்கு, அரசு நேரடியாக உணவுப்பொருட்கள் விநியோகம் செய்தது. மாதத்தில் மூன்று வாரத்திற்கு மிகமிகக் குறைந்த விலையில் சத்தான உணவும் உணவுப்பொருட்களும் நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட்டது. இது கியூப மக்களிடையே அரசின்மீது ஒரு நம்பிக்கையை வளர்த்தது.

விவசாயம்:

90 களுக்கு முன்பு வரையிலும் கியூபாவின் விவசாயம் "பசுமைப்புரட்சியில்" திளைத்திருந்தது. அதாவது பெரும்பாலும் எண்ணைவளத்தை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டிலும், இரசாயன உறங்களாலும், டீசல் நிரப்பப்பட்ட டிராக்டர்களின் உதவியுடனுமே கியூபாவின் விவசாயம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கியூபாவின் விவசாயம், பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எண்ணை வளங்களினால் இயங்கும் தொழிற்சாலைகளை பெரிதும் நம்பியிருந்தது. பல தடைகளைத்தாண்டி, இனி புதிய டிராக்டர்களோஅல்லது ஏற்கனவே இருக்கிற டிராக்டர்களுக்கான உதிரிபாகங்களோ, இயங்குவதற்குத் தேவையான பெட்ரோல் டீசலோ கிடைக்காது என்பது உறுதி. உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றுக்கும் அதே நிலைதான். அதனால் விவசாயத்திலும் மாற்று வழி கண்டறியவேண்டிய நிலையேற்பட்டது.

விவசாயப்புரட்சி - நகர்ப்புற விவசாயம்:
எரிபொருள் இல்லாத நிலை, உணவில்லாத நிலையினை தோற்றுவித்தது. இதனால் நகரத்தின் மையப்பகுதியில்கூட மக்கள் ஆங்காங்கே விவசாயம் செய்யத்துவங்கினர். மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என்கிற பேதமெல்லாம் அங்கிருக்கவில்லை. அதுவும் இயற்கை வேளாண்மைக்கு மாறினார். 'இது உன்னுடைய நிலமா, என்னுடைய நிலமா' என்கிற சண்டைகளின்றி, 'இது நம்முடைய நிலம், வா விவசாயம் செய்யலாம்' என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டே சாலையருகே, வீடுகளுக்கருகே, பேருந்துநிலையமருகே என்று வீணாகக்கிடக்கிற எல்லா நிலங்களையும் விளைநிலங்களாக மாற்ற முயற்சியெடுத்தனர் கியூப மக்கள். இம்முயற்சியே, ஏராளமான உலகத்தடைகளிருந்தும், கியூபாவை மிகப்பெரிய பஞ்சத்திலிருந்து காப்பாற்றியது. துவக்கத்தில், தங்களின் உணவுத்தேவைக்கு வேறு வழியின்றி துவங்கிய இம்முயற்சியில் பல தவறுகள் செய்தனர் மக்கள். ஆனால் தவறுகளிலிருந்து பாடம் பயின்று மீண்டும் மீண்டும் முயன்று, இயற்கை வேளாண்மையினை தொடர்ந்தனர். நகரங்களில் விவசாயம் செய்கிறபோது, போதிய இடமின்மை, கழிவுகளற்றும் முறை, எலித்தொல்லை எனப்பல இடையூறுகள் வந்தபோதும், அவற்றுக்கெல்லாம் மெதுமெதுவாக தீர்வுகளைக்கண்டறிந்தனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து இரண்டு "நிலைகொள் வேளாண்மை" வல்லுனர்கள் (http://en.wikipedia.org/wiki/Permaculture) கியூபாவிற்கு உதவ முன்வந்தனர். மண்வளத்தையும்  பூமியின் மற்ற உயிரினங்களையும் பாதிக்காமல் விவசாயம் செய்யும் சில யுக்திகளை கியூப மக்களுக்கு சொல்லிக்கொடுத்தனர். கட்டிடங்களுக்கு மேலும் தோட்டங்கள் அமைப்பது குறித்த பயிற்சியும் பெற்றார்கள் கியூப மக்கள்.
ஏராளமான "நிலைகொள் வேளாண்மை" மையங்கள் துவங்கப்பட்டன. இயற்கை விவசாயம் செய்வதற்கான எல்லாவித பயிற்சிகளும் எல்லா மக்களுக்கும் இலவசமாக அங்கே வழங்கப்பட்டது. அம்மையங்களுக்கு மக்களின் வருகை அதிகரித்துக்கொண்டே போனது. நாளடைவில் அம்மையங்கள் அனைத்தும், வெறும் விவசாய பயிற்சி மையங்களாக இல்லாமல், மக்கள்கூடும் இடமாகவும், அவர்களது அனைத்து தேவைகளுக்குமான ஒரு ஆலோசனை மையங்களாகவும் மாறின. உதாரணத்திற்கு, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென்று அம்மையங்களுக்கு வருகைதந்தால்கூட, அடுத்து எங்கே செல்லவேண்டுமென்கிற தகவல்கள் அங்கே கிடைக்கப்பெற்றது. ஒருவருக்கொருவர் தங்களின் அறிவினையும் அன்பினையும் பகிர்ந்துகொள்ளும் இடமாக மாறிற்று. 
மரம் நடுவது எப்படி, விவசாயம் செய்வது எப்படி என்று மட்டுமே கற்றுக்கொள்ளும் ஒரு தொழிற்நுட்ப நிலையமாக இல்லாமல், மனித உறவுகளை வளர்த்துக்கொள்ளும் இடமாக மாறியது. ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வதின் மூலமாக மட்டுமே, இச்சமூகம் ஒட்டுமொத்தமாக முன்னேற முடியுமென்பதை கற்றுக்கொண்டனர் மக்கள்.

வேலைக்கு சென்று சம்பாதிப்பது ஒரு புறமிருந்தாலும், விவசாயத்தையும் தொடர்ந்தனர் எல்லா தரப்பு மக்களும். இதன்மூலம் கூடுதல் வருமானமும் கிடைத்தது, உணவுத்தேவையும் மெல்ல மெல்ல பூர்த்தியானது.
இதன்மூலம் உலகின் வேறெந்த நாட்டிலும் நடக்காத ஒரு அதிசயம் நிகழ்ந்தது கியூபாவில். கியூபாவிலேயே மற்றனைத்து தொழிலையும் விட, மிக அதிகமான வருமானம் ஈட்டுவோர் விவசாயிகளாயினர். விவசாயம் ஒரு இலாபகரமான தொழிலாயிற்று. இதனால் விவசாயத்தை நோக்கி பலர் ஈர்க்கப்பட்டு வரத்துவங்கினர். கியூபாவில் விவசாயிகள் ஏழைகளாக இருக்கமுடியாது என்கிற நிலை உருவாயிற்று. 
"ஒரு சமூகத்தில் விவசாயி என்றுமே ஏழையாக இருக்கக்கூடாது. ஏனெனில், அவன் மட்டுந்தான் அவனுடைய உணவினை காசு கொடுத்து வாங்கத்தேவையில்லை. அதோடு மட்டுமில்லாமல், அவன் உற்பத்தி செய்கிற பொருட்களை விற்று பணமாக்கவும் முடியும். ஆக விவசாயிகளுக்கு இரட்டை இலாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலை கியூபாவில் உருவாகியது."
கியூப தலைநகரான ஹவானாவில் மட்டுமே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் இருக்கின்றன. ஆங்காங்கே உற்பத்தி செய்யப்பட காய்கறிகளும் பழங்களும் போக்குவரத்து வசதி தேவைப்படாமல் உழவர் சந்தைகளுக்கு கொண்டுவந்து விற்கப்படுகின்றன. தலைநகரான ஹவானாவின் ஒட்டுமொத்த உணவுத்தேவையில் 50 சதவீதத்திற்கும் மேலாக அந்நகரிலேயே செய்யப்படும் விவசாயத்தால் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. 22 லட்சம் நகர உணவு கொடுக்கிறது இப்புதிய நகர விவசாயமுறை. ஒரு நாட்டின் தலைநகரமே விவசாய நகரமாக மாறியிருக்கிறது. சிறு நகரங்களில் இவ்விவசாய முறையானது, 80% முதல் 100% வரை மக்களின் உணவுத் தேவையினை பூர்த்திசெய்கிறது. 

உணவுப்போக்குவரத்து செலவு பெருமளவில் குறைந்தமையால், விவசாயத்திற்கு பெட்ரோல் உள்ளிட்ட எண்ணையின் தேவை வெகுவாகக் குறைந்தது. ஏற்கனவே "இயற்கை வேளாண்மை" மற்றும் "நிலைகொள் வேளாண்மை" போன்றவற்றால் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எண்ணை தேவைகள் அறவே இல்லாமல் போயிற்று. இப்படிப்பட்ட நகர்ப்புற விவசாயத்திட்டமானது, நாட்டின் 169 நகராட்சிகளில் 1,40,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்திட்டம் மிகவும் உதவிகரமானதாகவும் பெருமை சேர்க்கும் திட்டமாகவும் மாறிற்று.

விவசாயப்புரட்சி - பேண்தகு விவசாயம்:
பீக் ஆயில் நெருக்கடிக்கு முன்பே கியூபாவில், பேண்தகு விவசாயம்(http://en.wikipedia.org/wiki/Sustainable_agriculture) குறித்து கியூப ஆய்வாளர்கள் சில ஆய்வுகளை துவங்கியிருந்தது, ஓரளவிற்கு அவர்களுக்கு உதவிற்று.

ஏற்கனவே விவசாயம் செய்யப்படாமல் புதிதாக விவசாயம் துவங்கப்பட்ட நகரத்தின் மைய இடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்துவதில் அதிக அளவில் பிரச்சனைகள் இருக்கவில்லை. இதற்கு மக்களின் ஒற்றுமையும் கைகொடுத்தது. ஆனால் ஆண்டாண்டுகளாக விவசாயம் செய்துவந்த கிராமப்புற விளைநிலங்களில் பெரிய பிரச்சனையொன்று இருந்தது கியூப மக்களுக்கு. பல ஆண்டுகளாக இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வந்தமையால், நிலத்தில் வீரியம் குறைந்திருந்தது. பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற மண் உருவாவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது, ஆனால் இரசாயன உரங்கள் போட்டு அதனை அழிப்பதற்கு ஒரு ஆண்டுகளே போதுமானதாக இருக்கிறது. உதாரணத்திற்கு மண்ணில் பயிர் வளர்சசிக்கு உதவிகரமாக இருக்கும் மைக்ரோ-ப்ளோரா மற்றும் மைக்ரோ-பானா போன்ற நுண்ணுயிர்களை இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அழித்துவிடும்.   

மண் என்பதும் ஓர் உயிர்தான். மண்ணின் முதல் மூன்று அங்குலம் மிக முக்கியமானது. இரசாயனங்களை தெளிப்பதால், மண்ணின் வளம் முழுக்க எளிதில் பாழாகிவிடும். கியூபாவிலும் அதுதான் நடந்தது. மண்ணை மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றபடி மாற்றி உற்பத்தியினை துவங்குவதற்கு, 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆய்வு செய்து கண்டறிந்தனர். இதனை செய்வதற்கு காலமும், உழைப்பும், பணமும் தேவைப்பட்டது. ஆனால் என்னவானாலும் சரி, மண்ணுக்கு சேதம் விளைவிக்காமல் செய்வது என்று முடிவெடுத்தனர். பெரிய டிராக்டர்களை வைத்து மண்ணை தலைகீழாக புரட்டிப்போட்டெல்லாம் செய்யாமல், இயற்கையின் சுழற்சியோடு இணைந்து செய்தனர். அதனால் இயற்கை விவசாயம் குறித்த ஆய்வுகளை முடுக்கிவிட்டது கியூப அரசு. இனியும் பூச்சிக்கொல்லிகளாலும் இரசாயன உறங்களாலும் மண்ணை சேதப்படுத்தி உற்பத்திசெய்யும் உணவினை உண்பதில்லை என்கிற எண்ணம் மக்களிடைய உருவாயிற்று.

எல்லா நிலங்களையும் வளமிக்கதாக அதுவும் செயற்கை இரசாயங்களைப் பயன்படுத்தாமல் செய்யவேண்டுமென்பதை குறிக்கோளாகக் கொண்டு அரசு தரப்பிலிருந்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான டன் அளவிற்கு இயற்கை உரம் தயாரிக்க ஒரு ஒருங்கிணைந்த திட்டம் தீட்டப்பட்டது. வீடுகளிலிருந்து கழிவுகள், அரிசி உமிகள், மற்றும் இன்னபிற இயற்கை பொருட்களைக் கொண்டு கூட்டுரம், கலப்புரம் மற்றும் குப்பையுரம் போன்ற இயற்கை உரங்கள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இன்று கியூபாவில் 80% விவசாய உற்பத்தி, இயற்கை விவசாயத்தின் மூலமே நடைபெறுகிறது.

விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் பூ
ச்சிகளை பரவாமல் தடுக்க புதியதொரு முறை கையாளப்பட்டது. ஒரே பயிரை மிகப்பெரிய இடத்தில் விளைவிக்காமல், சிறு சிறு பயிர்நிலங்கலாக மாற்றினர். ஒவ்வொரு சிறுநிலத்திலும் ஒவ்வொரு விதமான பயிரை வளர்த்தனர். இதனால், ஒரு விதமான பயிரை பூச்சி தாக்கினால், அதன் இழப்பு இச்சிறு நிலத்திற்குள்ளேயே முடிந்துவிடும். ஒரு லட்சம் மக்காசோள செடியினை ஒரே இடத்தில் வளர்க்கிறபோது, ஒரு பூச்சி உருவானால்கூட ஒருலட்சம் செடிகளையும் தாக்கிடும். அத்தனையையும் அழிப்பது கடினமான காரியமும் கூட. அதனால், அதே நிலத்தில், பல விதமான பயிர்களை வளர்ப்பதன்மூலம், ஒரு விதமான செடியை தாக்கும் பூச்சி மற்றொரு விதமான செடியினை தாக்காது என்பதால், பூச்சிகளின் அழிப்பது எளிதான காரியமாகிடும்.

கியூபாவிலேயே செயற்கை இரசாயனங்கள் கலக்காத பல விதமான இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்று மத்திய அமெரிக்க நாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதியும் செய்கிறார்கள். (குறிப்பு: ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் பொறுத்தவரை கியூபாவிற்கு ஒரு மிகப்பெரிய அனுகூலமான ஒன்று, லத்தீன் அமெரிக்காவின் மக்கள் தொகையில் கியூபா வெறும் 2% தான், ஆனால் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையில் 11%).

கியூபாவின் கடும்வெயில் காரணமாக, சில பயிர்களை விளைவிக்கமுடியாத சூழலும் உண்டு. எனவே இதனை சமாளிக்க, புதுவிதமான வலைகளைக்கொண்ட கூண்டுகள் போன்றதொரு அமைப்பினை உருவாக்கினர். இதன்மூலம், பூச்சிகள் தாக்குவதும்/பரவுவதும் குறைந்தது. 80களில் 21,000 டன் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலைமாறி, இன்று வெறும் 1000 டன் தான் பயன்படுத்தப்படுகிறது. காட்டினை யாரும் செயற்கையாக உரங்கள் போட்டு வளப்படுத்துவதே இல்லையே. ஆனால் மரங்கள், செடிகள் என எத்தனை செழிப்பாக காட்டினில் வளருகின்றன. அதைப்போன்ற சூழலினை நாமும் நம்முடைய விவசாயத்தில் உருவாக்கினால், நிலமும் மிஞ்சும், உணவும் கிடைக்கும் என்பதுதான் கியூபாவின் புதிய தாரகமந்திரம். இம்முறையினை துவக்க, ஆரம்பத்தில் மிகக்கடினமாக உழைக்கவேண்டியிருக்கும். ஆனால அதன்பின்னர் தன்னுடைய வேலையினை செவ்வன செய்யும். இயற்கையோடு இனைந்து விவசாயம் செய்யவேண்டுமே தவிர, இயற்கைக்கு எதிராக அல்ல என்பதனை கியூப மக்களும் அரசும் நன்கு புரிந்துவைத்திருந்தார்கள்.

பீக் ஆயில் நெருக்கடிக்குப் பின்னர், கியூபாவில் நிலத்தை உழுவதற்கு டிராக்டர்களுக்குப்பதிலாக மாடுகளையே பயன்படுத்தத் துவங்கினர். டிராக்டர்களுக்கு டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிறைய தேவைப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தில் அதிக அழுத்தம் கொடுத்து மண்ணின் வளத்தை கெடுத்துவிடும். அதேநேரத்தில் இரண்டு மாடுகளை வைத்து உழுவதும், ஒரு டிராக்டரை வைத்து உழுவதும் ஒன்றல்ல. ஏனெனில், டிராக்டரில் உட்கார்ந்துகொண்டு 8 மனிநேரம்கூட ஓய்வெடுத்துக்கொண்டே உழலாம். ஆனால் மாடுகள் அப்படியல்ல, ஒரு முறை நிலத்தை சுற்றிவந்ததும் ஓயவெடுக்கத்துவங்கிவிடும். எனவே மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் பயிற்சிகொடுக்கவேண்டியிருந்தது. டிராக்டர்களை பயன்படுத்தவில்லையென்றால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை எடுத்துச்சொல்லி விவசாயிகளை மனதளவில் தயார்படுத்தவேண்டியிருந்தது. மாடுகளைப் பயன்படுத்துவதால், எவ்வளவு பணம் மிச்சமாகும் என்றும், எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும் என்றும், சுற்றுச்சூழலும் மண்ணும் எந்தளவிற்கு மாசுபடாமல் இருக்கும் என்பதையும் விவசாயிகளுக்கு சொல்லிப் புரியவைக்கவேண்டியிருந்தது. டிராக்டர்கள் இல்லாத காலத்தில் மாடுகளை உழவைத்து விவசாயம் செய்த வயதுமுதிர்ந்த விவசாயிகளை அழைத்து வந்து, மற்ற விவசாயிகளுக்குப் பயிற்சிகொடுக்கப்பட்டது. ஓராண்டிற்குள் எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவராவது விவசாயிகளின் உதவிக்கு தயாராக இருக்கிற நிலை உருவாயிற்று. ஆரம்பத்தில் வேறுவழியின்றிதான் விவசாயிகள் இம்முறைக்கு மாறினார். ஆனால் சில ஆண்டுகளில், அதன் பயனறிந்து இம்முறையினையே தொடர்ந்தனர்.


விவசாயப்புரட்சி - நிலப்பகிர்வும் கூட்டுறவும்:
உணவு உற்பத்தியினை பெருக்குவதற்கு, உள்ளூர் விவசாயிகளுடன் இனைந்து பல திட்டங்களை வகுத்தது கியூப அரசு. அரசுக்குச் சொந்தமான 40% விவசாய நிலங்களும் கூட்டுறவு சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இலவசமாகவோ, கட்டணமில்லா வாடகைக்கோ சிறு விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டன. அரசு தலையீடு அதிகமின்றி, நிலம் குறித்து முடிவெடுக்கும் உரிமை மக்களிடமே விடப்பட்டது. ஆனால் இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஒன்று: நிபந்தனையாக, கொடுக்கப்படுகிற நிலத்தில் விவசாயிகள், விவசாயம் செய்யவேண்டும். இல்லையென்றால் நிலத்தினை அரசு எடுத்துக்கொண்டு வேறு விவசாயிக்கு கொடுத்துவிடும். இரண்டாவது நிபந்தனை: விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் நிலத்திற்கோ உற்பத்திக்கோ, எந்தவித வரியும் செலுத்தவேண்டாம். ஆனால், அந்நிலத்தை வேறொரு தேவைக்கு அரசு கேட்டால், திருப்பித்தர வேண்டும். 12% முதல் 15% வரையிலான நிலங்களை கியூபாவில் தனிமனிதர்கள் சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் கியூபாவில் ஏக்கருக்கு அதிகளவில் உற்பத்தி செய்கிறார்கள். இரண்டாவது இடத்தில், புதிதாக துவங்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. மூன்றாவதாக அரசு நிலங்களின் உற்பத்தியளவு இருக்கின்றன.

சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் தங்களது நிலத்தை கூட்டுறவு சங்கங்களிடம் ஒப்படைக்காமலே, அவை வழங்கும் விதைகளையும், சேவைகளையும் கடன் வசதிகளையும் பெற்றுக்கொண்டு பயனடையலாம். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கிராமங்களுக்குச் அரசிடமிருந்து நிலம்பெற்று விவசாயத்தை தொடங்கியிருக்கின்றனர்.

மக்கள் சமூகம் மாறியிருக்கிறது. பெரும்பாலான விவசாயிகளும் தோட்டவுரிமையாளர்களும் ஒருவருக்கொருவர் தங்களது தோட்டங்களில் விளைவதை பகிர்ந்துகொள்கின்றனர். அருகிலிருக்கும் வயதானவர்களுக்கும், குழந்தைகள் காப்பகங்களுக்கும், பள்ளிகளுக்கும், உழைப்பு மையங்களுக்கும், கர்பிணிப்பெண்களுக்கும் இலவசமாக உணவு விநியோகம் செய்கின்றனர். இதனை யாருடைய கட்டாயத்தினாலும் அவர்கள் செய்யவில்லை, மக்களாகவே விருப்பப்பட்டு செய்கிறார்கள். தங்களால் முடிந்த பங்களிப்பை இச்சமூகத்திற்கு செய்யவேண்டுமென்கிற எண்ணம்தான் அவர்களை செய்யவைக்கிறது. அக்கம்பக்கத்து மனிதர்களிடம், "எங்கள் தோட்டத்தில் விளைந்த பழங்களை கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிட்டுப் பாருங்களேன்", "எனக்கு கொஞ்சம் உப்பு வேணும்" என்று ஒருவருக்கொருவர் அன்பாகப் பழகுவது மிகப்பெரிய சமூக மாற்றங்களே.

(தொடரும்....)

[இக்கட்டுரைத்தொடரின் முதல் பகுதி -  கியூபா - நெருக்கடிகள் கடந்த மக்கள் தேசம் (பகுதி - 1)]

 -இ.பா.சிந்தன்

5 comments:

  1. athu naadu. athaip paarththu munnetram vendum enRu theedi odu.cuba one salute to and to your leaders

    ReplyDelete
  2. கியூபா மக்கள் தேசம்........
    நமது நாடு??????????????????

    ReplyDelete
  3. அனைவரும் அனைத்துசூழ்னிலைகளையும் எதிர்கொண்டு சமாலிக்க தயராக இருக்கவேண்டும் என்பதை உணரவைக்கிறது கியுபா வின் மக்கள் சமாலித்து சாதித்து இருக்கிறார்கள்.

    கியுபா மக்களுக்கு ஒரு வணக்கம்.

    ReplyDelete
  4. உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய நாடு கியூபா.அமெரிக்காவை எவ்வளவு பெரிய வல்லரசு நாடுகளும் எதிர்க்க
    முடியவில்லை.கியூபாவிற்கு முன் அமெரிக்கா பலமுறைத் தோற்று விழுந்துள்ளது. அதேநேரம் அமெரிக்கா முன்பு கியூபா சுயமரியாதையோடு நிமிர்ந்து வாழ்கிறது !
    (குறிப்பு : அமெரிக்காவிற்கு எதிராக போராடி வரும் கியூபா நாட்டைச் சிறப்பு செய்யும் விதத்தில் என் மகளுக்கு 2006 ஆம் ஆண்டு "கியூபா" எனப் பெயரிட்டேன்.இந்தத் தகவலை பிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் மூலம் வெளிப்படுத்தினேன்.அவரும் வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்)

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)