Friday, December 30, 2011

தூக்கு


அது பர்மாவில் மழையில் நனைந்திருந்த ஒரு காலைநேரம். மஞ்சள் வெள்ளீயத்தாள் போன்ற மங்கலான மஞ் சள் ஒளி சிறையின் உயர்ந்த மதில்கள் மீது சாய்ந்திருந்தது. மரண தண்டனைக் கைதிகளின் அறைகளுக்கு வெளியே நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம்;முன்புறம் இரட்டைக்கம்பிகள் கொண்ட, மிருகங்களை அடைத்துவைக்கும் கூண்டுகள் போன்ற அறைகள் வரிசையாக இருந்தன. ஒவ்வொரு அறையும் பத்தடிக்கு பத்தடி அளவு கொண்டது; மரத்தாலான ஒரு படுக்கையும் தண்ணீர்க்குடமும் தவிர அவற்றுக்குள் வேறொன் றுமில்லை. அவற்றுள் சிலவற்றில் மாநிற மனிதர்கள் தங்கள் உடல்களை போர்வையால் சுற்றிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் மரண தண்டனைக் கைதிகள்; இன்னும் ஓரிரு வாரங்களில் தூக்கிலிடப்படப் போகிறவர்கள்.

எங்களுடைய கைதி அவரது அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அவர் ஒரு இந்து; உருவில் மிகச் சிறியவர்; குடுமி தவிர தலை முழுமையாக மழிக்கப்பட்டிருந் தது; தெளிவற்ற கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது. பெரிய, கனமான மீசை வைத்திருந்தார்; திரைப்படங்களில் வரும் நகைச்சுவை நடிகரைப்போல அவரது உட லின் அளவிற்கு ஒவ்வாத வகையில் நகைப் பிற்கிடமான அளவு மிகப்பெரிய மீசை. உயரமாக வளர்ந்திருந்த ஆறு இந்திய சிறைக்காவலர்கள்  அவருக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள்; அவரை தூக்கு மேடைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் அருகில் நின்றிருந்தனர்; மற்றவர்கள் அவருக்கு கைவிலங்கு மாட்டி, அதன் சங்கிலியை விலங்கிற்குள் சுற்றி, தமது இடுப்பு பெல்டுடன் பிணைத்துக் கொண்டனர்; அவரது கைகளை அவருடைய உடலுடன் இறுக்கமாகச் சேர்த்துக் கட்டினர். அவருக்கு மிக நெருக்கமாக முண்டியடித்துக் கொண்டிருந்த அவர்களது கைகள் எப்போதும் அவரது உடலின் மீதே இருந்தன; வருடிக் கொடுப்பது போலவும், எச்சரிக்கையாகவும் அவரைப்  பிடித்திருந்தன. அவரைத் தொட்டு உணர்ந்து கொண்டே இருப்பதன் மூலம் அவர் தங்கள் பிடியில்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்வதுபோல பற்றியிருந்தனர். இன்னும் உயிருள்ள மீனை, தண்ணீருக்குள் தாவிவிடக்கூடிய மீனைப் பிடித்திருப்பதுபோல. ஆனால், அவர் எதிர்க்காமல் அமைதியாக நின்றிருந்தார்; என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் போல் தனது கைகளை தளர்ச்சியாகக் கயிற்றுக்குக் கொடுத்திருந்தார்.

கடிகாரம் எட்டு முறை ஒலித்தது; தூரத்தில் பாசறையிலிருந்து கொம்பொலி ஈரக் காற்றில் தனியே மிதந்து வந்தது. எதையோ யோசித்த வண்ணம் எங்களிடமிருந்து தனியே பிரிந்து நின்று தன்னிடமிருந்த கைத்தடியால் சரளைக்கற்களைக் குத்திக் கிளறிக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் அந்த ஓசை கேட்டு நிமிர்ந்தார். அவர் ராணுவ மருத்துவராக இருந்தவர்; டூத் பிரஷ் போன்ற வெள்ளை மீசையும், கரகர குரலும் கொண்ட வர். ‘கடவுளே, பிரான்சிஸ் சீக்கிரம் சீக்கிரம்’ என்றார், எரிச்சலுடன். ‘இந்த மனிதன் இந்நேரம் செத்துப் போயிருக்க வேண்டும். இன்னுமா நீ தயாராகவில்லை?’.

தலைமை சிறைக்காவலரான பிரான்சிஸ் ஒரு திராவிடர்; குண்டாக இருந்த அவர் உடற் பயிற்சி ஆடையும், தங்க பிரேம் போட்ட கண்ணாடியும் அணிந்திருந்தார்; ‘இதோ ஐயா, இதோ’ என்று கையசைத்த வண்ணம் வெறுமையாகக் கூறினார். ‘எல்லாம் திருப்திகரமான வகையில் தயாராக இருக்கிறது. தூக்கிலிடுபவர் காத்துக் கொண்டிருக்கிறார். நாம் போகலாம்’.

‘நல்லது, அப்படியானால் வேகமாக நடந்து செல்லுங்கள். இந்த வேலை முடிகிறவரை யில் கைதிகளுக்குக் காலைச் சிற்றுண்டி கொடுக்க முடியாது’.

நாங்கள் தூக்குமேடையை நோக்கி நடந் தோம். கைதியின் இருபக்கமும் இரு சிறைக்காவலர்கள் தங்கள் தூப்பாக்கிகளை கீழ் நோக்கி சாய்த்துப் பிடித்த வண்ணம் நடந்து வந்தனர். மற்றும் இருவர் அவரது கைகளையும் தோள்பட்டைகளையும் இறுகப் பற்றிய வண்ணம் அவருக்கு மிக நெருக்கமாக நடந்துவந்தனர்; ஏககாலத்தில் அவரைத் தள்ளிக்கொண்டும், அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டும். மாஜிஸ்டிரேட்டுகளும் அவர்களைப் போன்றவர்களுமான எஞ்சிய நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தோம். ஒரு பத்து கெஜம் நடந்திருப்போம்; எங்களது ஊர்வலம் எவ்வித உத்தரவோ எச்சரிக் கையோ இன்றி திடீரென்று நின்றது. ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது; எப்போது என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு நாய் சிறைச்சாலைக்குள் தோன்றியது.

சத்தமாகக் குறைத்துக்கொண்டே எங்களுக்கு மத்தியில் வந்தது; அத்தனை மனிதர்களை ஒன்றாகப் பார்த்த மகிழ்ச்சியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே எங்களைச் சுற்றித் சுற்றித் தாவியது. அது ரோமங்கள் நிறைந்த பெரிய நாய்; ஏர்டேல் வகைக் கலப்பினம். ஒருகணம் எங்களைச் சுற்றி இறுமாப்புடன் நடந்தது; பின்னர் எவரும் தடுக்கும் முன்னர் அது கைதியை நோக்கிப் பாய்ந்து அவரது முகத்தை நக்க முயற்சித்தது. நாயைப் பிடிக்கவேண்டும் என்பதுகூட தெரியாமல் எல்லோரும் திகைத்துப்போய் விட்டோம்.

‘இந்தக் கொடூரமான மிருகத்தை யார் உள்ளே விட்டது? யாராவது அதைப் பிடியுங்கள்’ என்று கண்காணிப்பாளர் கோபமாகக் கூறினார்.  பாதுகாப்பிலிருந்து விலகிய ஒரு சிறைக்காவலர் அலங்கோலமாக நாயை விரட்டிக் கொண்டு ஓடினார். ஆனால், அது அவரது பிடிக்குள் சிக்காமல், எல்லாவற்றையும் விளையாட்டின் ஒருபகுதியாக எடுத்துக் கொண்டது போல், துள்ளிக் குதித்தாடியபடி ஓடியது. கை நிறைய கற்களை எடுத்துக் கொண்ட ஒரு இளம் யுரேசியக் காவலர் நாயைக் கல்லால் அடித்து விரட்டிவிட முயற்சித்தார்; ஆனால், அது கற்களிடமிருந்து தப்பித்து மீண்டும் எங்களை நோக்கி வந்தது. அதன் குரைப்புச் சத்தம் சிறைச்சுவர்களில் எதிரொலித்தது. இரண்டு சிறைக்காவலர் களின் பிடியில் இருந்த கைதி இதுவும் தூக்கி லிடுவது தொடர்பான ஒரு சம்பிரதாயம் என நினைத்துக்கொண்டவர் போல் ஆர்வமின்றி பார்த்துக் கொண்டிருந்தார். பல நிமிடங்களுக்குப் பின்னர் யாரோ ஒருவர் அந்த நாயைப் பிடித்துவிட்டார். பின்னர் நாங்கள் என்னுடைய கைக்குட்டையை அதன் கழுத்தில் சுற்றி இழுத்துக்கொண்டு மேலே நகர்ந்தோம். நாய் இன்னும் திமிறிக் கொண்டும், சிணுங்கிக்கொண்டும் இருந்தது.

தூக்குமேடை இன்னும் நாற்பது கெஜம் தூரத்தில் இருந்தது. எனக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த கைதியின் வெற்று முதுகைப் பார்த்தேன். கட்டப்பட்ட கை களுடன் நயமின்றி, ஆனால் தடுமாறாமல் உறுதியாக நடந்தார்; எப்போதும் தன்னுடைய முழங்கால்களை நேராக வைக்காத இந்தியராக சற்று குலுங்கி குலுங்கி நடந்தார். அவர் ஒவ்வொரு அடி வைக்கும்போதும் அவரது தசைகள் மிகச்சரியான இடத்திற்குச் சரிந்து வந்தன, அவரது குடுமி மேலும் கீழும் ஆடியது, ஈரமான சரளைக்கற்களில் அவரது கால்கள் தடம் பதித்தன. அவரது தோள்களை சிறைக்காவலர்கள் இறுகப் பற்றியிருந்த போதிலும் பாதையிலிருந்த சேற்றுக் குட்டையைத் தவிர்ப்பதற்காக அவர் ஒரு முறை சற்று விலகி நடந்தார்.

அது புதிர்தான்; ஆனால், ஆரோக்கியமான, சுயநினைவுள்ள ஒரு மனிதனை அழிப்பதென்றால் என்னவென்று அந்த கணம்வரையிலும் நான் உணர்ந்திருக்கவில்லை. சேற்றுக்குட்டையைத் தவிர்ப்பதற்காக அந்த மனிதர் சற்று விலகி நடந்ததைப் பார்த்த போது, முழுவீச்சில் இருக்கும் ஒரு வாழ்க் கையை வெட்டிச் சுருக்குவதன் மர்மத்தையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத தவறையும் கண்டேன். இந்த மனிதர் செத்துக் கொண்டிருக்கவில்லை. நம்மைப் போலவே அவரும் உயிருடனே இருந்தார். அவரது உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கிக் கொண்டிருந்தன; குடல்கள் உணவைச் செரித்துக்கொண்டிருந்தன; தோல் தன் னைத்தானே புதுப்பித்துக் கொண்டிருந்தது; நகங்கள் வளர்ந்து கொண்டிருந்தன; திசுக்கள் உருவாகிக் கொண்டிருந்தன; மனப் பூர்வமான முட்டாள்தனத்துடன் அனைத்தும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தன. தூக்குமேடையில் அவர் நின்று கொண்டி ருக்கும்போதும், வாழ்வதற்கு ஒரு நொடியில் பத்தில் ஒரு பாகம் நேரம் மட்டுமே இருக்கும் வகையில் மேடை விலகி அவர் கீழே விழும் போதும் அவரது நகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும். அவரது கண்களால் மஞ்சள் நிறக் கற்களையும், சாம்பல் நிறச் சுவர்களையும் பார்க்க முடிந்தது; அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது; அவரால் முன்னுணர முடிந்தது; அவரால் பகுத்தறிய முடிந்தது. சேற்றுக் குட்டைகளையும் பகுத்தறிய முடிந்தது. அவரும் நாங்களும் ஒன்றாக நடந்துகொண்டிருந்த, ஒரே உலகத்தை பார்த்துக் கொண்டிருந்த, கேட்டுக் கொண்டிருந்த, உணர்ந்து கொண்டிருந்த, புரிந்து கொண்டிருந்த ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். இன்னும் இரண்டு நிமிடங்களில், சொடக்கென்ற ஒரு அதிவிரைவான  முறிவில், ‘இருவரில்’ ஒருவர் இறந்திருப்போம். ஒருவர் அறிவற்றவர், ஒருவர் உலகமற்றவர்.

சிறையின் பிரதானப் பகுதியிலிருந்து தனியாக ஒரு சிறு முற்றத்தில் தூக்குமேடை இருந் தது. உயரமான முட்புதர்கள் அளவுக்கு மீறி வளர்ந்திருந்தன. அது ஒரு கொட்டகையின் மூன்று பக்கங்கள்போல செங்கல்லால் கட்டப்பட்டிருந்தது; மேலே மரப்பலகையால் மூடப்பட்டிருந்தது. அதன்மீது இரண்டு தூண்களும் அவற்றுக்குக் குறுக்கே ஒரு உத்தரமும் இருந்தது; அதில் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. தூக்கிலிடுபவர் சிறையின் வெள்ளைச்சீருடை அணிந்த தண்டனைக் கைதி; தலை நரைத்திருந்த அவர் தன்னுடைய இயந்திரத்திற்குப் பக்கத்தில் காத்துக்கொண்டி ருந்தார். நாங்கள் நுழைந்தபோது ஒரு அடிமைபோல் குனிந்து எங்களை வரவேற்றார். பிரான்சிஸினுடைய உத்தரவின்படி கைதியை இறுகப் பிடித்திருந்த சிறைக்காவலர்கள் இருவரும் அவரைத் தூக்குமேடைக்கு தள்ளிக்கொண்டு போயினர்; மேடைப்படி களில் ஏறுவதற்கு உதவினர். பின்னர் தூக்கிலிடுபவரும் மேலே ஏறி கயிற்றை கைதியின் கழுத்தைச் சுற்றி மாட்டினார்.   

ஐந்து கெஜ தூரத்தில் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். தூக்குமேடையைச் சுற்றி சிறைக்காவலர்கள் ஒரு வட்டமாக நின்றார் கள். சுருக்குக்கயிறு பொருத்தப்பட்ட பின்னர் கைதி கடவுளின் பெயரைச் சொல்லி கூக்குரலிடத் துவங்கினார். அது ‘ராம்! ராம்! ராம்! ராம்!’ என்று சத்தமாக, மீண்டும் மீண்டும் வலியுறுத்திய அழுகுரல். அது அவசர அவசரமாகக் கூறப்பட்டதோ, பயத்தில் கூறப்பட்ட பிரார்த்தனையோ உதவி கோரும் ஓலமோ அல்ல; ஆனால் அது கிட்டத்தட்ட மணியோசை போல் ஒரு சீராக, லயமாக இருந்தது. அந்த ஒலிக்கு நாய் ஒரு சிணுங்கலைப் பதிலாகக் கூறியது. தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த தூக்கிலிடுபவர் மாவுப்பை போன்ற ஒரு சிறு பருத்திப்பையை எடுத்தார். அதை கைதியின் முகத்தில் போட்டு மூடினார். ஆனால், அந்தத் துணியால் கம்மிய அந்தக் குரல் இன்னும் தொடர்ந்து பிடிவாதமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ‘ராம்! ராம்! ராம்! ராம்!’என்று மீண்டும் மீண்டும் ஒலித்தது.

தூக்கிலிடுபவர் கீழே இறங்கி நெம்பு கோலைப் பிடித்துக்கொண்டு விறைப்பாக நின்றார். நிமிடங்கள் கழிவது போல் தோன்றியது. கைதியின் கம்மிய அழுகுரல் ஒரு கணம்கூட தடுமாறாமல் ‘ராம்! ராம்! ராம்!’ என்று ஒலித்துக்கொண்டே இருந்தது. தலை குனிந்து நின்றிருந்த கண்காணிப்பாளர் தன் கைத்தடியால் மெல்ல தரையைக் குத்திக் கிளறிக் கொண்டிருந்தார். அநேகமாக அவர் அந்த கூக்குரல்களை எண்ணிக்கொண்டிருக்கலாம்; கைதி ஐம்பது அல்லது நூறு தடவை கூக்குரலிடலாம் என்று அவர் ஒரு எண்ணிக்கையை நிர்ணயித்திருக்கலாம். கெட்டுப் போன காபி போல் இந்தியர்கள் வெளிறிப் போயிருந்தார்கள். ஒன்றிரண்டு துப்பாக்கிமுனைக் கத்திகள் தள்ளாடிக் கொண்டிருந்தன. முக்காடிடப்பட்டு தூக்கு மேடையில் நின்றிருந்த அந்த மனிதரைப் பார்த்தோம். அவரது கூக்குரல்களைக் கேட்டோம். ஒவ்வொரு கூக்குரலுக்கும் அவரது ஆயுள் இன்னுமொரு நொடி அதிகரிக்கிறது. எங்கள் எல்லோர் மனதிலும் இந்த சிந்தனை தான் இருந்தது: ‘சீக்கிரமாக அவரைக் கொன்று காரியத்தை முடியுங்கள்; சகிக்க முடியாத அந்த சத்தத்தை நிறுத்துங்கள்!’

திடீரென்று கண்காணிப்பாளர் முடிவெடுத்து விட்டார். தலையை நிமிர்த்தி தன் கைத்தடியை வேகமாக ஆட்டினார். ‘ஆகட்டும்’ என்று கிட்டத்தட்ட மூர்க்கமாகக் கத்தினார். சலசலக்கும் ஓசை கேட்டது; பின்னர் மயான அமைதி. கைதி மறைந்துவிட்டார். கயிறு தன்னைத்தானே முறுக்கிக் கொண்டிருந்தது. நான் நாயை என் பிடியிலிருந்து விடுவித்தேன். அது உடனடியாக தூக்குமேடையின் பின்பக்கத்திற்குத் தாவி ஓடியது. ஆனால், அது அங்கு சென்றவுடன் சட்டென்று நின்றது; குரைத்தது; பின்னர் கொட்டடியின் ஒரு மூலைக்குப் பின்வாங்கியது; முட்புதர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு, அஞ்சி நடுங்கியவாறு எங்களைப் பார்த்தது. கைதியின் உடலைப் பரிசோதிப்பதற்காக நாங்கள் மேடையைச் சுற்றிச் சென்றோம். கால் பெருவிரல்கள் நேராகக் கீழ் நோக்கிப் பார்த்திருக்க, ஒரு கல்லைப்போல் உயிரற்று, மெல்லச் சுழன்ற வண்ணம் அவர் தொங்கிக் கொண்டிருந்தார்.

கண்காணிப்பாளர் தன் கைத்தடியை நீட்டி அந்த வெற்றுடம்பைக் குத்திப் பார்த்தார். அது சற்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆடியது. ‘அவர் நன்றாக இருக்கிறார்’ (‘ஹி இஸ் ஆல்ரைட்’) என்றார் கண்காணிப்பாளர். தூக்குமேடைக்குக் கீழே இருந்து வெளியே வந்தார்; ஆழமான பெருமூச்சு விட்டார். அவர் முகத்தில் இருந்த ஆழ்ந்த யோசனை சட்டென்று விலகிவிட்டிருந்தது. அவர் தன்னு டைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘மணி எட்டாகிவிட்டது. நல்லது, இன்று காலை வேலை முடிந்தது. கடவுளுக்கு நன்றி’.

சிறைக்காவலர்கள் தங்களது துப்பாக்கி முனைக் கத்திகளைக் கழற்றினர்; அவ்விடத்தைவிட்டுச் சென்றனர். தான் தவறாக நடந்துகொண்டதை உணர்ந்து அமைதியடைந்திருந்த நாய் அவர்கள் பின்னால் சந்தடியின்றிச் சென்றது. தூக்குமேடைக் கொட்டடியைவிட்டு வெளியே வந்தோம்; மரணதண்டனைக் கைதிகள் இருந்த அறைகளைக் கடந்து, சிறையின் மையத்தில் இருந்த பெரிய முற்றத்திற்கு நடந்தோம். தடிகள் வைத்திருந்த சிறைக்காவலர்களின் கட்டுப்பாட்டில் தண்டனைக் கைதிகள் ஏற்கனவே தங்களது காலை உணவைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். நீண்டவரிசையில் தரையில் அமர்ந்திருந்த அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் தகரத்தட்டு இருந்தது; இரண்டு சிறைக்காவலர்கள் வாளிகளில் இருந்து அரிசிச்சோறு போட்டுக்கொண்டே வந்தனர்; தூக்கிலிடப்பட்டதைப் பார்த்த பிறகு அது ஒரு மிகவும் இனிமையான, மகிழ்ச்சியான காட்சி போல் இருந்தது. வேலை செய்து முடிக்கப்பட்டுவிட்டதில் எங்களுக்கு ஒரு பெரும் சுமை இறக்கப்பட்டுவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டிருந்தது. பாடவேண்டும் போல், வேகமாக ஓடவேண்டும் போல், உள்ளூரச் சிரிக்க வேண்டும் போல் ஒரு உந்துதல் ஏற்பட்டது. உடனே எல்லோரும் மகிழ்ச்சியாக வளவளவென்று பேசத் துவங்கினர்.

என்னருகே நடந்து வந்து கொண்டிருந்த யுரேசிய இளைஞன் நாங்கள் வந்த வழியை நோக்கி தலையசைத்துக் கொண்டே வந்தான்; பரிச்சயமான புன்னகையுடன் கூறி னான்: ‘ஐயா, உங்களுக்குத் தெரியுமா, நம்முடைய நண்பர் (செத்துப்போன மனிதரைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்) அவருடைய மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதைக் கேட்டவுடன் பயத்தால் தன்னுடைய அறையின் தரையில் சிறுநீர் கழித்து விட்டார். ஐயா, தயவு செய்து என்னுடைய சிகரெட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஐயா, என்னுடைய புதிய வெள்ளி சிகரெட் பெட்டியை நீங்கள் மெச்சமாட்டீர்களா? பாக்ஸ்வாலாவிடமிருந்து இரண்டு ரூபாய் எட்டணாவிற்கு வாங்கினேன். அற்புதமான ஐரோப்பிய பாணி பெட்டி’.  பலர் சிரித் தார்கள்; ஆனால், யாருக்கும் எதற்காகச் சிரிக்கிறோம் என்பது உறுதியாகத் தெரியாது.\

கண்காணிப்பாளருடன் நடந்து வந்து கொண்டிருந்த பிரான்சிஸ் சளசள வென்று பேசிக்கொண்டிருந்தார். ‘ஐயா, நல்லது, எல்லாம் மிகவும் திருப்திகரமாக முடிந்தது. எல்லாம் இப்படி சொடக்கென்று முடிந்துவிட்டது. எப்போதுமே இப்படி இருப்பதில்லை. மருத்துவர்கள் தூக்குமேடைக்குக் கீழே குனிந்து சென்று கைதியின் காலை இழுத்துப் பார்த்து அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்யவேண்டிய நிகழ்வுகள் பற்றி எனக்குத் தெரியும். மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது!’

‘உடலை வளைத்து நெளிக்க வேண்டியிருப்பது? அது மோசம்’ என்றார் கண்காணிப்பாளர். ‘ஆம் ஐயா, அவர்கள் சமாளிக்க முடியா தவர்களாக ஆகும்போது ரொம்ப மோசம். எனக்கு நினைவிருக்கிறது. ஒருவரை நாங்கள் வெளியே அழைத்து வரச் சென்றபோது அவரது கூண்டின் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டார். நீங்கள் நம்பமாட்டீர்கள் ஐயா, அவரைப் பெயர்த்து எடுப்பதற்கு ஆறு சிறைக்காவலர்கள் தேவைப்பட்டார்கள். ஒவ்வொரு காலையும் மூன்றுபேர் பிடித்து இழுத்தார்கள். நாங்கள் அவருக்குப் புரிய வைக்க முயற்சித்தோம். ‘அன்பான நண்பரே, எங்களுக்கு எவ்வளவு வேதனையும் தொந்தரவும் கொடுக்கிறாய் என்று நினைத்துப்பார்’ என்று கூறினோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. ரொம்பவும் தொந்தரவு கொடுத்துவிட்டார்!’.

நான் மிகவும் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். கண்காணிப்பாளரும் கூட நடுவாந்திரமாகப் புன்னகைத்தார். ‘நீங்கள் அனைவரும் என்னுடன் வெளியில் வாருங்கள், மது அருந்தலாம்’ என்று மிகவும் நட்புடன் அழைத்தார். ‘என்னுடைய காரில் ஒரு பாட்டில் விஸ்கி இருக்கிறது. நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’.

சிறையின் மிகப்பெரிய இரட்டைக்கதவுகளைத் தாண்டி சாலைக்குச் சென்றோம். ‘அவருடைய கால்களை இழுத்துப் பார்ப்பது’ என்று திடீரெனக் கூவிய பர்மா நீதிபதி ஒருவர் சத்தமாக வாய்விட்டுச் சிரித்தார். நாங்கள் அனைவரும் மீண்டும் சிரிக்கத் துவங்கி னோம். அக்கணம் பிரான்சிஸ் கூறிய கதை மிகமிக வேடிக்கையானது போல் தோன்றியது. உள்நாட்டுக்காரர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் என நாங்கள் அனைவரும் மிகவும் நட்புணர்வுடன் மது அருந்தினோம். செத்துப் போன மனிதர் நூறு கெஜங்களுக்கு அப்பால் இருந்தார்.

- ஜார்ஜ் ஆர்வெல்
- தமிழில்: அசோகன் முத்துசாமி

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)