தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. அமைப்புக்கே கிடைத்த விருது என்றும் எமது இயக்கத்தின் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பெருமையுடன் கொண்டாடுவார்கள் என்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் அருணன், மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.
தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும். அறு நூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி. 1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது. வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலொடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.
தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது.என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது.ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கிலேய அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது.1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர்வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும். ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செரித்து எழுந்து நிற்கும் காவல் கோட்டத்துக்காக இவ்விருது வழங்கப்பட் டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.
ஓட்டையிடாத புல்லாங்குழல்,பாசி வெளிச்சத்தில்,ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித் தமிழ், கலாச்சாரத்தின் அரசியல்,கருப்பு கேட்கிறான் கிடா எங்கே, மதமாற்றத் தடைச்சட்டம்,சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம். தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.
2011 செப்டம்பரில் விருதுநகரில் நடை பெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.
தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும்.தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.
பெருமிதம்
தமக்கு கிடைத்துள்ள விருது குறித்து சு.வெங்கடேசன் கூறுகையில், தமது பத்தாண்டுகால உழைப்பிற்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். தகுதியான தொரு படைப்பு உரிய காலத்தில் அங்கீகாரம் பெற்றதென்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாக மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த விருது, தற்போது அந்த எல்லைகளைக் கடந்து இலக்கியத் தகுதியை மட்டுமே மையமாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கைக்குறிப்பு
சு.வெங்கடேசனின் சொந்த ஊர் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விப்பட்டியாகும். 16.3.1970ல் பிறந்தார். தமது ஆரம்பக்கல்வியை ஹார்விப்பட்டி நடுநிலைப்பள்ளியிலும், உயர்கல்வியை திருநகரில் உள்ள முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவரது தந்தை இரா.சுப்புராம், தாயார் நல்லம்மாள், இவருடன் உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரன், மூன்று சகோதரிகள். இவருக்கு கமலா என்ற மனைவியும், யாழினி, தமிழினி என்ற இருமகள்களும் உள்ளனர்.
இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முழுநேர ஊழியராகவும் மதுரை புற நகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
வாழ்த்துக்கள் சு.வெங்கடேசன்
ReplyDeleteதோழருக்கு என் இனிய வாழ்த்துகள். புதுச்சேரியில் இதே நூல் அறிமுகப்படுத்தும்போது நானும் அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தோழர் பட்ட சிரமங்களும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் பாராட்டிற்குறியது. எந்த ஒரு நாவலின் தழுவலும் இன்றி சிறப்பான பதிவை கொடுத்ததற்கு மேலும் வாழ்த்துகள்.
ReplyDeletevaazhthdukal . uzhaipalikalai karuvaka kondu thodarunka
ReplyDeleteVenkatesan deserves the award.wish ing every success in his future endeavours.....with revolutionary greetings....udayakumar
ReplyDeleteஅருமையான வாசிப்பு அனுபவத்தை எனக்கு தந்தது காவல் கோட்டம். அதை வாசித்துகொண்டுருக்கும்போது அவ்வப்போது நான் பதிவிட்டவை. http://nirmalcb.blogspot.com/2012/04/7.html
ReplyDelete