மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல பிரிவினரின் மீது திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். அண்மையில் நடந்த சம்பவமொன்றில் மாணவர் சேர்க்கையில் தலையிட முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் மாநகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் வன்முறை வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
ஜாதவ்பூர் வித்யாபீடம் என்கிற பள்ளிக்கூடம் ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்களை ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறது. அடுத்த ஆண்டில் ஐந்தாம் வகுப்பு படிக்க விரும்பும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதாக விண்ணப்பங்களையும் அப்பள்ளிக்கூடம் வழங்கியது. அக்டோபர் மாதத்திலேயே இந்தப் பணி துவங்கியது. 1,200 பேர் இந்த விண்ணப்பங்களைப் பெற்றதால், மாணவர்களுக்கு தேர்வு வைப்பது என்று பள்ளிக்கூட நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அத்தகைய தேர்வு எதையும் நடத்தக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யுங்கள் என்றும் கூறியது. அரசின் இந்த உத்தரவை பள்ளியின் தகவல் பலகையில் ஒட்ட தலைமையாசிரியர் ஏற்பாடு செய்தார். இதையடுத்து, பள்ளிக்கூடத்தின் அருகில் வசிப்பதாகச் சொல்லிக் கொண்டு தலைமையாசிரியரைச் சந்தித்த ஒரு கும்பல், அவர்கள் சொல்லும் 100 பேருக்குதான் மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும் என்று மிரட்டியது.
ஜாதவ்பூர் வித்யாபீடத்தின் தலைமையாசிரியர் மாவட்ட கல்வி அதிகாரிகளோடு ஆலோசனை செய்தார். அவர்களும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னவுடன்தான் இதற்குப் பின்னணியில் ஏதோ இருக்க வேண்டும் என்று அவர் தெரிந்து கொண்டார். மாநில கல்வித்துறை செயலாளர் விக்ரம் சென்னை அவர் தொடர்பு கொண்டு பேசினார். அவரும் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை பற்றி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று தலைமையாசிரியரிடமே கூறியிருக்கிறார். ஆனால் அடுத்து நடந்த கூட்டத்திலும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் தலைமையாசியரும் தனது முடிவில் பிடிவாதமாக இருந்துவிட்டார்.
ஜாதவ்பூர் வித்யாபீடம் இருக்கும் அதே வளாகத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இருவர் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். மறுக்கவே, பெற்றோர்கள் என்ற போர்வையில் சிலரைத் தூண்டிவிட்டு கலாட்டா செய்ய அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு, தாஸ்குப்தா(95வது வார்டு கவுன்சிலர்) உள்ளிட்ட மூன்று பேர் தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். தாங்கள் சொல்லும் 100 பேருக்கு உடனடியாக சேர்க்கை நடக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதற்கு தலைமையாசிரியர் மறுப்பு தெரிவித்தார். அங்கிருந்து வெளியேறும்போது, மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்கள்.
சிறிது நேரத்திலேயே தாஸ் குப்தா மற்றும் அனிதாகர் மஜூம்தா(113வது வார்டு கவுன்சிலர்) ஆகிய இருவரும் சுமார் 60 ரவுடிகளுடன் பள்ளிக்குள் நுழைந்தனர். தலைமையாசிரியரின் அறையை சூறையாடினர். தலைமையாசிரியர் மற்றும் அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவரையும் அடித்து உதைத்தனர். அப்போது தலைமையாசிரியர் அறைக்கு வெளியே வந்து கொண்டிருந்த ஆசிரியை மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள். பள்ளிக்கூடத்தில் உயர்வகுப்புகளில் படிக்கும் சில மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் அடிவாங்குவதைப் பொறுக்க முடியாமல் தடுக்க முனைந்திருக்கிறார்கள். அவர்களையும் வன்முறையாளர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தனைக்கும் பள்ளிக்கூட வளாகத்தில் காவல்துறையினர் பணியில் இருந்தனர். பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் அங்கு இருந்தார்கள்.
வன்முறை வெறியாட்டத்தை அவர்கள் வேடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களை ஆசிரியர்கள் அவமானப்படுத்தி விட்டனர் என்று வெளியில் காத்திருந்த பெற்றோர்களிடம் பொய்ப்பிரச்சாரத்தையும் திரிணாமுல் கவுன்சிலர்கள் செய்திருக்கிறார்கள். அப்போது அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் இதையே திரும்பத் திரும்பத் தெரிவித்துள்ளனர். ஆனால் தொலைக்காட்சி நிருபர்களும், பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்களும் நடந்த நிகழ்ச்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்களில் நடந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று கேட்டதற்கு, வன்முறை வெறியாட்டம் நடத்திக் கைது செய்யப்பட்டவரை, காவல்நிலையத்திற்குள் நுழைந்து முதலமைச்சரே விடுவிக்கவில்லையா... பின்னர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிடப்பில் மக்கள் பிரச்சனைகள்
உள்ளுர் பிரச்சனைகளில் தலையிடும் சமூக விரோதிகளில் பெரும்பாலானவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அந்த நடவடிக்கையை நீக்க வரிசையில் வருகிறார்கள். இதில் கவனம் செலுத்தும் ஆளுங்கட்சியினர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. மருத்துவமனையில் தீ, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு, மாநிலத்தில் 350 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த அவலமும் அடங்கும். நான்கு மாதங்களை வெட்டியாகக் கழித்து, மக்கள் பிரச்சனைகளைக் கிடப்பில் போட்டுள்ளனர் திரிணாமுல் காங்கிரசார்.
0 comments:
Post a Comment