லோக்பால் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான கடுமையான வாக்குவாதங்கள் எழுந்திருக்கின்றன. உறுப்பினர்களில் சிறுபான்மையினருக்கான இட ஒதுகீட்டை பா.ஜ.க எதிர்க்கிறது. அதிகாரம் முழுவதும் சட்டத்தின் கைகளுக்குச் சென்றுவிடுவதும் ஏற்கத்தக்கதல்ல என சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. இப்படி அரசியல் கட்சிகள் தத்தம் நிலைபாட்டிலிருந்து, அதனை விமர்சிக்கவும், திருத்தங்கள் வேண்டும் எனக் கோரவும் செய்திருக்கின்றன. அன்னா ஹசாரேவின் குழுவோ, இந்த மசோதா மிகவும் பலவீனமானது என்றும், அதன் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அரசிடம் இருப்பது சரியில்லை எனவும் வெளியே நின்று கத்திக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் நாளைக்கு மேலும் சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என செய்திகள் கூறுகின்றன. ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படுமா, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்குமா என்பதெல்லாம் சந்தேகமே.
ஆனால் இந்த தேசத்திற்கு ஒரு வலுவான லோக்பால் மசோதா கண்டிப்பாக தேவை. அப்படியொரு மசோதா எப்படியிருக்க வேண்டும் எனவும் நமக்கு ஒரு புரிதல் வேண்டும்.
லோக்பால் மசோதா குறித்து இருபதாண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை எழுந்துள்ளது. போஃபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கிய பின், அதன் விளைவாக அரசாங்கத்திலும் அரசியல் தலைமையிலும் மாற்றம் வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உயர்மட்டங்களில் நடைபெறும் ஊழலை ஒழித்துக்கட்டக் கூடிய விதத்தில் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோரியது.
1989இல் வி.பி.சிங் அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வந்த சமயத்தில், இத்தகையதோர் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது. அந்த சமயத்திலும், பின்னர் இரு தடவைகளிலும், 1996இல் தேவ கவுடா மற்றும் ஐ.கே.குஜ் ரால் ஆகியோர் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமும் அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் ஆட்சியில் நீடித்த சமயத்திலும் லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட் டது. ஆயினும் அது சட்டமாக நிறைவேறக்கூடிய சூழல் உருவாகவில்லை. மீண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் விளைவாக, 2004இல் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் உருவாவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் இடதுசாரிகளின் ஆதரவை நாடியிருந்த சமயத்தில், அதனுடைய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், லோக்பால் சட் டம் கொண்டுவரப்படும் என்கிற உறுதிமொழி சேர்க்கப்பட்டது.
இப்படி முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து சமயங்களிலும் வரைவு சட்டமுன்வடிவு பல்வேறு பிரச்சனைகளில் சச்சரவுகள் இருந்து வந்ததால் வெளிச்சத்திற்கே வரவில்லை. அதில் மிகவும் முக்கியமான விஷயம், இச்சட்டத்தின் வரையறைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது குறித்ததாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதுமே, அதிலும் குறிப்பாக போஃபர்ஸ் ஊழலுக்குப்பின், பிரதமரும் லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வந்திருக்கிறது.
தற்போதைய நாடாளுமன்ற நிலைக்குழுவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, வரைவு சட்டமுன்வடிவை ஒரு வலுவான சட்டமுன்வடிவாக மாற்றிட, அச்சட்டமுன்வடிவில் சேர்க்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும், திருத்தங்களையும் சமர்ப்பித்தார். அவ்வாறு அவர் சமர்ப்பித்த குறிப்புகளுடன், தற்போது நடைபெறும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்திலும், கீழ்க்கண்ட முன்மொழிவுகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தாக்கல் செய்யப்பட்டது.
(1) லோக்பாலின் வரையறைக்குள் பிரதமரும் கொண்டுவரப்பட வேண்டும். இது தொடர்பாக அரசு துல்லியமான பரிந்துரைகளுடன் வர வேண்டும். எக்காரணம் கொண்டும், சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் பிரதமர் அலுவலகத்தின் வணிகத்தொடர்புகள் எதுவும் இதன் வரையறையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படக் கூடாது.
(2) ஊழலை வலுவாகக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் நீதித்துறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். நீதித்துறையிலும் நியமனங்கள், மாற்றல்கள் தொடர்பாக ஊழல் புகார்கள் வரும் பட்சத்தில், அவற்றை விசாரிக்கக்கூடிய அளவிற்கு ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
(3) நாட்டில் தேர்தல்கள் நடைபெறும் போது பணபலத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழித்திட வகை செய்யும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படாமல் நம் நாட்டில் லஞ்ச ஊழலை வலுவாக ஒழித்திட முடியாது.
(4) அனைத்து மட்டங்களிலும் லஞ்ச ஊழலால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் தொடர்பாக வரும் குறைபாடுகளை விசாரிப்பதற்குத் தனியே குறைதீர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
(5) லோக்பால் சட்டத்தின் அதிகாரங்கள், ஊழலில் ஈடுபடும் அனைத்துத் துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய அளவிற்கு விரிவாக்கப்பட வேண்டும். இதேபோன்று அனைத்து இனத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மாநில மட்டத்தில் லோக் அயுக்தாக்கள் அமைக்கப்பட வேண்டும்.
(6) லோக் பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்புச் சட்டத்தின் மீது பிரத்யேக அதிகாரவரம்பெல்லையுடன் தனியே ஒரு புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஊழல் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் விசாரிக்கக்கூடிய அளவிற்குத் தனி புலனாய்வு அமைப்பாக இது அமைந்திட வேண்டும். மத்தியப் புலனாய்வுக் கழகமும் லோக்பால் வரம்பெல்லைக்குள் கொண்டுவரப் பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித அதிகாரமுமற்ற, வலுவற்ற அமைப்பாக லோக்பால் மாற்றப்பட்டு விடக்கூடாது.
(7) லோக்பால் கீழான தலைவர் மற் றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் சுயேச்சையான தேர்வுக் குழுவின் மூலமே மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் இயக்குநரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
(8) இத்தகைய நியமனங்களுக்கான தேர்வுக் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும் பெயர்களைத் தயார் செய்வதற்கான ஆய்வுக் குழு அமைக்கப்படுதல் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
(9) ஊழலுக்கு எதிரான போராட் டத்தை வீச்சுடன் நடத்திட, 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் வரையறை திருத்தப்பட வேண்டும். இன்றுள்ள சட்டத்தின்படி லஞ்சம் பெறுபவர் மட்டுமே குற்றத்துடன் பிணைக்கப்படுகிறார், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குப் புறம்பாக முறை கேடாக ஆதாயம் அடைபவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்படுவதில்லை. யாருடைய செயல்பாடுகளினாலும் முடிவுகளினாலும் அரசுக்கு வரவேண்டிய வரு வாய் இழப்பு ஏற்படுகிறதோ அவர்கள் அனைவரும் இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் கொண்டு வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
(10) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை ஆகியவை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் அதே சமயத்தில், அவர்கள் லஞ்சஊழலில் ஈடுபட்டால் இதனை அமல்படுத்திடக் கூடாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தேவைப்பட் டால் அரசமைப்புச் சட்டத்தின் 105ஆவது விதி திருத்தப்படுவது உட்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண் டும். இல்லாவிடில், ஜேஎம் எம் லஞ்ச வழக்கில் நடைபெற்றதைப் போல லஞ்சம் கொடுத்தவர் தண்டிக்கப்படுவதையும், லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதையும் தடுத்திட முடியாது. இது தொடர்பாக மிகவும் அருவருக்கத்தக்க மற்றொரு உதாரணம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மீது 2008இல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெற்ற அசிங்கமாகும்.
(11) ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவாக அமைந்திட வேண்டுமானால், ஒப்பந்தங்கள், உரிமங்கள் முதலானவற்றைப் பெற்றிட கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் லஞ்ச லாவண்யங்களை விசாரிக்கக்கூடிய அளவிலும் லோக்பால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசின் உதவிகளைப் பெறும் அனைத்து அமைப்புகளும் இச்சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். (அரசியல்வாதிகளையும், அரசு ஊழியர்களையும் கடுமையாகச் சாடும் அன்னா ஹசாரே இந்த விஷயத்தில் மௌன விரதமிருப்பது, கவனிக்கத்தக்கது.)
லோக்பால் சட்டம் தொடர்பான விதிகள், ஆட்சிகள் மாறும்போதெல்லாம் மாறக்கூடிய விதத்தில் அமைந்துவிடக் கூடாது. முறையான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
இப்படியெல்லாம் அமைந்தா ஒரு வலுவான லோபால் மசோதா உருவாகலாம். இல்லாவிடில் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகிவிடும்.
0 comments:
Post a Comment