‘மோகினி ஜெயின் எதிர் கர்நாடக அரசு (1991)’ வழக்கில், மருத்துவக் கல்வி உள்ளிட்டு அனைத்துநிலைக் கல்வியும் அடிப்படை உரிமை என்றும், அதனை அளிப்பது அரசின் பொறுப்பு என்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியது. அதனை எதிர்த்து நடுவணரசும் தனியார் கல்விக்கூட நிர்வாகிகளும் மேல் முறையீடு செய்தனர். அவற்றையெல்லாம் இணைத்து ‘உன்னி கிருஷ்ணன் எதிர் ஆந்திர அரசு’ என்ற வழக்கில், 14 வயது வரையுள்ள கல்வி மட்டுமே அடிப்படை உரிமை என்றும், அதனை அரசு இலவசமாக அளித்திட வேண்டுமென்றும் 1993 -ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முந்தையத் தீர்ப்பை மாற்றி அமைத்தது.
இத்தீர்ப்பினைச் செயல்படுத்தத் தேவையான அரசியல் சட்டத் திருத்தம் பல போராட்டங்களுக்குப் பின்னர் 2005-ல் 86-வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரசு நிர்ணயித்த வண்ணம் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டுமென்று ஒரு நிபந்தனையுடன் அடிப்படை உரிமையாக்கப்பட்டது. இதற்குத் தேவையான சட்டத்தைக் கொண்டுவர மேலும் நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு, இலவசக் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம், 2009 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினைச் செயல்படுத்தத் தேவையான விதிகள் இயற்றும் பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைத்துவிட்டு நடுவணரசு மாதிரி விதிகளை மட்டும் வெளியிட்டது. 1-4-2010 அன்று சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. முந்தைய திமுக அரசு முன்வரைவு விதிகளை வெளியிட்டு மக்களின் கருத்தைக் கோரியது. விதிகளை இறுதிப்படுத்துவதற்கு முன்னரே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசு 8-11-2011 அன்று விதிகளை வெளியிட்டுள்ளது.
இலவச கட்டாய கல்விச்சட்டம் 2009: நிறைகளும் குறைகளும்
இச்சட்டம் சமூகப் போராளிகள் எதிர்பார்த்த முறையில் அமையவில்லை. அரசு கடைபிடிக்கும் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. பெயரில் இலவசம் என்ற சொல் இருந்தாலும் கட்டணப் பள்ளிகளுக்கும் இடம் அளிப்பதால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்காது. சட்டத்தில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: பள்ளிகள் அமைவிடம் குழந்தைகள் எளிதாகச் சென்றடையும் வண்ணம் இருக்க வேண்டும்; 5 -ஆம் வகுப்பு வரைப் படிக்க 1 கி.மீ. தொலை விற்குள்ளும், எட்டாம் வகுப்பு வரைப் படிக்க 3 கிமீ தொலைவிற்குள்ளும் பள்ளிகள் அமைய வேண்டும்.
அரசு அங்கீகாரமில்லாது எப்பள்ளியும் இயங்கக்கூடாது. அங்கீகாரம் பெறாத அல்லது மறுக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பது அரசின் பொறுப்பாகும். பள்ளிச் சேர்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு, பெற்றோரை அல்லது குழந்தைகளை நேர்காணல், வயதுச் சான்றிதழ், நன்கொடை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. மாற்றுகைச் சான்றிதழ் குழந்தைகளின் உரிமை. அதனைத் தர மறுத் தாலோ, கால தாமதம் செய்தாலோ தண்டனைக்கு உட்படுத்தப்படும்.
பள்ளியில் சேராமலோ, அல்லது பள்ளியிலிருந்து இடைவிலகியோ இருக்கும் குழந்தைகள் பள்ளியில் மீண்டும் சேரும்போது அவர்கள் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் சேரும் வகுப்பிற்குத் தகுதியுள்ளவராக்கும் பொறுப்பு பள்ளியைச் சார்ந்தது. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி அளித்திட வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாகுபாடுகளுக்கும் எந்தக் குழந்தையும் உட்படக்கூடாது. பள்ளிகளில் உடல், மனரீதியான தண்டனைகள் ஒழிக்கப்பட்டுள்ளது. எந்த வகுப்பிலும் மாணவர்கள் ஓராண்டிற்கு மேல் தக்கவைக்கக் கூடாது. இடையில் பள்ளியை விட்டு வெளியேற்றவும் கூடாது.
அரசு உதவிபெறா தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் பள்ளிக்கு அருகில் வசிக்கும் எளியவர் வீட்டுக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தகுதி பெற்ற ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். கல்விப் பணியல்லாத மாற்றுப்பணிகளில் ஆசிரியர்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு பள்ளிக்கும் பெற்றோரைப் பெரும்பான்மை யோராகக் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு சில சிறப்பம்சங்கள் கொண்ட சட்டத்தில் பல்வேறு கவலை தரும் சரத்து களும் இருக்கின்றன. அவற்றில் சில:
அரசமைப்பு சாசனம் அளித்துள்ள சமத்துவக் கோட்பாட்டிற்கு முரணாக இச்சட்டம் அமைந்துள்ளது. இச்சட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நிதி பற்றி மௌனம் சாதிக்கின்றது. மோகினி ஜெயின், உன்னி கிருஷ்ணன் வழக்குத் தீர்ப்புகளின் படி அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்க வேண்டும். சட்டத்தின் தலைப்பு இலவசக் கட்டாயக் கல்வி என்று இருந்தும், கட்டணப் பள்ளிகளை ஏற்றுள்ளது பெரும் குறை. தன் பொறுப்பிலிருந்து அரசு நழுவுகின்றது என்பதோடு, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் சேரும் மாணவருக்கான கட்டணத் தொகையை அப்பள்ளிகளுக்கு அரசு வழங்கிடுவது நியாயமற்ற செயல். பள்ளி நிர்ணயித்தக் கட்டணத்திற்கு அதிகமாக பெறப்படுவதே தலைக்கட்டணம் என்று வரையறுத்துள்ளதால் தலைக்கட்டணத்தையும் சேர்த்து பள்ளிகள் கட்டணத்தை நிர்ணயிக்க வழிசெய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சேரும் எளியவர் குடும்பத்து மாணவருக்கு அரசு திருப்பித்தரும் கட்டணத்திற்கு மேல் அப்பள்ளிகள் வசூல் செய்தால் அத்தொகை அம்மாணவர் தலையில்தான் விழும். இது போன்ற பல குறைபாடுகள் சட்டத்தில் உள்ளன.
கட்டாயக் கல்வி விதிகள்
நடுவணரசு மாதிரி விதிகளை மட்டும் வெளியிட்டுவிட்டு அந்தந்த மாநில அரசுகள் விதிகளை இயற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. பொதுவாக ஒரு சட்டத்தினை நடைமுறைப்படுத்த விதிகள் சரத்துவாரியாக விளக்கங்களும், நடைமுறைகளையும் கொண்டிருக்கும். ஆனால் சட்டத்தின் சில பகுதிகளை ஒட் டியே மாதிரி விதிகள் அமைந்துள்ளன. பல மாநிலங்கள் விரிவாக விதிகள் இயற்றியுள்ளன. ஆனால். திமுக அரசு தயாரித்த முன்வரைவு விதிகளும், இன்றைய அரசு வெளியிட்ட விதிகளும் மாதிரி விதி வரிசையிலேயே அமைந்து பலவற்றிற்கு விளக்கங்கள் இல்லாதவாறு அமைந்துள்ளன.
முன்வரைவு விதிகள் சட்டத்திற்குப் புறம்பாகப் பல மாற்றங்களைக் கொண்டுள்ளன. முக்கியமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் முழுமையாக மறுத்து, உள்ளாட்சிகள் என்பதற்கு மாறாக வட்டாரக் கல்வி ஆணையங்கள் என்பவற்றை உருவாக்கி, வட்ட, மாவட்ட, மாநில அளவில் அவற்றை நடைமுறைப்படுத்த உதவிக் கல்வி அலுவலர், மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள், இயக்குநர் என்று வரையறுத்து முழு அதிகாரத்தையும் அரசு அதிகார வர்க்கத்திடம் ஒப்படைத்திருப்பது அதிகாரப் பரவல் கோட்பாட்டிற்கு எதிரானது. அதிகார வர்க்கம் தங்கள் அதிகார வரம்பைச் சிறிதும் குறைத்துக் கொள்ள விரும்பாத நிலையையே இது எடுத் துக்காட்டுகின்றது. அரசு மக்கள் பக்கமா, அதிகார வர்க்கத்தின் பக்கமா என்ற வினாவிற்குத் தெளிவான விடை தெரிந்துவிட்டது. எக்காரணம் தொட்டும் உள்ளூர் அமைப்புகள் வலிமை பெறுவதை அரசோ, அரசு அதிகாரிகளோ விரும்பவில்லை என்பதை அறியலாம்.
இரு அரசுகளும் குறை தீர்ப்பு மையங்கள் அமைத்தல், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையம் பற்றிய பகுதிகளை முழுமையாக நீக்கிவிட்டதும் கவனிக்கத்தக்கது. அடிப்படையில் இரு அரசுகளும் ஏழை, எளியவர் நலனைப் புறக்கணிப்பதில் ஒரு மனத்தவர். சட்டமோ, மாதிரி விதிகளோ, தமிழக விதிகளோ ஆசிரியர்களுக்குக் கல்வித் திட்டத்தில் உரிய பங்கு அளிக்காது. அவர்களைக் கூலிக்காரர்கள் போன்றே நடத்த முற்படுகின்றன. அது போலவே மாணவரும் உரிமை ஏதுமற்ற ஜடப் பொருளாகவேக் கருதப்படுகின்றனர். ஆனால், கல்வி அமைப்பில் மிக முக்கியமான பாத்திரங்கள் ஆசிரியர்களும், மாணவர்களும்தான் என்பதை ஏற்க அரசுகள் தயாராக இல்லை. இக்கண்ணோட்டம் மிகவும் பழுதானது, முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லாதது.
நலிந்தவருக்கு தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதை ஒரு முற்போக்கான திட்டமாக நடுத்தர வர்க்கத்தினர் வரவேற்றுள்ளனர். அவ்விடங்களைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளனர். தனியார் பள்ளிகளோ குடிசைவாழ் மக்கள் தங்கள் பள்ளியில் சேர்ந்தால் சேரி மொழியும், ஒழுக்கக்கேடும் பிற மாணவர் களைத் தொத்திக் கொள்ளும் என்றும், குடிசை வாழ் மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக இருக்குமாதலால் ஆசிரியர் நேரத்தை அதிகமாக அவர்கள் எடுத்துக் கொள்வர் என்றும், அதனால் பிற மாணவர்க்கான ஆசிரியர் நேரம் குறையுமென்றும் வாதிட்டு இந்த சரத்தை நீக்க வேண்டி செயல்படுகின்றனர். ரூபாய் 2 இலட்சத்திற்குக் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவரே நலிந்தவர் என்று தமிழக அரசு விதிகள் வரையறுத்துள்ளதால் குடிசைவாழ் மக்களுக்குப் பதிலாக நடுத்தர வர்க்கத்தினர் வருமானச் சான்றிதழ் கொடுத்து இவ்விடங் களில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பார்கள். எளியவர் தொடர்ந்து அரசுப் பள்ளிகளே தங்கள் புகலிடம் என்று சமாதானம் அடைவர்.
மக்கள் பொறுப்பு
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவர 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதும், கல்விஉரிமைச் சட் டம் இயற்றிட மேலும் நான்கு ஆண்டுகளான தும், விதிகள் இயற்றிட இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதும் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால், அரசுகளுக்கு மெய்யாலுமே அனைத்து மக்களுக்கும் தரமான இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்பதில் அக்கறை கிடையாது என்பதே. கண்துடைப்பாக வந்திருக்கும் இந்தச் சட்டத்தின் பயன் எளிய மக்களைச் சென்றடையப் போவதில்லை என்பது உறுதி.
கல்விக்காக மக்கள் ஒருமித்தக் குரலோடு போராட முன்வராததே இக்கல்வி மறுப்பிற்குக் காரணமாகும். அரசுப் பள்ளிகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதும், தங்கள் வீட்டருகில் உள்ள பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் உரிமையும், பாகுபாடுகள் ஏதுமற்றப் பொதுப் பள்ளித் திட்டம் வேண்டியும் மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய காலம் வந்து விட் டது. தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கும் நிலையிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும். கற்றறிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணியில் அனைவரும் ஒன்று கூடுவோம். எலும்புத் துண்டுகளைக் கண்டு மயங்காது முழுமையான சமத்துவம் நோக்கிச் செல்லும் பயணத்தைத் தொடங்குவோம்.
0 comments:
Post a Comment