சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்று காங்கிரஸ்-திரிணாமுல்-திமுக-என்சிபி-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் எதிர்க்கட்சிகளும், அனைத்து வர்த்தகர்களும் போர்க் கோலம் பூண்டுள்ளனர். டிசம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் 5 கோடி வணி கர்கள் பங்கேற்ற வரலாறு காணாத பிரம் மாண்டமான கடையடைப்பு போராட்டம் நடந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 8 நாட்களாக நாடாளுமன்றம் ஸ்தம்பித்துள்ளது. 9வது நாளாக வெள்ளியன்றும் நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு மிக்க போராட்டத்தைக் கண்டது. இடதுசாரிக்கட்சிகள், பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள், அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடவே கூடாது என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றன. வெள்ளியன்றும் இதுதொடர்பாக இரு அவைகளிலும் அமளி நிலவியதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், 6ம் தேதி மொகரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்ப தாலும் நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் புதன்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்கி இரண்டு வார காலம் முடிந்துள்ள நிலையில், சில்லரை வர்த்தகம், முல்லைப்பெரியாறு அணை விவகாரம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பு குறித்த பிரச் சனை, தெலுங்கானா விவகாரம், உத்தரப் பிரதேசத்தை நான்காக பிரிக்கும் விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்விகளும் அமளிகளும் எழுப்பிய போதிலும் இவற்றில் எந்த பிரச்சனைக்கும் தீர்வுகாணவோ, பதிலளிக்கவோ அரசுத்தரப்பில் சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமின்றி நாட்டு மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தும் இன்னும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாகவும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பிலும், பாஜக சார்பிலும் ஒத்திவைப்பு தீர்மானங்கள் அளிக்கப்பட்டபோதிலும், அவையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
எரிந்துகொண்டிருக்கும் எந்தப் பிரச்சனைக்கும் நாடாளுமன்றத்தில் பதிலளிப்பது இல்லை என்ற மன்மோகன்சிங் அரசின் பிடிவாதத்தால் கடந்த இரண்டுவார காலமாக நாடாளுமன்றமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித் துள்ளது.
இப்படி திட்டமிட்டு ஸ்தம்பிக்க வைப்பதே, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் உள்ளாக்காமல் எப்படியேனும் நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற காங்கிரஸ் தலைமையிலான அரசின் வஞ்சகமான சூழ்ச் சியே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியிருந்தார்.
இடதுசாரிக்கட்சிகளைப் பொறுத்த வரை விவாதம் எதுவும் நடக்காமல், அதற்கு அரசு இடம்கொடுக்காமல் அவை நடவடிக்கைகளை முற்றிலும் முடக்குவதை ஒருபோதும் ஏற்கவில்லை என்று தெரிவித்த அவர், கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் உட்பட மிக முக்கியமான பிரச்சனைகள் எழுப்பப்பட்டபோதிலும் அவை நடவடிக்கைகள் முழுமையாக முடங்குவதற்கு அரசு வழிவகுத்தது என சுட்டிக்காட்டினார். அரசின் இந்த நடவடிக்கை இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், வியாழனன்று நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மிகப்பெரும் அமளியில் ஈடுபட்டு வருவது ஒரு அப்பட்டமான நாடகமே என்று குற்றம்சாட்டினார்.
அமைச்சரவைக்கூட்டத்தில் அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு வந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டு, அவையை முடங்கச்செய்யும் திரிணாமுல் உறுப்பினர்களின் நடவடிக்கையை அவர் வன்மையாகக் கண்டித்தார்.
“2004ம் ஆண்டு பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசு, தனது முதல் பட்ஜெட்டில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இந்த முடிவை அந்த அரசால் ஒரு அடி கூட முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு முடிவை மேற்கொள்ளவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் அரசை உறுதிபட தடுத்து நிறுத்தின. இடதுசாரிக்கட்சிகளை மீறி அரசால் செல்ல முடியவில்லை” என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.
“ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசுக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். இத்தகைய நாசகரமான முடிவை எடுக்கக் கூடாது என்று வலுவான முறையில் நிர்ப்பந்தித்தோம். ஆனால் இப்போது திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குள் இருக்கிறது. அரசுக்கு வெளியிலிருந்தே, சில்லரை வர்த்தகத்தை சீரழிக்கும் முடிவை எங்களால் தடுத்து நிறுத்த முடிந்தது என்றால், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரசால் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவை தடுத்து நிறுத்த முடியாதா? அங்கே அனுமதித்துவிட்டு வெளியில் வந்து இவர்கள் வாய்கிழியப்பேசுகிறார் கள். நாடாளுமன்றத்தில் நாடக மாடுகிறார்கள்” என்று சீத்தாராம் யெச்சூரி கடுமையாக சாடினார்.
அதுமட்டுமின்றி நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும் போதே இத்தகைய ஒரு மோசமான முடிவை எடுப்பதற்கு இந்த அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் குறிப்பிட்ட சீத்தாராம் யெச்சூரி, கடந்த காலங்களில் நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும் போது அரசாங்கம் கொள்கை முடிவுகளை அறிவித்ததை இதே காங்கிரஸ் கட்சி கடுமையான முறையில் எதிர்த்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
1989ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங், தேசிய ரைபிள்ஸ் படை என்ற துணை ராணுவப்படையை நிறுவும் முடிவை, நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும் போதே அறிவித்தார். அப்போது பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்தவர் இன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசின் உள் துறை அமைச்சராக இருக்கிற ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. அச் சமயத்தில் பிரதமருக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் அவையில் அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும், அன்றைய சபாநாயகர் ரபி ராய், நாடாளுமன்றம் அமர்வில் இருக்கும்போதே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது அவையின் மாண்பை மீறிய செயல் என்று அரசாங்கத்தை குட்டினார் என்பதை கவனிக்க வேண்டும் என்றும் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment