Wednesday, November 23, 2011

சினிமா ஒரு படைப்புக் கலை

படைப்புக்கலை எனும் அடிப்படையில் சினிமாவின் எல்லைகள் இன்று விரிந்துகொண்டே போகின்றன. பதிவு செய்வது மட்டுமல்ல, கணினிகள் மூலம் மட்டுமே உருவாக்கப்படுவதும் இன்று சினிமாவாகிவிட்டது. அவதார் – 3டி படம் பார்த்தவர்கள், அதில் உள்ள உருவாக்கப்பட்ட உலகத்தை பார்த்து வியந்தனர். அப்படத்தில் கதாபாத்திரங்கள் உலவும் உலகமும், வெளியும் முழுக்க முழுக்க கணினி கொண்டு உருவாக்கப்பட்டவை. முப்பரிமாணத்தில் அவ்வுலகைப் பார்க்கும்போது அது வெறும் கற்பனை உலகமாக மட்டும் தெரியவில்லை. கண்ணுக்கெட்டாத, நம்மால் சென்றடைய முடியாத உலகமாகவும் தெரிகிறது. நம் நிஜக் கண்களால் பார்க்க முடியாத உலகத்தை நம்மால் மனக்கண்ணாலும் கற்பனையால் மட்டுமே பார்க்க முடியும். அப்படிப்பட்ட உலகத்தை நம் நிஜக்கண்களாலும் பார்க்கமுடியும் என்பதை சாத்தியப்படுத்தியது இன்றைய சினிமா உலகின் டிஜிட்டல் தொழில்நுட்பம்தான்.

இன்று சினிமா 3டி எனப்படுகின்ற முப்பரிமாணத்தைத் தாண்டி 4டி எனப்படும் Holographic சினிமாவாகவும் வந்துவிட்டது. இன்று சிறிய அளவில் 5-10 நிமிடப் படங்களாக மட்டுமே பெரிய பொழுது போக்கு அரங்குகளில் இந்த 4டி சினிமா காட்டப்படுகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஜேம்ஸ் கேமரூன் போன்ற ஓர் இயக்குநர் ஒரு முழுநீளத் திரைப்படத்தையே 4டி எனப்படும் நான்கு பரிமாணங்களில் எடுக்கலாம். அந்த 4டி திரைப்படங்களின் உலகம் நம் நிஜக்கண்களுக்குத் தெரிவதோடு மட்டுமல்லாமல், நம்மையே அவ்வுலகுக்கு அழைத்துச் செல்லும். அப்படங்களின் கதாபாத்திரங்கள் நம் கண்ணெதிரே மட்டும் தோன்றமாட்டார்கள். நம்மைச் சுற்றி நான்கு புறங்களிலிருந்தும் தோன்றுவார்கள். அந்தக் கதாபாத்திரங்கள் நம் பக்கத்திலேயே வந்து உட்காரக்கூடும். ஏன் நம் மடியிலேயேகூட உட்காரலாம். 4டி திரைப்படங்களை காண்பிக்க, தற்போதைய திரையரங்குகள் புதிய தொழில் நுட்பத்தோடு மாற்றி வடிவமைக்கப்பட வேண்டும்.

இன்று தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு உள்ளதென்றால், அதற்கு வேறு வேலையே இல்லை, எதையாவது புதிது புதிதாக செய்து நம்மை கண நேரம் வியக்க வைப்பதுதான் என்று நம்மை சொல்ல வைக்கும் அளவுக்கு  வளர்ந்துக்கொண்டே உள்ளது. இந்த தொழில் நுட்பங்கள் நம்மை எந்த அளவுக்கு வியக்கவைக்கிறதோ, அதே அளவுக்கு நம்மை சலிப்படையவும் வைக்கிறது. காரணம், அவை மிகவிரைவாய் பழமையாகிவிடுவதுதான்.

பொதுவாக மிகச்சிறந்த கலைப்படைப்புகளை காலத்தால் அழியாதது என்போம். காலம் யாருக்கும், எதற்காகவும் காத்திருக்காது. அது ஒரே சீரான வேகத்தோடு போய்க்கொண்டே இருக்கிறது. அதை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது. வலிமையற்ற, மேலோட்டமான எல்லா படைப்புகளும் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பக்கவாட்டில் ஒதுங்கிப் போகின்றன. ஆனால், சில படைப்புகள் மட்டும் சில நூறு ஆண்டுகள், சமயங்களில் சில ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து அப்படியே நிற்கிறது.

பீதோவன், மொஸாட் இசை இன்றளவும் புத்தம் புதிதாய் புத்துணர்ச்சி தருவதாய் உள்ளது. ரெம்ப்ராண்ட், வேன்கோ, டாவின்ஸியின் ஓவியங்கள் இன்றளவும் நம்மைக் கட்டிப் போடுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட பல கதைகள், கவிதைகள், கருத்துகள் இப்போதுதான் நம் காதருகில் யாரோ சொல்வது போல உள்ளது. காரணம், இவையெல்லாமே மனிதஉணர்வில்,அறிவின் மாறாத அடிப்படைகளுக்குத் தீனி போடுவதால்தான்.

சினிமாவிற்கு வயது 115 ஆண்டுகள்தான் எனும்பொழுது, காலத்தால் அழியாத திரைப்படம் என்று குறிப்பிடும்பொழுது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இன்றளவும் உலக அளவில் காலத்தால் அழியாத படங்கள் என பல படங்களின் பெயர்களை அவ்வப்போது பத்திரிகைகளும் திரைப்படம் சம்பந்தமான நிறுவனங்களும்  வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களின் பட்டியலைப் பார்த்தால், பெரும்பாலான படங்கள் குறைந்தது முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முந்திய படங்களாகவே உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அதிநவீன தொழில்நுட்பங்கள் சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதில்லை என்பதுதான். இன்றளவும் தரமான உலகப்பட விழாக்களில் சிறந்தப் படங்களாக தேர்வாகும் படங்கள் தொழில்நுட்பத்தை பெரிதும் சாராமல், கதையையும், கதைக்காக தேர்ந்தெடுக்கப்படும் களம் மற்றும் கருவையும், கதைச் சொல்லும் உத்தியையுமே பெரிதாய் நம்பியிருக்கின்றன.

சினிமா தன்னுடைய இரண்டாவது நூற்றாண்டில் தொழில்நுட்பத்தின் உதவியால் மிகத்துல்லியமான காட்சி, மிகஅற்புதமான வண்ணம், மிகத் துல்லியமான ஒலி, கற்பனை செய்ய முடியாத இசை மற்றும் ஒலி சேர்ப்பு என்று தன்னை எவ்வளவுதான் அழகுபடுத்திக் கொண்டாலும், அதன் ஆத்மா, ஆரோக்கியம் அதன் கதையிலும், கதை சொல்லும் விதத்திலும், பார்ப்போரின் மனதில் வேறு எதனாலும் ஏற்படுத்த முடியாத உணர்வுக் கொப்பளிப்பை ஏற்படுத்துவதிலும்தான் உள்ளது. சினிமாவின் படைப்புத் திறன் என்பதே இதில்தான் உள்ளது.

இந்த அடிப்படையில்தான் என்றென்றைக்குமான சிறந்தப்படங்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்தப் படங்களை இப்போது பார்த்தாலும் வயதாகாமல் உள்ளது. படைப்பாளியின் படைப்புத்திறன் தன் திரைப்படத்தை  நீண்ட காலத்திற்கு வயதாகாமல் பார்த்துக் கொள்வதில்தான் உள்ளது. பல இயக்குநர்கள் தங்களின் துவக்க காலங்களிலும், மத்திய காலங்களிலும் அற்புதமான படைப்புகளை உருவாக்கியுள்ளனர். கடைசி வரையில் அதீத சக்தியோடு திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள் ஒரு சிலரே உள்ளனர். நம்முடைய சத்யஜித்ராயால் கடைசியாய் எடுத்த மூன்று படங்கள் குறித்து (கணசத்ரு, அகாண்டுக், ஷாக்கோ புரோஷோக்கோ) இருவிதமான எண்ணங்கள் உண்டு. ஒரு பிரிவினர் சத்யஜித்ராய் ஏன் இப்படி நாடகம் போல் படம் எடுக்கிறார் என குறை சொன்னார்கள்.

இன்னொரு பிரிவினரோ அப்படங்கள் வாழ்வின் ஆழத்தை, தற்போதைய சமூகத்தின் அழுகிக் கொண்டிருக்கும் மனோநிலையை அற்புதமாக காட்டும் எளிமையான படங்கள் என்றனர். குரோசாவாவின் இறுதிப் படங்களைக் குறித்தும் இதேபோன்ற எண்ணங்கள் உண்டு. ஆனால், போலன்ஸ்கி (Polanski)  போன்ற இயக்குநர்கள் தங்களின் 20களில் எடுத்த படங்களும் புத்தம் புதிதாய், நவீன சினிமா மொழியோடு, இளமையாய் உள்ளன. உலகப் புகழ் பெற்ற போலந்து நாட்டு இயக்குநர் அந்த்ரே வாய்தா (Andrzej Wayda)வுக்கு வயது 80. அவரின் சமீபத்திய படமான A Sweet Rush  (ஓர் இனிய அவசரம் - எத்தனை அழகான தலைப்பு) படத்தைப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது. இந்த வயதிலும் எப்படி இத்தனை நேர்த்தியாக இளமையாக படமெடுக்கிறார் என்று வியந்தேன்.

அமெரிக்க நடிகரும் இயக்குநருமான கிளின்ட் ஈஸ்ட்வுட் (Clind Eastwood) தன் 80களில் பல அற்புதமான படங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு (2010) ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட அவரது  Invictus படம் ஒரு துடிப்பான படம். நெல்சன் மண்டேலாவுக்கும் ஒரு வெள்ளைக்கார ரஃபி விளையாட்டு வீரனுக்கும் இடையே உள்ள உறவை சித்திரிப்பதன் மூலம் மண்டேலா எந்த பழிவாங்கும் உணர்வும் இல்லாமல், கருப்பர்களுக்கு இணையாக தென்னாப்பிரிக்க வெள்ளையர்களையும் தன்னாட்டு பிரஜைகளை மதித்தார் என்பதை காட்டும் படம்.

உலக அளவில் பல இயக்குநர்களையும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் படமே எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் அவர்களின் வலுவின்மை படத்திலும் வெளிப்படுகிறது.

பலமுறை தேசிய விருது வாங்கியவரும் கன்னட பட இயக்குநருமான கிரிஷ் காஸ்ரவள்ளியின் ஆரம்ப கால படைப்புகளை நான் பெரிதும் வியந்ததுண்டு. அவரின் முதல் படமான கடஸ்ர்த்தா ஓர் அருமையான படம். அவர் தொடர்ந்து படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள், பழைய படங்கள்போல, காலத்தோடு இணையாமல், உயிரோட்டம் குறைந்த படங்களாக உள்ளன. மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்களுக்கும் இது பொருந்தும்.

இவர்களின் படைப்புத்திறனுக்கும்  உத்வேகத்திற்கும் என்ன ஆயிற்று என்று யோசித்துப் பார்க்கும்போது, சினிமாவில் படைப்புத்திறன் என்பதே சற்று வித்தியாசமான ஒன்று. பொதுவான  படைப்புத் திறனுக்கும், சினிமாவுக்கான படைப்புத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறதோ என்று சிந்திக்க வைக்கிறது. எழுத்தாளர்களிடத்திலோ இந்தப் பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. பல எழுத்தாளர்கள், தங்களின் மிகச்சிறந்தப் படைப்புகளை தங்களின் 60களிலும் 70களிலும் படைத்துள்ளனர்.

ஒரு படைப்பு கலைஞன் தனக்கு வயது ஏற ஏற, வாழ்வின் ஆழத்தை, மனித உறவுகளின் சூட்சுமத்தை அதிகமாக புரிந்து கொள்கிறான். அது அவனது படைப்புகளில் வெளிப்படுகிறது. மற்ற படைப்பு கலைகளைப் போலல்லாமல் சினிமாவில் இந்தப் படைப்புத் திறனை வெளிப்படுத்த வேறு சில சூட்சுமங்களும் தேவைப்படுகிறது. இந்த சூட்சுமத்தை அறிந்தவர்கள்தான் தங்களின் 70, 80 வயதுகளில்கூட இளமையான, இனிமையான படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதை அறியாதவர்கள்தான் முப்பது வயதில்கூட முதுமையான முரட்டுத்தனமான படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

‘காட் ஃபாதர்’ படம் எடுத்த புகழ் பெற்ற அமெரிக்க இயக்குநர் பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா சொல்கிறார், சினிமா என்பது எப்போதும் மாயாஜாலத்தோடு தொடர்புடையது. ஆரம்ப கால திரைப்பட இயக்குநர்கள் கிட்டத்தட்ட மாயாஜாலவாதிகளாகவே இருந்தனர். சினிமாவைத் தோற்றுவித்த லூமியர் சகோதரர்களை அடுத்து படம் எடுத்த ஜீயர்ஜ் மீலீயே தொழில்ரீதியாக ஒரு மேஜிக் கலைஞன். அவர் தன் மேஜிக் கலையைப் பயன்படுத்தி வியக்க வைக்கும் படங்களை எடுத்தவர். மேஜிக் கலைக்கும் சினிமாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக உணர்ந்ததாலேயே நான் சினிமாவால் கவரப்பட்டேன் என்றார்.

சினிமாவின் வசீகரிப்புக்கு மிக முக்கிய காரணம், சினிமா திரையில் மலரும்பொழுது அதில் வெளிப்படும் இந்த மாயாஜாலத்தன்மைதான். மிகச்சிறந்த இயக்குநர்கள், எளிமையான கதையைக்கூட நேர்த்தியோடு சொல்லும்பொழுது இந்த மாயாஜாலத்தன்மை வெளிப்படும். கதை படித்து அழுதவர்களைவிட, ஓவியம் பார்த்து அழுதவர்களை விட, நாடகம் பார்த்து அழுதவர்களை விட, சினிமா பார்த்து அழுதவர்களே அதிகம். நம் உணர்வினூடே நுழைந்து செல்லும் சினிமாவின் இந்த அதீத சக்தியைத்தான் கொப்போலா சினிமாவின் மாயாஜாலத்தோடு கூடிய தொடர்பு என்கிறார். இதை உணர்ந்து கொள்வதில்தான் சினிமாவுக்கான விஷேச படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியும்.

சினிமாவுக்கும், அதன் மாயாஜால தன்மைக்கும் இடையேயான நுணுக்கமான உறவைப் புரிந்து கொள்ளும் தேடலில், சினிமாவின் வரலாறு, தொழில்நுட்பம், தன்னுடைய இரண்டாம் நூற்றாண்டில் வேகமாக பறந்து கொண்டிருக்கும் சினிமாவின் தற்போதைய நிலை என்று எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.

கடவுளை படைத்தவன் என்று சொல்வதுண்டு. காரணம், படைப்பு என்பது விஷேச கலை. எல்லோராலும் செய்துவிட முடியாத ஒன்று என்றும் சொல்லலாம். மிகச்சிறந்த கலைஞர்கள் பலர் மறைந்துவிட்டாலும் அவர்கள் தங்கள் படைப்பின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்போம். நான் இறந்த பின்பும் என்னுடைய படைப்புகள் மூலம் தொடர்ந்து வாழ்வேன் என்று தங்கள் வாயாலேயே சொல்லிய கலைஞர்களும் உண்டு. பகுத்தறிவால் கவரப்பட்ட பல கலைஞர்கள் இறந்த பின் வாழ்வது என்கின்ற தத்துவத்தை ஏற்பதில்லை. ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’ படத்தை எடுத்த உலகப் புகழ்ப்பெற்ற ரஷ்ய இயக்குநர் ஐன்ஸ்டைன் படைப்பாளியின் சாகாவரத்தன்மையை வேறு மாதிரி சொல்கிறார். “என்னைப் பொறுத்தவரை சாகாவரத்தன்மை என்பது மரணத்துக்கு பின் நிகழும் அடுத்த தலைமுறையோடு கூடிய உறவு அல்ல. மாறாக, எந்த ஒரு கொள்கைக்காக அடுத்தடுத்த தலைமுறைகள் தொடர்ந்து போராடி மறைகிறதோ, அந்த கொள்கைக்காக தொடர்ந்து போராடுவதுதான் சாகாவரத்தன்மை. என்னைப் பொறுத்தவரை மனித குல விடுதலைக்கான புரட்சிகரமான கருத்துக்களுக்காக தொடர்ந்து போராடுவதல்தான் சாகாவரத்தன்மை  உள்ளது.’’

அடிப்படையில், எல்லாவித படைப்பார்வத்துக்கும் அடிநாதமாக இருப்பது இந்த சாகாவரத் தன்மையை அடைவதில் உள்ள ஆர்வம்தான். மனித குலம் தனது தொடர்ந்த வளர்ச்சியில்  மேலும் மேலும் சமத்துவத்தோடு, மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்றுதான் பல கலைஞர்கள், தத்துவவாதிகள், அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் விரும்பினர். அதற்காகத்தான் அவர்களின் படைப்பும், வாழ்வும், போராட்டமும் அமைந்தது. இதன் மூலம் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ சாகாவரத்தன்மையைப் பெற்றனர்.

லெனினைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஹிட்லரைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறோம்.  காந்தியின் பெயர் உள்ளவரை கோட்சேவின் பெயரும் இருக்கும். இருவருமே தங்கள் போராட்டம், செயல், கொள்கைகள் மூலம் சாகாவரத்தன்மையைத் தேடியிருக்கிறார்கள்.

ஒரு படைப்பை மிகச்சிறந்த படைப்பு எனப் பாராட்டவும், இன்னொரு படைப்பை மிக மோசமான படைப்பு எனத் தூற்றவும், நாம் நம்முடைய ஒரே அறிவைத்தான் பயன்படுத்துகிறோம். அதுபோலத்தான் படைப்பார்வத்தின் அடிநாதமாய் இருக்கும் சாகாவரத்தன்மைக்கும் இரு நோக்கங்கள் உண்டு. இது குறித்து புகழ் பெற்ற எழுத்தாளர் லாஜோஸ் எஃக்ரி (Lajos Egri) தன்னுடைய “Art of Dramatic Writing” புத்தகத்தின் முன்னுரையில் அருமையாகச் சொல்லியுள்ளார். எஃக்ரியின் அனைத்து படைப்புகளும் எல்லா எழுத்தாளர்களும் படிக்கவேண்டிய ஒன்று. ஏனென்றால், அவர் எழுதியதெல்லாம் எப்படி எழுதுவது என்பதைப் பற்றித்தான். அவர் நியூயார்க் நகரில் ‘படைப்பெழுத்துக்கான எஃக்ரியின் பள்ளி’ என்ற பெயரில் பல எழுத்தாளர்களுக்கு பயிற்சியளித்தார். அவர் பள்ளியில் படித்து பயன்பெற்ற பலர் அமெரிக்க நாடக உலகிலும், ஹாலிவுட் திரைப்படத் துறையிலும் உள்ளனர். எஃக்ரி தன் முன்னுரையில், “முக்கியமாக இருப்பதின் முக்கியத்துவம்’’ எனும் தலைப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

“புராதன கிரிஷ் நகரில் ஓர் இரவு கடவுள் சிலை ஒன்று மர்மமான முறையில் சிதைக்கப்பட்டது. அதிர்ந்து போன மக்கள் கடவுள் தங்களை பழி வாங்கி விடுவாரோ என்று பயத்தில் உறைந்து போயினர். நகரின் வீதியெங்கும் மக்கள் கண்ணீரோடு இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவன் யாராயிருந்தாலும் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்டுக் கொள் என முறையிட்டனர். ஒரு பயனும் இல்லை. மாறாக, அடுத்த வாரமே கடளின் இன்னொரு சிலை சிதைக்கப்பட்டது. மக்கள் இப்போது அழுவதை நிறுத்திவிட்டு அந்தப் பைத்தியக்காரனை பிடிப்பதில் தீவிரமானார்கள். எல்லா இடங்களிலும் இரவு ரோந்து சென்றனர். கடைசியில் அந்தப் பைத்தியக்காரனைப் பிடித்துவிட்டனர்.

அவனைப் பார்த்து மக்கள் கேட்டனர். “பைத்தியக்காரா, உனக்கு கிடைக்கப் போகும் தண்டனை என்னவென்று தெரியுமா?’’

அவன் புன்னகையோடு சொன்னான். “மரணம்.’’

“சாவதற்குப் பயமாக இல்லையா?’’ மக்கள் கேட்டனர்.

“பயம்தான்.’’ அவர் பதிலுரைத்தான்.

“பின் ஏன் இந்தக் குற்றத்தைச் செய்தாய்?’’ மக்கள் கேட்டனர்.

அவன் சொன்னான்: “நான் சாதாரண ஆள். என்னை யாருக்கும் தெரியாது. என் வாழ்நாள் முழுதும் யாருக்குமே தெரியாதவனாகத்தான் இருந்தேன். என்னைப் பறைச்சாற்றிக் கொள்ள எதுவுமே செய்ததில்லை. எதுவும் செய்யவும் முடியாது என்பதையும் அறிவேன். மக்கள் என்னை கவனிக்க வேண்டும், என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். அதற்காக ஏதாவது செய்யவேண்டும் என விரும்பினேன்....’’

சிறிது நேர அமைதிக்குப் பின் அவன் தொடர்ந்து சொன்னான். “மறக்கப்படுபவர்களே இறந்து போகிறார்கள். சாகாவரத்தன்மைக்கு மரணம் ஒரு சிறிய விலைதான் என நினைக்கிறேன்.’’ சாகாவரம். ஆம். எல்லோரும் ஆசைப்படுவது இதுதான். நாம் கவனிக்கப்பட வேண்டும். நாம் செய்யும் செயல்களைப் பார்த்து, பெரிய ஆளுப்பா இவன் என்று மற்றவர்கள் சொல்லவேண்டும்.

நம்மால் அழகான, பயனுள்ள செயல்கள் செய்யமுடியாதபோது, அதே நோக்கத்துக்காக வேறு செயல்களை செய்கிறோம். குறைந்தபட்சம் மற்றவர்களுக்குத் தொந்தரவாவது செய்கிறோம்.

நம் அத்தையை எடுத்துக் கொள்வோம். (எல்லா குடும்பத்திலும் ஓர் அத்தையோ, மாமியோ இருப்பாள்). அவள் வேலையே இதுதான். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் எதையாவது சொல்லி கோபம், காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு என்று உருவாக்கவேண்டும். அவள் அவ்வாறு செய்ய ஒரே காரணம், அங்கு முக்கியமானவளாக அவள் இருக்கவேண்டும். அதற்கு ஒரே வழி கோள் சொல்வதும், பொய் சொல்வதும்தான் எனும்பொழுது அவள் அதைச் செய்கிறாள்.தான் தனித்து நிற்க வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை. கழிவிறக்கம், மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது, ஏன் தற்கொலைகூட இந்த ஆசையின் வெளிப்பாடுதான்.

நம் எல்லோர் வீட்டிலும் ஒரு மைத்துனன் இருப்பான். அவனுக்குத் திருமணமாகி மனைவி,குழந்தைகள்  இருப்பர். ஆனாலும் அவன் எப்போதும் மற்ற பெண்களுடன் சுற்றிக்கொண்டிருப்பான். பொறுப்பானவன், நல்ல தந்தை, ஏன் நல்ல கணவனாகக்கூட இருப்பான். ஆனாலும், அவனுக்கு வாழ்க்கையில் ஏதோ குறை. அவன் தனக்கோ தன் குடும்பத்திற்கோ, உலகிற்கோ முக்கியமானவனாக இல்லை என்பதுதான் அவன் குறை. அந்தக் குறையைப் போக்கத்தான் அவன் மற்றப் பெண்கள் பின்னே சுற்றுகிறான். அதன்மூலம் தான் ஏதோ செய்து விட்டதாக, முக்கியமானவனாக உணர்கிறான்.

தாய்மை என்பதே ஒரு படைப்பு. சாகாவரத்தன்மையின் முதல்படி அது. அதனால்தான் மற்ற பெண்கள்  பின் சுற்றும் ஆண்களைவிட மற்ற ஆண்கள் பின் சுற்றும் பெண்கள் குறைவு. வளர்ந்த பிள்ளைகள், தேவையில்லாமல் வேதனைப்படுத்த வேண்டாம் என தங்கள் பிரச்சினைகளை தாயிடம் சொல்லாமல் இருக்கும்பொழுது தாய் மிகவும் வேதனைப்படுகிறாள். காரணம், தன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாக உணர்கிறாள். (மாமியார் - மருமகள் பிரச்சினைக்கு மூலம்கூட இதுதானோ என்னவோ).

பிறக்கும் ஒவ்வொருவனும் படைப்பாற்றலோடுதான் பிறக்கிறான். அதை வெளிப்படுத்த அவனுக்கு வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. பால்சாக், மாப்பசான், ஓ ஹென்றி போன்ற எழுத்தாளர்களுக்கு எழுதத் தெரியாமல் போயிருக்குமேயானால், அவர்கள் மாபெரும் பொய்யர்களாக உருவெடுத்திருப்பர்.

ஒவ்வொரு மனிதனும் தன் படைப்பாற்றலுக்கு வடிகாலைத் தேடுகிறான். உங்களால் எழுத முடியும் என்று நினைத்தால் எழுதுங்கள். கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ நீங்கள் படிக்காமல் இருந்திருக்கலாம். அதற்காக நம்மால் சிறப்பாக எழுத முடியுமா என்ற பயமே வேண்டாம். மாபெரும் எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், இப்சன், பெர்னாட் ஷா போன்றவர்கள் கல்லூரியின் வாசலையே மிதித்தது கிடையாது.

நீங்கள் பெரிய மேதையாக இல்லாவிட்டால்கூட வாழ்க்கையை உங்களால் முழுமையாக அனுபவிக்கமுடியும். உங்களால் எழுத முடியாவிட்டால் என்ன? பாடவோ, ஆடவோ, இசைக்கருவி மீட்டவோ கற்றுக்கொள்ளலாம். அதன்மூலம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தலாம். அவை எல்லாமே கலைகள்தான்.

ஆம். நாம் கவனிக்கப்பட வேண்டும், நாம் நினைக்கப்பட வேண்டும். நாம் முக்கிய நபராக இருக்கவேண்டும். நமக்கு எதில் திறமை உள்ளதோ அதில் கவனம் செலுத்தி ஓரளவு முக்கியத்துவம் பெறலாம். உங்கள் செயல்பாடுகள் உங்களை எங்கே இட்டுச் செல்லும் என்பதை நீங்களே அறிய மாட்டீர்கள். நீங்கள் பெரிய அளவு வெற்றிப் பெறாவிட்டால்கூட, நீங்கள் படித்த, உழைத்த துறையில் உங்களுக்கு ஒரு மேலாண்மை இருக்கும். இதன்மூலம் மற்ற தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே பெரிய சாதனைதான்.

சினிமா ஒரு படைப்புக்கலை. அதில் படைப்பார்வத்தை காண்பிக்க விரும்புவோர் தெரிந்துகொள்ள வேண்டியதும், ஓரளவு தெரிந்தபின் அதற்காக உழைக்க வேண்டியதும் ஒரு மலைப்பான விஷயம்தான்.

-எம்.சிவகுமார்

1 comment:

  1. தகவல் தொடர்பு சாதனங்களில் மிகவும் புரட்சிகரமான விளைவுகளை எற்படுத்தியது திரைப் படம்.அதே சமயம் ஆயகலைகள் 64 கையும் தன்னுள் கொண்டு,தன்னையே ஒரு புது கலைவடிவமாகச்செய்து கொண்ட ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பும் கூட. திரைப் படத்தின் ஆதார சுருதி "பார்வையின் தொடர்ச்சி" (persistense of vision) என்ற விஞ்ஞான கோட்பாடாகும். 70 சதம் விஞ்ஞானமும் 30 சதம் கலையையும்கொண்டது தான் திரைப்படம். சமூக மாற்றத்திற்கு இலக்கியம் ,இசை ,நடகம் ஆகியவை பயன்படும் திரைப்படம் கொஞ்சம் கூடு தலான மக்களை சென்றடையும் என்பது மட்டுமே அதன் சிறப்பு. அதன் மூலம் புரட்சியைக் கொண்டுவந்து விடலாம் என்பது மூடநம்பிக்கை. ---காஸ்யபன்.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)