1924 ஆம் ஆண்டு மறைந்த மகத்தான புரட்சித்தலைவர் லெனினின் உடல் இதுவரை பாதுகாக்கப்பட்டு வரு கிறது. அந்த உடலை எரித்துவிட வேண்டும் என்று தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, பாதுகாக்கப்பட்டு வரும் லெனின் உடல் குறித்த புரளிகள் கிளப்பிவிடப்பட்டன. அவரது உடலைப் பாதுகாக்கும் பணியில் உள்ள வல்லுநர்களில் ஒருவரான யூரி டெனிசோவ்-நிக்கோல்ஸ்கியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது குறைந்தது 100 ஆண்டுகளுக்கு லெனினின் உடலுக்கு எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய தலைவரின் உடல் நல்ல நிலையில் உள்ளது. போதிய அக்கறையுடன் அந்த உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் 100ஆண்டுகள், சொல்லப்போனால் அதைவிட அதிகமான ஆண்டுகள் அது பாதுகாக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மாஸ்கோவின் சிகப்பு சதுக்கத்தில் உள்ள லெனின் நினைவிடத்தில் அவரது உடல் உள்ளது. கடந்த நூறு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது. அவ்வப்போது இந்த சுற்றுலாத்தலம் மூடப்பட்டு, தலைவர் லெனினின் உடைகளை மாற்றும் பணியைச் செய்கிறார்கள். உடலுக்கு எந்தப்பாதிப்பும் நேராமல் உடைகளை மாற்ற வேண்டியுள்ளதால் சில நாட்களுக்கு நினைவிடம் மூடப்பட்டு வருகிறது.
போரிஸ் யெல்ட்சின் ஜனாதிபதியாக இருந்தபோது இந்த உடலை எரித்துவிட வேண்டும் என்று கருத்தை உலாவ விட்டனர். அதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வந்தது. தனது பதவிக்காலத்தின் நிறைவுப்பகுதியில் பெரும் முயற்சியை யெல்ட்சின் மேற்கொண்டார்.
அது போன்ற ஒரு முயற்சி மீண்டும் துவங்கியுள்ளது. மக்கள் ஆதரவு அதற்கு இருக்கிறது என்று காட்டிக்கொள்ளவும் ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். அதனால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். இணையதளங்களில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் உடலை எரிப்பதற்கு ஆதரவு இருக்கிறது என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் மக்கள் போராட்டங்களுக்கு அடையாளமாக விரும்பும் புரட்சியாளரின் உடலை அழிக்க நினைப்பதா என்று மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினருமான இவான் மெல்னிகோவ் தெளிவான பதில்களை அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எரிக்க வேண்டும் என்பதையும், எரிக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணங்களையும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இருக்கும் வாய்ப்புகள் இங்கும் உள்ளது. கூடுதலாக, அவரது உடல் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.இன்றைய தினத்தில் முதலாளித்துவ அமைப்பு நொறுங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் லெனின் குறித்த நினைவுகள் குறையவில்லை. சொல்லப்போனால் அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் சிறந்த மனிதர் என்ற போட்டி நடைபெற்றது. அப்போது லெனினின் பெருமை நிரூபிக்கப்படும் வகையில் சிறந்த மனிதராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த காரணமேயில்லை. அத்தகைய எண்ணம் எதுவும் மக்கள் மத்தியில் இல்லை. சிலதனிநபர் அரசியல்வாதிகளால் செயற்கையாக இந்தப்பிரச்சனை உருவாக்கப்படுகிறது. சில கடுமையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பவே இதை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
செயற்கையாகவே இந்தப்பிரச்சனை எழுந்தாலும், இந்த விவாதத்தில் எப்படிப் பங்கேற்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இரண்டு காரணங்களுக்காக இந்தப் பிரச்சனை எழுப்பப்படுகிறது. லெனினோடு தொடர்புடைய எந்தத் தேதி வந்தாலும் ஆளும் கட்சியும், அதன் பிரதிநிதிகளும்வெறுப்படைகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியே முன்னணியில் நிற்கிறது என்பதுதான் அந்த வெறுப்பிற்குக் காரணம். விலைவாசிப் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இத்தகைய பிரச்சனைகளைக் கிளப்புகிறார்கள் என்பது மற்றொரு அம்சமாகும் என்றார்.
இந்த இரண்டு விஷயங்களுமே தோல்வியில்தான் முடியும். ஏற்கெனவே இதுபோன்ற முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன என்கிறார் இவான் மெல்னிகோவ்
0 comments:
Post a Comment