சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை குறித்து வெளியாகியிருக்கும் செய்திகள் இவை.
“பெட்ரோல் விலை அடுத்த வாரம் முதல் ரூ.1.50 முதல் ரூ.2 வரை அதிகரிக்கிறது. பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் அதிகரிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக எண்ணெய்த்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்”
“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 13ம் தேதியன்று முடிவடைகிறது. இந்தக்கூட்டத் தொடருக்கு பின்னர் பெட்ரோல் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை அதிகரிக்கும் என அந்த அதிகாரி தெரிவித்தார்”.
“டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கூட்டத்தை நடத்துவது குறித்து செவ்வாயன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரசு துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் நவம்பர் 9ம் தேதியன்று இறுதியாக பெட்ரோல் விலையை உயர்த்தி இருந்தன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு சிறிது முன்பாக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டது.”
“கடந்த முறை 0.32 காசு உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விற்பனை செய்து வரும் 3 பொதுத்துறை நிறுவனங்களும் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் ரூ.2.40 நஷ்டம் சந்திப்பதாக எண்ணெய்த்துறை செயலாளர் சுதர்ஷன் கூறினார். பெட்ரோல் விலை உயர்வில் அரசு தலையிடாது என ஜூன் மாதம் முடிவெடுத்துள்ளது. எனவே பெட்ரோல் விலை நிர்ணயத்தில் அரசு தலையிடாது என எஸ்.சுதர்ஷன் கூறினார்.”
“டீசல் விலை உயர்வு குறித்து அவரிடம் கேட்டபோது அரசின் முடிவுக்கு ஏற்ப இதன் விலை உயர்வு இருக்கும் என்றார். டீசல் எண்ணெய் விற்பனையிலும் லிட்டருக்கு ரூ.4.71 நஷ்டம் ஏற்படுவதாக சுதர்ஷன் தெரிவித்தார். பெட்ரோல் விலை எந்த அளவு உயர்த்தப்படும் என்பது குறித்து அவர் கூற மறுத்தார்”
“கடந்த ஜூன் மாதம் 25ம் தேதியன்று கூடிய அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பெட்ரோல் விலையை சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்ய அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து ஜூன் 26ம் தேதியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை தில்லியில் அதிகரித்தது.”
“எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பில் 50 சதவீதம் அரசு அளிக்க வேண்டும் என பெட்ரோலியத் துறை அமைச்சகம் கோருகிறது. ஆனால் நிதித்துறை அமைச்சகம் ரூ.13 ஆயிரம் கோடி மட்டும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என பெட்ரோலிய துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.”
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது, சாதாரண வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் எதிரொலிக்கக் கூடியது. பஸ் டிக்கட் விலையிலிருந்து, காய்கறி, தானியம் என அனைத்திலும் எதிரொலிக்கக் கூடியது.அதையெல்லாம் பெரிதாக யோசிக்காமல் ‘விலை என்றால் அது ஏறுமுகமாகத்தான் இருக்கும், வருமானத்தை அதிகரிக்கும் வழியைத்தான் தேடவேண்டும்’ என்று சிலர் இந்த விலை உயர்வுகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். விலையேற்றத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள். இதுதான் வாடிக்கையாய் இருக்கிறது. இன்னும் பலரோ மௌனமாகவும், சிறு முணுமுணுப்பாகவும் தங்கள் எரிச்சல்களை மிக லேசாய் வெளிப்படுத்திவிட்டு, விலை உயர்வுக்கு பழக்கமாகி, மறந்து விடுகிறார்கள்.
இந்த செய்தியை ஏன் முன்னதாகவே வெளியிட வேண்டும்? இது ஒரு தந்திரம். கொஞ்சம் கொஞ்சமாய் செய்திகளைக் கசியச் செய்து, மக்களை தயாராக்குகிற வேலை. அதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
இந்த தேசத்தில் இதுவரையில் மத்தியில் ஆட்சியதிகாரத்திலிருந்த கட்சிகள் அனைத்துமே பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றிக்கொண்டேதான் இருக்கின்றன. கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். அப்படியானால் எங்கே கோளாறு?
பெட்ரோல், டீசல் விலை கூடாமல் இருப்பதற்கு வழிகளை பொருளாதார அறிஞர்களும், இடதுசாரிக் கட்சிகளும் பல வழிகளையும், உபாயங்களையும் முன்வைக்கின்றனரே அவைகளை ஏன் அரசு பொருட்படுத்துவதேயில்லை?
தேர்தல், வாக்களிப்பு என்பது ஜனநாயக வடிவம் என்றாலும், கட்சிகள், நபர்கள் சார்ந்த அரசியல் ஜனநாயகத்தை வெறும் ஓட்டப்பந்தயமாக மாற்றியிருக்கிறதே, இன்றைய இந்திய அரசு மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் செயல்படுவதற்கு இது காரணமில்லையா?
பெருமுதலாளிகளுக்கு நட்டம் என்றால் அதற்கு மானியம் வழங்கவும், மக்களின் வரிப்பணத்தில் சரிக்கட்டவும் தீவிரமாகச் செயல்படும் அரசுக்கு பெருமுதலாளிகளின் (கணக்கில் வந்த)லாபம் குறித்து என்ன கண்ணோட்டம் இருகிறது?
முடிஞ்சா வாழு, இல்லாட்டி செத்துப்போ ... இதுதான் அவர்கள் காட்டும் வழி.
ஆக, இந்த நிலையை மேலும் நீடிக்கச் செய்கிற, “லாபத்திற்காக இயங்கும் அரசு” நம்முடைய தேவையா, இல்லை “மக்கள் நலன் சார்ந்து இயங்கும் அரசு” நமக்குத் தேவையா?
இந்த தேசத்தில் “ஆட்சி மாற்றம் “ தேவையா? “கொள்கை மாற்றம் தேவையா?”
இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக பல கேள்விகள் விடையளிக்கப்படாமல் அடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதைத் திரும்பிப் பார்க்கக்கூடத் தோன்றாமல் ஓடிக்கொண்டும், உழன்றுகொண்டும் இருக்கிறோம்.
பதிவர்கள் கொஞ்சம் பேசலாமே இதைப் பற்றியும்...
LPG யின் கொள்கையே இதுதானே!
ReplyDeleteகாசு இருந்தா நல்ல படிப்பு இல்லையா படிக்காத
காசு இருந்தா நல்ல மருத்துவம் இல்லையா சாவு
காசு இருந்தா சோரு இல்லையா பட்டினி கிடந்து சாவு
வாழ்க LPG! வாழ்க மண்மோகன்! வாழ்க காங்கிரஸ்! வாழ்க பிஜேபி!