இந்தியக் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர். இதை வைத்து ஏராளமான பணம் சம்பாதித்துவிட்டார் என்பது ஒருபுறம் உண்மையானாலும், அதில் கூட அவர் சில கொள்கைகளை வகுத்துள்ளார் என்பது அவ்வப்போது வெளிவருகிறது.
அண்மைக்காலங்களில் மதுபான நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவது பெரிய அளவில் நடந்து வருகிறது. பெரிய, பெரிய நடிகர்கள் மற்றும் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஆகியோர் இந்த விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். விஜய் மல்லையா என்ற தொழிலதிபர் வைத்திருக்கும் ஐபிஎல் அணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரையே சூட்டியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இந்திய தேசிய அணியின் தலைவரான மகேந்திரசிங் தோனி யுனைடெட் பிரேவரிஸ் என்ற மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிறுவனத்திற்கும் விஜய் மல்லையாதான் உரிமையாளர். இந்த ஒப்பந்தத்தால் மூன்று ஆண்டுகளில் 26 கோடி ரூபாய் அவருக்குக் கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகின. சச்சின் டெண்டுல்கரையும் அவர் முந்திவிட்டார் என்பது பல பத்திரிகைகளில் வெளியான தலைப்புச் செய்தியாகும். இந்த நிலையில்தான் மதுபான நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் மறுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
இதுவரை எந்தவொரு விளையாட்டு வீரரும் வாங்காத ஊதியம் அவருக்கு வழங்கப்படுவதாக இருந்தது என்று விளம்பரத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் விளம்பரங்களை நிர்வகிக்கும் வேர்ல்டு ஸ்போர்ட் ஸ்குரூப்பின் செய்தித்தொடர்பாளரும் இந்த விளம்பரம் தொடர்பான செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இந்த ஒப்பந்தம் பற்றிய விபரங்களைச் சொல்ல முடியாது என்று கூறிவிட்டார். அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தது உண்மைதான். ஆனால் எந்த நிறுவனம் அல்லது எத்தகைய தன்மை உடையது என்பதையெல்லாம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் என்று கூறிவிட்டார்.
ஆண்டொன்றிற்கு 20 கோடி ரூபாய் வருமானம் இந்த விளம்பரத்திலிருந்து சச்சிண் டெண்டுல்கருக்கு கிடைத்திருக்கும் என்பதுதான் உள்வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்தியாகும். சச்சின் டெண்டுல்கரோடு விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செய்தியாளரோடு பேசுகையில், இந்திய டெஸ்டு அணியில் இடம் பெற்றபிறகு மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களில் தோன்ற வேண்டாம் என்று அவருடைய தந்தை ரமேஷ் டெண்டுல்கர் அறிவுரை கூறியிருந்தார். அந்த அறிவுரையை சச்சின் மீறுவதே கிடையாது. அதோடு, எவ்வளவு பணம் தந்தாலும் சச்சினின் கொள்கையை மாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.
தோனியுடன் ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்கு முன்பாகவே சச்சின் டெண்டுல்கரோடு பேசியிருக்கிறார்கள். தற்போது தோனியை ஒப்பந்தம் செய்ததோடு, மேலும் நான்கு ஆட்டக்காரர்களையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மதுபானத்தை நேரடியாக விளம்பரத்தில் காட்டாமல், அதன் பெயர்களைக் கொண்ட தண்ணீர் பாட்டில்களைக் காட்டி விளம்பரம் செய்வது வாடிக்கையாகி விட்டது. மட்டை, பந்து, ஸ்டம்ப், ஹெல்மெட் ஆகியவற்றைக்கூட இந்த நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் சில சமயங்களில் காட்டுகிறார்கள். இவையனைத்துமே மதுபானங்களை முன்னிறுத்தவே என்பது அனைவருக்கும் தெரியும். இது தெரிந்துதான் சச்சினும் மறுத்திருக்கிறார்.
மற்றபடி, பல விளம்பரங்களில் நடித்திருந்தாலும் இந்த விளம்பரங்கள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றிலிருந்து வரும் பணத்தை முதலீடு செய்வதிலும் அவர் மிகவும் கவனமாக இருப்பவர். காப்பீடு எடுத்தால் பொதுத்துறை எல்.ஐ.சி.யில் எடுப்பார். பங்குச்சந்தையில் அவரது முதலீடு என்பது பெயருக்குதான் செய்யப்படுகிறது என்பது ஏற்கெனவே வெளியான செய்திகளாகும். சிலர் குடிப்பது போலே நடிப்பார்.. சிலர் நடிப்பது போலே குடிப்பார் என்பது பாடல் வரிகள். இந்த இரண்டையுமே செய்ய மாட்டேன் என்று உறுதியாக நின்றிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
எத்தனையோ விசயங்களில், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், முதலாளித்துவச் சிந்தனைக்கும் துணைபோகும் சச்சின். மது விளம்பரங்கள் விசயத்தில் மட்டும் இப்படியான கொள்கையைக் கொண்டிருப்பது மதிக்கத்தது. வாழ்த்துவோம் ...
கட்டுரை: க.கணேஷ்
nice one abt my favorite sachin!!
ReplyDeletehttp://scrazyidiot.blogspot.com/
தோழர்களே!
ReplyDeleteமதுபானம் அருந்தாமல், சிகரெட் குடிக்காமல் விளம்பரங்களில் நடிப்பதையும், அதற்காக ரூ.20/-கோடி இழப்பானதை பெரிய தியாகம் போலவும் இந்த ஊடகங்கள் சித்தரித்துக்கொண்டு இருக்கின்றன. மாற்று நிச்சயமாய் அப்படியொரு கருத்து கொண்டிருக்காது என்பதை புரிந்துகொள்கிறேன்.ஆனால் அப்படியொரு தொனி இருக்கிறது இந்தப் பதிவில்.
சச்சின் மிகச்சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அந்த மாபெரும் திறமையினால் அவரது ஸ்கோரும்,கூடியிருக்கிறது. பெப்ஸி, அடிடாஸ், எம்.ஆர்.எப் போன்ற பெரும் முதலாளிகளிடமிருந்து வருமானமும் கிடைத்திருக்கிறது. “மற்ற நாடுகளை வெல்வதைவிட பாகிஸ்தானை வெல்வது கூடுதல் சந்தோஷம்” என்ற விஷமிக்க வார்த்தைகளையும் உதிர்த்ததுண்டு.இந்த எல்லாவற்றோடும் சேர்ந்து சச்சினை மாற்று பார்க்க வேண்டும், புரிந்துகொள வேண்டும் என ஆசைப்படுகிறேன். குறைந்த பட்சம் பெப்சி விளம்பரங்களில் நடிப்பதை அவர் முதலில் நிறுத்தட்டும், அவரது கொள்கை உறுதியை அப்போது பார்க்கலாம்.
இக்கட்டுரையின் தலைப்பாக முதலில் மாண்புமிகு சச்சின் என இடப்பட்டிருந்தது. ஆனால், மாற்று சச்சின் டெண்டுல்கர் மீது விமர்சனக் கண்ணோட்டத்துடனே பார்க்கிறது. குறிப்பாக, தனது விளையாட்டு ரசிகர் வட்டத்தை பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத்திற்காகவும். பெப்சி உள்ளிட்ட பொருட்களுக்கு ஆதரவானவராகவும் இருப்பதை ஏற்கவில்லை.
ReplyDeleteஅதே சமயம், அவர் மதுவுக்கு எதிராக வைத்துள்ள கொள்கையை ஆதரிக்கிறோம். அந்த அளவிலேயே, பெரும் விமர்சனத்தோடே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
மற்றபடி நண்பர் மாதவராஜின் கேள்விகள் சச்சினை நோக்கி மாற்று வலைப்பக்கத்தினாலும் வைக்கப்படுகிறது.