கணினியினைப் பயன்படுத்தக் கூடிய எவருமே கட்டற்ற மென் பொருளைத் தழுவுவதற்கான பொதுவானக் காரணங்கள் உள்ளன. இதன் மூலம் பயனர்கள் தங்கள் கணினியினைத் தாங்களே கட்டுப் படுத்தக்கூடிய ஆற்றலைப் பெறுகிறார்கள்.
தனியுரிம மென்பொருட்களாலானக் கணினி, அம்மென்பொருளை ஆக்கியவர் சொற்படி கேட்கும். பயன்படுத்துபவரின் விருப்பப் படி அல்ல. பயனர்கள் தங்களுக்கிடையே கூட்டுறவாடி நேர்மையானதொரு வாழ்வு வாழவும் கட்டற்ற மென்பொருள் துணை நிற்கிறது. இக்காரணங்கள் அனைவருக்கும் பொருந்துவது போலவே கல்விச் சாலைகளுக்கும் பொருந்தும்.
இதையும் தாண்டி கல்விச் சாலைகளில் கட்டற்ற மென் பொருட்கள் பயன் படுத்தப் படவேண்டியதற்கான முக்கியமான காரணங்கள் உள்ளன. அவற்றை இயம்புவதே இவ்வுரையின் நோக்கம்.
முதற்கண் கல்விச் சாலைகளின் செலவுகளைக் குறைக்க இது உதவும். செல்வந்த நாடுகளில் கூட கல்விச்சாலைகளில் பணப் பற்றாக்குறை உள்ளது. ஏனைய பயனர்களுக்கு அளிக்கப் படுவது போலவே படி எடுத்து மறு விநியோகம் செய்யக் கூடிய சுதந்திரம் வழங்கப் படுவதனால், கல்விச் சாலைகளில் பலக் கணினிகளிலும் இதைப் படியெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். செல்வம் குறைந்த நாடுகளில் நிலவும் டிஜிட்டல் இடைவெளிகளைக் குறைக்க இது உதவுகிறது.
தெளிவான இக்காரணம் முக்கியமானதாயினும் ஆழமற்றது. கல்விச் சாலைகளுக்கு இலவச படிகளைக் கொடுப்பதன் மூலம் இதனைத் தனியுரிம மென் பொருட்களை ஆக்குவோர் ஈடு செய்து விடுவர்.(காத்திருந்து பாருங்கள் ! இதனை ஏற்கும் பள்ளிகள் இம்மென் பொருட்களை மேம்படுத்த நாளை விலைக் கொடுக்க வேண்டியிருக்கும்.) ஆக இவ்விஷயத்தின் ஆழமான காரணங்களை பற்றி அலசுவோம்.
பள்ளிகள் மாணாக்கருக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் மேம்பட வழிவகுக்கக் கூடிய வாழ்க்கை முறையினை கற்றுக் கொடுக்க வேண்டும். மறு சுழற்சி முறைகளை ஊக்குவிப்பது போலவே அவர்கள் கட்டற்ற மென்பொருளை ஊக்குவிக்க வேண்டும் . பள்ளிகள் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தினால் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகும் க ட்டற்ற மென்பொருளையே பயன்படுத்துவார்கள். இது பெருத்த நிறுவனங்களின் ஆதிக்கப் பிடியிலிருந்து சமுதாயத்தைக் காத்து உதவுகிறது. இம்மாணவர்கள் வளர்ந்து பட்டம் பெற்ற பின்னர் இதேச் சலுகைகளை இவர்கள் கொடுக்க மாட்டார்கள்.
மென்பொருள் இயங்குவது எப்படி என்பதை மாணாக்கர் கற்க கட்டற்ற மென் பொருள் உதவுகிறது. விடலைப் பருவத்தினை அடையும் போது இவர்களில் சிலர் தாங்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் மென்பொருட்களைப் பற்றிய அனைத்தையும் அறிய விழைகிறார்கள். சிறந்த நிரலாளர்களாக வரக் கூடியோர் கற்பதற்கானப் பருவம் இது. சிறந்த மென்பொருட்களை எழுதக் கற்க வேண்டுமாயின், இயற்றப் பட்ட நிரல்களை வாசிக்கவும் புதிய நிரல்களை இயற்றியும் பழக வேண்டும். மக்கள் பயன்படுத்தக் கூடிய நிரல்களை கற்று புரிந்துக் கொள்ள வேண்டும். தாங்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய மென்பொருட்களின் நிரல்களைக் கற்க இவர்கள் அதிகம் ஆர்வம் கொண்டோராய் இருப்பர்.
தனியுரிம மென்பொருட்கள் இவர்களின் அறிவுப் பசிக்கு தடை போடுகிறது. “ தாங்கள் கோரும் அறிவு இரகசியமானது — கசடறக் கற்பது தடைச் செய்யப் பட்டுள்ளது!” எனப் பகற்கிறது. இதுவே தொழில் நுட்ப விடயங்களை பொது மக்கள் அறியாதபடிக்குச் செய்கிறது. கட்டற்ற மென்பொருள் அனைவரும் கற்பதற்கு ஊக்கமளிக்கின்றது. கட்டற்ற மென்பொருள் சமூகம், “தொழில் நுட்ப ஏகாதிபத்தியத்தைத் தகர்க்கிறது”. எந்நிலையத்தவராயினும் எவ்வயதானாலும் மாணாக்கரை மூல நிரல்களைப் படித்து அவர்கள் அறிய விழையும் வரைக் கற்க ஊக்கமளிக்கிறது. கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தும் பள்ளிகள் சிறந்து நிரலெழுதும் மாணாக்கர் முன்னேற வழி வகைச் செய்கின்றன.
கட்டற்ற மென்பொருட்களைக் கல்விச்சாலைகள் பயன்படுத்த வேண்டியதற்கான அடுத்தக் காரணம் இன்னும் ஆழமானது. அடிப்படைக் கூறுகளையும் பயனுள்ள ஆற்றல்களையும் பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இத்துடன் இவர்களுடைய பணி நிறைவடைந்து விடுவதில்லை. பள்ளிகளின் அடிப்படை நோக்கம் மக்கள் நற் குடிமக்களாக வாழவும், தம்மை நாடி வருவோருக்கு உதவுவதன் மூலம் நல்லதொரு சுற்றத்தினைப் பேணவும் கற்றுக் கொடுப்பதாகும். இதைக் கணினித் துறைக்கு பொருத்திப் பார்த்தோமாயின் மென்பொருளினை பகிர்ந்து கொள்ளுமாறு கற்றுக் கொடுப்பது என்றாகிறது. ஆரம்பப் பள்ளிக்கு வரும் மாணாக்கரிடம் அப்பள்ளிகள் “ தாங்கள் பள்ளிகளுக்கு மென்பொருட்களைக் கொண்டு வந்தால் அவற்றைக் கட்டாயம் பிற மாணாக்கருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்” எனச் சொல்ல வேண்டும். கல்விச் சாலைகள் தாங்கள் போதிப்பதை தாங்களும் கட்டாயம் கடைபிடிக்கத் தான் வேண்டும். கல்விச் சாலைகளில் நிறுவப் பட்டுள்ள மென்பொருட்கள் மாணாக்கருக்கு நகலெடுத்துக் கொடுக்க, இல்லங்களுக்கு எடுத்துச் செல்ல மீண்டும் பிறருக்கு மறு விநியோகம் செய்ய வல்லதாக இருத்தல் வேண்டும்.
மாணவர்களை கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தவும், கட்டற்ற மென்பொருள் சமூகத்திற்கு பங்களிக்கச் சொல்வதுமே குடிமையியலுக்கான ஒரு பாடமாகும். பண முதலைகளைப் போலல்லாது இது மாணாக்கருக்கு பொதுச் சேவையின் உதாரணங்களை கற்றுக் கொடுக்கிறது . அனைத்து விதமான கல்விச் சாலைகளுமே கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
-- ரிச்சர்ட் ஸ்டால்மன்
(நன்றி www.gnu.org)
11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தொடங்கி அனைத்து வித கணிப்பொறி தொடர்பான பாடத்திட்டங்களிலும் மைக்ரோசாப்ட் போன்ற தனியுரிமை மென்பொருள்களே இடம்பெற்றிருக்கின்றன.
ReplyDeleteஅவர்களுக்குத்தேவையான அடிமைகளை உருவாக்குமிந்த பாடத்திட்டங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை.
மாற்று சிந்தனைக்கான வாய்ப்பே இல்லாமல் .. விண்டோஸ் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துள்ளதே சிந்தன்...
ReplyDelete