களம் தள்ளி ...
வயிற்றையோ
மனதையோ
சோற்றாலோ
போதையாலோ
நிறைத்துவிட்டு
வெளிவருகிற நிமிடங்களில்
நீள்கிற கைகளுக்கு
இடப்படும் ஒரு ரூபாய் ...
இரத்தமோ
உதவியோ கேட்டு வருகிற
இ-மெயில்களை
வெறுமனே இலவசமாய்
பார்வார்டு செய்தல்
நடந்த
நடக்கிற விபத்துக்களை
எட்டி நின்று
பார்க்கிற வேளைகளில்
நம் இரக்க சுவாபத்தை
பிறரறிய வெளிப்படுத்துகிற
ஓர், “உச்ச்”
இவையெல்லாம்
சேர்த்துக் குழைத்து
“எனக்கும் தெரியுமாக்கும்”
என்று நீட்டி முழக்கிக் கொள்ளும்
சில கமெண்ட்கள்...
போன்ற
ஆகப்புனிதமான கடமைகளை
ஆற்றுவதிலேயே
ஆத்மதிருப்தி
அடைந்துவிடுகிறது,
களத்தில்
இறங்காது
தள்ளியே நிற்கும்
நம் சக மனிதர்கள் குறித்த
சமூக அக்கறை ... !
கவிஞர்: வெண்மணிச் செல்வன்
0 comments:
Post a Comment