ஜேம்ஸ் பாண்டு படத்தைப் பார்க்கும் பரபரப்பு இருந்தது என்று விக்கிலீக்ஸ் ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
லட்சக்கணக்கான ஆவணங்களை இணைய தளத்தில் ஏற்றி தலைகால் புரியாமல் சுற்றிக் கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விக்கிலீக்ஸ் பெரிய பதுங்கு குழி ஒன்றில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது. மேற்கத்திய நாடுகள் இதை வில்லனின் குகை என்று வர்ணித்தாலும், உள்ளே நுழைபவர்களுக்கு ஜேம்ஸ் பாண்டு நினைவுதான் வருகிறது என்று சில பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ளது விடாபெர்க் பூங்கா. அணுஆயுதத் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நிலத்தடியில் ஒரு பதுங்குகுழி அமைக்கப்பட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டில் பதுங்கு குழி என்ற நிலை கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் அதற்குள் விக்கிலீக்ஸ் நுழைந்தது. கருங் கல் பாறைகளைக் குடைந்து தனது அலுவலகத்தை அமைத்தார் ஜூலியன் அசாங்கே.
ஏராளமான கணினி சர்வர்கள் அங்கு வைக்கப்பட்டன. இவற்றில்தான் லட்சக்கணக்கான ஆவணங்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டன. தரையிலிருந்து 100 அடிக்குக் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் பதுங்கு குழிக்குள் நீரில் மிதக்கும் கூட்ட அரங்கு ஒன்றும் உள்ளது.
அணுஆயுதத்திலிருந்து பாதுகாக்கும் பதுங்கு குழி என்பது கைவிடப்பட்டபோது மிகவும் மோசமான நிலையில் இந்த இடம் இருந்தது. அற்புதமான இடமாக ஸ்வீடனின் வடிவமைப்பு நிறுவனமான ஆல் பெர்ட் பிரான்சு-லனோர்டு அதை மாற்றியது. ஜேம்ஸ்பாண்டு படங்களுக்கான தளங்களை வடிவமைக்கும் கென்னத் ஆடம்சின் அரங்குகள் மூலம் உத்வேகம் பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த நிறுவனம், சூரிய ஒளியால் இயங்கும் விளக்குகள், செயற்கையான சிறிய நீர்வீழ்ச்சிகள், சிறப்பாக வடிவமைக் கப்பட்ட நாற்காலிகள், மின்சாரத்தை சேமித்து வைத்துக் கொள்ளும் ஜெனரேட்டர்கள், அவற்றை இயக்க நீர்மூழ்கிக் கப்பல்களின் இன்ஜின்கள் என்று ஒரு கனவு அலுவலகத்தை உருவாக்கியது.
ஸ்வீடன் நாட்டிலிருந்து இயங்கலாம் என்று அசாங்கே தீர்மானித்ததற்கு அந்த நாட்டின் சட்டங்கள் சிறப்பாக இருந்ததுதான் என்று கூறப்படுகிறது. பேச்சுரிமைக்காகப் போராடுபவர்களைப் பாதுகாக்க உலகிலேயே சிறந்த சட்டங்கள் ஸ்வீடனில்தான் உள்ளன என்பது அவரது கருத்தாக இருந்தது. ஆனால் அதே ஸ்வீடனில்தான் பொய்யான குற்றச்சாட்டுகளைக்கூறி பிரிட்டனில் வைத்து கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவைத் திருப்திப்படுத்த எந்த நிலைபாட்டையும் எடுத்து விடுவார்கள் என்பதால் தனது வழக்கறிஞர் மூலம் அசாங்கே சரணடைந்தார். தகவல்களை வெளியிடுபவர்களை ஸ்வீடனின் சட்டத்தில் தண்டிக்க இடமில்லை.
அமெரிக்கா முன்ஜாக்கிரதையாக இதுபோன்ற இணையதளங்களைக் கண்காணிக்க அமெரிக்க உளவுத்துறைகள் முடிவெடுத்துள்ளன. பிரச்சனையை இதுபோன்ற நிலைக்கு சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்புகளை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தேவையானால் பல மிரட்டல் நடவடிக்கைகள் இப்போதே துவங்கிவிடும் என்கிறார்கள் பல இணைய தள நிறுவனங்களை நடத்துபவர்கள். நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 70 இணையதளங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்தது. இதில் இணையதளம் மூலம் ஓவியங்களை விற்கும் இணையதளங்களும் அடங்கும்.
விக்கிலீக்ஸ் இணையதளத்தை சீர்குலைக்கும் அமெரிக்காவின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த இணையதள ஆதரவாளர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். அதோடு, விக்கிலீக்சுக்கான சேவையை நிறுத்திய நிறுவனங்களையும் அவர்கள் குறிவைத்துள்ளார்கள். முதலில் ஆன்லைன் சில்லரை வர்த்தக நிறுவனமான அமேசானைக் குறிவைத்தார்கள். பின்னர் அதைக் கைவிட்டுவிட்டு போபால் நிறுவனத்தின் மீது குறி வைத்துள்ளார்கள். போதிய அளவு ஆட்பலம் இல்லாததால் தங்கள் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.
நெதர்லாந்தில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதான அந்த மாணவர் மாஸ்டர் கார்டு மற்றும் விசா ஆகிய இரண்டு கடன் அட்டை சேவை நிறுவனங்களின் இணையதளங்கள் மீது தொழில்நுட்ப ரீதியாகத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விக்கிலீக்சுக்கு எதிரான இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான மென்பொருள் கருவிகள் 31 ஆயிரம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சேவை நிறுவனங்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. லாய்க் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மென்பொருளைக் கொண்டு தங்கள் இணையதளம் தாக்குதலுக்கு உள்ளாகியது என்று போபால் நிறுவனம் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment