_______________
“சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது முதல் முறை விபத்தைப் பார்த்தால் அதிர்ச்சியோடு மனம் துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் பார்க்கப் பார்க்க சாலை விபத்துக்கள் இந்த நகர வாழ்க்கையின் ஒரு அங்கமாக, பழகிய விசயமாகப் பார்த்துவிட்டுப் பறந்து கொண்டிருக்கிறோம்.”கோவையில் பள்ளி குழந்தைகள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பில் தொடங்கி கல்வித்தரம் வரை பல்வேறு விசயங்கள் இயல்பாக விவாதத்தில் முன்னுக்கு வந்தன. பள்ளித் தாளாளர் முன்னிலையில் அப்பள்ளி முதல்வர் உரிய முறையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நிகழ்வின் ஊடாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
"அது ஒரு தேர்வு நாள். யு.கேஜி. மாணவன் ஒருவனை பள்ளிக்கு விட வந்த தந்தை, வகுப்பாசிரியரிடம் அவனைப் 'பாதுகாப்பாக' பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு முறைக்கு இரு முறை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறாரே என்ற சந்தேகத்தில், ஏன் இப்படிச் சொல்கிறீர்கள், என்ன விசயம்? என்று வகுப்பாசிரியர் கேட்டிருக்கிறார். வேலைக்குச் செல்லும் வேகத்தில் கால்கள் பரபரத்துக் கொண்டிருந்த அவர், 'வேறொன்றுமில்லை, என் மகனின் காதிற்குள் சிறிய பென்சில் சிக்கியிருக்கிறது, அதனால்தான் அப்படிச் சொன்னேன், பார்த்துக் கொள்ளுங்கள், எனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டது நான் போகிறேன்' என்று சொல்லிவிட்டு வகுப்பாசிரியரின் அடுத்த வார்த்தையைக் கூட கவனிக்காதவராக ஓட்டமும், நடையுமாக அங்கிருந்து மறைந்துவிட்டார். தேர்வின் அவசரத்தில் இருந்த வகுப்பாசிரியர் என்னிடம் பதற்றத்தோடு வந்து இதைச் சொன்னார். காதுக்குள் பென்சில் சிக்கியிருக்கிறது, எந்த நேரத்தில் கையைக் கொண்டு செல்வானோ, என்னாகுமோ என்ற அச்சத்தோடு அவர் நடந்த சம்பவம் முழுவதையும் சொன்னார்.”
“இதைக் கேட்டுவிட்டு உடனடியாக அந்த மாணவனின் தந்தைக்கு பள்ளியில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பேசினேன். எதிர்முனையில் தொடர்பு கொண்ட அதே தந்தை, அதான் நான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுத் தானே வந்தேன், பிறகேன் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள். எனக்கு வேலை இருக்கிறது, நான் வர முடியாது என்று கோபமாகவும், வேண்டா வெறுப்பாகவும் பதில் கூறினார். நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை, உங்கள் வீட்டிலிருந்து பிறரையாவது உடனடியாக பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்றேன்”
“அதன் பிறகு அந்த மாணவனின் அம்மா பள்ளிக்கு வந்தார். அவருக்கு குழந்தையின் காதில் பென்சில் சிக்கியிருக்கும் விசயம் தெரியாது போலிருக்கும் என்ற எண்ணத்தில் வகுப்பாசிரியர் இதை அவரிடம் சொன்னார், அதற்கு அந்தத் தாய் அது தான் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தெரியுமே! என்று அலட்சியமாகக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு வகுப்பாசிரியர் அதிர்ச்சி அடைந்து இவ்வளவு ஆபத்தான நிலையில் ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை? எனக் கேட்டதற்கு, உங்களுக்கு என்ன தெரியும், நேற்றெல்லாம் எனக்கு வாந்தி, வயிற்று வலி. நான் பட்ட சிரமம் எனக்குத் தான் தெரியும், என்று கூறினார்”.
“உடனடியாக மாணவனை கூட்டிச் செல்லுங்கள், உரிய சிகிச்சை அளித்துவிட்டு பிறகு வாருங்கள் என்று நான் அனுப்பி வைத்தேன். இரண்டு மூன்று நாட்களாக சிறுகுழந்தையின் காதுக்குள் ஒரு பென்சில் சிக்கியிருக்கிறது, நாமாக இருந்தால் பதறிப்போய் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடியிருப்போம். ஆனால் இப்படியும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்” என்று பள்ளி முதல்வர் வேதனையோடு பகிர்ந்தார்.
நடந்த சம்பவத்தை முதல்வர் சொல்லச் சொல்ல, கூட்டத்துக்கு வந்திருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட பெற்றோரும் பலமாகச் சிரித்தனர். அதேசமயம் இந்த சம்பவம் நகைப்பிற்குரியது தானா?. நம்பவே முடியாத இது ஒரு விதிவிலக்கான சம்பவமா? அல்லது திருப்பூரின் எந்திரகதியான வாழ்க்கையின் வெளிப்பாடா? என்ற கேள்விகளும் உள்ளுக்குள் எழாமல் இல்லை.
தனியான ஒரு சம்பவமாக விட்டுவிடலாம் என்றால் அதற்குப் பிறகு இதைப் பற்றி பேச ஒன்றுமேயில்லை, இப்படியும் மனிதர்கள்! என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் இதைப் பொதுமைப்படுத்திப் பார்ப்பதற்கு ஏதேனும் முகாந்திரம் இருக்கிறதா?
எந்த ஒரு உயிருக்கும் தன் குழந்தையின் மீது அன்பு, பாசம் இருப்பது இயல்பான உணர்வு தானே? அது கூட இல்லாதவர்களா அந்தப் பெற்றோர்? ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? பெயர் குறிப்பிடாமல் சொல்லப்பட்ட அந்த பெற்றோரை அணுகிப் பார்த்தால் தெரிந்திருக்கும்.
கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் திருப்பூர்வாசிகளின் வாழ்க்கையில் பரபரப்பு என்பது இயல்பாகிப் போன விசயம். காலை 5, 6 மணிக்குள் எழுந்து காலைக்கடன், சமையல் வேலைகளை முடித்து ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் பஸ்ஸைப் பிடித்தால் தான் 8.30 மணிக்குள் கம்பெனி வாசலில் கால் வைக்க முடியும் என்றிருக்கும் ஆண்களும், பெண்களும் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றனர். 12-லிருந்து 16 மணி நேரம் வேலை. இரவு 8.30 அல்லது 9 மணிக்கு வேலை முடித்து மீண்டும் வீடு வந்து சேர 10 மணி ஆகும். இரவு உணவு தயாரித்து சாப்பிட்டு படுத்துத் தூங்க 11 மணி. மீண்டும் மறுநாள் காலை. இப்படித்தான் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை வைக்க வேண்டிய தேவை, ஏதோ ஒரு அடிமை தேசத்தில் அல்ல, சுதந்திர நாட்டின் டாலர் நகரத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறது. இந்த வர்ணனையில் பிள்ளைகளைக் கவனிக்க, குடும்பத்தினரோடு உறவாட எங்கே நேரம்?
எந்திரகதியான வாழ்க்கையோட்டம் மனித உணர்வின் மெல்லிய இழைகளை நசுக்கிவிட்டுத் தன்வழியில் போய்க் கொண்டிருக்கிறது. சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது முதல் முறை விபத்தைப் பார்த்தால் அதிர்ச்சியோடு மனம் துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் பார்க்கப் பார்க்க சாலை விபத்துக்கள் இந்த நகர வாழ்க்கையின் ஒரு அங்கமாக, பழகிய விசயமாகப் பார்த்துவிட்டுப் பறந்து கொண்டிருக்கிறோம்.
இதேபோல் தான் வீட்டிலும் நடக்கிறது. அப்புறம், குழந்தையின் காதில் பென்சிலின் கூர்முனை சிக்கியிருப்பது சாதாரண விசயம் தானே? செவிப்பறை கிழிந்தா போய்விட்டது? அப்படித்தான் கிழிந்து போகட்டுமே! அதனால் என்ன? கேட்பதற்கு இன்னொரு காதிருக்கிறதே! இது தான் திருப்பூர் வாழ்வு. திருப்பூரைப் போன்ற பல நகரங்களில் உழைப்பாளி மக்களின் வாழ்வு!
சரி செய்யப்பட வேண்டியது அந்த சிறுவனின் காது மட்டுமல்ல
இதில்கூட்டம்சிரிக்க என்ன இருக்கு? நல்ல அப்பா, நல்ல அம்மா.!!!!!!!!!
ReplyDeleteஇந்த அம்மா அப்பாக்கு எதற்கு குழந்தை. எத்தனை பெண்களுக்கு குழந்தை இல்லாமல்..கடவுளின் நினைப்பு தெரியவில்லை..
ReplyDeleteலட்சுமி அவர்களுக்கு உங்களுடைய வருகைக்கு கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஅமுதா கிருஷ்ணா உங்களுடைய வருகைக்கு கருத்துக்கும் நன்றி
ReplyDelete