சட்டங்களை கொண்டு வருவதற்காக மட்டுமல்ல, அதனை நிறைவேற்றுவதற்காகவும் தொடர்ந்து போராடியாக வேண்டும். ஏனெனில் சட்டத்தின் நோக்கத்தை உளப்பூர்வமாக ஏற்காத அதிகார வர்க்க நந்திகள் மேலிருந்து கீழ் வரை ஏராளம் உண்டு.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. ஆயினும், தீண்டாமைக் கொடுமை தொடர்கிறது. இக்கொடுமை புரிவோர் மீது இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடுப்பது என்பது மிகவும் அபூர்வம். எங்கே போர்க்குணமிக்க விழிப்புணர்வு அதிகமாக உள்ளதோ அங்கே மட்டும்தான் இந்தச் சட்டம் பாயும்.
அதேபோல ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கிவிடுவதற்காக அரசு வரவு- செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் தனி நிதி ஒதுக்கீடு செய்கிற சிறப்புக் கூறு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் பெரும்பாலும் இது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. எந்தத் துறையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறப்புக்கூறு திட்ட அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படுவதே இல்லை. இங்கேயும் தொலை நோக்கும் சமூக அக்கறையுமற்ற அதிகாரவர்க்கமும் ஆட்சியாளர்களுமே நந்தியாக குறுக்கே நிற்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அட்டவணை சாதியினரில் மூன்று பிரிவுகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவையாகும். பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய பிரிவுகளே அவை. நீண்ட நெடுங்காலமாக சாதி ரீதியான ஏற்றத் தாழ்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகப் பெற்ற உரிமைகளில் அட்டவணை சாதியினருக்கான இட ஒதுக்கீடும் ஒன்றாகும். மனிதகுலம் சந்திக்கும் எந்த நெருக்கடியைப் பட்டியலிட்டாலும் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த அட்டவணை சாதியினர்தான் அதில் அதிக நெருக்கடியைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்.
மற்றவர்களோடு ஒப்பிடும்போது இந்த நிலை. அட்டவணை சாதியினருக்குள் ஒப்பிட்டுக்கொண்டால், எத்தனை முறை சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் ஒரு வரி என்னவென்றால், மூட்டைகளில் அடி மூட்டை என்கிற வரிக்குச் சொந்தக்காரர்களாக அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு மூலம் பலன் பெற்று அட்டவணை சாதியினரில் ஒரு சிறு பிரிவு முன்னேற முடிந்ததோ, அதுபோன்று உள் ஒதுக்கீடு தரப்பட்டால் அருந்ததியின மக்களில் ஒரு சிறு பிரிவினர் முன்னேற வாய்ப்புள்ளது என்ற கோரிக்கை 26 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தது.
இந்தக் கோரிக்கை காகித அளவில் தான் துவக்கத்தில் இருந்தது. அருந்ததிய சமூக அமைப்புகள் இந்தக் கோரிக்கையை அந்த சமூகத்து மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றன. 2007 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு கிடைத்தது. வலுவான மக்கள் இயக்கங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் அருந்ததிய அமைப்புகளால் நடத்தப்பட்டன. இந்த இயக்கங்களுக்கு அருந்ததிய மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற தரப்பினரிடம் கிடைத்த ஆதரவு அரசிடம் அசைவை ஏற்படுத்தியது. நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒருநபர் குழு ஏற்படுத்தப்பட்டது. அருந்ததிய மக்களின் துயர நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்ட அக்குழு, மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்தது. சட்டமன்றத்தில் 2009, ஏப்ரல் 29 அன்று ஒப்புதல் தரப்பட்டு, 27.5.2009 அன்று அரசாணை வெளியானது. ஆனால் அமலாவதில் ஏகப்பட்ட குளறுபடிகள்.
பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு நடைபெறுகிறது. விகிதாச்சார அடிப்படையில் 165 இடங்கள் அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து அழைப்புக் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் தேர்வு எழுதுவது கேள்விக் குறியாகி உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மாநில அலுவலகத்தையும்; மாநில அலுவலகம் மாவட்ட அலுவலகத்தையும் மாறி மாறி கை நீட்டுகின்றன. முதலமைச்சர் அலுவலகத்தில் செய்யப்பட்ட முறையீடும் காற்றில் கரைந்துவிட்டது.
இதே போல் மின்வாரியத்திலும் உள்ஒதுக்கீடு அமலாகவில்லை. தொழில்நுட்ப உதவியாளர் பணிகள் நியமனத்தில் உள் ஒதுக்கீடு அமலாகாததை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர்நீதி மன்றமும் உள்ஒதுக்கீட்டை அமலாக்க ஆணை பிறப்பித்துவிட்டது. ஆயினும் அமலாகவில்லை. அதிகார வர்க்க - சாதி ஆணவ நந்திகள் ஏதோ ஒரு வகையில் முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டே இருக்கின்றன.
இப்படி உள்ஒதுக்கீட்டை அமலாக்க ஆர்வம் காட்டாமல் சாக்குப் போக்குகள் சொல்வதற்கு அதிகார வர்க்கத்தின் மூளையில் உறைந்து போயிருக்கிற சாதி ஆணவம் காரணமில்லையா? இதை உடைத்தெறிய வேண்டியது பெரியாரின் பாசறையில் வளர்ந்தவன் என்று சொல்வதில் பெருமைப்படுகிற முதல்வரின் கடமை அல்லவா? கலைஞர் கொண்டுவந்த சட்டமே அவரது ஆட்சியில் அமலாகாது என்றால் “காகிதப் பூ மணக்காது, கலைஞர் சட்டம் நடக்காது” என்று சொல்லும் நிலைமைதான் உருவாகும்.
சமச்சீர் கல்வி, கல்விக்கட்டணம் நிர்ணயிப்பு என எல்லா நடவடிக்கைகளுமே காகிதப்பூவகத்தானே இருக்கின்றன?.
ReplyDeleteகாயத்திற்கு ஒத்தடம் கொடுப்பதோடு சரி, மருந்து போடுவது இல்லை என்பதே ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள் ....
ReplyDeleteஆமாம், சிந்தன்! இங்கு நிறைய காகிதப்பூக்கள் பூத்து உதிர்ந்து குப்பையாகக் கிடக்கின்றன. இவர்கள் காயத்திற்கு ஒத்தடம் கூட கொடுப்பதில்லை. மருந்துச் சீட்டு மட்டுமே கொடுக்கிறார்கள்.
ReplyDeleteகே.ஆர்.பி செந்தல்!
தொடர்வோம் உங்களைப் போன்றோரின் ஆதர்வுடன்... நன்றி.