ஒரு கடிதம் அளிக்க 16 மாத கால அவகாசம் ஏன் தேவைப்பட்டது? என்று பிரதமர் மீது கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. அடுத்து, ஊழல் வழக்கில் சிக்கியவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிப்பதா என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஜே.தாமஸ், இதற்கு முன்பு மத்திய தொலைத் தொடர்பு செயலாளராக செயல்பட்டவர். தொலைத்தொடர்பு செயலாளராக இருந்தபோதுதான் ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஊழல் நடந்தது. இதே பி.ஜே.தாமஸ் கேரளாவில் கருணாகரன் அரசின்கீழ் உணவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியவர். அப்போது பாமாயில் இறக்குமதி ஊழலில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
ஊழல் சேற்றில் நீந்தித் திளைத்த இத்தகைய நபர் ஊழல் கண்காணிப்பு ஆணையராக எப்படி நியமிக்கப்பட்டார்? கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக எப்படிச் செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்ட விதிகளின்படி ஒரு நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை நிலுவையில் இருந்தால் பதவி உயர்வுக்குக் கூட பரிசீலிக்க முடியாது. அப்படி இருக்க, வழக்கு நிலுவையில் இருக்கும் ஒருவர் பொறுப்பு வாய்ந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு எப்படித் தேர்வு செய்யப் பட்டார் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு நியமிக்கப்படுபவரை தேர்வு செய்ய 3 பேர் அடங்கிய குழு உள்ளது. இந்தக் குழுவில் பெரும்பான்மை பெற்ற ஒருவரே நியமிக்கப்படுவார். அல்லது ஒருமனதாகத் தேர்வு செய்யப்படும் நபரே இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் சேர்ந்து பெரும்பான்மை அடிப்படையில் பி.ஜே.தாமஸை தேர்வு செய்துள்ளனர்.
நாட்டையே உலுக்கி எடுத்துள்ள இமாலய ஊழல் நடந்துள்ள துறையின் செயலாளராக பணியாற்றிய ஒரு நபரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிப்பது, கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை வைப்பது போல உள்ளது. இதற்குப் பெயர் ஆணவமா? அலட்சியமா? நோக்கம் எதுவும் இன்றி தற்செயலாக நடந்த நிகழ்வாக இதைக் கருத முடியுமா?
பகாசுர வர்த்தக நிறுவனங்களும், பெரும் காண்டிராக்டர்களும் கூட்டுச் சேர்ந்து தேசத்தின் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள். மறுபுறம் அதிகாரத்தின் உயர்பதவியில் இருப்பவர்கள் இந்தக் கூட்டுக்கொள்ளைக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். பல ஆயிரம் கோடி பெறுமான பொதுச் சொத்துக்களையும், பொது நிதியையும் தங்களது நலன்களுக்கு ஏதுவாக நடப்பவர்களுக்கு ஏற்றவாறு விதிகளும் மாற்றப்படுகிறது. அதிகார பீடத்தின் உயர்மட்ட ஆசியுடன் நடைபெறும் ஊழல்கள் நாட்டின் ஜனநாயக வாழ்வை அசுத்தமாக்கி வருகிறது; நாசமாக்கி வருகிறது என்பதை நடைபெறும் நிகழ்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
கட்டப்பஞ்சாயத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை அந்தக் கயவனுக்கே மணமுடிப்பதைப்போல பெருந்திருட்டில் ஈடுபட்டவனை திருட்டு ஒழிப்புத் துறைக்கு தலைவனாக்குகிறார்கள். கொஞ்சமும் பயமில்லை.
ReplyDeleteபதவி பிரமாணம் செய்பவரின் பேரில் பாமாயில் வழக்கு,
ReplyDeleteசெய்விப்பரின் பேரில் நிலம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு.
ஜாடிக்கேற்ற மூடிகள். உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகளும்,
சுப்பிரமணிய சாமியும், பொதுவழக்கு தொடுத்த மூத்த வழக்கறிஞர்
பிரசாந்த் பூஷன் போன்றவர்கள் இல்லையெனில், இந்த ஊழலையே
அமைதியாய் சோனியா தலைமையில் அடக்கம் செய்திருப்பார்கள்.
அந்த நாலு பேருக்கு நன்றி.
ஹரிஹரன்!
ReplyDeleteஅப்படி போடுங்கள். ஆனால் நிலைமை அதைவிடவும் மோசம.
வாசன்!
‘அடக்கம் அமரருள் உய்க்கும்’
உற்சாகம் தருகிரது தங்களைப் போன்றோரின் வருகை.