சத்யஜித் ரே இயக்கி இத்தனை ஆண்டுகளாய் திரைக்கு வராமல் இருக்கும் ஒரு படத்தை ஒரு திரைப்பட விழாவில் திரையிடுவது என மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவோடு சிக்கிம் இணைக்கப்படுவதற்கு முன் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் அது. இந்தப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க அரசின் முயற்சியை அடுத்து, படத்தைத் திரையிட தடைகோரி ஒரு தனியார் அறக்கட்டளை சிக்கிம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. நீதிமன்றமும் தற்போது ஒரு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தியாவோடு இணைக்கப்படுவதற்கு முன் மன்னராட்சியின் கீழ் இருந்த்அது சிக்கிம். அன்றைய மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் இந்தப் படத்தின் ஒரு காட்சியில் அரண்மனைக்கு பின்புறத்தில் தூக்கிப் போடப்பட்ட மிச்சம் மீதி உணவுகளுக்காக ஏழைகள் தள்ளுமுல்லில் இறங்குவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இக்காட்சியைக் கண்ட மன்னர் பால்டேன் தோண்டப் நாம்ஜியால் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தார்களாம்.
அதைத் தொடர்ந்து சில காட்சிகளை நீக்குமாறு ரே கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரும் படத்தின் மைய நோக்கத்திற்கு பாதிப்பு வராமல் காட்சிகளை ஒப்புக்கொண்டார். ஆனால் படம் முழுமையாக தயாரானபோது, சிக்கிம் இந்தியாவின் இன்னொரு மாநிலமாக இணைக்கப்பட்டு விட்டது. படம் வெளியானால் சிக்கிம் மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் மத்திய அரசு இப்படத்திற்கு தடை விதித்தது.
“என் தந்தையின் நண்பர்களுக்காக ஓரிரு தடவை திரையிடப்பட்டது. அதன்பின் யாருமே இப்படத்தை பார்த்ததில்லை” என்கிறார் சத்யஜித் ரேவின் மகன் சந்தீப் ரே.
வாழ்நாள் சாதனைகளுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் ரே. விருது பெற்ற சில நாட்களில் காலமானார். அவரது ஒரு முக்கியமான படைப்பு மக்கள் கவனத்திற்கு வராமல் போய்விடக் கூடாது என்று மேற்கு வங்க அரசு கருதுகிறது. இந்த நோக்கம் நிறைவேற வேண்டும்.
0 comments:
Post a Comment