தற்கொலை செய்துகொண்ட தந்தையின் கடிதத்தைக் காட்டும் மகன். |
திருப்பூர் கடந்த 2 ஆண்டுகளில் சந்தித்துவரும் நெருக்கடி சாதாரண தொழிலாளர்களைக் காவு வாங்கி வருகிறது. இதன் விளைவாக தற்கொலை விகிதம் வாரம் 11 பேர் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
திருப்பூரில் தமிழக சராசரியைக் காட்டிலும் மிக கூடுதலான தற்கொலைகள் பதிவாகியுள்ளது செய்தி நாம் ஏற்கனவே அறிந்ததே. (நெருக்கடிக்கு பலியாகும் தொழிலாளர்கள் ...) கடந்த ஆண்டில் 491 பேர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டில், முதல் 10 மாதங்களிலேயே 489 பேர் தற்கொலை செய்துகொள்ளும் அளவில் நிலமை மோசமாகியுள்ளது. காவல்துறை குற்றப் பதிவுக் காப்பக விபரங்களில் சராசரியாக 2 நாட்களுக்கு 3 பேரும், வாரம் 11 பேரும் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
40 வயதுக்குள் 356 பேர்:
தற்கொலை செய்துகொண்டவர்களில் 356 பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், இதில் 28 சிறுவர், சிறுமியரைத் தவிர்த்தால் கூட ஒரு நாளைக்கு ஒரு வாலிபர் தற்கொலைசெய்துகொள்கின்றனர். 164 பெண்கள் தற்கொலைக்கு ஆளாகியுள்ளனர், ஆண்கள் எண்ணிக்கையோ கிட்டத்தட்ட 2 மடங்காக உள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 300 ஆண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தடுப்புக்குழு என்ன செய்கிறது:
கடந்த ஜூன் மாதத்தில் தற்கொலை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து தற்கொலைத்தடுப்பு குழு அமைப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தற்கொலைத் தடுப்புக்குழுவால் பயனேதும் இல்லை என்பதையே மேற்கண்ட புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. முக்கிய அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் வெளிப்படையாக பேட்டியளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், “திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இன்னும் முழுமையாக செயல்படத் துவங்கவில்லை. போதுமான அலுவலகங்களும், அதிகாரிகளும் இல்லை. அதனால், இதுபோன்ற விளைவுகளின் பின்னணியை ஆய்வு செய்ய முடியவில்லை. அவ்வபோது முன்னுக்குவரும் பிரச்சனைகளில் தலையிடுவதை மட்டுமே நாங்கள் செய்துவருகிறோம்” என்றார்.
உள்ளூர் தொழிலாளர்கள்:
திருப்பூருக்கு வரும் வெளியூர் தொழிலாளர்களுக்கு நெருக்கடி அதிகம் இருப்பது உண்மையானாலும், தற்கொலைக்கு பலியாகியிருப்பவர்களில் 342 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்களே என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.வெளி மாவட்டத்தினர் 138 பேர்களும், வெளி மாநிலத் தொழிலாளர்கள் 9 பேரும் இவ்வாறு பலியாகியுள்ளனர். காரணங்களை ஆராய்ந்தபோது, வேலையின்மை, மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு என்பன உள்ளிட்ட பொருளாதாரக் காரணங்களே முதலிடத்தில் உள்ளன.
நெருக்கடிக்குத் தீர்வு தேவை:
கடந்த 2 வருடங்களில் திருப்பூர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் சூழலில், நெருக்கடிக்கு பலியாவது சாதாரண பொதுமக்களே என்ற உண்மை மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “திருப்பூர் தற்கொலைகளின் மீது அவசர கவனம் எடுக்க வேண்டும். புள்ளி விபரங்கள் மீதான அறிவியல் அடிப்படையிலான ஆய்வைச் செய்வது மிக அவசியம். அத்துடன் இஎஸ்ஐ மருத்துவம் உள்ளிட்ட தொழிலாலர்களின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் வருமானத்தில் கணிசமான உயர்வை ஏற்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தாமதமின்றித் துவக்க வேண்டும்” என்று கூறினர்.
வயிற்று வலியும் காரணமா?
திருப்பூர் தற்கொலைக்கான முக்கியக் காரணங்களில் 106 வழக்குகளில் வயிற்று வலியே காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசிய போது, “தற்கொலை வழக்குகள் அதிகரிப்பதால், அதற்காக செலவிட வேண்டிய காலமும் அதிகமாகின்றன. மேலும், பல வழக்குகளை அதிகம் நீட்டிபதற்கு குடும்பத்தினரே விரும்புவதில்லை. அப்படியான சமயங்களில் வயிற்று வலியையே காரணமாகச் சொல்லி “முதல் தகவல் அறிக்கை” பதியப்படுகிறது” என்று தெரிவித்தனர். ஆனால், இது புள்ளி விபரங்களை நீர்த்துப் போகச் செய்வதாக உள்ளது.
சமூக சேவை மைய்யங்களும் காவல்துறையும் இணைந்து விழிப்புணர்வு கவுன்சிலிங் நடத்தலாம். இது மிகவும் கவலைப்படவேண்டிய & கவனிக்கப்படவேண்டிய விஷயம்.
ReplyDeleteஉங்கள் கவலையில் நியாம் இருக்கிறது. ஆனால், கவுன்சிலிங் நடத்துவதில் பெரிய வெற்றி கிடைக்காது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தற்கொலைக்கான சமூகக் காரணியாக இருப்பது, “திருப்பூரில் நிலவும் வேலைக் கலாச்சாரமும், தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியும்” ஆகும். எனவே சமூகக் காரணிகளை மாற்றுவது என்ற முறையில் சிந்தித்தால் தீர்வு கிட்டலாம்.
ReplyDelete