தமிழகத்தில் மாறி மாறி வந்த அரசுகள் அடுத்தடுத்து ‘இலவச’ திட்டங்களை அறிவித்து மாநில நிதிநிலைமையை ஆபத்துக்குள்ளாக்கி வருவதாகவும், எதற்கும் ‘அரசைச் சார்ந்தே’ மக்களை இருக்கச்செய்வதாகவும் ஊடகங்களிலும், வசதி படைத்தவர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.
முதலில் எது இலவசம் என்பதில் தெளிவு வேண்டும். நம் நாட்டில் செல்வந்தர்களுக்கும், தனியார் வணிக/தொழில் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து அள்ளி வழங்கப்படும் வரிச்சலுகைகளை பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான ‘ஊக்குவிப்பு’ நடவடிக்கைகள் என வரவேற்பதும், மிகுந்த வறுமையில் வாழும் மக்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டாங்களை ‘இலவசங்கள்’ என வர்ணிப்புதும் வாடிக்கையாக உள்ளது.
பொது விநியோக அமைப்பு மூலமாக அரிசியும் வேறுசில இன்றியமையா உணவுப் பொருட்களும் குறைந்த விலையில் அளிக்கப்படுவது வரவேற்க்கத்தக்கது. அதேபோல் குழந்தைகளுக்கும், கருவுற்ற தாய்மார்களுக்கும் சத்துணவு வழங்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இலவசப் பேருந்து பயணச் சலுகை தரப்படுகிறது. இவைகளை செலவினங்கள் என்று சொல்வதைவிட மனிதவள முதலீடுகள் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும்.
மாநில அரசுகளால் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிற அனைத்து நலத்திட்டங்களையும் சேர்த்துப் பார்த்தாலும், அவற்றிற்காக செலவிடப்படும் தொகை குறைவுதான். அந்தத் தொகையால் அரசாங்கத்தின் நிதிநிலைமை கெட்டுவிடும் என்று கூறுவது ஏற்கக்கூடியவையல்ல.
நிதிநிலைமை என்று வரும்போது வரவு, செலவு இரண்டு பக்கத்தையும் பார்க்க வேண்டும். துணி வாங்கும்போது, தீப்பெட்டி வாங்கும்போது, சமையலுக்கு எரிபொருள் வாங்கும்போது என எதை வாங்கினாலும் அரசுக்கு வரிசெலுத்தி வருகிறார்கள் சாமானிய மக்கள். மிக ஏழ்மை நிலைமையிலுள்ள ஒருவர் டீ சாப்பிடும்போது கூட, அவர் கொடுக்கிற காசிலிருந்து அரசாங்கத்துக்கு வரி செல்கிறது. இந்த வருவாயிலிருந்துதான் அவர்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அவர்களுக்கு அரசாங்க மருத்துவ அமைப்புகளில் கட்டணமின்றி அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளிக்கப்படுவதையோ, அவர்களுக்கான கல்விக்கட்டணம் குறைக்கப்படுவதையோ ‘இலவசம்’ என்று ஏளனம் செய்வது மனசாட்சியற்ற செயல்.
உண்மையில் எழுப்ப வேண்டிய கேள்விகள் வேறு. பெரும்பகுதி செலவுப் பொறுப்புகள் மாநில அரசுகள் மீது இருக்கையில், மத்திய அரசு, தன் கைக்கு வரும் மொத்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான தொகை மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது ஏன்? ‘மாநில சுயாட்சி’ பேசும் தமிழக திமுக அரசு கூட இதைத் தட்டிக் கேட்பதில்லை.
நலத்திட்டங்களுக்கு செய்யப்படும் ஒதுக்கீடுகள் பற்றி வலுவான விளம்பரம் செய்யும் திமுக அரசு, இந்திய பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு திரைமறைவில் பெரும் வரிச்சலுகைகளை அளிப்பது ஏன்? அவைகள் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லையே ஏன்? ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ என்ற பெயரில் பெரும் செல்வந்தர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளும், மிகக் குறைந்த வாடகையில் அல்லது இலவசமாக நிலமும் அளிக்கப்படுவது ஏன்?
‘வரிச்சலுகை’என்பது ஒரு இலவசம்தானே? அதை ஏன் வசதி படைத்தவர்களோ, ஊடகங்களோ அவ்வாறு அழைப்பதில்லை? இவற்றை முதலீடுகளை ஈர்க்கத் தரப்படும் ‘ஊக்குவிப்புகள்’என்று எடுத்துக் கொள்ள வேண்டுமாம். வறியவர்களுக்கான மக்கள் நலத்திட்டங்களை ‘மனித வள மேம்பாட்டு’ ஊக்குவிப்பு என்று பார்க்க வேண்டாமா?
பெரும் மூலதனங்களுக்கு அளிக்கப்படும் ஊக்குவிப்புகள் இதுவரை என்ன பொதுப்பயன் அளித்துள்ளன என்று பரிசீலிக்க வேண்டாமா? அரசின் நிதிநிலை அறிக்கைகளைப் படித்தால் ஒரு கோடி ருபாய் முதலீட்டுக்கு மூன்று அல்லது நான்கு பணியிடங்களே உருவாகின்றன என்பது தெரிய வருகிறது. ஆனால் அரசுக்கு ஏற்படும் வரி இழப்போ மிகமிக அதிகம்.
செல்வந்தர்களிடமிருந்து உரிய வரிகளை ஏய்ப்புக்கு இடமின்றி வசூலித்து, தேவையற்ற வரிவிலக்குச் சலுகளை நீக்கி விட்டாலே, நலத்திட்டங்களுக்கான நிதிவளங்களை மத்திய மாநில அரசுகள் பெற்றுவிட முடியும். இது பிரதானமாக மத்திய அரசு கையில் உள்ளது. ஆனால் மத்திய அரசு வரிக்கொள்கை பன்னாட்டு, இந்நாட்டுப் பெரும் நிறுவனங்களுக்கும், செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே உள்ளது.
தனியார் மூலதனங்களை ஈர்க்க நிலவும் போட்டியில் பல மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களுக்கு பல வரிச்சலுகைகளையும், இதரச் சலுகைகளையும் போட்டி போட்டு அளிக்கின்றன. இவற்றால் மாநில அரசின் நிதிநிலைமைக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த உண்மையை மறைத்துவிட்டு, ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் திட்டங்களால்தான் ஆபத்து என்று கூறுவது என்ன நியாயம்?
நலத்திட்டங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்ப வேண்டி இருக்கிறது. அந்தத் திட்டங்கள் சரியாக உருவாக்கப்பட்டுள்ளனவா? எவையெல்லாம் பொருத்தமானவை, எவை பொருத்தமற்றவை? செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், ஊழல், ஆளுங்கட்சி தலையீடு போன்றவற்றை எதிர்கொள்வது எப்படி? இதையொட்டி மத்திய மாநில அரசுகளின் வரவு செலவு கொள்கைகளையும், தனியார்மயக் கொள்கைகளையும் பின்னுக்குத் தள்ளுவது எப்படி?
இவைதாம் நாம் எழுப்பவும், விடை காண வேண்டியதுமான கேள்விகள்.
(கட்டுரையாளர் :வெ.பா.ஆத்ரேயா)
மிகச் சுருக்கமான, எளிய நடையிலான கட்டுரை; ஏராளமான சலுகைகளை அனுபவிக்கிற ஆளும் வர்க்கங்கள் தங்களின் அநியாயச் சுரண்டலையும், கொள்ளையையும் மறைக்க ஏழை எளியோரின் வரிப் பணத்திலிருந்தும், அவர்களிடமிருந்து பறிக்கிற சாராயக் காசைக் கொண்டும் சில சில்லறைச் சலுகைகளை விளம்பரப்படுத்திவிட்டு கல்வி, சுகாதாரம்,நிலம்,வீடு ,வேலை போன்றவற்றைக் காசுக்கு விற்கிற அட்டூழியத்தை அம்பலமாக்குகிற அற்புதமான கட்டுரை! விலைவாசிக்கேற்ற வருமானம் வாய்க்கப்பெற்றால் இந்த 'இலவசங்களை(?)' யாரே நாடுவார்?
ReplyDelete