Thursday, November 11, 2010

கனவோடு போகிறது தொழிலாளி வாழ்க்கை!


பிஒய்டி தொழிற்சாலை - (Build your dreams) அதாவது “உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள்” என்பது நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனமும் ‘பாக்ஸ்கான்’ போல நோக்கியா கம்பெனிக்கு செல்ஃபோனுக்கான பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தாலான மேலுறையை தயாரித்து சப்ளை செய்து வருகிறது.


இக்கம்பெனியில் பணியில் சேர்ந்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கை வளம் பெறும் என்ற கனவுகளோடு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஏஜெண்டுகளிடம் ரூ.25,000, ரூ.30,000, ரூ.50,000 ஒரு லட்சம் ரூபாய் கூட முன்பணம் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த் தபடி எதுவும் நடக்கவில்லை. மாறாக பல்வேறு பிரச்னைகளைத்தான் அவர்கள் சந்தித்தார்கள்.

6 மாதங்கள் பணி முடித்தவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நம்பினார்கள். நிரந்தரம் எட்டாக்கனியாகவே உள்ளது. 8 மணிநேர வேலை, பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள், நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் உரிமை - என்று சில அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 21 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். பிரேம் என்ற தொழிலாளி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து, சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு தொழிலாளி வெளியே அனுப்பப்பட்டார்.

மீண்டும் அக்டோபர் 28ந் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தற்பொழுது கம்பெனி நிர்வாகம் 437 பேரை சஸ்பென்ட் செய்துள்ளது. சட்டவிரோதமான லாக்-அவுட்டை அறிவித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்களின் நிலைமைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் மதுமிதா, சந்திரிகா ஆகியோருடன் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழு மாநில அமைப்பாளர் மாலதி சிட்டிபாபுவும் (கட்டுரையாளர்), இணை அமைப்பாளர் டி.ஏ.லதாவும் சென்று அந்த தொழிலாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் கூறிய விஷயங்கள்:

பணியாற்றுபவர்களில் அதிகம் பேர் கிருஷ்ணகிரி, குமரி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளார்கள். ஒரு சிலர் சென்னையை சுற்றியுள்ள இடங்களிலிருந்து வருகிறார்கள். 18 - 25 வயதுள்ள இளம் ஆண், பெண் தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணியாற்றுகிறார்கள்.

12 மணி நேர ஷிஃப்டில் 5 லட்சம் கவர்கள் தயாரிக்கப்படுகின்றன. 13 தொழிலாளிகள் 1 மணி நேரத்தில் 760 பீஸ்களை தயாரித்து விடுகின்றனர். கைபேசியின் மேல் கவரை மாடலுக்கேற்ப இணைத்து தயாரிக்கும் பிரிவில் பெண்களே அதிகம். அவசரம் என்றால் கூட மாற்றுத் தொழிலாளி வராமல் அப்பெண் தொழிலாளி அவ்விடத்தை விட்டு கழிப்பறைக்குக் கூட செல்லமுடியாத அவலம். மிஷினிலிருந்து நேரடியாக எடுக்கும் மேலுறையை அவர்கள் தொடுவதால் உள்ளங்கைகளில் சுடு கொப்பளங்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.

இவர்கள் காலை 8 மணிக்கு கம்பெனிக்குள் நுழைய வேண்டும். இரவு 8 மணிக்குத் தான் வெளியே வருவார்கள். மறு ஷிஃப்ட் இரவு 8 மணிக்கு உள்ளே சென்று காலை 8 மணிக்கு வெளியே வருகிறார்கள். 5 - 10 நிமிடம் தாமதமாக வந்தால்கூட சம்பளப் பிடித்தம்.

காலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டியில் புழு. டீ என்னும் பெயரில் வெறும் சுடு தண்ணீர்தான். மதியம் கொடுக்கப்படும் சாப்பாடும் சாப்பிட முடியாது. சாப்பாட்டில் பல்லி விழுந்திருந்தால் கூட பல்லியை எடுத்துப் போட்டு விட்டு சாப்பிட வேண்டும். இரவில் கொடுக்கப்படும் ஹார்லிக்ஸ் இதே நிலை தான். குடிக்கக் கொடுக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமான குளோரினைக் கலந்து வைப்பதால் குடிக்க முடிவதில்லை. குடிக்க லாயக்கில்லை.

டீ இடைவேளை 10 நிமிடங்கள். உணவு இடைவேளை அரை மணிநேரம். இதைத்தவிர எந்தக் காரணத்தை முன்னிட்டும் வேறு இடைவேளை கிடையாது. ஒரு ஷிஃப்டில் 200 பெண் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிப்பறைகள் 4 தான். அதையும் டீ, உணவு இடைவேளையில்தான் பயன்படுத்த வேண்டும். இயற்கை உபாதையைக்கூட சுதந்திரமாகக் கழிக்க முடியாது.

பெண்களுக்கென்று மாதந்தோறும் வரும் மாதவிடாய்க் காலத்தில் கூட ஒரு 10 நிமிடம் கழிப்பறைக்கு செல்ல அனுமதி வாங்க அவர்கள் படும்பாடு; இதை விளக்க முற்படும் பொழுது அப்பெண்களின் கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது.

சுதந்திர நாட்டில்தான் வாழ்கிறோமா! பெண் பெருமை பேசி பேசி காலம் கழிக்கும் மாபெரும் தலைவர்கள் உலாவரும் இத்தமிழ்த் திருநாட்டிலே காலூன்றி, கொள்ளை லாபத்தை நோக்கமாகக் கொண்டு சுரண்டும் பன்னாட்டு நிறுவனத்திலே நம் வீட்டு பெண் பிள்ளைகள் படும்பாடு?!?!

பெண்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தவுடன் தியாகு என்ற சூப்பர்வைசர் அப்பெண்களைப் பார்த்து “நீங்கள் மூன்றுநாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் மூன்று மாதங்கழித்து வாந்தி எடுப்பீர்கள்” என்று கூறியிருக்கிறான். அவனை என்ன செய்வது! பெண் தொழிலாளர்களை இதைவிட மட்டமான ஆபாச வார்த்தைகளால் நோகடிக்க முடியாது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ரூபா’ என்ற பெண் தொழிலாளி இரவு ஷிஃப்டிற்கு சரியாக 8 மணிக்கு பதில் அரைமணி நேரம் காலதாமதமாக சென்றிருக்கிறார். அரைமணி நேரம் காலதாமதமாக வந்ததால் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக, இரவு நேரம் என்று கூட பார்க்காமல், கம்பெனியை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறது நிர்வாகம். வெளியேறச் சொன்னது மட்டுமல்லாமல் செக்யூரிட்டியிடமும் அப்பெண்ணை எந்தக் காரணத்தை முன்னிட்டும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று எச்சரித்து உள்ளது. என்னே மனிதாபிமானம்! திரும்பச் செல்லப் போக்குவரத்து வசதி இல்லை. 4 கிலோ மீட்டர் நடந்து சென்றால்தான் ஏதாவது வண்டியை பிடிக்கமுடியும். இரவு நேரத்தில் அதுவும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பாவம் என்ன செய்வாள் அப்பெண், அந்தக் கம்பெனியின் கேட் அருகில் விடிய விடிய உட்கார்ந்து உள்ளார்.

மற்றொரு பெண் தொழிலாளி ‘பூவிழி’; தன் சகோதரி இறந்துவிட்டார், காரியத்திற்குச் செல்ல அனுமதி கேட்ட பொழுது அனுமதி வழங்கப்படவில்லை. காரியத்தைத் தள்ளி வைக்கச் சொன்னார்கள். அந்த தொழிலாளி லீவு போட்டு சென்றுள்ளார். லீவு போட்ட தற்கு எச்சரிக்கை ஓலை (warning notice) கொடுக்கப்பட்டது.

தேசிய விடுமுறையன்று கூட இரவு ஷிஃப்டில் வந்து பணிபுரிய வேண்டும். உற்பத்தி ஒன்றே குறிக்கோள். கை கால் வலி, தலைவலி, இடுப்புவலி என்று ஒரு 5 நிமிடம் எழுந்து நின்றால், அவர்களை எழுத முடியாத ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது.

காண்ட்ராக்டர்களிடம் பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்கள் பலர் சரியான சம்பளம் கிடைக்காததாலும், பணிச்சூழலை சகித்துக்கொள்ளமுடியாமலும் வெளியேறி விட்டனர். அவர்கள் கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.

லாபம் ஒன்றே பிரதான நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அமலாக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பணிபுரியும் 4000 தொழிலாளர்களில் 800 பேர்தான் நிரந்தரத் தொழிலாளிகள். நிரந்தரத் தொழிலாளிக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளிக்கும் பணியில் எவ்வித வித்தியாசமும் இல்லை.

சில தொழிலாளிகளுக்கு கைகளில் விரல் நசுங்குவது சர்வசாதாரணமாக நடக்கிறது. தீப்புண் காயங்கள் தவிர்க்க வழங்கப்படும் கையுறைகள் தரமானவையாக இல்லை; நாலைந்து நாட்களுக்கு மேல் பயனற்றுப் போய்விடுவதால் உள்ளங்கைகளில் கொப்புளங்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.

வறுமையின் காரணமாக பிழைப்புத்தேடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேரும் தொழிலாளர்கள், தங்கள் எலும்புகள் நொறுங்க கொடுக்கும் உழைப்பின் பலன் கோடிகளாக மாறி முதலாளிகளின் கல்லாப்பெட்டியை நிரப்புகின்றது!

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால் கண்ணியமான வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணம் கனவாகி, இந்த இளம் தொழிலாளிகளின் ஆசைகள் நிராசை ஆகின்றன!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை பல்வேறு வடிவங்களில் வாரிவழங்கும் தமிழக அரசு, அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்குமா!?!

கொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்த இளம் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இனியேனும் இறங்குமா தொழிலாளர் நலத் துறை!

(கட்டுரையாளர், உழைக்கும் பெண்கள் ஓருங்கிணைப்புக்குழு அமைப்பாளர், தமிழ்நாடு -மாலதி சிட்டிபாபு)

6 comments:

  1. வணக்கம் தோழர்.நல்ல கட்டுரை.தொழிலாளர் துறையும்,அரசும் கவனம் செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. தங்களின் கட்டுரை படித்தேன்.முதலாளி வர்க்கம்
    தனக்குத்தானே புதைகழியை தோண்டிக்கொள்ளும்
    காலம் தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.
    நாடுமுழுக்க தற்காலிகப் பணியாளர்களே அதிகம்.
    பள்ளி கல்லூரிகளிலும் இதே நிலைதான்.பெண்களைத்தான் எளிதாகச்
    சுரண்டமுடியும் என எண்ணுகிறார்கள் .ஆனால்
    முற்போக்கு எண்ணம் கொண்டோர் முயற்சித்தால்
    மாற்றம் விரைவில்.

    ReplyDelete
  3. மிக உயிரோட்டமாக தொழிலாளர்களின் உயிரற்ற வாழ்க்கையை பதிவு செய்துள்ளீர்கள். என் போன்றவர்களுக்கு இது போன்ற செய்திகளைத் தேடி பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

    ReplyDelete
  4. இந்தியாவிற்கு அந்நிய மூலதனத்தால் தொழில் வளம் பெருகுகிறது, அதை வரவேற்று ஆலை அமைக்கிற மாநிலங்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக மக்களின் நலன்களை காவுகுடுப்பதோடு அதில் பணியாற்றுகிற உழைப்பாளிகள் சுரண்டலுக்கு உள்ளாவதை கண்டுகொள்வதில்லை.

    19ம் நூற்றாண்டில் 8மணிநேரத்திற்காக தொழிலாளிவர்க்கம் போராடி வென்ற உரிமை இன்றும் நம் நாட்டில் கோரிக்கையாக இருப்பதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. இந்தியாவில் தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டுவிட்டனர், நிறுவனப் பணியாளர்கள் மற்றொன்று முறைசார கூலிகள் ஒரு தொழிலாளியின் நியாயத்தை மற்ரொரு பிரிவு தொழிலாளி கேலி பேசுகிறார்கள். இது ஏனோ செய்திகளில் வரமறுக்கிறது.

    மாற்று ஊடகம் மக்களை சென்றடைந்தால் தான் வெற்றி.

    ReplyDelete
  5. @விமலன்!
    வருகை தந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி. இந்த அரசும், தொழிலாளர் துறையும், கவனம் செலுத்தும் என நம்புகிறீர்களா?

    @கணேசன்!
    வருகை தந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி. ஆமாம். இப்போது தற்காலிக பணியாளர்களே எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கலை அணி திரட்ட வேண்டியதும், அவர்களுக்காக இயக்கம் நடத்த வேண்டியத் தேவை இருக்கிறது.

    @madhuraj!
    வருகை தந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி.


    @ஹரிஹரண்!
    மூலதனத்துக்கு கொடுக்கப்படும் மரியாதையில் நூற்றில் ஒரு பங்கு கூட உழைப்புக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் நிலைமை.

    ReplyDelete
  6. //கொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்த இளம் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இனியேனும் இறங்குமா தொழிலாளர் நலத் துறை!//

    இதைவிட மோசமானதொரு கோரிக்கை இருந்து விட முடியாது. தொழிலாளர் நலத் துறையும் அரசும் அப்பட்டமாக தொழிலாளர் விரோத போக்கில் இருப்பது தெரியாதது போலவே இவ்வாறு கோரிக்கை வைக்கும் துரோகத்தை என்னவென்று சொல்லுவது?

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)