தொலைக்காட்சிகளில் உண்மைச்சம்பவங்களைப் படம் பிடித்துக் காட்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. குடும்ப சச்சரவுகள் தேர்வு செய்யப்பட்ட பார்வையாளர்களின் முன்பாக விவாதிக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன. தீர்வுகள் வழங்குவதாகவும் இந்தத் தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்பாளர்கள் கூறினாலும், தங்களின் தீர்வுக்கு சட்டரீதியான எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி தொகுத்து வழங்கும் “நிஜம்” நிகழ்ச்சியைப் போன்று இந்தியில் ராக்கி சாவந்த் என்ற நடிகை ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
பரபரப்பாக இயங்குவதில் பெயர் பெற்ற ராக்கி சாவந்த், ஏற்கெனவே ராக்கி சுயம்வரம் என்று கூறி கணவரைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இது பரபரப்பாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. விளம்பரங்கள் வந்து குவிந்தன. இவர் தேர்வு செய்தவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்வாறு பரபரப்புக்காக நாடகம் போடும் ராக்கி சாவந்த் நடத்தும் “ராக்கி கா இன்சாப்” (ராக்கியின் நீதி) என்ற தொடரும் அப்படித்தான் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் சொந்த, சோகக் கதைகளை விவரிப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மூலமாக சொல்லப்படுகிறது. தயங்காமல் தனிப்பட்ட விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் பரபரப்பாகத் தங்கள் தொடர்களைக் கொண்டு செல்லலாம் என்பதுதான் இவர்களின் எண்ணம். இப்படித்தான் இவர்களிடம் சிக்கினார் ஷபினா ஷேக் என்கிற 35 வயது பெண். உத்தரப்
பிரதேசத்தின் சஹரன்பூரைச் சேர்ந்த இவரது கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். தன்னந்தனியாக விடப்பட்ட ஷபினாவுக்கு 13 வயதில் ஒரு மகன். பாதுகாப்பான வாழ்க்கைக்காக ஷபீர் என்பவரோடு இணைந்து வாழ்ந்து வந்தார். இதனால் 13 வயது அனீசை, ஷபீனாவின் சகோதரிகள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். தனது மகனை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொள்ள இவர் முயற்சி செய்யத் துவங்கினார்.
இந்த முயற்சிக்கு நாங்கள் உதவியாக இருப்போம் என்று கூறி ராக்கி கா இன்சாப் நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் முன்வந்தார்கள். எப்படியாவது தனது மகன் தன்னோடு வந்துவிட்டால் நல்லது என்று அவரும் அந்த நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார். இதற்கிடையில் அவரது வீட்டிற்கு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அடிக்கடி வந்து போயினர். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 25 ஆயிரம் ரூபாயும், மும்பை சென்று வர பயணக்கட்டணமும் தருவதாகக் கூறினார்கள். பின்பு ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். படிப்பறிவில்லாத ஷபீனா அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே கையெழுத்திட்டிருக்கிறார்.
இவரது சகோதரிகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் தந்துள்ளார்கள். நிகழ்ச்சித் துவக்கத்தில் அருகில் வந்து அமர்ந்த ராக்கி சாவந்த், எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று ஷபீனாவிடம் கூறிவிட்டு துவங்கியிருக்கிறார். சிறிது நேரத்திலேயே, தாய்-மகன் இணைப்பு என்பதை விட்டு விட்டு தனக்கும் ஷபீருக்கும் உள்ள தொடர்பு பற்றியே கேள்விகள் எழும்பியதைக் கண்டு திகைத்துப் போனார் அவர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அதோடு நிற்கவில்லை. ஷபீர் மற்றும் ஷபீனா ஆகிய இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. தனது வீட்டுக்கு அடிக்கடி வந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் வேவு பார்க்கும் கேமராவை வைத்து இதைச் செய்துள்ளார்கள் என்று அவரிடம் சொல்லப்பட்டது.
பார்வையாளர்களோ, நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு ஷபீனாவை அடிக்கவே வந்துவிட்டார்கள். அலறிக்கொண்டு வெளியேறிய ஷபீனா மற்றும் அவரது சகோதரிகள் திரும்பிப் பார்க்கவில்லை. உறவினர்களோ, இந்தப்பக்கம் வந்தால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். தற்போது தனது உறவினர்கள் யாரும் இல்லாத இடத்தைத் தேர்வு செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஷபீனா. தங்கள் தொடரின் பரபரப்புக்காக எனது சொந்த வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
எனது வாழ்க்கையையே முடித்துவிட்டார்கள். நான் எனது பெற்றோர்களிடம் திரும்பிச் சென்று அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்று பெருமூச்சு விட்டுச் சொல்கிறார் ஷபீனா. என் போன்ற ஏழைப் பெண்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது சரியா என்று கேள்வியும் எழுப்புகிறார்.
mm...very sad...((
ReplyDeleteஆனந்தி!
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
மீடியாக்களின் லட்சணத்தை Peepli Live படத்தில் காட்டியிருப்பார்கள். Bargha Dutt இன் லட்சணம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாறுகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது பயங்கர கோவம் தான் வருது. என்ன பண்றது.
ReplyDeleteஜகன்!
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
கொடுமை...
ReplyDeleteவழிப்போக்கன் யோகேஷ்!
ReplyDeleteகரம் கோர்த்தமைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.