கவிஞன்
மழை மண்ணை முத்தமிட
மரங்கள் பூரிப்படைகின்றன
இரவுப் பொழுதுகளில்
விண்மீன் நிலவுக்கு
சேதி அனுப்புகிறது
வெட்ட வெளியில்
கவிஞன் காத்திருக்கிறான்
வானிலிருந்து வார்த்தைகள்
வந்து விழுந்து
காகிதத்தை நிரப்பாதாவென.
ப. மதியழகன்
குருட்டாம்போக்கு
கட்டிய சதுரங்கத்தில்
நகரும் ராகுகேதுகளின்
கணக்கீடுகளுக்குப் பிறக்கும்
பலன்களினாலும் விளைவதில்லை
தட்சணையிட்டு
சாஷ்டாங்கமாக்கக் கிடக்க
அருள்பாலிக்கவும் பெற்றிடேன்
தடவும் மைகொண்டு
சொல்லும் குறியிலும்
கொண்டிலேன்
வேறெதுவும் வேண்டேன்
நம்பிக்கையை என்னுள் விதைக்க
சுழன்று வீசும் நாணயத்தில்
பூ விழுந்தால் போதும்.
- ந.பெரியசாமி
நிலா
தெருவில் விற்றுப் போகும்
தின்பண்டம் கேட்டு மூக்கு ஒழுகியபடி
அடம்பிடிக்குமொரு குழந்தை போல
புதுப்பித்தலை எதிர்நோக்கியிருக்குமொரு
சிதிலமடைந்த புராதனச் சின்னம் போல
தாண்டிப் போவோர் பின்னெல்லாம்
தத்தெடுத்துக் கொள்வாரோவென
ஏக்கத்துடனே வாலாட்டிக் குழைந்து
பரிதவிக்கும் தூக்கியெறியப்பட்டதொரு
நாய்க்குட்டி போல
கூடவே வருகிறது நிலா.
-ஜி.தேவி
உறவு
தொலைவிலிருக்கும்
நண்பனுக்கு
குறுந்தகவலை அனுப்பி
எதிர்வந்த நண்பனைக்
கடக்கிறோம்
வெ.அருண்பாரதி
மலைவிழுங்கிகள்
முன்பொருக் காலம்
இந்த வழி பயணிக்கையில்
அந்த வழுக்குப் பாறை மேலே
வட்டக் கருப்பட்டியில் ஈக்களாய்
சிறுவர்கள் விளையாடினர்
பிறகொரு காலம்
கிரானைட் கேக்குகளை
சுமந்தபடி லாரிகள்
கட்டெறும்புகளாய் ஊர்ந்தன
இன்று பார்க்கிறேன்
மலையிருந்த இடத்தில்
அகாலப் பள்ளம்
பக்கத்து நஞ்சையெல்லாம்
புழுதி படர்ந்த பாலையாய்
உயிரே இல்லை.
ஜனநேசன்
(செம்மலரில் வெளிவந்த கவிதைகள்)
மலை விழுங்கிகள் கவிதை அருமை..
ReplyDeleteஎதிர்காலத்திற்கு தேவையான மூலப்பொருட்களை இன்றே விற்றுவிட்டனர்.எங்கே செல்லும் இந்த பாதை??
வருகை தந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி.
ReplyDelete