Saturday, February 9, 2013

அடங்க மறுத்தவரின் விஸ்வரூப கதை (This is Not A Film - Iranian Film)



இன்றைக்கு விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும் கருத்து சுதந்திரம் குறித்த விவாதங்களை துவக்கியிருக்கின்றன.



தான் வாழ்கிற சமூகத்தில் நடத்தப்படுகிற சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் பதிவு செய்ய தனக்குத்தெரிந்த திரைக்கலையினை பயன்படுத்திவந்த கலைஞர் ஒருவர் இன்றைக்கு சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார். சமரசங்கள் செய்துகொள்ள வாய்ப்பிருந்தும், அதனைவிட சிறைச்சாலையே சாலச்சிறந்தது என்று உலகிற்கு உரக்கச்சொன்ன அந்த திரையியக்குனரின் பெயர் "ஜாபர் பனாகி". அவருடைய திரைவரலாற்றையும், கருத்து சுதந்திரத்திற்கான அவரது போராட்டத்தையும், அவருக்கு வழங்கப்பட்டிருக்கிற 6 ஆண்டு சிறைதண்டனையையும், விதிக்கப்பட்டிருக்கிற 20 ஆண்டுகால திரைப்படமியக்குவதற்கான தடையையும் குறித்த கட்டுரை இது.


"தி வொயிட் பலூன்" என்கிற திரைப்படத்தை 1996இல் இயக்கினார். புத்தாண்டு பிறக்கப்போகிற நாளில், தொட்டியில் வளர்ப்பதற்காக அழகான மீனொன்றினை வாங்க ஆசைப்பட்டு தனது அம்மாவிடமிருந்து பெற்ற 500 ஈரான் டொமான் பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிற குழந்தையின் வாயிலாக, அவள் சந்திக்கிற பிரச்சனைகளையும் அதற்கு கிடைக்கிற தீர்வினையும் மிக அழகாக சொல்லியிருப்பார். குழந்தைகள் என்றாலே, கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்று காலம் காலமாக இருந்துவருகிற திரைமுறையினை உடைத்தெறிந்தது இத்திரைப்படத்தில் நடித்த குழந்தையின் மிக இயல்பான நடிப்பு. பல நாடுகளில் ஏராளமான திரைப்படவிழாக்களில் விருதுகளை வாங்கிக்குவித்தது இத்திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும் பெற்றது. இத்திரைப்படம் ஆஸ்கர் விருதிற்காக ஈரான் அரசால் அனுப்பிவைக்கப்பட்டது. உலகளாவிய சினிமாக்களில், குழந்தைகளுக்கான திரைப்பட பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒன்றைப் பிடிக்கிற தகுதியுடைய திரைப்படமாக கொண்டாடப்படுகிறது. திரைமொழி குறித்த ஆய்வினை மேற்கொள்கிறவர்கள் தவறவிடமுடியாத திரைப்படமுமாகவும் இருக்கிறது.



"தி மிரர்" என்கிற அவரது அடுத்த படத்தை 1997இல் இயக்கி வெளியிட்டார். பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்துப்போக வரும் அம்மாவை எதிர்பார்த்து ஒரு சிறுமி காத்திருக்கிறாள். ஆனால் வெகு நேரமாகியும் அவளது அம்மா வராத காரணத்தால், தனியாகவே வீட்டிற்கு போக முடிவெடுக்கிறாள். வழியில் அவள் பயணிக்கிற வாகனங்களும், சந்திக்கிற மனிதர்களும், அவர்களுடனான விவாதங்களுமாக கதை நகர்கிறது. பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கையில், வெறுப்படைந்த நிலையில் திடீரென அச்சிறுமி "இதற்கு மேல் என்னால் இத்திரைப்படத்தில் நடிக்கமுடியாது" என்று சொல்லி மேக்கப்பை கலைத்துவிட்டு தன்னுடைய வீடுநோக்கி செல்லத்துவங்குகிறாள். தன்னுடைய வீட்டைத்தேடி பயணிப்பது போன்ற திரைப்படத்தில் முதல் பாதியில் நடிப்பாகவும், திரைப்படத்தில் நடிக்கப் பிடிக்காமல் தன்னுடைய வீடுதேடி பயணிக்கிற இரண்டாவது பாதியில் நிஜவாழ்க்கையாகவும் திரைக்கதையாக்கியிருப்பார் ஜாபர் பனாகி. இத்திரைப்படமும் ஏராளமான சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்தது.



"தி சர்கிள்" என்கிற திரைப்படத்தை 2000இல் இயக்கினார் பனாகி. சிறு குழந்தைகளை, குறிப்பாக பெண்குழந்தைகளை வைத்து திரைப்படமெடுத்துக்கொண்டிருந்தவர், அப்பெண்கள் எல்லாம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை நிலை எப்படி இருக்குமென்று ஒருநாள் யோசித்துப் பார்த்தார். அதுவே அவரது அடுத்த படத்திற்கான கதைக்கருவாக மாறியது.

மருத்துவமனையொன்றில் சொல்மாஸ் என்கிற பெண்ணுக்கு பெண்குழந்தை பிறக்கிறது. பெண்ணாகப் பிறந்ததால் அவளுடைய கணவன் வீட்டார் அவளை விவாகரத்து செய்துவிடுவார்களே என்று வருத்தப்பட்டுக்கொண்டே மருத்துவமனையிலிருந்து வெளியேவருகிறார் சொல்மாசின் தாய். அப்போது சிறையிலிருந்து விடுதலையாகி சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளாதே என்கிற வருத்தத்துடன் சாலையில் 3 பெண்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். அதிலே ஒரு பெண்ணை செயின் திருட முற்பட்டாள் எனச்சொல்லி மீண்டும் கைது செய்கிறது காவல்துறை. மற்ற இரண்டுபெண்களும் தனித்தனியே பயணிக்கின்றனர். அதில் ஒரு பெண்ணான நர்கெஸ், பேருந்தில் பயணித்து தன்னுடைய சொந்த ஊருக்கு செல்லநினைக்கிறாள். ஆனால் ஆண் துணையில்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதியில்லாமலும், பேருந்தில் நடக்கிற சோதனையினால் மீண்டும் கைதாகிவிடுவோமோ என்கிற அச்சத்தாலும், அவளால் பயணிக்க முடியாமல் போகிறது. சிறையிலிருந்து வெளியேறிய தன்னுடைய மற்றொரு தோழியான பாரியை சந்திக்கச் செல்கிறாள் நர்கெஸ்.

சிறையிலிருந்து நேராக தன்னுடைய வீட்டிற்கு சென்ற பாரியை, வீட்டினுள்ளேயே அனுமதிக்காமல் வெளியேற்றுகிறார் அவளது தந்தை. தன்னுடன் சிறையில் இருந்த மற்றொரு தோழி வேலை பார்க்கிற மருத்துவமனைக்கு செல்கிறாள் பாரி. கர்ப்பிணியாக இருக்கிற பாரி, கருக்கலைப்பு செய்யநினைக்கிறாள். ஆனால், அவளது கணவன் இறந்துவிட்டமையால், சட்டப்படி எந்த மருத்துவமனையும் அவளுக்கு கருக்கலைப்பு செய்யாது. யாருக்கும் தெரியாமல், தனக்கு கருக்கலைப்பு செய்ய உதவிபுரியுமாறு அத்தோழியிடம் கேட்கிறாள் பாரி. அத்தோழியோ, தன்னுடைய கடந்தகாலத்தை மறைத்துதான் இப்புதிய வாழ்க்கையினை பெற்றிருப்பதாகச் சொல்லி, பாரிக்கு உதவிசெய்யமுடியாத நிலையிலிருப்பதை விளக்குகிறாள். வலியோடும் வேதனையோடும் மீண்டும் தெருவில் நடமாடுகிறாள் பாரி. இரவு நேரமாகிவிட்டதால், ஹோட்டலில் அறைஎடுத்து தங்கமுயற்சிக்கிறாள். ஆனால் ஆண்துணையில்லாமல் தனியாக அவளால் ஹோட்டல் அறை கூட எடுக்கமுடியாத சூழ்நிலை உருவாகிறது. அந்த ஹோட்டல் வாசலில் வறுமையின் காரணமாக வளர்க்கமுடியாமல் தன்னுடைய சிறு குழந்தையினை விட்டுட்டு, ஓடி ஒளிகிற தாயை பார்க்கிறாள் பாரி. யாரேனும் ஒரு பணக்காரக் குடும்பம் தன்னுடைய குழந்தையினை எடுத்து வளர்க்கும் என்று நம்பிக்கையில் அங்கிருந்து நகர்கிறாள். வழியில் அவளருகில் ஒரு கார் நின்று, அதிலிருப்பவர் அத்தாயை காரில் ஏறச்சொல்கிறார். அவளும் காரில் ஏறி பயணிக்கிறாள். சிறிது தூரம் சென்றபின்னர்தான், அக்காரை ஓட்டுபவன் ஒரு காவல்துறை அதிகாரி என்பது அவளுக்கு புரிகிறது.  தனியாக நிற்கிற பெண்களை பாலியல் தொழில் செய்ததாக வழக்கு பதிவு செய்து சிறைக்கனுப்பும் வேலையைச் செய்கிறான் என்பதை சற்று தாமதமாகவே புரிந்துகொள்கிறாள். காட்சி சிறைச்சாலைக்கு மாறுகிறது. இதுவரை கதையில் பார்த்த அனைத்துப் பெண்களும் சிறைக்குள் இருக்கிறார்கள். திரைப்படத்தின் துவக்கத்தில் பெண்குழந்தையை பெற்றெடுத்த சொல்மாசும் சிறைக்கு வந்திருக்கிறாள் என்ற செய்தியினை சிறையதிகாரி தொலைபேசியில் சொல்வதன்மூலம் நமக்குத்தெரிகிறது. திரைப்படம் துவங்கிய கதாபாத்திரத்திலிருந்தே முடிவுபெறுகிறது.

இக்கதையில் சொல்லப்படும் பெண்களின் கடந்தகால வாழ்க்கையோ அல்லது அவர்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்த தகவல்களோ எங்கேயும் சொல்லப்பட்டிருக்காது. ஆனால், வெவ்வேறுவிதமான பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சனைகளை அவர்களின் நிகழ்கால வாழ்க்கையினூடாக நமக்கு விளங்கச்சொல்லியிருப்பார் பனாகி. ஈரானில் இத்திரைப்படம் தடைசெய்யப்பட்டு, எந்தத் திரையரங்கிலும் வெளியிடவிடாமல் தடுத்துவிட்டது அரசு. ஈரானில் தடையிருந்தும், பத்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை அள்ளியது இத்திரைப்படம்.




"ஆப்சைட்"
என்கிற திரைப்படத்தை 2006இல் இயக்கி வெளியிட்டார் பனாகி. ஈரானில் மிகப்பிரபலமான கால்பந்தாட்டப் போட்டிகளைக் நேரில் காண பெண்களுக்கு அனுமதியில்லை. உலகக் கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று போட்டி ஈரானில் நடக்கிறது. அதனை எப்படியாவது நேரில் பார்த்துவிடவேண்டுமென்று ஒரு இளம்பெண். அதனால் ஆண்போல ஆடையணிந்து, வேடமணிந்து போட்டி நடக்கிற கால்பந்து மைதானத்திற்கு செல்கிறாள். கடினமுயற்சிக்குப்பின்னர் போட்டிக்கான நுழைவுச்சீட்டையும் வாங்கிவிடுகிறாள். ஆனால் மைதானத்திற்குள்ளே நுழைகிற வேளையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படுகிறாள். அவளை மைதான கட்டிடத்திலேயே சங்கிலி போட்டு சிறைவைக்கிறது காவல்துறை. அவளைப்போன்றே மேலும் சில பெண்களும் பிடிபட்டு அங்கே வைக்கப்படுகிறார்கள். அப்பெண்களுக்கும் அவர்களை காவல்காக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடக்கிற விவாதங்களையே திரைக்கதையாக்கியிருப்பார் பனாகி. இத்திரைப்படத்திற்கு அரசின் அனுமதி நிச்சயமாக கிடைக்காது என்று தெரிந்துவைத்திருந்ததால், அரசிடம் அனுமதிபெருவதற்காக போலியான ஒரு திரைக்கதையினை எழுதி சமர்ப்பித்திருந்தார். அதோடு அரசின் கவனத்தை ஈர்க்காமல் தவிர்க்க திரைப்படத்தின் டைட்டில் கார்டில், அவரது உதவியாளர் ஒருவரின் பெயரையே இயக்குனராக போட்டு வெளியிட்டார். அதனால் அத்திரைப்படத்தை வெளியிடமுடின்தது. இருப்பினும் படம் வெளியானவுடன் அரசு இப்படத்தையும் தடைசெய்து உத்தரவிட்டது. அதற்குள் ஏராளமான டிவிடிக்கள் மக்களின் கைகளில் புழங்கத்துவங்கிவிட்டது. பனாகியின் படங்களிலேயே அதிகளவில் ஈரான் மக்கள் பார்த்த படமாகவும் மாறிவிட்டது "ஆப்சைட்"




This is Not A Film:

ஈரான் அரசின் கடுமையான சட்டங்களாலும் சமூகத்தில் நிலவியிருக்கும் பென்னடிமைத்தனத்தாலும் ஒடுக்கப்படுகிற பெண்களின் வாழ்க்கையினை திரைப்படங்களாக எடுத்துவந்த ஜாபர் பனாகிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20 ஆண்டுகள் திரைப்படமெடுக்கிற உரிமையினை இரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தினை அணுகினார் பனாகி. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் அவரை வீட்டுச்சிறையினில் வைத்தது அரசு. அரசுடன் சமாதானமாக போக முடிவெடுத்திருந்தால், அவரால் தப்பித்திருக்க முடியும். ஆனால் அதனை அவர் விரும்பவில்லை. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்படுகிற கலைப்படைப்புகளுக்கு சமரசம் எதற்கு என்று வழக்கினை எதிர்கொண்டார் பனாகி.

பனாகிக்கு விதிப்பட தடைக்கு முன்பே, தனது அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதையினை எழுதி தயாராக வைத்திருந்தார். ஆனால் அதனை படமாக எடுக்கும் முன்னரே, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். தான் எழுதி வைத்த திரைக்கதையினை வாசித்துக்காட்டி, அதனை வீடியோவாக பதிவு செய்தால் என்ன? என்கிற எண்ணம் அவருக்குத்தோன்றியது. திரைப்படமாக இயக்குவதற்குத்தானே தனக்குத் தடையிருக்கிறது, திரைக்கதையினை வாசிக்க எவ்விதத்தடையுமே இல்லையே என்றெண்ணி தன்னுடைய நெருங்கிய நண்பரான மிர்தாமச்ப் என்பவரை கேமராவுடன் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார். அன்றுதான் அவருடைய வழக்கிற்கான தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கவிருக்கிறது.

ஈரானில் எல்லோருக்கும் புத்தாண்டை எதிர்நோக்கியிருக்கிற ஆண்டின் இறுதி நாள் அது. ஆனால் பனாகிக்கு மட்டும், சிறையில் இருக்கவேண்டிய நாட்கள் எத்தனை என்று சொல்லப்போகிற தீர்ப்பிற்காக காத்திருக்கிற நாள். திரைப்படங்கள் இயக்குவதையே இதுநாள் வரையில் செய்துவந்த பனாகிக்கு, இனி என்றென்றும் அதனை செய்யமுடியாமல் போகிற கட்டாயம் உருவாகிவிடுமோ என்ற அச்சத்திலிருக்கிற நாள்.

தன்னுடைய நண்பர் மிர்தாமச்ப் வருகிற வரை, வீட்டில் தனியாக இருந்த அவர் என்ன செய்வதென்றே தெரியாமல் வீட்டினுள்ளே இங்குமங்கும் அலைகிறார். செல்லப்பிராணிக்கு உணவளிப்பது, தன்னைத்தானே வீடியோ எடுப்பது என்று நேரத்தைக் கழிக்கிறார். தன்னுடைய வக்கீலை தொலைபேசியில் அழைத்து, வழக்கின் நிலையினை கேட்டறிகிறார். பனாகிக்கு ஆதரவான தீர்ப்பு வருவது கடினமான ஒன்றுதான் என்ற வக்கீலின் பதிலைக் கேட்டு சற்றே வாடிப்போகிறது அவரது முகம். ஈரானில் இருக்கிற மற்ற படைப்பாளிகள் பெரியளவில் ஆதரவு தெரிவித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தால், பனாகியின் தண்டனை குறைய வாய்ப்பிருக்கிறது என்றாலும்கூட, பனாகிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோர் மீதும் படமெடுக்கத்தடை வரும் என்கிற பயத்தின் காரணமாக பெரியளவில் யாரும் குரலுயர்த்தவில்லை.

மிர்தாமச்ப் வந்தவுடன், தான் திரைப்படமாக எடுக்க நினைத்த கதையினை விளக்குகிறார் பனாகி,
"மிகவும் பிற்போக்கான குடும்பத்திலிருந்து வந்த பெண்ணொருத்தி, பல்கலைக்கழகத்தில் கலையில் பட்டம் படிக்க ஆசைப்படுகிறாள். அதற்கான நுழைவுத்தேர்வையும் எழுதுகிறாள். நுழைவுத்தேர்வில் அவள் தேர்ச்சிபெற்ற விவரம் செய்தித்தாளில் வெளிவந்ததைப் பார்த்த அவளது பெற்றோர் கடுமையாக அவளை கண்டிக்கின்றனர். அவளுக்கு மொட்டை போட்டு, வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு எல்லோரும் வெளியே சென்றுவிடுகின்றனர். சரியான நேரத்தில் டெஹ்ரானிற்கு சென்று பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யவில்லையென்றால் அவளால் படிக்கவே முடியாது என்கிற நிலை. எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்கிற நிலையில் இருக்கிற அவள் என்ன செய்தாள் என்பதுதான் மீதி கதை. பூட்டிய அறைக்குள்ளேயே ஒட்டுமொத்த திரைக்கதையும் நகரும்." 
என்றார் பனாகி.

இத்திரைப்படத்திற்கான திரைக்கதையினை ஏற்கனவே அரசின் அனுமதியினை பெறுவதற்காக அனுப்பிவைத்திருந்தார் பனாகி. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது அரசு. அதன்பிறகு அவருக்கு சிறைவாசமும் திரைப்பட இயக்கத்தடையும் வந்துசேர்ந்திருக்கிறது.


இதனைத் திரைப்படமாகத்தான் எடுக்கமுடியவில்லை, குறைந்தபட்சம் எழுதிவைத்த திரைக்கதையினை வாசித்தாவது காட்டிவிடலாம் என்று ஆசைப்பட்டார் பனாகி. அத்திரைப்படத்தில் வருகிற பெண்ணின் பூட்டிய அறையினை தன்னுடைய வீட்டின் ஒரு அறையில் செலோடேப் ஒட்டிக்காட்டினார். அவ்வறையில் அவள் என்னென்னவெல்லாம் செய்வாள்; எங்கே படுத்திருப்பாள்; எங்கே உட்கார்ந்திருப்பாள்; எங்கெல்லாம் உட்கார்ந்து என்னென்ன வசனங்கள் எல்லாம் பேசுவாள் என்பதனை அவரே தன்னுடைய திரைக்கதைப் புத்தகத்தை பார்த்து வாசித்துக்காட்டுகிறார். அவர் எடுக்க நினைத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்து வைத்திருந்த பெண்ணின் புகைப்படத்தையும், எந்த வீட்டினில் இப்படத்தை எடுக்க நினைத்தார் என்பதையும் தன்னுடைய செல்போனில் இருந்து காட்டுகிறார்.

இவ்வாறு அவர் திட்டமிட்டுவைத்திருந்தவற்றை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருக்கையில், திடீரென மனம்நொந்து அனைத்தையும் நிறுத்திவிட்டு அவ்வறையிலிருந்து வேறு அறைக்கு செல்கிறார் பனாகி.
"ஒரு திரைப்படத்தை வார்த்தைகளாலேயே சொல்லிவிடமுடியுமென்றால், திரைப்படமே எடுக்கவேண்டாமே... காட்சி ஊடகமான திரைப்படத்தில் ஒரே காட்சியில் எவ்வளவோ சொல்லிவிடமுடியும். அவையனைத்தையும் வெறும் வார்த்தைகளால் மட்டும் விளக்கிவிடமுடியாது."
என்று சொல்லிவிட்டு திரைக்கதையினை விளக்குவதை நிறுத்திவிடுகிறார்.

காட்சிகளில் பயன்படுத்தப்படுகிற பொருட்கள், பின்னணி, இடம், நடிகர்கள், நடிப்பு என்று ஏராளமானவற்றை வைத்து ஒரு காட்சியின் முக்கியத்துவத்தை சொல்லமுடிவதை, தான் எடுத்த பழைய படங்களின் சில காட்சிகளை போட்டுக்காட்டி விளக்குகிறார்.

அதற்குமேல் தொடர விருப்பமில்லாமல், தன்னுடைய நண்பரையும் கிளம்பச்சொல்கிறார். நண்பரை வழியனுப்புகையில், குப்பை அள்ளும் இளைஞன் ஒருவனை சந்திக்கிறார் பனாகி. அவ்விளைஞனுடன் அவரும் லிப்டில் இறங்குகிறார். அவன் ஒவ்வொரு மாடியாக நின்று குப்பை சேகரிக்க, அவரோ அவனைப்பற்றியும் அவனது வாழ்க்கையையும் கேட்டு தன்னுடைய கேமராவில் படம்பிடித்துக்கொண்டு அவனுடனே செல்கிறார்.

ஒவ்வொரு படியாக இறங்கி, தரைத்தளத்திற்கு வந்துவிடுகிறார்கள் பனாகியும் இளைஞனும். நடந்துகொண்டே பேசிக்கொண்டிருக்கையில், திடீரென குடியிருப்பின் வாசல் வந்ததை உணர்ந்த இளைஞன் சொல்கிறான்,
"மதிப்பிற்குரிய பனாகி! தயவு செய்து வெளியே வராதீர்கள். அவர்கள் உங்களை கேமராவுடன் பார்த்துவிடுவார்கள்" 

வலிநிறைந்த இவ்வரிகளுடன் திரைப்படம் நிறைவடைகிறது.

பனாகிக்கு, அரசு விதித்த 6 ஆண்டுகால சிறைத்தண்டனையையும், 20 ஆண்டுகால திரைப்பட இயக்கத்தடையையும் உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அவர் கடைசியாக எடுத்த இவ்வாவணப்படம், ஒரு பிறந்தநாள் கேக்கினுள் மறைத்துவைக்கப்பட்ட பென் டிரைவ் மூலமாக  2011 ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கொண்டுசெல்லப்பட்டது. சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதுப்பட்டியலில் கடைசி 15 படங்களில் ஒன்றாக இவ்வாவணப்படமும் இடம்பெற்றது.

2010 இல் கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பனாகியால் கலந்துகொள்ளமுடியாவிட்டாலும், அவருக்குபதில் வேறுயாரையும் நியமிக்காமல் அவருடைய இருக்கையினை காலியாக வைத்து பனாகிக்கு மரியாதை செய்தது திரைப்பட விழாக்குழு.
சமூக அவலங்களை கண்டுகொள்ளாமல் அரசுடன் சமரசம் செய்துகொண்டு ஏதோ ஒரு மசாலா படத்தை எடுத்துக்கொண்டு காலம் தள்ளியிருக்க முடியும் பனாகியால். ஆனால் அவர் அதனை விரும்பவில்லை. இன்றுவரை சிறையிலிருப்பது பனாகி மட்டுமல்ல, சமூக அக்கறை கொண்ட படைப்புகளை உருவாக்க முடியாமல் தவிக்கிற ஒரு கலைஞனின் படைப்படைப்பாற்றலும்தான். உலகின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் ஜாபர் பனாகி, தான் கொண்ட கொள்கையினில் உறுதியாக நின்றார். கருத்து மற்றும் படைப்பு சுதந்திரத்திற்காக, எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் சிறைசென்றிருக்கிறார். கருத்து சுதந்திரத்தை உயர்த்திப்பிடிப்பதற்கு உலக கலைஞர்களுக்கெல்லாம் ஜாபர் பனாகி ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

-இ.பா.சிந்தன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)