Sunday, October 21, 2012

கியூபா- நெருக்கடிகள் கடந்த மக்கள் தேசம் (பகுதி-4)


பீக் ஆயில் நெருக்கடி துவங்கிய காலத்திலேயே, தேசிய மின் இணைத் தொகுதியிலிருந்து (National Electric Grid) 95% கியூபா மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

பீக் ஆயில் நெருக்கடியினால் உருவான மின்சாரத்தட்டுப்பாட்டினை சரிசெய்ய, கியூப அரசு ஐந்தம்ச திட்டமொன்றை தீட்டியது.
  1. மின்சாரத்தை சேமிப்பது 
  2. மின்சார விநியோகத்தை சீர்படுத்துவது
  3. மாற்று மின்சக்தியினை கண்டறிவது 
  4. உள்நாட்டு எண்ணை மற்றும் எரிபொருளைக் கண்டறிவது 
  5. சர்வதேச ஒத்துழைப்பை நாடுவது
மின்சார சேமிப்பு:
மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிற பழைய மஞ்சள் விளக்குகளுக்கு பதிலாக, மிகக்குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தருகிற ஃப்ளோரோசெண்ட் மின்விளக்குகளை நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கியது கியூப அரசு. ஆறே மாதங்களில் 90 லட்சம் புதிய ஃப்ளோரோசெண்ட் மின்விளக்குகளை விநியோகம் செய்து உலக சாதனை நிகழ்த்தியது. அதிக மின்சாரம் தேவைப்படுகிற பழைய டங்ஸ்டன் விளக்குகளை ஒழித்த உலகின் ஒரே நாடு என்கிற பெருமையினை பெற்றது கியூபா. மின்விளக்குகளோடு மட்டுமல்லாது, மிகக்குறைந்த மின்சாரமே தேவைப்படுகிற வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட, 20 லட்சம் குளிர்சாதனப்பெட்டிகளும், 10 லட்சம் மின்விசிறிகளும், 260000 தண்ணீர் பம்புகளும் விற்கப்பட்டு மக்களின் புழக்கத்திற்கு வந்தன. மக்களுக்கு ஒரு முன்மாதியாகத்திகழ,  மின்சாரத்தினை கணிசமாக மிச்சப்படுத்தக்கூடிய சாதனங்களை எல்லா அரசு அலுவலங்களும் பயன்படுத்தின.

மிகக்குறைந்த அளவில் மின்சாரத்தினை பயன்படுத்தும் மக்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்பட்டன. ஏறத்தாழ இலவசம் என்கிற அளவிற்கு,  மிகக்குறைந்த விலையில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

மக்களுடைய பங்களிப்பில்லாமல் எந்த சமூகமாற்றமும் நிகழ்ந்துவிடாது என்பதை அறிந்து வைத்திருந்த கியூபா, 1997இல் மின்சார சேமிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) குறித்து ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தினை கியூபாவின் கல்வி அமைச்சகம், PAEME (The Programa de Ahorro de Energia por la Ministro de Educacion) என்கிற பெயரில் முன்னெடுத்தது. மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூக மையங்களுக்கு மின்சார சேமிப்பு குறித்தும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) குறித்தும் போதுமான அறிவினை வளர்ப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். சிறந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) திட்டங்களை கண்டறிய பள்ளியளவில், நகராட்சியளவில்  மாணவர்களுக்கு பல போட்டிகள் நடத்தப்பட்டன. வெறும் போட்டியாக மட்டுமே அவையில்லாமல், சிறந்த யோசனைகளை தேர்ந்தெடுத்து நகராட்சியளவில் செயல்படுத்தி பரிசோதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. நாட்டிற்கும், மக்களுக்கும் தங்களால் இயன்றதை செய்யவேண்டும் என்கிற எண்ணத்தினை மாணவர்கள் மத்தியில் மிக இயல்பாகவும், அதே நேரத்தில் ஆழமாகவும் விதைத்தது.

மின்விநியோக சீர்படுத்துதல்:
மின்சார சேமிப்பை பெரிய அளவில் மக்களிடையே கொண்டுசென்றுவிட்டாலும்கூட, ஏற்கனவே இருக்கிற மின் நிலையங்களால் நாட்டின் மூளை முடுக்கிற்கெல்லாம் தடையின்றி மின்சாரம் வழங்குவது கடினமானதாகவே இருந்தது. 2004 ஆம் ஆண்டு மட்டும், நாட்டில் 400 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தது (நாளொன்றிற்கு சராசரியாக 1 மணிநேரம் மின்துண்டிப்பு). இதனையெல்லாம் சரிசெய்வதற்கு, 2006இல் நாடு முழுவதும், 1854 சிறிய நுண் மின் நிலையங்களை அமைத்தது கியூப அரசு. இவற்றின்மூலம், 3000 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்து 110 நகராட்சிகளுக்கு மின்சாரம் வழங்கமுடிந்தது. அதன்பிறகு, 2006இல் ஒட்டுமொத்தமாக மூன்றே முறைதான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2007இல் மின்வெட்டே இல்லாமல் போயிற்று.

120000 மின்கம்பங்களை மாற்றியது, 3000 கிலோமீட்டர் அளவிற்கு மின்கம்பிகளை மாற்றியமைத்தது, 5 லட்சம் புதிய மீட்டர்களை மாற்றியது போன்றவையும் மின்விநியோக சீரமைப்பில் அடங்கும்.
மின்சார சேமிப்புத்திட்டங்களாலும், மின்விநியோக சீர்படுத்தலாலும், மின்சாரத்தின் தயாரிப்பு செலவு பெருமளவில் குறைந்தது. இதனால் 2006 மற்றும் 2007 ஆகிய இரண்டாண்டுகளில்மட்டுமே 961000 டன் எரிபொருள் குறைவாக செலவிட்டது கியூப அரசு. இதனால் அவ்விரண்டு ஆண்டுகளில் எல்லோருக்கும் மின்சாரமும் வழங்கி, 5000 கோடி ரூபாயினையும் மிச்சப்படுத்தி மிகப்பெரிய சாதனை புரிந்தது கியூபாவின் மின்சாரத்துறை.
இவற்றையெல்லாம் கியூபாவினால் சாதிக்க முடிந்திருக்கிறதென்றால், அதற்கு அரசு மட்டுமின்றி, கியூப மக்களும் முக்கியகாரணமாக இருந்திருக்கிறார்கள். 2000இல் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்டு, கியூபாவில் ஒரு சமூக சேவை அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பிலுள்ள இளைஞர்கள் முழுவீச்சில் செயல்பட்டு, மின்சார சேமிப்பு குறித்தும் மாற்று எரிபொருள் குறித்தும் நாட்டு மக்களுக்கு விளக்கவும் உதவவும் செய்தனர்.

கியூபா தன்னுடைய  அனுபவங்களை வெனிசுவெல்லாவிற்கும் பகிர்ந்துகொண்டதன் பலனாக, அந்நாட்டிலும் 2000 மெகாவாட் மின்சாரத்தை அந்நாட்டு அரசால் சேமிக்கமுடிந்திருக்கிறது.

மாற்று மின்சக்தி:
ஒளிமின்னழுத்த முறையும் காற்றாலை முறையும் நிறுவுவதற்கு மிக அதிகமாக செலவாகும். அதனால் தேசிய மின் இணைத்தொகுதியிலிருந்து மின்சாரம் வழங்க இயலாமல் போகிற சிறிய பகுதிகளுக்கு, அந்தந்த ஊர்களிலேயே சிறிய காற்றாலைகளும், நீர் மின் நிலையங்களும், சோலார் பேனல்களும் அமைக்கப்பட்டன.

பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை முதற்கட்டமாக எடுத்துக்கொண்டு, அவற்றிலெல்லாம் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டன. இன்று 2000த்திற்கும் மேற்பட்ட கிராமப்புற பள்ளிகளும் மருத்துவமனைகளும் சூரிய ஒளி மின்சாரத்தினால்தான் இயங்குகின்றன. அந்த கிராமங்களுக்கெல்லாம் தேசிய மின் இணைத்தொகுதியிலிருந்து மின்சாரம் கொடுப்பதைவிட சோலார் பேனல்களை நிறுவுவது மலிவானதாகவே இருந்தது. லாஸ் தும்போஸ் என்கிற ஊரில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தியே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அவ்வூரிலிருக்கும் பள்ளிகள், மருத்தவ மையங்கள், சமூகக் கூடங்கள் மற்றும் மக்களின் வீடுகள் ஆகிய அனைத்தின் மாடியிலும் சோலார் பேனல்களைக் காணமுடிகிறது. அவ்வப்போது, பழைய பேனல்களைக் கொடுத்துவிட்டு, புதிய தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிற பேனல்களையும் மாற்றித்தருகிறது அரசு. நாட்டின் மத்தியிலிருந்து வெகுதொலைவிலிருக்கும் கிராமங்களும் வெளிச்சத்தில் வாழ, இத்திட்டங்கள் உதவுகின்றன. கியூபாவில், 97% மக்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவில் இது 66% தான். இந்தியாவில் இன்னமும் 30 கோடி மக்களுக்கும் மேலாக மின்சாரமே இல்லாமல் இருளில்தான் வாழ்கின்றனர். (http://data.worldbank.org/indicator/EG.ELC.ACCS.ZS/).

மக்களும் தங்களது வாழ்க்கை முறையினை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கியூபா மக்கள் எப்போதும் வெந்நீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். பீக் ஆயில் நெருக்கடிக்கு முன்னர், மின்சாரத்தையோ வேறு ஏதாவது எரிபொருளையோ பயன்படுத்தித்தான் தண்ணீரை சூடாக்கி குளித்துவந்தனர். ஆனால் தற்போது, குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர், வெயிலில் வைத்து சூரிய ஆற்றலில் சூடாக்கியே குளிக்கின்றனர். ஒரு சில மக்கள், சோலார் சூடாக்கியையும் பயன்படுத்துகின்றனர். தேவையில்லாமல் எல்லாவற்றிற்கும் எண்ணை  எரிபொருளையும் மின்சாரத்தையும் பயன்படுத்துவதை தவிர்க்கத் துவங்கிவிட்டனர்.

பீக் ஆயில் நெருக்கடிக்கு முன்னர், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை எரிபொருளைக்கொண்டுதான், கியூபாவில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், நெருக்கடிக்குப்பின்னர் எண்ணை கிடைக்காது என்கிற நிலைவந்தபோது, உள்நாட்டிலேயே கிடைக்கும் கச்சா எண்ணையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டது. அவர்களது உள்நாட்டு கச்சா எண்ணை, சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனையும் அறிந்துவைத்திருந்தனர். ஆனால் வாழ்வா சாவா என்கிற நிலையில், வேறு வழியின்று தற்காலிகமாக அதனை பயன்படுத்தவேண்டியதாக இருந்தது. அதன்பின்னர், நிரந்தரத்தீர்வினை நோக்கி, ஒவ்வொரு படியாக எடுத்துவைத்தனர்.



விவசாயம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துகொண்டிருந்ததால், விளைந்த பொருட்களின் கழிவினைக்கொண்டு மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு சர்க்கரை ஆலையும் மின் உற்பத்தி நிலையங்களாக மாறின. சர்க்கரை தயாரித்தபின் கிடைக்கிற கரும்பின் கழிவுகளைக்கொண்டே அருகிலேயே மின்சாரம் தயாரிக்கப்பட்டது.
அறுவடைக்காலங்களில், உயிரிப்பொருட்களிலிருந்தே 30% அளவிற்கான எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. எண்ணை இறக்குமதியை மட்டுமே நம்பிய மின்சாரத் தயாரிப்பு முறையினை கியூப அரசு கைவிட்டுவிட்டது.
தற்போது மாற்று எரிபொருள் குறித்த ஆலோசனைகளை, மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கெல்லாம் பகிர்ந்துகொள்கிறது கியூபா.
2001இல் கியூபாவின் மாற்று எரிபொருள் திட்டங்களைப் பாராட்டி, "குளோபல் 500 விருதினை" கியூபாவிற்கு ஐ.நா. சபை வழங்கியது.

ஒரு அணுவுலைகூட இல்லாத நாடுதான் கியூபா. அணுவுலைகளே இல்லாத நாடு என்கிற நிலையிலிருந்து, அணுவுலைகளே தேவைப்படாத நாடாக மாறிக்கொண்டிருக்கிறது கியூபா.

'எதுவுமே இல்லாமல் இவர்கள் எப்படி உயிர் வாழ்கிறார்கள்?' என்று மேற்குலக நாடுகள் பலவும் கியூபா குறித்து பரப்பிவருகிற செய்திகளுக்கு விடையாக, 'அவர்களை எல்லாம் கியூபா வந்து பார்க்கச்சொல்லுங்கள்' என்கிறார்கள் கியூப மக்கள்.

எண்ணை வளம் பூமியில் உருவாக பல்லாயிரம் ஆண்டுகளாகியிருக்கிறது. ஆனால் அவற்றின் பெரும்பகுதியினை ஒரே நூற்றாண்டில் நாம் பயன்படுத்தித் தீர்த்துவிட்டோம். எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமானதையும் சேர்த்துத்தான் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். பெட்ரோல் உள்ளிட்ட எண்ணை வளம் சில ஆண்டுகளில் தீர்ந்துபோவது குறித்து, உலகின் எந்த நாடுகளும் சிந்திக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. மாற்று எரிபொருள் குறித்த சிந்தனையை துவக்கக்கூட தயாராக இல்லாமல், எல்லா நாடுகளும் அடுத்த வாரத்திற்கு பெட்ரோல் இருக்கிறதா, இல்லையென்றால் எந்த நாட்டிலிருந்து வாங்கலாம்/எடுக்கலாம் என்கிற கணக்கை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கின்றன.
"மக்களே! நமக்கு பிரச்சனை இருக்கிறது. எரிபொருளை நாம் மிச்சப்படுத்த வேண்டும். அதனால் தேவையில்லாமல் எரிகிற விளக்குகளை நாம் அணைத்துவைப்போம்".
இந்த வரிகளை கியூபாவில் சொன்னபோது, மக்கள் அதற்கு செவிசாய்த்தார்கள், சமூக ஒற்றுமையோடு அப்பிரச்சனையினை அணுகினார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், இதே வரிகளைச்சொன்னால் அம்மக்கள் நம்மைப்பார்த்து, "அதைச்சொல்ல நீ யார்? நான் பயன்படுத்தும் அளவிற்கான மின்சாரத்திற்கு பணம் கட்டிக்கொள்கிறேன்" என்கிற பதில்தான் கிடைக்கும்.


எண்ணையில்லா நிலை ஒரு நாள் நிச்சயமாக வரும். அதனால், நம்முடைய எண்ணங்களிலும் மாற்றம் வர வேண்டும். திடீரென ஒரு நாள் எதுவுமே இல்லாமல் தவிப்பதற்குபதிலாக, இப்போதே அதற்குத் தயாராவதே சரியான அணுகுமுறையாக இருக்கமுடியும். மக்கள் ஒற்றுமையும் சமூக அக்கறையுமே இப்பிரச்சனையினை சமாளிக்க உதவும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட கியூப அரசினால், அதனை கியூப மக்களுக்கு மிகச்சரியாக புரியவைக்க முடிந்திருக்கிறது. இன்றைய சூழலில், ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரம், அந்நாட்டின் பொருளாதார சுதந்திரத்தில் அடங்கியிருக்கிறது. பொருளாதார சுதந்திரமோ, எண்ணை  எரிபொருள் சுதந்திரத்தில் அடங்கியிருக்கிறது.

இன்னமும் கியூபாவின் கடலோரத்தில், எண்ணை வளம் இருப்பதற்கான அறிகுறியிருக்கிறது. ஆனால் அதனையெல்லாம் ஒரு சொத்தாக அவர்கள எண்ண விரும்பவில்லை. அவையில்லாத வாழ்க்கையினை மக்கள் வாழ கற்றுக்கொண்டிருக்கிறார்கள். சூரியனால், இவ்வுலகை பல்லாயிரம் ஆண்டுகளாக பத்திரமாக பார்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் நாம்தான் ஒரு சில ஆண்டுகளிலேயே இப்பூமியை அழித்துக்கொண்டிருக்கிறோம். ஆக, பிரச்சனை எரிபொருளால் அல்ல; அதனை பயன்படுத்தித்தீர்க்கும் நம்மால்தான். எண்ணிலடங்கா சிறிய தீர்வுகள் நம்முன் கொட்டிக்கிடக்கின்றன. மனித சமூகம் ஒருங்கிணைந்து, இத்தீர்வுகளை பயன்படுத்தத் துவங்கினால், வாழ்க்கைநிலை மேம்படும். நமக்கு மிக அருகிலேயே வந்துகொண்டிருக்கிற நெருக்கடிகள், மாற்றங்கள், பிரச்சனைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு மாற்றுத்திட்டங்களை வகுக்கவேண்டும்.

'வளர்ச்சி' என்கிற ஒற்றை வார்த்தையினூடாக உலகையே அழித்தொழித்துக்கொண்டிருக்கும் உலகமயமாக்க பாதையினை நாம் மாற்றவேண்டியிருக்கிறது. நாடுகள் ஒன்றிணைய வேண்டியிருக்கிறது, நட்புகள் வளர வேண்டியிருக்கிறது. நமக்கிருக்கிற ஓருலகத்தை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் காப்பாற்றமுடியும். நாடுகள் பேதமின்றி ஒருவருக்கொருவர் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியிருக்கிறது. வருங்கால சந்ததியினருக்கும் இயற்கையினை விட்டுச்செல்லுமளவிற்கு இயற்கையோடு ஒன்றிணைந்து மகிழ்ச்சியோடு வாழப் பழகவேண்டியிருக்கிறது. அதுதான் உலகின் குடிமக்களாகிய நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இச்சவாலை சமாளிப்பதற்கான பாதையில், கியூபா ஒரு சில அடிகளை எடுத்துவைத்திருக்கிறது.
கியூபாவின் அனுபவங்களும், அவற்றின் மூலம் கிடைக்கிற பாடங்களும் உலக மக்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து நம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டால், நிச்சயமாக மாற்று உலகம் சாத்தியமே....

1 comment:

  1. நான்கு பகுதிகளும் அருமை.கியூப மக்கள் எப்படி உணர்வுபூர்வமாக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பது புரிந்துகொள்ள முடிந்தது.மிகசிரமப்பட்டு தகவல்களைத்திரட்டி எழுதியுள்ளீர்கள் .பாராட்டுக்கள்.பொதுவுடமை அரசுகள் மக்களுக்காக எவ்வளவு மண்டை உடைத்துக்கொண்டு யோசிக்கின்றனர்;இங்கே எப்படி தங்களூக்காகவே யோசிக்கின்றனர் .ஏக்கமாக உள்ளது

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)