Sunday, July 29, 2012

தேங்காயின் உதவியுடன் ஒரு மக்கள் புரட்சி (Bougainville Film)


"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்!"
"மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!" 
போன்ற வாசகங்களை விளம்பரப்பலகைகளிலும், அரசு அலுவலக சுவர்களிலும் பார்க்கமுடிகிறது. இதுபோன்ற பிரச்சாரங்கள் உலகளவில் பெரும்பாலான நாடுகளின் அரசுகளால் அந்தந்த நாட்டுமக்களிடம் செய்யப்பட்டுவருகிறது.

இயற்கையினை பாதுகாப்பது குறித்து குடிமக்களுக்கு அறிவுறுத்துகிற அரசுகளும், அவர்களின் உதவியோடு வாழ்கிற பெருநிறுவனங்களும் இணைந்துதான் இவ்வுலகின் இயற்கையையும், காடுகளையும், நிலங்களையும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்நிலங்களில் வாழும் பூர்வகுடி மக்களையும் அழித்து ஒழித்து தங்களது இலாப வெறியினை தீர்த்துக்கொள்கிறார்கள் என்பது மிகப்பெரிய முரண். பூமியில் தோண்டப்பட்டிருக்கும் சுரங்கங்களில் பெரும்பாலானவை, அந்நிலத்தில் வாழ்ந்த மனிதர்களை கொன்றோ, அடித்துவிரட்டியோதான் தோண்டப்பட்டிருக்கின்றன.

உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான சோமாலியாவின் கடற்கரைகளில்தான் மேற்குலக நாடுகளின் அணுக்கழிவுகளும் இன்னபிற இரசாயனக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன.தங்கம், காப்பர், அலுமினியம், பாக்சைட், செல்போன்கள் தயாரிக்கப்பயன்படும் கனிமங்கள் போன்றவற்றை எடுப்பதற்காக, பல ஆப்பிரிக்க நாடுகளின் நிலங்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும் மீளமுடியாத சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.


30000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகிற மிகச்சிறிய தீவொன்றினில் தோண்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சுரங்கமொன்றினால் மனிதர்கள் உட்பட அத்தீவின் அனைத்து உயிரினங்களும் அழியத்துவங்கின. அவர்களுக்கு எவ்வித மாற்று ஏற்பாடோ மாற்றுத்திட்டமோகூட முன்வைக்காத அரசுகளையும், இலாபமடைந்துவந்த சுரங்க நிறுவனத்தையும் எதிர்த்து அம்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினார்கள்.

பூகென்வீல் என்பதுதான் அத்தீவின் பெயர். அம்மக்களுடைய போராட்டம் வென்றதா இல்லையா என்பது குறித்து, "The Coconut Revolution" என்கிற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் 'டோம் ரோதேரோ' என்கிற இயக்குனர்.




பூகென்வீல் தீவு - ஒரு வரலாற்றுப்பார்வை:




ஒன்றரை லட்சம் மனிதர்கள் வாழ்கிற பூகென்வீல் என்கிற தீவு ஆஸ்திரேலியாவிற்கு வடகிழக்கில் சில நூறுகிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது. 30 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பூகென்வீல் மக்கள் அத்தீவினில் வாழ்ந்துவருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். 1768 ஆம் ஆண்டில், இத்தீவினை கண்டுபிடித்துவிட்டதாக 'லூயி பூகென்வீல்' என்கிற பிரெஞ்சு மாலுமி அறிவித்ததோடு தன்னுடைய பெயரையும் தீவிற்கு வைத்துவிட்டார். அதன்பிறகு, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளால் சில நூற்றாண்டுகளாக காலனித்தீவாக இருந்துவந்தது. பூகென்வீலிற்கு சற்று மேலே இருக்கும் 'பப்புவா நியூ கெனி' நாட்டினை எந்தெந்த நாடுகள் காலனியாக வைத்திருந்தனவோ, அவையெல்லாம் பூகென்வீலையும் இலவச இணைப்புக் காலனித்தீவாக வைத்திருந்தன. இதனால் தெற்கே இருக்கும் தன்னுடைய கலாச்சாரத்தை ஒட்டிய மக்கள் வாழ்கிற சாலமன் தீவுகளுடன் இணைய முடியாத நிலைதான் வரலாறெங்கிலும் தொடர்கிறது.

பங்குனா சுரங்கமும் சுரண்டலும்:
தங்கம், செம்பு, வெள்ளி போன்ற இயற்கைவளங்கள் பூகென்வீலில் ஏராளமாக இருப்பதனையறிந்துகொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், அதனைச்சுரண்டியெடுக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தன. 1960 இல் ஆஸ்திரேலிய நாட்டின்கீழ் இருந்தபோது, பூகென்வீல் தீவின் நடுவினில் பங்குனா என்கிற இடத்தில் மிகப்பெரிய சுரங்கமொன்று தோண்ட முடிவெடுத்தது ஆஸ்திரேலிய அரசு. இம்முடிவினை எதிர்த்து, பெண் வழிச்சமூகமாக வாழ்ந்து வந்த பூகென்வீல் தீவு மக்கள், பெண்களின் பின்னே திரண்டு வீரமிகு எதிர்ப்புப்போராட்டங்களை நடத்தினர். பூகென்வீல்  பெண்களின் தலைமையில் ஏராளமான மக்கள், புல்டவுசர்களுக்கும் பீரங்கிகளுக்கும் அஞ்சாமல் ஒரு வீரம் செறிந்த எதிர்ப்புப்போராட்டத்தினை நடத்தினர். இருப்பினும் ஆஸ்திரேலிய வல்லரசின் எரிவாயு குண்டுகளுக்கு முன்னே, பூகென்வீல் மக்களின் ஆயுதங்களால் வெற்றிகொள்ளமுடியவில்லை. இதனைத்தொடர்ந்து 1966 இல், பி.சி.எல். என்கிற பன்னாட்டு நிறுவனம், பங்குனாவில் சுரங்கப்பணியினை துவங்கியது. இங்கிலாந்து நாட்டின் ரியோ டின்டோ (Rio Tinto ), ஆஸ்திரேலியாவின் சி.ஆர்.ஏ. போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனம்தான் பி.சி.எல். நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை  வேறுசில நாடுகளிலிருந்து அழைத்துவந்து, சுரங்கத்தில் பணிக்கமர்த்தியது பி.சி.எல். நிறுவனம். உள்ளூர் மக்களையோ வெறும் கொத்தடிமைகளைப்போல, மிகக்குறைந்த சம்பளத்துடன் வேலைக்கு வைத்துக்கொண்டது.

1975 இல் ஆஸ்திரேலியாவிடமிருந்து விடுதலைபெற்ற 'பப்புவா நியூ கெனி' என்கிற நாடு, பூகென்வீல் தீவையும் தனக்கென எடுத்துக்கொண்டது. தனிநாடாக உரிமை கோரி, பூகென்வீல் மக்கள் அன்றிலிருந்து பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக 1975 இலும் 1990 இலும் பெரிய போராட்டங்களும் தனிநாடாக தங்களை அறிவித்துக்கொண்டதும் நடந்தேறியது. ஆனால் அதனை உலகின் எந்த நாடுகளும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.


1966 ஆம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிய சுரங்கம், அரை கிலோமீட்டர் ஆழமும் ஏழு கிலோமீட்டர் அகலமும் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய சுரங்கமாக மாறியது. கோடியாக கோடியாக இலாபத்தினை அள்ளிக்கொடுத்த அச்சுரங்கத்தினால், உள்ளூர் பூகென்வீல் மக்களுக்கு எவ்வித இலபாமும் கிடைக்கவில்லை. சீரழிக்கப்பட்ட சுற்றுச்சூழல், விவசாயம்கூட செய்யமுடியாமல் நஞ்சாகிக்கிடக்கிற நிலம், இரசாயன அமிலமாக மாறிக்கொண்டிருக்கிற ஆறுகள் போன்றவையே சுரங்கத்தினால் அம்மக்களுக்கு கிடைத்தன. சுரங்கக்கழிவுகளின் காரணமாக, பூகென்வீல் தீவின் 500 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட அளவிலான இடங்கள் முற்றிலுமாக நஞ்சாக்கப்பட்டது. நஞ்சாக்கப்பட்ட அந்நிலங்களில் விவசாயம் பொய்த்து, மீன்பிடித்தொழில் மறைந்து, குடிப்பதற்குக்கூட நீர் எடுக்க முடியாத நிலையாகிவிட்டது. சுரங்கக் கழிவுகள் எல்லாம் 100 மீட்டர் அளவு உயரத்திற்கு குப்பைக் குவியலாகக் காட்சியளித்தன. சுரங்கத்தை சுற்றியுள்ள ஆறுகள் எல்லாம் மாசுபட்டுவிட்டது. பூகென்வீல் மக்கள் பலரும் தொடர் வியாதிகளுக்கும், நீண்டகால நோய்களுக்கு ஆட்பட்டுவிட்டனர்.

இனியும் பொறுப்பதற்கில்லை - வெகுண்டெழுந்த மக்கள்:
பூகென்வீல் மக்களின் சார்பாக பிரான்சிஸ் ஓனா என்பவற்றின் தலைமையில் பி.சி.எல். நிறுவன உயரதிகாரிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், நிறுவனமோ மக்களின் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கண்டு எள்ளிநகையாடின. சிறிய தீவின மக்களின் பெரிய கோரிக்கைகளாக அவற்றை நிராகரித்தனர். ஊதிய உயர்வு, மாசுக்கட்டுப்பாட்டுக் கோரிக்கை, மக்களின் வாழ்வாதார உத்திரவாத கோரிக்கை போன்ற அனைத்தையும் ஒருசேர மறுத்தது கோடிக்கணக்கில் இலாபமீட்டும் நிர்வாகம்.

இனியும் பொறுப்பதற்கில்லை என்று முடிவெடுத்த பூகென்வீல் மக்கள், பிரான்சிஸ் ஓனா தலைமையில் சுரங்கத்தின் மின்விநியோகத்தை துண்டித்தனர்; சுரங்கத்திலிருந்தே வெடிபொருட்களை எடுத்து சுரங்கத்தை செயல்படமுடியாதபடி வெடிக்கவும் செய்தனர். 'பப்புவா நியூ கெனி' நாட்டின் பாதியளவிற்கான ஏற்றுமதி பூகென்வீல் தீவின் சுரங்கத்தை நம்பியே இருந்தமையால், போராடிய பூகென்வீல் மக்களை கண்டதும் சுட்டுத்தள்ள ஆயிரம் பேர்கொண்ட இராணுவக்குழுவினை 'பப்புவா நியூ கெனி' அரசாங்கம் அனுப்பிவைத்தது. அதுவே பூகென்வீல் மக்களை ஒன்றுசேர்த்தது. பிரான்சிஸ் ஓனாவின் தலைமையில், "பூகென்வீல் புரட்சிகர இராணுவம்" உருவாக்கினார்கள். முழுக்க முழுக்க, தீவிற்குள் இருக்கும் மரக்கட்டைகளைக்கொண்டே துப்பாக்கிகள் தயாரித்தனர். ஆஸ்திரேலியாவின் உதவியுடன் தொடர்ந்து சில ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடைபெற்றது. ஆயுதமில்லா அப்பாவி மக்களின் மீது ஹெலிகாப்டர்கள் மூலமாக குண்டுகள் வீசப்பட்டன. போரினால் பதினைந்தாயிரம் பூகென்வீல் மக்கள் (ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 %) கொல்லப்பட்டார்கள். ஆனாலும் அவர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பினால், ஓரளவிற்கு வெற்றியும் பெற்றார்கள். தாங்களாகவே பூகென்வீல் தீவினை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டு, பிரான்சிஸ் தலைமையில் "பூகென்வீல் இடைக்கால அரசையும்" அமைத்தார்கள். ஆனால் உலகின் வேறெந்த நாடும் பூகென்வீலைத் தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை.

போராட்டத்தினை தலைமையேற்று நடத்தியவர்கள் இதுகுறித்துப் பேசுகையில்,
ஜோசப் கபூன் (துணை அதிபர்) : "எங்களுடைய காடுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், நதிகள் அனைத்தும் மிகவும் அழகானவை. அவற்றை அழித்து மாசுபடுத்திவிட்டுச் செல்வோரைக் கண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்."
பிரான்சிஸ் ஓனா : "மனிதனுக்காகவும் அவனுடைய கலாச்சாரத்திற்காகவும், நிலத்திற்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும், சுதந்திரத்திற்காகவுமே பூகென்வீல் போராட்டத்தினை நடத்தினோம். 1960 களில் துவங்கியது பங்குனா சுரங்கம். எங்களுடைய மக்களுக்கு, எதிர்காலம் குறித்த போதுமான அறிவு அப்போது இல்லை. பூகென்வீல் மக்களாகிய நாங்கள் எங்களுடைய நிலத்தினை நம்பிமட்டுமே வாழ்க்கையை நடத்திவருபவர்கள். நிலம்தான் எங்களது வாழ்க்கை; நிலம்தான் எங்களது அன்னை; நிலம்தான் எங்களுக்குப் பாதுகாப்பு; பங்குனா சுரங்கம் அமைக்கப்பட்ட இடம் மிகப்பெரிய காடாக இருந்தது. அதனைச்சுற்றி வாழ்ந்த மக்களுக்கு வேட்டையாடவும் உணவுதேடவுமான இடமாக அது இருந்துவந்தது. பெரிய பெரிய மரங்கள் எல்லாம் இருந்தன அங்கே. ஒரு மிகப்பெரிய மலையும் இருந்தது. பூகென்வீலில் தற்போது இருக்கிற மலைகள் அளவிற்கு பெரிய மலையாக இருந்தது. ஆனால் அம்மலையையே தகர்த்தெறிந்துவிட்டனர். அனைத்தையும் இழந்துவிட்ட ஒரு தரிசு நிலமாகக்கிடக்கிறது. இந்நிலத்தை மீண்டும் எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்றே தெரியவில்லை. எங்களுடைய நிலங்களை எடுத்துக்கொண்டு அதிலிருந்து கிடைத்த வருவாயின்மூலம் அவர்கள் பெரும்பயன் அடைந்தாலும், எங்களுக்கு எதையுமே திருப்பித்தரவில்லை. சுரங்கத்திற்கு மிக அருகிலிருக்கும் பள்ளியைக்கூட நாங்களே முன்முயற்சி எடுத்து எங்களது சொந்த உழைப்பினில் உருவாக்கினோம். பல இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டும் சுரங்கத்தை உரிமைகொண்டாடிய கார்பரேட் பி.சி.எல். நிறுவனமோ அரசாங்கமோ எவ்வித உதவியும் செய்யவில்லை. இங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலான ஆறுகளையும் நதிகளையும் சுரங்கக்கழிவுகளால் மாசுபடுத்திவிட்டனர். இங்கிருக்கும் தண்ணீரைக் குடிக்கமுடியாது. மீன்கள் வாழவும் தகுதியற்றதாக மாறிவிட்டது. குறைந்தபட்சம் அடுத்த 200 ஆண்டுகளுக்கு இவற்றின் மாசினை சரிசெய்ய இயலாத நிலை."

தேங்காயின் உதவியுடன் தொடர்ந்தது புரட்சி....
இயற்கை வளமிக்க தங்களது தீவினை அழித்துக்கொண்டிருந்த சுரங்கத்தை மூடியாகிவிட்டது; அதற்குக் காரணமானவர்களை தீவினை விட்டே அடித்தும் விரட்டியாகிவிட்டது. ஆனால் 'பப்புவா நியூ கெனி' அரசும் ஆஸ்திரேலிய அரசும் இணைந்து பூகென்வீல் தீவிற்கு மிகப்பெரிய பொருளாதாரத் தடை விதித்துவிட்டன. அத்தீவினை சுற்றி வளைத்துக்கொண்டு தீவிற்குள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் எவ்விதப் போக்குவரத்தும் நடைபெறாதவண்ணம் தடைபோட்டிருந்தனர்.

அடுத்தது என்ன என்கிற கேள்வி ஒட்டுமொத்த பூகென்வீல் மக்களிடமும் உலவிக்கொண்டிருந்தது.

பிரான்சிஸ் ஓனா : "'பப்புவா நியூ கெனி' அரசு விதித்திருக்கிற தடையினைத் தாண்டி எங்களது வாழ்க்கையினை சுமூகமாகத் தொடரவேண்டுமென்றால், இங்கிருக்கிற ஒவ்வொரு குடும்பமும் உணவிற்கு தன்னிறைவு பெற்றதாக மாறவேண்டும் என்று தீர்மானித்தோம். எல்லாக் குடும்பங்களும் தோட்டங்கள் வைக்கத்துவங்கினோம். பொதுவான இடங்களில் இத்தீவினில் விளையத்தகுதியான உணவிற்குத் தேவையான அனைத்துவகை காய்கறி,பழங்களையும் எல்லோரும் இணைந்து விளைவிக்கத்துவங்கினோம். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு,  வேர்க்கடலை, சோளம், வாழைப்பழம் போன்றவை நன்கு விளைந்தன. எங்கும் பச்சை பசேலென காட்சியளித்தன. சிறந்த மண்வளத்தின் காரணமாக, பூகென்வீல் மக்களுக்கு உணவிற்கு பஞ்சமே இல்லை என்கிற நிலை உருவாகிற்று."

அளவில்லாமல் இருக்கிற இயற்கை வளங்களை வைத்துக்கொண்டு எவரிடமும் எதற்காகவும் கையேந்தி நிற்கவேண்டிய நிலையில்லை என்பதனை உணர்ந்துகொண்டனர். மூன்று வேளை உணவிற்கு பஞ்சம்வைக்காத இயற்கை வளமிக்க தீவுதான் பூகென்வீல். ஆனால் மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கு என்ன செய்வது என்கிற வினாவிற்குதான் விடைதேடவேண்டியிருந்தது. அளவில்லாமல் காய்த்துத் தொங்குகிற தேங்காய்கள்தான் அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டின.
  • தேங்காய்ப் பாலில் ஏராளமாக இரும்புச்சத்து இருப்பதினால், காடுகளில் நடப்பதற்கு உடலுக்கு பலம்சேர்க்கிறது. எனவே தண்ணீருக்கு பதிலாக, பெரும்பாலும் தேங்கைப்பாலையே அருந்தினர்
  • தேங்காய் மட்டைகளை பிழிந்து, அதிலிருந்து வரும் சாறினை எடுத்து உடம்பில் இருக்கும் காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர்
  • அதன் பின்னரான தேங்காய் மட்டைகளை, அடுப்பு விறகாக பயன்படுத்தினர்
  • தேங்காய் மட்டைகளைக் கொளுத்திவைத்து, அதிலே சிறிதளவு தேங்காய்களை தூவி கொசுத்தொல்லைகளிலிருந்து விடுதலை பெற்றனர்
  • தேங்காய் பாலினை சமையலுக்கு பயன்படுத்தினர்
  • தேங்காய் எண்ணெயினை விளக்குகளில் பயன்படுத்தினர்
  • தென்னை இலைகளை எடுத்து கூடைகள், பைகள் செய்தனர்
  • தேங்காய் எண்ணெய்களைக்கொண்டு குளிக்கப் பயன்படுகிற சோப்பும் தயாரித்தனர்
  • மூன்று தரத்திலான தேங்காய் எண்ணெய்களைத் தயாரித்தனர். 'ஏ' தரத்திலான எண்ணையினை துப்பாக்கி துடைக்கவும், 'பி' மற்றும் 'சி' தரத்திலான எண்ணெய்களை சமைக்கவும் பயன்படுத்தினர்
  •  தேங்காயிலிருந்து எண்ணை எடுத்து, அதனையே கார் உட்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஒட்டுமொத்த தொழிற்நுட்பத்தினையும் பூகென்வீல் மக்களே உருவாக்கி செயல்படுத்துகின்றனர்
  • சுரங்கத்தில் எடுத்த சிறுசிறு பொருட்களைக்கொண்டு தயாரித்த உபகரணங்களினால், ஆங்காங்கே பாயும் நீர்வீழ்ச்சிகளிலிருந்து மின்சாரத்தை தயாரித்தனர். அம்மின்சாரமே பூகென்வீல் தீவு முழுக்க உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. இம்முறையில் பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் உட்பட அனைத்து உபகரணங்களுக்கும் தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணையையே எரிபொருளாக பயன்படுத்தினர். பூகென்வீல் முழுவதும் 60 இடங்களில் இதுபோன்று மின்சாரம் தயாரிக்கிறார்கள்.
இன்றைய நிலை....
தன்னிறைவுபெற்ற தீவாக அவர்கள் மாறியிருப்பதாகச் சொன்னாலும், உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் வளர்ச்சியும் புதிய தொழிற்நுட்பங்களும் பூகென்வீல் மக்களுக்கு கிடைக்காமல் செய்கின்றன அதனை ஆதிக்கம் செலுத்தும் நாடுகள். அதிலும் குறிப்பாக, மருத்துவ கண்டுபிடிப்புகளும் அதுசார்ந்த உதவிகளும் அம்மக்களுக்கு கிடைக்காமலே போகிறது. தேங்காய்ப்புரட்சியினை முன்னின்று நடத்திய பிரான்சிஸ் ஓனா மலேரியாவிலும், அவருக்குப்பின் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் இதய நோயாலும் இறந்துபோயினர். எவ்வித மருத்துவ உதவியும் பூகென்வீல் தீவினுள்ளே நுழையவிடாமல் ஆஸ்திரேலிய அரசும் 'பப்புவா நியூ கெனி' அரசும் இன்றளவும் தடுத்துவைத்திருக்கின்றன.
'உனது இதயமான நிலத்தினையும் இயற்கையையும் அழித்து காசாக்க அனுமதி கொடுத்தால், நான் உனது உயிரைக்காப்பேன்... இல்லையென்றால் நீ செத்துமடிந்தாலும் கவலையில்லை' என்பதுதான் ஆதிக்க நாடுகளின் குரலாக இருக்கிறது.

அடுத்த தலைமுறை மக்களுக்கு, மாசுபட்ட, எதற்கும் உபயோகப்படாத உலகைத்தான் பரிசளிக்கப்போகிறோமா?
வெறும் காசுக்காகவும், மிகச்சிலரின் மிகப்பெரிய இலாபத்திற்காகவும் மட்டுமே இயற்கையின் எதிர்காலத்தையே அழித்துக்கொண்டிருப்போரை சும்மாதான் விடப்போகிறோமா?
காலம் காலமாக இயற்கைக்காடுகளிலும், பூர்வீக கிராமங்களிலும் வாழ்ந்துவருகிற பூர்வகுடி மக்களை, அவர்களின் விருப்பமின்றி அடித்துத்துரத்தப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கப்போகிறோமா?

இது ஏதோ ஆஸ்திரேலியாவிற்கு அருகிலிருக்கும் மிகச்சிறி தீவின் வரலாறுதானே என்று ஒதுக்கித்தள்ளமுடியாது. தங்களது நிலத்தினை இழந்து அவர்கள் அனுபவித்த துயரத்தின் வெளிப்பாடுதான், அவர்களின் இம்மாபெரும் போராட்டம். எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையினை கேள்விக்குள்ளாக்கும்விதத்தில் உலகில் எங்கெங்கெல்லாம் இயற்கையினை அழித்து சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதோ, அந்நிலங்களின் துயரமும் இதுதான். இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் புதைந்துகிடக்கும் பாக்சைட், அலுமினியம் போன்ற கனிமவளங்களை சுரண்டித்திருடிக்கொண்டு போவதற்கு வேதாந்தா மற்றும் இன்னபிற கார்ப்பரேட் நிறுவனங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன. இயற்கையினை அழித்து, இனிவரும் சந்ததியினருக்கு இல்லாமல் செய்கிற மனிதவிரோத, இயற்கைவிரோதச் செயலை முன்னெப்போதையும்விட நாம் அனைவரும் வலிமையாக ஒன்றிணைந்து, பூகென்வீல் மக்களைப்போன்று எதிர்க்கவேண்டியிருக்கிறது.

-இ.பா.சிந்தன்





3 comments:

  1. நல்லப்பகிர்வு, இதே உலக வல்லரசு நாடுகள் தான் சுற்று சூழலைக்காக்க மற்ற நாடுகளுக்கு விதி வகுத்து கொடுக்கின்றன என்பது முரண்நகை, மேலும் அவ்வப்போது சிட்டுகுருவி அழிகிறது, ஆர்டிக்கில் ஐஸ் உருகுதுனு ரொம்ப பொறுப்பா இயக்கம் ஆரம்பிப்பாங்க :-))

    ஆனால் இந்நாடுகளின் தேவைக்காகவும், வியாபாரத்திற்காகவும் யாரையும் அழிப்பார்கள்.

    ReplyDelete
  2. mutrilum iyarkaiyaana ,sooriyan samaiththutharum unavaana thengaayil bougain ville makkal eththnai vithamaana uththigalai kaiyaandirukkinranar.necessity is the mother of invention enbathu ivargal vizhayaththil oththuppogirathu.
    eninum ,adimaippaduthum aandaigal enthakkaalaththilum irunthuthaan theeervaargal polirukkirathu!
    maa.ulaganathan,thiruneelakudi

    ReplyDelete
  3. அருமையான பதிவு. இப்படத்தை பார்த்திருக்கின்றேன், போகன்வில்லுக்கு சுயாட்சி கொடுத்துவிட்டதாக் பப்புவ அரசு கூறியது.. ஆனால் என்ன ஆச்சுனு தெரியல ... ! சாலமன் தீவோடு இணைவது தான் போகன்வில்லு சிறந்த வழி .. அதே போல இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா - பப்புவா நியு கினியில் இணைவது சிறந்த வழி

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)