சினிமா
என்கின்ற ஊடகத்தின் சக்தியோடு திறமை சேரும்போதுதான் பிரபலத்தன்மை வந்துசேர்கிறது. பல நேரங்களில் ஒரு திரைப்படத்தின்
இயக்குநரைவிட அப்படத்தின் கதாநாயகனோ, கதாநாயகியோ பிரபலத்தன்மை உடையவர்களாக
இருப்பர். ஆனாலும், சினிமாவின் சக்தியை உணர்ந்து அதை வெளிக்கொண்டு
வருவதில் அதிக பங்களிப்பவர் இயக்குநர்தான். அதனால்தான் சினிமாவை
இயக்குநரின் களம் என சொல்கிறோம். சினிமாவின் படைப்பாளி, ஆசிரியன் என்பது
இயக்குநராகத்தான் இருக்கமுடியும் எனச் சொல்கிறோம். மற்ற தொழில்நுட்ப
கலைஞர்களும், நடிகர்களும் எத்தனை சிறப்பாக பங்களித்திருந்தாலும்,
சினிமாவின் அதிகபட்ச சக்திநிலையை வெளிக்கொண்டுவருவது இயக்குநர்தான்.
ஒரு
இயக்குநரின் பல படங்களை ஒருசேர பார்க்கும்பொழுது அதில் ஒரு பொதுத்தன்மை
இருக்கும். அது அந்த இயக்குநருக்கே உள்ள சினிமாவின் சக்தியை வெளிக்கொண்டு
வரும் திறமைதான். சில நேரங்களில், எத்தனை அற்புதமான படங்களை இயக்கிய
இயக்குநரா இந்தப் படத்தையும் இயக்கினார்? என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கும்
படங்களும் உண்டு. அங்கே அதற்கு காரணமாக இருப்பது, இயக்குநரின் திறமையில்
ஏற்பட்ட மாபெரும் மாற்றம்தான். சினிமாவோடு கூடிய அவரது தொடர்பில் ஓர்
இடைவெளி விழுந்திருக்கலாம். வயது, விரக்தி காரணமாக அவரின் திறமையில்
மாபெரும் வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம்.
ஒரு
குறிப்பிட்ட நடிகர் அல்லது தொழில்நுட்ப கலைஞர் பங்குபெற்ற பல படங்களை
ஒருசேர பார்க்கும்போது அந்தப் படங்களில் ஒரு பொதுத்தன்மையைப் பார்ப்பது
அபூர்வமாகவே இருக்கும். காரணம் அப்படங்களின் இயக்குநர்கள் வெவ்வேறு
நபர்களாக இருப்பதுதான். சினிமாவின் சக்திநிலையை வெளிக்கொண்டு வருவதில்
இயக்குநருக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்று சொன்னாலும், சில
நேரங்களில் நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இச்சக்திநிலையைக்
கொண்டுவருவதில் பெரும் பங்கு அளித்திருப்பர். இதை பல இயக்குநர்களும்
மனமுவந்து ஏற்றுக்கொள்வர். இதனால்தான் பல சிறந்த இயக்குநர்கள், வணிகரீதியான
காரணங்களை மீறி ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்களோடு
தொடர்ந்து பணியாற்றுகிறார்கள்.
அப்படிப்பட்ட
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் திறமையை மட்டும்
வெளிப்படுத்தாமல், சினிமாவின் சக்திநிலையை உணர்ந்து அதை வெளிக்கொண்டு
வருவதில் இயக்குநருக்கு சாதகமாக இருப்பதுதான் அங்கே அவர்கள்
கூட்டுக்கலைஞர்களாக, கூட்டுக்குடும்பமாக செயல்படுகிறார்கள். குரோசாவா தன்
பல படங்களில் ‘தொஷிரோ மிஃப்யுனை’ நடிக்க வைத்ததும், பெர்க்மன் ‘லிவ்
ஷல்மன்’ மற்றும் ‘எர்லாண்ட் ஜோஸப்ஸனை’ தன் பல படங்களில் நடிக்க வைத்ததும்,
சத்யஜித் ரே ‘ஷெளமித்ரோ சட்டர்ஜி’, ‘மாதவி முகர்ஜி’யை தன் பல படங்களில்
நடிக்க வைத்ததும் அப்படித்தான்.
சினிமாவின்
சக்திநிலையை இவர்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள். எப்படி வெளிக்கொண்டு
வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அறியுமுன்பாக, சினிமாவின் சக்திநிலை
என்று எதைச் சொல்கிறோம் எனச் சிந்திப்போம். சினிமா திரையில் நிகழவில்லை.
பார்வையாளனின் மனதில்தான் நிகழ்கிறது. திரையில் நாம்
பார்க்கும் காட்சி பார்வையாளனை, அவனின் அறிவு, உணர்வு, ஞாபகம், கற்பனை
என்று பல்வேறு மட்டங்களில் எப்படி தட்டியெழுப்புகிறது என்பதில்தான்
சினிமாவின் சக்திநிலை வெளிப்படுகிறது. இதை மிக எளிமையாக உணர்வுரீதியாகவும்
வெளிப்படுத்தலாம், அறிவுபூர்வமாக உவமானமாகவும் வெளிப்படுத்தலாம், மனதைக்
கவ்விப் பிடிக்கும் விதத்தில் கவித்துவமாகவும் வெளிப்படுத்தலாம்,
நெஞ்சுக்குழி வலிக்கும் விதத்தில் நெகிழச் செய்யும் விதத்திலும்
வெளிப்படுத்தலாம்.
எளிமையாக,
உணர்வுரீதியாக வெளிப்படுத்துதல் எனும்பொழுது எனக்கு ஸ்பானிய திரைப்படம்
ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்படத்தின் தந்தையாக வரும் நபர் ஒரு ஜாலி
பேர்வழி இரசிகர். மனைவி இருந்தாலும் பல பெண் சிநேகிதிகள். ஒளிவுமறைவு
இல்லாமல் எல்லோருடனும் நட்பு, உறவு. அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு
சில நாட்கள்தான் உயிரோடு இருப்பார் எனும் நிலையில் மருத்துவமனையில்
இருக்கிறார். மரணபயம் என்பது சிறிதும் இல்லாமல் அப்போதும் எல்லோருடனும்
சந்தோசமாக இருப்பார். அவரின் ஒரே மகன், (மனைவிக்குப் பிறந்தவன்) பெரிய
கோடீஸ்வரனாக, இளம் தொழிலதிபராக அமெரிக்காவில் இருக்கிறான். அவனுக்கு
அப்பாவை எப்போதுமே பிடிக்காது. காரணம், அவர் பல பெண்களோடு கொண்டிருந்த
உறவு. ஆனாலும் அம்மாவுக்காக அப்பாவைப் பார்க்க வருகிறான். அவரின்
சிகிச்சைக்காக தன் பணபலத்தை உபயோகித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான்.
ஆனால், அப்பாவோடு ஒரு வார்த்தை பேசமாட்டான். தந்தை சந்தோசமாக
ஜோக்கடித்துக்கொண்டு, தத்துவம் பேசிக்கொண்டு நண்பர்களோடு சிநேகிதிகளோடு
இருந்தாலும், அவ்வப்போது மெல்லிய சோகம் அவர் முகத்தில் கடந்து போவது
தெரியும். அது மரணபயம் இல்லை. மகன் தன்னோடு பேசவில்லையே என்கின்ற
ஏக்கம்தான் அது. அதை இயக்குநர் வெகுஅழகாக காண்பித்திருப்பார்.
ஒரு
காட்சியில், அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பார். அவரின் மனைவியும்
மகனும் மட்டும் அருகில் இருப்பர். அம்மா, மகனிடம் பழைய நிகழ்ச்சி ஒன்றை
நினைவுகூர்வார். மகன் குழந்தையாய் இருந்தபோது கடுமையான காய்ச்சல்
வந்ததாகவும், அவன் அழுதுகொண்டே இருந்ததாகவும் அப்போது அவன் அப்பாதான்
இரண்டு முழுஇரவுகள் உறங்காமல் குழந்தையை தன் தோளிலேயே வைத்து பார்த்துக்
கொண்டதாகவும் சொல்வாள். அதைக் கேட்ட ஒரு கணம் மகன் அப்படியே கரைந்து
போவான். அவன் ஆழ்ந்து உறங்கும் தந்தையின் முகத்தை சில நொடிகள் உற்றுப்
பார்ப்பான். (முதன்முறையாக அவன் தந்தையின் முகத்தை பல ஆண்டுகளுக்குப் பின்
அப்போதுதான் உற்று பார்க்கிறான்.) அந்த க்ளோசப் காட்சியில் அவனின் இறுகிப்
போயிருந்த மனம் அப்படியே கரைவதைப் பார்க்கமுடியும். அந்த களம்
சினிமாவுக்கு மட்டுமே உரிய களம். அந்தக் களத்தில் வெளிப்படும் சக்தி
சினிமாவுக்கு மட்டுமே உரிய சக்தி. அதன்பின் மகன் தந்தையோடு பேச
ஆரம்பிப்பார். விரைவிலேயே இருவரும் நட்புரிமையோடு பழகுவர். படத்தின்
இறுதியில் தந்தை மனநிம்மதியோடு உயிர் துறப்பார்.
இது
போன்று நூற்றுக்கணக்கான காட்சிகளை நூற்றுக்கணக்கான படங்களிலிருந்து சொல்ல
முடியும். இது போன்ற காட்சிகள் பார்வையாளனின் மனதில் பல மாயவித்தைகளைச்
செய்கின்றன. எளிமையான, உணர்வுரீதியான வெளிப்பாடு இதுவென்றால்,
அறிவுபூர்வமான உவமான வெளிப்பாடு என்பது இன்னொன்று. ஆஸ்கார் விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்ட ‘லகான்’ பட இயக்குநர் அஷிடோஸ் கௌரேக்கர் இயக்கிய
‘ஸ்வதேஸ்’ என்ற இந்திப்படத்தில் ஓர் அருமையான காட்சி. ஷாருக்கான்
உண்மையிலேயே மிகச்சிறப்பாக நடித்தப் படம் இது. இதில் அவர் பல வருடங்களாக
அமெரிக்க நாசா விண்வெளி மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானியாக வருவார். பல
ஆண்டுகளுக்குப் பின் சிறுவயதில் தன்னை வளர்த்த உறவுக்காரப் பெண்ணைப்
பார்ப்பதற்காக தன் குக்கிராமத்திற்கு வருவார்.
நவீன
வசதிகளுக்கும் சுகங்களுக்கும் பழகிப்போன அவர், தன் குக்கிராமத்திற்கு
கேரவன் என்றழைக்கப்படும் வீடு போன்று எல்லா வசதிகளும் கொண்ட வண்டியிலேயே
வருவார். அவ்வண்டியில் குளிர்சாதன வசதியோடு படுக்கையறையும், குளியலறையும்
இருக்கும். பல அட்டை பெட்டிகளில் குடிப்பதற்கு மினரல் வாட்டர் பாட்டில்கள்
இருக்கும். குடிப்பதற்கு மறந்தும் வேறு தண்ணீரை உபயோகிக்க மாட்டார். அந்த
கிராமமும், கிராம மக்களின் எளிமையும், கஷ்டங்களும் அவரை எப்படி படிப்படியாக
மாற்றி, ஒரு விஞ்ஞானியாக அந்த கிராமத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று
அந்த கிராமத்திலேயே தங்கிவிடுவதுதான் கதை.
அவரில்
முதன்முதலாக ஏற்படும் மாற்றத்தை இயக்குநர் உணர்வு கொந்தளிப்போடு
அறிவுபூர்வமாக சொல்லுவார். தன் உறவுக்கார பாட்டிக்குச் சேரவேண்டிய
குத்தகைப் பணத்தை பெறுவதற்காக வேறொரு கிராமத்தில் இருக்கும் ஒரு
விவசாயியின் வீட்டுக்குச் செல்வார். அந்த விவசாயியின் நிலைமை பரிதாபமாக
இருக்கும். அந்த விவசாயி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அன்றிரவு
அந்த விவசாயி வீட்டிலேயே உணவுண்டு அங்கேயே தங்கிவிடுவார். அப்போது விவசாயி
தன்னால் ஏன் இத்தனை ஆண்டுகளாக குத்தகைப் பணத்தை தரமுடியவில்லை என்பதை
கதையாகச் சொல்வார். அந்த ஒருசில நிமிட கதையில், இந்திய கிராமங்களின் ஏழை
விவசாயியின் நிலைமையை அற்புதமாக கொண்டுவருவார்.
பணத்தை
வசூல் செய்ய வந்த ஷாருக்கான் விவசாயியின் கதை கேட்டு நெகிழ்ந்து போய்
அடுத்த நாள் காலை தன் கையில் உள்ள பணத்தை விவசாயியிடம் தந்துவிட்டு,
கட்டுமரப் படகில் ஏறி ரயில் நிலையத்துக்குத் திரும்புவார். அவருக்குள்
ஏற்படும் முதல் மாற்றத்தை அமைதியாக, சிந்தனைவயப்பட்ட முகத்தோடு கட்டுமரப்
படகில் வரும் ஷாருக்கானின் முகத்தில் பார்க்கலாம். பின், ஒரு ரயில்
நிலையத்தில் தன் கிராமத்திற்குத் திரும்ப ரயில் ஏறுவார். ரயில்
பிளாட்பாரத்தில் ஒரு ஏழை கிராமத்து சிறுவன், சிறுமண் குவளையில் குடிதண்ணீரை
“25 பைசா... 25 பைசா...’’ என்று கூவி விற்றுக்கொண்டிருப்பான். அவனையே
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் ஷாருக்கான் அவனை அழைத்து காசு கொடுத்து
ஒரு குவளை நீரை வாங்கி மெதுவாக ஒன்றிப்போய்க் குடிப்பார்.
சமீப
ஆண்டுகளில் இந்திய சினிமாவில் என்னை ரொம்பவே நெகிழச் செய்த காட்சி இது.
ரயில் புறப்படும். ஜன்னல் வழியே அற்புதமான இசைப்பின்னணியோடு அந்த சிறுவனையே
ஷாருக்கான் பார்த்துக்கொண்டிருப்பார். அவர் கண்களில் ஈரம் அதிகமாவதை
க்ளோசப் காட்சியில் நம்மால் பார்க்க முடியும். பார்வையாளனை நெகிழச்
செய்யும் இக்காட்சியின் அழுத்தம், சினிமாவால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று.
இந்த அழுத்தத்தை வெளிக்கொணரக் கூடிய சக்திநிலை சினிமாவுக்கு மட்டுமே
உரித்தான ஒன்று.
சிறுகதைகளில், புதினங்களில், கவிதைகளில்
இதுபோன்ற நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் இல்லையா என்று சிலர் கேட்பது என்
காதுகளில் விழுகிறது. இலக்கியங்களில் அப்படிப்பட்ட தருணங்கள் இருக்கலாம்.
ஆனால் அங்கு வெளிப்படும் சக்திநிலை வேறு, சினிமாவில் வெளிப்படும் சக்திநிலை
வேறு.
அற்புதமான
சிறுகதை, கவிதை படிப்பதின் உணர்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்வது போன்ற
ஒரு காட்சி சத்யஜித்ராயின் ‘அபராஜிதா’ படத்தில் உண்டு. படத்தின் நாயகன்
அப்பு கல்லூரி மாணவன். விதவைத்தாய் தனியாக கிராமத்தில் இருப்பார். அப்புவோ
கல்கத்தாவில் பகலில் கல்லூரி படிப்பும், இரவில் வேலை செய்வதுமாக இருப்பான்.
விடுமுறையில் மகனின் வருகைக்காக தாய் ஏங்கிக் கிடப்பாள். அப்புவோ வேலை,
படிப்பு காரணமாக தாமதமாக வருவான். வந்தவனும் இரண்டே நாட்களில் கல்கத்தா
திரும்பவேண்டும் என்பான். தாய்க்கோ மகன் இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கக்
கூடாதா என்கின்ற தவிப்பு. கிளம்புவதற்கு முந்திய இரவு அப்பு தாயிடம்
விடியற்காலையில் தன்னை எழுப்பும்படியும், முதல் ரயில் பிடித்து கல்கத்தா
செல்லவேண்டும் என்றும் கூறுவான். தாயின் முகத்தில் மீண்டும் சோகம்.
மகனோடு
எப்போதுதான் ஆசைதீர இருக்கப் போகிறோம் என்கின்ற ஏக்கம். தனக்கு உடல்நிலை
அவ்வளவாக சரியில்லை என்றும், படித்து முடித்தவுடன் கல்கத்தாவுக்கே தன்னை
அழைத்துக் கொள்வாயா? என் உடல்நிலையை பார்த்துக் கொள்வாயா என்று ஏதேதோ
சொல்லிக் கொண்டிருப்பாள். அரைகுறை தூக்கத்தில் அதைக் கேட்டுக்கொண்டு அப்பு
அப்படியே உறங்கிப்போவான். அடுத்த நாள் காலை விடிந்தும்
உறங்கிக்கொண்டிருக்கும் மகனை எழுப்ப மனமில்லாமல் தாய் பார்த்துக்
கொண்டிருப்பாள். அப்போது விழித்தெழும் அப்பு ஏன் எழுப்பவில்லை என்று
கத்திக்கொண்டே அரக்கப்பரக்க கிளம்பி, தாயிடம் சரிவர விடை பெறாமல்
கிளம்புவான். இக்காட்சியில் ‘பாவிப்பயலே தாயோடு இன்னுமொரு நாள்
இருந்துவிட்டு போனால்தான் என்ன?’ என்று பார்வையாளனின் மனம் கதறும். மகன்
நடந்து செல்வதையே தாய் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பாள். அப்பு இப்போது
ரயில்வே ஸ்டேஷனில் பெட்டி படுக்கையோடு ரயில் வருகைக்காக காத்திருப்பான்.
‘இப்படி கல்நெஞ்சக்காரனாக இருக்கிறானே’ என்று இப்போதும் பார்வையாளன் மனம்
கதறும். ரயில் தூரத்தில் வரும். அப்பு பெட்டி படுக்கையோடு எழுந்து
நிற்பான். ரயில் வருகை சப்த பின்னணியில் அப்புவின் முகம் கவிழ்ந்து எதையோ
யோசிக்கும். அங்கு வெட்டப்படும் காட்சி, நேராக அப்புவின் கிராம
வீட்டுக்குச் செல்லும். வீட்டு வாசலில் நின்றுகொண்டு அப்புவின் தாய்
தொலைதூரத்தில் செல்லும் ரயிலை வார்த்தைகளில் விவரிக்க முடியாத மனவலியோடு
பார்த்துக்கொண்டிருப்பாள்.
க்ளோசப்பில்
அவள் முகத்தில் அப்போது திடீரென ஒரு மலர்ச்சியும் புன்னகையும் மலரும்.
பார்வையாளன் குழம்பும்போதே அவள் வாய் “அப்பு...’’ என உச்சரிக்கும். ஆமாம்.
தூரத்தில் அப்பு பெட்டி படுக்கையோடு வீட்டைநோக்கி வந்துகொண்டிருப்பான்.
வேண்டுமென்றே ரயிலை தவறவிட்டு அம்மாவைப் பார்க்க அப்பு
வந்துகொண்டிருப்பான். அடக்கமுடியாத ஆச்சர்யத்தோடு நிற்கும் அம்மாவைப்
பார்த்து அப்பு சொல்வான் “ரயிலை தவறவிட்டு விட்டேன்.’’ “இதனால் ஏதும்
பிரச்சினை இல்லையா?’’ என்று அம்மா கேட்பாள். “ஒன்றுமில்லை. நாளை
போய்க்கொள்ளலாம்’’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அப்பு சிரிப்பான்.
இதுபோன்ற ஒரு விவரணை. எந்த சிறுகதை எழுத்தாளராலும், கவிஞராலும் முடியாத
ஒன்று இது. சினிமாவால், சினிமா இயக்குநரால் மட்டுமே முடிகின்ற ஒன்று.
இதுபோன்றதொரு
சக்திநிலை வெளிப்பாடு என்பது கதைப்படங்களில் மட்டும்தான் நிகழவேண்டும்
என்றில்லை. ஆவணப்படங்களில் கூட இத்தகைய தருணங்களைப் பார்க்கலாம்.
பஞ்சத்தில் வாடும் எத்தியோப்பிய குழந்தைகளின் பசியைப் போக்க உலக அளவில்
நிதி திரட்ட ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட
அப்படம் பார்ப்போரின் மனதைப் பிழியும்.
ஒரு தடித்த பெண்மணி (தன்னார்வத் தொண்டர்)
ஒரு பெரிய பாத்திரத்தில் உணவை வைத்துக்கொண்டு, வரிசையில் வந்து வாங்கும்
குழந்தைகளுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். மிட்ஷாட்டில் அப்பெண்மணியின்
முகத்தில் தாய்க்கே உரிய ஒரு கருணை. அவள் கை ஒவ்வொரு முறையும் அகன்ற ஆழமான
பாத்திரத்தில் உள்ளுக்குச் சென்று உணவை எடுக்கிறது. ஒவ்வொரு குழந்தையாக
உணவை வாங்கி செல்கிறது.
அவ்வப்போது
அவள் தன் வலது பக்கம் பார்க்கிறாள். கண்களில் அவளுக்கு நீர் கோர்க்கிறது.
பாத்திரத்தின் அடிக்கு அவள் கை செல்கிறது. கிட்டத்தட்ட சுரண்டி எடுத்து
உணவை தட்டோடு நிற்கும் குழந்தைக்கு தருகிறாள். மீண்டும் அவள் பக்கவாட்டில்
பார்க்கிறாள். கண்களில் நீர் முட்டித் தெறிக்கிறது. அப்படியே கேமரா
நகர்ந்து பாத்திரத்தின் உள்ளே காண்பிக்கிறது. பாத்திரத்தில் சிறிதளவு உணவே
உள்ளது. கேமரா மேல்நோக்கி வந்து அவள் முகத்தை க்ளோசப்பில் காட்டுகிறது.
அவள் கண்களில் நீர் தாரையாய் வடிகிறது. அவள் பக்கவாட்டில் பார்க்க,
காமிராவும் நகர்ந்து பக்கவாட்டில் காண்பிக்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான
குழந்தைகள் நீண்ட வரிசையில் தட்டோடு உணவுக்காக காத்து நிற்கின்றனர்.
இப்போது புரிகிறது அவள் ஏன் கண்ணீர் வடிக்கிறாள் என்று. இருக்கும் கொஞ்சம்
உணவை எப்படி இத்தனை குழந்தைகளுக்கு தரப் போகிறோம் என்ற எண்ணமே அவளுக்குக்
கண்ணீரை வரவழைக்கிறது. அப்படியே அக்காட்சி மங்கலாகி, “குழந்தைகளின் பசி போக்க தாராளமாய் நிதி உதவி செய்யுங்கள்’’ என்ற வாசகம் வருகிறது. பல நூறு பக்கங்கள் சொல்ல முடியாத விஷயத்தை இந்த இரு நிமிட படம் சொல்கிறது. இதுதான் சினிமா. சினிமாவின் சக்தி.
-எம்.சிவக்குமார்
0 comments:
Post a Comment