Monday, December 26, 2011

தூக்கிலிடப்பட்டதால் மட்டுமே நாங்கள் கொல்லப்படவில்லை


தற்கால இந்திய மறுகாலனியாக்கச் சூழலில் பகத்சிங் மற்றும் அவனது தோழர்களின் வாழ்நாள் நடவடிக்கைகளை மறுவாசிப்புக்குட்படுத்திய போது  அவர்களது காலம் உறைந்துப் போயிருந்ததை அவதானிக்க முடிந்தது. அவர்கள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாகத்தான் வரலாறு கற்பிக்கிறது. ஆனால் ‘அவர்கள் சாகும்வரை தூக்கிலிடப்படவில்லை. தூக்குக் கயிறு இறுகிய நிலையில் மயக்கமடைந்த அவர்களது உடல்கள் ஒரு ட்ரக்கில் ரகசியமாகக் கடத்தப்பட்டு, லாலா லஜபதிராயைத் தாக்கிய பிரிட்டிஷ் அதிகாரியின் கைத்துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டே உயிரிழந்தார்கள்..’ என அண்மையில் உலவும் தகவல்கள் அந்த உறைந்தக் காலத்தில் சலனத்தை ஏற்படுத்தியதன் விளைவே இப்பிரதி.

ஒருநபர் அரங்காக இது பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘மூன்றாம் அரங்கு’ சார்பில் கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கி நடித்து தயாரித்துவருகிறார்.

லாகூர் மத்தியச்சிறை. செல் எண்: 14. இருள் படர்ந்து கிடக்கிறது. செல்லுக்கு வெளியே சிறைக்காவலர்களின் பூட்ஸ் சப்தங்களிடையே விசில் ஒலி கேட்கிறது. சிலநேரங்களில் வேகமாக ஓடும் பூட்ஸ் ஒலிகளுக்கிடையேயும் விசில் ஒலிகளுக் கிடையேயும் சித்திரவதை ஒலிகளும் எதிரொலிக்கின்றன. திடீரென்று சிறைச்சாலையின் டார்ச் விளக்கிலிருந்து ஒளி சுழல்கிறது. செல் எண்:14ல் சுழல் ஒளி யாரையோ தேடுவதுபோல் சுழல, சங்கிலியால் பிணைக்கப்பட்ட பகத்சிங் அந்தச் சுழல் ஒளியிலிருந்து தப்பிக்க தாவித்தாவி பம்முகிறான். எழுதப்பட்ட காகிதங்கள் தரையில்  சிதறிக் கிடக்கின்றன. சுழல் ஒளியில் மறைந்து மறைந்து காகிதங்களை சேகரிக்கிறான். ஒளி அவனையும் அவனது அடையாளங்களையும் தேடிக்கொண்டே இருக்கிறது. இந்தக் கண்ணாமூச்சி விளை யாட்டில் யாரும் வெற்றி யடையவில்லை. எழுதிய தாள்களை மறைக்கிறான். சுழல் விளக்கு சிறிதுசிறிதாக அமைதியடைகிறது. மேடையில் மெல்ல ஒளி பரவுகிறது. பின்னணியில் வலதுமூலையில் ஒரு இராட்டையிலிருந்து வளரும் கயிறு மேலேறி மூன்று தூக்குக்கயிறுகளாகத் தொங்குகின்றன. இடதுபுறம் கைதி படுக்கும் கயிற்றுக் கட்டில். ஒரு தட்டு, ஒரு குவளை இருக்கிறது. ஓரத்தில் மலஜல மறைப்பு தெரிகிறது. பகத்சிங் அமர்ந்து தாள்களில் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

பகத்சிங் போராளி  மட்டுமல்ல. நல்ல வாயாடி. தனது பன்முகப்பட்ட சிந்தனை களை ஒலி ஏற்றஇறக்கங்களுடன் அதற்கேயுரிய உடல்மொழியுடன் உற்சாகமாக வெளிப் படுத்துபவன். சிறையில் சுய வரலாற்றினை ரகசியமாக எழுதிக் கொண்டிருக்கிறான். தனது இனிய தோழன் சுகதேவ் பற்றிய சிந்தனைகளே முதலில் தோன்றுகின்றன. அது குறித்துச் சிந்திக்கிறான். எழுதுவதை நிறுத்திவிட்டு, எழுதிய தாளை உற்று நோக்கி, சுகதேவ் தன் எதிரில் நிற்பது போலவும் அவனை நண்பன் என்ற வகையில் பகடி செய்யும் உடல்மொழியுடனும் பகத்சிங் பேசத் தொடங்குகிறான்).

சுகதேவ் நீ கோழையாடா? 23 வயசுகூட இன்னமும் நிரம்பல. அதற்குள்ள உன் வீரமெல்லாம் தீர்ந்துருச்சா?

இது ஒரு வெறுக்கத்தக்க குற்றம். அதுமட்டுமல்ல, முற்றுமுழுதான கோழைத்தனம். நீயும் இதை ஏற்றுக்கொள்வாய் என்றே நினைக்கிறேன், உனக்குத் தெரியும் நான் சுடப்பட்டு களத்தில் சாகத்தான் விரும்புகிறேன் என்று. உனக்கும்கூட அப்படித்தான் விருப்பம். தூக்குக்கயிறை முத்தமிடுவதுதான் விதிக்கப்பட்டது என்பதை சோகத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரலாற்றில் எதுவும் நிகழக்கூடும் நண்பனே! அது மறைக்கப்பட்ட வரலாறாக இருந்துவிடுமோ என்பதுதான் நாளைய இந்தியாவின் கவலை.

‘சுரண்டுபவர்கள் ஒருசிலரேயானாலும் அவர்களும் இல்லாமல் போகும்வரை நம் உயிரையும் கொடுத்துப் போராடுவோம்.’ இப்போது நினைவு வருகிறதா சுகதேவ்? ‘உயிரையும் தியாகம்’ செய்வோம். உயிரை‘யும்’ என்றுதான் கூறினோம். தாய்நாட்டுக்காக உயிரை அர்ப்பணிக்கும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் ஆட்சியாளர்கள் திணிக்கும் எந்த சித்திரவதைகளையும் ஏற்போம் என்பதுதானே இதன் அர்த்தம்? இப்போது மட்டும் ஏன் பயப்படுகிறாய்?

சித்திரவதையிலிருந்து தப்பிக்க... தற்கொலை? தற்கொலை செய்துகொண்டால் சித்திரவதை யிலிருந்து தப்பிக்கலாம்? அதோடு தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ததாகவும் ஆயிற் றில்லையா? (வெறுப்புடன்) எப்படி, இப்படியெல்லாம் சிந்திக்கிறாய் என்று எனக்குப் புரிய வில்லை. தூக்குமேடை அல்லது தற்கொலை. சிறைக்கு வெளியில் மட்டும் உன் கொள்கை களுக்கு ஏற்ற சூழ்நிலையா நிலவுகிறது? அங்கு மக்கள் நிலை பற்றிச் சிந்தித்தாயா? (பேசிக் கொண்டிருக்கும் போது பகத்சிங் முகத்தில் மட்டும் டார்ச் விளக்கு ஒளி தெரிக்கிறது. எழுதிய தாள்களை மறைத்துப் பதுங்குகிறான். டார்ச் ஒளி அகல்கிறது.)

(மெல்ல மேடையில் ஒளி பரவ) (நண்பனை ஆசுவாசப்படுத்துவது போல்) சுகதேவ்! உனக்கு இது தெரியுமா? சின்னப்பிள்ளை முதலே நான் என்னைப்பத்தி வருத்தமோ கவலையோ அடைந்ததில்லை. எப்போதுமே நான் ஏன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. தூக்குமேடையையும் அதே உற்சாகத்துடன்தான் சந்திக்கப் போகிறேன். என் நண்பனே, அதற்காக அதைப் புனிதப்படுத்தும் காரியத்தைச் செய்யமாட்டேன். யாரும் அத்தகைய நடவடிக்கையில் இறங்கிவிடக்கூடாது என்றே விரும்புகிறேன். ஆனாலும் இந்த வாழ்க்கையை முழுமையாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாழ வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். ஆமாம் மரணத்தின் வாசலிலும் (உற்சாகமாக) வாழ்க்கையைச் சுவைக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு சொட்டாக மரணத்தைச் சுவைப்பதன் மூலம் என் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க விரும்புகிறேன். ஆம்... (உறுதியான குரலில்) ஒவ்வொரு சொட்டாக... ஒவ்வொரு சொட்டாக.

(மேடையில் இருள். சுழல் விளக்கு ஒளி மேடையில் மீண்டும் துழாவுகிறது. அதிலிருந்து தப்மித்துத் தப்பித்து தரையில் சிதறிக் கிடக்கும் தாள்களைச் சேகரிக்கிறான். எழுதிய தாள்களை வாசித்துப் பார்க்கிறான். அதில் அதிருப்தியடைந்த முகபாவம் வெளிப்படுகிறது. உடனே பார்வையாளர்களிடம்...)

உண்மையில் ஒருவன் தனது சுய வரலாற்றை எழுதுவது மிகவும் கடினமாக இருக்கின்றது. அதுவும் 23 வயதுகூட நிரம்பாத பொடியனுக்கு என்ன அனுபவங்கள் இருந்துவிட முடியும். இல்லையா? பிறப்பு - இறப்பு இந்த இரண்டுக்குமிடையேதான் என்னை ஒரு போராளி என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் நான்... ஒளி மறுக்கப்பட்ட இந்தத் தனிமைக் கொட்டடியில் கையகலத் தாள்களில் எழுதியெழுதி ரகசியமாகப் பாதுகாக்க வேண்டும். அதன் பிறகு இதை ரகசியமாகக் கடத்தவேண்டும். உண்மையில் எனது பள்ளித்தோழன் ஜெய்தேவும், எனது தம்பி குல்தாரும் கடத்தல் மன்னர்கள்தான். (உற்சாகமாக அங்குமிங்கும் ஓடி, தான் பதுக்கி வைத்தி ருந்த புத்தகங்களை எடுத்துவந்து ஒவ்வொன்றாகக் கீழே போடுகிறான்) இதோ பார்... இவை தான் எனக்காக கடத்தி வரப்பட்டவை. இவைதான் இன்று என்னை புதிய மனிதனாக்கிக் கொண்டிருப்பவை. புத்தகங்கள். (கீழே சிதறிக்கிடக்கும் புத்தகங்களின் தலைப்புகளை வாசிக்கி றான்) உண்மையில் இந்த எழுத்துக்களின் ஊடாகத்தான் நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன்.

(பார்வையாளர்களிடம்) புகாரின், பகுனின், ட்ராட்ஸ்கி, மாக்சிம் கார்க்கி, தாஸ்தோவெஸ்கி, சார்லஸ் டிக்கன்சன், லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் என என் சிறைவாழ்க்கை முழுவதும் சீரிய வாசிப்புடன் கழிகிறது. எழுத்துக்களின் மூலமாகவே இந்த வாழ்க்கையை ருசித்துக் கொண்டிருக்கிறேன். எனவே, எனது எழுத்துக்கள்தானே எனது வாழ்க்கையைக் கூற முடியும்? (இப்போது மட்டும் முகம் வாட்டமடைகிறது) என் கதையைக் கூறும் இந்த ரகசிய எழுத்துக் களுக்கு முதல் வாசகனாவது இருப்பானா? இங்கிருந்து கடத்தப்பட்டு ஒரு வாசகனைச் சந்திக் கும்வரை இக்காகிதங்கள் எத்தகைய அபாயகரமான பாதைகளைக் கடக்க வேண்டியிருக்குமோ? பூட்ஸ் கால்களில் மிதிபட்டு, மலக்குழிகளுக்கருகில் பாதுகாக்கப்பட்டு, நீரையும் நெருப்பையும் கடந்து இந்த எழுத்துக்கள் தப்புமா? இதோ இங்கு சிதறிக் கிடக்கும் புத்தகங்களில் ஒன்றாக எதிர்காலத்தில் அமையுமா? (சிரிக்கிறான்) எவ்வளவு பெரிய பேராசை எனக்கு. (மீண்டும் அதே பகடிக்குரலில்...) இல்லை யாருமே வாசிக்காத, யாருக்குமே வாசிக்க வாய்க்காத கடைசி எழுத்தைத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

(சங்கிலிகளை விடுவித்து நடந்து வந்துகொண்டே... பார்வையாளர்களை நோக்கி) நான் ஒரு உற்சாகப் பேர்வழி. நான் பிறந்த மண் உற்சாகத்தின் ஊற்று. உலகில் வேறு எங்கும் காண முடியாத நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் என் மக்கள். வீரம், நகைச்சுவை உணர்வு, ஆட்டம் பாட்டம் இவை நான்கும் இல்லாமல் நாங்கள் இல்லை. பாங்க்ரா, சல்சா எங்கள் மூச்சோடு கலந்தவை. உலகம் முழுவதும் பஞ்சாபிச் சீக்கியர் எங்கிருந்தாலும் அங்கு இவை நான்கும் இருக்கும். எனவேதான் நான் உற்சாகப் பேர்வழியாக இருக்கிறேன்.

எனது பயணமென்பது எனது முதல் அரசியல் குருவான சரபா முதல் இப்போது நான் கடந்து கொண்டிருக்கும் விளாடிமிர் இலியிச் லெனின் வரை நீள்கிறது. சரபா, லெனின் இருவரையுமே நேரில் சந்திக்க நான் கொடுத்து வைக்கவில்லை.

நான் அப்போது மிகவும் சின்னப்பையன். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். தினசரி உற்சாகமாகப் பள்ளிக்குச் செல் வேன். (விளையாட்டுத்திடலில் ஓடும் மாணவன்போல் துள்ளி ஓடி) ஆமாம் உற்சாகமாக. பள்ளி செல்லும் பாதையில் மட்டுமே உற்சாகமாகச் செல்வேன். வகுப்பறையில் உற்சாகமாக இருந்தேனா இல்லையா என்பது நினைவில் இல்லை. பள்ளி செல்லும் அந்தப் பாதை எனக்கு மிகவும் பிடிக்கும். என் கிராமத்து மண்கட்டிகள் ரொம்ப அழகாக இருக்கும். வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிட்டபடி பறந்து கொண்டே இருக்கும். (வண்ணத்துப்பூச்சிகளின் பின்னால் ஓடி பிடிப்பதுபோன்று) அவற்றைப் பிடித்துப் புத்தகப்பைக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொள்வேன். (மிகவும் முதிர்ச்சியான குரலில்) இப்படிப் பாதுகாக்கும் இந்த விளையாட்டு என் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படியான சின்னப்பையனாக நான் இருந்த போதுதான் 1915 நவம்பர் 16-17 தேதிகளில் ஏழு கத்தார் புரட்சியாளர் களை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு தூக்கிலிட்டது. இவர்களில் ஒருவன்தான் அப்போது 19 வயதுகூட நிரம்பாத கர்தார் சிங் சரபா. அவன் என்னைவிடக் கொடுத்துவைத்தவன் இல்லையா? நான் 23 வயதுவரை அந்தப் பாக்கியத்துக்காக காத்திருக்க வேண்டியிருக்கி றது. (காற்சட்டைப்பையில் அங்குமிங்கும் துழாவி ஒரு புகைப்படத்தை எடுத்துக்காட்டுகிறான்) இவன்தான் சரபா. (உரத்தக்குரலில்) "அந்நியரோ, சொந்த நாட்டவரோ, இணைந்தோ, தனியாகவோ, தொழிலாளர்களையும், நமது மக்களது ஆதாரங்களையும் சுரண்டுபவர்கள் ஒருசிலர் மட்டுமே இருந்தாலும் அவர்கள் இருக்கும்வரை நமது போராட்டம் தொடர வேண்டும். இப்பயணம் எந்த சக்தியாலும் தடைபடக் கூடாது" என்று சரபா கூறியிருக்கிறான். சரபாவின் புகைப் படத்தை எப்போதுமே நான் என்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது நான் என்னைப்பற்றியே மீண்டும் கூற விரும்புகிறேன். லாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த என் மூதாதையர்கள் ஒரு கால கட்டத்தில் தற்போதைய ஜலந்தர் பகுதிக்கு குடி பெயர்ந்தனர். அங்கே கோட்டைகள் நிறைந்த பங்கா என்ற நகரம் இருந்தது. இதை நவன் சாகர் என்றும் அழைப்பர். நவன் சாகர் என்றால் புதிய நகரம் என்று பெயர். இங்கு அவர்கள் எப்படி குடிபெயர்ந்து வந்தார்கள் என்பதற்கும் என் தாத்தா ஒரு கதை சொல்லுவார்.

முகலாயர் ஆட்சிக்காலத்தில் என் முன்னோர்களில் ஒருவர் தமது மூதாதை ஒருவரின் சாம்பலை ஹரித்துவாரில் ஓடும் கங்கையில் கரைக்க பயணம் செய்தாராம். வழியில் முன்னர் கூறிய ‘பங்கா’ நகரக் கோட்டை அரண்மனையில் இரவு தங்கியுள்ளார். அவரது பணிவு, ஒழுக்கம், அழகு ஆகியவற்றில் அங்குள்ள இளவரசி மயங்கிவிட்டாள். இதை அறிந்த கோட்டைத்தலைவரும் தனது மகளை அந்த இளைஞ னுக்கே திருமணம் செய்துவைத்தார். மாப்பிள்ளைச் சீராக ஒரு கோட்டையையும் வழங்கினார். அதுமுதல் அக்கோட்டையில் வாழ்ந்து வந்த மூதாதையர்கள் திவானாகவும் மன்னர் ரஞ்சித் சிங் வம்சத் தினரின் சீக்கியப்படையினராகவும் இருந்துவந்தனர். இந்நிலையில் இந்தியாவை படிப்படியாக ஆக்கிரமித்து வந்த ஆங்கிலேயர்கள் பஞ்சாப் மண்ணுக்குள்ளும் ஊடுருவினர். இதை மன்னர் ரஞ்சித்சிங் கடுமையாக எதிர்த்தார். அவரோடு திவான்களும் பாதிக்கப்பட்ட விவசாய மக்களும் இணைந்து எதிர்த்தனர். 1857 சிப்பாய்க் கலகம் வெடிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே பஞ்சாப் மண்ணில் விடுதலைப்போர் இவ்வாறு வெடித்துவிட்டது. இதுவே சீக்கியப் போர்கள் என்று அழைக்கப்படுகிறது. இதில் என் கொள்ளுப்பாட்டனார் முக்கியமாக ஈடுபட்டார். இறுதியில் ஆங்கிலேயர் வெற்றிபெற்றனர். இதனால் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த மானியக்காரர் பொறுப்பை ஆங்கிலேய அரசாங்கம் தன்னிச்சையாக பறித்துக் கொண்டது.

1858ல் மீண்டும் சீக்கியர்கள் நடத்திய கூகா போராட்டம் விடுதலைப் போரில் முக்கியமானது. இதுதான் நாட்டின் முதல் ஒத்துழையாமை இயக்கம். அந்நியப் பொருட்களை புறக்கணித்தல், அரசு, நீதிமன்றம், கல்வி நிலையங்களை புறக்கணித்தல் என்ற முழக்கங்களை கூகா இயக்கம் முன்னெடுத்துச் சென்றது. அது மட்டுமல்லாமல் இந்த இயக்கமானது ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக உருவாகி வளர்ந்தது. இதனால் ஏகாதிபத்தியத்தின் வயிறு பற்றி எரிந்தது. 1872ல் 65 கூகா வீரர்களை பீரங்கியின் வாயில் கட்டி வெடிக்கச் செய்த பிறகுதான் வெள்ளை ஏகாதிபத் தியத்தின் பெருவயிறுகள் குளிர்ந்தன. பின்னர் 50 ஆண்டுகள் கழித்து இதன் வீரியத்தை புரிந்துகொண்ட காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம் என்ற போராட்ட வடிவமாக இதை கையிலெடுத்தது.

தொடர்ந்து பஞ்சாபில் நடைபெற்ற போராட்டங்களைப் பற்றியும் நான் கூறியாக வேண்டும். இப்பகுதியில் 20 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள பாசனக்கால்வாய் ஒன்றை பிரிட்டிஷ் அரசு தங்களது தேயிலைத் தோட்டங்களுக்காக வெட்டியது. இதற்காக பல்வேறு ஆசைவார்த்தைகளைக் கூறி பஞ்சாப் மக்களின் உழைப்பை உறிஞ் சியது. பின்னர் அந்தக் கால்வாய் நீரை எம்மக்கள் பாசனத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள சிறிதுகாலம் மட்டும் அனுமதித்துவிட்டு திடீரென்று கால்வாய் நீரைப் பயன்படுத்துவதற்கு வரி விதித்தது. அது தான் 1906 பஞ்சாப் காலனி சட்டமாகும். இந்த வயிற்றிலடிக்கும் சட்டத்திற்கு எதிராக விவசாய மக்கள் வெகுண்டு எழுந்தனர். என் சொந்தநாட்டுத் தண்ணீருக்கு வரிவிதிக்க நீ யாரடா? என்ற கோபம் மக்கள் மனதில். இப்படிப்பட்ட வீரஞ்செறிந்த போராட்டக்களத்தில் எனது தாத்தா, அப்பா, சிற்றப்பாமார் முன்னிலையில் இருந்தனர் என்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், இந்தப் போராட்டக்களத்தின் நடுவில் தான் என் அப்பா சிறையிலிருக்க, சிற்றப்பாமார் நாடு கடத்தப்பட்டிருக்க நான் 1907 செப்டம்பர் 27அன்று பிறந்தேன். (பகத்சிங்கின்  நினைவுகள் பால்ய காலத்திற்குள் மூழ்குகிறது)

நான் பிறந்தபோது பஞ்சாப் காலனி சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட எனது தந்தை சிறைபிடிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன். இப்போது எனது சிற்றப்பா அஜித் சிங் கதைக்கு வருகிறேன். அந்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்டும் பணியில் சிற்றப்பா ஈடுபட்டார். இதற்காக லாலா லஜபதி ராயின் ஆதரவை பெறுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அந்தக்கால காங்கிரஸ்காரரான லஜபதிராயை ஒரு மக்கள் போராட் டத்திற்கு தலைமை ஏற்கச் செய்வது சிரமமாகத்தான் இருந்தது. முதலில் லாலா லஜபதிராய் இந்தப்போராட்டத்தை வரவேற்கவில்லையாம். அவரை சமாதானப்படுத்தி அவருக்கு புரிதலை ஏற்படுத்தும் முயற்சியில் சிற்றப்பாதான் ஈடுபட்டு வெற்றியும் அடைந்துள்ளார். மேலும் சட்டத்தின் பாதக அம்சங்களை விவசாய மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளச் செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார். இதற்காக ‘பாரதமாதா’ கோயில்களை ஊர்ஊராக உருவாக்கியுள்ள னர். இந்தக் கோயில்களில்தான் பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளன. லாகூர் பொதுக்கூட்டம் மகத்தானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அக்கூட்டத்தில் திரண்டிருந்தனர். சிற்றப்பா அஜித்சிங் மதில்சுவர் மீது ஏறி நின்று இரண்டு மணி நேரம் மக்களிடம் பேசியுள்ளார். அது விவசாயிகள் ரத்தத்தைச் சூடேற்றும் பேச்சாக அமைந்தது. அப்போது அவர் பாடிய ஒரு கவிதையைக் கேளுங்கள்.

ஓ ... விவசாயிகளே
உங்கள் சுயமரியாதைகளைக் காப்பாற்றுங்கள்
உங்கள் பயிர்களெல்லாம் பூச்சிகளால் நாசப்படுத்தப்படுகின்றது
வேதனைகளில் வாடுகிறீர்கள்
பஞ்சம் பலரை பலிகொண்டுவிட்டது.
உங்களைச் சார்ந்தோர் வலியில் கண்ணீர் வடிக்கிறார்கள்
மானியக்காரர்களும்- பகதூர்களும் உங்கள் தலைவர்களென
பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் உங்கள் மீதான சுரண்டல் வலைகளை 
அவர்கள்தான் பின்னுகிறார்கள்
இந்திய தேசம் உங்கள் கோயில்
நீங்கள் வணக்கத்துக்குரியவர்கள்
எவ்வளவு காலம் சோம்பலாய் கிடக்கப்போகிறீர்கள்?
சாவதற்கு அணியமான போருக்குத் தயாராகுங்கள்
கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை 
எதிர்கொள்ள அணியமாகுங்கள்
உங்கள் தேசத்தை நேசியுங்கள்
எச்சரிக்கையாகவும் அச்சமின்றியும் அடியெடுத்து வையுங்கள்
கோழைத்தனத்தை முறியடிக்க வேண்டுமென 
உங்கள் தாய்நாடு வேண்டுகிறது.
ஒன்றாய் இணைந்து சவால்களை எதிர்கொள்ளுங்கள்
கைகளைக் கோர்த்தவாறு
பலம் பெற்ற முன்னணியை உருவாக்குங்கள்
ஓ... விவசாயிகளே
உங்கள் சுயமரியாதைகளைக் காப்பாற்றுங்கள்.

பாங்கிதயை என்ற புரட்சிக்கவிஞன் எழுதியப் பாடல் இது. இதைப் பாங்கிதயை பாடியிருந்தாலும்கூட இவ்வளவு உணர்ச்சிகரமாக இருந் திருக்காதாம். அந்தளவுக்கு என் சிற்றப்பா உணர்ச்சிகரமாக பாடி யுள்ளார். அவர் பாடிய ஒவ்வொரு வரியும் பஞ்சாப் முழுவதும் எதிரொலித்துள்ளது. அவரது இந்த ஆவேசப்பேச்சு லஜபதிராய்க்குப் பிடிக்கவில்லை. இதனால் போராட்டத்தை கண்டும் காணாமல் இருந்துவிட்டார். அஜித்சிங்தான் கைவிளக்கை எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாகச் சுற்றியுள்ளார். ஒவ்வொரு கிராமத்திலும் ஆதர வாளர்கள் உருவாயினர்.  அது மிகப்பெரிய இயக்கமாக கிளை விரித்தது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக ராணுவம் மற்றும் காவல்துறையில் உள்ள இந்தியர்களும் களமிறங்க வேண்டும் என்று போராட்டத் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். அவ்வாறு வெளியேறிய ராணுவ ஜவான்களும், போலிசாரும் மக்கள் நடத்தும் வரிகொடா இயக்கப் போராட்டத்திற்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என்றனர். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
லஜபதியால் தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டிருக்க முடிய வில்லை. மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இதையொட்டி ராவல்பிண்டியில் லஜபதிராய் பேச ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் கூட்டம் தடைசெய்யப்பட்டது. இதை முன் உணர்ந்த அஜித்சிங் ராவல்பிண்டி ரயில் நிலையத்தையே பொதுக்கூட்ட மைதானமாக்கினார். சிற்றப்பாவின் பேச்சைக் கேட்க பல்லாயிரக் கணக்கான மக்கள் தடையை மீறி திரண்டனர். இதனால் ஆத்திர மடைந்த பிரிட்டிஷ் அதிகாரி பொதுமக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் படி ராணுவவீரர்களுக்கு உத்தரவிட்டான். ஆனால் ராணுவ ஜவான் கள் துப்பாக்கிகளை மக்களை நோக்கித் திருப்பவில்லை. உத்தரவிட்ட அதிகாரியை நோக்கித் திருப்பினர். ‘மீண்டும் இதுபோன்று உத்தர விட்டுக் கொண்டிருந்தால் உன்னைத்தான் சுட்டுத்தள்ளுவோம்’ என்று எச்சரித்தனர். சட்டத்தை உடனடியாக ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும், மக்களுடைய ஆத்திரம் அடங்க வில்லை. துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட போலிஸ் சூப்பிரண்ட்டையே ஓடஓட விரட்டி உதைத்தனர். பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தி னரைப் பாதுகாப்பான புகலிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பாகத்தான் அப்பா கிஷன்சிங்கும் மற்றொரு சிற்றப்பா ஸ்வரன்சிங்கும் கைது செய்யப்பட்டனர். சிற்றப்பா அஜித்சிங் தலைமறைவாக இருந்து, பின்னர் தாமே முன்வந்து கைதானார். அதன்பிறகு யாரும் அவரைக் காண இயலவில்லை. அவர் வெளிநாடுகளில் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

(சிறைச்சுவர்களில் நூலாம்படை போல் தொங்கும் சணல் நுனியைப் பிடித்து திரித்து சங்கிலியாகக் கோர்த்தபடி பேசுகிறான். ஒவ்வொரு சங்கிலிக்கணுவும் தயாரானதும் அதை கைகளில் மாட்டி அழகு பார்க்கிறான். இவ்வாறு பல கணுக்கள் சேர்ந்தவுடன் அவற்றைச் சங்கிலியாக பிணைக்கிறான்)

ஏன் சிற்றப்பா, நான் பிறந்து ஒரு வருஷத்திற்குள்ளாகவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டாயாமே. 22 ஆண்டுகளாக உலகநாடுகளில் அலைந்து திரிந்து இந்தியப்புரட்சிக்கு ஆள்திரட்டி வந்திருக்கிறாய். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கொலைக்கரங்கள் நீ செல்லும் இடமெல்லாம் நீள்கின்றன. துருக்கிச்சிங்கம் முஸ்தபா கமால்பாஷா முதல் லெனின் வரை பல்வேறு தலைவர்களை நீ சந்தித்துள்ளா யாமே? அதுவும் புரட்சிக்கு முன்னர் லெனின் சூரிச்சிலிருந்தபோது அவரை அன்றாடம் நீ சந்தித்ததாக கூறுகிறார்கள். உண்மையில் நீ கொடுத்துவைத்தவன். அதோடு எனக்கு ஒரு மனவருத்தமும் உண்டு சித்தப்பா. முற்போக்கு முகம் பொருத்திய அன்றைய முசோலினி, இட்லர் போன்றவரிடமும் நீ மனதைப் பறிகொடுத்துவிட்டதாகத் தெரிகி றது. இவர்களை நம்பி நீ ஏமாந்துவிடக்கூடாது. இவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் மட்டுமல்ல, மாபெரும் கொலைப்பாதகர்களாக மாறப் போகிறவர்கள்.  உலகப்போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்தால் இந்தியாவில் விடுதலை விரைவாகக் கிடைக்கும் என்ற உனது வாதத்தை எங்களால் ஏற்க முடியவில்லை.

உடனே இந்தியா திரும்பிவிடு. இங்கு உண்மையிலேயே புரட்சி வெடிக்கப்போகிறது. காந்தி, கோகலே கொள்கைகள் தோற்றுக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் மக்கள் எங்கள் பக்கம் உள்ள னர். இந்த நேரத்தில் நீ இங்கு இருக்க வேண்டும். ஒருமுறை நீ கோகலேயை சந்தித்தபோது அவர் உன்னிடம் இந்தியா திரும்ப தகுந்த ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறினாராமே? அதற்கு இந்தியப் புரட்சி இல்லாமல் திரும்பமாட்டேன் என்று கூறியுள்ளாய். இப்போது அதற்கான நேரம். நானும் தோழர்களும் இங்கிருந்து உனக்கு எழுதிய கடிதங்கள் கிடைத்ததா? தெரியவில்லை. குறிப்பாக நவ்ஜவான் பாரத் சபா தொடங்கியது குறித்து நான் எழுதிய கடிதங்கள் உனக்கு நம்பிக் கையளித்திருக்கும் என்று நினத்தேன். நீ எழுதிய ஒருசில கடிதங்கள் மட்டுமே கிடைத்தன. அதன் பிறகு தொடர்புகளற்றுப் போயிற்று. ஆனா லும் எந்த நிமிடத்திலும் நீ இங்கிருப்பாய் என்று காத்திருக்கிறோம். இன்றே வந்துவிடு! இப்போதே வந்துவிடு! நாளை வந்தால் தாமதம் ஆகிவிடும். அப்போது தூக்குமேடை என்னை விழுங்கியிருக்கும்.

(கடைசியில் கூறிய வார்த்தைகள் பகத்சிங்கை மௌனம் ஆக்குகி றது. கயிறால் அவன் பின்னிய சங்கிலிக் கோர்வையால் தன் உடலை பிணைத்துக்கொள்கிறான். பெரிய சங்கிலிவளையம் அவனது கழுத் தில் மாட்டப்பட்டிருக் கிறது. அதை பின்னோக்கிப் பிடித்தபடி பேசுகிறான்)

இவ்வளவு சின்ன வயதிலேயே என் கதையை நானே எழுத நேர்ந்தது துரதிர்ஷ்டம்தான். எனக்கு அப்படி என்ன அனுபவங்கள் இருக்கின் றன? அதை ஏன் நான் இப்போதே எழுத வேண்டும்? ஒரு முளையில் கட்டப்பட்ட புனை மாட்டைவிட குறைவான வெளிதான் என் அனுபவங் கள். இதனால் மீண்டும் மீண்டும் குறைவான சம்பவங்களே நிழலாடு கின்றன. அப்போது எனக்கு 13-14 வயதிருக்கும். வெள்ளைநிற குர்தா தான் எனக்குப் பிடித்த உடை. ஆனாலும் தினசரி அதை அழுக்காக்கி விடுவேன். என் கிராமத்து மண் கட்டிகளின் கரை என் அம்மாவை பயமுறுத்திக்கொண்டே இருந்தது. கறை இருந்தால் நல்லதுதானே... (மௌனம்)

ஒரு நாள்...
உலகமே அன்று பதைபதைப்மில் இருந்தது. பெண்கள் அனைவரும் முடிவே இல்லாத ஒப்பாரியை ஆரம்பித்தனர். அது நாட்கள், மாதங் களைக் கடந்து நீண்டுகொண்டே இருக்கும் என்பதுபோல் எங்களைப் பயமுறுத்தியது. குறிப்பாக என்னால் அதைத் தாங்கவே முடிய வில்லை. ஒரே இடத்தில் ஒரு பீரங்கியிலேயே ஆயிரம்பேர் கொல்லப் பட்டனர் என்ற செய்தி பீதியை கிளப்பியது. நாட்டுக்காக கடந்த நூறு ஆண்டுகளாகவே உயிர்த்தியாகங்கள் நடந்து கொண்டுதானிருக் கின்றன. ஆனால் ஒரே கணத்தில் 1000 பேர் உயிரைக் குடிக்க வேண்டுமென்றால் அது யுத்தமாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்தோம். ஆனாலும் இறந்தவர்கள் யாரும் போர்வீரர்கள் இல்லையே! அப்பாவி மக்கள் அல்லவா உயிரிழந்துள்ளனர். இது யுத்தமல்ல, படுகொலை. அழுது அழுது அனைவரும் சோர்ந்து போயி ருந்த ஒருகணத்தில் எழுந்தேன். தேம்பலுடன் கண்களை துடைத்துக் கொண்டேன்.. நடந்தேன்.. எப்படியோ அமிர்தசரஸ் வந்து சேர்ந்தேன். நகரம் முழுவதும் சொல்ல முடியாத துயரம் அப்பி இருந்தது. ஆங்காங்கே இரத்தக்கறைகள்கூட தென்பட்டன. அங்கு காணப்பட்ட மக்களின் கண்கள் அனைத்தும் ஒரே இடத்தை வெறித்து நோக்கின. நானும் அந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அந்த இடம்தான் ஜாலியன் வாலாபாக். அது ஒரு நல்ல மைதானம். அங்கு தான் பல்லாயிரக்கணக்கான மக்கள்மீது ஜெனரல் டயர் பீரங்கியால் சுட்டான். அந்த இடத்தைச் சுற்றி கோட்டைச் சுவர். அங்கு வாயிற்கதவு களைப் பூட்டிவிட்டு பீரங்கியை வெடிக்கச்செய்தால் மக்கள் எப்படித் தான் தப்பியிருக்க முடியும்? ஒருவேளை பீரங்கியில் குண்டுகள் தீர்ந்துப் போயிருந்ததால்தான் மீதியிருந்தவர்கள் உயிர் பிழைத்தார் களோ என்னவோ? அங்கிருந்த பத்தாயிரம் பேரும் செத்திருந்தாலும் கூட அவன் வெறி அடங்கியிருக்காது. அந்த இடம் முழுவதுமே இரத்தத்தால் சிவந்திருந்தது. நான் அருகிலிருந்த ஒரு சீசாவை கையி லெடுத்தேன். இரத்தத்தால் சிவந்திருந்த மண்கட்டியை அதில் போட்டு குர்தாவுக்குள் மறைத்து வைத்திருந்தேன். (மறைத்து வைத்திருந்த சீசாவிலிருந்து மண்ணைக் கொட்டி பூசிக்கொள்கிறான்) அந்த இடத்தில் பெரும் அமைதி இருந்தது. பருந்துகளும் காக்கைகளும்கூட மௌனமாகத்தான் வட்டமிட்டன. பிணங்களைத் தின்று தின்று அவை அலுப்படைந்திருந்ததை றெக்கைகளின் அசைப்பிலிருந்து உணர முடிந்தது. (எதையோ நினைத்து சிரிக்கிறான்) முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு மனப்பூர்வமான ஆதரவை வாரி வழங்கி காந்தியும் காங்கிரசும் செய்த துரோகத்துக்குக் கிடைத்த பரிசு தான் ஜாலியன் வாலாபாக். ரௌலட் சட்டம், வாய்ப்பூட்டுச் சட்டத்தை விட கொடூரமானது. இந்தியப் புரட்சிக்கு ஆதரவு அளிப்பவர் யாராக இருந்தாலும் விசாரணையின்றி தண்டனை வழங்குவதுதான் அந்தச் சட்டம். அதை எதிர்த்துதான் ஜாலியன்வாலாபாக்கில் பத்தாயிரத்துக் கும் அதிகமான மக்கள் திரண்டனர். கீழே சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் புரட்சிக்காரர்கள் தோன்றினார்கள். நாடு முழுவதும் கிளர்ச்சிகள், போராட்டங்கள்.

பஞ்சாப் மட்டுமல்ல நாடு முழுவதும் அவர்கள் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர். பல நகரங்களில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்த வண்ணமிருந்தன. புதிய புதிய தொழிற்சங்கங்கள் உருவாயின. விவசாயிகளும்கூட யார் தடுத்தாலும் அதையும்மீறி போராட்டங்களில் இறங்கி வருகிறார்கள். துன்பக்கேணியாக தொடரும் தமது வாழ்க் கைக்கு இதுவே விடிவெள்ளி என்று நம்பத் தொடங்கிவிட்டனர். இதுவொரு பக்கம்.

இன்னொரு பக்கம் காந்தி மூலம் விடுதலை கிடைக்குமென்றும் மக்கள் நம்பினர். அதனால்தான் 1922ல் காந்தி ஒத்துழையாமை இயக்கம் அறிவித்ததும் நாடு முழுவதும் அது தீ போல் பரவியது. ஆனால், காந்தி மக்களின் உணர்வுகளை தவறாக மதிப்பிட்டுவிட்டார். தங்கள் பிரச்சனைகள் தீர்க்கப் படாமல் மக்கள் தாங்கள் ஆரம்பித்த போராட்டத்திலிருந்து விலகமாட்டார்கள் என்பது காந்திக்குத் தெரியா மல் போய்விட்டது. தனது மந்திரச்சக்திக்குக் கட்டுப்பட்டே மக்கள் இயங்குகிறார்கள் என்று அவர் நினைத்துவிட்டார் போலும். அதனால் தான் தனது மந்திரச்சக்தி எடுபடவில்லை என்பது தெரிந்தபோது ஒத்துழையாமை இயக்கத்தைக் காட்டிக்கொடுக்கவும் தயங்க வில்லை. ஏனென்றால், மனு கொடுக்கும் கொள்கையையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் காலில் விழும் மனப்பாங்கையும் காந்தியும் காங்கிரசும் கைவிடத் தயாராக இல்லை.

தங்கள் போராட்டத்தைத் தடுப்பவன் எவனாக இருந்தாலும் அவனைச் சும்மாவிட மக்கள் தயாராக இல்லை. எதிர்த்து அடித்தனர். சில அதீதங்களால் காவல்நிலையங்கள் சூறையாடப்பட்டன, அதிகாரி கள் ஓடஓட விரட்டப்பட்டனர். இதுதான் தக்க சமயம் என்று மகாத்மா சுறுசுறுப்பாகச் செயல்பட்டு ஒரே இரவில் ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் விவசாயி களுக்கோ தொழிலாளர்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. அது பார்-அட்-லாக்களும், ஆங்கிலக்கல்வி கற்றவர்களும், முதலாளி களும், செல்வந்தர்களும், பெரியவீட்டுப் பிள¢ளைகளும் முன்னின்று நடத்தும் செயல்களாகும். மற்றவர்களெல்லாம் இவர்களின் தொண்டர்கள். நில் என்றால் நிற்பார்கள், நட என்றால் நடப்பார்கள் என்று தான் காந்தியும் நினைத்துக்கொண்டிருந்திருக்கிறார். அதனால்தான் சௌரி சௌரா போன்ற மக்கள் எழுச்சிகளை அவர் எதிர்பார்த்திருக்க வில்லை. நாட்டுக்குத் தலைமை தாங்கும்  பொறுப்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் நிலங்களில் உழுது கொண்டிருந் தால் மட்டும் போதும் என்று  திலகர்கூட ஒரு கூட்டத்தில் பேசினாரே? காந்தியின் இந்த அறிவிப்பால் நாடே ஸ்தம்பித்தது. நேரு போன்ற தலைவர்களே செய்வதறியாது திகைத்து நின்றனர். நாங்கள் மட்டும் என்ன செய்துவிட முடியும்? நாங்களும்தான் போராட்டத்தைக் கை விட்டோம். ஆனால் அப்போது தான் புதிய ஞானம் பிறந்தது. எங்களுக்கென்று ஒரு புரட்சிகரத்தலைமை வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினோம்.

இந்தநிலையில் வீட்டிற்குள்ளேயே நான் முடங்கிக் கிடப்பதில் எனக்கு விருப்பமில்லை. அங்கிருப்பதைவிட வெளியேறி போராட்டக்கடலில் குதிக்க வேண்டுமென்றிருந்தது. இதற்காக நான் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1923ல் ஒருவழியாக லாகூர் தேசியக் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். கல்வி என்றால் என்ன என்பதை அங்குதான் தெரிந்துகொண்டேன். சுதேசி இயக்கங்களின் போதும் ஒத்துழையாமை இயக்கங்களின்போதும் ஆங்கிலேய அரசு சார்பான கல்லூரி, பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வெளியேற வேண்டும் என்ற அறைகூவலை ஏற்று ஏராளமான மாணவர்கள் வெளியேறி னர். இதனால் அவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது. அவர்களுக்காகவும் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் தாளம் போடும் அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றா கவும் மாணவர்களுக்குத் தேசிய உணர்வு ஏற்படுத்தவும் நாடு முழுவ தும் பல்வேறு தேசியக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. லாகூர் தேசியக் கல்லூரி இவற்றுள் ஒன்று. லாலா லஜபதி ராயால் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அங்கு பயின்றது சுகமான அனுபவம். பாடப் புத்தகங்கள் கிடையாது. அதைவிட வேறு என்ன வேண்டும்! ஆசிரியர் கள் நூலகங்களிலிருந்து புத்தகங்களை எடுத்துவந்து பாடம் நடத்து வார்கள். நாங்களும் நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரலாறும் மொழியும் அறிவியலும் முக்கியப்பாடங்களாக இருந்தன. அயர்லாந்து விடுதலைப் போராட்டம், ரஷ்யப் புரட்சி, மாஜினி, கரிபால்டி, வால்டேர், ரூசோ எழுத்துகள் என்று வகுப்பறைகள் போர்க்களம்தான். எங்களுக்கு இது நல்ல தீனியாக இருந்தது.

ஆனால், அப்பாவுக்குத்தான் மிகவும் வருத்தம். எனது சிந்தனைகள் தறிகெட்டுப் போகின்றன என்ற பயத்தில் அதற்குக் கால்கட்டுப் போட முயற்சித்தார். எப்படியாவது திருமணத்தை நடத்திவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் எனக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. ஆனால், அவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. வழிவழியாக நானும் போராட்டக்களத்தில் குதிக்கவே விரும்பினேன். இதற்குக் காரணமே அவர்கள்தான். ஒருவேளை அவருக்கு ஞாபகமறதியோ என்னவோ? எனக்குப் புனித நூல் அணிவிக்கும் மகிழ்ச்சியில், என்னை ‘நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்பதாக’ தாத்தா கூறினாரே அதை மறந்துவிட்டாரோ? இல்லை, பெத்த மனம் பித்து. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? (சிரிக்கிறான்)  நாட்டு விடுதலை என்ற உயரிய நோக்கத்துக்கு எனது வாழ்க்கை ஏற்கனவே அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது என்பதை அவருக்கு நினைவூட்டி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு கான்பூருக்கு ஓ...டி...ப் போய்விட்டேன்.

கான்பூர்... (சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்கிறான். அது அவனுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. துள்ளிக் குதித்து ஓடியபடி...) கான்பூர் தான் நான் பயின்ற பல்கலைக்கழகம். அங்குதான் அரசியலை முழுமையாகக் கற்கத் தொடங்கினேன். அங்குதான் சந்திரசேகர் ஆசாத், பாதுகேஷ்வர் தத், சிவவர்மா, ஜோகேஷ் சந்திர சட்டர்ஜி, பிஜாய்குமார் சின்ஹா போன்ற புரட்சிக்காரர்கள் எனது தோழர்களா னார்கள். ஆனால் எங்களுக்கு அடைக்கலம் அளித்தது பிரபல காங்கிரஸ் தலைவர் கணேஷ்சங்கர் வித்யார்த்தி தான். காங்கிரஸ் காரராக இருந்தாலும் கோழி தன் குஞ்சுகளை பாது காப்பதுபோல எங்களைப் பாதுகாத்து வந்தார். ‘வந்தனம்’ வித்யார்த்தி ஐயா அவர்களே! எத்தனை இரவுகள் எங்கள் வருகைக்காக கவலையுடன் காத்திருந்திருப்பீர்கள். உங்கள் தியாகம் வீண் போகாதய்யா, நன்றி!

ஆயுதந்தாங்கிய போராளியாக என்னை மாற்றியதும் கான்பூர் தான். அப்போது இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேஷன் (எச்.ஆர்.ஏ) ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் நோக்கங்களில் பல எனக்கு மிகவும் உவப்பானவையாக இருந்தன. அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் காரன் பீரங்கிக்குண்டுகளால் மட்டும் பேசிக்கொண்டிருந்தான். அவனிடம் பேசுவ தற்கு குண்டுகள்தான் சிறந்த வழி என்று அப்போது நினைத்தோம். எங்கள் ரகசிய நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தையும் அவனிடமிருந்தே எடுக்க நினைத்தோம். அதுதான் ‘ககோரி கொள்ளை’. இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்போது பரபரப் பாகப் பேசப்பட்டது. பிரிட்டிஷ் கஜானா பெட்டி உடைக்கப்பட்டதை ஏகாதி பத்தியத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிட்டதாக மக்கள் மகிழ்ந் தனர். ஆனால், ஆட்சியாளர்கள் அடிபட்ட புலியாக வேட்டையில் இறங்கினர்.

இறுதியாக ககோரி கொள்ளையில் ஈடுபட்டவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்துவிட்டனர். அவர்களில் பிஸ்மில் ஒருவன். அவனை சிறையிலிருந்து மீட்கத்தான் நான் கான்பூருக்குச் சென்றேன். ஆனால் அங்கு என்னைப் பார்த்த தோழர்கள் பலரும் என்னை நம்ப வில்லை. இருபது வயதுகூட நிரம்பாத சின்னப்பையன். அதைவிட, கொஞ்சமும் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாகவே எப்போ தும் இருப்பவன். நண்பர்களைச் சீண்டுவதையே தொழிலாகக் கொண்டவன், அதிகப்பிரசங்கி என்றுகூடத் தோன்றும். நண்பர்களின் பொருள்களை மறைத்துவைத்து விளையாடுபவன், சரியான தீனிப் பண்டாரம், அடுத்தவர் பொருட்களை தன் பொருள்போல் பாவிப்ப வன், இவனாலா அந்தக் காரியத்தைச் செய்யமுடியும் என்று நினைத் தனர். ஆனாலும் என்ன செய்ய? அவர்களது தலைவிதி என்னையும் தங்கள் உற்றத்தோழனாக ஏற்றுக்கொண்டனர். எனது சில்மிஷங் களையும் தாங்கிக்கொண்டனர். இப்போது இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்னொருபக்கம் யோசிக்கும்போது புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் என்பதற்காக இளைஞர் களுக்கே உரிய துடுக்குத்தனங்களையும் குறும்புத்தனங்களையும் ஏன் இழக்கவேண்டும்? இருந்தாலும் நான் கொஞ்சம் அத்துமீறி நடந்துகொண்டதாகவே நினைக்கிறேன். என் சுபாவம் அப்படியாகி விட்டது. நான் ஒரு வரம்புமீறிய மனிதாகக்கூட இருக்கலாம். துடிப்பும் சோகமும் நிறைந்த வரம்புமீறிய மனிதன். பாவம் என் தோழர்கள். சிவவர்மா, சுகதேவ், ஜெயதேவ், விஜய் ஆகியோர் என்னை அளவு கடந்து சகித்துக்கொண்டனர். நாங்கள் திட்டங்களைத் தீட்டினோம். தொடக்கத்தில் எல்லாமும் நன்றாக சென்று கொண்டிருப்பதாகவே நினைத்தோம். ஆனால் புரட்சிகர நடவடிக்கைகளை செயல்படுத்துவ தில் ஏற்படும் சிறு பின்னடைவும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும் அல்லவா? எங்களது சிறிய தாமதத்தால் பிஸ்மில்லுடனான தொடர்பு திடீரென நின்றுபோனது. நாங்கள் சிறையை நெருங்கமுடியாத நிலை உருவானது. பிஸ்மில்லை விடுவிப்பதில் நாங்கள் தோற்றுப் போனோம். கடைசியாக பிஸ்மில் எழுதிய இறுதிக்கவிதை மட்டுமே எஞ்சியது. இந்தத் தோல்வியால் நண்பர்கள் முகத்தைக்கூட பார்க்க விரும்பவில்லை. நேராக கங்கை கரைக்குச் சென்றேன். இரவு முழு வதும் என் கண்ணீரை கங்கையில் கரைத்துக் கொண்டிருந்தேன். திடீரென என் தோள்களில் இரண்டுகரங்கள். சிவ வர்மா, ஜெயதேவ். விடியும்வரையில் படகில் மனம்போல் சென்று கொண்டிருந்தோம். அந்த இரவின் பாடல்...

அழிய வேண்டியவன் அழிந்தான்
இனி நலம் விசாரிப்பதேன்?
இதயம் சுக்குநூறாகிவிட்ட பின்
காதலியின் கனிவான செய்தி ஏன்?
நம்பிக்கைகள் சிதறிவிட்ட பின்
நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்ட பின்
காதல் தூது அனுப்புவதேன்?
நான் உயிர் வாழ்ந்தபோதே உன்னை சந்தித்திருந்தால்
எத்தனை இன்பம் விளைந்திருக்கும்?
பல்லாண்டுகள் கழிந்த பின்
அந்தநாள் வந்து பயனென்ன?

இந்தப் பாடலைக் கேட்டால் ஒரு காதல் கவிதை போன்று தோன்றுகிறது இல்லையா? முதலில் நானும் இது ஒரு காதல் பிதற்றல் என்றுதான் நினைத்தேன். ஆனால் இதை நன்றாக வாசியுங்கள். வாழ்க்கைக்கு அவன் விடுத்த அழைப்பு. தன்னை விரைவில் மீட்க எனக்கு அவன் விடுத்த அழைப்பு. அவன் காதலெல்லாம் இந்திய அன்னையின் மீது. அதனால் தான் தூக்குமரம் ஏறும் முன்பு ககோரி தோழர்கள் இவ்வாறு பாடினர்...

எமது தலைகளை பலிபீடத்தின்மீது வைக்க
ஆர்வத்தில் துடிக்கும் இதயங்கள் எம்மிடம்.
கொலைவாளினைத் தூக்கும் கரங்களின் வலிமையை
இனிதான் நாங்கள் காண வேண்டும்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனது சிந்தனைகள் புதிய எழுச்சி பெற் றன. இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேஷனில் என்னை முழுமையாக இணைத்துக்கொண்டேன். ‘புரட்சிக்காக மக்களல்ல; மக்களுக் காகப் புரட்சி’ என்று முழங்கி னேன். எச்.ஆர்.ஏயின் லாகூர் கிளையைத் தொடங்கிச் செயல்பட்டேன். ஆனால் எச்.ஆர்.ஏ தலைவர்களின் மத ஈடுபாடு போன்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைவிட நாட்டு விடுதலைக்கு இளைஞர் சக்தியை திரட்டுவதுதான் முக்கியமாகப்பட்டது.

காங்கிரசால் இனி அந்த இளைஞர்களைக் கவர முடியாது. அவர்களுக்காக நவஜவான் பாரத்சபா என்ற அமைப்பைத் தொடங் கினேன். "எவராலும் மதிக்கப்படாமல், வருத்தப்படுவதற்கும் எவரு மின்றி, போற்றிப் புகழப்படாமல் இறப்பதற்கும் தயாராக இருப்பவர் களே எனக்கு வேண்டும்" என்று அறிவித்தேன். இதை ஏற்று, என்னை நம்பி ஏராளமான இளைஞர்கள் வந்தார்கள். காங்கிரசிலிருந்துகூட வந்தார்கள். அதனால்தான் இன்றும்கூட எங்கள் அமைப்பிற்கு காங்கிரசில் கிட்டத்தட்ட சரிபாதி ஆதரவு இருக்கிறது. பசியையும் சித்திர வதைகளையும் வென்று புரட்சியை வெல்பவர்கள் இளைஞர்கள் தான் என்று இப்போதும் உறுதியாக நம்புகிறேன்.

இக்காலகட்டத்தில்தான் சோஹன் சிங் ஜோஷ் மூலமாக கம்யூனிஸ்ட் குழுக்களின் தொடர்பு கிடைத்தது. அவர்களில் சிலர் எங்கள் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டனர். சிலர் ‘தொழிலாளர் விவசாயி கள் கட்சி’ என்ற அமைப்பைத் தொடங்கினர். அதன் சார்பில் ‘கீர்த்தி’ என்ற இதழ் வெளி யிடப்பட்டது. அதன் ஆசிரியர் குழுவில் என்னைச் சேர்த்துக்கொண்டனர். அவர்களுடன் தொடர்ந்து விவாதம் நடத்த இது ஏதுவாக இருந்தது. சில அருமையான புத்தகங்களையும் என்னிடம் பரிமாறிக்கொண்டனர்.

இந்த விவாதங்கள் மற்றும் வாசிப்புகளின் விளைவாக புதிய சிந்தனைகள் தோன்றின. பழைய எச்.ஆர்.ஏவை இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷனாக (எச்.எஸ். ஆர்.ஏவாக) மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கினோம். எச்.ஆர்.ஏவின் முன்னணி புரட்சியாளர்களை ஏற்கனவே கொலைக்களங்களிலும் கொட்டடிகளிலும் தூக்குமேடைகளிலும் இழந்துவிட்டோம். மீதமிருந் தவர்கள் 1928 செப்டம்பர் 6-9 தேதிகளில் தில்லியில் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் கூடினோம்.

(இவ்விடம் தற்போது கிரிக்கெட் மைதானமாக இருக்கிறது. அதன் வரலாற்றுத் தகவல் மறைக்கப்பட்டு, மீண்டும் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரத்திடலாக மாறியிருப்பதை விளக்கும் சித்திரங்கள் பின்திரையில்).

இதில் பெரும்பாலானவர்கள் லாகூரைச் சேர்ந்தவர்கள். எச்.எஸ். ஆர்.ஏ அமைப்புவிதிகள் மற்றும் கொள்கைகள் குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டில் நிலவிய கொந்தளிப்பான நிலை மைகளை மதிப்பீடு செய்ய கடுமையான விவாதங்களை நடத்தி னோம். இனி தனிநபர் தலைமை என்பது இல்லை, கூட்டுத் தலைமை தான் என்று இறுதி செய்தோம். தனிநபர் பயங்கரவாத நடவடிக்கை களை கடுமையாக மறுபரிசீலனை செய்து அரசு கஜானாக்களில் கைவைப்பது தவிர வேறு பலாத்காரங்களில் இறங்குவதில்லை என்று முடிவு செய்தோம். நமது இறுதி லட்சியம் சோஷலிசம். அதை ஆயுதப்புரட்சி மூலமே அடைய முடியும். அதற்கான காலம் தற்போது நன்றாகக் கனிந்துள்ளது. எனவே, செயல் ஒன்றே நமது மூச்சு, இதுவே எச்.எஇ.ஆர்.ஏவின் கொள்கைச்சுருக்கமாக அமைந்தது.

எச்.எஸ்.ஆர்.ஏ ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள்ளாக மாபெரும் துயரம் நடந்தது. சைமன் கமிஷன் வருகைகைய எதிர்த்து லாலா லஜ பதிராய் நடத்திய பேரணிமீது லாகூர் போலிஸ் சூப்பிரண்ட் ஸ்காட் ஏவிய தாக்குதலால் அவர் மரணப்படுக்கையில் விழுந்துவிட்டார். லஜபதிராய் போன்ற தேசபக்தர் மீதான தாக்குதலால் நாடு கொந்த ளித்த நிலையில் அவர் மரணமும் அடைந்துவிட்டார். காந்தி, லஜபதி ராய் போன்ற தேசியத்தலைவர்களின் சமரசத்தால்தான் இது நிகழ்ந்தது. தேசிய பூர்ஷ்வாக்களுக்காக ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்ட வெட்கக்கேடான சமரசத்தால் இளைஞர்கள் கையாலாகாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு தான் ஏகாதிபத்தியம் லஜபதிராயைக் கொலை செய்தது. இதற்குப் பழி தீர்க்க வேண்டும் என்று முடிவுசெய்தோம். இளைஞர்களின் இரத்தம் இன்னமும் உறைந்து போய்விடவில்லை, நாட்டின் கவுரவத்தைக் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைக்கத் தயாராக உள்ளார்கள் என்பதை நிரூபிப்பதன் மூலம் இந்தியா இன்னமும் வாழ்கிறது என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பினோம்.

1928 டிசம்பர் 10. அன்றுதான் ஸ்காட் குறிவைக்கப்பட்டான். ஆனால் எங்கள் குண்டுகளிலிருந்து தப்பிவிட்டான். அவனுக்குப் பதிலாக அவனது உதவியாளன் ‘சாண்டர்ஸ்’ பலியானான். பாவம், இதில் ஒரு ஏட்டும் உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்திற்காக நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம் (பகத்சிங் தலை தாழ்கிறது).

தேசியத் தலைமையின் தொடர்ந்த மவுனம் ஆள்பவர்களை உற்சாக மடையச் செய்தது. ஆனால் மறுபக்கத்திலோ புதிதாக உருவாகியி ருந்த தொழிலாள வர்க்கம் தங்கள் உரிமை களுக்காக நாடு முழு வதும் போராடத் தொடங்கியிருந்தது. இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், இங்கிலாந்து நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்கள் மனசாட்சிப்படி இந்தியா வந்து இந்திய விடு தலைக்கு ஆதரவாகப் பணியாற்றி வந்தனர். இவைகளைத் தடுக்க இரண்டு புதிய சட்டங்களைக் கொண்டுவந்தனர். முதலாவதாக இந்தியரல்லாதவர்களை நாடு கடத்தும் சட்டமாகும். இரண்டாவது தொழிலாளர்கள் சங்கம் வைப்பதை தடுக்கும் சட்டமாகும். இந்திய பூர்ஷ்வாக்களின் அடிவருடிகளின் தலைமையை மீறி கிளர்ந்தெழும் அடித்தட்டு மக்களின் எழுச்சிகளை நசுக்கும் வகையில்  ‘பொது மக்கள் பாதுகாப்பு சட்டமும்’, ‘தொழில் தகராறு சட்டமும்’ கொண்டு வரப்பட்டன. இதற்குச் சரியான மரணஅடி கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தோம். இந்தியப் புரட்சிக்குப் பக்கபலமாக உள்ள தொழிலாளர் வர்க்க எழுச்சியை நசுக்குவதை எந்தவிதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது. இதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக் கைகள் விடுதலைக்கான சங்கநாதமாக இருக்கவேண்டும் என்று நினைத்தோம். கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசின் அஸ்தி வாரத்தையே அசைத்துக் காட்டுவதன் மூலமே நாட்டு மக்களை நம்பிக்கை பெறச் செய்யமுடியுமென நம்பினோம்.

இதற்காக தில்லி மத்திய சட்டமன்றத்தைத் தேர்வு செய்தோம். சட்டமன்றத்திற்குள் திறன் குறைந்த வெடிகுண்டுகளை நானும் பாதுகேஷ்வர் தத்தும் வீசுவது என்றும் அதேநேரம் இதில் எதிர்த் தரப்பில் உயிரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது என்றும் முடிவு செய்தோம். மேலும் இம்முறை குண்டு வீசிவிட்டு போராளிகள் தப்பி ஓடாமல் போலிசிடம் சரணடைந்து விசாரணையின்போது எமது கட்சி யின் கொள்கைகளை நீதிமன்றத்தின் மூலம் மக்களுக்கு விளக்கு வது என்றும் உறுதி செய்துகொண்டோம். திட்டமிட்டபடி நானும் தத்தும் தில்லி மத்திய சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிட்டோம். பார்வை யாளர்கள் மேடையில் தயாராகக் காத்திருந்தோம். எங்களுக்கு முன்பாக சில மரத் தடுப்புகள், அதற்கு முன்பாக உறுப்பினர்களின் நாற்காலிகள், அதற்கும் முன்பாக ஆள்பவர்களின் தாசானுதாசர் களான அமைச்சர்கள், அதில் நாங்கள் மதிக்கத்தக்க  தலைவர்களில் சிலரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பாக நடுநாயகமாக ஒய்யாரமான சிம்மாசனத்தில் நாங்கள் அதிகம் வெறுக்கும் சர். சைமன் ஜான் உட்கார்ந்திருந்தான். இப்போதும் நாங்கள் நினைத்தி ருந்தால் அவன் மீதே குண்டை எறிந்திருக்க முடியும். ஆனால் எங்களுக்கும் மரத்தடுப்புகளுக்கும் இடையில் உள்ள பகுதியில் குண்டுகளை எறிந்தோம். திடீரென எழுந்த சப்தத்தால் உறுப்பினர் கள் சிதறி ஓடினர். எங்குப் பார்த்தாலும் புகைமண்டலமாக இருந்தது. சைமன் ஜான் எவ்வாறு வெளியேறினான் என்பதைப் பார்க்க முடியவில்லை. புகை அடங்கியதும் மரத்தடுப்புகள் சிதறியிருந்ததையும் சுவர்களில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்ததையும் பார்த்தோம். அப்போது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மத்திய சட்டமன்றத்தில் நானும் என் உயிர்த்தோழன் தத்தும் மட்டுமே நின்று கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரில் சபாநாயகர் ஆசனத்தில் படேல் மற்றும் மதிப்புக்குரிய மோதிலால் நேரு, அரசுத்தரப்பு தலைவர் சர். ஜேம்ஸ் கிரீயர் ஆகியோர் சிலைகள் போல் அமர்ந்திருந்தனர். கையில் தயாராக வைத்திருந்த பிரசுரங்களை உறுப்பினர்கள் பகுதியில் விசிறியடித்து ‘தொழிலாளி வர்க்கம் வாழ்க’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக’,  ‘புரட்சி ஓங்குக’ என்று கோஷமிட்டோம். அதன்பிறகு போலிசார் ஆர்ப்பாட்டமாக அங்கு வந்து சேர்ந்தார்கள். ஒரு சார்ஜண்ட்தான் எங்களை கைது செய்தான். (நினைவுகளில் ஆழ்கிறான்)

‘செவிட்டுக் காதுகளில் உரக்கக் கேட்க மிகப்பெரிய சத்தம்தான் தேவையாக இருக்கிறது’ என்பது பிரஞ்சுப் புரட்சியாளர் வாலியன்ட் கூறிய வார்த்தைகள். இதையே எங்கள் மத்திய சட்டமன்ற குண்டு வீச்சு நடவடிக்கை செய்திக்குறிப்பின் தலைப்பாக்கினோம். அதில் ‘இது புரட்சியின் சங்க நாதம்; மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தங்கள் பகுதிகளுக்குச் சென்று மக்களை புரட்சிக்குத் தயார்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.

நன்றி! சுகதேவ். உனது கணிப்பு வீண்போகவில்லை. நீ நம்பியபடியே இந்த முக்கியமான காரியத்தை துல்லியமாக செய்து முடித்துவிட் டோம். இத்தகைய பெரும் பாக்கியத்தை எனக்கு வழங்கியது நீதான். மத்தியக் கமிட்டியில் போராடி ‘பகதூ இல்லையென்றால் காரியம் கெட்டுவிடும், நாம் தோற்றுப்போவதுடன் இரண்டு தோழர்களையும் அனாவசியமாக இழந்துவிடுவோம்’ என்று நீ சரியாகவே வாதிட்டதாக நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்தச் சம்பவத்தில் நீதி மன்றத்தில் போராடுவதென்பது முக்கிய அம்சமாகும். ஏனெனில் நீதி மன்றம்தான் நமது மேடையாக இருக்க முடியுமென்று நான் நினைத் தேன். அப்போது வாதப் பிரதிவாதங்களை எதிர்கொள்வதற்கு நான் சரியான நபராக இருப்பேன் என்பது எனது வாதம். நீயும் அதையே தான் சிந்தித்திருப்பாய். ஆகவேதான் எனக்காக இந்த வாய்ப்பை போராடி பெற்றுத் தந்துள்ளாய் என நினைக்கிறேன். நன்றி! (பார்வையாளர்களிடம்)

மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீச முதலில் என்னைத் தேர்வு செய்ய வில்லை. ஏனோ தெரியவில்லை. எனது உயிர் மீது எனது தோழர் களுக்கு மிகுந்த மரியாதை இருந்திருக்கிறது. எப்படியும் என்னை இழக்கமுடியாது என்று கூறிவிட்டனர். ஆனால் மத்திய சட்டமன்றத் தில் குண்டுவீசுவது மட்டுமல்ல, அதற்குப்பின் போலிசில் கைதாகி நீதி மன்றத்தை அரசியல் மேடையாக மாற்றுவதற்கு என்னைப் போன்ற வாயாடிகள்தான் சரியாக இருப்பார்கள் என்பது எனது எண்ணம். ஆனால், கமிட்டி அதை ஏற்கவில்லை. இரண்டுநாட்கள் கழித்து சுகதேவ் வந்த பிறகுதான் என் பக்கத்து நியாயத்தை எடுத்துக்கூறி இந்த வாய்ப்பை பெற்றுத் தந்தான். ஆனால் இங்கு என்ன நடக்கிறது தெரியுமா? எங்கள் பேச்சு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. எங்கள் நடவடிக்கைகள் திரித்துக் கூறப்படுகின்றன. போலிசாரிடம் நாங்களா கவே சரணடைந்ததை, அதிகார வர்க்கம் மடக்கிப் பிடித்ததுபோல வழக்கினை ஜோடித்துள்ளனர். காங்கிரஸ் பத்திரிகைகள்கூட எங்கள் செய்தி களை வெளியிட அச்சப்படுகின்றன. நாங்கள் நீதிமன்றத்தில் மட்டுமல்ல, சிறைச்சாலைகளிலும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் முக்கியப் புரட்சியாளர்கள் பெரும்பாலானோர் தற்போது சிறைகளில்தான் உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் வசதியாகப் இருக்கிறது. வார்டன்களுக்கும் சூப்பிரண்ட்டுகளுக்கும் ஒவ்வொரு நாளும் பாடம் புகட்டுகிறோம். அவர்கள் குண்டாந்தடிகளால் முத்த மிடும்போது நாங்கள் எங்கள் தீர்க்கமான பார்வைகளால் சுட்டெரிக்கி றோம். சிறைகளில் ஓடும் இரத்தத்தால் அவர்கள் உவகையடை கிறார்கள். அதற்குப் பரிகாரமாக சிறைக்கொட்டடிகளில் முதல் முதலாக மனிதநேயத்தை ஒலிக்கச் செய்ய முயல்கிறோம். நாங்கள் அரசியல் கைதிகள். எங்களை மனிதர்களாக நடத்தவேண்டும் என்பது மட்டுமல்ல, இதர குற்றவாளிகளின் அடிப்படை உரிமை களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போராடுகிறோம். 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்தோம். (அழுத்தமாக) இது சத்தியாகிரகம். சிறை வார்டன்கள் கட்டாயமாக எங்கள் வாய்க்குள், மூக்கிற்குள்ளும் உணவூட்ட முயன்றனர். சிவ வர்மா மயங்கி விழுந்தான். நான் மயங்கி விழுந்தேன். ஜதீன்தாஸ் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார். இத்தியாகங்களால் அரசு ஓரளவுக்குப் பணிந்தது. இந்திய சிறைக் கைதிகள் வாழ்க்கையில் இந்தப் போராட்டம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அண்ணல் காந்தியின் மதிப்புமிக்க சிந்தனைக்கு இங்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த லாகூர் கொட்டடியில் கடந்த சில காலமாக நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற் கொண்டுவருகிறோம். நாங்கள் மேற்கொண்டா லும் அது சத்யாகிரகம்தானே. இவ்வாறு மூன்றுமுறை சத்யாகிரகம் மேற்கொண்டுள்ளோம். அதன் விளைவுகளையும், எங்கள் தோழர் களின் உயிர்த்தியாகங்களையும் நீங்கள் அறியாமல் இருக்கமாட் டீர்கள். இங்கு உங்கள் சிந்தனைக்கான கேள்வி என்னவென்றால் இந்த சொற்பகாலத்தில் நானும் எங்கள் தோழர்களும் மேற்கொண்ட உண்ணாவிரத நாட்களைக் கணக்கிடுங்கள். தென் ஆப்பிரிக்காவில் நீங்கள் உண்ணாவிரதமிருந்த நாட்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் இன்னும் நீங்கள் உண்ணா விரதம் இருக்கப்போகும் நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அப்போதாவது எங்கள் எண்ணிக்கையை சமன் செய்யமுடியுமா எனச் சிந்தியுங்கள். உங்களது நீண்ட நெடிய ஆயுள்காலத்தில்கூட இதனைச் சமன் செய்ய முடியவில்லை என்றால் எங்களை சத்யா கிரகத்தின் எதிரிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் கூறுவதை அப்போதாவது நிறுத்திக்கொள்ளுங்கள். (பார்வையாளர்களை கூர்ந்து நோக்குகிறான், பகத். மீண்டும் தனது நடையை மாற்றி பேசத் தொடங்குகிறான்)

இந்தியா, இங்கிலாந்து பேரரசின் நேரடி ஆட்சியின்கீழ் வந்த பிறகு போராட்டங்களை நசுக்குவதற்காக புதிய போலிஸ் சட்டங்களை கொண்டுவந்து சிறைச்சாலைகளை அடக்குமுறைக்கான கருவி யாகப் பயன்படுத்தி வந்தது. இதில் குற்றவாளிகள், அரசியல் கைதிகள் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் சித்ரவதைகள் செய்துவந்தனர். சித்திரவதைக் கொட்டடிகளாக இருந்த சிறைச்சாலைகள் அது தொடர்ந்து அப்படியே நீடிப்பதற்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தொடங்கினோம். இதை ஒரு கொடுங்கோலாட்சி எந்தவகையிலும் ஏற்காது. அதற்கு எதிரான போராட்டத்தின் சிறு வெற்றிகூட அதிகாரத் தின் தலையில் பேரிடியாக இறங்கி அதிகார உன்மத்தம் கொள்ளச் செய்கிறது. பித்தம் வெறியாகத் தலைக்கு ஏறுகிறது. நீதிமன்றக் கூண்டில் ஏறி எங்கள் உரிமையை முழங்கியதற்காக எங்களை கை விலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியது. இது மிகப்பெரிய அவமானம் என்றோம். அரசியல் கைதிகளாகிய எங்களை விலங்கிட்டு அழைத்துச் செல்வதற்கு திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்ததற்காக நீதிமன்ற வாசலிலேயே தாக்கினர். என்னை கீழே தள்ளி  என் நெஞ்சின்மீது ஏறி நின்றனர். லத்திகளால் எங்களைத் துவைத்து எடுத்தனர். எங்கள் தோழர்கள் அதற்கும் அடங்கவில்லை. இறுதி முயற்சியாக மூன்றாவது முறையாக சிறையில் உண்ணா விரதம் தொடங்கினோம். முன்பு இரண்டு முறை மேற்கொண்ட உண்ணாவிரதங்களின் போது ஒப்புக்கொண்ட உரிமைகளை வழங்கியே தீர வேண்டும் என உரிமை கொண்டாடினோம். ஆனால் இங்கே நாங்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்தபோது நீதி மன்றத்தில் சத்தமில்லாமல் அரசு தரப்பு விசாரணைகளை அவசர அவசரமாக முடித்துவிட முயன்றனர். குற்றம் சுமத்தப்பட்டவரை கூண்டில் ஏற்றாமலே அவருக்கு எதிரான சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர்.  இந்த நீதியை என்னவென்று சொல்வீர்கள். இது அநீதி. எங்கள் தரப்பு நியாயங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்று  நீதி மன்றத்துக்கு கடிதங்கள் எழுதினோம். குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பில் அவர்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் அதற்கு வாய்ப்பு தருவது நீதியின் கடமை என்பதை அக்கடிதங்களில் மீண்டும், மீண்டும் நினைவூட்டினோம். எத்தனை முறை...

எங்கள் தரப்பு நியாயங்களை நிரூபிக்க அரசுத் தரப்பு சாட்சி களைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு எதிராக எங்கள் தரப்பு சாட்சியங்களை ஆஜர்படுத்த வாய்ப்புத் தரவேண்டும். இதற்காக நாங்கள் ஒரு வழக்கறி ஞரை வைத்துக்கொள்ள உரிமை யுள்ளது. ஆனால் எனது வழக்கறிஞர் துனி சந்த் அண்ணாவையும் உள்ளே போட்டுவிட்டீர்கள். இப்போது எனக்கு ஒரு வக்கீல் வேண்டாமா? அதற்காக எனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் உதவி தேவைப்படுகிறது. அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண் டும். அதற்கு நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் எங்கள் மீது மிகப்பெரிய சதித்திட்டம் சுமத்தப்பட்டுள்ளது. அதில் அரசின் புனைவு எவ்வளவு என்பதை நான் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? அதற்காக சம்பவம் நிகழ்ந்ததாகக் நீங்கள் கூறும் இடங்களை நானும் நேரில் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றேன். ஆனால் ‘தீர்ப்பை எழுதி விட்டுதானே விசாரணையை நடத்துகிறோம். பின் எதற்கு எதிர்வாதம்' என நீதிமன்றம் நினைத்து வாளாவிருந்து விட்டது. நீதிமன்றத்துக்கும் செவிட்டுக்காதுகள்தாம் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. இதோ நாளையுடன் எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளப் போகிறார்கள். அதற்குள் நான் என்ன செய்ய முடியும். எனக்காக வழக்கறிஞர் வைக்க என் தந்தை தயாராக இருக் கிறார். இந்த வழக்கின் விஷயங்களை நன்கு அறிந்த அவரையாவது சந்திக்கவேண்டும் என்ற எனது கடைசி முறையீடும் நீதியின் காதில் ஏறவில்லை.

(பகத் அமைதியாகிறான். பின்னர் உரக்கச் சிரிக்கிறான்.) என்னடா, கருமியிடம் காருண்யத்தை எதிர்பார்க்கிறானே என நினைக்காதீர் கள். ஒருவேளை அனுமதி கொடுத்திருந்தால் எனக்காக நல்ல வக்கீல் வைத்து நீதிமன்றத்திடம் மன்றாடி தூக்குமரத்தில் இருந்து தப்பிக்கப்பார்க்கிறான் என்றும் என்னை எண்ணமாட்டீர்கள் என நம்பு கிறேன். அப்படி ஒருவேளை அனுமதி கிடைத்தால் அதையும் அரசியல் மேடையாக்க முயற்சிப்பதுதான் எங்கள் எண்ணம். செவிடர்கள் காதுகளில் மேலும் உரக்கக் கேட்கும் அளவில் முழங்குவதற்காகத் தான் இந்த நாடகம்.. (நிறுத்தி கிண்டலாகச் சிரிக்கிறான்.) 

இவ்வாறு சிறைச்சாலையையும் நாங்கள் அரசியல் பள்ளியாக மாற்றிக் கொண்டிருந்தோம். ஆனால் எமது தோழர்கள் எங்களை இங்கிருந்து மீட்பதற்கான முயற்சியில் இறங்கினர். அவர்கள் திட்டம் என்னவென்றால் சிறையின்மீது வெடி குண்டுகளை வீசி குழப்பம் ஏற்படுத்துவது. குழப்பத்தைப் பயன்படுத்தி எங்களைச் சிறையிலி ருந்து வெளியே கொண்டு வருவது. நல்ல திட்டம்தான். ஆனால் இது ஒரு வீண் முயற்சி தானே? போலிசில் சரணடைந்து நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்துவது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதன்படிதான் இங்கு நாங்கள் போராடுகின் றோம். நீதிமன்றத்தில் எங்கள் எதிர்வாதங்களும், புறக்கணிப்பு களும், சுயவிளக்க அறிக்கைகளும் புரட்சியின் நியாயங்களை அரசின் முகத்தில் அடித்தாற்போல எடுத்து வைக்கப்படுகின்றன. இச்செயலில் இருந்து நாங்கள் ஏன் விடுவிக்கப்பட வேண்டும்? கடைசியில் என்ன ஆனது? ராவி ஆற்றங்கரையில் எங்கள் மதிப்பு மிக்க அண்ணன் பகவதி சரண் வோரா ஒரு வெடிகுண்டினை பரிசோதிக்கும்போது அது எதிர்பாராதவிதமாக வெடித்து உயிரிழந்து விட்டார். எவ்வளவு பெரிய இழப்பு? கால்கள் துண்டிக்கப்பட்ட நிலை யில் மருத்துவரிடமும்கூட தூக்கிச்செல்லமுடியாத நிலை. மருத்துவர் வருவதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

அருகில் இருந்த அண்ணி துர்காதேவியின் உணர்வுகள் என்னவாக இருந்திருக்கும்? என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடிய வில்லை. நாங்கள் இருவரும் அத்தனை சிநேகமாக இருந்தோம். அண்ணியின் முகத்தில் எப்போதுமே கவலைரேகை தெரிந்த தில்லை. சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு லாகூரிலிருந்து என்னைப் பத்திரமாக கல்கத்தாவிற்கு கொண்டு சேர்ப்பதற்காக மாறுவேடத்தில் எத்தனை துணிச்சலுடன் என்னுடன் அண்ணி துர்காதேவி பயணமா னார்கள். இனிமேல் அந்த இன்முகத்தை நான் பார்க்கமுடியுமா? வீணாக ஒரு சிறந்த புரட்சியாளரை இழந்துவிட்டோம். நோக்கமும் நிறைவேறவில்லை. நாங்களும் தூக்குமேடை ஏறுவது உறுதியாகிவிட் டது. புரட்சிகர செயல்பாடுகளில் சரியான திட்டமிடலும் துல்லியமான செயல்படுத்துதல்களும் எந்தளவுக்கு ஒன்றிணைந்துள்ளன என்ப துவே மீண்டும் மீண்டும் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே பல தலைவர்களை இழந்துவிட்டோம். சிறைக்கொட்டடியில் இருப்பவர் களிலும் எத்தனை புரட்சியாளர்கள் வெளியே வருவார்கள் என்பது நிச்சயமில்லை. இந்த நிலையில் வெளியிலிருந்து புரட்சியை நடத்தப் போகிறவர்களும் கவனக்குறைவால் பலியாவது இந்தியப் புரட்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டு வருகிறது. புரட்சிக்குக் கனிவான சூழ்நிலை இருந்தும் புரட்சி நடத்த செயல்பாட்டாளர்கள் இல்லையென்றால் அந்தப் புரட்சி நூற்றாண்டு களுக்குக்கூட நடைபெறாமல் போய்விடும் வாய்ப்புகள் உள்ளன.
வேறு என்ன இருக்கிறது? நான் சொல்ல இனி வேறு என்ன இருக்கிறது? எனக்குப் பின் என் தோழர்கள் இருக்கிறார்கள். நான் தூக்கு மேடை ஏறும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன். இந்த வாழ்வின் கடைசித் துளியை ருசிக்கும் வாய்ப்பிற்கான ஏக்கத்தோடு காத்திருக்கிறேன். ஆனால் என் தோழர்கள் மகாத்மாவின் இன்முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைக் கோடி கூலித்தொழிலாளி அதாவது, அண்ணலின் வார்த்தைகளில் கூறுவதென்றால் கடையனுக்கும் கடையனுமானவனின் ஆசைக் குழந்தை தனக்குத் தன் தந்தை தினமும் மிட்டாய் வாங்கித் தருவான் என்று எதிர்பார்ப்பதைப்போல என் தோழர்கள் ஏங்கிக் கொண்டிருக்கி றார்கள். ஆனால் என் இனியதோழர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், கருமியின் காதல் எத்தகையது என்று எண்ணிப் பாருங்கள். ‘அவர்கள் வாழ விரும்பவில்லை’ என்று கூட மகாத்மா கூறக்கூடும். அதாவது, நாங்கள் வாழ விரும்பவில்லையாம்! அதனால் மரணத்தை நாங்களே விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்டோம். இவ்வாறு, தானே சென்று மரணக்குழியில் விழுபவர்களை காப்பாற்றுவதில் பலன் இல்லை என்பது காங்கிரசின் வாதம். நான் வாழ்க் கையை எந்தளவுக்கு காதலிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரி யும். பத்தொன்பது வயதில் உயிர்த்தியாகம் செய்த சரபாவை எண்ணிப்பாருங்கள். அவனும் வாழ்க்கையை வெறுத்தா தூக்கு மேடை ஏறினான்? இன்னும் எத்தனையெத்தனை இளம் சிங்கங்கள் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து போரிட்டு மரணமடைந்திருக் கிறார்கள். எமது தோழர்களின் உயிர்த்தியாகங்களை கொச்சைப் படுத்துவதன் மூலம் தனது பிடிவாதத்தை நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கிறார் அண்ணல்.

அவரைத்தான் நான் கேட்கிறேன். என் தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? அதற்காக அவரின் தியாகத்தையும் உழைப்பையும் கொச்சைப்படுத்த நான் விரும்ப வில்லை. மிகப்பெரிய சக்திமான். அவர் அழைத்தால் நாடே அவர் பின்வரத் தயாராக இருக்கிறது. ஆனால் என் தோழர்கள் கேட்கும் எளிய கேள்வி களுக்குத்தான் அவரால் பதிலளிக்க முடியவில்லை. அவர்கள் என்ன கேட்கிறார்கள்? சமீபத்தில் எப்போதாவது சாதாரண மக்களோடு அமர்ந்து பேசியது உண்டா? வயல்வெளிகளில் நாள் முழுவதும் பாடுபட்டுவிட்டு இரவுவேளைகளில், அருகில் உள்ள குப்பைக்கூளங்களை கொளுத்தி குளிர்காயும் விவசாயிகளோடு ஒருநாள் இரவையேனும் கழித்ததுண்டா? அப்போது அவர்களது ஆசாபாசங்கள் என்ன என்பதை அறிந்ததுண்டா? ஒரே ஒரு நாளா வது ஆலைத்தொழிலாளர்களுடன் அமர்ந்து அவர்களது பிரச்சி னையை விவாதித்ததுண்டா? இந்தக் கேள்விகளைத்தான் எமது தோழர்கள் கேட்கிறார்கள். இதற்கு அவரிடமிருந்து பதில் வெளிவர வில்லை. மாறாக அகிம்சையின் மீதான தனது நம்பிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறதாகக் கூறிவருகிறார். அப்படியானால் அவரது அன்பும் தன்னையே வருத்திக்கொள்ளும் அகிம்சையும் இதுவரை எத்தனை அந்நிய ஆட்சியாளர்களின் மனதை மாற்றியுள் ளது என்ற கணக்கையாவது கூறலாமே! அல்லது இவரது உண்ணா விரதப் போராட்டங்களைப் பார்த்து மனம் கசிந்து, மனம் திருந்திய இந்திய அதிகாரிகள் ஒன்றிரண்டு பேரது பட்டியலையாவது வெளி யிட்டிருக்கலாமே! அப்படி இல்லை என்பது வெளிப்படையான உண்மையல்லவா? அதன்பிறகும் அகிம்சையின் மீதான தனது நம்பிக்கை மேலும்மேலும் அதிகரித்து வருவதாக அண்ணல் கூறுவது ஒரு நையாண்டியைப் போலத்தான் தெரிகிறது. அதனால் தான் என் நண்பன் சுகதேவ் இப்படியான கேள்விகளை எழுப்பினான்.
தான்தான் முழுமையான சத்தியாகிரகி, நாங்களெல்லாம் வன் முறையை விரும்புகிறவர்கள் அல்லது வாழ விருப்பமில்லாதவர்கள் என்று கூறும் அவரது பிடிவாதம் எதனால் என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டியது அவசியமல்லவா? நாங்கள் இப்படிக் கூறலாம்: இந்தியாவை இங்கிலாந்தின் ஒரு மாநிலமாக மாற்றும் ஆசையால் தான் காங்கிரஸ் தலைமை இவ்வாறு நடந்துகொள்கிறது என்று. இதில் காந்திக்கு உடன்பாடு இல்லையென்றால் அவரது உண்ணாவிரதங் கள் எதற்குத்தான் பயன்படப்போகின்றன? பிரிட்டிஷார் இடத்தில் இந்திய முதலாளிகளை வைத்து அழகு பார்க்கத்தானே? அவருடன் சேர்ந்துள்ள பெரும்புள்ளிகள் அதற்காகத்தானே கழுகுபோல் வட்ட மிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு பக்கம் பணம் தின்னும் முதலை கள், மறு பக்கம் பிணம் தின்னும் மதவெறியர்கள் என இந்தியாவுக்கு இருபெரும் ஆபத்துகளை காங்கிரஸ் உருவாக்கிக் கொண்டி ருக்கிறது என்பதை அவர் எப்படி அறியாமல் இருக்கிறார்? இதன் பலன்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து நினைப்பதற்கே எனக்கு அச்சமாக இருக்கிறது.

இதற்கு மேலும் எனக்கு சொல்ல என்ன இருக்கிறது? இல்லை, எவ்வளவோ பேசவேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்கிறது. பொது வாகவே நான் நிறைய பேசுகிறவன் இல்லையா? புரட்சியைப்பற்றி பேசப்பேசத்தான் என் மூளை கூர்மையடைகிறது. சோர்வில் உறைந்து போகும் இரத்தநாளங்கள் உற்சாகமடைகின்றன. நாடு தற்போது புதிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது. தேசியத் தலைவர்கள் தமது மதவெறியை மறைத்துக்கொள்ள பெரும் பாடுபடுகிறார்கள். நடுநிலைமை என்ற பெயரில் கண்டும் காணாமல் ஒளிந்துகொள்கி றார்கள். மதக்கலவரங்களின் போது மௌனம் காப்பதே மத வெறிக்குத் துணைபோவதுதானே? தேசியத்தலைவர்களும் பத்திரி கைகளும் இக்குற்றங்களைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இதற்காகத் தங்கள் சட்டைகளை அடிக்கடி மாற்றிப் பார்க்கிறார்கள்.

நாம் ஒரு நாயைக்கூட கட்டியணைக்கலாம், அந்த நாயும் எவ்விதத் தடையுமின்றி நமது சமையலறைவரை செல்லலாம், ஆனால் ஒரு மனிதன் நம்மைத் தொட்டுவிட்டால் அப்படியே தலையில் தண்ணீர் கொட்டி தீட்டு போக்கிக் கொள்கிறோம். மதன்லால் மாளவியா போன்ற தலைவர்களே இவ்வாறுதான் தங்களைப் புனிதப்படுத்தி வருகிறார்கள். (பார்வையாளர்களிடம்) தேச விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டதாக கூறிக்கொள்ளும் தேசியத் தலைவர் கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? எங்காவது மதத்துவேஷம் காணப்பட்டால் இருபக்கமும் கும்பிடு போடுகிறார்கள் அல்லது வேறு எங்காவது சுற்றி வளைத்து ஒளிந்துகொள்கிறார்கள். எது நியாயம்? எது அநியாயம் என்பதைப் பற்றி வாயைத்திறப்பதில்லை. மேலும், இன்றைக்குக் காங்கிரஸ் கட்சியின் நிலைமை எல்லாம் மாறிவிட்டது. பரிபூரண சுதந்திரம் என்ற கோரிக்கையை பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டான பிறகு அவர்கள் மக்களையும் சந்தித்தாக வேண்டியிருக் கிறதே! மக்களென்றால் சந்துமுனையில் கூடும் மக்கள் யாரென்பது நமது தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் அந்தப் பாவத்தைத் தொலைக்க உடுத்திய உடையோடு தலையில் தண்ணீர் விட்ட பிறகே வீட்டுக்குள் நுழைகிறார்கள். இது எங்குபோய் நிற்கும் என்று தெரியவில்லை. இவர்கள் கையில் நாடு சென்றால்...?

கல்வி முறையிலிருந்தே இதை மாற்றியாக வேண்டும். எப்படியிருந் தாலும், பிறந்தது முதல் அரசாங்கத்துக்குத் துதிபாடும் இந்தக் கல்விமுறை வேண்டாம். அந்நிய கொள்ளைக்கூட்டத்தால் இந்தியா ஆளப்படும்வரை அரசாங்க விசுவாசத்தைக் காட்டும் அரசு அதிகாரிகள் அனைவரையுமே துரோகிகள் என்றே நான் கருதுவேன். அந்நிய கொள்ளையர் மட்டுமல்ல, எந்த தேசியக் கொள்ளையர் ஆண்டாலும் அந்த அரசாங்கம் தூக்கியெறியப்பட வேண்டும். மாண வர்கள் படிக்க வேண்டும். கட்டாயம் படிக்க வேண்டும். அதனுடன் அரசியல் அறிவையும் பெறவேண்டும். தேவைப்படும்போது அரசியல் களத்தில் குதிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதற்காக படி; மேலும் படி; மேலும் மேலும் படி. (மௌனம்)

இங்குள்ள சிறை வார்டன் மிகவும் அன்பானவர். என்ன காரணம் என்றே தெரியவில்லை. என்மீது அதிக அன்பு வைத்திருக்கிறார். இங்கு நான் சுவாசிப்பது அவரால்தான். என் தோழர்கள் அனுப்பும் அத்தனை புத்தகங்களையும் அனுமதித்துவிடுகிறார். என்மீது கொண்ட அன்பால் சில தினங்களாக ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறார். நான் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக கடைசி நாட்களிலாவது வாகா சிங் பாடல்களை பக்தியுடன் பாட வேண்டுமென்று விரும்புகிறார். இதை என்னால் மறுக்க முடிய வில்லை. அதேசமயம் நான் ஒரு தெளிவான நாத்திகன் என்பதை அவருக்குப் புரியவைப்பேன். நானும் முன்பு தீவிர கடவுள் பக்தனாகத் தான் இருந்தேன். புரட்சிகர இயக்கத்தின் தேவைகள்தான் ஆத்திக மாயைகளை அடித்துச் சென்றன. ஆனால் இதுவும்கூட என்னைச் சரியான நாத்திகனாக மாற்றவில்லை. ஏனெனில் எங்கள் தலைவர் களும் இதே மாயைகளுக்கு ஆட்பட்டிருந்தனர். இதனால் எங்கள் கட்சிக்குள்ளேயே புதிய தேவைகள் உருவாயின. அவற்றை தேடும் முயற்சியில் நானும் இறங்கினேன். அதுதான் அறிவின் ஒளியை எனக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அந்த ஒளியைத் துணைக் கொண்டு ஒரு புதிய திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பதை உறுதி யாக நம்பினோம். அதை எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்விக்கு ‘கற்றுணர்’ என்பதுதான் ஒரே பதிலாக இருந்தது. மீண்டும் சொல்கி றேன், கற்றுணர், எதையும் மூடத்தனமாக நம்பாதே.
கடவுள் நம்பிக்கையானது கஷ்டங்களை லகுவாக்குகிறது. மனதிற்கு உகந்தவையாகக்கூட அதனால் அவற்றை மாற்ற முடியும். மனிதனுக்கு மிகவும் வலிமையான ஆறுதலை கடவுள் தருகிறார். (சிரிக்கிறான்) ஆனால் கனவில் கிடைக் கும் ஆறுதலைப்போல. இகவாழ்வில் மனிதன் தனது சொந்த முயற்சிகளால்தான் வாழ வேண்டியுள்ளது.

நான் கற்றுணரத் தொடங்கியப் பிறகு எனது முந்தைய நம்பிக்கை களும் பற்றுதல்களும் மாறத் தொடங்கின. முன்பு எங்களிடம் மேலோங்கி இருந்த வன்முறையின் இடத்தை கருத்தாழமிக்க புதிய கொள்கைகள் வென்றன. (திடீரென்று தனது பேச்சை நிறுத்துகிறான். சிறை வெளியிலிருந்து விசில் சப்தம் கேட்கிறது. வேறு ஏதோ சிந்திக்கிறான்) என்னை அனுமதித்தால் நான் பேசிக்கொண்டுதான் இருப் பேன். நேரம் நெருங்கிவிட்டது. எனது கடைசி நிமிடங்களுக்காக இந்த அரசு என்னை எப்போது எப்போது என்று காத்திருக்க வைத்துவிட்டது. காலம் நீள, நீள அபத்தங்கள் மலிந்த வண்ணம் இருக்கின்றன. தம்பி, சகோதரிகள், அம்மா, பாட்டி, தாத்தா அனைவரின் கண் களிலும் கண்ணீரைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. நான் என்ன தவறு செய்து விட்டேன்? இல்லை, இது உணர்ச்சிக்கொந்தளிப்புள்ள நாடகமா? அப்பா உங்களிடம் பலமுறை சொல்லிவிட்டேன், அம்மாவை சிறைக்கு அழைத்துவர வேண்டாமென்று. நேற்று தம்பி குல்தார் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிகிறது. ஏன்டா தம்பி! உனக்குமே மனஉறுதி இல்லையா? நாளை நீ ஒரு இளைஞனாகப் போகிறவன். உனக்காக நீ உணர இதை நான் கூறுகிறேன்:

ஒடுக்குமுறையின் புதிய வடிவங்களை
உருவாக்குவதில்தான் அவர்கள் எப்போதும்
கவனம் கொண்டிருந்தனர்
நாங்களும்தான் ஆவல் கொண்டிருந்தோம்
எவ்வளவு தூரம் செல்வார்கள் அவர்கள் என்பதைக் காண
உலகத்தின்மீது நாங்கள் ஏன் கோபம் கொள்ள வேண்டும்?
வானத்தின்மீது நாங்கள் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?
ஒன்று நான் கூறுகிறேன்
நமது உலகம் இயல்பு மாறிய ஒன்று
அதனை மாற்ற
அதனை எதிர்த்தே போராடி வெல்வோம்!

குல்தார், அப்பாகூட என் முதுகில் குத்திவிட்டாரே! அவரது பாசம் துரோகிகளின் பட்டியலில் என்னைச் சேர்க்கும் அளவுக்குச் சென்று விட்டது. சாண்டர்ஸ் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று (கேலியுடன்) மாண்புமிகு நீதிபதியிடம் முறையிட்டி ருக்கிறார். என்னைக் காப்பாற்றி விடுதலையை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று நினைக்கிறாரா?

அப்பா, இந்த வழக்கும் விசாரணையும் ஏற்கனவே எழுதப் பட்டுவிட்ட நாடகம். இதன் முடிவு என்பது மாற்ற முடியாதது. எங்களது கொள்கை களில் உங்களுக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. எங்கள் கொள்கைகளில் நாங்கள் உறுதியாகத்தான் இருக்கிறோம். நாங்கள் போலிசில் கைதானதும், நீதிமன்றத்தில் எதிர்வாதம் செய்வதும் எங்கள் கொள்கைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவதற்குத்தான். எங்கள் அமைப்பில் நாங்கள் விவாதித்து முடிவு செய்த விஷயமிது. இதிலிருந்து பின் வாங்கி விடுவேன் என்று எப்படி நினைத்தீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. (சோர்வடைகிறான்)
இறுதியாக அன்புள்ள நண்பனே சுகதேவ், எனது கடைசி நேரங்களை உன்னுடன்தான் விவாதித்துக் கழிக்க விரும்புகிறேன். நாம்தான் சரியான சண்டைக்கோழிகள். விட்டுக் கொடுக்காமல் விவாதிப்பது நமக்குப் பிடித்த பொழுதுபோக்கு. இதில் நான்தான் உன்னை அதிகக் காயப்படுத்திவிட்டதாக நினைக்கிறேன். அந்தக் காதல் விவகாரம்... காதல் என்பதை யாரும் வலியுறுத்த முடியாது என்பதைப்போல சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கவும் முடியாது. நான் லட்சியமும் நம்பிக்கையும் நிறைந்தவன் என்பதைப்போலவே வாழ்வின் கவர்ச்சி களும் நிறைந்தவன். தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் துறந்துவிடவும் முடியும்.

காதல் ஒரு மனிதனுக்குப் பயனுள்ளது என்று எப்போதாவது நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று நீ கேட்டாய். ஆம் மாஜினிக்கு அது பயனுள்ளதாக இருந்துள்ளது. அவர் நடத்திய முதல் புரட்சியின் தோல்விக்கும் முறியடிப்புக்கும் பின்னர் ஓயாது வந்துபோன அவரது இறந்துபோன தோழர்களின் நினைவுகளையும் துன்பங்களையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது காதலியின் ஒரு கடிதம் மட்டும் அவருக்குக் கிடைத்திருக்கவில்லையென்றால் அவர் பைத்தியக்காரனாகியிருப்பார் அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பார்.

இயற்கையாக காதல்வயப்பட்ட இந்த உலகின்மீது நான் வெறி கொண்ட காதல் கொண்டுள்ளேன். எனது இளைய நண்பர்களுக்கா கவே இதை நான் கூறுகிறேன். இதுவும் எனது செய்திதான். (மீண்டும் விசில் ஒலி கேட்கிறது. சிந்தனையில் ஆழ்கிறான்... சுதாரித்துக் கொண்டு கைவிரல்களால் சொடக்குப் போட்டுக்கொண்டே பேசுகி றான்). காலம் கழிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடி தாமதமும் நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தப்போகிறது. இளைஞர்களே உஷாராக இருங்கள். கோடானுகோடி ஏழை விவசாயிகளையும் பட்டினித் தொழிலாளர்களையும் பாருங்கள். காங்கிரஸ் அவர்களை கைவிட்டு விட்டது. நாளை நடைபெறும் புரட்சி மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும். தாமதித்துவிடாதீர்கள். பின்னர் ஒரு நூறாண்டுகள் ஆனா லும் ஏகாதிபத்தியத்தை விரட்ட முடியாது. அல்லது அந்த இடத்தில் யாராவது இருந்துகொண்டே இருப்பார்கள். பெரு முதலாளிகள், மதவெறியர்கள் கையில் நாடு சென்றால் அவர்கள் நாட்டை ஏகாதி பத்தியத்திடம் மீண்டும் அடகு வைத்துவிடுவார்கள். அப்போது மக்கள் விடும் கண்ணீர் உங்களை மன்னிக்காது. இதற்காகவே நாங்கள் துணிச்சலோடும் புன்னகையோடும் தூக்குமேடை ஏறுகிறோம். அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்கள் பிள¢ளைகளும் பகத்சிங் போல ஆகவேண்டும் என்று விரும்புவார் கள். இதன்மூலம் நாட்டு விடுதலைக்காக தமது புதல்வர்களையும் தியாகம் செய்யும் வலிமை  பெறுவார்கள். அவ்வாறு முன்வரும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாய்ப் பெருகும். இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்:

நாளை எனது குரல் நிறுத்தப்படலாம்
எனது எழுத்துகள் மறைக்கப்படலாம்
எனது தாள்கள் எரிக்கப்படலாம்
ஆனால் காற்று உள்ளவரை
அதன் அலைகள் எனது குரலை
மக்கள் இதயங்களில் சேர்த்துக் கொண்டிருக்கும்

நண்பர்களே இன்னும் ஒரு சில சுவாசங்கள் மட்டுமே. அணையப் போகும் விடிகாலை விளக்கு நான். நாட்டு மக்களே எழுச்சியோடு இருங்கள். நாடு புரட்சிக்குத் தயாராக இருக்கிறது. விடுதலை உங்கள் கையில். என்னைப் பொருத்தவரை நான் புறப்படுகிறேன்.

(1931 மார்ச் 23 இரவு 7.15 மணி, லாகூர் சிறைச்சாலையின் உள்புறம் திடீரென்று பரபரப்பு அடைகிறது. வெளியில் கோஷங்கள் ‘பகத்சிங் வாழ்க’, ‘தூக்கிலிடுவதை நிறுத்து’, ‘பகத்சிங்கையும் அவரது தோழர் களையும் காப்பாற்றாத காந்தி ஒழிக’ என்கிற கோஷங்கள் முழங்கு கின்றன. செல் எண்.14க்குள் காவலர்கள் நுழைகிறார்கள், பகத்சிங் மற்றும் சுகதேவ், ராஜகுரு ஆகியோரை வெளியில் அழைத்து வருகிறார்கள். நாளை காலையில்தான் தூக்குத்தண்டனை, ஆனால் இப்போதே ஏன் அழைத்துச் செல்கிறார்கள் என்று புரியாவிட்டாலும் சிரித்த முகத்துடன் மூன்று தோழர்களும் செல்கிறார்கள். தூக்கிலிடுவதற்கு முன்பான சடங்குகள் அரங்கேறுகின்றன. சிறைச்சாலையின் வெளியில் கோஷங்கள் முழங்கிக்கொண்டே இருக்கின்றன. சடங்குகள் முடிந்ததும் தூக்குமேடைக்கு மூவரும் கொண்டு வந்து நிற்க வைக்கப்படுகிறார்கள். தூக்குமேடையில் ஏறியதும் மூவர் முகத்திலும் கருப்புத்துணி போர்த்த காவலர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் அதை மறுக்கிறார்கள். பின்னர் அவர்களது கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டப்படுகிறது. சற்று நேரத்தில் மூவரது கழுத்தும் தொங்கிய நிலையில் ஆடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் கோஷங்கள் எழுகின்றன.

உடனடியாக அதிகாரிகள் பரபரப்படைய மூவரது உடலும் கயிற்றிலிருந்து இறக்கப்பட மருத்துவர்  மூவரது உடலையும் பரிசோதித்து உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறார். அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கை குலுக்கியபடி சன்னமான குரலில் ஆரம்பித்து "ஆபரேஷன் ட்ரோஜன் ஹார்ஸ்" என்று படிப்படியாக உரத்தக்குரலில் ஒலி எழுப்பியபடி சிரிக்கின்றனர். உடனடியாக மற்ற காவலர்கள் தூக்குக்கயிற்றை இழுத்த நபரை கைது செய்து அவரது கழுத்தில் கருப்புத்துணியை இறுக்கி கொலை செய்ய, மருத்துவர் அந்த உடலை பரிசோதித்து உயிர் பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்துகிறார். பின்னர் நான்கு சடலங்களையும் ஒரு சேர கிடத்தி தூக்கிக்கொண்டு சிறைச் சாலையின் புறவழியில் போகிறார்கள். வெளியே கோஷங்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அதன் நடுவே எக்காளமிடும் பல சிரிப்பொலிகள் கேட்கின்றன.)

- அப்பணசாமி

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)