2ஜீ அலைக்கற்றை ஊழலில், சிபிஐ மூன்றாவது குற்றப்பத்திரிக்கையில், நிச்சயம் தயாநிதிமாறனின் பெயர் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. அதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. சிபிஐ நடவடிக்கைகளும் தீவீரமாகத் தெரிந்தன. சாட்சியங்களிடம் விசாரணையும் செய்யப்பட்டது. எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என பரபரப்பாக சில ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணமும் இருந்தன. இப்போது தயாநிதிமாறனின் பெயரும் இல்லை. அவர் குறித்த பேச்சும் இல்லை. இந்த 2 ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணைக்குள்தான் எவ்வளவு சிதம்பர ரகசியங்கள்?
அடுத்து திருவாளர் ப.சிதம்பரம் இந்த ஊழலில் சிக்கிக்கொண்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம் பரத்திற்கு தொடர்பு இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ஒரு பைசா கூட வராமல்போகவில்லை என்றும், ஆ.ராசாவுக்கு இந்த ஊழலில் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆரம்பத்தில் சாதித்து வந்தவர் இதே கபில்சிபல்தான்.
உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த ஊழல் விசாரணை நடைபெறுவதால்தான் வழக்கு விசாரணை இந்த அளவுக்காவது முன்னேறியுள்ளது. இல்லையென்றால் எஸ்பேண்ட் ஊழல், கோதாவரி நதிப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எரிவாயு எடுக்கும் உரிமம் வழங்குவதில் நடந்த முறைகேடு போன்று ஆரம்பத்திலேயே ஊழலை மூடி மறைத்திருக் கும் மன்மோகன்சிங் அரசு.
2ஜி ஊழலில் ப.சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பு குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ஜனதா கட்சித் தலைவர் சுப்பிர மணியசுவாமிக்கு அனுமதி வழங்கியுள்ளது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட் டில் உள்ள மத்திய புலனாய்வுத்துறைதான் இந்த வழக்கை புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்தத்துறையின் அமைச்சர் சிதம்பரம் மீது நியாயமான விசாரணையை சிபிஐ நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.
இந்த ஊழலில் சிதம்பரத்திற்கு இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்தும் வகையில், பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியது. ஆனால் மன்மோகன் சிங் இருவரையும் அழைத்து ரகசியமாக பேசி சமாதானம் செய்து வைத்தார். பிரச்சனை முடிந்துவிட்டது என்று, ஏதோ வாய்க்கால் வரப்பு தகராறு போல சர்வசாதாரணமாக அந்தப்பிரச்சனையை முடித்து விட்டார்கள்.
ஒருவர் குற்றவாளியா, இல்லையா, என்பதை தீர்மானிப்பதை நீதிமன்றமே அன்றி சிதம்பரத்தின் சக அமைச்சர்கள் அல்ல. சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தப் பட்டபோதும், மன்மோகன் சிங் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. சிதம்பரத்தை இந்த வழக்கில் சிக்க வைத்தால் மேலும் சில மேலிடங்கள் சிக்கக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, அவரை பாதுகாக்க மத்திய அரசு முயல்கிறதோ என்ற சந்தேகத்திற்கு முகாந்திரம் இருக்கவே செய்கிறது.
மத்திய அயல்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா மீது சுரங்க ஊழல் குறித்து கர்நாடக லோக் அயுக்தா போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அவரும் எந்தவிதமான கூச்சநாச்சமுமின்றி பதவியில் தொடர்கிறார்.
ஊழல் கறைபடிந்த அமைச்சரவையாக மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவை உள்ளது. ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயல்வதன் மூலம் தங்களது கூட்டுக் கொள்ளையை மறைக்க முயல்கிறார்கள். இவர்கள் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வருவார்களா என்ன?
வேலிக்கு ஓணான் சாட்சியா?
”ஒருவர் குற்றவாளியா, இல்லையா, என்பதை தீர்மானிப்பதை நீதிமன்றமே அன்றி சிதம்பரத்தின் சக அமைச்சர்கள் அல்ல. சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை சந்திக்க வேண்டும்.”
ReplyDeleteநல்ல பதிவு மாற்றுவுக்கு வாழ்த்துக்கள்.