வழக்கம் போலவே
அலுவலகத்திலிருந்து மீண்டதும்
உடைகளைக் கூடக் களையாமல்
உன்னோடு உள்ளே நுழைந்த
குரலோடு அலைபேசியில் பேசியவாறு
மடிக் கணினியைப் பிரிக்கத் தலைப்படுகிறாய்
உனது பெட்டியில் வந்து விழுந்து கொண்டிருக்கும்
இடைவிடாத மின்னஞ்சல்களை
ஒரு பெருமூச்சோடு தவிர்த்துவிட்டுக்
குறிப்பாக எதையோ தேடுகிற
உனது மனத்தின் கட்டளைக்கு
நர்த்தனமிடும் விரல்கள்
எடுத்துக் கொடுக்கும் செய்தியை
வாசிக்கிறது உனது நிதானம் அடைகிற கண்கள்..
மவுனம் கொள்கிறது அலைபேசி.
வேகமாய் எழுந்திருக்கையில்
தற்செயலாகக் கணினியை மூடியும் மூடாதும்
என்னிடம் நீட்டிய அந்தப் பொழுதில்
மீதம் இருக்கும் அஞ்சல்களில் பரவும் வெளிச்சம்
மெதுவாக விடைபெறுகிறது
அப்புறம் அப்புறம் அப்புறம் அப்புறம்
எப்போதாவது வாசிக்க நீ
நட்சத்திரக் குறி போட்டுப்
பிரித்தே கேட்காத யாரோ அப்பாவிகளுடைய குரல்கள்
நழுவும் ஓசை தீனமாகக் கேட்கிறது கணினியிலிருந்து,
என்னுடையதைப் போன்றே..
- எஸ்.வி.வேணுகோபாலன்
ரொம்ப நல்லா சொல்லிட்டீங்க.
ReplyDeleteதோழரே ! அருமை , பாராட்டுகள்
ReplyDelete